புட்டபர்த்தி – 29

அத்தியாயம் – 29

சீறிய பாம்பும், வீரியப் பீரும், பீறிய வெள்ளமும்

இடையூறனைத்தும் நீங்கிய இடமும், நன்மனத்தவரின் நவநிதியும், இடையர்களின் இறையவனுமான கண்ணனை வணங்குகிறேன்.

கிருஷ்ண கர்ணாமிருதம் 2.89

ழைய மந்திர அடியாரைப் பாம்பு தீண்டாமல் காத்த பாபாவின் பாதத்தையே அக்காலத்தில் ஒருமுறை அரவம் பதம் பார்த்துவிட்டது. அன்று பாபா பக்தர் கணத்துடன் ஸாஹேப் செறுவு ஏரிக்குச் சென்றார். அங்கேயே சமையல் செய்து அனைவரும் கூட்டாஞ்சோறு உண்டு களித்தார்கள். பகல் போது முழுதும் அட்டகாசம் தான். ஊருக்குத் திரும்புகையில் அந்தி சாய்ந்தது. பாபா முன் செல்ல மற்றோர் பின்தொடர்ந்தனர்.

புதர் ஒன்றிலிருந்து சர சரவென ஒரு சாரை ஊர்ந்து வந்து பாபாவின் வலது காலைச் சுற்றிக் கொண்டது.

பாம்பு, பாம்பு!” என்று எல்லோரும் அலறிக் கொண்டிருக்கையிலேயே அது ஸ்வாமியின் வலக்கால் பெருவிரலில் தன் பற்களைப் புதைத்து விஷத்தைப் பாய்ச்சிவிட்டது.

யாரும் சீண்டாமலே ஒரு நல்ல பாம்பு தீண்டுவது அதிசயந்தான். அதிலும் மக்கள் திரளிடைப் புகுந்து தீண்டுவது அபூர்வத்திலும் அபூர்வமேயாகும். எனவே இந்தப் பாம்புக் கடி நிகழ்ச்சிக்கு நாம் அறியாத மர்மப் பொருள் இருக்குமோ?

காரியம் முடிந்த மகிழ்ச்சியில் விடுவிடுவென அவரது காலைச் சுற்றிய சுற்றை அவிழ்த்துக் கொண்டு ஓடலாயிற்று நாகம்.

ஆலிலைக் கண்ணனாக இருக்கையில் வாயில் எந்தக் கட்டைவிரல் அமுதைப் பாய்ச்சுமோ அதிலே நஞ்சு புகுந்துவிட்டது. ஆனால் அப்போதும் ஸ்வாமியின் நெஞ்சில் அமுதமே சுரந்து கொண்டிருந்தது. பாய்ந்து வந்தோரைத் தடுத்து, “பாம்பை அடிக்க வேண்டாம்!” என்று கூறிய பாபா, “போஎன்று அதற்கு உத்தரவு பிறப்பித்து அதன் ஓட்டத்துக்கு மேலும் வேகம் தந்தார்!

அந்த இடத்திலேயே சோர்ந்து சாய்ந்துவிட்டார். உரவகொண்டாவில் அரவம் தீண்டாமலே வலக்கால் பெரு விரலைப் பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்தவர், இன்று மெய்யாகவே பாம்பின் தீண்டலுக்காளானதற்கு உள்ளர்த்தம் யார் அறிவர்? பாம்பு கடித்து பாபா சாய்ந்ததை நேரில் கண்டதாலும், அன்பு மிகுதியில் என்ன செய்கிறோம் என்று தெரியாததாலும் உடன் வந்தோர் அவரது தெய்விகத்தை மறந்து வைத்தியரையும் மாந்திரிகரையும் தேடி ஓடினர்.

விஷ ஓட்டத்தைத் தடுப்பதற்காக பாபாவின் காலில் ஒரு பக்தர் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தார். அவரை பாபா அரைஸ்மரணையில் பார்த்து, சிறு சிறு சுழிகளாகக் கையை அசைத்தார். ஒரு வஸ்துவை ஸ்ருஷ்டிப்பதென்றால் இப்படித்தான் அவர் செய்வது வழக்கம். இம்மாதிரியே அந்தப் பக்தர் சைகை செய்யவேண்டும் என்று தமது பார்வையால் அவருக்கு உணர்த்தினார்.

அந்த ஆபத்து வேளையில் கூட பக்தருக்கு வேடிக்கையாகத்தான் இருந்தது. வெறும் ஆசாமியானதான் ஸ்வாமி போல் அங்கை அசைப்பதாவது? எனினும் உத்தரவு என்பதால் அவ்விதமே அசைத்தார்.

உடனே அவ்வடியார் தம் உள்ளங்கைக்குள் ஒரு யானை மோதிக் கொண்டு வருவது போன்ற அழுத்தத்தை உணர்ந்தார். மறுவிநாடி அவர் கையில் பளிச்சிட்டது ஒரு தாயத்து!

இதற்குள் பாபாவின் வாயிலிருந்து நுரை தப்பத் தொடங்கியது. அந்நிலையிலும் அவர் முற்றும் உணர்விழக்காமல் தாயத்தைத் தமக்குக் கட்டி, வாய் நுரையையே எடுத்துக் கொட்டுவாயில் பூசச் சமிக்ஞை செய்தார். அடியார் அவ்விதமே செய்தார். உலக ரக்ஷகருக்கு பக்தர் ரக்ஷை சிருஷ்டி செய்து கட்டியிருக்கிறார்!

பாபா நண்பகல் கதிரவனாக ஜீவசக்தியுடன் எழுந்திருந்தார்! விட்டுப்போன அட்டஹாஸம் தொடர்ந்தது!

நான் இந்த ஸாயி தேகத்தில் இருந்து கொண்டு சிருஷ்டிக்கும் ஒரு பொருளை இவ்வுடம்புக்கே பயன் செய்து கொள்வதை சுயநலமாக நினைக்கிறேன். ஆனாலும் அன்று வெறும் சங்கற்பத்தால் குணப்படுத்திக் கொள்ளாமல் தாயத்து விளையாட்டுப் பார்க்கத் தோன்றிற்று. அதனால்தான் இன்னொருவர் கைக்குப் படைப்புச் சக்தி தந்தேன்என்று பிற்காலத்தில் பாபா கூறினார்தன் கையே தனக்கு உதவி’ என்பர்தன் கை பிறருக்கே உதவி என வாழ்பவர் பாபா. அன்று பக்தரைப் பெருமைப்படுத்துவதற்காகப் பிறர் கை கூடத் தமக்கு உதவியாக இருக்க முடியும் என்பது போல நாடகமாடிவிட்டார்.

நாடகம்தான்! தாயத்தைப் பிறகு எடுத்தெறிந்து விட்டார்!

பக்தர்களைக் கொஞ்சம் கதிகலங்க அடிக்கும் நாடகத்தில் அன்று நம் நாயகருக்கு ஆசை வந்துவிட்டது. விஷக்கடிக்கு ஆளானதால் அன்றிரவு அவர் உண்ணக் கூடாது என்றும் உறங்கக்கூடாது என்றும் பக்தர்கள் வற்புறுத்தினர். அவரோ வழக்கத்தை விட அதிகமாக உண்டு, வழக்கத்தை விட அதிக நேரம் உறங்கினார்! (அல்லது அப்படி நடித்தார்.) தினமும் வெந்நீரில் குளிப்பவர், மறுநாள் வேண்டுமென்றே ஒரு கிணற்றில் குதித்து மனம் கொண்ட மட்டும் குளிர்ந்த நீரில் நீச்சலடித்து வந்தார்!

நிச்சயமாக இயற்கையை மீறியவர் தான் அவர். ஆயினும் மனிதரிடமிருந்து ஒரேயடியாக விலகியிருந்துவிடக் கூடாது என்பதால் இயற்கைக்கும் தாமே உட்படுகிறார். இயற்கையாகப் பிறருக்கு ஏற்படக்கூடிய உபாதிகள் தம்மையும் பாதிக்க அநுமதித்து, அவற்றை அற்புதமாகத் தாங்கிக் கொண்டு பொறுமையின் பெருமையை மற்றோருக்குப் பாடம் கற்பிக்கிறார். ஓர் எடுத்துக்காட்டு:

1973ல் பாபா (பெங்களூர்) ஒயிட் ஃபீல்டில் தங்கியிருந்த போது காய்ச்சல் காரணமாகச் சில நாட்கள் தரிசனம் தர வெளிவராமலே இருந்தார். பிறகு தரிசனம் தர வந்த தினத்தில் டாக்டர் கோகக், “ஸ்வாமி, ஜுரம் முற்றும் குணமாகி விட்டதா?” என்று வினவினார்.

ஜுரம் ஒன்றும் பெரிய விஷயமில்லை. உண்மை உபாதியை இதுவரை நான் சொல்லவில்லை. சென்னையிலிருந்து நான் புறப்படுகையில் கார் கதவைச் சாத்தியபோது என் பாதம் அதில் மாட்டிக் கொண்டு நன்றாக நசுங்கிவிட்டது. அது உடன் வந்தவர்களுக்குத் தெரியாமல், கார்ஸ்டார்ட்ஆகிற ஓசையிலேயே நான் கதவை மறுபடித் திறந்து, காலை இழுத்துக் கொண்டு, மூடினேன். அந்த ரணத்துக்காகத்தான் ஜ்வரம் கண்டுவிட்டது. பக்தர்களை ஏமாற்றாமல் தரிசனத்துக்குக்கூடத் தினமும் வெளியே வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் காலைத் தொட்டுத்தொட்டு, வலியை நான் வெளிக்காட்டுமாறு செய்துவிடப் போகிறார்களே என்றுதான் சில நாள் உள்ளேயே இருந்தேன். இந்த நீள கஃப்னியால் எத்தனை ஸௌகரியம் பாருங்கள்! இங்கே கூடவே இருப்பவர்களுக்கும் என் பாதமோ, அது நசுங்கியுள்ள விகாரமோ தெரியவே இல்லை. இதோ பாருங்கள்என்று அங்கியிலிருந்து அம்புஜ பாதத்தை நீட்டினார்.

ஐயோ! கல்லால் அடித்த அம்புஜமாக அது வதங்கியிருக்கிறது. வாதை இவருக்குப் பொருட்டில்லாவிட்டாலும், அதை மற்றவர் அறிந்து மன உபாதைப்படுவதைப் பொருட்டாகக் கொண்டு வெளியில் சொல்லாமலே இருந்திருக்கிறார்!

கோகக்குடன் சென்றிருந்த ஸ்ரீ ப்ரபு ப்ரஸாத், “அது சரி, ஸ்வாமி…” என்ற ஆரம்பிக்கும்போதே பாபா, “புட்டபர்த்தி குரு பூர்ணிமைதானே! அது மற்றவர்களின் கஷ்டத்தைப் பற்றிய விஷயம்என்று குளுமையாகக் கூறினார். பிரபு பிரஸாத் நெக்குருகினார். குரு பூர்ணிமைக்கு இவர் குடும்பத்தோடு பர்த்தி சென்றபோது, இவரது மூன்று வயதுப் பிள்ளையின் கையை வைத்தே யாரோ காரின் கதவைச் சாத்திவிட்டனர். “ஸாயி ராம்!” என்று துடித்துக்கொண்டு கதவைத் திறந்து அக் கையை எடுத்துப் பார்த்தார். சட்னியாகியிருக்க வேண்டிய கை சிறு புண்ணும் படாமல் வள்ளிசாக இருந்தது!

இங்கே பாபாவின் பாதமே துகையுண்டு புண்ணாகியிருக்கிறது! அங்கோ ஆம், அது மற்றவர்களின் கஷ்டத்தைப் பற்றிய விஷயம்!

அதோடுசகிப்பு சகிப்பு என்று சொல்கிற பாபா எதை சகித்துக் கொள்கிறார்? அவருக்கு சக்ரவர்த்தி போல் எல்லாம் சௌகரியமாக நடந்துவிடுகிறது. நம் போல் அவதிப்பட்டால் தானே தெரியும்?” என்கிறவர்களுக்கும் இங்கே பதில் வந்துவிட்டது!

உற்ற நோய் நோன்றல்என்று குறளாசிரியர் தவ லக்ஷணங்களில் ஒன்றாகக் கூறியதை நடத்திக் காட்டிவிட்டார்.

பாபாவின் சரீர தர்மம் நமக்குப் புரியாத ஒன்று. மானுட காயமென்றே எண்ணும்போது அதில் அமாநுஷ்யத் தன்மையைக் காட்டிவிடுவார்என்று முன்னரே கூறியதை நினைவூட்டுகிறோம்.

***

காளியன் நன்னீர்ச்சுனையை நச்சாக்கி, அதன்பக்கமே கோபர்கள் செல்லமுடியாமற் செய்தபோது கண்ணன் காளிய நர்த்தனம் செய்து அவன் மதத்தை மர்த்தனம் செய்து, அந்த இடத்தை மக்கள் வசிக்கத் தக்கதாக்கினான் அல்லவா? பழைய மந்திர நாட்களில் பாபா புரிந்த ஒரு லீலையை இதற்கு ஒப்பிடுவார் அன்பர் ஸ்ரீ பாலபட்டாபிச் செட்டியார்.

விஷயம் இதுதான்: “அந்தப் பக்கமே போவதற்கில்லைஎன்று கோபர்கள் ஓரிடத்தை ஒதுக்கியது போல் பர்த்திக்குப் பக்கலிலும் ஒரு பகுதி இருந்தது. அவ்வழியே எவர் சென்றாலும் மூன்று நாட்களில் அவர் கடுங்காய்ச்சலில் விழுந்து விடுவதாக ஒரு பயம் இருந்தது. எனவே அவ்விடத்தைத் தாண்டிப் போவதானால், நேரே செல்லாமல், சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது.

பாபாவிடம் இதுபற்றி முறையிடப்பட்டவுடன் அவர் சில முஸ்லீம்களை வரவழைத்தார். அவர்களோடு அப்பகுதிக்குச் சென்றார். அங்கே குறிப்பாக ஓரிடத்தைக் காட்டி, “இங்கே பூமியை வெட்டிக் கொண்டே போஎன்று ஒருவரிடம் சொன்னார். ஸ்வாமி கொடுத்த தைரியத்தில், அவர் அந்தச் சாபம் மலிந்த மண்ணிலே இறங்கி அகழத் தொடங்கினார். சிறிது தூரம் உள்ளே சென்றதும் ஓர் அலறல் போட்டார்.

கடப்பாரை அவரது கையோடு கோந்து போட்டாற்போல் ஒட்டிக்கொண்டு விட்டது!

பாலனாயிருக்கையில் உபாத்தியாயரை நாற்காலியோடு ஒட்டியகோந்தைகணத்தில் கரைத்த பிரபு காவாதிருப்பாரா? அவர் கையைத் தொட்டார். உடனே கடப்பாரை விடுபட்டது!

உம், தோண்டுஎன்றார். மறுபடியும் தோண்டியதில் உள்ளேயிருந்து கமகமவென சாம்பிராணிப் புகை வந்தது! “இன்னும் தோண்டுஎன்றார் பாபா. மேலும் அகழ்ந்ததில் பீர்கள் வெளிப்படத் தொடங்கின!

(கெர்பலாவில் இன்னுயிரைப் பலிகொடுத்த ஹாஸன், ஹூஸைன் நினைவாக மொஹரத்தின்போது முஸ்லீம்கள் வழிபடும்கைஉருவங்கள் தாம்பீர்என்பவை.)

இந்தத் தோண்டல் நடந்துமுடிய, பூர்வ சரித்திரத்தை எல்லாம் தோண்டித் துருவக் கூடிய பாபா, “இவை உங்கள் முன்னோர்கள் வழிபட்ட பீர்கள். மிகுந்த சாந்நித்யம் பெற்றவை. பிற்காலத்தவர்கள் இவ்வழிபாட்டை விட்டுவிட்டனர். சக்தி வாய்ந்த பீர்கள் மண்ணுக்குள் மறைந்துவிட்டன. அவற்றின் மீதாக நடக்கும் அபசாரம் காரணமாகவே ஜனங்களுக்குக் கடுங்காய்ச்சல் ஏற்பட்டது. இனி அந்த பயமில்லை. இந்த மொஹரத்திலிருந்து இவற்றின் வழிபாட்டை மறுபடி தொடங்குங்கள்!” என்றார்.

உள்ளே இறங்கியவரிடம், “அதை எடுத்து வாஎன்றார்.

என்ன ஆச்சரியம்! அவர் எத்தனை முயன்றாலும் பீர்கள் அவர் கைக்குப் பிடிபடாமல் சுற்றிச் சுற்றி வந்தன!

பாபாவே உள் இறங்கி அவற்றை எடுத்து வந்தார். “மொஹரத்தின்போது வந்து இவற்றை வாங்கிக்கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சொல்லி, பீர்களைத் தாமே மந்திரத்துக்குக் கொண்டு வந்து வைத்துக்கொண்டார்.

ஷீர்டி அவதாரத்தின்போது மசூதியில் ஹிந்துப் பூஜை நடந்தது. இப்போதோ ஹிந்து மந்திரத்தில் முஸ்லீம் சின்னங்கள் இடம் கொண்டன! இரு அவதாரங்களிலும் ஏதோ ஒரு விதத்தில் ஹிந்துமுஸ்லீம் இணைப்பு காண்கிறது.

மொஹரத்தின்போது முஸ்லீம்கள் வந்தனர்.

பாபாவும் பீரைக் கொடுத்தனுப்பினார்.

ஆனால் பீர்கள் அவரை விட்டுப் போனால்தானே? ஜட வஸ்துக்களாகத் தோன்றும் அந்தக் கைகளுக்குக்கூட ஐயனிடம் எல்லையில்லாப் பிரேமை! அவற்றை எடுத்துச் சென்றவர் மந்திரத்தின் வாசல் வரைதான் போகமுடியும். புயலில் ஆடும் கிளையாக ஆடி ஓடி வந்து திரும்பவும் பாபாவிடமே விழுவார். பாபா அவரைப் போகச் சொல்வார். அவரும் கிளம்புவார். வாசலுக்கு வந்ததும் பழைய கதைதான். இப்படிப் பல முறை ஆட்டம் பார்த்தபின், பாபா அந்தப் பீர்களை அன்போடு தடவிக்கொடுத்துபங்காரு! போம்மா, போம்மா!” என்று செல்லமாகச் சொன்னார். கரஸ்பரிசம் பெற்ற கரங்கள் சமர்த்தாக அந்த முஸ்லீம்களுடன் சென்றன.

மொஹரத்துக்கு மட்டும் இவற்றை வாங்கிச் சென்று வழிபட்டுவிட்டு பாபாவிடமே திருப்பிவிடும் வழக்கத்தை அந்த ஆண்டிலிருந்து அவர்கள் மாமூலாகப் பின்பற்றலாயினர்.

ஜனப் புழக்கத்துக்கே பயனற்றிருந்த பகுதியில் நிம்மதியான நடமாட்டம் தொடங்கிற்று.

***

பா மந்திரத் திருவிளையாடல்களில் எத்தனை அலையாடினாலும் நமக்குத் திருப்தி வராதுதான். இச்சரிதையில்ஸாம்பிள்காட்டுவதற்கு மேல் செய்வதற்கில்லை. முக்கியமான லீலை இன்னொன்று.

1947ம் ஆண்டு, ஒருநாள் பிற்பகல் தமது சிறிய அறைக்குள் புகுந்த பாபா மாலை மணி ஏழாகியும் வெளிவராதது பக்தருக்கு வியப்பாக இருந்தது. ஏழு மணிக்கு வந்தார். வெகு சுருக்கமாக பஜனை முடித்தார். “இன்று சித்ராவதியில் பெரிய வெள்ளம் வரப் போகிறதுஎன்று சொல்லிவிட்டு மறுபடி அறைக்குள்ளே சென்றுவிட்டார். அப்போது ஆசிரமத்தில் பத்து, பன்னிரண்டு பேர்தான் தங்கியிருந்தனர்.

வெள்ளத்துக்கான அறிகுறியே இதுவரை ஆற்றில் இல்லை. இங்கே மழையும் இல்லை. ஒருவேளை நதி உற்பத்தியாகும் நந்தி மலையிலோ, வரும் வழியிலோ பெருமழையோ? எதுவானாலும் சரி, பகவான் இங்கே இருக்கிறார். நாமும் அவரோடு இருந்து விடுவோம்என அவர்கள் தீர்மானித்தார்கள். உண்டார்கள். படுக்கையை எடுத்துக் கொண்டார்கள். வெளியிலுள்ள தகர ஷெட்டுக்குப்போய் அயர்ந்து உறங்கியும் விட்டார்கள்.

பாபா அன்றிரவு தமதறையை விட்டு வெளிவரவேயில்லை. இது ஒரு விசித்ரம்தான்.

இரவு மணி மூன்று. தங்கள் படுக்கை நனைவதை உணர்ந்து பக்தர்கள் விழித்தார்கள்.

வெள்ளம் வந்தே விட்டது! வெளியே சாலையில்ஹோவென்று சித்ராவதி ஓடுகிறாள். இங்கே மந்திரத்துள்ளும் புகுந்துஷெட்வரை எட்டி, மேலும் எழும்பி எழும்பிப் பார்க்கிறாள். எல்லோரும் ஸ்வாமி இருந்த மந்திர ஹாலுக்கே ஓடினார்கள். மெல்ல மெல்ல அங்கும் பிரவாஹம் ஏறி வந்து முழங்கால் அளவில் நின்றது.

புட்டபர்த்தியில் ஒரு தூறல் கூட விழாவிட்டாலும், பெரு வெள்ளம் வந்தேவிட்டது.

பாபாவின் அறைக்கதவு திறந்தது. அவர் அமைதி வெள்ளமாகக் கட்டிலில் அமர்ந்திருந்தார்! அந்தக் கட்டில் விளிம்பை எட்டிப் பிடிக்கப் பார்த்துத் தோற்றுத் தோற்றுப் போகிறாள் சீற்றம் கொண்ட சித்ராவதி. பக்தர்கள் இதுதான் காப்பிடம் என்று அங்கேயே இருந்து விடுகிறார்கள். பின்னிரவிலிருந்து முற்பகல் பத்து மணிவரை சித்ராவதித் தண்ணீருக்குள்ளேயே நின்றபடி அவர்கள் பட்ட சித்திர அவதி!

பாபா கட்டிலிலிருந்து இறங்கினார். நீரில் அளைந்து கொண்டே மந்திரத்திலிருந்து கிளம்பினார். மார்பளவு நீரில் நடந்து வாசல் கேட் வரை சென்றுவிட்டார். பதைப்புடன் பக்தரும் பின்தொடர்ந்தனர். ‘சாலையில் ஆளை முழுக்கும் ஆழத்தோடல்லவா பிரவாகம் ஓடுகிறது! ஸ்வாமி பாட்டுக்குப் போகிறாரே! ஆனால் அவருக்கா தெரியாது?’

நவராத்ரியின்போது சுமங்கலிப் பெண்கள் பாபாவைப் பராசக்தியாக வைத்து அர்ச்சனை செய்த குங்குமத்தில் விநியோகித்தது போக மீதம் பஜனை மன்றத்தில் மேலே மூட்டையாகக் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. அதை எடுத்து வருமாறு பணித்தார் பாபா. குங்குமம் கொண்டு வரப்பட்டதும் அதை இரு கைகளாலும் வாரி வாரி, வாரிதியாகப் பெருகும் வெள்ளத்தில் வீசினார். என்ன அதிசயம்! அது வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகாமல் நீர்ப்பரப்பின் மீதே ரத்ன கம்பளம் போல் அமைந்தது! ஸ்வாமி விடுவிடுவென்று மேலே நடக்கலானார்.

இவர் ஒவ்வொரு அடி வைக்கவும் வெள்ளமும் குறைந்து இவரது மார்பளவோடேயே நின்றது! அடியாரும் உடன் சென்றனர். இன்றைய பிரசாந்தி நிலயம் கட்டப்படத் தொடங்கிய மேட்டுப் பாங்கான நிலத்தை அனைவரும் அடைந்தனர். “அப்பாடாஎனப் பெருமூச்சு விட்டனர்.

கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடமிருந்து இரண்டு அண்டாக்கள் வாங்கிவரச் செய்தார் பாபா. இரண்டினுள்ளும் தமது திருக்கரத்தை விட்டு எடுத்தார். ஒன்றிலிருந்துகம்மென்று சுடச்சுட வடித்த அன்னத்தின் மணம் வீசிற்று. மற்றதிலிருந்துஜம்மென ரசத்தின் மணம் எழுந்தது. ஓர் அண்டா சாதம், ஓர் அண்டா ரஸம்!

அண்டங்களைக் காப்பவன் அருளில் அன்று அடியார், நீரில் அளைந்த ஓதத்துக்கும் சீதத்துக்கும் ஒளஷதமாக, அந்த ரசஞ்சோற்றை வயிறார உண்டனர்.

மெள்ள மெள்ள வெள்ளம் வடிந்தது. அனைவரும் பாத மந்திரத்துக்குத் திரும்பினர்.

குழந்தைக் கண்ணனுக்காக யமுனை வெள்ளம் அடங்கி நடந்தது. இயேசுநாதன் வெள்ளத்தின் மீதே நடந்தார். கிருஷ்ணனாகவும் கிறிஸ்துவாகவும் பல அடியார் உணரும் நம் ஸாயி பகவானுக்கும் வெள்ளம், மழை ஆகியன அடிபணிந்த அற்புதம் பன்முறை நடந்திருக்கிறது.

மேற்சொன்ன நிகழ்ச்சியை ஆதியோடந்தம் கூறும் ஸ்ரீ பால பட்டாபிக்கு மட்டும் பிரத்யேகமான ஒரு வெள்ள அநுபவம் உண்டு. இவரை ஸம்ஸாரப் பிரவாஹத்திலிருந்தே பாபா காத்தருளிச் செய்த பல லீலைகளில் இதுவும் ஒன்று. எத்தனையோ மெய்யடியார்களைக் கண்ணை இரப்பை காப்பதுபோல் பாபா அனவரதமும் காத்து வருகிறார் என்பதற்குஸாம்பிளாக பாலபட்டாபியின் அனுபவங்களை இனி பார்ப்போம். கரும்பு சர்க்கரையாக வேண்டுமானால் கசக்கிப் பிழிய வேண்டும்; தங்கம் நகையாக வேண்டுமானால் உருக்கி அடிக்க வேண்டும். இப்படியே ஜீவனைக் கசக்கி, உருக்கிக் கர்மாவைத் தீர்க்கும் போதே கூடக்கூட இருந்து கருணைக் காப்பும் தந்து கைதூக்கி விடுகிறார் நம் ஸ்வாமி என்பதற்கு இவ்வடியாரின் அனுபவம் அற்புதச் சான்று.

அக்கருணைப் பிரவாகத்தைப் பற்றி அறியுமுன், பின்னாண்டுகளில் பாபா தடுத்து நிறுத்திய ஒரு பிரவாகத்தைப் பார்த்து விடுவோம்.

1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ந் தேதி. தென்மேற்குப் பருவக்காற்று மழை சக்கை போடு போடுகிறது. புட்டபர்த்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆறு ஏரிகளும் உடைப்பெடுத்து விட்டன. சித்ராவதி ஆறும் கரைமீறிப் புட்டபர்த்தி கிராமத்துள் பிரவேசிக்கலாயிற்று.

மள மளவென்று நீர்மட்டம் ஏறி வந்தது. பாத மந்திரத்துக்குள் ஆறடி நீர் தேங்கி விட்டது! எங்கு பார்த்தாலும் நீர்ப்பாம்புகள் நீந்துகின்றன. பாத மந்திர மேடை மீது மேஜைகளைப் போட்டுக் கொண்டு அவற்றின் மீது ஏறி அமர்ந்தவர்களையும் பாம்புப் படை அச்சுறுத்த வந்து விட்டது.

மேட்டு நிலத்திலுள்ள பிரசாந்தி நிலயத்திலும் பிரவாஹம் புகுந்து அங்குள்ள ஸ்டேட் பாங்க் கட்டிடம் மூன்றரை அடி நீரில் முழுகும் அளவுக்கு ஆகிவிட்டது.

கிராமத்தில் நூறு வீடுகளுக்கு மேல் அடித்துச் செல்லப்பட்டன. மின்சார, பம்புநீர் இணைப்புகள் துண்டித்துப்போயின.

கலி பாபத்துக்கு இன்னும் தண்டனை தரத்தான் வேண்டும் எனினும், போதும் எனக் காருண்யன் எண்ணினான் போலும்.

முற்பகல் பதினோரு மணிக்கு பாபா மெதுவாககிழக்குப் பிரசாந்திஎன்ற மூன்றடுக்கு மாளிகையின் மொட்டை மாடிக்கு ஏறினார். எவ்வித உணர்ச்சியையும் பிரதிபலிக்காத தெளிந்த விரி நயனங்களால் வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார்.

நாம் இதய பூர்வமாக இன்றியே வெளியில் உணர்ச்சிகளைக் கொட்டுகிறோம். உணர்ச்சிகளைக் காட்டாத ஸ்வாமியின் திரு இதயத்திலோ கருணைப் பிரவாஹம் சித்ராவதி வெள்ளத்திலும் பெரிதாக அலை எறிந்திருக்க வேண்டும்.

அவரது வலக்கை உயர்ந்தது. மக்களுக்கு அபயமூட்டவா? ஆமாம். அதே சமயத்தில் ஜல தேவதைக்குப் பயமூட்டவும் தான்! ஆம், இதுகாறும் பக்தர் கண்டிராத அதிகார விரட்டலான அபிநயத்திலே அந்தக் கை வெள்ளத்திடம் கட்டளைச் சமிக்ஞை காட்டியது. “இடது கரையிலிருந்து திசை திரும்பி வலத்தே ஓடி புக்கப்பட்டணம் ஏரிக்குப் போஎன்று ஜாடையில் ஆக்ஞையிட்டது.

என்ன விந்தை! உடனே பெரும் பிரவாகம் சுழித்துச் சுழித்துக் கொண்டு தன் திசையை மாற்றிக் கொள்ளலாயிற்று! ஊரை நாசப்படுவதை விடுத்து. வயலும் வெற்றுத் திடலுமான வலது கரைப்பக்கமாக வெள்ளம் நகர்ந்து நகர்ந்து சென்ற அற்புதத்தை பர்த்திவாசிகள் நிதரிசனமாகக் கண்டனர். அப்பாடா! கூண்டோடு, பூண்டோடு அடித்துக்கொண்டு போயிருக்க வேண்டிய பல கிராமங்கள், ஸ்வாமியின் விரலசைப்பிலே மீண்டன!

அடுத்துவந்த கோகுலாஷ்டமியன்று பிரசாந்தி நிலயப் பொதுக்கூட்டத்தில், ஸ்ரீ கஸ்தூரி அவர்கள் ஸத்யஸ்வரூபியான ஸ்வாமி முன்னரே இந்நிகழ்ச்சியை விளக்கினார். மிகையாக ஏதேனும் சொன்னால் உடனே கண்டிக்கும் பாபா இதைத் தலையாட்டி ஆமோதித்ததோடு, அன்று தாம் எப்படிக் கையசைத்து வெள்ளத்தை விரட்டினாரோ அதே அபிநயத்தை இன்றும் செய்து காட்டினார். கள்ளமற்ற பசுங்குழந்தையின் சைகையாக!“கோவர்த்தன கிரியைத் தூக்கி இந்திரனின் செருக்கறுத்த சேவகனின் ஜன்ம தினத்தை இன்று எவர்முன் கொண்டாடுகிறோமோ, அந்த – இந்த நவயுகக் கண்ணனிடம் மீளவும் இந்திரன் பரிபவம் அடைந்தான்” என்று அழகாக முடித்தார் ஸ்ரீ கஸ்தூரி