புட்டபர்த்தி – 35

அத்தியாயம் – 35

இம்மை, மறுமை இரண்டிலும் அம்மை!

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே!

***

போற்றி எல்லா உயிர்க்கும்
ஈறாய் ஈறின்மையானாய்!

மாணிக்கவாசகர்

மக்குத் தெரியாமலே பாபாவிடம் கரைந்து மறைந்தவர்களைக் குறிப்பிட்டோம். பழவடியார்கள் மிகவும் பழகியறிந்த மூன்று பரம பக்தர்களின் கதையைப் பார்ப்போம். (சாவு என்பதன் அமங்களத்தைப் போக்கும் பாபா இச் சரிதையிலும் மரணப் படலத்தையே திருமணப் படலம் போல் விரிக்கச் செய்கிறார்!)

பாதமந்திர நாட்களிலிருந்து நம் ஸ்வாமியின் ஆசிரமத்துப் பூஜையைப் பதினாலாண்டுகள் பரதன் பாதுகா பூஜை செய்தது போல் உயிர் கலந்து செய்தவர் உத்தமர் ஸ்ரீ சேஷகிரி ராவ்.

பூஜாபலனை இவருக்கு அமோகமாக வழங்கிவிட்டார் பகவான் மனிதனைப் பிடித்தாட்டும் மகா பயமான மரணபயம் எள்ளளவும் இல்லாதவராக இவரை ஸ்வாமி ஆக்கினார்.

மரத்தில் ஒரு பட்சி உட்கார்ந்திருக்கிறது. அது உட்கார்ந்துள்ள கிளை திடீரென முறிகிறது. பட்சி பயப்படுகிறதா? அது பாட்டில் ஆனந்தமாகப் பறந்துவிடுகிறது. நாமும் அப்படித்தான் மரிக்கும் போது இருக்கவேண்டும். சரீர விருட்சம் உடைந்து விழுந்தாலும் ஆத்ம பட்சி அதோடு விழுந்து உடையாது; அதற்கு பகவானிடம் பறக்கக்கூடிய இறகுகள் இருக்கின்றன என்று உணர்ந்தால், விருக்ஷம் விழுவதில் பக்ஷி பயப்படாததுபோல் எவரும் மரண பயமே இல்லாதிருக்கலாம்என்பார் பாபா. மறுபடி கருப்பையில் புகாமல், பகவானிடம் பறக்கிறோம் என்று உறுதிப்படுத்திக்கொண்டாலொழிய எப்படி மரண பயமில்லாதிருப்பது?

சேஷகிரி ராவுக்கு இந்த உறுதியை நல்கிவிட்டார் ஸ்வாமி.

மரணத்துக்கு எப்போதும் தயாராக இருக்கவேண்டும். தெய்வ நினைவோடு மரித்தால் மோக்ஷமடையலாம் என்பதால் சாகுந்தருணத்தில் மட்டும் பகவானை நினைத்தால் போதும் என்று இருக்கலாமா எனில், சாகுந் தருணம் எது என்று எப்படிச் சொல்லமுடியும்? எப்போது வேண்டுமானாலும் மரணம் நேரலாம். இப்போதேகூட நேரலாம். “சரியாகப் போஸ்கொடுங்கள்என்று சொல்லி நமக்காகக் காத்திருக்கும் ஃபோட்டோக்ராஃபரில்லை யமதர்மராஜன்! எனவே அவனுக்காக நாம் எப்போதும் ரெடியாக இருக்கவேண்டும். எப்போதும் பகவத் ஸ்மரணம் இருந்தால் பயமேயில்லாமல் மரணத்துக்கு ரெடியாக இருக்கலாம்என்பார் பாபா.

இப்படி இருந்தவரே சேஷகிரி ராவ்.

இவர் மரணவாயிலில் நின்ற சமயம். உண்மையான பக்தியில் தானாகக் கனிந்த ஞானத்தின் அதிசயத் தெளிவோடு, “இந்தப் பஞ்ச பூத சரீரம் பஞ்ச பூதங்களாகவும் பிரியப் போகிறது. இதற்குள் சிறைப்பட்டுக் கிடந்த ஆத்மா விடுபடப் போகிறது. நான் மோக்ஷத்துக்குப் போகிறேன்என்றார்.

பெரிய பதவி ஏற்பதற்காக வேற்றூருக்குச் செல்கையில் விடைபெறும்போதுகூட ஒரு வேதனை இழை ஓடத்தான் செய்யும். சற்றும் வேதனை வாடை வராமல் உலகிலிருந்தே விடை கொள்கிறார் ஸ்ரீ சேஷகிரி ராவ்!

அருகிருந்தோர் மெய் சிலிர்த்தனர்.

சிலிர்த்த முடியோடு சிங்காரஸாயி அங்கு வந்து நின்றார். அவ்விடத்தின் அடர்ந்த உணர்வுக்கு நேர் மாறான லீலைக் குறும்பு முகத்தில் சுடரிடுகிறது!

என்ன கொழுப்பு ஐயா, உனக்கு?” என்கிறார் சேஷகிரியிடம். “ஆமாம், எங்கிட்டே டிக்கெட் வாங்கிக்காமல் எப்படி ஐயா புறப்படுவே? நான் இப்போ டிக்கெட் தருகிறதாக இல்லை. எழுந்திரு. வேலையைப் பாரு. பூஜையில் ஆரதி கொடுக்கடயம்ஆகலே? நீ ஜம்னு படுத்துட்டு ஃபிலாஸஃபி லெக்சர் அடிக்கறயேம். போஎன்றார் அலக்ஷியமாக.

சாம்பிணமாகச் சாம்பிக் கிடப்பவரிடம் ஈவிரக்கமில்லாமல் பேசுவது போல்தான் இருந்தது. ஆனால் சாம்பலையும் உயிருடலாய்த் தளிர்க்கச் செய்யும் ஸாம்பமூர்த்தி அல்லவோ பாபா?

சேஷகிரி ராவ்தானா இவர் என்று அதிசயிக்கும் விதத்தில் கிழித்த நாராக் கிடந்தவர் விருட்டென எழுந்தார். நடந்தார்.

சர்வ சகஜமாகப் பூஜை வேலையைத் தொடங்கிவிட்டார். வஜ்ர ஸங்கல்பம் இவர் உடலை வஜ்ரமாகவே செய்துவிட்டது.

ஆறு மாதங்கள் ஓடின.

மீளவும் நோயுற்றார் ராவ். வஜ்ரம் வலுவிழந்து கொண்டே வந்தது. ‘ஐயோ, இந்த பக்த சிகாமணிக்குமா இப்படிப்பட்ட நரக அவஸ்தை?’ எனும்படி வாதைப்பட்டார்.

நான்தான் அவன் கர்மா முழுக்கத் தீர்ந்து அவன் திரும்ப உடம்பு எடுக்காமலிருப்பதற்காக இப்படி வைத்திருக்கிறேன். இல்லாவிட்டால் அன்றைக்கே அவனைப் போக விட்டிருக்க மாட்டேனா? போவதென்பது என்றைக்கும் நடக்க வேண்டியது. திரும்பக்கூடாது என்பதுதான் முக்கியம். அதற்கு அநுபவித்தே தீர்க்க வேண்டும்என்றார் வைராக்ய பாபா.

கர்ம தாட வசமா? நடுடா
கர்ம தாட வசமா?”

என்று அந்த நாட்களில் அவர் பாடுவது வழக்கம். ‘மனிதா! நீ கர்மத்தைத் தாண்ட முடியுமா?’ என்று அர்த்தம். அநுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். அதற்கே அவர் துணைபுரிவார்.

பாபா ஈரமில்லாதது போல் இப்படிச் சொன்னாலும் அன்றிலிருந்து ராவின் உபாதை மலையேறிவிட்டது. ‘அநுபவித்தே தீர்க்க வேண்டும்என்றவர், பக்தர் அநுபவிக்கவிடாமல் தாமே அதை வாங்கிக்கொண்டு விட்டாரோ? தியாகஸாயியின் ரஹஸ்யத்தை யாரே அறியமுடியும்?

இதன்பின் ஆறு வாரங்கள் ஸ்ரீ சேஷகிரி ராவ் சாந்தத் தடாகத்தில் ஆனந்தப் பூம்படகில் மிதந்துகொண்டிருந்தார்.

ஒரு மாலை அவர் கண்மூடிப் படுத்திருந்தார். அண்டையில் சென்றமர்ந்தார் ஆண்டை.

சூடான பால் கொண்டுவரச் சொன்னார்.

நாயனா! நான்தான் உன் ஸ்வாமி வந்திருக்கேன், வாயைத் திற!” என்று பாலினும் இனிக்கக் கூறினார்.

ராவ் கண்ணைத் திறந்து பாபாவைப் பருகினார்; வாயைத் திறந்து அவர் ஸ்பூன் ஸ்பூனாகச் செலுத்திய பாலைப் பருகினார்.

பரபரவென்று பறக்கும் வழக்கம் கொண்ட ஸ்வாமி, பொறுமையாகக் கோப்பை பாலையும் ஸ்பூன் ஸ்பூனாக எடுத்து ராவுக்குப் புகட்டினார்.

கோப்பை காலியானதும் எழுந்திருந்தார். கதவு வரை வந்தவர் திரும்பி ராவைப் பார்த்தார். “இப்போ நீ போகலாம்என்றார்.

டிக்கெட் கொடுத்துவிட்டார்! ராவும் புறப்பட்டுவிட்டார்.

அநாயாஸ மரணம். ஆதிமூலத்தில் அடக்கம்.

***

ரு காலத்தில் ஸ்ரீமான்கள் பாலைய நாயுடு, ஸி.கே. நாயுடு, ராமஸ்வாமி ஆகியவர்களைக் கிரிக்கெட் ட்ரயம்விரேட் (மூவேந்தர்) என்பார்கள். இவர்களில் ராமஸ்வாமியை தத்து எடுத்துக் கொண்டவர் நரஸம்மா. ஆசாபாசங்கள் நிறைய இருப்பவர்கள் தான் ஸ்வீகாரம் எடுத்துக்கொள்வர் என்று சொல்லவும் வேண்டுமா?

ஸத்யநாராயணன் பாலஸாயியாகிச் சிறிது காலத்திலேயே அவரிடம் வந்தார் நரஸம்மா. அவ்வளவுதான்! குடும்ப ஆசாபாசம் முழுதும் எப்படியோ சுவறிவிட்டது. கோபால் ராவை தத்து எடுத்துக்கொண்டும் ஸத்யாவுக்கே தன்னைத் தத்தம் செய்து கொண்ட சுப்பம்மா போலவே, நரஸம்மாவும் நர உருவில் வந்துள்ள நம் தேவனிடம் அன்றே தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டுவிட்டார். ‘தில்லை வெளியிலே கலந்துவிட்டால் அவர் திரும்பியும் வருவாரோ?’ என்றபடி பர்த்தியையே தமது நிரந்தர இருக்கையாக்கிக் கொண்டு விட்டார்.

அன்பும் பரிவுமே ஒருருவாக முதிர்ந்து வந்த நரஸம்மாவுக்குக் காலக் கிரமத்தில் வேறொரு வித பாசம் உண்டாயிற்று. அதாவது பிரசாந்தி நிலயவாசிகளுக்கும், அங்கு வரும் பக்தர்களுக்கும் அவரது குடில் எப்போதும் திறந்திருந்தது. அவர்களிடமெல்லாம் அன்பு பாராட்டுவதே அவருக்கு முழு நேர வேலையாகிவிட்டது.

அவ்வப்போது ஸ்வாமி கடிந்துகொள்வார்: “இதென்ன காரியம் நரஸம்மா? வீடு வாசலை விட்டுவிட்டு வந்து இப்போது வேறு விதமான பந்த பாசத்தை வளர்த்துக்கொண்டு விட்டாய்? பலதரப்பட்ட ஜனங்களை இப்படி ஸதா உன்னிடம் அனுமதித்துக் கொண்டே இருந்தால் ஸாதனைகள், குறிப்பாக மௌன அநுஷ்டானம், என்னாவது?” என்பார்.

நரஸம்மா பதில் சொல்ல மாட்டாள். ஆனாலும் தன் போக்குப்படியே பக்த ஜனங்களிடம் பந்தம் பாராட்டிப் பாச வெள்ளத்தைப் பொழிந்துதான் வந்தாள்.

பாபாவுக்கும் தெரியாதா, அவள் அநுஷ்டித்த தூய அன்புதான் எல்லாவற்றுக்கும் மேம்பட்ட ஸாதனை என்று? அதை அவள் வாய்விட்டுச் சொல்லாமல் இருக்கும் பக்குவத்தை ரஸிப்பதற்கே கடிந்து கொள்வதாக நடித்தார் போலும்!

உள்ளூர நரஸம்மாவுக்கும் பாபாவுக்கும் இடையில் நிலவிய புனித அன்பை என்னென்பது? 1970 டிஸம்பரில் பாபா கோவாவில் இருந்தபோது திடீரென அப்பென்டிஸிடிஸ் கண்டு துடித்ததை பக்தர் அறிவர். பத்தர் ஒருவரின் உபாதையையே தாம் வாங்கிக்கொண்டு தீர்ப்பதாக அப்போது பாபா அறிவித்ததும் அடியாருலகுக்குத் தெரிந்த விஷயம். இன்ன பக்தர் என்று அவர் பெயர் குறிப்பிடாவிடினும் இதே ஸமயத்தில் பர்த்தியில் மிகவும் ஸுகவீனமுற்றிருந்த நரஸம்மாவுக்கு அவர் கோவா ராஜ நிவாஸிலிருந்தே கடிதம் எழுதியதை எண்ணுகையில், இவருடைய சரீரக் கஷ்டத்தைதான் அவர் ஏற்றுக்கொண்டாரோ எனத் தோன்றுகிறது!

எத்தனை பிரியம் சொட்டும் கடிதம் அது!

நரஸம்மா!

ஆசீர்வாதம் பெற்றுக்கொள். இரண்டு மூன்று நாட்களில் பம்பாய் போய்விட்டு, பிறகு ப்ரசாந்தி நிலயத்துக்கு வந்து விடுகிறேன். உன் ஆரோக்யம் நலிந்து கொண்டிருப்பதை நான் அறிவேன். பரிதாபப்படவேண்டிய விஷயம். ஆனால் உனக்கும் வயதாகிவிட்டது.

ரொம்ப பலவீனமாக இருப்பாய். பழங்கள், மற்றும் ஸத்துள்ள ஆஹாரங்கள் சாப்பிடு.

ஸாயி எப்போதும் இதயத்திலேயே குடிகொண்டிருக்கிறான். அவன் வெளியே போகவே மாட்டான். ஒருகாலும் உன்னை மறக்கமாட்டான்.

ஒவ்வொரு மூச்சிலும் ஸாயி, ஸாயி என்று ஜபித்துக் கொண்டிரு. ஸதா காலமும் ஸாயி ஸ்மரணையிலேயே இரு. வேறு சிந்தையில் பொழுதை வீணாக்காதே.

ஸாயி உன்னை ரக்ஷிப்பான். அவன் உன்கூடவே இருக்கிறான். அவனிலேயே ஐக்கியமாகி நித்திய பதத்தில் நிலைத்துவிடு.

அங்கே ஒவ்வொருவருக்கும் என் ஆசீர்வாதம் சொல்லு.

காபோ ராஜ நிவாஸ்
கோவா 14-12-70

ஹ்ருதயவாஸி
பாபா

சுமார் நான்கு மாதங்களுக்குப் பின் நரஸம்மாவின் அந்திம காலம் வந்துவிட்டதென்று அனைவருக்கும் புரிந்துவிட்டது. அப்போது ஸ்வாமி பெங்களூரில் இருந்தார். ஏன் பர்த்திக்கு வந்து சுப்பம்மாவுக்குச் செய்த அருளை நரஸம்மாவுக்கும் செய்யவில்லை என்று உடனிருந்த பக்தர்களுக்குப் புரியவில்லை.

ஆனால் பர்த்திக்கு ஸ்தூலமாக வராமலே அருள்புரிய பாபாவுக்கா தெரியாது?

உயிர் ஒடுங்கிக் கொண்டிருத்த நரஸம்மா திடுமெனக் கையை வாயருகே கொண்டுபோய் எதையோ வாயிலிட்டுக் கொண்டு மெல்லுவதை உடனிருந்தோர் கவனித்து அதிசயித்தனர்.

நரஸம்மா, வாயிலே என்ன?” என வினவினர்.

அவள் நல்ல பிரக்ஞையுடன், “ஸ்வாமி வந்தார். விபூதிப் பிரஸாதம் கையில் கொடுத்துவிட்டுப் போனார்என்றாள்.

சில மணிகளில் அவள் உடம்பு நீற்று விபூதியாகிவிட்டது!

காலை பதினொரு மணி ஏழு நிமிஷத்துக்கு அவள் பிரசாந்தி நிலயத்தில் நிரந்தரமாகக் கண்மூடிய அதே ஸமயத்தில் ஒயிட்ஃபீல்டில் பாபா, “பெத்த பொட்டூ! உன் நரஸம்மா போயாச்சு!” என்று அவளுடைய நீண்டநாள் தோழியான் பெத்தபொட்டம்மாவிடம் கூறினார்!

1971 ஏப்ரல் 18ந்தேதி பிரசாந்தி நிலயத்தில் ஐயன் நிகழ்த்திய உரையில் நெஞ்சு கொள்ளாமல் நரஸம்மாவை நினைந்து வாயாரப் போற்றிப் பேசினார். “அவளுடைய உடம்பு பழுத்தது. அப்புறம் அழுகியும் போயிற்று. அதனால் அது அற்றுப் போகும்படி ஆயிற்று. ஆனால் அவளுடைய ஸேவையும் ஸாதனையும் என்றும் அற்றுப் போகாதவை. அவளுடைய வாழ்க்கையின் அழகைப் புரிந்து கொள்வதோ, அதை விளக்க உவமை காண்பதோ இயலாத காரியம்என்றார்.

***

சுப்பம்மா, நரஸம்மா போல் விதவையர் பலர் பாபாவின் பேரருளுக்குப் பாத்திரமாகியிருக்கிறார்கள். எந்தப் புனித ஆசிரமத்தைப் பார்த்தாலும் அங்கே இப்படி சரணாகதி உருவான கைம்பெண்கள் சிலரைக் காண்கிறோம். சரணாகதி செய்வதில் பெண்களுக்குள்ள தனித் திறமையை இது காட்டுகிறது போலும்! ஆடவர்கள் தாரத்தை இழந்தாலும் அதன்பிறகு ஏதோ வேதாந்தப் படிப்பு, அல்லது சிரமமான ஸாதனை என்றுதான் போகிறார்களே தவிர, ஒரு மஹாத்மாவிடம் அநாயாஸமாக ஸர்வஸங்க பரித்யாகம் செய்துவிட்டு எளிமையாக, நிம்மதியாக வாழ்வதைச் சற்று துர்லபமாகவே பார்க்கிறோம், ஆனால் எளிமையாய் சரண் செய்து பெண்டிர் பெறும் நிறைந்த நிறைவான நிலையை வேதாந்தப் படிப்பும், சிரம ஸாதனைகளும் அளிப்பது துர்லபந்தான்!

வாழ்விலும் மரணத்திலும் பாபாவோடு உருகி இறுகி இருந்த சரணாகதைகளில் ஸ்ரீ கஸ்தூரி அவர்களின் தாயான ஜானகியம்மாளைச் சொல்ல வேண்டும்.

வைதிகாசாரங்கள் வலிவாய் நிலவிய காலத்திலேயே பிராம்மண விதவையான ஜானகியம்மாள் ஸத்ய ஸாயி பாபா போன்ற ஒருவரிடம் உள்ளார்ந்த நம்பிக்கை வைத்ததிலேயே வெள்ளையானதொரு பரித்யாக மனோபாவம் புலனாகிறது.

அந்த அம்மாளிடம் எப்படியெல்லாம் பட்டாக ஒட்டி லட்டாகப் பரிவைப் பொழிந்தார் நம் ஸ்வாமி? மூதாட்டி இவருடைய கர கமலங்களைப் பிடித்துக்கொண்டு, “ஸ்வாமீ, நான் கண்ணை மூடும் போது இந்த குஞ்சுக் கையால் எனக்குத் தீர்த்தம் கொடுத்துக் கரையேற்றணும்என்பாள்.

. அப்படியே!” என்பார் ஸ்வாமி.

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி என்று மணிவாசகர் சொன்னதற்கேற்ப, அந்நாட்களில் பிரசாந்தி நிலயக் குடில் ஒவ்வொன்றுக்குள்ளும் சென்று யோக க்ஷேமம் விசாரிக்கும் நாயகர். வேண்டுமென்றே கஸ்தூரி வீட்டுக்கு மட்டும் போகாமல் ஒதுக்கி நடையைக் கட்டுவார், ஓரக் கண்களால் அம்மையாரை நிமிண்டியவாறே.

கிழவி ஓடோடி வந்து, “நம்மாத்துக்கு வராமல் போறேளே ஸ்வாமி!” என்பாள்.

எனக்கு நீ இரண்டு ஆரதி கொடுத்தால்தான் உங்காத்துக்கு வருவேன்என்று ஒட்டாரம் பிடிப்பார் குழந்தை பகவான்.

அப்படியே தரேன், ஸ்வாமிஎன்று குழந்தையை அழைத்துப் போவாள் பாட்டி.

அடுக்களையில் புகுந்து அவள் சமைத்து வைத்திருப்பதை எல்லாம் திறந்து பார்ப்பார். “பாட்டி! (லோக மாதாவான ஸாயி அம்மா என்றும் பாட்டி என்றும் கூப்பிடுகிற அழகே அழகு) இத்தனூண்டு சமைச்சு வெச்சிருக்கியே, இது போறுமா? ஏன் கறிகாய் ஏதும் சமைச்சுக்கல்லை? நன்னாச் சாப்பிடு, பாட்டி, நன்னாச் சாப்பிடு. உன் பிள்ளைக்கு நான் நிறையப் படி அளந்துண்டு இருக்கேன்என்று வாத்ஸல்யம் பொங்கக் கூறுவார்.

ஸ்வாமி அப்போது பெங்களூரில் இருந்தார். பிரசாந்தி நிலய பஜனை மந்திரில் இருந்த கஸ்தூரியிடம் ஆள் பறந்து வந்தது ஜானகியம்மாள் வாந்தி செய்துவிட்டுச் சாய்ந்து விட்டாராம்.

கஸ்தூரி பதறி ஓடினார் அன்னையிடம். அண்ணல் இங்கு இல்லையே, அம்மா அவருடைய குஞ்சுக் கரத்தால் ஜன்மா தீர்க்கும் தீர்த்தம் கேட்டாளே!

அண்ணல் அங்கு ஏன் இல்லாமல்?

ஜானகியம்மாளுக்குத் தலைமாட்டிலே இருந்த ஷீர்டி பாபா விக்ரஹத்தின் பாதத்திலிருந்து கலகலவென கங்கை வழிந்தது!

முன்னோரத்தியாயத்தில் பர்த்தி பாபா தம் பிராண சக்தியைக் காலால் வெளியே விட்டதாகவும், ஷீர்டி பாபாவோ வெளியேறிய தம் பிராண சக்தியைக் கை வழியே மீண்டும் சரீரத்துள் செலுத்திக் கொண்டதாகவும் கண்டோம். இங்கே பர்த்தியாரின் குஞ்சுக் கை தரவேண்டிய தீர்த்தத்தை ஷீர்டியாரின் கிழக் கால் வழங்கக் காண்கிறோம்!

பாக்யசாலினி கை குழித்து அப்புனித நீரை வாங்கி, மூன்று மடக்கு உட்கொண்டாள்.

ஸ்வாமி அவளைத் தம் உள்ளே கொண்டுவிட்டார்.

அங்கே பெங்களூரில் ஸ்வாமி உடனிருந்தோரிடம் சிரித்துக் கூறினார்: “இந்தக் கஸ்தூரியே கிழம். இவன் அம்மா போய் விட்டாளே என்று குழந்தை மாதிரி அழுதுகொண்டிருக்கிறான்!”

புட்டபர்த்திக்குத் திரும்பியவர் கஸ்தூரியைப் பார்த்ததும், “பஜனை ஹாலில் வாந்தி…” என்று ஆரம்பித்தார். எவரோ தற்போது பஜனைக் கூடத்தில் வாந்தி எடுப்பதாக ஸ்வாமி சொல்கிறார் என நினைத்து அவ்விடத்துக்கு விரைய எழுந்தார் கஸ்தூரி. “அசடே இப்போ யாரும் வாந்தி எடுக்கல்லை. அன்னிக்கு நீ பஜனை ஹாலில் இருந்தபோது உன் அம்மா வாந்தி பண்ணினாளே, அதைச் சொல்ல வந்தேன்என்று கூறிய ஸ்வாமி தொடர்ந்தார்: “அசுத்தமெல்லாம் தீர்ந்த பிறகே தீர்த்த ப்ரஸாதம் தரவேண்டும் என்றுதான் முதலில் வாந்தி எடுக்கச் செய்தேன்என்று விளக்கினார்.

உடல் அசுத்தத்தை மட்டும் அவர் கூறியிருக்கமாட்டார். ஏனெனில் உயிரைத் தூயதாக்கி அவரது பாதகமலத்துக்கு என்றென்றும் தூக்கிவிடுவதே யன்றோ அந்தத் தீர்த்த விசேஷம்?

பிறப்பிலே ஏற்படும் வியாதிக்கு மருந்து செய்வதைவிட, பிறப்பே ஏற்படாமலிருக்க மருந்து செய்வதுதான் விசேஷம்.

பிறப்பறுத்தேன் நல்ல மருந்தின் அடி
என் மனத்தே வைத்து

என்று அடிகள் பாடியவண்ணம், மற்ற ரோகங்களைவிட பவரோகத்துக்கு வைத்யநாதனாயிருப்பதே ஸ்வாமியின் பெருமை!

***

ரணகாலத்தில் ஸ்வாமி செய்யும் பலவித அருள்களைப் பார்த்தோம். இவற்றோடு சில பக்தர்கள் மரிப்பதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு பாபா அவர்கள் இல்லத்துக்கே சென்றுமரிப்பவர், அவரது உறவினர்கள் ஆகிய இரு சாராரையும் தெளிவித்து வருவதையும் சேர்க்க வேண்டும்.

பரம பக்தரும் அரசியல் பிரமுகருமான டாக்டர் பி. ராமகிருஷ்ணராவின் கடைசிக் காலத்தில் பாபா பெங்களூரிலிருந்து ஹைதராபாதுக்குக் காரில் பறந்து சென்றது இவற்றில் ஒன்று. “ராவ் நல்ல பக்குவி. அவருக்கு என் ஸ்தூல தரிசனங்கூட வேண்டாம். அவரது இல்லத்தாருக்கு சாந்தி அளிக்கவே சென்றேன்என்றாராம்.

ஸாயிராம்நாமம் எழுதிய சரிகைப்பட்டுப் போர்த்திக் கொண்ட கோலத்தில் ஸ்வாமியின் புகைப்படமொன்று உண்டு இப்பட்டு ஸ்வாமியின் நாற்பத்தொன்றாம் ஜயந்தியில் நெசவாளர் கிருஷ்ணப்பா சமர்ப்பித்த காணிக்கையாகும். கபீர்தாஸைப் போக நாமத்தை மூச்சில் நெய்தபடியே இப்பொன்னாடையை அவர் நெய்தார். கையுறையே ஏற்காத ஸ்வாமியை இந்த அன்புதான் இளக்கி, அதைப் போர்த்திக் கொள்ளுமாறு செய்தது! பிரதியாக கிருஷ்ணப்பாவின் அந்திம நாட்களில் பெங்களூர் அவென்யூ சாலையிலுள்ள அவர் வீட்டுக்கு ஸ்வாமி சென்று தரிசனம் சாதித்து வந்தார். பொன்னாடை தந்தவர்க்குப் பொன்னாடு தந்தார்.

ரணத்தை மாற்றாமல் பாபா செய்த மேற்சொன்ன லீலைகளில் ஐயனின் அருள் அபாரமாகத் ததும்புவது வாஸ்தவந்தான் எனினும், “மாற்றவே முடியாதுஎன்று உலகெலாம் எண்ணும் மரணத்தையும் அவர் இருமுறை மாற்றிப் பிரேதத்தை உயிர்கொள்ளச் செய்ததாக பக்தருலகு நம்புவது அலாதிச் சிறப்பு வாய்ந்ததுதான். இவ்விரண்டில் வால்டர் கவனின் மாண்ட உயிர் மீண்டதாக முன்பே பார்த்தோம். இன்னொன்றை இப்போது பார்ப்போம்.

குப்பத்தைச் சேர்ந்த தனிகர் ஸ்ரீ வி. ராதாகிருஷ்ணா நமக்கு முன்பே பரிசயமாகியுள்ள ஸ்ரீ வேங்கடமுனியின் மாமனார். இவர் புனர்ஜன்மம் பெற்றது அநேக ஸாயி பக்தர்கள் நேரில் கண்ட விஷயம்.

குடற்புண்ணுடன் 1953ம் ஆண்டு நவராத்ரியின் போது பாபாவிடம் வந்தார் ஸ்ரீ ராதாகிருஷ்ணா. மனைவி ஸ்ரீமதி ராதாம்மா, மகள் ஸ்ரீமதி விஜயா, மருகர் ஸ்ரீ ஹேம்சந்த் ஆகியோரும் உடன் வந்தனர்.

அல்ஸர் வலி தாங்க முடியாத ராதாகிருஷ்ணா பாபாவிடம், “ஸ்வாமீ, இந்த வலி தீராதானால் நான் இப்போதே சாகத் தயார்என்றார்.

ஸ்வாமி வலி தீரும் என்றும் சொல்லவில்லை; சாகவும் சொல்லவில்லை. ஏதோ பெரிய தமாஷைக் கேட்டது போல் சிரித்துக் கொண்டே அகன்றார்!

புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலயத்தில் தங்கியிருக்கும்போதே ராதாகிருஷ்ணாவுக்கு உடல்நிலை படுகோளாறாகி, ஓரிரவுகோமாஎன்ற பிரக்ஞையற்ற நிலையை அடைந்துவிட்டார்!

சாகத் தயார்என்று அவர் அபஸ்மாரம் போல் சொன்னதையும் நினைவுகொண்டு கதிகலங்கிய அவரது மனையாள் பாபாவிடம் ஓடினார். “பதிபிக்ஷை தாருங்கள், பகவானே!” என்று தீனமாக வேண்டினார்.

பாபா வந்து நோயாளியைப் பார்த்தார். “ஒண்ணும் கவலை வேண்டாம். எல்லாம் ஸரியாப் போகும்என்று சொல்லிப் போய்விட்டார்.

இரவு தேய்ந்து மறைந்தது. ராதாகிருஷ்ணாவின் மயக்கநிலை மாறவில்லை.

அக்காலத்தில் புட்டபர்த்தியில் வைத்திய வசதி ஏதும் கிடையாது. ஹேம்சந்த் எங்கோ சென்று ஒருமேல் நர்ஸைஅழைத்து வந்தார். அவர் உதட்டைப் பிதுக்கி விட்டார். “பல்ஸே இல்லையே. பிழைக்க வைக்க முடியாதுஎன்று சொல்லிப் போய்விட்டார்.

ராதாகிருஷ்ணாவின் தொண்டைகள களவென்றது. அப்புறம் ஓய்ந்துவிட்டது. உடல் சில்லிட்டது. விறைத்தும் போயிற்று. உடல் என்பதா, சடலம் என்பதா?

பாபா உணவருந்திக் கொண்டிருந்த இடத்துக்கே தாயும் மகளும் ஓடி, நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். அவர் ஆனந்தமாகச் சிரித்தபடி அதைக் கேட்டவாறு போஜனத்தைத் தொடர்ந்தார். உண்டு முடித்துக் கை கழுவிக் கொண்டு விட்டார்!

ராதாகிருஷ்ணாவின் ஆபத்து நிலையோ, மரணமோ தந்த வேதனை ஒரு பக்கம் இருக்கட்டும். கண்கண்ட தெய்வம் என்று எவர் காலடியில் அடைக்கலம் புகுந்தார்களோ அவர் ஏன் இப்படி அக்கறையே இல்லாமல் ஆகிவிட்டார்? ஆனாலும், “எல்லாம் ஸரியாப் போகும்என்று அவர் சொன்னது வீணாகாது என்று நம்பிக் கொண்டு அக்குடும்பத்தினர் விநாடி விநாடியாக நெட்டித் தள்ளினார்கள்.

கனத்து, விறைத்து, குளிர்ந்து, நீலம் பாரித்துப் போன உடம்பைப் போட்டுக் கொண்டு இரவு முழுவதையும் கழித்தனர்.

மறுநாள் காலை அண்டைவாசிகள் வந்து குடும்பத்தாரைத் துக்கம் விசாரித்ததோடு, உடலை எடுத்து ஸம்ஸ்காரம் செய்து விடும்படிச் சொன்னார்கள். நாற்றம் எடுத்துவிட்டதே!

இனியும் ஸ்வாமியை எதிர்பார்த்துப் பயனில்லை என்றனர்.

அவர்களில் சிலர் பாபாவிடம் சென்று, அவர் சொன்னாலொழிய பிணத்தை அகற்றமாட்டார்கள் போலிருக்கிறது என்று விஞ்ஞாபனம் செய்துகொண்டனர்.

பாபா நிதானமாக, “சூஸ்தாமு, சூஸ்தாமு (பார்க்கிறோம் பார்க்கிறோம்)” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டார்.

மணி ஓடிக்கொண்டே இருந்தது.

பழுக்கப்போட்டுக்கட்டியை அறுப்பது போல, ராதாகிருஷ்ணாவின் குடும்பத்தினர் துக்கத்திலும் ஏமாற்றத்திலும் எல்லைக்கு வரும்வரை பேசாமலே இருந்தார். கடைசியில் ஒரு வழியாகப் பகல் மணி இரண்டரைக்கு அங்கே வந்தார்.

உடலருகே பாபா வந்ததும் ஸ்ரீமதி ராதாம்மாவும் விஜயாவும் அவர் அடிகளில் துவண்டு விழுந்தனர். ‘கோவென்ற கதறல் வெடித்து வந்தது. ‘லாஸரஸின் சகோதரிகள் மார்த்தாவும் மேரியும் யேஸுநாதன் முன் அவன் பிணத்தைக் கிடத்தி எப்படி அழுதார்களோ அப்படிஎன்கிறார் ஹவார்ட் மர்ஃபெட் இயேசு காலம் கடந்து வந்திருக்கிறார் என்று அவர்கள் நினைத்தது போலவேதான் இவர்களும் எண்ணினரோ என்னவோ? காலகாலனிடம் காலம் என்ன செய்யமுடியும்?

அவ்விருவரையும் ஹேம்சந்தையும் அறையைவிட்டு வெளியே அனுப்பிவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டார் பாபா. பாபாவும், ராதாகிருஷ்ணாவின் உடலும் மட்டும் தனியாக இருந்த அந்த ஒரு சில நிமிஷங்களில் அவர் என்ன செய்தார் என்று யாரே அறிவர்? நாம் கனவில் கூட கற்பனை செய்யவொண்ணாத எதையோ அவர் செய்துவிட்டார் என்பது மட்டும் நிச்சயம்.

சில நிமிஷங்களில் பாபா ஓர் உணர்ச்சியும் காட்டாமல் வெளிவந்து, ஆர்வத்துடிப்பே உருவாயிருந்த அம் மூவரையும் உள்ளே போய்ப் பார்க்குமாறு சைகை காட்டினார். அவர்கள் எண்ணாததெல்லாம் எண்ணி உட்சென்றபோது ராதாகிருஷ்ணா சிரித்த முகத்தோடு, செழித்த தெம்போடு படுக்கையிலிருந்து தலைதிருப்பி அவர்களை வரவேற்றார்! சில்லிப்பும், விறைப்பும், நீலமும், நாற்றமும் மாறிப் பழைய ராதாகிருஷ்ணாவாக இல்லை, அதனிலும் ஆரோக்கியமாக இருந்தார். ஆம், அவருடைய குடற்புண்ணும் இப்போது குணமாகி விட்டிருந்தது!

அவரது தலையைத் தடவிக் கொடுத்த பாபா, ‘ரொம்ப கவலைப்பட்டுட்டாங்க. இவங்ககிட்ட பேசு, நாயனாஎன்றார்.

ஆனந்தத்திலும் நன்றியிலும் கண்கள் குளமான ராதாம்மாவைப் பார்த்து, “பதிபிக்ஷை கிடைச்சுடுத்தோல்லியோ?” என்று பிரேம ஸ்வரூபர் வினவினார்.

மரணம் என்றே ராதாகிருஷ்ணா, கவன் ஸம்பவங்களை நாம் சொன்னாலும் பாபாவோ மரணம் என்ற வார்த்தையைஸநாதன ஸாரதியில் “….” என்ற அடைகுறிகளுக்குள்ளேயே பிரசுரிக்கச் சொன்னாராம். அப்படியானால் இவை இரண்டும் அசல் சாவு இல்லையா? நாற்றமெடுத்து, எறும்பு மொய்த்த ராதா கிருஷ்ணாவின் நீலம் பாய்ந்த உடம்பைப் பார்த்தவர்கள் ஒப்ப மறுக்கிறார்கள். கவனின் விஷயத்திலோ அந்தக் கவனே தமதுயிர் வேறுலகில் நீதித்தேவனிடம் சென்றதாகச் சொல்லியிருக்கிறார்: எனவே, மரணம் என்பது இந்த உடம்பைவிட்டு உயிர் போவதுமட்டுமல்ல; உயிரானது மீள வேறோர் உடலில் பிறப்பெடுக்கும் வரையில் இந்த உடல் மரித்ததாக ஆகாது எனக் கொண்டே பாபா இவ்வாறு கூறியிருப்பார் போலும்! பிற்பாடு இவ்வுடல் மரித்தாலும், இன்னோர் உடல் பெறாமல் தம்மிடமே வந்து சேரப் போகிறவர்களை மரணமடைந்ததாக அப்பட்டமாகப் போடாமல் அடைகுறிகளுக்குள் போடவேண்டும் என்றாரோ?

ஆம், பிற்பாடு ராதாகிருஷ்ணா, கவன் இருவரும் அவரிடம் போய்ச் சேரத்தான் செய்தார்கள் மாண்டு மீண்டதால் சிரஞ்ஜீவிகளாக வாழ்ந்துவிடவில்லை.

பகவானின் பெருமை தெரியவே”, “for the glory of God” தாம் லாஸரஸைத் தாற்காலிகமாகச் சாவிலிருந்து உயிர்ப்பித்ததாக இயேசுநாதர் கூறினார். பாபாவும் இதன் பொருட்டே இருமுறை இந்த மஹா அற்புதத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும். இன்னொரு காரணமும் சொன்னார். சுமார் எண்பது வயதான மூதாட்டி எல்ஸீ அமெரிக்காவிலிருந்து பல்லாயிரம் மைல் வந்து, இங்கிருந்து கணவரின் சடலத்தைத் தம்மோடு திரும்ப எடுத்துச் செல்லும் கொடுமைக்கு ஆளாக வேண்டாம் என்பதே அது. ராதாகிருஷ்ணாவை உயிர்ப்பித்ததற்கும் ஒரு காரணம் அவர் தமது ஆஸ்தி பாஸ்திகளைத் தக்கபடி பங்கீடு செய்வதற்கே என ஸ்வாமி சொன்னதாகத் தெரிகிறது. அந்தக் குடும்ப முழுவதும் தம்மிடம் தீவிர பக்தியில் திளைத்ததாகையால் அது ராதாகிருஷ்ணாவின் மறைவுக்குப் பின் சிதறிவிடக்கூடாது என்றே இந்த ஏற்பாடுகள் பூர்த்தியாவதற்காகக்ரேஸ் டைம்கொடுத்தார். உபசாரமல்ல, வாஸ்தவமான க்ரேஸேதான்!

***வாழ்வின் பல அம்சங்களிலும் உதவுகின்ற பாபாவின் கிருபை எப்படி மரணத்திலும் கைகொடுத்துப் பெருவாழ்வு தருகிறது என்பதற்கு நிறையச் சான்று பார்த்து விட்டோம். இன்னம் பலப்பல உண்டு. நமக்குத் தெரியாமலே இவ்வருள் பெற்ற அநேகரும் இருக்கலாம். இவ்வளவு சான்றுகள் காட்டிய பின்னும் புலவர் மொழியில் “விரிவஞ்சி விடுத்தனம்” என்றுகூறி இவ்விஷயத்திற்குத் தலைகட்ட வேண்டியதுதான்!