அத்தியாயம் – 25
பகைவனுக்கருள்வாய் ஸாய்!
மன்னுயிர்ஓம்பி அருள்ஆள்வாற்(கு) இல் என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை
(மன்னுயிர்களுக்கு அருள் பொழிந்து வளர்ப்பதே பணியாகக் கொண்டோருக்குத் தம் உயிரைப் பற்றிக் கவலைப்படும் காரியம் இல்லை.)
– குறள்
“ஸ்வாமீ! நீங்கள் ஒருநாள் பக்தர்களோடு என் அகத்துக்கு வந்து போஜனம் செய்ய வேணும்” என்று பாபாவிடம் வேண்டிக்கொண்டாள் ஓர் அம்மாள்.
பேர் சொல்லாமல் ‘ஓர் அம்மாள்’ எனக்கூடியவள் அல்லதான். ஆயினும் பேரைச் சொல்லாததற்குக் காரணமுண்டு.
“ஆஹா” என்று, ஒப்புக்கொண்டார் பாபா. “சாப்பாடு வேண்டாம். டிஃபன் போறும்” என்றார்.
அவள் காரியத்துக்கு அதுவேபோதும், அதிகச் செலவு வைப்பானேன் என்று அருளாளர் எண்ணியிருக்கிறார்! எப்படியும் இவர் காரியம் தானே நடக்கப்போகிறது?
அணுக்கத் தொண்டர்களோடு அவ்வீட்டுக்குச் சென்றார்.
அம்மாள் ஆர்வத்தோடு வரவேற்றாள்…
வடையும் காபியும் மணக்க மணக்கக் கொண்டு வந்து பரிமாறினாள்.
பாபாவுக்கு முன் இரண்டு வடைகளை வைத்து, “ஸ்வாமீ! நீங்க சாதாரணமாத் துளித் துளி கொரிச்சுட்டுச் சாப்பிட்டதாப் பேர் பண்ணிடறேள். இங்கே அப்படிப் பண்ணாம்…” என்று அவள் சொல்லும்போதே பாபா இடைமறித்து, இந்த இரண்டு வடையையும் வள்ளிசாத் தின்னத்தான் போறேன்” என்று முகமலரக் கூறினார்.
அவளும் அகமலர்ந்தாள்.
சொன்னபடி இரண்டு வடைகளையும் உண்டார்.
காபி அருந்தியபின், தமது இருக்கையாகக் கொண்ட சுப்பம்மாவின் வீட்டுக்குப் புறப்பட்டார். டிபன் உபசாரம் செய்தவளும் உடன் வந்தாள்.
வீடு திரும்பியதும் அவளையே உற்றுப் பார்த்தார் ஸ்வாமி. ஏதோ உபாதை போல் வயிற்றைப் பிடித்துக்கொண்டார்.
எல்லோரும் பதைத்தனர். குபீர் என்று வாந்தி செய்தார் பாபா. கலீர் என்று நகைத்தார்.
புட்டபர்த்தீசன் சற்றுமுன் புட்டுப் புட்டு உண்ட இருவடைகளும் முழு முழு வடைகளாக வெளியே விழுந்திருந்தன!
அனைவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.
வடை கொடுத்தவளோ தவடையில் படபட என்று போட்டுக் கொண்டு நடுங்கினாள். “ஸ்வாமீ! இந்தக் கொலைகாரப் பாவியை மன்னிச்சுடுங்கோ!” என்று அழுதுகொண்டு அவர் காலடியில் விழுந்தாள்.
ஸ்வாமி அன்போடு அவள் தலையில் பூங்கையை வைத்து, “பங்காரு, ஸந்தோஷம்” என்றார்.
அந்த அம்மாள் ஆறாகக் கண்ணீர் வடித்தாள்.
‘எப்பேர்ப்பட்ட கொடூரத்தைச் செய்ய இருந்தோம், இந்த மதுர மூர்த்திக்கு’ என்று மறுகிப் பச்சாத்தாபத்தில் புலம்பினாள்.
***
அக்காலத்தில் கிராமாந்தரங்களில் ஜாதிக் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமை. க்ஷத்ரிய இளைஞரான பாபா பிராமண சுப்பம்மாவின் வீட்டில் வசிப்பதும், உண்பதும், அவர் உண்டு மிகுந்ததை பிராமணர்களும் பிரஸாதமாக ஏற்பதும் கிராமத்தில் சிலருக்கு அக்கிரம சிகரமாகத் தோன்றியது. ஏற்கெனவே வேறு காரணங்களால் பாபாவைக் கண்டு வயிறெரிந்தவர்களுக்கு இந்த ‘அக்கிரமம்’ எண்ணெய் வார்த்தது! இத்தனைக்கும் பாபா இன்றளவும், அநேக சமய – சமூகச் சீர்திருத்தவாதிகளைப் போல ஜாதியமைப்பு தவறானது என்று சொல்பவரே அல்ல. பிறப்பால் ஒருவர் உயர்த்தி, இன்னொருவர் தாழ்த்தி என்ற எண்ணமும் துவேஷமும் இல்லாமல் அவரவரும் ஜாதி தர்மத்தைக் கடைப்பிடித்தால் அதுவே சமூக க்ஷேமம் பயப்பது என்ற கருத்துடையவர் தான் அவர். “ஓர் அறைக்கு நாலு சுவர்கள் இருப்பதுபோல், நாலு வர்ண ஏற்பாடே நம் சமுதாயத்தைப் பேணிக் காத்து வந்திருக்கிறது” என்பார். ஆனால் நடைமுறையில் பழைய கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றுவது நடக்காத காரியம் என்று அவர் காண்கிறார். இன்றைய மக்களைப் பாரம்பரியத் தொழில்களிலேயே ஈடுபடச் செய்வது இயலாத காரியம், அது அவ்வளவாக அவசியமும் அல்ல என நினைக்கிறார் போலும். பரம்பரைத் தொழில் போன பின், அவற்றை அநுசரித்தே உண்டான ஆசாரங்களில் பலவற்றைத் தளர்த்துவதில் தவறில்லை என்பதே அவரது கருத்தாகத் தெரிகிறது. ஒரே போன்ற உலகாயதப் போட்டியில் அனைவரும் இறங்கியபின், மக்கள் தமக்குள் நிரம்ப வித்யாஸங்கள் பாராட்டுவது த்வேஷத்துக்கும் துக்கத்துக்குமே இடமாகும் எனக் காண்கிறார். இதனால்தான் 1940லேயே சமபந்தி போஜனம் முதலானவற்றைத் தம் இருக்கையில் அமலாக்கினார்.
ஜாதியமைப்புக் குறித்து ராமகிருஷ்ணர், ரமணர், மா ஆனந்தமயீ ஆகிய அவதாரங்கள் வகிக்கும் அதே நடுநிலைமைக் கொள்கை கொண்டவர்தான் நம் கதாநாதர். இவர்களிடம் கலப்பு மணம் செய்துகொண்ட புரட்சியாளர்கள், ஸ்வயம் பாகமே செய்து மறைவாக உண்ணும் ஆசாரக்காரர்கள் ஆகிய இரு சாராரும் வருவதுண்டு. இவர்கள் இரு தரப்பினரையும் ஏற்பார்கள். முன்னவர்களிடம் ஜாதி நியமங்களை இவர்கள் வலியுறுத்துவதில்லை; பின்னவர்களிடம் கலப்பு மண மகிமையை ஓதுவதும் இல்லை.
ரு விஷயம் குறிப்பாகக் கவனிக்க வேண்டும். வேதத்தோடு நேர் சம்பந்தம் கொண்ட அத்யயனம், யக்ஞம் ஆகிய விஷயங்களில் இவர்கள் பழைய பாரம்பரிய ஏற்பாட்டை மிகப் பெருமளவுக்கு வழுவாமலே பின்பற்றுகிறார்கள். வேத தத்வங்களை எல்லா ஜாதியாரும் பயில்வதை இவர்கள் ஆட்சேபிக்கவில்லை. வைதிக ஸூக்தங்களைக்கூட அனைவரும் கற்பதையும் இவர்கள் கண்டிப்பதில்லை. ஆனால் வேதமோதுவதும் பிறருக்குப் போதிப்பதுமே தொழில் எனக் கொண்டு அத்யயன – அத்யாபனம் செய்யும் அதிகாரத்தை இவர்கள் பாரம்பரிய முறையில் மட்டுமே அனுமதிக் கிறார்கள். யக்ஞம் முதலான சடங்குகளிலும் பரம்பரை உரிமை பெற்றோருக்கு மட்டுமே இடம் தருகிறார்கள். நம்மால் அறிய வொண்ணாத ஆழ்பொருள் கொண்ட பரம வைதிக விஷயங்களில், வேத மந்திரங்களைக் கண்டு கொடுத்த ரிஷிகளின் ரத்த சுத்தத்தைப் பாரம்பரியமாக ரக்ஷிப்பதில் இவர்கள் கருத்தாக இருப்பதாகவே தெரிகிறது.
உதாரணமாக, புட்டபர்த்தியில் மற்றவர்களுக்கெல்லாம் ஸமபந்தி போஜனம் அமலில் உள்ள போதிலும், வேதகர்மாக்களில் ஈடுபட்ட வைதிகருக்கு மட்டும் தனிச் சமையல் நடக்கிறது. கோடையில் அகில இந்திய மாணவர்களுக்காக பெங்களூரில் நடத்தப்பட்ட ஆத்மிக – கலாசாரப் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்ட பிரம்மஸ்ரீ ஜம்மலமதக மாதவராம சர்மாவுக்கு பாபா தனிச் சமையலும், அநுஷ்டானத்துக்காகத் தனியிடமும் ஏற்பாடு செய்ததை அவர் வானளாவப் புகழ்ந்து, ‘இவரே வர்ணாச்ரமக் காவலர்’ என்கிறார்.
புட்டபர்த்தியில் பாடசாலை இருந்தபோது ஸம்ஸ்கிருத காவியம் பயில்பவர் கிராப் வைத்துக்கொள்ளலாம்; ஆனால் வேத வித்யார்த்திகளுக்கு சிகை இருக்கவேண்டும் என்று விதி இருந்ததிலிருந்து வேதம் ஒன்றின் விஷயத்தில் எவ்வளவு நுண்ணிய ஆசார திருஷ்டியை நம் ஸ்வாமி கொண்டிருக்கிறார் என அறியலாம்.
வேதியர் என்று சொல்லிக்கொண்டு வேதத் தொடர்பே இல்லாதவர்களை உண்மை வேதியர்களிலிருந்து பிரித்து, உண்மை வேதியர்களை ஸநாதன ஆசாரங்களிலேயே நிலைப்படுத்தி வருகிறார் நமது ஸநாதன ஸாரதி.
கலியுகத்துக்கு நாம ஸ்மரணமே மோக்ஷ உபாயமாதலால் எல்லோரையும் ஆசார வைதிகத்தில் திருப்பாமல் ஸங்கீர்த்தனத்தில் ஈடுபடுத்தினால் போதுமெனக் கருதுகிறார் போலும். ஆயினும் யுகாந்தரமாக் நம் தேசத்தில் வந்துள்ள தேவசக்தி கொண்ட வேதமும் வேள்வியும் அடியோடு மறையாமல் கொஞ்சமேனும் இருக்கவேண்டும்; அதன் வீர்யத்துக்கு வேண்டிய சூழ்நிலை தற்போது மிகக் கெட்டுவிட்டதால், சுத்தமாக அதைக் காக்கும் தீரர் வெகு சிலரே இருந்தால் போதும் எனக் கருதி இப்படிப்பட்டவர்களை மட்டும் சாஸ்திராசாரத்தில் ஊக்கி வருகிறார்.
ஏனையோர் விஷயத்தில் பாபா கைக்கொள்ளும் நீக்குப் போக்குத்தான் அக்கால ஆசாரக்காரர்களுக்கு அக்ரமமாகத் தோன்றியது. பழைய பகைவர்கள் இந்த ஆசாரவாதிகளைத் தூண்டி விளைவித்த அக்ரம சிகரத்தின் விளைவுதான் அன்று அந்த அம்மாள் வடை உபசாரம் செய்து, பிறகு மன்னிப்பு வேண்டிக் கதறியதில் முடிந்தது.
பாபா ஆசாரத்துக்கு உலை வைக்கிறார் என்ற ஆத்திரத்தில், அந்த அம்மாள் சூழ்ச்சிக்காரர் வலையில் விழுந்து, அவரது இன்னுயிருக்கே உலை வைக்க முற்பட்டுவிட்டாள். ஆம், அந்தண லக்ஷணத்தில் முதலாவதான அன்பை அறவே துறந்து, தாய்க் குலத்தின் தயைச் சுனையையும் ஆசார வெறியில் வற்றச் செய்து கொண்டு தீச்செயலில் இறங்கினாள். சதிகாரரின் கைப்பாவையாகி பாபாவை அமிருத ஸ்வாமியை, மதுர தேவதையை விஷம் வைத்துக் கொல்லத் திட்டமிட்டு விட்டாள்! கொடிய விஷத்தை மாவோடு சேர்த்து இரு வடைகளாகத் தட்டி பாபாவுக்கு வைத்தாள். “உண்ண வாருங்கள்” என்று வஞ்சகமாக வேண்டி அழைத்து, விஷ உணவைத் தந்து, அதை இனியன் முழுவதும் உண்ணவும் செய்து. இதுவும் போதாதென்று அவர் உயிரிழந்து விழுவதைக் கண்ணாரப் பார்ப்பதற்காகக் கர்ணத்தின் வீட்டுக்கும் உடன் சென்றாளே, அந்த நெஞ்சின் நஞ்சை என்சொல்ல?
அவளது நெஞ்சழுத்தத்தை எத்தனை வேடிக்கையாக இளக்கிக் கதறவைத்துவிட்டார், ஆலகாலமுண்ட நம் காலகாலர்! விண்டு விண்டு உண்ட வடையைத் தமாஷ்போல முழு உருவில் வெளிப்படுத்தி, விண்டுரைக்க மாட்டா விந்தை புரிந்துவிட்டார்!
அந்தம்மாவை யாருமே துவேஷிக்கக்கூடாது. தெரியாத்தனத்தால்தானே இப்படிச் செஞ்சாங்க?” என்று பரிந்து பேசினார் பர்த்திவாஸர். தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக இயேசு நாதர் பிரார்த்தனை செய்து. “தந்தையே! அவர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிறோமென்று தெரியாது. அவர்களை மன்னித்து விடுங்கள்” என்றார். ஈராயிரம் ஆண்டுகளானாலும் அன்பின் குரல் மாறுவதில்லை!
“அவள் சதி செய்ததாக சொல்லக்கூடாது. அவள்தான் என் தெய்விகத்துக்குப் பரீக்ஷை வைத்து, உங்கள் எல்லோருக்கும் அதை நிரூபித்துக் காட்டிய உபகாரத்தைச் செய்திருக்கிறாள். ஸ்வாமியை யாரும் ஏமாற்ற முடியாது; ஸ்வாமியை விஷமும் கொல்ல முடியாது என்ற உண்மைகளை உங்களுக்கெல்லாம் அவளுடைய காரியம் தானே நிதரிசனமாக்கியிருக்கிறது? என்னைப் பரீட்சை பார்த்தாள். அதில் நான் பாஸ் ஆனவுடன் பக்தி கொண்டு விட்டாள்!” என்பாராம் பாபா.
‘சீடனை குரு பரீக்ஷிப்பது போல், சீடனும் குருவைப் பரீக்ஷிக்க வேண்டும். என் காரியங்களைப் பைஸா பைஸாவாகச் செல்லுமா செல்லாதா பார்த்தே என்னை ஏற்றுக் கொள்’ என்றார் பரமஹம்ஸ ராமகிருஷ்ணர். அதையே பாபாவும் சொல்கிறார்.
அந்த அம்மாள் இதன்பின் பாபாவிடம் ஆழ்ந்த பக்தி கொண்டுவிட்டாள். தானே தனது தீச்செயலைப் புதிதாக வருவோருக்கும் சொல்லி, ஸ்வாமியின் தெய்விகத்தை நிலைநாட்டியும் பேசுவாள். எனவே இங்கு அவள் பெயரைக் கொடுத்தாலும் தவறில்லைதான். ஆனாலும் இதனால் ஒரு குடும்பத்தையே களங்கமான பழைய நினைவினால் குறிப்பிடும்படியாகி விடுமாதலால் பெயரைத் தராமல் விட்டிருக்கிறது.
பிற்காலத்தில் பாபா பலமுறை அவள் வீட்டில் உணவு கொள்ளச் செல்வதுண்டு. “சாதாரணச் சாப்பாடு போறுமம்மா. அன்னிக்கு மாதிரி ஸ்பெஷலா எதுவும் வேண்டாம்” என்று அவளைச் சீண்டிவிட்டு, அவள் கண்கலங்கும்போதே, “பங்காரு பங்காரு” என்ற பனிச் சொற்களால் அவள் கண்களின் பனிப் படலத்தை வற்றச் செய்வாராம்!
ஒரு மாலை அடியாரோடு ஆற்றங்கரை சென்றார் ஆண்டகை. பக்தி மார்க்கம் பற்றி அரிய உபதேசங்கள் அளித்தவாறே, மண்ணில் கைவிட்டு அளைந்தார். அக் கை வெளிவந்தவுடன், “ஸுப்ரம்மண்யா, ஷண்முகநாதா!” என்ற கோஷம் பக்தர் நாவிலிருந்து வெளிவந்தது.
வள்ளலின் கரத்தில் வெள்ளியிலான வள்ளிமணாளன் விக்ரஹம் மின்னியது.
“அம்மா, உனக்கே உனக்கு” என்று அதை விஷம் வைத்தவளுக்கு வழங்கினார் ஐயன்.
அந்த அம்மாள் பெயரிலேயே விஷ சம்பந்தமுண்டு. அவள் வெந்நாகமாக விஷம் வைத்தாள். நாகஸாயியோ அமுத குண்டலினியாம் நாகராஜனேயான முருகனின் பிரதிமையை அவளுக்குப் பிரதியாகக் கொடுத்தார். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்புக்கு இதைவிட உதாஹரணமுண்டா?
***
பக்தையாகும் பாக்கியம் இவளுக்குக் கிட்டியதே தவிர, எல்லாப் பகைவர்களுக்கும் கிட்டவில்லை. ப்ரஹ்லாதனையும் மீராவையும் விஷம் தீண்டாதபின்னும், ஹிரண்யனும் ராணாவும் அவர்களைக் கொல்ல வேறு சித்ரவதைகளைச் செய்தனர் அல்லவா? பாபா மஹிமையை மேலும் உயர்த்திக் காட்டவே கங்கணம் கட்டிக்கொண்டாற் போல், அவரை விரோதித்தவர்களும் சூழ்ச்சியை விடவில்லை.
அடுத்தபடியாக, அந்த அரக்கர்கள் அரக்கு மாளிகை லீலையைப் புரியப் போகிறார்கள் என்று பாபாவுக்கா தெரியாது? தம் வாஸத்தால் ஏற்கெனவே பெருமை பெற்ற சுப்பம்மாவின் வீட்டுக்கு அரக்குமாளிகை மகிமையும் கூடிவிடக் கூடாதென எண்ணினார் போலும்! அவளிடம், “அம்மா! பிராம்மணியான உன் வீட்டில் நான் இருப்பதால்தானே ஊரில் இத்தனை துவேஷம்? நான் தனியாக ஆசிரமம் வைத்துக்கொண்டு ஆசாரங்களைவிட்டால் இவ்வளவு தூரம் ஊர் கண்ணை உறுத்தாது. அப்படித் தான் செய்யப் போகிறேன்” என்றார்.
சுப்பம்மாவும், அவளுடைய சகளத்திரியான கமலம்மாவும் “கூடவே கூடாது” என்று பிடிவாதம் செய்தனர். “அவரும் போய் விட்டார். பிள்ளைக்கும் எங்களிடம் திருப்தி இல்லை. தெய்வமாக வந்த நீங்களும் போனால் தாங்கமுடியாது” என்று அரற்றினர்.
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. ஸ்தூலமாக வெளியே போனாலும் நான் உங்களோடேயே இருப்பேன். ஏன், நீங்கள் போயே போய்விட்டதாக நினைக்கும் உங்கள் பர்த்தாகூட தோட்டத்துக் கோடியில்தான் இருக்கார். போய்ப் பாருங்கோ” என்றார் பாபா.
அவரிடம் எத்தனையோ அதிசயங்களைக் கண்டிருந்தும்கூட அவ்விருவரும் இதை நம்பத்தான் இல்லை.
“நான் சொல்கிறேன், நம்ப மாட்டீர்களா? உம், போய்ப் பாருங்கோ” என்று பிடரியைப் பிடித்துத் தள்ளாத குறையாகக் கூறினார் பாபா. சுப்பம்மாவும், கமலம்மாவும் புறக்கடை சென்று பார்த்தால்…
என்ன விந்தை! எப்போதோ புகைந்து சாம்பலாகிவிட்ட கர்ணம் தம் வழக்கப்படி சுருட்டை இழுத்துப் புகைத்துக்கொண்டு மரத்தடியில் நிற்கிறார்! புண்ய தீர்த்தமாடச் செல்கையில் மீநாக்ஷியம்பிகையின் தாய் காஞ்சனமாலை, ‘புருஷன் அல்லது புத்ரனின் கைப்பற்றியே தீர்த்தமாடவேண்டுமென்பார்களே! நமக்கோ பிள்ளையில்லை, பதியும் மரித்துவிட்டாரே!’ என்று கலங்க, அப்போது மாப்பிள்ளையான ஸுந்தரேச்வரர் மறைந்த மலயத்வஜனைத் தாற்காலிகமாக வரவழைத்த வரலாறு நினைவு வருகிறது.
அன்று காஞ்சனமாலை மகிழ்ந்தாள். இன்றோ சகளத்திரிமார் அலறிப் புடைத்துக்கொண்டு வாசலுக்கு வந்தனர்.
கிண்கிண் என நகைத்த ஸ்வாமி, “பயப்படாதீங்க! இனி மேலே வரமாட்டார். போக வேண்டியது போனாத்தானே ஸரியா இருக்கு இல்லாட்டா அதுவே பயத்துக்கு இடமாறது பார்த்தீங்களா? நான் இங்கேயிருந்து போய்த்தான் ஆகணும்” என்றார்.
***
குடிசை வேய்ந்து கொண்டு தனியே சென்று விட்டார் பாபா.
ஓரிரவு குடிலுக்குள் அடியார் சிலரோடு சயனித்திருந்த ஸாயி சிரித்துக்கொண்டே வெளிவந்தார். உறக்கம் கலைந்த அடியார் எட்டிப் பார்த்தனர்.
வெளியே மையிருட்டில் நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தனர். பாபாவைக் கண்டதும் அவர்கள் கலவரமடைந்து விலவிலத்து நின்றனர்.
பாபா கலகலவென நகைத்தார். அவர்களில் ஒருவனை நோக்கி வெறும் கையை வீசினார். நெருப்புப் பெட்டியொன்று சிருஷ்டியாகி அவனை நோக்கிப் பறந்தது.
“ஐயோ பாபம்! நீயுந்தான் அப்பாயி, அப்பவே பிடிச்சுக் குடிசைக்குத் தீ வைக்கணும்னு ஒவ்வொரு குச்சியாக் கிழிச்சுப் பார்த்தே! பெட்டிதான் காலியாச்சே தவிர ஒரு குச்சியாவது பத்தவில்லை. இது ஸாயி பிரான்ட். இதை ‘யூஸ்’ பண்ணிப்பாரு!” என்றார். தன்னைக் கொல்வதற்குத் தானே ஆயுதம் படைத்துத் தரும் அற்புதர்!
அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
பகை ஓட்டம் பிடிக்க மறுத்தது.
***
ஸாயி பிரான்ட் வத்திக் குச்சியைத்தான் உபயோகித்தார்களோ என்னவோ, இன்னொரு நள்ளிரவில் மெய்யாகவே குடில் பற்றி எரிந்தது.
பக்தர்கள் பதறி விழித்தனர்.
திக்கு ஓடுவதற்குமின்றி, கதவை வெளியே பூட்டியிருந்தனர் வஞ்சப் பாதகர்.
“ஸ்வாமீ, ஸ்வாமீ!” என்று அடியார் கதறினர்.
“நானிருக்க பயமேன்?” என நளினக் கரத்தை உயரத் தூக்கி அசைத்தார் நாதர்.
அண்ட கடாக கபாடங்கள் வெடித்துத் திறப்பது போல் இடி இடித்தது. இமை கொட்டுவதற்குள் மழை கொட்டுக் கொட்டு என்று கொட்டத் தொடங்கியது.
“முழங்கி உருமெனத் தோன்றும் மழையாய் மின்னி இடித்தவன் காண்” என்ற தேவார வாசகத்தை தேவன் மெய்யாக்கிவிட்டான்.
நெருப்பு தணிந்தது.
வஞ்சகத் தீ தணியவில்லை.
***
இவரைக் கொல்வது இயலாத காரியம் என்பதால் கொலைச் சதிகளை எதிர்ப்பாளர் கைவிட்டாலும், கொலையினும் கொடியதான character assassinationல் (நற்பெயரைக் கொல்வதில்) இறங்கினர். அபவாதப் புரளிகளை அபரிமிதமாகப் பிரசாரம் செய்யத் தொடங்கினர்.
அதோடு பாபாவின் பக்தர்களுக்கு ஓயாமல் தொல்லை தரலாயினர். ஓர் உதாரணம்:
அந்நாளில் தசரா, கிருஷ்ண ஜயந்தி போன்ற தினங்களில் பாபா உலா வருவதற்காக அன்பர்கள் அலங்காரச் சப்பரம் ஜோடிப்பார்கள். அவர்கள் இப்பணியில் ஈடுபட்டிருக்கும்போது, விரோதிகள் உயரே இருந்து அவர்கள் மேல் கற்களை வீசுவார்கள். “ஸாயிராமா!” என்று சொல்லிக்கொண்டே அடியவர் பணியைத் தொடருவார்கள். அதற்கு வெகுமதியாக, கற்கள் பூ இதழ்களாக மாறி அவர்கள் சிரசில் மெத்தென விழும் – ஐயன் தூவும் ஆசி மலர்!
ஹரிச்சந்திரன் சந்திரமதியின் மேல் வாளை வீச அது பூமாலையாக விழுந்தது என்பது கட்டுக்கதையில்லை என்று இனி நம்பலாம்தானே?
‘பூ இவ்வளவுதானே?’ என்று பாபா சங்கல்பித்தால், கல்மாரி பூமாரியாக வேண்டியதுதான்!
சூளை அன்பர் ஸ்ரீ கணேஷ் ராவ் தாமே நேரில் கண்டதாகக் கூறும் ஒரு நிகழ்ச்சி. சில ஆண்டுகளுக்கு முன் ஸ்வாமி பெங்களூரில் கீதா யக்ஞம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரை நோக்கி ஒரு கல் பறந்து வந்தது. எவனோ மகாபாபிக்கு (அவனைப் பாபி என்பதையும் பாபா ஒப்ப மாட்டார்தான்!) இந்தப் புண்ய மூர்த்தியைக் கல்லால் அடிக்கும் கொடூர ஆசை தோன்றியிருக்கிறது. அவை விலவிலத்தது. ஸ்வாமியோ கலகலப்பாகவே உரையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். கல் ரோஜா மலராக மாறி அவரை அர்ச்சித்தது! ஆயிரம் கண்கள் கண்ட அதிசயக் காட்சி! ஆனாலும் கயவனின் கல்மனம் மலராகி அவன் பாபாவின் பாதமலரில் விழுந்ததாகத் தெரியவில்லை!
***
பல பகைவர்களைப் பகைவராகவே வைத்து விளையாட்டுப் பார்க்கும் பகவர் பரீக்ஷை பார்க்க வந்த சிலரைத் துதிக்க வைத்துத் திருப்புவதும் உண்டு.
இப்படித்தான் லக்ஷ்மையா பாபாவைப் பரீக்ஷிக்க வேண்டும் என்றே நாலைந்து பேருடன் பர்த்திக்கு வந்தார். அவர் ஷீர்டி பாபாவிடம் பக்தி கொண்ட நல்ல மனிதர்தான். அவரது அவதாரமே நம் பர்த்தியார் என்பதில் ஏனோ ஐயுற்றார். அன்று பூர்ணிமை. வழக்கம் போல் பாபா சித்ராவதி தீரத்தில் அடியாரைத் தம் அன்பின் முழு நிலவில் முழுக்குவதற்காக அழைத்துச் சென்றார். மதியத்தை விழுங்க எண்ணிய ராஹு கேதுக்களான லக்ஷ்மையா கோஷ்டியையும் இட்டுச் சென்றார்.
ஆற்றங்கரையின் இன்னிசைக்குப் பொருந்தாத அபஸ்வரக் கேள்விகளை அந்த கோஷ்டியினர் தொடுக்கலாயினர். சளைக்காமல் பதிலளித்து, ராஹுவும் கேதுவும் தீண்டவொண்ணா மதியமாக இலகினார் மாமதியாளர்.
பேசிக்கொண்டே அக்கோஷ்டியை மட்டும் பாபா இடுக்காட்டருகே இட்டுச் சென்று அமர்ந்தார்.
கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர், “இப்போதே, இங்கேயே உங்கள் சக்தியால் எங்களுக்குச் சாப்பிட ஏதாவது வரவழைத்துத் தரவேண்டும்” என்றார்.
“பேஷாக” என்றார் அன்னபூர்ணர். “மசாலா தோசையா? போளியா? ஸொஜ்ஜியா? லட்டுவா? என்ன வேணும்?”
அவர்கள் தமக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். “இதை எல்லாம் இவர் மாஜிக் செய்து ஏதேனும் ஹோட்டலிலிருந்து கடத்திவரக் கூடும். இந்தக் கடத்தலைத்தான் அறியாமக்கள் ‘சிருஷ்டி’ என்கிறார்கள். எனவே இந்தப் பருவத்தில் விளையாத பழம் எதையேனும் கேட்போம்” என முடிவு செய்து, “மாம்பழம் வேண்டும்” என்றனர்.
“ஓ!” என்றார் ஸ்வாமி.
“யத்ன ப்ரயத்னமுல் மானவதர்மமு
ஜய அபஜயமுல் தைவாதீனமு”
என்று பாடி, “மனிதன் கொஞ்சமாவது முயற்சி செய்தால்தான் அவன் விரும்புவதற்கு தெய்வம் கை கொடுக்கும். உங்களில் ஒருவர் மண்ணைத் தோண்டிப் பாருங்கள்! பழம் கிடைக்கிறதா பார்ப்போம்” என்றார்.
உடனே ஒருவர் தாம் உட்கார்ந்த இடத்திலேயே தோண்டினார். ‘ஷாக்’ அடித்ததுபோல் கையை எடுத்தார்.
“ஸாமி! சுடுகாட்டுக்குக் கூட்டி வந்திருக்கீங்க. இங்கேயானா தோண்டினா கையிலே என்னவோ ஜிலீர்னு படுது. சவமா கிவமா இருக்கப்போவுதேன்னு பயமாயிருக்கு” என்றார் அவர்.
பதினேழு வயது பாபா, பாப்பாவாக மண்ணில் புரண்டு புரண்டு சிரித்தார். “நாயனா! சவத்துக்கிட்டே ஏன் பயம்? நாமும் அப்படி ஆகத்தானே வேணும்? பார்க்கப் போனா ஒரு தீங்கும் பண்ணாத சவத்தைவிட உயிரோடு இருக்கிற நம்மைக் கண்டேதான் நாம் பயப்படணும்” என்றார் பொருள் பொதிய.
லக்ஷ்மையாவைப் பார்த்து. “அவர் பாவம், பயப்படறாரு. நீ பங்காரு, போய்க் குழிக்குள்ளே பாரு” என்றார்.
நண்பர் தோண்டிய ‘வளை’க்குப் பக்கத்தில் வந்தபோதே கம்மென்று மாம்பழ மணம் லக்ஷ்மையாவின் நாசியில் ஏறியது!
“பழந்தான் ஸ்வாமி” என்றார்.
“லோக நாடகத்தைப் பார்த்தியா? ஒருத்தன் பிணம்னு சொல்கிறதையே இன்னொருத்தன் பழம் என்கிறான். சரி, இன்னம் கொஞ்சம் தோண்டி, அதை எடுத்துண்டு வா.”
மேலும் அகழ்ந்ததில், காலமில்லாக் காலத்தில் ஒரு குண்டு மல்கோவா தண்ணெனக் கைக்கு வந்தது.
பாபாவைத் தோண்டி ஆழம் பார்க்க வந்தவர்களுக்குள் பக்திப் பழரசம் சுரக்கத் தொடங்கிவிட்டது.
லக்ஷ்மையாவும் உடன்வந்தோரும் பர்த்தியார் ஷீர்டியார் தானா என்று சந்தேகித்தாலும் தங்கள் சந்தேகமே சத்தியமாயிருக்கவேண்டும் என்று எண்ணியவரல்லர். இச்சந்தேகத்தை அவர் பொய்ப்பித்துக் காட்டினால் அதை ஏற்று அவரைப் போற்றத் தயாராகவே அவர்கள் இருந்தனர். தம் முடிவே முடிவென்று தீர்மானமாக புத்தியை அடைத்துக் கொள்ளாமல் திறந்த மனப்பான்மையுடன் அணுகுவோரின் சந்தேகங்களையும் நம் ஐயன் மதித்துப் பரீக்ஷைக்கு உட்பட்டு ஸந்தேஹம் களைந்து நன்மதியும் பக்தியும் அருள்வாரென்பதற்கு இங்கே உதாரணம் காண்கிறோம்.
“இத்தனை பேருக்கு இந்த ஒரு பழம் எப்படிப் போறும் ஸ்வாமி?” என்று கேட்டவாறு கனியை ஸ்வாமியிடம் கொடுத்தனர்.
ஸ்வாமி அங்கை அசைக்க அதிலே ஒரு கத்தி வந்தது. பழத்தைத் துண்டம் போடலானார்.
அதென்ன ஒரு பழமா? அல்லது ஒரு கூடைப் பழங்களா? நறுக்க நறுக்கத் துண்டங்கள் வந்துகொண்டேயிருந்தன. இன்னம் அரைப் பழம் கூட நறுக்கியாகவில்லை.
கோஷ்டியினர் முட்ட முட்டத் தின்று திணறுகிறார்கள். பாபாவோ விடமாட்டேன் என்று தே மாந்துண்டங்களைத் தீங்கரத்தால் மேன்மேலும் அவர்களிடம் வீசிக் கொண்டிருக்கிறார். “தின்னாட்டி விடமாட்டேன். இது சுடுகாடு இல்லே? பூதங்களைக் கூப்பிட்டுப் பிடிச்சுக் கொடுத்துடுவேன்” என்று பூச்சிக் காட்டுகிறார் குழந்தைகளை மிரட்டிச் சாதமூட்டும் தாய்! “அடித்தடித்து அக்கார முன் தீற்றிய அற்புதம் அறியேனே” என்று மணிவாசகர் பாடியது நினைவு வருகிறது!
பூதத்தைச் சொல்லிப் பயமுறுத்திய போதிலும் எந்தப் பூதம் வந்தாலும் பயப்பட மாட்டோம் எனும்படியாக பூஞ்சிரிப்பலைகளைப் பூர்ணிமை நிலவில், தீர்த்தக்கரையில் பிரவகிக்கிறார். பிற்காலத்தில் லக்ஷ்மையா கோஷ்டி பாபாவின் பரம பக்தர்களானதைச் சொல்லவும் வேண்டுமா?
who came to scoff remained to pray
என்று கோல்ட்ஸ்மித் சொன்னதைப் பிரத்தியக்ஷமாக்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் பல நம் நாதனின் சரிதத்தில் நிகழ்ந்துள்ளன. இவரே கோல்ட்ஸ்மித்தாகிப் பல ‘பங்காரு’க்களை அழகு அணியாக்கியிருக்கிறார். காலமிலாக் காலத்தில் கனி காட்டியவர், கசந்து வந்த பல இதயங்களையும் வலிந்து கனிவித்திருக்கிறார். இதைத்தான் மஹான்கள் வம்பே பழுத்த பழம் என்பது.
ஒருமுறை பாபா தம்மிடம் வந்த நாலைந்து பேரைப் பார்த்த மாத்திரத்தில், அவர்களில் இன்னார் கடிகாரத்தை இன்னார் மாற்றிக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். உடனே அவர்கள் தடதடவென அவர் முன் வீழ்ந்து ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர்.
அவர்கள் நாஸ்திகர்கள். இவரைக் குடைந்து குட்டை வெளிப்படுத்தவே கங்கணம் கட்டிக்கொண்டு வந்தவர்கள். வரும் வழியில், “நாம் ரிஸ்ட் வாட்ச்களை மாற்றிக் கட்டிக் கொள்வோம். பரட்டைத் தலையிடம் நிஜமாகவே சரக்கு இருந்தால் கண்டுபிடித்துச் சொல்லட்டுமே!” என்று சொல்லிக் கடிகாரங்களை மாற்றிக் கொண்டனர். அதனால்தான் அவர்களைக் கண்ட மாத்திரத்தில் இவர் அவர்களது குட்டை உடைக்க, அவர்கள் கண்டனம் செய்ய வந்த இடத்தில் தண்டனிட்டனர்.
இன்னொரு சமயம். ஆற்றங்கரையில் சுமார் ஐம்பது பக்தர் சூழ அமர்ந்திருந்தார் பாபா. ரக்ஷணம் தரும் ஸ்வாமியை பக்ஷணம் கேட்டார் ஓர் அடியார். அந்நாட்களில் மணலிலிருந்து பாபா எடுத்து வழங்கிய பணியாரங்கள் யதேஷ்டம்.
இன்று பாபா எங்கோ நினைவாக ஆனார். “ஐயோ பாபம்! எந்த கஷ்டபடி ஒஸ்தாருவாரு ரானி? (ஐயோ பாவம்! எத்தனை கஷ்டப்பட்டு வருகிறார்கள்?”) என்று தமக்குத் தாமே சொல்லிக் கொள்வதுபோல் கூறினார்.
பக்தர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்தனர். யாரும் வருவதாகத் தெரியவில்லை.
சிறிது போது சென்றது. ஆற்றின் அக்கரையில் தொலை தூரத்தே காரின் தலைவிளக்கு வெளிச்சமிட்டது. வண்டி நெருங்கியது. அக்கரையில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து இறங்கிய நாலுபேரும் ஸ்வாமியிருந்த இடம் நோக்கி வந்தனர்.
அவர்களில் எவரும் ஸ்வாமியை வணங்கவில்லை. சற்றே எட்டத்தில் விறைப்பாக அமர்ந்தனர்.
“பக்ஷணம் கேட்டாயில்லை?” என்று திடீர் நினைப்பு கொண்டாற்போல் பாபா பக்தரிடம் கேட்டார். ஆற்று மணலை எடுத்து அவர் கையில் தூவினார். புத்துருக்கு நெய்யின் மணம் வீசும் பெரிய மைசூர்பாகுக் கட்டியாக மாறியிருந்தது மணல்.
மற்றவர்கள் கையிலும் இப்படியே மணலைத் தூவிச் சென்றார். ஒவ்வொருவர் கையிலும் முதல் தரமான மைஸுர்ப் பாகு!
காரில் வந்த வணங்காமுடிகள் பக்கமும் பாபா கையை நீட்ட, அவர்களும் மணலை வாங்கிக் கொண்டனர். ஆனால் அவர்கள் கைகளில் மட்டும் மணல் சாக்ஷாத் மணலாகவே இருந்தது! அவர்கள் முகத்தில் அசடு வழியத் தலை கவிழ்ந்தனர்.
“பாபம், வாரி வாரி தலபுலு வாரி வாரிகி (பாவம், அவரவர் எண்ணப்படி அவரவருக்கு)” என்று உருகிச் சொன்ன ஸ்வாமி, “ஐயோ பாவம்! ஈரோட்டில் கிளம்பினதிலிருந்து எத்தனை கஷ்டம்? ஐந்தாம் மைலில் ஆக்ஸில் உடைஞ்சுது. வேறு வண்டி பிடிச்சு எடுத்து வந்தீங்க. பெங்களூரில் டயர் வெடிச்சுது. புது டயர் போட்டுக்கிட்டீங்க. இங்கே வந்தா எல்லாருக்கும் கிடைக்கிற பக்ஷணமும் கிடைக்க மாட்டேங்கிறது!”
ஈரோட்டிலிருந்து வந்த நாஸ்திகர்களை ரோட்டுக்குத் திரும்புகிறார். ஸநாதன ஸாரதி ஓட்டும் வண்டியாதலால் வழியே எந்த விபத்தும் வராது!
அவர்களை ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். ஒவ்வொருவருக்கும் தனிப்பட கோரிக்கை (அதாவது, பேட்டி) வழங்கினார். அவர்களுக்குத் தமது வாழ்வு முழுதும் இவருக்கு வெளிச்சம் என்பது பேட்டியின்போது தெரிந்தது. அப்படி வெளிச்சமாயிருந்தும் இவர் சபிக்காமல் வரம் தருவதில் உருகி நின்றனர்.
பாபா தாமே ஸ்ருஷ்டித்துத் தம் கரத்தாலேயே அன்போடு அழுந்தப் பூசிய திருநீறு துலங்கும் நெற்றியோடு திரும்பினர் அந்த முன்னாள் நாஸ்திகர்கள். ‘கூன் பாண்டியன்’ சம்பந்தர் கையால் நீறு பூசப்பெற்று நின்ற சீர் நெடுமாறனான கதை மீளவும் நடந்தது. ஆம், நாஸ்திக வாதம்தானே உள்ளத்துக்குக் கூன்? அதை நிமிர்த்தி விட்டாரே பர்த்திவாஸர்!
ஆனால்… எல்லா நாஸ்திகருக்கும் இந்த நற்பேற்றை நல்குகிறாரா? விளையாடுகிறார். ஏனோ!