புட்டபர்த்தி – 38

அத்தியாயம் – 38

பிணி தீர்ப்பதும் பிறவி தீர்ப்பதும்

குருடர்களுக்கு நானே கண்;
நொண்டிகளுக்கு நானே கால்.

பைபிள்: பழைய ஏற்பாடு

டாக்டர் ரங்கா ராவுக்கு ஓர் உத்தரவு போட்டுப் பெரிய சோதனை செய்துவிட்டார் பாபா.

ரத்த அழுத்தம், நீரிழிவு. மஹோதரம், இதய நோய், ஹெர்னியா இத்தனை கோளாறுகளும் ஒருங்கே கொண்ட ராயபுரம் ஸ்ரீ சகன் லாலுக்கு காடராக்ட் ஆபரேஷன் செய்யும்படிமுஹுர்த்தம்கூடக் குறித்து, உத்தரவு போட்டுவிட்டார்!

இப்படிப்பட்ட ஒரு கேஸுக்கு ஆபரேஷன் செய்ய முற்படும் டாக்டரைப் போலீஸார் கைதுகூடச் செய்து விடலாம் மருத்துவ நன்னடத்தை விதிகளுக்கு அத்தனை முரணான சமாசாரம்!

பாபாவின் பரம பக்தரான போதிலும் ரங்கா ராவுக்கு அன்று தியேட்டருக்குப் போகத் தயக்கமாகத்தான் இருந்தது. உதவியாளருக்கும் முகத்தில் ஈயாடவில்லை. ஓர் உயிர் போவதற்கும், ஒரு டாக்டரின் தொழில் பறிபோவதற்கும் அத்தனை முகாந்தரம் இருந்தது.

பாபா, பாபா!” என்று புலம்பியது டாக்டரின் நெஞ்சு. “மருத்துவ சாஸ்திரப்படி, மனமறிந்து ஓர் உயிரைக் கொலை செய்யப் புறப்படுகிறேனே! உன் ஆணைக்கு முன் எந்த விதியும், எந்த நியதியும் நில்லாது என்றால் அதை நான் நம்பும் தெளிவை அளியப்பா! உத்தரவு போட்ட நீ, அதை நிறைவேற்றும் மனத் திராணியை அளிக்காமல் சோதிக்கலாமா?” என்று வேண்டினார்.

பிறகு என்ன நடந்தது? ரங்கா ராவின் வார்த்தைகளிலேயே கேட்போம்:

திடுமென பாபா என் கையைப் பற்றிக்கொண்டு, தம்மோடு மேலே ஆபரேஷன் அறைக்கு வரச் சொல்வதை உணர்ந்தேன். அவரைப் பின்தொடர்ந்தேன். மிக ஸ்பஷ்டமாக என் கண்முன் அவரது காவி நிறக் கஃப்னி சென்றது. மிருதுவாக நகர்ந்து படிப் படியாக மாடி மீது ஏறிற்று. அதன் பின்னாலேயே சென்றேன். வழக்கம் போல் கை கழுவிச் சுத்தம் செய்து கொண்டேன். கவுனும் கையுறைகளும் போட்டுக் கொண்டேன்.”

நோயாளி மேஜை மேல் கிடந்தார். அவரது ரத்த அழுத்தம் ஏகமாக உயர்ந்திருந்தது. இதயத்துடிப்பும் வெகுவாகி விட்டிருந்தது. அப்போதே அந்த மேஜையில் அவர் உயிரைவிட்டு விடப் போகிறார்என்றுதான் தோன்றியது.

அப்போது என்னை வௌவிக்கொண்ட பயப்பிராந்தி போல் என் வாழ்நாளில் நான் அனுபவித்ததில்லை. அடியோடு நிராதர வாகிவிட்டதாகத் தோன்றியது.” ஸாயிராம், ஸாயிராம்!” என்று கூவியழத் தொடங்கினேன். உதவியாளர்களும், ‘கோரஸ்சேர்ந்துஸாயிராம், ஸாயிராம்!” என்றனர். நோயாளியும் உருவேற்றத் தொடங்கினார். ‘ஸாயிராம், ஸாயிராம்!’

தியேட்டரில் இருந்த அனைவரும் பிரமிக்க, நானுமே மலைத்து நிற்க, நான் உடுத்திருந்த வெள்ளை ஏப்ரன் காவி வர்ணமாக மாறியது. அதன்பின் கையுறைக்குள் இருந்த என் விரல்கள் என் இயக்கத்தில் இல்லவே இல்லை. மஹா ஸர்ஜனான ஸாயி என்னுடல் மூலம் தம்மையே புலர்த்திக் கொண்டுவிட்டார்! அவர் தான் ஆபரேஷன் செய்தார்!”

ஒரு சில விநாடிகளில் ரண சிகித்ஸை முடிந்தது. பின்னால் செய்ய வேண்டிய சாங்கியங்களையும் பிரபுவின் கரங்களே கிடுகிடுவென முடித்தன.”

எல்லாம் ஆனதும், என்னிலிருந்து அவர் போய்விட்டார். என் கவுன் மறுபடி பழைய வெள்ளையாக மாறியது.”

இதே சமயத்தில் பாபா பிரசாந்தி நிலயத்தில் சுற்றியிருந்த பக்தரிடம்சகன்லால் ஆபரேஷன் முடிந்துவிட்டதுஎன்றாராம்!”

ஆத்மாவில் என்றும் அதுவாக இருப்பவர்; ஒரு படி தள்ளி சித்தத்தை வேறாக்கி வைத்து உடன் இருக்கிறார்; மேலும் ஒருபடி தள்ளி உருவத்தையோ இதைவிட பேதத்தில் வைத்துள்ளார். இப்படிப்பட்டவர் டாக்டர் ரங்கா ராவ் விஷயத்தில் அவரது உருவிலுங்கூடத் தம்மையே பல நோயாளிகளுக்குக் காட்டியிருக்கிறார். இன்றோ, ஆத்மாவுக்கு மிக மிகத் தள்ளி உடம்புக்கு வெளியே உள்ள உடுப்பைக்கூடத் தமதாகக் காட்டி, அதே சமயம் உள்ளுக்கு உள் நின்று உடலை இயக்கி, அந்த இயக்கத்தை ரங்கா ராவ் வேறாக நின்று தமது சித்தத்தால் பார்க்கவும் செய்திருக்கிறார்! எந்தப் புராணத்திலும் கேட்டிரா லீலா மஹிமை!

டாக்டர் ரங்கா ராவின் உடலிலும், உடையிலும்கூட பாபாத்வம் அலர்ந்ததை எண்ணுகையில்எந்தையே ஈசா, உடல் இடம் கொண்டாய்என்ற மணிவாசகத்துக்கு ஒரு புது உரையே கிடைக்கிறது. உடம்பே ஆத்மாவுக்கு ஓர் உடைதான் என்றான் கண்ணன். அந்த உடைக்குப் போடும் உடையிலுங்கூடப் பர்த்திக் கண்ணன் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கிறான்.

புண்டரீக மஹர்ஷி பரமேச்ரவனின் உயிரோடு தம் உயிரைக் கலக்க விரும்பாமல் அவனது திவ்ய மங்கள உருவிலே தம் உருவைக் கலக்க விரும்ப, சிவபெருமானும் அவ்விதமே காயத்தில் அவரை ஆரோஹணிக்கச் செய்து காயாரோஹணேச்வரரானார். பர்த்தீசனோ ரங்கா ராவின் உடலில் தாம் அவதரணம் செய்து, அவரையே தாமாகப் பல நோயாளிகளுக்குக் காட்டி காயாவதரணேச்வரராகி’ இருக்கிறார்!

***

நேரில் பாபாவே மல்லிகைப்பூ வைத்துக் கட்டியும் கையசைப்பில் வரும் சீசாவிலிருந்து சீதத் துளிகளைக் கண்களுக்குள் விட்டும் பல கண் நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார். நிச்சயமாக பார்வை திரும்பாது என்று டாக்டர்கள் தீர்மானித்துவிட்ட எர்ணாகுளம் டாக்ஸி உரிமையாளர் ஸ்ரீ டி.என். நடராஜன் இதற்கு ஒரு சான்று.

ஒரு குருடரின் கண்ணில் பாபா ஊதிய மாத்திரத்தில் பார்வை வந்ததாக இந்திரா தேவி கூறுகிறார்.

பாபாவின் வாழ்க்கை வரலாறானஸத்யம்சிவம்சுந்தரத்தைப் பாராயணம் செய்தே காடராக்ட் நீங்கியவருண்டு.

அகக் கண்காட்சி கொடுப்பது இதனினும் விசேஷம்.

தமிழ்த் திரையுலகின் முதல் சக்ரவர்த்தியாக இருந்த ஸ்ரீ எம்.கே. தியாகராஜ பாகவதர் கடைசிக் காலத்தில் கண்ணிழந்தும், மற்றும் பல விதங்களில் அடியோடு ஸுகவீனமுற்றும் பாபாவை அடைந்தபோது, பாபா அவரிடம் அகக்கண் பார்வை, அதற்கும் மேம்பட்ட பாராமலே பார்க்கும் துரீயப் பார்வை இவைபற்றியே பேசினார். இந்தப் புறக்கண்ணால் பலவற்றைப் பார்ப்பதாலேயே தீவினை சேர்கிறது என்றார். வேதாந்தமாகப் பேசினாரேயன்றி, பெளதிகமாகக் குணப்படுத்தாமலே இருந்துவிட்டார். பாகவதரே ஞானக் கண்ணையும் ஊனக் கண்ணையும் பற்றிச் சிந்தாமணியில் பாடியவர்தாமே!

ர்வபுண்ய விசேஷமோ, பாபாவின் அநுக்ரஹ விசேஷமோ எம். கேடிக்கு மெய்யாலும் அருள்தாகம் எடுத்தது.

ஸ்வாமீ! வாஸ்தவந்தான். இந்தக் கண்ணால் பார்த்ததெல்லாம் போதும். ஆனால் இதனாலும்கூட ஒரு பெரிய நல்லதைப் பார்க்க முடியுமே! இந்த பூலோகத்தில் உருவம் கொண்டு உலவும் தங்களையும் இந்த ஊனக்கண்ணால் காணலாம்தானே! அடியேனுக்கு அந்த தரிசன பாக்யத்தை மட்டும் அளிக்கலாகாதா?” என்று விண்ணப்பித்தார்.

சரி, இந்தத் தரிசனத்துக்காக மட்டும் பார்வை தருகிறேன்! ம்பார் நாயனா!” என்றார் பாபா.

நாயனாவின் நயனத்தில் நாராயண கிருபை பாய்ந்தது. பாகவதரின் கண்களில் பார்வைச் சக்தி பாய்ந்ததுநிஜமா, இது நிஜமா? நீ அடிமைக்கும் காட்சி தந்தது நிஜமா?” என்று ஸினிமாவில் பாடியவர், மெய்யாகவே அந்தப் பாட்டை நாவு கொண்டு பாட முடியாத உணர்ச்சி நிலையில் ஸத்யஸாயி நாதனை இனித்த பாதத்திலிருந்து விரித்த முடிவரையில் கண்ணாரக் கண்டுகொண்டார்.

நன்றாகப் பார்த்துக்கொண்டாயா?” என்றார் பாபா.

நிஜ பக்தி என்ற ஏரியல் போட்டுக் கொண்டவர் குறித்துஒகதூரி நனு சூஸ்தே வானி பாபாலு தொலசி போதுந்தி!” என்பார். அதாவது, அவரை மட்டும் பார்க்கிறபடி பார்த்துவிட்டால், ஒரே தரிசனத்தில் ஒருவரது பாபம் முழுதும் தொலைந்துவிடுமாம்!

அவரைப் பார்க்கவேண்டியபடிப் பார்த்துக்கொண்டார் எம்.கே.டி.

அதோடு பாபா பார்வையைத் திரும்ப வாங்கிக் கொண்டுவிட்டார்!

கண்ணனது விச்வரூபத்தைக் குருட்டு திருதராஷ்டிரனும் கண்டு, அக்காட்சிக்குப் பின் மீளவும் குருடாகவே விரும்பியது; ஸூர்தாஸ் கண்ணனின்றிக் காண எதுவுமில்லை என்று பார்வையின் இழப்பையே லாபமாக்கிக் கொண்டது; பெருமாளையும், ஸ்ரீராமாநுஜரையும் பார்ப்பதற்காக மட்டும் கூரத்தாழ்வார் பார்வை பெற்று, மற்றவர்களைப் பார்க்க விரும்பாமல் குருடராகவே இருந்தது ஆகியன நினைவு வருகிறது.

பாகவதர் தாம் கண்ட பாபாவை அங்க அங்கமாக வர்ணித்த போது மற்ற அடியார்களுக்கு அவர் தாற்காலிகப் பார்வை பெற்றுத் தரிசனம் செய்தது உறுதியாகத் தெரிந்தது.

பாகவதர் விடைபெறுகையில், உடன் இருந்த ஒருவர் அவரது சரீரம் நோய்ப் பிண்டமாகிவிட்டதைச் சொல்லி, அவரைக் குணப்படுத்த வேண்டும் என்று விண்ணப்பிக்க, பாபா, “கொத்த சரீரமு இஸ்தானு (புது உடம்பு தருகிறேன்)” என்றார். பாகவதர் ஊருக்குத் திரும்பிச் சிறிது காலத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அன்று பாபா வரமொழி அளித்தபோது உடனிருந்து கேட்டிருந்த பிரசாந்திவாஸி ஒருவர் ஸ்வாமியின் வாக்குப் பலிக்கவில்லையே என்று எண்ணினார். ஸ்வாமி முறுவலோடு, “நான் என்ன சொன்னேன்? அந்த நலிந்த சரீரத்தை ஸரி செய்வதாகவா சொன்னேன்? புது உடம்பு தருவதாகத்தானே சொன்னேன்? பழைய உடம்பு போய்விட்டது. எம்.கே.டி. வேறு ஓரிடத்தில் புது உடம்பில் பிறந்திருக்கிறார்என்றார்.

(பாபா சொல்லும் வார்த்தைகளைப் பூரணமாகப் புரிந்து கொள்ளாமல், பிறகு அவர் சொன்னபடி நடக்கவில்லை என்று குறை சொல்வதற்கு இதுவும் ஓர் உதாரணம்.)

***

சேயொன்றுக்கு ஸாயி உயிர்தந்து வந்தது அவரது அஷ்டோத்தர சத நாமாவளியிலேயே இடம் கொண்டுவிட்டது. நால்வராகச் சென்று நாடகமாடி நலம் புரிந்து வந்த லீலை. இடம், புட்டபர்த்திபெங்களூர் சாலையில் பாலசமுத்ரத்துக்கும் பாகேபல்லிக்கும் நடுவே. நேரம்: 1958 நவம்பர் 25, பிற்பகல் மணி 2-45.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஸ்வாமி ஜயந்தியைக் கண்டு திரும்பிக்கொண்டிருக்கும் ஸ்ரீ எஸ்.ஆர். வேங்கடராமனின் சிறு குழந்தை கீதஸுதா அவ்விடத்தில் அந்நேரத்தில் பஸ்ஸிலேயே இறந்துவிட்டது; அல்லது இறப்பின் வெகு நெருக்கத்தில் இறுகிவிட்டது. தாய் தந்தையருக்கு எப்படியிருக்கும்?

பஸ் நின்றது. ஏகக் கூட்டம் சேர்ந்துவிட்டது.

ஒரு கிழவன் கூட்டத்தின் நடுவேயிருந்து வந்தான். “கொளந்தையை இங்கே கொண்டாய்யாஎன்றான்.

அவனோடு இரு பெண்டிரும் ஒரு பிள்ளையும் இருந்தனர். “ஆமாம், ஆமாம். அவருகிட்டே பாப்பாவைக் கொடுங்க. உசிரு போயிடுச்சுன்னு தோணற ரிசிவுங்களைக்கூட அவரு மருந்து மந்திரம் போட்டுப் பொளைக்க வெச்சுடுவாருஎன்று அவர்கள் ஒத்துப் பாடினர்.

சவம் என்று எண்ணப்பட்ட சிசுவைக் கிழவனாரிடம் கொடுத்தார்கள். அவர் அதை வாங்கிக்கொண்டு ஏதோ மந்திரங்களை முணமுணத்தார். இவர்களிடமிருந்தே ஸாயி விபூதி வாங்கி அதன் நெற்றியில் வைத்தார்.

அவ்வளவுதான்! குழந்தைவீல்என்று அழுதது. அழுத பெற்றோரின் முகம் அலர்ந்தது.

கிழவருக்கு ஒரு ரூபாய் எடுத்து நீட்டினார் எஸ்.ஆர்.வி. அவர் வாங்க மறுத்துவிட்டார். ஓர் ஆரஞ்சை அவருக்கு அளித்துவிட்டு பஸ்ஸில் மறுபடி ஏறுமுன், “எங்கள் வயிற்றில் பால் வார்த்த மஹாராஜா, உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.

ஜோடி ஆதிபல்லி ஸோமப்பாஎன்று பதில் வந்தது.

எனக்கென்னவோ, யோசிக்க யோசிக்க அந்தக் கிழவரும், அவ்விரு பெண்டிரும், பிள்ளையும் பாபாவே தரித்த வேஷங்கள் என்றுதான் தோன்றுகின்றன. 25ந் தேதி பிற்பகல் 2-45க்கு பாபா கூடுவிட்டுச் சென்றிருக்கவேண்டும் என அநுமானிக்கிறேன்என்று எஸ்.ஆர்.வி. எழுதிய கடிதம் நவம்பர் 28ந் தேதிதான் புட்ட பர்த்திக்கு வந்தது. ஆனால் 25-ந்தேதி மாலை ஐந்தரை மணிக்கே பாபா அணுக்கத் தொண்டர்களுக்கு இந்நிகழ்ச்சி விவரங்களை நுணுக்கமாகச் சொல்லிவிட்டிருந்தார்! “நான் அவனுக்கு இன்று பிற்பகல் பிரஸாதமாகக் கொடுத்த ஆறு ஆரஞ்ஜுகளில் ஒன்றை எனக்கே ஃபீஸாகக் கொடுத்தான்! குழந்தையைத் தொடர்ந்த விபத்தை அப் பழத்திலேயே ஆகர்ஷணம் செய்து எறிந்துவிட்டு இங்கு வந்து சேர்ந்தேன்என்றார் அன்றைய தினம் பிற்பகல் சரியாக 2-45க்குக் கூடுவிட்டுக் கிளம்பிய பாபா.

ஆதிபல்லிதான் உலகின் முதல் ஊரான கைலாஸம். அங்கு உமையுடன் ஜோடியாக இருப்பவனே ஸோமப்பன். உமை, அவளது சோதரி கங்கை இருவரும் இவனை விட்டுப் பிரியாதவர்கள். ஸோமப்பன் ஸோமாஸ்கந்தனாகவே முருகப் பிள்ளையுடனும் இருப்பவர். இதனால்தான் அன்று இரு பெண்டிரும் ஒரு பிள்ளையுமாக வந்தபோதுஜோடி ஆதிபல்லி ஸோமப்பாஎன்று பெயர் சொல்லிக்கொண்டாராம்.

பாத மந்திர நாட்களிலேயே பாபாவுக்கு அஷ்டோத்தர சதம், ஸஹஸ்ர நாமம் முதலியன பக்தர்களாலும், பண்டிதர்களாலும் இயற்றப்பட்டுவிட்டன. அவர் மட்டுமே பஜன் இயற்றிய நாட்கள் போய், அடியாரும் ஸ்தோத்ரங்கள், பாடல்கள், நாமாவளிகள், பஜனை கீதங்கள் இயற்றத் தொடங்கிவிட்டனர். பிற்பாடு அழகியஸுப்ரபாதம்கூட அவருக்குத் தினமும் ஸமர்ப்பிக்கப்படலாயிற்று. பக்தர் சூட்டிய அஷ்டோத்தர சதம், ஆயிரநாமம் ஆகியன ஒருபுறமிருக்க ஸாயிராமனே உகந்ததுஜோடி ஆதிபல்லி ஸோமப்பநாமம். “ஸாயிபாபாவேதான்ஸோமப்பா”. அதாவது, “+ஆயி+பாபாவேதான்+உமா+அப்பா”. அதனால் முன்னர் இருந்த அர்ச்சனை நாமாவளியிலிருந்து ஒரு பெயரை எடுத்து விட்டு அதனிடத்தில் இப் பெயரை பாபாவே சேர்த்தார்.

ஓம் ஸ்ரீ ஸாயி ஜோடி ஆதிபல்லி ஸோமப்பாய நம:

கைவிடப்பட்ட பல கான்ஸர் கேஸ்களை பாபா சொஸ்தம் செய்த அற்புதம் பலமுறை நிகழ்ந்திருந்தாலும், ஸ்ரீ பி.எஸ். தீக்ஷித்தின் சகோதரிக்குச் செய்ததில் புதுமைச் சிறப்பு உண்டு.

முன்னத்தியாயமொன்றில் நாம் சந்தித்துள்ள பஜனைக் கலைஞர் தீக்ஷித் அப்போது மஹாராஷ்டிர அரசின் டாகுமென்டரி தயாரிப்பாளராக இருந்தார். இவரது சகோதரியின் இடது மார்பகத்தில் கான்ஸர் கண்டிருப்பதாக பம்பாயிலுள்ள டாடா நினைவு மருத்துவமனையின் பரிசோதனைகளிலிருந்து முடிவாயிற்று. ஒரு புதன்கிழமை அறுவை செய்ய இருந்தனர்.

அதற்குள் பாபாவை தரிசித்து அருட்காப்புப் பெற்றுவர வேண்டுமென்று தீக்ஷித் நோயுற்ற சகோதரியுடன் அனந்தப்பூருக்குப் பறந்தடித்துக் கொண்டு வந்தார். இவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே பாபா, “மாலும் ஹை, மாலும் ஹை” (“எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்”) சொல்லி, “இடது மார்பில் புற்று நோய். செவ்வாய்க்கிழமை ஆபரேஷன் செய்வதாக சீஃப் ஸர்ஜன் சொன்னார். அஸிஸ்டென்ட்கள் அன்று விடுமுறை என நினைவூட்டி புதன்கிழமை வைத்துக்கொள்ளச் சொல்லி, அப்படியே முடிவாயிருக்கிறதுஎன்று பம்பாயில் நடந்ததை நடந்தபடி கூறினார். ஆனால் புதன்கிழமையும் ஆபரேஷன் நடக்கப் போவதில்லை. மறுநாள் குருவாரம்தான் நடக்கும். நான் பக்கத்தில் இருப்பேன். எல்லாம் சரியாகும். விசாரம் வேண்டாம்என்றார் கருணை சொட்ட.

இந்தா, சாப்பிடுஎன்று சொல்லி, விபூதி சிருஷ்டித்து நோயாளியின் கையில் கொஞ்சம் போட்டார். தம் கரத்தில் மீதமிருந்ததை தீக்ஷித்தின் இடது மார்புக்கு மேல் ஆம், நோயாளியின் மேல் அல்ல, அவரது சகோதரரின் மேல்தான்(!) வைத்து நன்றாகத் தேய்த்துவிட்டு, ஒரு தட்டுத் தட்டிஜாவ், ஜாவ்என்று அனுப்பிவிட்டார்.

பம்பாய் திரும்பினர். எக்காரணத்தினாலோ மருத்துவமனையில் புதன்கிழமை நடக்க வேண்டிய ஆபரேஷனை மறு தினத்துக்கு ஒத்திப் போட்டார்கள்.

புதனிரவு படுக்கு முன் தீக்ஷித் மெத்தையில் உட்கார்ந்திருந்தார். திடுமென அவரது இடது நாசியிலிருந்து குழாயைத் திறந்து விட்டாற்போல் ஒரு திரவம் தாரையாகக் கொட்டலாயிற்று. தண்ணீர் மாதிரிதான் இருந்தது. வலியும் இல்லை. அந்த தாரையில் இவரது பைஜாமாவே நனைந்து விட்டது. பிறகு கொட்டத் தொடங்கிய அதே வேகத்தில் தாரை சடக்கென்று நின்றும்விட்டது. இதன் மர்மத்தை யாரே விளங்கிக் கொள்ள முடியும்? “பாபா, நீ விட்ட வழி!” என்று படுத்துக்கொண்டார்.

மறுநாள் காலை 9 மணிக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு அவரது சகோதரி எடுத்துச் செல்லப்பட்டாள். அரை மணியில் பாதாலஜிஸ்ட் வெளி வந்தார். “எக்ஸ்ரேயில் நன்றாகத் தெரிந்த புற்று முண்டு மறைந்து போய்விட்டது. தண்ணீர் மாதிரி ஒரு திரவம் தானிருந்தது. அதையும் வடித்துவிட்டோம். அதைக் குளிர்வித்துப்யாப்ஸிசெய்து பார்க்க வேண்டும். 24 மணி சென்றபின் வாருங்கள்என்றார்.

மறுநாள் காலைரிபோர்ட்வந்தது. கேட்கவும் வேண்டுமா? கான்ஸர் அறிகுறியே இல்லை!

எப்படியோ (somehow) கான்ஸர் மறைந்துவிட்டதுஎன்றார் பாதாலஜிஸ்ட் எப்படியோவா, அப்பன் சித்தப்படிதான்!

மாஜி நோயாளியும், தீக்ஷித்தும் நன்றியஞ்ஜலி செலுத்தப் பர்த்தி சென்றனர். நிலய மாடியில் நின்ற பாபா, அங்கிருந்தே புன்னகைத்து, “! குச் நஹி! பாணி ஒன்லி (ஒண்ணும் இல்லே. வெறும் தண்ணிதான்)” என்றார்.

இதிலே விசித்திரம் தீக்ஷித்தின் இடமார்பில் திருநீறு பூசி, இவரது இடமூக்கில் துர்நீரை வடித்து…! குறத்தி பிள்ளை பெற்றால் குறவன் மருந்து சாப்பிடுவான் என்பார்களே, பாபா அப்படியும் செய்ய வைப்பாரோ என்னவோ?

ஆக, தத்துவம் என்ன? அத்தனை சரீரமும் ஒன்றுதான். நாம் வேறு வேறு என்று நினைக்கிறோம். இல்லை; ஒன்றுதான் என்று காட்டியிருக்கிறார். மருத்துவ சித்து என்று நினைக்கப்படுவதே அத்வைத ஸித்திக்குக் கோடி காட்டுகிறது.

ஸஹோதரர்கள் ஸஹஉதரர் மட்டுமில்லை, ஏகசரீரத்தவரே என்று இங்கே காட்டினார். பிறப்பால் சகோதரராக இல்லாதவருங்கூட அப்படியேதான் என்று தமது உபந்நியாஸங்களில் விளக்குகிறார். இத்தனை சகோதரர்களையும் தாங்கும் ஒரே உதரம் ஸாயி மாதாவான தம்முடையதே என உணர்த்துகிறார்.

இங்கே வேடிக்கையாகச் செய்ததைத் தம் திவ்ய தேகத்தில் விபரீதமாகவே செய்துகொண்டும் சில சமயங்களில் பக்தர்களைக் கதற வைக்கிறார். ஆம், ஸங்கல்ப மாத்திரத்தில் பிறர் நோய் தீர்க்கக்கூடியவர், சில சமயங்களில் உலகின் துயர் தமக்கும் வேண்டும் என்றோ, அல்லது சகிப்புத் தன்மைக்கு வழிகாட்டி உணர்த்த வேண்டும் என்றோ, அல்லது நோயாளியின் பூர்வகர்மத்தை மதித்தோ, பிறரது நோயைத் தம்முடலிலேயே வாங்கித் கொண்டு படாதபாடுபடுவதும் உண்டு. இதைத் தியாக ஸாயி என்ற அத்தியாயத்தில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

எல்லா சரீரமும் ஒன்று, அந்த சரீரம் தமதே என இவர் காட்டிய ஒரு நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.

ஒருமுறை வெளியூரிலிருந்து பிரசாந்தி நிலயத்துக்கு வந்த பாபா காரிலிருந்து இறங்கியவுடன், ஓட்டிவந்தவரைப் பார்த்துஎன்னோடு மேலே வாஎன்றார்.

அவருக்கு அதிசயம் தாங்கவில்லை. நிலயத்தின் அடித்தளத்திலுள்ள பேட்டி அறையில் பாபாவைத் தனித்துச் சந்திக்கும் பாக்கியமே அபூர்வமாகத்தான் கிடைப்பது. அதற்கு மேலே மாடியில் உள்ள பாபாவின் தனியறைக்குப் போகும் பேறு இதனினும் அபூர்வம் அல்லவா? ஆர்வத்தில் இதயம் துடிக்க பாபாவுடன் அவரது அறையை அடைந்தார்.

கர்ண கவசமான அங்கியை பாபா தம் கண்முன்னே கழற்றும்போது ஓட்டுநருக்கு அதிசயம் மேலும் அதிகமாயிற்று.

பார் இங்கே!” என்று அவருக்கு நேரே முதுகைத் திருப்பினார் பாபா.

சுளீர் என்று எவரோ தம்மைச் சவுக்கால் வீறியதைப்போலத் துள்ளிவிட்டார் ஓட்டுநர்!

பாபாவின் முதுகிலே கார் டயர் ஓடினாற் போன்ற அடையாளம்! அந்த அடையாளத்தைத் தாங்கியிருப்பது பாபாவின் உடலா? அல்லது அரவத்தின் உடலமா?

ஆம், வரும் வழியில் ஒரு பாம்பு ஊர்வதைக் கண்டும் ஓட்டுநர் தம் பாட்டுக்கு அதன் மீதே காரைச் செலுத்திக்கொண்டு வந்துவிட்டார்! வாஸ்தவத்தின் பாம்பின் மீதா ஓட்டினார்? பாம்பணை துயில்வோனே அல்லவா அதைத் தாங்கியிருக்கிறான்?

மன்னிப்புக் கேட்டார். “என்ன பிராயசித்தம் செய்வேன், ஸ்வாமி?” என்று கரைந்தார்.

பச்சாத்தாபம்தான் பிராயச்சித்தம். அது போதும். ஸாயி இந்த சரீரத்தில் மட்டும் இல்லைஅந்தரி லோனு ஸாபி உன்னாடு. ஸாயி இல்லாத உடலே இல்லை. போய் வா, பங்காருஎன்று அனுப்பி வைத்தார் பாபா.

***

பாபாவைப்ரணவ சரீரிஎன்றே ரமண சீடராயிருந்து பின்னர் இவரிடம் வந்த ஸ்ரீ அபேதாநந்த ஸ்வாமி கூறுவது வழக்கம். எல்லாவற்றிலும் உள்ள ஸாயி, பிரணவத்தில் விசேஷமாக உள்ளார் எனலாம். நியூயார்க் ஸாயி கேந்திரத்தின் நானூறு அங்கத்தினரும், குறிப்பிட்ட நோயாளிகளின்பொருட்டு கோஷ்டியாக ஓங்கார ஜபம் செய்தே அநேகரைக் குணப்படுத்தியிருப்பதாகப் புள்ளி விவரம் தருகிறார்கள்.

ரிக் வேதப்படி அச்வினி தேவர்கள் எத்தனை விதமான வியாதிகளைத் தீர்த்திருக்கிறார்களோ அத்தனையும் செய்திருக்கிறார் பாபா! தன்வந்தரி என்றே இவரைச் சொல்லலாம். தேவ வைத்தியரான தன்வந்தரி வித விதமான மருந்துகள் தந்து குணப்படுத்துவாராம். “விவித ஒளஷத தாதாஎன்பது அவரது அஷ்டோத்தர சதத்தில் ஒரு நாமம். மூலிகை, ஸிரப், மாத்திரை, தினுசு தினுசான விபூதி என்று நம் ஸ்வாமியும் விதவித மருந்துகள் தருவார் எனக் கண்டோம் அல்லவா?

எப்படிச் சரி செய்தாரென்றே தெரியாமலும் நோய் நிவாரணம் அளிப்பார். ஓர் உதாஹரணம்: நவராத்ரி. மறுநாள் ஏழைகளுக்கு வஸ்திரதானம். இரட்டை வேஷ்டிகளை ஒற்றையாகக் கத்தரிக்கும் பன்னிரண்டு பேர்களில் ஒருவராக பாபாவும் அமர்ந்திருக்கிறார் பிரசாந்தி நிலயத்திலே. சட்டென்று தலையை நிமிர்த்தி, “பார்த்தசாரதி, நீ என்னவோ நான் இங்கே கத்தரியும் கையுமாக உட்கார்ந்து வேஷ்டி கிழிப்பதாகத்தானே நினைத்துக்கொண்டிருக்கிறாய்? போன நிமிஷம் வரை நான் மெட்றாஸில் இருந்தேன். உன்னுடைய குசாவுக்குத் திடீரென்று டிஃப்தீரியா கண்டு, முற்றிவிட்டது. உன்ப்ரதர்அதைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறான். கவலைப்படாதே நான் குணம் செய்துவிட்டேன்என்கிறார்! இங்கும் இருந்து கொண்டு பற்பல மைல்களுக்கு அப்பாலும் கண்ணை, கருத்தை, கருணையை வைத்து பக்த குடும்பத்தை எப்படி ரக்ஷித்தாரென்றே தெரியாமல் ரக்ஷிக்கும் பரந்தாமன்!

***

காணி காணியாகப் பசுமை கொட்டும் பெரிய வயலிலிருந்து ஓரிரு கதிரைக் காட்டுவது போல்தான் இச்சரிதையில் ஸாயிலீலைகளைச் சுருக்கித் தர வேண்டியுள்ளது. ஆயினும் பாபாவின் மருத்துவ மகிமையைச் சொல்லும்போது டாக்டர்களுக்கே இவர் வைத்தியம் செய்வதையும் சிறிதாவது குறிப்பிடத்தான் வேண்டும்

தாம் வைத்தியர்களுக்கும் வைத்தியர் என்பதை பாபா வேடிக்கையாகவே வெளிக்காட்டுவதுண்டு. எடுத்துக்காட்டாக:

1961 ஜூன் மத்தியில் பத்ரிநாத்துக்கு விஜயம் செய்த ஸ்வாமி அங்கு ஜெனரல் ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே பிரிவைத் தொடங்கி வைத்தார். அப்போது அங்குள்ள மெடிகல் ஆஃபீஸரைத் தாமே எக்ஸ்ரே படம் பிடித்தார். “உன் இதயத்தில் நான் உட்கார்ந்திருந்தாலும் இந்த எக்ஸ்ரேயில் விழமாட்டேன்என்று தமாஷ் செய்தார். தமது நடமாடும் மருத்துவமனையை ஒயிட்ஃபீல்டில் தொடக்கிவைத்தபோது ஸ்வாமியே ஸ்டெதாஸ்கோப்பைச் சொருகிக் கொண்டு டாக்டர் சுந்தர ராவைப் பரீட்சித்துப் பார்த்தார்.

இந்த வேடிக்கைகள் தவிர வாஸ்தவமாகவே அநேக மருத்துவருக்கும் மருத்துவராக வியாதி தீர்க்கிறார்.

ஜீவகாருண்யத்தின் திருவுருவமாக விளங்கிய டாக்டர் ஆல்பர்ட் ஷ்வைட்ஸரின் தமிழகமினிஎனத்தக்கவர் கோயம்புத்தூர் டாக்டர் புன்னைவனம். இவர் தமதுரேனல் ஸ்டோன்உபாதிக்கு மருந்தாக பாபா விபூதியை நீரில் கரைத்துக் குடித்தே சரி செய்து கொண்டிருக்கிறார். பெங்களூர் டாக்டர் டி.எஸ். சந்தருக்கு இதே விபூதி தீர்த்தம்தான் கால்ப்ளாடர் கல்லைக் கரைத்திருக்கிறது!

விபூதி, ஸாயிராம நாமம் இவற்றின் மருத்துவ சக்தியை அநேகமாக ஒவ்வொரு ஸாயியடியாருமே கண்கூடாக அநுபவித்திருப்பார்.

***

நாமத்தின் மருத்துவ சக்தியைச் சொல்லும்போது, இனம் சொல்லவொண்ணாமல் நெஞ்சைப் பிசையும் ஒரு ஸம்பவம்:

அந்த அம்மாள் சென்னையின் பிரபல நகை வியாபாரி ஒருவரின் மனையாள். எத்தனையோ வைத்தியம் செய்தாயிற்று. பர்த்திக்கு எத்தனையோ முறை போய் வந்தாயிற்று. பர்த்தி வாஸனின் விபூதியை எவ்வளவோ உண்டாயிற்று. அந்த விபூதியில் தான் எத்தனை ருசிகள்! ஒரு முறை தித்திப்பு ஒருமுறை கசப்பு. ஒரு முறை காரத்திலும் காரம். பிணி என்னவோ அகன்ற பாடில்லை.

மயிலையில் புகழ்வாய்ந்த ஒரு நர்ஸிங் ஹோமில் படுத்திருக்கிறார் அம்மாது. சுற்றத்தினர் விடாமல் ஸாயி பஜனை செய்கிறார்கள்

சடாரென்று அம்மணிக்கு ஸ்புரிக்கிறது. “இனிமேல் பஜனை பண்ணவேண்டாம்என்கிறாள். கண்டித்துச் சொல்கிறாள்.

பாபாவின்மீது பக்தி போய் விட்டதா? ஆசா பங்கமா? இல்லை, இல்லை

நான் இத்தனை வருஷங்களாக ஸாயிராம் ஸாயிராம் என்று விடாமல் ஜபித்து வருகிறேன். நீங்களும் தினம் நாம பஜனை செய்கிறீர்கள். மெய்யாலுமே அந்த நாமாவுக்கு ஆயுளை வளர்க்கிற சக்தி இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் நான் சாகாமல் இன்னமும் இருந்துகொண்டிருக்கிறேன். ஆனால் என்ன பிரயோஜனம்? போதும் இந்த ஆயுள். இது என்றைக்கோ முடியத்தானே போகிறது? இதை எதற்காக வேண்டி வேண்டி நீடித்துக் கொள்ள வேண்டும்? எனக்கு ஆயுசு வேண்டாம். எனவே ஸாயி நாமமும் வேண்டாம்என்றாள்.

பஜனை நின்றது.

அவளது மூச்சும் நின்றது.

நாம மஹிமை பெரிதுதான். ஆனால் நாமமும் வேண்டாத மோன நிறைவுதானே முடிவு? வைத்திய ஸாயி வைத்தியமே வேண்டாத அந்நிலைக்கு அவளை உய்வித்துவிட்டார்! பிணிகளுக்கெல்லாம் பெரிதான பிறவிப்பிணி தீர்த்துவிட்டார்!

***

பாபா அற்புதத்தின் மூலம் நோய் தீர்த்தாலும், இயற்கைப் படி வைத்தியம் நடப்பதையும் தாமே அநுமதித்துத்தான் வருகிறார். ப்ரசாந்தி நிலயத்திலும் ஒயிட்ஃபீல்டிலும் வைத்ய சாலை வைத்திருப்பது. மட்டுமின்றி, கிராம மக்களுக்குப் பிணி தீர்க்கும் பணி புரிய நடமாடும் மருத்துவமனையும் வைத்துள்ளார். பிரசாந்தி நிலயத்திலேயே டாக்டர் எம்.ஸி. மோடி முதலியோரின் கண் சிகித்ஸை முகாம்கள் மிகப் பெருமளவில் நடத்தச் செய்திருக்கிறார்.

இங்கெல்லாம் இயற்கையோடு அற்புதமும் கலந்திருக்கிறது. டாக்டர் மோடி ஒரே தினத்தில் இருநூறு கண் ஆபரேஷன் செய்யும் அதிசயத்தைப் புரிபவர். பிரசாந்தி நிலயத்திலோ பேரதியமாக 511 ஆபரேஷன்கள் செய்ய முடிந்ததை எண்ணி அவரே வியக்கிறார்!

எனினும் அற்புதத்தையே நடைமுறையாக்கிக் கொள்ள முடியாதுதானே? அதனால்தான் அற்புதத்தால் நோய் தீர்த்தாலும் நடைமுறை வைத்ய சாஸ்திரத்துக்கும் அதற்குரிய இடத்தை பாபா தந்திருக்கிறார் போலும். டாக்டர் புன்னைவனம் சொந்த விஷயத்தில் பாபாவின் அருளையன்றி மருத்துவத்தை நாடுவதில்லை என முடிவு செய்துபோது, பாபாவே அவருக்கு மருத்துவப்படி சிகித்ஸை பெற வேண்டும் என்று உணர்த்தினாராம். டாக்டராகவே உள்ள ஒருவர். அந்தத் தொழிலுக்குரிய நியாயமான ஸ்தானத்தைத் தரத்தானே வேண்டும்?

இயற்கை அன்னை அழகாக நடத்தும் குடித்தனத்தில் என் தலையீடு அதிகம் கூடாது!” என்றே சிலரை வைத்திய சிகித்ஸைகளுக்குத் திருப்புகிறார். அதே சமயத்தில் இயற்கையையும் இயக்கும் மஹாசக்தியின் பெருமை அவ்வப்போது தெரிய வேண்டும் என்பதற்காகச் சிலரை வைத்தியத்துக்குப் போக வொட்டாமல் தடுத்து அருட் சக்தியாலேயே குணப்படுத்துகிறார்.

ஸ்ரீ சல்லா அப்பா ராவ் மதிப்புக்குரியதொரு ஸாயி பக்தர். மூல உபத்திரவத்தினால் ஏற்பட்ட ரத்தப் போக்கால் அவர் பயங்கரமான ரத்த சோகைக்கு ஆளானார். உடம்பு வீங்கிற்று. ஹெமோக்ளாபின் மூன்று சதத்துக்கும் கீழே போயிற்று. ஆனாலும் அவர் வைத்தியம் செய்துகொள்ளப் பிடிவாதமாக மறுத்தார். பாபாவின் கிருபையே தமக்கு ஒளஷதம் என்று தீர்மானமாக இருந்தார். இவர் இப்படிப் பிடிவாதம் செய்வதை அப்போது (1968) ஒயிட்ஃபீல்டில் இருந்த ஸ்வாமியிடம் தெரிவித்தனர். ஸ்வாமியும், “மருந்து சாப்பிடுபவர்கள் மட்டும் சாவதில்லையா, என்ன?” என்று கேட்டார் அதாவது அப்பா ராவை அவர் போக்கிலேயே ஊக்கினார்!

சிறிது காலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கருணாமூர்த்தி அப்பா ராவின் கிராமத்துக்கும் வந்தார். நோயாளியின் படுக்கையருகே அமர்ந்து அவரை ஆசீர்வதித்தார். லிங்கம் சிருஷ்டித்துக் கொடுத்து, அதன் அபிஷேக தீர்த்தத்தைப் பருகுமாறு அவரிடம் கூறினார்.

அடுத்த கணத்திலிருந்தே “Wonder of wonders” (அற்புதத்திலும் அற்புதம்) என்று டாக்டர் ஜி. கேசவராவ் வியந்து எழுதும் வண்ணம் நோயாளி ஆரோக்கியம் பெறத் தொடங்கினார். வீக்கம், சோர்வு, ரத்தப்போக்கு எல்லாம் அடியோடு மறைந்து, ஒரே மாதத்தில் யௌவன புஷ்டி பெற்றுவிட்டார் அப்பாராவ். “பாபா வருமுன் பிணமாய் இருந்தேன்; அவர் வந்து சென்றபின் மரணத்தையே வென்றவனானேன்என்கலானார்.

உதியைவிட ஊசியை நம்புபவருக்கே தாம் வைத்யசாலை வைத்திருப்பதாக பாபா சொல்வதுண்டு. ஆனால் இது குறிப்பிட்ட ஒரு நிலையிலிருப்பவர்களை உத்தேசித்துக் கூறுவதேயன்றி முழு உண்மையுமாகாது. உலகில் விதி முறைகளுக்கு உட்பட்டு நடக்கும் அநேக காரியங்களைப் போல் வைத்தியம் என்பது நடப்பதையும் பாபா அங்கீகரிக்கத்தான் செய்கிறார்.

வைத்திய சாஸ்திரப்படி சிகித்ஸை நடப்பதாகத் தோன்றும் போதே அதற்குள் பாபாவின் மகிமை புகுந்து நோய் தீர்ப்பதும் உண்டு. முன்பே நாம் பார்த்தது போல் டாக்டர் ரங்காராவ் செய்யத் தயங்கிய ஆபரேஷன்களைச் செய்யுமாறு பாபா அவரைப் பணித்தாரே, அச்சமயங்களில் மருத்துவ ரீதியில் ஆபரேஷன்கள் நடந்தது உண்மைதானே? ஆனால் ரோக நிவாரணம் என்னவோ பாபாவின் அற்புத அருளால் தானே கிட்டியது?

இன்னோர் உதாரணம் பார்க்கலாம்:

ஒத்தப்பாலம் கல்லூரி முதல்வரான பேராசிரியர் ஜி.பி. பிள்ளைக்கு ஏற்பட்ட உள் விழித்திரை நீக்கத்துக்கு (detachment of retina) இந்தியாவில் சிகித்ஸையே இல்லை; அவர் மேற்கு ஜெர்மனிக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ சென்றால்தான் வழி பிறக்க, விழி திறக்க இடமுண்டுஎன்று பிரபல கண் டாக்டர் ஸ்ரீ டி.டி. ராமலிங்கம் கூறியிருந்தார். ஆனால் பிறகு பாபா அளித்த தெம்பில் அதே டாக்டர் சென்னையிலேயே ஸ்ரீ பிள்ளைக்கு அந்த அதிநுணுக்கமான ஆபரேஷனைச் செய்தார். 1968 ஜூலை 27ந் தேதியன்று முழுசாக மூன்றரை மணிநேரம் ஆபரேஷன் நடந்தது. டாக்டர்களே ஆச்சரியப்படும்படி வெற்றிகரமாக முடிந்தது.

இங்கே ஏன் பாபா வெறும் ஸங்கல்பத்தாலோ, அல்லது விபூதியோலோ, மல்லிகை மலராலோ சொஸ்தம் செய்யவில்லை? மருத்துவ ரீதியில் நடந்ததாக ஏன் காட்டினார்?’ என்று எவரே கண்டு கூறமுடியும்? லீலைகளைப் பலப்பல விதங்களில் செய்து களிக்கிறார் என்பதொன்றே நாம் ஊகிக்கக் கூடிய பதில்.

பிற்கால விஸ்தரிப்புப் பெறுமுன் புட்டபர்த்தியில் இருந்த ஸ்வாமியின் வைத்ய சாலையைப் பற்றி எண்ணும்போது, டாக்டர்கள் வி. ராமப்ரம்மம், பி. ஸீதாராமையா, ஜயலக்ஷ்மி ஆகியோரை நன்றியுடன் நினைக்காமல் இருக்க முடியாது. இவர்களிடம் ஸ்வாமி, இவர்கள் கருவி மாத்திரமே என்றும், தாமே இவர்கள் மூலம் எல்லா சிகித்ஸையும் செய்வதாகவும் கூறியிருக்கிறார். இதனால்தான் வெளிதேசங்களில் பிரபல மருத்துவ மனைகளில் தீராத வியாதிகளுங்கூடச் சிறப்பு உபகரணங்களும் வசதிகளும் அற்ற அக்காலப் பிரசாந்தி நிலய வைத்யசாலையில் தீர்ந்திருக்கின்றன.

லீலையில்வெரைட்டி வேண்டியிருக்கிறது என்பதால் தமது மருத்துவமனை வைத்தியர்களை கதிகலங்க அடித்துவிட்டு பாபா விபூதி மூலமே பலரை சொஸ்தப்படுத்துவதும் உண்டு. விபூதிகூடத் தராமல், டாக்டர்கள் எக்ஸ்ரேயில் பித்தப்பைக் கற்களை நன்றாகக் கண்டும்கூட, “அதெல்லாம் இல்லை. கல் உன் கல்பனையில்தான் இருக்குஎன்று பாபா சொன்ன மாத்திரத்தில் நோயாளியின் கல் கரைந்து குணமான அதிசயத்தையும் டாக்டர் ஸீதாராமையா கூறுகிறார். கல்மனம் கரைவது இருக்கட்டும். கல்லே கூடக் கரைகிறது!

எனவே இந்த டாக்டர்கள், “ஸ்வாமி ஆஸ்பத்திரி வைத்திருப்பதற்குக் காரணமே எங்களைப் போன்ற டாக்டர்கள் ஆண்டவன் அருளால்தான் நோய்கள் தீருகின்றன என்று உணரச் செய்வதற்குத்தான்என்கின்றனர்.

அற்புத அருளையும், வைத்தியத்தையும் ஒன்றோடொன்று இழைத்திருப்பதற்குப் பிரசாந்தி நிலய வைத்யசாலையில் ஒரு விந்தை எடுத்துக்காட்டு உண்டு. அதற்குஸாயி ராம் பௌடர் என்று பெயர்! ஸ்வாமியே அல்லோபதி மருந்துப் பட்டியலில் உள்ள பல பொருட்களைச் சேர்த்து இந்தப் பௌடரின் தயாரிப்பு முறையைக் கூறியிருக்கிறார். சாதாரணமாக உண்டாகக்கூடிய பலவித நோய்களுக்கு இதை நிவாரணியாக டாக்டர்கள் தருகிறார்கள். ஆனால் அசாதாரணமாக, இதைக் கொண்டே முற்றிய தொண்டைக் கான்ஸரைக்கூட குணப்படுத்தியிருக்கும் விவரமும் தருகிறார் டாக்டர் ஸீதாராமையா.

ஆஸ்பத்திரி வைத்து. அங்கே தம் அற்புதத்தையும் ஊடே ஊடே கோத்துள்ள ஸ்வாமி, அதற்குப் போக வேண்டாமென்று பக்தரைத் தடுத்து, ஸ்வஸ்தப் படுத்துவதும் உண்டுதான்! எத்தனை தினுஸுகளில் கூத்தடிக்கிறார்! ஓர் உதாரணம்: ராஜமஹேந்திர புரத்தைச் சேர்ந்த அறுபது வயதுக் கிழவி ஸூரம்மா பிரசாந்தி நிலயத்துக்கு வந்திருக்கையில் திடீரென நோய்வாய்ப்பட்டு ஆபத்தான கட்டத்தை அடைந்துவிட்டார். அவரை ஸ்ட்ரெட்சரில் போட்டு நிலய வைத்யசாலைக்குத் தூக்கிவர டாக்டர் ஏற்பாடு செய்தார். இந்த அயனான சந்தர்ப்பத்தில் வைத்தியசாலை வைத்த அதே பாபா நோயாளி முன் சூக்ஷ்ம தர்சனம் காட்டி, “ஆஸ்பத்திரிக்குப் போகாதே!” என்றார். அந்த அம்மாள் இதைச் சொல்லி, வைத்யசாலைக்கு வரப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அரை மணிக்குள் அவரது உடம்பும் குணமாகி, அவர்தானா இவர்? என்று மூக்கில் விரலை வைக்கும்படி ஆரோக்கியம் பெற்றும்விட்டார்!

***

வியாதி தீர்ப்பது இருக்கட்டும். கொடூரமான வியாதி சொஸ்தமான பிற்பாடும், அது மீண்டும் கிளைத்தெழக் கூடிய ஹேது உண்டு என்ற எண்ணத்தில் ஏற்படும் பயப்பிராந்தி உண்டே, இது நோய்களை எல்லாம் விடக் கொடிய நோய். மரண பயத்தைத் தீர்க்கும் பாபா, இந்த வியாதி பயத்தையும் தீர்ப்பதில் அபார சதுரம் படைத்தவர். அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸ்ரீ ஒய்.டி. தாத்தாச்சாரி தமக்கு ஏற்பட்ட பயங்கரப் புற்றுக்கட்டிகள் எப்போது புத்துயிர் பெறுமோ என்ற திகிலில் அநுதினமும் அணு அணுவாகச் செத்துக் கொண்டிருந்தபோது பாபா ஊட்டிய அற்புத உற்சாகத்தையும் ஜீவத்துடிப்பையும் எண்ணி நன்றியில் உருகுகிறார்!

பயம் தான் மகாவியாதி! ‘நானிருக்கப் பயமேன்?’ என்பதே நம் வைத்யநாதப் பிரபுவின் மகா மருந்து.எந்தத் தெய்வத்தைப் பற்றிய துதிகளிலும் அத்தெய்வம் ஆயுள், ஆரோக்கியம் தருவதாக நிச்சயம் கூறப்படும். எத்தெய்வத்துக்கும் ‘ஸர்வ வியாதி பிரசமனம், ஸர்வ மிருத்யு நிவாரணம்’ என்ற சக்திகள் கூறப்படும். ஜீவர்கள் முக்கியமாக உடலையே தாங்களாக எண்ணுவதால்தான் அதன் ரக்ஷணை இவ்வாறு குறிப்பிக்கப்படுகிறது. மிகவும் பக்குவம் பெறும்வரை, நோய் கஷ்டப்படுத்தும்போது ஆத்ம ஸாதனையும் செய்ய முடிவதில்லை என்பதாலும் அதைக் குணப்படுத்த வேண்டித்தான் உள்ளது. இதனால்தான் மகான்களின் சரிதையைப் பார்த்தாலும் அவர்கள் பக்தர்களின் வியாதிகளைத் தீர்த்தருளியதையோ, அவர்களுக்கே ஏற்பட்ட நோயை இறைவன் குணம் செய்து ஆட் கொண்டதையோ நிறையக் காண்கிறோம். இதில் ஸாயி புராணம் எண்ணி முடியா அலைவரிசைகளைக் கொண்ட மகா சமுத்திரமேயாகும். ஆயினும் இந்த மருத்துவமும் இறுதி முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்பதையும், நோயைப் பற்றிய அஞ்சாமை, மரணத்தைப் பற்றியும் அஞ்சாமை ஆகியவையே நம் ஸ்வாமியின் விசேஷக் கொடை என்பதையும் நன்றாக மனத்தில் வாங்கிக் கொள்வோமாக! அவர் உடற்பிணி தீர்ப்பதும் பிறவிப் பிணி தீர்ப்பதற்கு முன்னோடியே என்று புரிந்துகொள்வோமாக!