புட்டபர்த்தி – 37

அத்தியாயம் – 37

மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா!”

மங்கிய வல்வினை நோய்காள்! உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின்; எளிதன்று கண்டீர்; புகேன்மீன்

பெரியாழ்வார் திருமொழி

ழைய மந்திர நாட்களைச் சொல்லும்போது அங்கு நடைபெற்ற ஆபரேஷன்களைப் பற்றிச் சொல்லாமலிருக்க முடியாது. ஸர்ஜன் ஸாக்ஷாத் நம் பாபாதான். மயக்கம் கொடுப்பது, தையம் போடுவது எல்லாமே அதி விசித்ரமாக நடக்கும்.

அப்பைய செட்டிக்கு பாபா செய்த ஆபரேஷனைக் கண்முன் கண்ட இருபது பேரில் ஒருவரான ஸ்ரீ பாலபட்டாபி அதைப் பற்றிய விவரங்களை எழுதி, “இதைப் பார்க்காதவர்களிடம், பின்னும் நம்பிக்கையில்லாதவர்களிடம் இதைப்பற்றிக் கூறினால் குயுக்திகளும் கிண்டல்களும் பேசி, என்னைப் போன்ற நேரில் கண்டவரை சுத்தப் பைத்தியக்காரன் என்று சொல்லிச் சொல்லிப் பைத்தியமே ஆக்கிவிடுவார்கள்என்கிறார்!

சிவராத்ரிக்குச் சில நாட்கள் முன்பு, வயிற்று வலிக் கொடுமை தாங்காது தவித்துக் கொண்டிருந்த அப்பையாவை அழைத்துக் கொண்டு மனைவி லக்ஷ்மியம்மாள் பாபாவிடம் வந்தாள். ‘ஆபரேஷன் செய்ய வேண்டும். செய்தாலும் உயிருக்கு உத்தரவாதம் தருவதற்கில்லைஎன்று டாக்டர்கள் சொல்லிவிட்டனராம்

ஸ்வாமி, “இங்கேயே இருங்கள்என்று சொன்னார்.

ஒருநாள் சித்ராவதி மண்ணிலிருந்து ஜவ்வுபோல் எதையோ எடுத்துக்கொடுத்து அப்பையாவைச் சாப்பிடச் செய்தார்.

நாட்கள் சென்றன. பாபா வேறு ஒன்றும் செய்யவில்லை. அப்பைய செட்டிக்கு நோய் அதிகமாகவில்லையே தவிர குணமும் ஆகவில்லை. சிவராத்ரி வைபவமும் வழக்கம்போல் ஆத்ம லிங்கோத்பவத்துடன் நடந்தேறியது. ஓரிரு நாளில் கூட்டம் கலையும் போது பகல் வேளையில் அப்பையா தம்பதியரிடம் பாபா, “ஊருக்குப் போகிறீர்களா?” என்றார், இதயமே இல்லாதவராக.

சரி, நீண்ட நாள் தங்கியாச்சு, நம் பிராப்தி இவ்வளவே போலும்என்றெண்ணிய எளிய தம்பதியர்அப்படியேஎன்றனர்.

வண்டியமர்த்தி, லக்ஷ்மியம்மா அதில் சாமான்களையும் எடுத்து வைத்துவிட்டாள்.

பகவானே, நமஸ்காரம் செய்துகொள்கிறோம்என்று இருவரும் அகம் குழைந்து வணங்கினர்.

அப்பையாவிடம்எங்கே வலிக்கிறதப்பா?” என்றார் ஸர்வக்ஞர், தலையிலிருந்து கால்வரை இதயமொன்றே உள்ளவராக.

வயிற்றில் வலிக்கும் பகுதியை அப்பையா காட்டினார்.

பாபா அவரது முகத்தெதிரே கையை நீட்டினார்.

உடனே அவ்விடம் முழுவதும் குளோரோஃபார மணம் போன்ற நெடி பரவலாயிற்று.

பாதமந்திர நடு ஹால் ரண சிகித்ஸை தியேட்டராகிறது! ஸெப்டிக் ஆகக்கூடாது என்பதற்காக டாக்டர்கள் அநுஸரிக்கும் சுத்திகரிப்பு எதுவுமேயில்லை. இருபது அடியார்கள் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

அப்பையாவின் பிடரியில் பாபா கை கொடுத்து, மயக்கமுற்ற அவரைப் படுக்கவைத்தார்.

வலக்கையை அசைத்தார்.

பளபளப்பான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெட்டி அதிலே வந்து குதித்தது!

திறந்தார், ஒரு கத்தியை எடுத்தார்.

பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கண்மூடித் திறப்பதற்குள் அப்பையாவின் வயிற்றைக் கிழித்துவிட்டார்!

கிறுகிறுஎன்று வேலை முடித்தார். குடலை வெளியே இழுத்தார். அதிலிருந்து சீழும் ரத்தமுமாய் பெரிய நெல்லிக்காய் அளவிலிருந்த கட்டியைக் கத்தரித்து எடுத்தார். இருநாள் முன் தமது வயிற்றிலிருந்து ஆத்மலிங்கம் எடுத்து அனைவருக்கும் தரிசிப்பித்தவர் இன்று இவர் வயிற்றிலிருந்து கட்டிலிங்கத்தை எடுத்துச் சுற்றியிருந்தோருக்குக் காட்டினார்!

அதை வெளியில் கொண்டுபோய் எறிந்துவிட்டு, உள்ளே வந்து கை கழுவிக்கொண்டார். நோயாளியிடம் வந்தார். கிருமிநாசினி எதுவும் போடாமலே இத்தனை நேரம் வெளியே தொங்கிக் கொண்டிருந்த அவரது குடலை உள்ளே தள்ளினார்.

கிழித்த வாயின் இரு புறங்களையும் ஒரு கையின் விரல்களால் பிடித்து ஒன்றுசேர்த்து, அதன் பக்கமாய் மறு கை விரலை அசைத்தார். தையல் போட்டமாதிரி அவ்விடம் சேர்ந்துவிட்டது. பாண்டேஜ் போட்டுக் கட்டிப் படுக்கவைத்துவிட்டார்.

பிரயாணத்துக்கு வந்த வண்டி திருப்பி அனுப்பப்பட்டது. யமதர்மராஜன் நெடும் பயணத்துக்காக அனுப்பியிருந்த வண்டியும் தான்!

பிறகு பாபா கொத்தசெறுவு சென்று, மாலை ஐந்துக்குத் தான் திரும்பினார். நேரே அப்பையாவிடம் சென்று விபூதி சிருஷ்டித்து நெற்றியில் வைத்தார். இதுவரை மயக்கத்திலிருந்த அப்பைய செட்டி தெளிந்தார். அவருக்குக் காபி கொடுக்கச் செய்தார் பாபா பிறகு பாண்டேஜை அவிழ்த்துவிட்டார்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் ஆபரேஷன் ஆனதுபோல் கிழித்த இடத்தில் ஒரு தழும்பு மட்டுமேயிருந்தது! அப்பையா துளி வலியின்றிப் பூரணமாகக் குணமடைந்துவிட்டார்.

பக்தர்கள், “ஸ்வாமீ. இதைப் பேப்பருக்கு எழுதியனுப்புகிறோம்என்றார்கள்.

சை!” என்றார் ஸ்வாமி. “என்னைப் பற்றி யாரார், எப்போது எப்போது, எப்படி எப்படித் தெரிந்து கொள்ள வேண்டுமோ அப்படியே ஆகட்டும். உங்கள் அட்வர்டைஸ்மென்ட் வேண்டாம்.”

***

ரு முறை ஒரு தாயார் குழந்தையை வைத்திருக்கும் போதே மயக்க மருந்து ஏதுமின்றி அதன் டான்ஸில்ஸை ஒரு நொடியில் ஒரு சிறிய திரிசூலத்தால்(!) துண்டித்து எடுத்துவிட்டார். தத்க்ஷணமே சொஸ்தம்!

***

விஷம் வைத்த அம்மாளுக்கு பாபா முருகன் விக்ரஹம் வரவழைத்துத் தந்ததாக முன்பு பார்த்தோமல்லவா? இவ்வருள் லீலை புரிந்துவிட்டு பாபா சித்ராவதியிலிருந்து திரும்புகையில், நாகமணியம்மா அவருக்கு முன் விரைந்தார். பாபா மந்திரத்துக்குத் திரும்புவதற்குள் தாம் அங்கு சென்று, முன்னமேஸ்டவ்வில் வைத்துப் போயிருந்த வெந்நீரை ஆற்றி, அதனால் அவர் பாதங்களைக் கழுவ வேண்டும் என்றுதான். மாலையின் சில்லிப்பில் உலவிவிட்டு வருபவருக்கு இது ஹிதமாக இருக்கும் என்பது அவரது அன்பில் தோன்றிய எண்ணம். குளிர், வெப்பம் கடந்த அப்பனும் அன்பை மதித்து, ‘வெந்நீர் பிரக்ஷாலனத்தில் மகிழ்ச்சி கொள்வதாக நடிப்பார்.

நாகமணி தம் அறைக்குப் போய் வெந்நீர் கொண்டு வருவதற்குள் பாபா மந்திரத்துக்குத் திரும்பி இன்னோர் அறைக்குள் போய்விட்டார்.

பத்து நிமிஷங்களுக்குப் பின்பே அங்கிருந்து வந்தார். அவர் கையில் வாழைப் பழத்தோல் போல் எதுவோ இருந்தது. வெளியே சென்று அதை எறிந்துவிட்டு வந்து, “நாகமணி பாய், கையிலே உன் வெந்நீரை ஊற்றுஎன்று நீட்டினார்.

கை முழுதும் சிவப்பாக ஏதோ திரவம்!

என்னா ஸாமீ! சிவப்பு பெயின்ட் குழைச்சுப் படம், கிடம் போட்டீங்களா?” என்று கிண்டல் செய்தார் ஸர்வ ஸ்வாதீனம் பெற்ற நாகமணி.

படமா? உன் வார்த்தைக்காகத்தான் அந்த ஆளுக்கு ஆபரேஷன் செய்தேன். வயிறு வீங்கிப் பிராணனே போகிற மாதிரி இருக்கிறவனை நான் கவனிக்காமலிருக்கிறேன் என்று நீதானே நச்சரித்தாய்? அவன் ரத்தந்தான் இதுஎன்றார் பாபா.

ஆபரேஷன்என்றதும் அந்த அம்மாளுக்குச் சில்லிட்டுவிட்டது. பாபாவின் தெய்விகத்தில் நன்றாக ஈடுபட்டவராயினும், நாகரிக அறிவு பெற்ற அந்த அம்மாளுக்கு, ரணசிகித்ஸைக்கான நவீனப் பாதுகாப்பு ஏதுமேயில்லாமல் ஒருத்தரின் வயிற்றை அறுத்து, வாழைப்பழத்தோல் அளவுக்கு வெட்டி எறிவதாவது என்று திகிலாகத்தான் இருந்தது. ‘இந்தக் கொடுமைக்கு நான் ஜவாப்தாரியா?’ பேசாமலே இருந்தார்.

ஆம், முன்பு நாகமணிதான் பாபாவிடம் நோயாளிக்காகப் பன்முறை சிபாரிசு செய்தார். இவர் நச்சரித்ததில் ஸ்வாமி ஆத்திரமுற்றது போல், “நான் இங்கே ஆசிரமம் வெச்சிருக்கேனா? ஆஸ்பத்திரி வெச்சிருக்கேனா?” என்று எரிந்து விழுந்தார். நடிகர் திலகம்தான் நம் நாயகன்! இப்போது நாகமணியைக் கலக்கிவிட்டு, இன்னொரு அபார நடிப்பாக, பேசாமலே நகர்ந்தார்!

மறுநாள் காலை பாபா அவரை அழைத்து, “அம்மா, கொஞ்சம் பஞ்சு. வாங்கி அதை நீயே அந்த ஆளுக்குக் கொண்டு போய்க் கொடுஎன்றார்.

ஆபரேஷனே செய்தவருக்குப் பஞ்சுக்குத்தான் பஞ்சம் வந்து விட்டதா என்ன? மாய லீலை!

பஞ்சை வாங்கிக்கொண்டு வந்து நோயாளியின் அறைக்கு வெளியே நாகமணி தயங்கி நின்றார். உள்ளே நோயாளி நோய் தீர்ந்து படுத்திருப்பார் என்பதைவிட வாழ்வே தீர்ந்து படுத்திருப்பார் என்றுதான் அவருக்குத் தோன்றியது.

மெல்ல, “அம்மா!” என்று நோயாளியின் மனைவியை வெளியிலிருந்து அழைத்தார்.

அதற்குள் பாபா அங்கு வந்துஉள்ளே போக மாட்டே? அந்த ஆளுக்குப் பஞ்சு அவஸரமாத் தேவைப்படுகிறது. ம்ம் போ!” என்று கர்ஜித்தார்.

பஞ்சுக்கு அவசரத் தேவை என்றதும் அம்மையின் அச்சம் அதிகரித்தது. உள்ளே நுழைந்தார்.

நாகமணியின் விரித்த கண் விரித்தபடி நின்றுவிட்டது!

நேற்றுவரை பிராணன் போகிற மாதிரி வயிறு வீங்கிக் கிடந்தவர் தட்டு நிறைய இட்லிகளை வைத்துக்கொண்டு, இத்தனை நாட்கள் உண்ணாததற்கு நஷ்ட ஈடாகக் கபளீகரம் செய்கிறார். அவரது மனையாள் கரண்டியால் எடுத்து ஊற்றும் சட்டினியிலிருந்து ஆந்திராவுக்கே உரிய மிளகாய் நெடி நாகமணியின் நாசிவரை வந்து துளைக்கிறது. குடற்புண் நோயாளிக்கு மிளகாய் மருத்துவமா? மருத்துவமோ, மகத்துவமோ?

அபூர்வ சகோதரர்கள்போல் நோயாளிக்கு அச்சான இன்னொரு தம்பியாக இவர் இருப்பாரோ என்ற ஐயத்துடன் படுக்கையைப் பார்த்தாராம் நாகமணி! ‘நோயாளியே நடந்ததைச் சொல்லித் தெளிவு செய்தார்.

இம்முறை விபூதியை முகத்தில் பூசி மயங்கச் செய்திருக்கிறார் பாபா. ஐந்தே நிமிஷத்தில் ஆபரேஷன் முடிந்து, மயக்கமும் தீர்ந்துவிட்டது. கிழித்த இரு ஓரங்களையும் ஸ்வாமி ஒன்றாகச் சேர்த்தவுடனேயே ஒட்டிக்கொண்டு விட்டனவாம்!

இதைச் சொல்லும் நாகமணி அம்மையார், “காதால் கேட்டால் நம்பத்தான் முடியாதுSeeing is believing” என்கிறார்!

***

பரேஷன், ஆயுதம், மயக்க விபூதி என்பதெல்லாமே வேடிக்கைதான். சில சமயங்களில் நோயாளிக்கு வீரியம் பொருந்திய மூலிகைகளைக் கையசைப்பில் வருவித்துத் தருவார். இதே அங்கை அசைப்பால் டானிக், காப்ஸ்யூல், மாத்திரைகள் ஆகியன பெற்றவரும் யதேஷ்டம். அவை எங்கே தயாரானவை என்பதுதான் மர்மம்! ஆபரேஷன் போலவே லம்பார் பங்க்சர் என்று முதுகெலும்பில் ஊசி குத்தி மூளைத் திராவகத்தை எடுப்பது போன்ற நுண்ணிய வைத்திய முறைகளையும் அநாயாஸமாகச் செய்வார் பாபா. இவ்விதம் வெளியில் பலவித நடைமுறைகளை அப்பழுக்கறக் காட்டினாலும் வாஸ்தவத்தில் பாபாவின் ஸங்கல்பமேதான் ஸ்வஸ்தம் செய்கிறது. வெறுமே சங்கற்பித்துபோர்அடையாமல், அதைப் பல விதத்தில், நவீன மெடிகல் ஸயன்ஸுக்கு உடன்படுகிற மாதிரிகூடக் காரியமாக்கிக் களிக்கிறார் லீலாவிநோதர்.

தாம் ஸ்தூலமாக இல்லாத இடத்தில் செய்கிற ஆபரேஷன்களும் எத்தனையோ! வேலூரில் ஒரு பஜனை நடந்து கொண்டிருந்தபோதே அதில் கலந்துகொண்ட ஒரு பெண்ணுக்கு ஆபரேஷனாகி, அவள் பஜனை முடிவில் அதைச் சொல்ல, கூடியிருந்தவர்கள் நம்ப மறுத்தனர். பிறகு பெண்கள் அவளது வயிற்றில் தையலைப் பார்த்துத்தான் நம்பிக்கை பெற்றார்கள்.

கனவிலே தனக்கு ஆபரேஷன் ஆனதாகக் கண்டு, காலையில் விழித்தெழுந்திருக்கையில், வாஸ்தவமாகவே பான்டேஜ் போட்டிருப்பதையும், வாஷ்பேஸினில் ரத்தம், பஞ்சு முதலியன இருப்பதையும் பார்த்து ஐயனின் அருளில் உருகிக் கரைந்திருக்கும் பாக்யசாலி பக்தர்கள் உண்டு. பாத மந்திரம் கட்டிய திருமல் ராவுக்கே இப்படி ஓர் அநுபவம் உண்டு.

வேறு பல நோயாளிகளுக்கோ பாபா சிகித்ஸையளித்ததாகக் கனவு வரும். ஆனால் விழித்தெழுந்த பின் அதன் வாஸ்தவமான வெளி அடையாளங்கள் இருந்ததில்லை. ஆனாலும் நோய் தீர்ந்திருக்கும். மருத்துவ ரீதியில் பரீக்ஷித்துப் பார்த்தால் வைத்தியரே வியக்கும் வண்ணம் உபாதை சொஸ்தமாயிருக்கும்.

கனவுநனவு, ஸ்தூல சிகித்ஸைசூக்ஷ்ம சிகித்ஸை யாவற்றிலும் பெரும்பாலும் விபூதிக்கு இடமுண்டு.

எங்கேயோ ஓர் ஆஸ்பத்திரியில் ஒரு ஸாயி பக்தர் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார். பக்கத்தில் வைத்துள்ள பஜனைப் புஸ்தகத்தில் திடீரென விபூதி பூத்திருக்கும். பக்தர் அதை வழித்து உண்பார். அல்லது வெளிப் புண்ணாயின் அப்புண்ணின் மீது தூவிக் கொள்வார். பிறகு என்ன? வைத்தியரே வியக்குமாறு வியாதி தீர்ந்திருக்கும். ‘மின் மருத்துவக் கலைப் பண்டிதர்என்று தீர்க்க திருஷ்டியில் சொல்லிப்போன நாடி சோதிட முனிவர் வாயில் சர்க்கரைதான் போடவேண்டும்.

***

பிரஸவ காலத்தில் இவர் தாயுமானவரானது அது எத்தனையோ முறை! பெற்ற தாயும், டாக்டரும், நர்ஸ்களும் உடன் இருக்கும்போதே, அவர்கள் கை மீறிய போது இவர் அநுக்ரஹித்தது ஒரு புறமிருக்கட்டும்.

பெங்களூரில் ஒரு பெண் சில நாட்கள் கழித்துத்தான் பிரஸவிப்பாள் என்ற தீர்மானத்தில் வீட்டார் யாவரும் வெளியே சென்றிருந்தபோது, அவளுக்குப் பேற்று நோவு கண்டது. “அம்மா அம்மாஎன்று வலியில் ஒரு மடங்கும், தனித்திருக்கும் அச்சத்தில் ஒரு மடங்குமாக அலறினாள். அப்போது இந்த ஸாயம்மா அசல் தாயுமானவராகவே அங்கே விரைந்திருக்கிறாள். இத்தனைக்கும் அப்பெண்ணுக்கு பாபாவைப் பற்றியே தெரியாது. எத்தனையோ பரிவோடு, சகிப்புத் தன்மையோடு ஸ்வாமியே பிரஸவம் பார்த்து, அச்சமயம் செய்ய வேண்டிய தொப்புள் கொடி நறுக்குவது முதலியதான சகல ஊழியமும் அசங்கியம் பாராமல் செய்துவிட்டு மறைந்தார். அதன்பின்தான், அவளுக்குயார் வந்து நம்மைக் காத்தது?’ என்ற வியப்பே ஏற்பட்டது. திரும்பி வந்த வீட்டாருக்கும் அவள் சொல்லிய அடையாளத்திலிருந்து புரியவில்லை. பிறகு எப்போதோ பாபா படத்தைப் பார்த்த பின்தான் பளிச்சென்று வெளிச்சமாயிற்று!

இம் மாதிரிச் சமயங்களில் இவர் அப்பெண்களின் கண்களுக்கு ஆடவராகத் தெரிவதில்லை என்பது இன்னோர் அதிசயம். என்ன இருந்தாலும் இதில் ஒரு கூச்சம் உண்டாகத்தானே செய்யும்? இவரது முடியும் அங்கியுமே இவரைப் பாதிப் பெண்ணாக்கியிருக்க, இச்சமயங்களில் தமது தாயன்பின் பூரிப்பில் முற்றும் பெண்ணாகத்தான் தோன்றுவார். பிற்காலத்தில் பாபாவின் வெகு அணுக்கப் பாரிஷதராகிவிட்ட ஸ்வாமி காருண்யாநந்தர் ராஜ மஹேந்திரபுரத்தில் நடத்தி வந்த அநாதாசிரமத்தின் மருத்துவமனையில் டாக்டர், நர்ஸ் யாருமே இல்லாதபோது ஒரு கிராமப் பெண்ணுக்குப் பேறு பார்த்துவிட்டு ஸ்வாமி சென்றுவிட்டார். பிற்பாடு அவள் அவர்களிடம்அந்த மிஸ்ஸியம்மாதான் வந்து எல்லாம் செஞ்சாங்கோஎன்று கூறிச் சுவரில் மாட்டியிருந்த படத்தைக் காட்டினாள். “ஸாதுவம்மா போஸ்என்றும், “ஸாயி மாதா போஸ்என்றும் பிரசித்தி பெற்ற அப்படத்தில் பாபா பெண்மை வழியவழிய ஒரு தென்னங்கீற்றை ஒட்டி நின்றிருந்தார்! அவரை அந்த மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு நர்ஸ் என்றே அப்பெண் நினைத்திருக்கிறாள்!

***

ற்றவர்கள் இந்த வைத்திய நிபுணத்தை அதிசயிப்பது ஒருபுறமிருக்கட்டும். தங்கள் தங்கள் துறையில் ஸ்பெஷலிஸ்டாக உள்ள பல பிரபல டாக்டர்களே அவர் அளிக்கும் அற்புத வைத்யத்தை வியந்து அவரது அடித்தொழும்பராகியுள்ளனர்.

மூகம் கரோதி வாசாலம், பங்கும் லங்கயதே கிரிம்’ என்பது ஆப்தர் வாக்கு. மாதவன் அருளில் ஊமை பேசுகிறான், முடவன் மலை தாண்டுகிறான் என்று அர்த்தம், பர்த்தி மாதவன் இரண்டும் செய்திருக்கிறார்.

திருச்சியில் ஓர் ஊமையை நடுக் கூட்டத்தில் அழைத்து, “உன் பெயர் என்ன?” என்று கேட்க, அவன்வேங்கட நாராயணன்என்று பளீரெனப் பதில் சொல்லியிருக்கிறான். கூட்டத்தினர் கூத்தாடியிருக்கிறார்கள். இதன் விளைவாக பாபா பட்டபாடு! மறுநாள் காலை அவரது ஜாகைக்கு முன்னால் வீதி கொள்ளாது ஊமர்கள் கூடிவிட, அவர் தோட்டத்து வழியாகத் தப்பிச் செல்ல நேர்ந்தது!

சக்கர வண்டியில் பிரசாந்தி நிலையத்துக்குத் தள்ளப்பட்டு வந்து, பாபாவிடம் பேட்டி பெற்று, கோரிக்கை அறையிலிருந்து ராஜநடை போட்டுக்கொண்டு பக்தி வெறியோடு வெளியே வந்தவர் பலர் உண்டு.

1969 பிறந்த நாள் விழா. பெற்றோரும், வேறு பாக்யசாலி அடியரும் ஸ்வாமி தலைக்கு எண்ணெய் வைத்தாயிற்று. தைலம் வழியும் முகத்தோடு, தயை வழியும் முகத்தோடு ஐயன் ஒரு சக்கர வண்டியண்டை செல்கிறார். அதில் அமர்ந்திருந்த அமெரிக்கக் கிழவி ஸ்ரீமதி எல்லா ஆண்டர்ஸென்னின் கையைப் பிடித்துத் தூக்குகிறார். ஆஹா, ஆண்டாண்டாகச் செயலற்றிருந்த எல்லாவின் கால்கள் ஆண்டான் அருளில் இயங்குகின்றன! நாலு அடி அவர் பிடிப்பில் அந்த அம்மாள் நடந்த பிறகு பிடியையும் விட்டுத் தானே நடக்கிறார். அன்று அவர் முன் பாபா புதரான தம் முடியைத் தாழ்த்தித் தைலம் வைக்கச் சொன்னதுண்டே, கருணைக் காவியம் தான்! அருளின் ஓவியம்தான்!

அருள் சிகித்ஸையில் போலியோ கேஸ்களில் எத்தனைபோலியோ என்னுமாறு கணத்தே ஓட்டம் பிடித்துள்ளன!

அச்வினி தேவர்கள் முடவரான பராவ்ருஜ ரிஷிக்கு நடக்கும் சக்தி அளித்ததை வேதம் சொல்லும் கட்டுக்கதை என்று இனி கூறுவோமா? அவ்விரு தேவரும் காலிழந்த விச்பலாவை வீறுடன் எழுப்பிப் போர் புரிய வைத்தனர் என்பதை இனியும் நம்பாதிருப்போமா?

இந்த பர்பாக்யூர்களில் ஸ்தூலமாக மருந்தோ, விபூதியோ இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவர் பெயரில் வைத்தியம் செய்கிற மற்றவர்களுக்கு விபூதிதான் பரம ஒளஷதம். எக்காரணத்தாலோ ஆதி காலத்திலிருந்து நீறுதானே மருத்துவ மஹிமை பெற்றிருக்கிறது? திருச்செந்தில் பன்னீரிலை விபூதியை ஆதி சங்கரரே ஸர்வரோக நிவாரணி என்று புகழ்ந்திருக்கிறாரே! உடல் எரிந்தபின் நீறு; ஆனால் உடலை வளர்க்கும் அருமருந்தாகவும் அதுவே உள்ளது!

டான்ஜானியாவில் ஒரு டாக்டர் மிக முற்றிய நோயாளிகளுக்கு ஏதோ ஒரு வெள்ளைப் பொடியை நீரில் கரைத்து ஊட்டுவதையும், பெருவாரி சந்தர்ப்பங்களில் அது பலன் அளிப்பதையும் கண்டு வியந்த உதவியாளர் அந்த மருந்தின் பெயரும் செய்முறையும் கேட்க, “பாபா விபூதி; செய்முறை அவருக்குத்தான் தெரியும்என்று பதில் வந்தது!

இந்திய டாக்டர்களுக்கு வருவோம்:

1968 பிப்ரவரியில், ஆந்திரப் பல்கலைக் கழக அச்சகத்தைச் சேர்ந்த ஸ்ரீ எம்.ஆர்.பி. நரஸிம்ஹ ராவ் வலது கண்ணில் வலியோடு பிரபல கண் டாக்டரான ஸ்ரீ எம்.எஸ். ராமகிருஷ்ண ராவ் எம்.எஸ்ஸிடம் வந்தார். “கண் சிகித்ஸை முழுதும் என் வசமிருப்பது போல் அவரிடம், ‘கவலையே படாதீர்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்என்றேன்என்கிறார் இப்போது ராமகிருஷ்ணா வெட்கத்துடன். ஆனால் இவரது சிகித்ஸைக்கு அது மசியவில்லைDendritic ulcer என்ற கொடிய கண் வியாதியாகிவிட்டது. இதற்கு நேரடி குணம் தரும் ஒரே மருந்தான I.D.U. என்ற அமெரிக்கத் தயாரிப்பு அப்போது இந்தியாவில் கிடைக்கவில்லை. டாக்டர் என்ன செய்வார்? வெறுமேகாடரைஸ்மட்டும் செய்து கொண்டிருந்தார். பலன் விபரீதமாயிற்று! மறு கண்ணுக்கும் வியாதி பரவிற்று.

தமக்குப் பேராசிரியராக இருந்த டாக்டர் ஆர். ஸுர்ய ப்ரஸாத ராவிடம் ஓடினார் நம் டாக்டர். தமது பன்னெடுங்கால அநுபவத்தில் இரு கண்களிலும்டென்ட்ரிடிக் அல்ஸர்வந்து பார்த்ததேயில்லை என்று கூறிய பேராசிரியர், .டி.யு. அன்றி வேறு கதியில்லை என்று சொல்லி, அதை வரவழைக்கத் தாம் எப்பாடும் படுவதாக வாக்களித்தார். ராமகிருஷ்ண ராவும் அந்த மருந்துக்காகப் பலருக்குத் தந்தி மேல் தந்தி கொடுத்து வந்தார். பயனில்லை.

ராமகிருஷ்ணா, நோயாளி நரஸிம்ம ராவ் இருவருக்குமே பாபாவிடம் பக்தி உண்டு. இப்போது அவரது அருட்சக்தியைத்தான் தீவிரமாக நாடுவோமே என்ற எண்ணம் வந்தது.

இனிப் பொறுப்பதற்கில்லை என்ற கட்டம் வந்தவுடன், பிரபல வைத்திய நிபுணர், பாபா விபூதியைப் புண்ணுண்டு குதறிய இரு கண்களிலும் வைத்துக் கட்டினார். பாபா ரக்ஷது! என்று விட்டுவிட்டார்!

சில மணி நேரத்திலேயே பேராசிரியர் ஸுர்யப் பிரஸாத ராவிடமிருந்து .டி.யு. மருந்து வந்துவிட்டது! பாபாவின் பிரஸாதமாகவே அது நம் டாக்டருக்குத் தெரிந்தது.

அதை எடுத்துக்கொண்டு நோயாளியிடம் ஓடினார். கட்டைப் பிரித்தார்.

எல்லாம் சரியாகிவிட்டது!” என்றார் நோயாளி நரஸிம்ம ராவ். ஆம், சரியே ஆகிவிட்டிருந்தது! புண் இருந்த இடம் தெரியவில்லை! ராமகிருஷ்ண ராவ் நன்றாகச் சோதனை செய்து பார்த்தார். டென்ட்ரிடிக்காவது, அல்ஸராவது இவருக்கு அது வந்தது என்றால் யாரும் நம்பவே முடியாது!

குருட்டு ரிஜாச்வருக்கு அச்வினிதேவர் க்ஷண காலத்தில் பார்வை தந்தது வேத வரலாறு. நரஸிம்ஹ ராவுக்கு ஸாயிக கண்ணன் கண நேரத்தில் கண் தந்தது இக்கலியிலேயே!

டாக்டர் சிரித்தார், அழுதார். கருணையை எண்ணி அழுகை; மாயையை எண்ணிச் சிரிப்பு. நோயைக் குணப்படுத்திய கையோடு .டி.யு.வை அனுப்பிவைத்து அதைப் பயனில்லாமல் செய்த மாயாவியை என்னென்பது!

ராமகிருஷ்ணாவுக்கு இனிஷியல்எம்.எஸ்.” அவர் படித்துப் பெற்ற பட்டமும்எம்.எஸ்.” அவரது பக்தி லட்சியத்திலும் இரட்டை எம்.எஸ். உண்டு. மெடிகோ ஸாயி, மிரகிள் ஸர்ஜன்தான்!

பிற்பாடு புட்டபர்த்தி சென்றார் ராமகிருஷ்ண ராவ். பாபாவின் திவ்யப் பிரேமையுருவைப் பார்த்து, ஆஹா, இந்த க்ருபாளு தாம் செய்கிறோம் என்றுகூடக் காட்டிக்கொள்ளாமலே எத்தனை ஆயிரம் பேரின் கண்ணீரைத் துடைத்து விடுகிறார்! என்று எண்ணிக் கலகலவென்று கண்ணீரைக் கொட்டிவிட்டார். கண்ணீரின்மீது பன்னீராகப்பட்டது ஒரு கர ஸ்பரிசம். ஸாயீச்வரியின் கைதான்! கண் டாக்டரின் கண்ணீரை பாபாவே துடைத்து விடுகிறார்! “ஆயிரம் அம்மாக்களின் அன்போடு துடைத்தார். உடனே எனக்குச் சுற்றுச் சூழல் உணர்வே கழன்றது. ஆழம் காணவொண்ணா ஆனந்த ஆழிக்குள் அமிழ்ந்தேன். வெளிப்பிரக்ஞை வந்தபோது, பிரபு பக்கத்தறையில் மற்றொரு பக்தரிடம் தமது அயராத கருணைப் பணியை அலுக்காமல் செய்து கொண்டிருந்தார்என்கிறார் டாக்டர் ராமகிருஷ்ணா.

அயராத கருணை. சோம்பலேயில்லாத அருள். ‘அதந்த்ரித கருணாஎன்று காஞ்சி காமாக்ஷியின் சலிப்பற்ற கருணை பற்றி மூகர் சொன்னாரே, அதன் வார்ப்பு வடிவு பாபா.

ராமகிருஷ்ண ராவ் முழுகிய ஆனந்த ஆழிதான் பாபா செய்கின்ற உண்மை மருத்துவம்!

ன்னொரு கண் டாக்டரின் அனுபவத்தையும் சொல்லிவிட வேண்டும். ஸாயி அற்புதங்களிலுங்கூடப் பரம அற்புதம் இது!

காலம் சென்ற டாக்டர் . ரங்கா ராவையும் அவரது நீள நீளப் பட்டங்களையும் சென்னையின் கண் நோயாளிகள் பலர் அறிவர். பூர்வத்தில் பீமாவரத்தில் தொழில் நடத்திக்கொண்டிருந்த இவர் ஆதியிலிருந்து ஷீர்டி பாபாவின் பக்தர். அந்த பாபாவின் புது அவதாரத்தைப் பற்றி இவருக்கு விசேஷமாக எதுவும் தெரியாது. எனவே, சில குளறுபடிகளின் காரணமாக ஆபரேஷனுக்கு லாயக்கில்லை என்று இவர் தள்ளிவிட்ட ஒரு கேஸ், மறுபடி இவரிடம் வந்து, “ஸத்ய ஸாயி பாபா உங்களிடமேதான் ஆபரேஷன் பண்ணிக் கொள்ளவேண்டும் என்று அனுப்பியிருக்கிறார்என்றபோது இவர் முதலில் யோசித்தார். “அவர் ஷீர்டி பாபாவின் மறு அவதாரம். தாம் சொன்னால் நீங்கள் கேட்பீர்கள் என்றும் சொன்னார்என்று அந்த நோயாளிக் கிழவி வற்புறுத்திச் சொன்னதும், இவருக்கு ஏனோ தமது மருத்துவ சாஸ்திர விதியையும் புறக்கணித்துவிட்டுஆபரேஷன் செய்யவேண்டியதுதான்என்று உறுதி பிறந்துவிட்டது.

ஆபரேஷன் செய்தார். ‘காடராக்ட்டோடு கூடியஐரிடிஸ்என்று விழி வீக்கம், அதுவும் போதாது என்று ரூமாடிஸமும் உற்றிருந்த கிழவி அதிசயிக்கத்தக்க விதத்தில் குணமானாள்.

இது டாக்டரின்கண்ணைத் திறப்பதற்காகஸ்வாமி செய்த வைத்தியம்! ரங்காராவ் ஷீர்டியின் புது மூர்த்தியிடம் ஈர்க்கப்பட்டார்.

பிறகு அவர் சென்னையில் ப்ராக்டிஸ் தொடங்கினார். பாபாவும் சென்னை வந்தார். அவரைத் தரிசிக்கச் சென்ற டாக்டர் பெருங்கூட்டத்தைக் கண்டு அயர்ந்தார். செல்வத்தை, செல்வாக்கைக் காட்டியோ, அல்லது பாபாவின் அந்தரங்க சிஷ்யர்கள் என்று யாரையோ நினைத்து அவர்கள் மூலமாகவோ அவரைத் தனியாகப் பார்த்துவிட எண்ணினால், அது நடக்காத காரியம்; அவரே அழைத்தால்தான் உண்டு என்று டாக்டர் அறிவார். எனவே எப்படித் தரிசனம் செய்யப் போகிறோம் என்று கலங்கி எங்கோ நின்று கொண்டிருந்தார்.

ஓர் இளைஞர் ஓடிவந்து, “டாக்டர் ரங்கா ராவ் நீங்கள் தானே? முதல் மாடியில் பாபா உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்என்றார். (வேங்கடமுனியின் குமாரர் ஸ்ரீ ஈச்வர்தான் அந்த இளைஞர்.) துள்ளும் இதயத்துடன் ஐயன் ஸந்நிதி அடைந்தார் ரங்கா ராவ்.

வணங்கிய அவரை அள்ளி எடுத்த பாபா, “உன்னோடு நான் யுக யுகமாக இருந்திருக்கிறேன். நான்தான் உன்னைச் சென்னையில் கொண்டுவந்து அமர்த்தியிருப்பது. எப்போதும் உன் கூடவே இருந்தேன், இருக்கிறேன். இருப்பேன்!” என்றார்!

ரங்கா ராவின் அந்தரங்கத்தில் அமுத அன்பு கொப்பளித்தது.

அதன்பின் ரங்காவின்நர்ஸிங் ஹோம்பாபாவின் லீலா ரங்கமாயிற்று. பேருக்கு மருத்துவ ரீதியில் இவர் வைத்தியம் செய்தாலும், இவரும் இவரது உதவியாளரும் பாபா நாமத்தையே ஸர்வரோக நிவாரணியாகக் கொண்டிருந்தனர்.

இவர் ஆபரேஷன் மேஜையில்படுத்துள்ள நோயாளியண்டை செல்வார். இவரைப் பார்த்து நோயாளி, “பாபா, பாபா, நிஜமாக நீங்களேயா எனக்கு ஆபரேஷன் செய்கிறீர்கள்? ரங்கா ராவ் எங்கே?” என்று கேட்பார்!

ஆஹா, நமக்கே தெரியவில்லை, நம்மை இவர் பாபாவாகப் பார்க்கிறாரே! பிரபோ! இதென்ன லீலை?’ என்று வியப்பார் ரங்காராவ்.

சித்தமறியாதபடி சித்தத்தில் நின்றிலகு கள்வனைத்தான் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். சித்தம் அறியாதபடி ஒரு ரூபத்திலேயே தம் ரூபமாக நின்றிலகு லீலை நம் காவிய நாயகனுக்கே உரியது. ஒருமுறை, பேத அபேதம் என்ற தத்வப்படி தம்மிலேயே, தம் மூலமே, பாபா உருவம் செயல் இரண்டிலும் விளங்கியதை எப்படியோ அவரிடமிருந்து ரங்கா ராவாகப் பிரிந்திருந்து இந்த டாக்டர் உணர்ந்ததோ விநோத சிகரமேயாகும்!

அந்த விநோகசிகரக் கதை, இனி.