ஷீர்டிக்கு வந்த பாபா, ஒரு வேப்பமரத்தடியில் சிறிது காலம் தங்கியிருந்தார். அதர்குப் பின்புறம்தான் தற்போது சமாதிக் கோயில் எழும்பியிருக்கிறது. அத மரத்தின் ஒரு கிளையிலுள்ள இலைகள் மட்டும் கசப்பதில்லை என்று என்று கூறுகின்றனர். அந்த வேப்ப மரத்தடியில் பாபாவின் பாதுகைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கெதிரில் ஓர் அக்னி குண்டம் எரிந்து கொண்டிருக்கிறது.
லெண்டி பாக் என்ற தோட்டத்தின் ஓரமாக ஒரு வாய்க்கால் உள்ளது. அங்குதான் பாபா தம் காலைகடங்களை முடிக்க தினம் வருவாராம். அதிகாலையில் சாவடியிலிருந்தோ, மசூதியிலிருந்தோ புற்பபட்டு கண்டோபா கோயிலைச் சுற்றிக் கொண்டு இந்த தோட்டத்திற்கு வந்துவிட்டு மீண்டும் மசூதிக்கு திரும்புவது வழக்கம். அந்தத் தோட்டத்தில் பாபாவுடன் இருந்த ஒரு குதிரைக்கு சமாதி கட்டப்பட்டிருக்கிறது.
சாவடி என்ற இடத்தில் சமாதிக் கோயிலுக்கு அருகிலேயே “துவாரகாமாயி” இருக்கிறது. பழைய கட்டிடத்தை இடித்துப் புதுப்பித்திருக்கிறார்கள். வெளியில் இருக்கும் திண்ணையில் அமர்ந்து பாபா பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பது வழக்கம்.
துவாரகாமாயி என்ற முன்னாள் மசூதியில் தான் பாபா நாற்பது ஆண்டுகள் அமர்ந்து, உறங்கி, பேசி, பழகியிருக்கிறார்.
உள்ளே பாபா அமர்ந்திருந்த கருங்கல் ஆசனம் உள்ளது. இடது புறத்தில் உயர்ந்த மேடையில் ஒரு அக்னி குண்டம் இருக்கிறது. அதற்கு துனி என்று பெயர். அதில் கிடைக்கும் புனித சாம்பலை உதி என்று அழைக்கிறார்கள். உடல், மன நோய்களைத் தீர்க்கும் மாமருந்தாய் அது கருதப்படுகிறது.
பாபா ஏற்றி வைத்த ஞான ஒளிக்கு அடையாளமாக அந்த அக்னி எரிந்து கொண்டேயிருக்கிறது. அங்கு வரும் பக்தர்கள், நம்பிக்கை, பக்தி, மன உறுதி என்ற கட்டைகளைக் கொண்டு வந்து அதில் போட்டு அந்த ஜோதியை அணையாமல் காத்து வருகிறார்கள்.
துவாரகாமாயியில் இருக்கும் அக்கினி குண்டத்திற்கு எதிரே அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு மண்டபத்திற்குள் ஸ்ரீ சாயிபாபாவின் உயிரோவியம் ஒன்று உள்ளது. உலகப் பந்தங்களிலில்லாமல் வாழந்த, ஊர், பேர் தெரியாத அந்தப் பக்கிரி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலும் அந்த இடத்தில்தான் அமர்ந்திருப்பார். மனக்கவலையோடு வந்தவர்களுக்கு மாமருந்தாகவும், ஆன்மீக ஒளி நாடி வந்தவர்களுக்கு அருளமுதமாகவும் பாபா வீற்றிருந்த அந்த இடத்தில் ஒரு படம் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு சமயம் பாபா தம்மைக் காண வரும் பணக்காரர்களிடம் நிறைய கோதுமை கொண்டு வந்து தரும்படி கேட்டார். அவர்களும் ஏன், எதற்கு என்று கேட்காமல் மூட்டை, மூட்டையாக கோதுமை கொண்டு வந்து குவித்தார்கள். பாபா, தம்மைக் காண வரும் பெண்மணிகளை அழைத்து மசூதியில் சேகரிக்கப்பட்ட கோதுமையை அறைத்துக் கொடுக்கச் சொன்னார். அவர்களும் அரைத்துக் கொடுத்தனர்.
ஒரு மாதத்தில் ஷீர்டியிலும், சுற்றிலுமுள்ள கிராமங்களிலும் கடும் உணவுப் பஞ்சம் வந்தது. குடிக்கக் கஞ்சியுமின்றி மக்கள் அவதியுற்றார்கள். அப்போது, பாபா மசூதியில் தாம் சேகரித்து வைத்திருந்த கோதுமை மாவை வயிற்றுக்கில்லதவர்களுக்கு வாரி வாரி வழங்கி அவர்கள் பசியைப் போக்கினார்.
ஒரு நாள் பாபா எந்திரத்தில் கோதுமையை அரைத்துக் கொண்டிருந்தாராம். அதைக் கண்ட சில பெண்மணிகள் ஆச்சரியப்பட்டு, ஏன் பாபா, உங்களுக்கு இந்த வேலை எதற்கு? நீங்கள் ரொட்டி சுட்டு தின்னப் போகிறீர்களா? என்று கேட்டார்களாம். பாபா அவர்களுக்குப் பதில் கூறாமல் மும்முரமாக அரைத்துக் கொண்டிருந்தாராம். பிறகு நான்கு பெண்மணிகள் தைரியமாக மேடைமீது ஏறி வந்து, பாவம், உங்களுக்கு கை வலிக்கப் போகிறது. நாங்கள் அரைத்துத் தருகிறோம் என்று கூறி பாபாவை விலகிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளவே பாபா சிறிதும் இஷ்டமில்லாமல் நகர்ந்து கொண்டாராம். பின்னர், அந்தப் பெண்மணிகள் அங்கிருந்த கோதுமையைஎல்லாம் அரைத்து, ஆளுக்குக் கொஞ்சமாக மடியில் கட்டிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானார்களாம். இதைக் கண்ட பாபாவுக்குக் கடும் கோபம் வந்து விட்டது.
“என்னன்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்க? இது உங்க அப்பன் வீட்டுச் சொத்தா? நீங்களா எனக்குக் கோதுமை கொடுத்தீர்கள்? இந்த மாவை நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. எல்லாவற்றையும் அப்படியே எடுத்துக் கொண்டு போய் இந்த ஊர் எல்லைக்கு அப்பால் கொட்டி விடுங்கள் என்று கட்டளையிட்டாராம்.
பாபா உத்தரவிட்ட பிறகு மீறுவதற்கு யாருக்காவது தைரியம் வருமா? அப்பெண்மணிகளும் கோதுமை மாவை எடுத்துக் கொண்டு போய் கிராம எல்லைக்கப்பால் கொட்டி விட்டார்கள்.அப்போது ஷீர்டியில் காலரா பரவியிருந்தது. அதை விரட்டியடிக்கத்தான் பாபா அப்படி செய்தார். அவர் காலரா நோயைத்தான் அப்படி பொடிப்பொடியாக்கி எல்லைக்கு அப்பால் விரட்டினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிரகு, ஷீர்டியில் காலரா குறைந்து மறைந்தே விட்டது. இது நடந்தது 1910-ல்.