சீரடி சாய் சரிதம் – 1

ஷீர்டி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு தெளிவாக எழுதப்படவில்லை. அவர் பக்தர்களிடம் கூறியதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவரது வரலாறு எழுதப்பட்டுள்ளது. நைஜாம் ராஜ்யத்தில் உள்ள பாத்ரி என்ற ஊரில் ஓர் ஏழை பிராமணருக்கு தாம் பிறந்ததாகவும், இளம் வயதிலேயே தம் பெற்றோர், தம்மை ஒரு முஸ்லிம் சாதுவிடம் விட்டு விட்டதாகவும் பாபா கூறியிருக்கிறார். நான் ஒரு ஏழை பிராமணன் என்று பாபா அடிக்கடி சொல்லிக் கொள்வாராம்.

உங்களுடைய குரு யார்? என்று யாராவது பாபாவிடம் கேட்டால் வெங்கூசா, வெங்கூசா என்று கூறுவார் என்று அவரது சிஷ்யராக இருந்த ரேகே மஹராஜ் கூறுகிரார்.

இளம் வயதில் பாபாவை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அந்த முஸ்லீம் நான்கு ஆண்டுகளுக்குள் இறந்து வ்ட்டார். உயிர் பிரியும் போது அவர் தனது மனைவியை அருகில் அழைத்து, “இந்தப் பையனை சேலு கிராமத்திலிருக்கும் கோபால் ராவ் தேஷ்முக் என்ற பிராமண ஜமீந்தாரிடம் கொண்டு போய் விட்டு விடு” என்று கூறி விட்டுச் சென்றார். அதன்படியே சிறுவனான் பாபா, ஷீர்டிக்கு கிழக்கே நூற்று அறுபது மைல் தொலைவிலுள்ள சேலு கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டு கோபால் ராவ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த கோபால் ராவ் நல்லொழுக்கமும், நன்னடத்தையும், தெய்வ பக்தியும், ஆசார அனுஷ்டானங்களும் கொண்ட் ஒரு மகான். முற்பிறவியில் காசியில் அவர் ராமானந்தராக இருந்தவர். அப்போது கபீர் என்ற பரம பக்தர் அவரை நாடி வருவது வழக்கம். இந்த பிறவியிலும் அதே கபீர் அவரிடம் வரப்போவதாக ஒரு ஞானி அவருக்கு அசரீரியாக கூறியிருந்தார். அந்த வாக்கு உடனே பலித்து விட்டது. அந்த அசரீரி தோன்றிய சில நாட்களுக்குள்ளேயே சிறுவனான பாபா, முஸ்லீம் சாதுவின் மனைவியுடன் அவரை நாடி வந்தார்.

கோபால் ராவ் திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாளின்பரிபூரண அருள் பெற்றவர். ஏழுமலைவாசன் அவருள் உறைவதாகவும், அவர் மூலம் பல அற்புதங்களை நிகழ்த்தி வருவதாகவும் மக்கள் நம்பினர். அப்படிப்பட்ட மகான், பாபாவைச் சீடராக ஏற்றுக் கொண்டார். பாபாவும், அவரை மாதாவாகவும், பிதாவாகவும், குருவாகவும், தெய்வமாகவும் போற்றி வணங்கி தம் வாழ்க்கைப் பயணத்திற்கு வழித் துணையாக்கிக் கொண்டார்.

அஷ்ட மகா ஸித்திகளையும் செய்து காட்டவல்ல கோபால் ராவ் அற்புதங்கள் நிகழ்த்தியதை பாபா நேரில் பார்த்து அதிசயித்திருக்கிறார். ஒரு சமயம் பாபாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கோபால் ராவ் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார்.

சாதுர்மாஸ்ய விரதத்தின் போது குருவின் கைங்கரியத்தில் பாபா மிக அக்கறையோடு ஈடுபட்டிருந்த சமயம் அது. பாபாவின் மீது குரு பொழியும் அன்பைக் கண்டு பொறாமையடைந்த வேறு சில சீடர்கள் பாபாவைக் கொன்று விடுவது என்று தீர்மானித்தனர். மறைந்திருந்த ஒருவன் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் பாபாவின் மீது வீசியெறிந்தான். குரு தமது மந்திர சக்தியால் அந்தக் கல்லை அந்தரத்திலேயே நிற்கவைத்து அது பாபாவைத் தாக்காமல் செய்து விட்டார். உடனே மற்றொரு கல் பாபாவை நோக்கிப் பறந்து வந்தது. சட்டென்று எழுந்து ஓடி வந்து பாபாவின் குறுக்கே நின்றார் குரு. வேகமாக பறந்து வந்த அந்தக் கல் அவரது தலையை தாக்கிற்று. ரத்தம் பீறிட்டு வழிந்தது. குருவின் கருணையையும், தியாகத்தையும் கண்டு கண்ணீர் வடித்துக் கதறித் துடித்தார் பாபா.

பாபாவை கோபால் ராவ் சமாதானப்படுத்தி “குழந்தாய், அழாதே, நான் வந்த காரியம் முடிந்து விட்டது. நாளை மாலை நான்கு மணிக்கு நான் இந்த உடலை விட்டுப் பிரிவது என்று உறுதி கொண்டு விட்டேன். நான் பெற்றுள்ள சக்திகள் அனைத்தையும் உனக்கு அளித்து விட்டுச் செல்ல விரும்புகிறேன். நீ போய் அதோ அந்தக் கருமை நிறப் பசுவின் பாலைப் பெற்று வா, என்று கூறி பாபாவை அனுப்பினா.

பாபா சென்று மாட்டுக்காரனிடம் பால் கேட்டார். அவன் சொன்னார், “ஐயா, இது கறவை மாடு இல்லீங்க, இது இன்னும் ஈத்து விடலயே”

பாபா குருவிடம் வந்து செய்தியைச் சொன்னார். குரு சிரித்தார்.

அந்தப் பசுவை இங்கு அழைத்து வரச்சொல், என்று பணித்தார்.

பசு வந்தது. குருநாதர் அதன் கொம்பிலிருந்து கால்வரை ஒரு முறை அன்புடன் தடவிக் கொடுத்தார். “இப்போது பால் கறந்து பார்” என்று மாட்டுக்காரனிடம் அன்புடன் மொழிந்தார்.

என்ன விந்தையோ, தெய்வ புருஷரின் கரம் பட்டதும், அதிசய மாற்றம் நிகழ்ந்து விட்டது.

மாட்டுக்காரன் காம்புகளை வருடிப் பாலைக் கறந்தான். அது காமதேனுவாய் சுரந்தது. அந்தப் பாலை குருவின் கையில் கொடுத்தான்.

குரு, அதை பாபாவிடம் கொடுத்து அருந்தச் சொன்னார். அது சாதாரணப் பால் அல்ல. குழந்தை சம்பந்தர் உண்ட அதே ஞானப்பால். தமது தவத்தின் பயனையெல்லாம் சாறாகப் பிழிந்து சீடனுக்குத் தந்து விட்டார் குரு. இந்த வாழ்வில் தாம் பெற்ற அறிவையும், மந்திர சக்தியையும் ஆன்மீகச் செல்வத்தையும் இந்த வையகம் வாழ்வதற்காக சீடனுக்குத் தானமாக தந்து விட்டார் அவர். கோபால் ராவ் தேஷ்முக் என்ற உடலில் உறைந்த ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், சாய் பாபாவாகத் திகழப் போகும் உடலில் புகுந்து விட்டார். குருவான இந்த ஸ்ரீ வேங்கடேசப் பெருமானைத்தான் பாபா பின்னர் வெங்கூசா என்று குறிப்பிட்டார்.

குருவின் பேரருளால் ஏற்பட்ட இந்த மாற்றத்தைச் சோதிக்க அடுத்த கணமே பாபாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

கல்லை வீசியடித்துக் குருவின் தலையப் பிளந்தவன் தரையில் பிணமாகக் கிடந்தான். அவனுடைய நண்பர்கள் ஓடி வந்து குருவின் காலில் விழுந்தனர்.

“ஐயா பெரியவரே! எங்களை மன்னித்து விடுங்கள். விவரம் தெரியாமல் பாபாவைக் கொல்லத் துணிந்து விட்டொம். உங்கள் மகிமை இப்போது புரிந்து விட்டது. இறந்து விட்ட இவனை எழுப்பி விடுங்கள். நாங்கள் போய் விடுகிறோம்” என்று கதறினர்.

கோபால் ராவ் கையை விரித்து விட்டார். என்னிடம் இனி ஒரு சக்தியும் இல்லை. இதோ இந்தச் சிறுவனிடம் மண்டியிட்டுக் கேளுங்கள். என் சக்திகள் எல்லாம் அவனைத் தஞ்சம் அடைந்து விட்டன. அவன் மனம் வைத்தால் இறந்தவனுக்குக் கூட உயிரளிப்பான் என்றார்.

எல்லோரும் பாபாவைக் கெஞ்சினார்கள். உடனே சிறுவன் பாபா, தம் குருவின் பாத தூளியை எடுத்து சடலத்தின் மீது தெளித்தார். உடனே அது உயிர் பெற்று எழுந்தது. இருவர் கால்களிலும் விழுந்து வணங்கி விட்டு அவன் ஓடி விட்டான்.மறுநாள் தாம் குறிப்பிட்டிருந்தபடி மாலை நான்கு மணிக்கு குரு இறைவனடி சேர்ந்தார். கடைசி மூச்சுப் பிரிவதற்கு முன் அவர் பாபாவை அழைத்து, மேற்குத் திசையைக் காட்டி “நீ அந்த திசையில் போ” என்று கூறி விட்டு மறைந்தார். மறுநாள் சஞ்சயனம் முடித்து அங்கிருந்து புறப்பட்ட பாபா வழியில் சிறிது காலம் எங்கெல்லாமோ தங்கி விட்டு, ஷீர்டி வந்து சேர்ந்தார்.