அத்தியாயம் – 28
“பாத மந்திரம்”
மாக க்ருஷ்ண சதுர்தச்யாம் ஆதிதேவோ மஹாநிசி
சிவலிங்கததோ (உ)த்பூத: கோடிஸீர்ய ஸமப்ரப:
(மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசிப் பேரிரவில் ஆதிதேவன் கோடி சூரிய ஒளியுடன் சிவலிங்க உருவத்தில் உற்பவித்தனன்.)
ஈசான ஸம்ஹிதை
புட்டபர்த்தியில் பாபாவுக்கும், அவரைத் தரிசிக்க வரும் அடியாருக்கும் ஸௌகரியமாக ஓர் ஆச்ரமம் அமைக்கும் பொறுப்பை ஏற்றார் ஸ்ரீ திருமல் ராவ். தாம் பாபாவிடம் பெற்ற பேரநுக்கிரஹத்துக்கு நன்றிக் காணிக்கையாக அவருக்கு கிருஹம் எழுப்ப முனைந்தார்.
இல்லறத்தார் வாழுமிடம் கிருஹம்; துறவியர் வாழ்வது ஆச்ரமம். உலகக் குடும்பம் முழுதையும் பாசப்பற்று இல்லாமலே பரிபாலிக்கும் பாபாவோ வர்ணாசிரம விதிப்படி கிருஹஸ்தரும் அல்ல, ஸந்நியாஸியுமல்ல. அதனால் அவரது இருக்கையை கிருஹம் என்பதும் சரியல்ல; ஆச்ரமம் என்பதுங்கூட ‘டெக்னிக’லாகச் சரியல்ல. ஆச்ரமவாசிகளான “ஸ்வாமிஜி”களுக்கு மேம்பட்ட ஸ்வாமியே இவர் எனக்கொண்டு அடியார் அவரது வாஸஸ்தானத்தை மந்திரம் (கோயில்) என்பர். இன்றும் ‘பிரசாந்தி நிலயம்’ என்ற பொதுப் பெயரில் அமைந்த டவுன்ஷிப்பில் அவரது இருக்கையைப் பிரசாந்தி மந்திரம்’ என்றே சொல்கிறோம்.
இதற்குமுன் அவர் வதிந்தது ‘பாத (paata) மந்திரம்’ எனப்படுகிறது. ‘பழைய கோயில்’ என்று அர்த்தம். பலரது பாதகம் தீர்த்த பாத மந்திரத்தைத் திருமல் ராவ் எழுப்பிய காரணம் இதுதான்:
பெங்களூரில் அவர் கட்டிட கான்ட்ராக்டராக இருந்தார். அவரது அருமை மகன் நோய்வாய்ப்பட்டான். ஆஸ்பத்திரியில் சேர்த்தார். வியாதி முற்றியது. ஓரிரவு டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். ராவ் ஷீர்டி பக்தர். பர்த்தி பற்றிக் கேள்வியே படாதவர். பூஜை அறைக்குச் சென்று இரவு முழுவதும் ஷீர்டி பதியிடம் நெஞ்சு கரைந்து வேண்டிக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலையில் பாபா படத்துக்கு அர்ச்சித்திருந்த மலர்களிடையே ஒரு சிறு படம் தென்படவே, அதிசயமுற்று அதை எடுத்துப் பார்த்தார். அதில் மேற்பாதியில் ஷீர்டி பாபாவின் மார்பளவு உருவமும், கீழே சிலிர்த்த முடியோடு ஓர் இளைஞரின் திருமுகமும் காணப்பட்டது. தம் இஷ்டமூர்த்தியின் இன்னருள் என்பதற்கு அதிகமாக ராவுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆஸ்பத்திரிக்கு ஓடினார். மகன் கண்டத்திலிருந்து தப்பிவிட்டிருந்தான்! வைத்தியர்கள் “அற்புத நோய் நிவாரணம் (miracle cure)” என்றனர். பையன் பூரணமாக நல்லபடியாகிச் சிலநாட்களில் வீட்டுக்கு அழைத்து வந்தார் ராவ்.
சிலிர்த்த முடி இளைஞரைப் பற்றியும் தெரிய வந்தது. ‘பாபாவின் மறு அவதாரம்’ என்று கேட்ட மாத்திரத்தில் ராவுக்கும் அகம் சிலிர்த்தது. பிள்ளையோடு கூடப் பர்த்தி வந்தார்.
பர்த்தி நாதன், இவரது மகனுக்கு ஏற்பட்ட ஆபத்தான நிலைமை, அதைத் தாம் குணம் செய்தது எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லி, அர்ச்சனை மலரிடை தாம் ‘வைத்து வந்த’ படத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்! புத்திர சோகம் நேராது தம்மைக் காத்த கருணாமூர்த்தியின் அடிமையாகிவிட்டார் ராவ். அவரிடம் வேண்டிச் சம்மதம் பெற்று அவருக்கு ஆசிரமம் (அல்லது ஆலயம்) எடுக்கத் தலைப்பட்டார்.
(ஆனால் அப்போதே பாபா இது தம் நிரந்தர இருக்கையல்ல என்று ஒரு சில அணுக்கத் தொண்டருக்கு உணர்த்தியிருக்கிறார்! உதாரணமாக, 25ம் அத்தியாயத்தில் நாம் கண்டுள்ள லக்ஷ்மையா படம் ஒரு நாள் இன்று பிரசாந்தி நிலயமுள்ள மேட்டு நிலத்தைக் காட்டி, “ஸாயிப் பிரவேசம் அந்த இடத்தைப் பிரசாந்திப் பிரதேசமாக்கப் போகிறது. அங்கே மாடமாளிகை எழும்பும். அப்போது ஆயிரக்கணக்கில், அகில பாரதத்திலிருந்து, அகில உலகத்திலிருந்துமே பக்தர் வந்து காத்திருப்பார்கள். இப்போது என்னோடு அணுகிக் கூத்தடிக்கிற நீ அப்போது ஒரு கண நேரம் தரிசனம் கிடைக்காதா என்று எட்டாத் தொலைவில் நின்று தவிக்கப் போகிறாய்!” என்றார். இதை முப்பதாண்டுக்குப் பின் நினைவுகூர்ந்த லக்ஷ்மையா, “அப்போது அதை நான் நம்பத்தான் இல்லை. ஆனால், ஐயோ, இப்போது அது மெய்யாகி விட்டதே!” என்று ஏங்கினார்.)
ஸத்ய பாமா ஆலயத்தின் அண்மையில் கர்ணத்துக்குச் சொந்தமான மனைக்கட்டு வாங்கப்பட்டது. கடைகால் எடுப்பதற்காகத் தோண்டினார்கள். கூனல் முதுகனான கூனி வேங்கடா என்பவனிடம் பாபா ஒரு குறிப்பிட்ட இடத்தில் அகழச் சொன்னார். அவன் அப்படியே செய்ய, என்ன ஆச்சரியம்! அங்கே குவியல் குவியலாகச் சிவலிங்கத்தைச் சொருகும் ஆவுடையார்கள் அகப்பட்டன. லிங்கமே இல்லாத வெறும் ஆவுடையார்கள்!
“ஏன் ஸ்வாமி, லிங்கங்களைக் காணோம்?” என்று அடியார் கேட்டபோது, பாபா தம் உதரத்தைத் தொட்டு, “இங்கே இருக்கின்றன” என்றார்.
அவர்களுக்குப் பொருள் புரியவில்லை. சிறிது காலத்துக்குப் பின் சிவராத்ரியின் போது உள்ளர்த்தம் அவிழ்ந்தது.
***
மஹா சிவராத்ரி நன்னாள். மஹோத்ஸவமாக மக்கள் கூடியிருக்கின்றனர். மஹா உத்ஸாஹமாக உபதேசமும், கீதமும் வழங்கிய ஸ்வாமி திடீரென வயிற்றைப் பிடித்துக் கொண்டார். பேற்று நோவு போல் அவர் தவிப்பது தெரிந்தது. அமர்ந்தார், கனைத்தார். நீர் வாங்கிப் பருகினார். இருமினார். பொருமினார். வாயைத் திறந்தார். ஆஹா, அது என்ன? அவர் வாயிலிருந்து பளிச்சிட்டுக் கொண்டு வெளிவரும் வஸ்து! அதை அவர் கையில் பிடித்துப் பக்தர்களுக்குத் தூக்கிக் காட்டினார்!
ஆஹா, ஸ்படிக லிங்கம்!
இந்த லிங்கத்தை ஊர்த்வமுகமாகப் பிரஸவிப்பதற்காகத்தான் அந்தப் பாடுபட்டிருக்கிறார்.
‘எல்லிப்ஸ்’ என்று ஸயன்ஸ் கூறும் நீள்வட்ட வடிவான பிரபஞ்சத்தைப் படைத்த பரம்பொருள் தனக்கும் அதே போல் வடிவம் வகுத்துக் கொண்டு லிங்கமாக உற்பவித்தது ஒரு சிவராத்ரியில் தான். எனவே இந்த லிங்க ரூபத்துக்கே பிரபஞ்ச ஆதாரமான சாந்தத்தில் பக்தர்களைத் திருப்பும் மர்மமான வல்லமை இருக்கிறது. ஆதியில் இப்படிப் பரம்பொருள் லிங்காகாரம் கொண்ட அதே சிவராத்ரி நன்னாளில் பர்த்தீசர் லிங்கோத்பவம் செய்துவிட்டார். உத்ஸவம் காண வந்தவர்கள் எதிர்பாராத உத்பவம்.
***
அந்த ஓராண்டு மட்டுமல்ல. அதிலிருந்து ஒவ்வொரு சிவராத்ரியன்றும் பாபா லிங்கோத்பவம் செய்யலானர்.1
ஒரே சிவராத்ரியில் ஒன்றுக்கு மேற்பட்ட லிங்கங்கள் வெளியாவதும் உண்டு. ஒருமுறை ஐந்து லிங்கங்கள் வெளிவந்தன. 1958ல் ஒன்பது லிங்கங்கள் கடகடவென வந்து விழுந்தன. ஸ்படிகத்தில் மட்டுமின்றி, தங்கம், வெள்ளி, மாணிக்கம், மரகதம் முதலியவற்றிலும் இந்த லிங்கங்கள் இருப்பதுண்டு. ஒருகாலும் வாய்க்குள்ளோ, கைக்குள்ளோ அடக்கி வைக்க முடியாத அளவுக்கு சுமார் ஐந்தங்குல நீளமும், இரண்டங்குல விட்டமுமாக இருந்த லிங்கங்களுமுண்டு. சில சமயங்களில் அடிப்பீடங்கள்கூட இருந்திருக்கின்றன! இவை எப்படி உணவுக் குழலின் குறுக்களவு வழியே வருகின்றன என்பது எவருமே விளக்க முடியாத விந்தைதான். முதலில், இவை ஒரு சரீரத்துக்குள் உருவாவதே அற்புதம்தானே?
பாத மந்திரத்துக்குக் கடைகாலிட்டபோதே அவ்வளவு லிங்கங்களும் தம் வயிற்றிலிருப்பதாக அவர் சொன்னாலும் அவை அப்போது ஸூக்ஷ்ம ரூபத்தில்தான் இருந்திருக்கின்றன. ஒவ்வோராண்டும் சிவராத்ரிக்குச் சில தினங்கள் முன்புதான் ஸ்தூல லிங்கம் அவரது மணி வயிற்றில் தோன்றத் தொடங்குகிறது. உடனே வைத்தியரை வரவழைத்து டெம்பரேச்சர் பார்க்கச் சொல்வார். 103 அல்லது 104 டிகிரி இருக்கும். ஆனாலும் அவரைப் பார்த்தால் காய்ச்சல்காரர் போலவேயிராது. தம் பாட்டில் ஓடியாடிக் கொண்டு இருப்பார்! மருந்து எதுவும் உண்ணவும் மாட்டார். கடைசியில், சிவராத்ரியன்று லிங்கம் உருட்டிப் புரட்டிக்கொண்டு வெளியாகும்போது மட்டில் அவஸ்தைப் படத்தான் செய்கிறார் என்பது நிதர்சனம். அந்த அவஸ்தையின் போதும், அதைக்கண்டு துடிக்கும் அடியார்களைத் தேற்றுவதற்காகச் சிரிக்கப் பார்ப்பார் தயாளு! லிங்கோத்பவத்துக்குப் பிறகு, துடிக்கும் பக்தருக்கு ‘நஷ்ட ஈடு’ கொடுத்து மகிழச் செய்யும் அளவுக்கு அதிமலர்ச்சியான ஆனந்த ஸாயியாக தரிசனம் அருள்வார்.
2 1976லிருந்து சிவராத்ரிப் பொதுவிழாவில் ஸ்வாமி லிங்கோத்பவம் செய்வது நின்றுவிட்டது. ஆயினும் இப்போதுங்கூட அன்று பொதுவில் இல்லாமல் காந்தத்தில் அவர் தம்முள்ளிருந்து லிங்கம் கொண்டுவருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. உத்பவ அதிசயம் காணவே மற்ற விழாக்களை விட சிவராத்திரிக்கு பெரும் கூட்டம் ஆண்டுக்காண்டு பெருகிக் கொண்டு போயிற்று. மாசி மாதக் கடுங்குளிரில் நானா திசைகளிலிருந்து அடியார் வருவதில் ஐயன் இரக்க உருக்கம் கொண்டே பொது ஸ்தல உற்பவத்தை நிறுத்தி விட்டார் எனக் கருதப்படுகிறது.
பாபா தம்மிடமிருந்தே தன்மயமானவையாகக் கக்கும் இந்த லிங்கங்களை ‘ஆத்ம லிங்கம்’ என்பர். பரம பக்தர் சிலர் இவற்றை பாபாவின் கொடையாகப் பெற்றுள்ளனர்.
சாதாரணமாக பாபா சிருஷ்டித்துத் தரும் தெய்வப் பிரதிமைகளைப் பூஜிப்பதற்குக் கடுமையான ஆசார நியதிகள் விதிக்கப் படுவதில்லை. “இதென்ன? இவர்கள் ஏதோ ‘ஷோ பீஸ்’ போல இப்புனிதச் சின்னங்களை வைத்திருக்கிறார்களே!” என்று நாம் நினைக்கும்படியாகக்கூட இருக்கும். இது பாபாவின் மாதுர்ய ஸௌலப்யத்துக்கு ஒரு சான்றேயாகும்.
ஆயினும் விச்வத்தின் பிரதி ரூபகமாக அவரினின்றெழும்பும் சிவராத்ரி லிங்கங்களில் சில மட்டும் தனியானதொரு வீர்யம் பொருந்தியன போலும். இவற்றிடம் எவரும் விளையாட்டுப் போக்காக நடந்து கொள்ள முடியாது. உதாரணம்:
1972ல் பாபா உத்பவ லிங்கத்தை அனைவரும் தரிசித்துச் செல்லுமாறு வைத்து. அதன் பரம பவித்ரத்வத்தைச் சொல்லி, எவரும் அதைத் தீண்டவொண்ணாது என்றார். பிறகு தமதறைக்குச் சென்றுவிட்டார். பக்தர் லிங்கத்தைத் தொட்டு ஒற்றிக் கொள்ளாமல், சற்று எட்டத்தில் தரிசித்தே சென்றனர்.
சிவராத்ரிக்கு மறுநாட் காலை அதை பாபா வைத்திருந்த தாம்பாளத்தோடேயே அவரிடம் எடுத்துப் போக வேண்டிய வைதிகருக்கு ஏனோ அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற சபலம் உண்டாகிவிட்டது. (பாபா வாக்கின் உண்மை உலகுக்குத் தெரியவே அந்தச் சபலம் உண்டாயிற்று எனலாம்!) அவர் லிங்கத்தை லேசாக ஸ்பர்சித்தாரோ இல்லையோ, அது மாயமாக மறைந்துவிட்டது!
அவருக்கு எப்படிப்பட்ட உதறல் எடுத்திருக்கும் என்பதை வாசகரே ஊகித்துக் கொள்ளலாம். ஸ்வாமியிடம் ஒளிக்க முடியாதாகையால், சாஸ்திரியார் நடுநடுங்கிக் கொண்டு நின்றார்.
இவரை அழைத்து வர ஸ்வாமியிடமிருந்து ஆள் வந்தவுடன் சாஸ்திரியாரின் உதறல் உச்ச கட்டத்தை அடைந்தது.
குற்றவாளியாகச் சென்று சந்நிதானத்தில் நின்றார்.
அவரை அநாயாஸமாக மன்னித்த கருணாநிதி, “என் காலடியில் பார்! லிங்கம் ‘கம்ப்ளெயின்ட்’ கொடுக்க வந்திருக்கிறது” என்று காட்டினார்.
ஆம், மாயமே மறைந்த லிங்கம் பாபாவின் பட்டு வேஷ்டியில் மறைந்த பட்டுப் பாதங்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது!
இதனினும் கதைச் சுவை மிக்கதொரு லிங்க லீலை:
மண் – பொன் ஆசைகள் உதவா என்னும் அதே சாஸ்திரங்கள் ப்ருதிவி லிங்கத்தையும் ஸ்வர்ண லிங்கத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றன. மண்ணிலும் பொன்னிலும் மஹாதேவன் பொலியும் போது அவை பாவன பாவனமாகிவிடுவதால்! இது ப்ருதிவியிடம் முடிவாக ஸ்வர்ண லிங்கம் சேர்ந்த விசித்ரக் கதை.
முடிவாக’ என்றால்? முதலில் ப்ருத்விக்குக் கிடைத்தது வேறொரு வகை லிங்கம். அப்புறம் அதனிடத்திலேயே ஸ்வாமி சொர்ண லிங்கத்தை மாற்றிக் கொடுத்தார். “ரொம்ப மிஸ்டீரியஸாக” மாற்றினார் என்பார் லிங்கத்தைப் பெற்றுக் கொண்ட ப்ருதிவி என்ற சீமாட்டி.
ஜீந்த் மஹாராணியான ப்ருதிவி அம்மாளே இந்த மிஸ்டரி ஸ்டோரி கூறக் கேட்போம்:
“(முதல்) லிங்கத்தை நான் 1967 மார்ச் 11ந்தேதி பெற்றேன். நான் பாபாவிடம் முதன் முறை சென்றதே அவ்வாண்டு பிப்ரவரி 15ல்தான். எனவே (இவ்வளவு விரைவில்) இப்பெரும் ஆனந்தத்தை, கிருபையைப் பெற்றது எனக்கு மிகவும் புதியதொரு அநுபவமாயிருந்தது.”
“அந்த 1967 சிவராத்ரியின் போது பாபா இரண்டு லிங்கங்களை உற்பவித்தார். இரண்டும் தங்க ரேகை ஓடிய தேன் வர்ண லிங்கங்கள். அவற்றிலொன்றே எனக்கு அவர் ஈந்தது.”
“எப்படிப் பூஜிப்பது என அவரைக் கேட்டேன். எளிய விதிகளாகவே எடுத்துக் கூறினார். அப்படியே மனப்பூர்வமாகச் செய்து வரலானேன்.”
“காலம் ஓடிற்று. நல்ல காலம், கெட்ட காலம் இரண்டையும் காட்டி வாழ்க்கை எனக்குப் படிப்பினை கொடுத்தது.”
“மூன்று மாதத்திற்கொருமுறை பாபாவிடம் செல்வேன். ஒவ்வொரு முறையும் என் வாழ்வில் அங்கமாகிக் கொண்டுவந்த ஒரு துயரக் கொடுமையை அவரிடம் தெரிவிக்கும்படி இருந்தது.”
“1968ல் பிப்ரவரி 26-ந்தேதி, திங்கட்கிழமை, சிவராத்ரி நிகழ்ந்தது. வெள்ளை நிற லிங்கங்கள் இரண்டினை பாபா வெளிக்கொணர்ந்தார். 28ந்தேதி டில்லி சென்றேன். ஆனால் மீண்டும் ஒரு துயரக் கொடுமை நிகழ்ந்ததில் ஒரே வாரத்துக்குள் புட்டபர்த்தி திரும்பினேன்.”
“மார்ச் மூன்றாந் தேதி நான் உள்பட நான்கு பெண்மணிகளை பாபா பேட்டிக்கழைத்தார். இதன்போதுதான் அவர் மிகவும் மர்மமாக (ரொம்ப மிஸ்டீரியஸாக) லிங்கத்தை மாற்றியது.”
“ஷிஃபான் கைக்குட்டை ஒன்றில் லிங்கத்தைச் சுற்றிச் சிறிய சிவப்புக் கைப் பைக்குள் எப்போதும் உடன் வைத்திருப்பேன். பயண காலங்களிலும் அது என் கையிலேயே இருக்கும்.”
பேட்டியின் போது பாபா அந்த லிங்கம் பற்றியே பேசினார். என்ன காரணமோ, அவருக்கே தெரியும்!
“லிங்கத்தை நான் ஓர் ஆலயத்திற்குக் கொடுத்துவிட வேண்டும் என்பதே தமது விருப்பம்” என்றார்.
“அதைப் பிரிவது என்ற எண்ணம் எனக்கு மகா துக்கமாயிருந்தது. அதற்குப் பதில் வேறொரு லிங்கம் தருவதாக பாபா சொல்லியும் துக்கமாகவே இருந்தது. ஏகமாக வாதம் செய்யலானேன்.”
“பாபா என் தலையைத் தொட்டார். மிகவும் கனமாக உணர்ந்தேன். ‘துஷ்டியாக (மகிழ்ச்சியாக) இரு, புஷ்டியாக இரு’ என்றார்.
“திடுமென என் கையிலுள்ள சிறு சிவப்புப் பை கனப்பதை உணர்ந்தேன். அதைத் திறந்தேன். ஷிஃபான் கைக்குட்டையை அவிழ்த்தேன். தேன் வர்ண லிங்கத்திற்குப் பதில் ஸ்வர்ண வர்ண லிங்கமொன்று இடமாற்றம் பெற்றிருக்கக் கண்டேன்!”
“பாபா தொட்டது என் தலையை மட்டுந்தான். லிங்கப் பையோ அத்தனை நேரமும் இருந்தது என் கையில்!”
(பழைய லிங்கம் மறைந்ததில்) நான் மிகவும் துக்கமடைந்தேன்.
பாபா எனக்கு மிகவும் அந்தரங்கமான சமாசாரங்களை விளக்கினார். அப்படியும் நான் (லிங்கத்தின் இழப்பையே எண்ணிப்)) பொருமிக்கொண்டிருந்தேன்.”
“பேட்டி முடியும் நேரம் வர யாவரும் எழுந்தோம்.”
“இடி இடித்தாற்போல், நில நடுக்கமே ஏற்பட்டாற்போல் ஒரு திடீர் ஒலி கேட்டது. மாடியிலுள்ள பாபாவின் போஜன அறைப்பக்கமிருந்து எதுவோ குதித்துக் கொண்டும் உருண்டு கொண்டும் படிகள் வழியாகக் கீழே வரும் ஒலிதான்!”
“நான் பூஜித்து வந்த லிங்கம்தான் என்னை நோக்கித் தாவிக் குதித்து வந்து எனக்கு அடியில் அமைதியாக நின்றுவிட்டது!
“எனக்கு அதனிடம் இருந்ததுபோலவே அதற்கும் என்னிடம் பாசப் பற்றுதல் என்று பாபா மொழிந்தார்.”
“குனிந்து அதை எடுத்தார். அது தெய்வக் கரத்திலிருந்து அப்படியே மறைந்துவிட்டது!”
“சுயப் பரிதாபமும் ஏமாற்றமுமே என் உணர்வாயின.”
“1969 சிவராத்ரி பிப்ரவரி 19ந் தேதி நிகழ்ந்தது. எனக்கு அவர் மாற்றித் தந்த சொர்ண லிங்கத்தின் இரட்டையே போன்றதொரு லிங்கத்தை அவ்வாண்டு பாபா உற்பவித்தார். லிங்கோத்பவம் ஆனவுடன் பாபா கண் மூடியவாறு, ஆசியளிக்கும் தூக்கிய கரத்தினராக 45 நிமிஷங்கள் சலனமின்றி அமர்ந்துவிட்டார். பக்தர்கள் ஆவேசமாகப் பாடினர். ஆயினும் ஒவ்வொருவரும் மனத்துக்குள் அச்சமுற்றிருந்தனர் பாபாவின் உடல் அங்கிருந்தாலும் அவர் எங்கோ போய் விட்டதாகத் தெரிந்ததால். கடைசியில் அவர் கையை அசைத்தார். தூக்கிய கை கீழே வந்து படிந்தது. (எங்கோ போனவர்) திரும்பி விட்டார்! எழுந்திருந்து தமதறைக்குச் சென்றுவிட்டார் பாபா.”
“(பொன்வர்ண) உலோஹ லிங்கம் இரவு முழுதும் தாலத்தில் வீற்றிருந்தது. ஜ்வலித்துக் கொண்டிருந்த அது நான் இறுகப் பிடித்துக் கொண்டிருந்த என் சிறு சிவப்புப்பைக்குள்ளிருந்த அதன் அச்சான என் லிங்கத்தை நினைவூட்டிக் கொண்டேயிருந்தது. (சிவராத்ரியில் உற்பவமான) அந்த லிங்கத்தின் இரட்டையே என்னிடம் இருப்பதும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அதற்கு இன்றளவும் சிரத்தையுடன் பூஜை செய்து வருகிறேன்.”
சிவராத்ரி லிங்கத்தின் உட்சிறப்பையோ, அதற்கும் நம் ஸ்வாமிக்கும் உள்ள தொடர்பையோ நம் சிற்றறிவால் அறிகிற வியர்த்தமான முயற்சியைக் கைவிட்டு, வெறும் பக்தியில் இனித்திருப்பதுதான் நாம் செய்யத் தக்கது.
சிவராத்ரியன்று பர்த்தியில் பல்லாயிரக்கணக்கான பக்தர் திரண்டு பூலோக கைலாசமாக்கிவிடுவர்.
பகலில் ஷீர்டிசருக்குப் பர்த்தீசர் விபூதி அபிஷேகம் செய்வார். அதில் அத்புத விசேஷமுண்டு. அணுக்கத் தொண்டரொருவர் ஷீர்டி பாபா சிலைக்கு மேல் ஒரு சிறிய மரக்குடத்தைத் தலைகீழாகப் பிடித்திருப்பார். பர்த்தி பாபா அதனுள் கையை விட்டுக் குடைவார். உடனே அதிலிருந்து கொட்டுமோ. கொட்டுமோ, அப்படியொரு சிறு குன்றாகவே விபூதி கொட்ட சுமார் இரண்டடி உயர ஷீர்டிச் சிவபிரான் அதில் முழுகி விடுவார். அம்பாள் ஈசனுக்கு செய்யும் அபிஷேகம்!
அன்று அகண்ட பஜனை நடக்கும். மாலையில் பாபா மறுபடி வருவார். பஜனை பாடுவார். சிவராத்ரி மஹிமை, லிங்க தத்வம் இவை பற்றி உரையாற்றுவார். உரையின் நடுவிலேயே லிங்கம் உந்திக் கொண்டு உந்தியிலிருந்து புறப்பட ஆரம்பிக்கும். அவதிப்படுவார் சில நிமிஷம்.
லிங்கோத்பவகரா லிங்கேச்வரா
பர்த்தீச்வரா, மரம் பாஹி ப்ரபோ!
பாஹி ப்ரபோ, முதம் தேஹி விபோ!
க்தர்கள் பரவசப் பதறலோடு பன்னிப் பன்னிப் பாடியவண்ணம் இருப்பர்.
ஐயனின் திருவாயைத் திறந்துகொண்டு லிங்கமும் உத்பவமாகும்.
ஆனந்த ஸாயி அவற்றை அனைவருக்கும் காட்டுவார். அந்தந்த ஆண்டும் வெளியாகும் லிங்கத்திலுள்ள தனித் தன்மையை விவரிப்பார். ஒரு சமயம் லிங்கமே பிரபஞ்ச ரூபகம் என்பதற்கேற்ப, அதற்குள்ளே ஸூர்ய மண்டலம், க்ரஹங்கள். தாரா கணங்கள் போன்ற அமைப்புகள் காணப்பட்டன. இன்னொரு சமயம் அம்பாள், ஈச்வரன் என்ற பேதங்கள் ஆத்மலிங்கத்தின் இரு பாதிகளில் அடையாளங்கள் காட்டின. இப்படி எத்தனையோ நுணுக்கங்கள்!
உரை முடித்து ஓரிரு பஜன்கள் பாடிவிட்டு இரவு ஒன்பது மணி அளவிலே பாபா உள்ளே சென்று விடுவார். உத்பவத்துக்குப் பின் அவரது அழகைச் சொல்லி முடியாது என்பர் அடியர். ஸாக்ஷாத் சிவத்தின் அன்பு வடிவாக, அன்பே சிவமாக, பராசக்தியாகவே அப்போது அவரைச் சொல்லலாம்.
சக்தி – சிவம் என்பன மானுட தேக உறவில் கட்டுப்பட்ட வ்யக்திகளல்ல. பரப்ரம்ம தத்வமே இப்படி இரண்டாகத் தோன்றுவது. எனவே சிவத்தோடு அப்படியே கூடி இருப்பதால் சக்தியை சிவத்தின் ஸதி என்றாலும், சிவம் என்ற அடிப்படை அமைதியிலிருந்தே சக்தி என்ற காரிய ஆற்றல் பிறப்பதால் இவள் சிவத்தின் மகளுமாகிறாள். இன்னொரு நிலையிலோ, தான் இருக்கிறோம் என்று சிவம் உணரவே ஒரு சக்தி வேண்டியிருப்பதால், சிவம் தன்னை உணருமுன் சக்தி இருப்பதாகவும், எனவே இச் சக்தியே சிவத்தின் தாய் என்றும் கூறுவர். திருமந்திரத்தில் தாரம், மகள், தாய் என்ற மூன்று நிலைகளில் சிவமென்ற நிர்குண மெய்ப் பொருளும் அதன் ஆற்றலான ஸகுண மகா சக்தியும் தொடர்புறுத்தப் படுகின்றன.
எம் பெருமான் இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன்
என அத்தனை உறவுகளையும் திருவாசகம் கூறும். சிவராத்ரியில் லிங்கங்களைப் பெற்றெடுக்கும் சிவ மாதாவாக பாபா இருக்கிறார்!
ஆண்டுதோறும் அவர் லிங்கோத்பவம் செய்ததன் ரகசியங்கள் நமக்குத் தெரியவில்லை. தெரிய வேண்டியதுமில்லை. எண்ணிறந்த மக்கள் சிவராத்ரியில் ஒன்றுகூடி இரவெல்லாம் ஈசன் நினைவில் பஜனை செய்து பாவன உணர்வு பெறச் செய்த புண்ணியப் பணி இந்த அற்புத உத்பவத்தைக் கருதியே நிகழ்ந்தது என்பதொன்றே நமக்குப் போதும். பாபா லிங்கம் கக்குவதைத்தாக்கி விஷம் கக்கும் சிலர் கக்கிவிட்டுப் போகட்டும். இப்படியொரு இயற்கைக்கு அதீதமான ஸம்பவம் நிகழ்ந்ததுதான் ஆயிரமாயிரம் மக்களை ஆகர்ஷித்து புனித சிவராத்ரியில் அவர்களை சிவ ஸ்மரணத்தில் பரவசமாக ஆழ்த்தியது. அதனால் அவர்கள் பெற்ற திவ்ய இன்பந்தான் பாபாவுக்குப் பொருட்டேயன்றி, இதை ஜாலவித்தை என்று தாக்குபவரின் விஷம் இந்த நீல கண்டனைப் பாதிக்காது. “என்னை எவர் எந்தப் பழி சொன்னாலும் சொல்லி விட்டுப் போகட்டும். என் காரியம், என் குழந்தைகளை எப்படியாவது தெய்விகமாக சந்தோஷப்படுத்துவதுதான்” என்பாரே!
பாபா உள்ளே சென்ற பிறகும் விடிய விடிய பஜனை நடக்கும். பல்லாயிரவர் கண்விழித்து பக்தி புஞ்சிதமாகச் செய்யும் அற்புத பஜனை! விடிந்த பிறகு, முதல் நாளன்று (அதாவது சிவராத்ரி பகலில்) பாபா தமது ‘மொதடி சரீர’மான ஷீர்டி ஸாயி விக்ரஹத்துக்குக் குடம் குடமாக அபிஷேகம் செய்த விபூதிப் பிரசாதமும், பாரணையாக நைவேத்தியமும் அனைவருக்கும் வழங்கப்படும்.
இத்தனை ஆண்டுகளாக வெளிவந்த லிங்கங்களுக்கும் கூனி வரவிருப்பனவுக்குமான ஆவுடையார்கள் யாவும் புட்டபர்த்தியில் கனி வேங்கடா தோண்டிய அந்த ஓரிடத்தில் எப்படி வந்தன என்பது நம் அறிவுக்கு அடியோடு எட்டாத விஷயம்தான்.
***
பாத மந்திரம் எழும்பியது. இன்றைய பிரசாந்தி நிலய டவுன்ஷிப்போடு பார்க்கும்போது அது கடுகத்தனைதான். அதிலே ஸ்வாமிக்கென எட்டடி நீளமும் ஆறடி அகலமும் உள்ள சிறிய அறை கட்டப்பட்டது.
1945ல் பாத மந்திரத்தில் பகவான் பாதம் பதித்த கிருஹப் பிரவேசம் திருவிழாவாக அமைந்தது. அவரவரும் பட்சணங்கள் செய்து தட்டுத் தட்டாகக் கொண்டு வந்து வைத்தனர். பாபா பஜனை செய்தார். ஷீர்டி நாதர் சிலைக்கு தீபாராதனை செய்தார். பிறகு பக்ஷணங்களை அனைவருக்கும் விநியோகிக்கப் பணித்தார்.
ஒரு ரவாலட்டுத் தட்டை மட்டும் எட்டி இழுத்தார். அவர் கையாலேயே வழங்கப் போகிறார் என்று அடியார் எதிர் பார்த்தனர். அவரோ அதைக் கொண்டு போய்த் தம் அறைக்குள்ளே வைத்துக் கொண்டுவிட்டார்! பிறகு திருமல் ராவை அழைத்து, “அந்த லட்டுக்களை ஆற்றங்கரையில் வெகு தூரம் தள்ளி ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்து வா” என்றார்.
அவை அனைத்தும் விஷம் கலந்த பட்சணம்! நடுவே கொஞ்சம் அடங்கியிருந்த பகைவர்கள், பாபாவுக்கு மந்திரம் எழுப்பி, கோலாகலமாகப் புதுமனை புகுவிழாவும் நடக்கிறது என்றவுடன் மறுபடியும் க்ஷாத்திரத்தில் பொங்கி எழுந்து இப்படிப்பட்ட தீச்செயலைச் செய்திருக்கிறார்கள். தன்னை நாடி வந்த அடியாருக்கு அபாயம் நேர ஐயன் விடுவாரா?
பழைய மந்திரத்தில் பாபாவின் சிறிய அறையில் விசேஷ வசதி எதுவும் கிடையாது. தனி அறைக்குக் காரணமே, தற்போது எப்போதும் கச கச என்று கூட்டமாகிவிட்டதால் எவரிடமும் அந்தரங்கமாகப் பேசி ஆற்றவும் திருத்தவும் முடியாதிருந்ததுதான் போலும். ஏனெனில் அநேகமாக சயனம் உள்பட பாபா எல்லாக் காரியமும் வெளியில் அனைவர் மத்தியிலும், அவர்களிலேயே தாமும் ஒருவர் போலத்தான் வைத்துக் கொண்டிருந்தார். முதலில் சிறிது காலம் சுப்பம்மா வீட்டில் குளியலும், போஜனமும் வைத்துக் கொண்டிருந்தார். பிறகு இவற்றையும் ஆசிரமத்துக்கே மாற்றிக் கொண்டார்.
கோனம்மா என்ற வைசிய மாது அப்போது தினமும் பாபா குளிப்பதற்கு நீர் கொண்டு வந்து கொட்டுவாள். அவள் ஒருத்திக்கே பிரத்யேகமாக அளிக்கப்பட்ட பணி இது. அப்புறம் பிற்காலப் பிரசாந்தி நிலயத்திலும் பாபாவின் அறைக்கு முன்புறம் தினமும் காலை, மாலை பெருக்கி, நீர் தெளித்து, கோலமிடும் நெடுங்காலம் பணி வாய்த்த பாக்கியசாலினி!
ஸ்வாமிக்காகவும், மற்ற பக்தர்களுக்காகவும் சுப்பம்மா சமைத்தது இன்னமும் நிற்கவில்லை. “ஒவ்வொரு நாள் அவள் எட்டு மணி நேரம் சட்டினி அரைத்திருக்கிறாள்” என்று பாபா பரிவுடன் நினைவு கூர்வார். வருவோருக்கெல்லாம் பாபாவே உணவிட்ட காலம் மாறி, அடியார்கள் தாங்களே சமைத்துக் கொள்ளும் வழக்கம் ஏற்படலாயிற்று. அவர்கள் தங்கவும், சமைத்து உண்ணவும் அதம பட்சமான ஸௌகரியம் மட்டுமே ஆசிரமத்தில் செய்து தரப்பட்டது.
சமீப காலம் வரையில், இன்றைய பிரசாந்தி நிலயத்திலும்கூட ஸௌகரியங்கள் மிகக் குறைவு தான். குளியல், இயற்கைக் கடனுக்கெல்லாம் கஷ்டம்தான். ஆற்றுக்கும், ஆற்றங்கரைக்கும்தான் செல்ல வேண்டும். அதே போல் புட்டபர்த்திக்குச் சாலை வசதியும் எழுபதுகளில் தான் நல்லபடிச் செப்பனிடப்பட்டது. வேண்டுமென்றேதான் பாபா இப்படி வைத்திருந்தார். ரயில்வே மந்திரியாக இருந்த ஸ்ரீ ஹநுமந்தையா போன்றவர்கள் பர்த்திக்கே ரயில் பாதை அமைத்துத் தருவதாகக் கூறியும்கூட பாபா மறுத்துவிட்டார். “புனித யாத்திரை என்றால் அதில் ஓரளவு சிரமமும் இருக்கத்தான் வேண்டும். சில இடர்ப்பாடுகளையாவது பொறுத்துக் கொள்ளும் சகிப்புத் தன்மை பக்தர்களுக்கு இருக்க வேண்டும். உல்லாஸப் பயணமாகவும், பிக்னிக் ஸென்டராகவும் இருந்தால்தான் வர முடியும் என்பவர்களுக்கு மெய்யான பக்தி இல்லை என்றுதான் அர்த்தம். மக்கள் இன்றுள்ளது போல் இத்தனை சுக சாதனங்களை நம்பி வாழ வேண்டியதில்லை என்பதற்காகவும் புட்டபர்த்தியை இப்படி வைத்திருக்கிறேன்” என்பார்.
இத்தனை அசௌகரியத்திலும் பரம ஸுகவாசிகள், மேல் நாட்டினர்கூட, பர்த்திக்குப் படையெடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். இன்றைக்கும் கூட அங்கே மிகுந்த வசதிகள் கிடையாதுதான். ஆனால் நாளுக்கு நாள் உடம்பு. மனம் இரண்டிலும் பூஞ்சையாகி வரும் புதுத் தலைமுறையை ரொம்பவும் சோதிக்க வேண்டாம் என்றோ என்னவோ, முன்னைக்கிப்போது பல வசதிகளைச் செய்து தந்திருக்கிறார் ஸ்வாமி.
இரவிலே, பழைய மந்திர வெளிக் காம்பவுன்டில் ஆடவர் ஒரு புறமும், பெண்டிர் ஒரு புறமும் படுத்திருக்க நடுவே அந்தத் திறந்த வெளியில் திறந்த மனத்தரான பாபா கட்டிலில் சயனித்திருப்பார். நிலாக் காலங்களில் அவரது சயன கோலத்தைக் கண்டால் எந்த நயனமும் அதன் பின் தூங்க மறுக்குமாம். வெள்ளைத் தலையணையில், குலுகுலு என்னும் பட்டுக் குழல்களுக்கு மத்தியில் ஸ்வாமியின் பச்சிளம் குழந்தை முகம், அந்த நீண்ட பெரிய நேத்திரங்கள் குவிந்த அழகு, ஒருக்களித்துச் சயனித்த தேகத்தின் நெளிவு எல்லாம் கண்ணுக்கு அமிருதமாக இருக்குமாம்.
தாம் தூங்குவதேயில்லை என்றும், தாம் விழித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறவரை பக்தர்களும் உறங்க மாட்டார்கள் என்பதாலேயே நித்திரை செய்வது போல் நடிப்பதாகவும் ஸ்வாமி கூறுவதுண்டு.
அவர் ஸ்தூல தேகத்துக்குச் சிறிது ஓய்வு கொடுப்பாராயினுங்கூட, சூக்ஷ்ம தேகத்துக்கு ஓய்வு தந்து உறங்கவேயில்லை என்பது நிச்சயம். அவர் மட்டும் சூக்ஷம தேகத்திலும் உறங்கினால் அமெரிக்காவில் இன்று நாள்தோறும் அவரது அடியார்கள் பெறும் அற்புத அருள்கள் நடப்பதற்கில்லையே! ஏனெனில் நம் இரவு தானே அவர்களின் பகல்? அங்கே பகல்போதில் இவரது லீலா விநோதங்கள் நடந்தபடியிருப்பதால் இங்கே இரவில் இவர் உறங்கவில்லை என்றுதானே அர்த்தம்? இந்தியாவிலேயே நள்ளிரவில் எவ்வளவு பேரை ஆபத்தில் கட்டிக் காத்திருக்கிறார்? ‘ப்ர–ஜ்ஞா’ எனப்படும் ஆத்மப் பெருவிழிப்பான (Awareness) அவரது ஸூக்ஷ்ம சரீரத்துக்கு உறக்கமே இருக்க முடியாதுதான். உறங்காமலும் அது வாடாமலே இருக்கக் காரணம் அன்பு என்ற அமுத ஒளஷதம் அதில் ஊறிக் கொண்டேயிருப்பதுதான்.
திருமாலின் பொய்த் தூக்கத்துக்கு ‘சல சயனம்’ என்று அழகிய பெயருண்டு, நம் ஸ்வாமியும் சல சயனப் பெருமாளே போலும்!
பாத மந்திர நாட்களில் பக்தர்கள் படுத்தபின் அவர் அவர்களைச் சுற்றி வருவார். பகவான் ஏன் பக்தர்களைப் பிரதக்ஷிணம் செய்கிறார் என்பது அவர்களுக்குப் புரியாமலே இருந்தது. பிறகுதான் ஒரு நாள் அவர் வெளியிட்டார்: தாம் அப்படிச் சுற்றி வருவதால், அந்த எல்லைக்குள் விஷ ஜந்துக்கள் எதுவும் வருவதில்லை என்று! புட்டபர்த்தியில் அப்போதும்கூட ஓரளவு பாம்புகளும், மற்றும் தேள், ஜலமண்டலி போன்ற ஜந்துக்களும் உண்டு. ஆயினும் பழைய மந்திரத்தில் ஒரு நாள் கூட இவற்றின் கடிக்கு ஒருவரும் ஆளானதில்லை! பாம்பு முதலியன ஸ்வாமியின் பாதம் வகுத்த எல்லைக் கோடு வரை வந்துவிட்டு மேலே வராமல் திரும்பி விடுவதைத் தாங்களே நேரில் பார்த்திருப்பதாகச் சிலர் கூறுகிறார்கள்.
(ஸ்வாமியின் ஸ்தூல–ஸூக்ஷ்ம தேகங்களின் மகிமை விசித்ரங்களைச் சற்று தள்ளிப் பார்ப்போம்.)
***
வெளிப் பாம்பை உள்ளே புகவொட்டாமல் தடுத்தவர், தாமே ஒருமுறை பாத மந்திரத்தில் பாம்புருக் கொண்டிருக்கிறார். இது உன்னத தெய்விக உணர்வை அடியார்க்கு ஊட்டிய நிகழ்ச்சி. இதன் முன், வேடிக்கையா விபரீதமா என்று வரையறுக்க மாட்டாத இன்னொரு பாம்பு லீலையைப் பார்க்கலாம்.
ஒரு நாள் மாலை சித்ராவதிப் படுகைக்கு உலாவப் புறப்படுகையில் மற்ற பக்தர்களை உடன் வரவேண்டாம் எனச் சொல்லி அத்தாணித் தொழும்பர்களான சேஷகிரி ராவ், விட்டல் ராவ், கிருஷ்ணா, பால பட்டாபிச் செட்டி ஆகியோரை மட்டும் உடன் அழைத்துச் சென்றார்.
ஆற்றுக்கு முன்னே வாய்க்காலருகே ஒரு நாலடி நீளப் பாம்பைக் கண்டனர். “செத்த பாம்பு” என்று சொல்லிக் கொண்டே பாபா அதனண்டை சென்று ஒரு குச்சியால் நிமிண்டினார். பிறகு அதன் அருகிலேயே முழங்கையில் தலை வைத்துப் படுத்துவிட்டார். சிறிது நேரத்தில் செத்த பாம்பு நெளிந்தது. பாபாவின் உடல் விறைத்தது.
கூடுவிட்டுக் கூடு பாய்ந்துவிட்டார்!
பாம்பு பேசிற்று. அதாவது பாம்புக்குள்ளிருந்து பாபாவின் குரல் வெளியாவதைக் கேட்டார்கள். “இங்கேயே இருங்கள்” என்றார். அப்புறம் பாம்பும் பேச்சு மூச்சற்றுப் போயிற்று. அப்போது மணி ஐந்து.
ஆறாயிற்று. ஏழாயிற்று. நிலா வெளிச்சம் பாபாவின் முகத்தை முழுக்கியது. உயிருள்ள முகம்தானா? அதில் நிச்சயமாக சவக்களை இல்லைதான். ஆனால் ஜீவகளையும் இல்லையே! அந்த ‘நாலடியார்’ எண்ணாததெல்லாம் எண்ணி நாமஸ்மரணை செய்ய ஆரம்பித்தனர். எட்டு, ஒன்பது, பத்து என்று மணி ஓடிற்றே தவிர பாபா அசையவேயில்லை. பாம்பும் அசையவில்லை. இத்தனை நீண்ட நேரம் அவர் கூடு விட்டிருந்து பார்த்திராதவர்களுக்குப் பதைப்பாயிற்று.
பன்னிரண்டு மணி.
அப்பாடா! பாபாவின் தேகம் அசைந்தது. பளீரென்று எழுந்தமர்ந்தார். “இரண்டு உயிர்கள் பிழைத்தன. ஸாம்ராஜ்யம்மாவுக்குப் பேற்று நோவு. குழந்தை குறுக்கே திரும்பிப் பெரும் அவதிப்பட்டாள். இரண்டு டாக்டர்களும் கைவிட்டுவிட்டார்கள். அவள் என்னையே நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தாள். நான் போய்க் குழந்தையின் “பொஸிஷனைச் சரி செய்தேன்” என்றார். வழக்கமான “பாவம், ஐயோ பாவம்” என்ற சொற்களும் குழைந்து வந்தன. நீலாத்ரி ராஜா என்ற ஆந்திர அரசகுடிப் பிரமுகரின் மனையாள் ஸாம்ராஜ்யம்மா.
மறுநாள் நீலாத்ரி ராஜா வந்து பாபாவின் பாதத்தில் விழுந்தார். “தாங்கள் தான் ஸாம்ராஜ்யம்மாவைக் காப்பாற்றியிருக்க வேண்டும்! சந்தேகமில்லை” என்று விம்மினார்.
ஸாயி சாம்ராஜ்யம் செத்த பாம்பின் உடலுக்குள்ளிருந்து தொடங்கி, சாம்ராஜ்யம்மாவின் கருப்பை உயிர்வரை வியாபித்திருக்கிறது!
***
இன்னொரு பாம்பின் சரீரத்தில் புகாமல் தாமே பாம்புருவம் எடுத்துக் கொண்டு வருவது பல ஸித்த புருஷர்களின் வரலாற்றில் காணும் ஒன்றாகும். ஷீர்டி பாபா விசேஷமாகப் பாம்புருவில் தோன்றுவதுண்டு. கோயமுத்தூரில் அவர் நாகமாகத் தோன்றிய இடம்தான் இன்று ‘நாக ஸாயி மந்திரம்’ என்று பாபா பக்தர்களுக்கு ஒரு முக்ய க்ஷேத்திரமாக விளங்குகிறது. அங்கு பாம்பு தோன்றிப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் ஸத்ய ஸாயி விஜயம் செய்து ஷீர்டி பாபாவின் சலவைக் கல் சிலையைப் பிரதிஷ்டை செய்தார். “ஸ்ரீ ராமன் ராமலிங்கப் பிரதிஷ்டை செய்ததற்கு சமமான நிகழ்ச்சி இது” என்று அவரே அப்போது சொன்னார்.
கிண்டி கோயில், பாலக்காடு சாந்தி நிவாஸ் முதலிய இடங்களிலும் பாபா பாம்பாக வந்து அருள் புரிந்திருக்கிறார்.
புட்டபர்த்தி பழைய மந்திரத்துக்கும் இந்த பாக்கியம் கிடைத்தது.
மைசூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ‘அர்ஸ்’களில் ஒருவரின் அழைப்பை ஏற்று தீபாவளிக்கு அங்கு சென்றிருந்தார் பாபா. தீபாவளித் திருநாளில் பாமையும் கண்ணனும் ஒன்று சேர்ந்த ஸ்வாமி தம்மிடையில்லையே எனப் புட்டபர்த்தியில் பக்தர்கள் ஏங்கினர்.
அர்ஸ் குடும்பத்தாரை ஏமாற்றிக் ‘கூடு’ விட்டார் பாபா.
தீபாவளி காலை புலருமுன் பாத மந்திரத்தில் பஜனை நடக்கிறது. சித்ராவதிக் கரையருகே கார் தலைவிளக்குப் பளிச்சிடுகிறது. “ஸ்வாமி வந்து விட்டார்” என்று அதைக் கண்டவர் மகிழ்கிறார்கள். பிறகு வெளிச்சத்தைக் காணோம்; காரையும் காணோம்.
ஆனாலும், ஸ்வாமி என்னவோ வந்துதான் விட்டார்! ஆம், பஜனை மன்றத்தின் நடுவே வைத்துப் பூஜிக்கப் பெற்ற பாபா படத்தை வளைத்துச் சுற்றிக்கொண்டு ஒரு நல்ல பாம்பு! பஜனைக்கேற்ப ஆனந்தமாக அது தலையை ஆட்டி ரஸிப்பதைப் பார்த்த அனைவருக்கும் ஐயன் லீலையே என்று புரிந்தது.
பாம்பென்றால் படையும் கலங்கும் என்பது பொய்யாயிற்று. அன்போடு “அனந்த சாயி” என்று பெயர் சொல்லி மஞ்சள் பொடியாலும், குங்குமத்தாலும் அரவத்தை அர்ச்சித்தனர். அது ஆராதனையைப் பெற்றுக் கொண்டு தன் பாட்டில் இருந்தது. கிண்ணம் கிண்ணமாகப் பால் வைத்தார்கள். அசல் பாபாவாகப் பாலைத் தொடாமலேயிருந்தது! பலர் தேங்காய் உடைத்தனர். ஒருத்தி மூடிகளைத் திரும்பப் பெறுகையில், தான் பெரிய தேங்காய் கொடுத்ததாகவும் வேறு யாரோ உடைத்த சிறிய மூடிகளைத் தனக்குத் திருப்புவதாகவும் பொய் சொல்லி ரகளை கட்ட, ‘உஸ்’ என்று அவள் பக்கம் திரும்பி அது சீறிற்றே பார்க்க வேண்டும்!
பகல் மூன்று மணி வரை இப்படி லீலைகள் புரிந்துவிட்டு, நாகம் படத்திலிருந்து இறங்கிக் கீழே ஒரு கஜம் ஊர்ந்தது. அப்படியே அந்தர்தானமாகிவிட்டது!
அதே பிற்பகல் மூன்று மணிக்கு அர்ஸ் மாளிகையில் பாபா துயில் கலைந்தாற்போல் எழுந்திருந்தார்.
அரவில் துயில்பவன் தன்னையே ஓரிடத்தில் அரவாகவும், இன்னோரிடத்தில் துயில்பவனாகவும் செய்து கொண்டிருக்கிறான்!
இப்படி, தீபாவளி தினத்தில் தாம் ‘இருந்தும் இல்லாமல்’ அர்ஸ்களை ஏமாற்றியதால்தானோ என்னவோ, இன்னொரு சமயம் அவர்களிடையே தாமாகவும் இருந்து, அதே சமயம் ஒட்டிக்கு இரட்டையாக இரு பாம்புகளாகவும் இருந்து அநுக்கிரஹம் செய்தார். அன்று பாபாவைச் சிம்மாதனத்தில் அமர்த்தி அர்ஸ்கள் பூஜிக்கையில் எங்கிருந்தோ இரு பாம்புகள் தோன்றிப் பக்கத்துக்கு ஒன்றாக, அரியணைக் காலைச் சுற்றிக் கொண்டு படமெடுத்து நின்றன. இந்த அற்புதக் காட்சியை அவர்களும் படமெடுத்திருக்கின்றனர்!
பாம்பாக வந்தவரின் பாதம் போட்ட எல்லையைப் பாம்பு எதுவும் கடந்து வரவில்லை என்ற கதையில் அல்லவா இருந்தோம்?
***
கால் வண்ணம் அப்படி! கை வண்ணம் அபய ஹஸ்ததத்தின் ரட்சக ஆற்றல் எப்படி என்றும் பார்ப்போம். கடப்பை மாவட்டத்திலோ எங்கோ, ஒரு முறை ஸ்வாமியின் கார் சாலை வழியே செல்கையில், அவர் அத்தனை நேரமும் தமது கரங்களை இரு புற ஜன்னல்கள் வழியாக வெளியே நீட்டி அபயம் காட்டிக் கொண்டே வந்தார். “இவ்வூர் மக்களுக்கு என்ன இத்தனை யோகம்? ‘நான்–ஸ்டாப்’ அபயம் அளிக்கிறாரே!” என்று பாபாவுடன் வண்டியில் வந்தவர்களுக்கு ஆச்சரியமாகிவிட்டது. அவரிடமே விளக்கம் கேட்டார்கள்.
“ஓ, அதுவா? அந்தச் சாலைகளில் இருந்த வீடுகளைக் கவனிக்கவில்லையா? அநேகமாக எல்லா வீடுகளுக்கும் கூரையாக வெறும் சுள்ளிகளைப் பரப்பி அதன் மேல் மண்ணைத்தான் அப்பி வைத்திருக்கிறார்கள். செங்கல்லோ, காங்கிரீட்டோ இல்லை. (அங்கே மழை ரொம்பக் குறைவாதலால், ஜலம் ஒழுகும் பிரமேயமில்லை. ஆதலால் வசதியில்லாத ஜனங்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள்.) இன்றைக்கு என்னைப் பார்க்கிற ஆர்வத்தில், அந்தச் சுள்ளிக் கூரைகளுக்கு மேல் இடித்துப் புடைத்துக் கொண்டு இவ்வளவு பேர் ஏறி நிற்கிறார்கள். நான் வரும்போது அவர்கள் முந்திக் கொள்கிற வேகத்தில் கூரைகள் முறிந்து விடாமல் தடுத்து நிறுத்தத்தான் அப்படிக் கையைக் காட்டி வந்தேன்” என்றார்!
அடேயப்பா, பிஞ்சுக் கையில் இத்தனை விஞ்சைச் சக்தியா?
(பாபாவின் கண்வண்ணம் பற்றி “கண்டனே, வெண்டனே…” என்ற அத்தியாயத்தில் பார்ப்போம்)
ஸ்வாமியின் ஸ்தூலமான மானுட சரீரமாகவே தெரிவதற்கும் அதிமானுடத் தன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. தாம் மிகவும் சொற்பமாக உண்டும் அயராத ஆற்றல் களஞ்சியமாக இருப்பதில் அதிமானுடமாக எதுவுமில்லை என்று அவரே சொல்லியிருப்பதையும் நாம் மறப்பதற்கில்லை. என்றாலும் வேறு பல விஷயங்களைக் கவனிக்கையில் பாபாவின் சரீர தர்மம் நமக்குப் புரியாத ஒன்று என்று வியக்க வேண்டியதாகவே உள்ளது. மானுட காயமென்று எண்ணும் வகையில் செயலாற்றி வரும்போதே அதில் அமாநுஷ்யத் தன்மையைக் காட்டி விடுவார்.
உதாரணமாக: சாதாரண மனிதர்போல் சில சமயங்களில் தமக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் படிக்கிறார். பல சமயங்களிலோ வெறுமே தொட்டுவிட்டுப் போட்டு விடுகிறார். “படிக்கவில்லையே ஸ்வாமி?” என்று பக்தர் கேட்டால், இந்த விரல்கள் ஸ்பர்சித்தாலே போதும், விஷயம் எனக்கு எட்டி விடும்” என்று சொல்லி, அக்கடிதங்களில் அந்தரங்கம் எதுவும் இல்லாவிடில் அப்படியே ஒப்பித்து. “சரிதானா பார்” என்பார்! (அந்தரங்க விஷயங்களைப் பிறரிடம் ஒருநாளும் விடவேமாட்டார், பண்புச் சிகரமான பாபா. இதனால்தான் தமக்கு வரும் நூற்றுக்கணக்கான கடிதங்களைப் பிறர் உடைத்துக் கொடுக்கக்கூட அனுமதிக்காமல், தாமே பிரித்துப் படிக்கிறார். லீலைக்காகச் சிலவற்றுக்குப் பதில் எழுதும்போதும் ‘ஸ்டெனோ’ இல்லாமல் தம் கைப்பட எழுதி, தாமே கவரில் போட்டு, தமது கரத்தாலேயே ஒட்டியும் கொடுக்கிறார்.)
சாதாரணமாக அவரது விரல்கள் அந்தரத்தைத் துழாவிக் கொண்டிருக்கும். சில சமயங்களில் அந்தரத்திலேயே அவர் ஏதோ எழுதுவார். உதட்டைப் பிதுக்குவார். கையை விரிப்பார். இதற்குக் காரணம் கேட்ட பிரபல அமெரிக்கத் திரைப்படக் கதாசிரியர் ஷுல்மானிடம், தம் விரல்களே எண்ணற்ற பக்தரோடு தம்மைத் தொடர்புறுத்துவதாகக் கூறியிருக்கிறார். விரலசைத்தால் உலகசையும் என்பார்களே! இங்கே இவர் விரலை அசைக்கும் போது எங்கோ, எந்த பக்தருக்கோ, ஏதோ அநுக்கிரகம் நடந்து விடுகிறது. எங்கோ பக்தருக்கு எழும் பிரச்சனைக்கு விடையைத் தான் இங்கே அந்தரத்தில் எழுதுகிறாராம்.
அவரது சரீரத்தின் தனித்தன்மைக்கு இன்னோர் உதாரணம். அக்காலத்தில் பக்தரின் ஆபத்தில் அவர் சடேரெனச் சரீரத்தை விட்டுக் கிளம்பி அவர்களிடம் செல்வது வழக்கம். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அவரது சரீரம் மரக்கட்டையாக விழுந்து விடும். சென்னையில் பக்தர்களோடு ஒருமுறை காரில் போகும் போதே, இவ்வாறு அவர் எவர் ஆபத்தையோ தீர்க்கப் பதறிப் புறப்பட்டதில் தடாலென்று எதிர் ஸீட்டில் இடித்துக் கொண்டு விட்டார். அந்த வேகத்தில் ஒரு பல்லே தெறித்து விழுந்துவிட்டது. பக்தர்களுக்குத் தங்களது என்றும் இளைய இறைவன், திடீர்க் கிழமாகிப் பல்லை இழந்தது பெருந்துயர் அளித்தது. தமக்குப் புறவுணர்வு வந்தபின் அவர்களைக் கொஞ்சம் அழவிட்டு வேடிக்கை பார்த்த பாபா பிறகு உடைந்த பல்லை வாய்க்குள் வீசிக்கொண்டார். அது லபக்கென யதா ஸ்தானத்தில் பிரதிஷ்டையாகிவிட்டது! விந்தைச் சரீரம்தானே?
மாதக்கணக்கில் ஸ்வாமி அன்ன ஆகாரமின்றி இருப்பதுண்டு. இது வெளி உலகுக்குத் தெரிவதற்கே இல்லாமல், பூர்ண உற்சாகத்துடன் ஸகல காரியமும் புரிந்து வருவார். மேனி சற்றும் வாடாது, வதங்காது. இரவிலும் அவர் கூற்றுப்படி மெய்யான உறக்கம் கிடையாது. அப்படியும் இவ்வளவு தெம்புடன் இருப்பதெனில் அது சாதாரண சரீரமா?
பக்தரின் பிணியைத் தாமே ஏற்று உள்ளே ரத்தவாந்தி செய்வார். மறுநிமிஷம் வெளியிலே ராஜநடை போடுவார். சாமானிய சரீரமா அது?
மகான்களின் மனம் மலரினும் நளினமாயினும் வஜ்ரத்தை விட வலியதுமாகிவிடும் என்பர். பாபாவின் சரீரமே இவ்வாறு நளினம் கடினம் இரண்டும் ஒருங்கு சேர்ந்த அற்புதம்! புஷ்டியான வாலிபர் பலர் சேர்ந்தும் அவரது பூங்கரத்தை அசைக்கவொட்டாமல் செய்து விளையாட்டுப் பார்த்திருக்கிறாரே!இன்னொரு விந்தை: ஸ்தூல சரீரத்தைக் கட்டையெனச் சாய்த்து அவர் “வெளியேறி” ஸூக்ஷ்ம சரீரத்தால் வேறெங்கோ அருளற்புதம் செய்யும்போது அச் சூட்சும சரீரத்தின் செயல்களுக்கிசையக் “கட்டை” சரீரத்திலும் சலனம் ஏற்படுவதுண்டு! ஜடத்திலும் உயிராயுள்ள சித்சக்தியன்றோ?