புட்டபர்த்தி – 21

அத்தியாயம் – 21

ஸத்ய ஸாயி பாபா

நீ ஸத்தியத்தை உணருவாபாக! அந்த ஸத்தியமே உன்னைக் கட்டிலிருந்து விடுவிக்கும்.

பைபிள்: புது ஏற்பாடு, ஜான்

பாபா இன்னமும் நாலு முழ வேஷ்டி, அரைக்கைச் சட்டை, சாதாரண கிராப் முடி இவற்றோடு தோற்றத்தில் ஸத்யாவாகத்தான் இருந்தார். பிராம்மணபல்லி மாந்திரிகன்

மழித்தெடுத்தபின் மறுபடி வளர்ந்திருந்த அந்தக் கிராப்பினூடே தெரியும் மூன்று எக்ஸ் தழும்புகளைக் காணும்போதெல்லாம் மக்களுக்குத் துயரமும் அச்சமுமாக இருக்கும். அந்த வடுக்கள் தெரியாதபடி அவர் விரித்த சடையால் இன்னம் தலையை மூடிக் கொள்ளவில்லை. புட்டபர்த்தி பாபாவின் ஸ்பெஷல் அடையாளங்களான கஃப்னி உடை, பம்பை முடி இரண்டுமே வந்து சேராத ஸத்யாவாக இருந்தார். அதனால் புட்டபர்த்தி மக்கள்பாலஸாயிஎன்பதோடுஸத்யா ஸாயிஎன்றும் குறிப்பிடலானார்கள்.

இதிலும் ஓர் அழகைக் கண்டார் நம் கதாநாயகர். மக்கள் வாக்கில் வந்தஸத்யா ஸாயிபெயரிலேயே சிறு மாற்றம் செய்துஸத்ய ஸாயிஎன்ற நாமத்தை உகந்தார். தன் புதுப்பிறவியில் கொண்டஸத்ய நாராயணன்என்ற பெயர் இணைந்திருப்பது; ஸத்யமாகவே ஸாயிபாபாவின் அவதாரந்தான் என அடித்துச் சொல்வதாக தொனிப்பது; ‘ஸத்யம்எனப்படும் சர்வ ஆதாரமான மெய்ப்பொருளே ஸாயி தத்துவம் எனக்காட்டுவது ஆகிய மூன்று விசேஷங்கள் இதில் உட்கிடையாக இருந்ததால் இன்று பார் போற்றும் பாவனஸத்ய ஸாயி பாபாஎன்ற திருநாமத்தாலேயே தம்மைக் குறிப்பிட அநுமதித்தார்.

இதிலே ஒரு விந்தை! ஷீர்டி ஸாயிபாபா அவரது காலத்திலேயே தபோல்கர் இயற்றியஸாயி ஸத்சரித்ரம்என்ற மராத்திய புனித நூலில்ஸத்ய ஸாயிஎன்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

ஷீர்டியார் ஸத்யஸாயி என்று பெயர் பெற்ற ஒரு சந்தர்ப்பம் பாருங்கள். பீமாஜி படேலின் வீட்டில் ஸத்ய நாராயண விரதம் அநுஷ்டிப்பதுண்டு. அவருக்குக் கொடுமையான நோய் வந்து, பிறகு ஷீர்டிபதி அருளில் அது குணமாயிற்று. அந்த மகிழ்ச்சியில் அவர், ‘ஸத்யநாராயண விரதம் எதற்கு? பிரத்தியக்ஷ தெய்வமான ஸத்யஸாயி விரதமே இருக்கிறேன்எனச் சொல்லி ஷிர்டி பாபாவின் படத்தை வைத்துப் பூஜை செய்தார். விரத முடிவில் ஸத்ய நாராயண சரித்திரத்தைப் பாராயணம் செய்வது வழக்கம். இவரோ, “ஸத்யஸாயி கதையைப் பாராயணம் செய்கிறேன்என்று சொல்லி ஷீர்டி நாதரின் வாழ்க்கை வரலாற்றைப் படனம் செய்தார்! ஸத்ய நாராயணப் பெயருடனேயே அந்த ஸாயி பிறக்கப்போவதை அப்போது எவரே அறிந்திருக்க முடியும்?

1950களில் புட்டபர்த்தி பாபா பற்றிக் கேள்விப்படாத ஒரு மஹாராஷ்டிரர் ஷீர்டி பாபா பற்றி எழுதிய கவிதையில் அவரையேஸத்ய ஸாயிஎன்று குறிப்பிட்டார். பிறகு ஸத்ய ஸாயி என்றே ஒருவர் வந்திருப்பதை அறிந்து அதிசயித்துப் புட்டபர்த்திக்கு ஓடிவந்தார். ஷீர்டிநாதனே இவர் எனத் தெளிந்து இவரது பரம பக்தரானார். ‘ஸத்ய ஸாயிஎன்ற மஹாமந்திர நாமத்தில் நாமறியாத மர்மங்கள் இன்னும் எத்தனை உள்ளனவோ?

***

நாளுக்கு நாள் அடியார் கூட்டம் அதிகரித்தது. நோயை ஒருவர் குணப்படுத்துகிறார். என்றால் கூட்டம் சேரக் கேட்பானேன்? அற்புதம் என்றாலே மக்களுக்கு ஆகர்ஷணம் இருக்கும். அதோடு பிணிதீர்க்கும் பணியும் சேர்ந்து விட்டாலோ?

கர்ணத்தின் வீட்டு அறையும் கூடமும் போதாமல் கூட்டம் நெரிந்தது. வியாழக்கிழமை மட்டுமின்றி எல்லா நாட்களிலுமே மக்கள் வரலாயினர். அனந்தப்பூர் மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி, ஆந்திரத்தின் மற்றப் பகுதிகளிலிருந்தும், மைசூர் ராஜ்யத்திலிருந்தும், நம் தமிழகத்திலிருந்துங்கூடப் பலவிதமான குறைகள் தீருவதற்காக மக்கள் அந்த 1940களின் தொடக்க ஆண்டுகளிலேயே வரலாயினர்.

கீதையில் கண்ணன் குறிப்பிட்ட ஞானியர், ஞான ஸாதகர், இன்னலுற்றோர், பொருள் வேண்டுவோர் என்ற நாலு தரப்பட்ட பக்தர்களில் பின் இரு இனத்தரே நிறைய இருப்பார்கள். இவர்கள் வெறும் லௌகிக நோக்கில் தன்னை நாடுவதைக்கூட கீதாசாரியன் ஆமோதிக்கிறான். நமக்கு மேம்பட்ட ஒரு கருணைச் சக்தி இருக்கிறது எனக் கொண்டு அதனிடம் இவர்கள் இன்னல் தீரவும், வறுமை நீங்கவும் துணை கோருகிற அளவில் இவர்களது லௌகிகப் பிரார்த்தனையும் வரவேற்கத் தக்கதுதான். இப்படிப்பட்டவர்களையும் வரவேற்று, அவர்கள் நிலைக்கே இறங்கியதாகக்காட்டி, அவர்கள் வேண்டும் வரங்களைத் தந்து படிப்படியாக அவர்களை மேல் நிலைகளுக்கு அழைத்துப் போவதே ஜன்மப் பணி எனக் கொண்டார் ஸத்ய ஸாயி.

முதலில் பக்தர்களுக்கு அவர்கள் விரும்புவதையே நான் கொடுப்பதற்குக் காரணம், பிற்பாடு நான் அவர்களுக்கு எதைத் தர விரும்புகிறேனோ அதை அவர்களாக விரும்பிக் கேட்குமாறு செய்யத்தான்என்று இதை ஷீர்டி நாதர் சுவைபடக் கூறுவார்!

முதலில் தாங்கள் விரும்புவதை இவர் வழங்குவார் என்று அவர்கள் எப்படி நம்ப முடியும்? அப்படி நம்பி வந்தால்தானே, அப்புறம் அவர்களை மேலே மேலே அழைத்துப் போகிற வாய்ப்பே உண்டாகும்? இந்த அடிப்படை நம்பிக்கையை ஆரம்பத்தில் ஊட்டவே, அதீத சக்தியைக் காட்டி அற்புதங்கள் செய்தார்.

மக்களும் நிறைய வந்தனர். வியந்தனர். மலைத்தனர். வியப்போடு, மலைப்போடு நிறுத்திவிடாமல் இவர் அன்பைக் கொட்டினார். “சேயன், அணியன்என்று தேவாரம் சொல்வது போல், தம் பேராற்றலால் அவர்களுக்கெட்டாச் சேயனாக இருந்தவரே, அவர்களைத் தம் சேயாக்கி அல்லது தாமே அவர்களுக்குச் சேய்போல் ஆகி ப்ரேமையைப் பொழிந்து அண்மைக்கும் அண்மையிலுள்ள அணியரானார்.

ஏதோ ஒரு சிறிய உபாஸனை செய்து ஒரு சிறிய அற்புத ஸித்தி ஒருவருக்கு வாய்த்துவிட்டாலே, அவர் மற்றவர்களைவிடத் தாம் மகாபட்டவர் என்பதுபோல்போஸ்செய்வதைப் பார்க்கிறோம். ஆனால் பதினாலே வயதில் பேராற்றல் சமுத்திரமாக இருந்த பாபாவோ மக்களில் ஒருவராகவே இனிக்கப் பழகி, இயல்பாக அவர்களோடு உட்கார்ந்து பகவந்நாமாக்களைப் பாடி, அவர்களையும் பாட வைத்தார். உத்தம உபதேசங்களை உபந்நியஸித்தார். அந்தத் தத்துவச் சிறப்பில் அவர்கள் அயர்ந்தபோது, தமாஷ் செய்து அவர்களைத் தமக்கு வெகுஅருகே இழுத்துச் சேர்த்துக் கொண்டார். மிராகிள்களைத் தாமும் ஆயாசப்படாமல், காண்போரையும் மூச்சுத்திணற வைக்காமல், சர்வ லகுவாக, லேசாக, லீலையாகச் செய்தார். அற்புதத்துக்காக வந்தவர்கள் பேரற்புதமாம் அன்பை உணர்ந்தனர். அன்பே வடிவான இறைவனிடம் நினைவை ஆழ்த்தினர். இவ்வாறு ஆத்மிகத்துக்காக, ஆஸ்திகத்துக்காகவே அற்புத சக்தியைப் பிரயோகித்தார்.

கர்ணம் வீட்டு அறையிலும், கூடத்திலும் கர்ணாமுதமாக நாம பஜனை நிறைந்தது. கூட்டத்துக்குக் கரை போட அந்தக் கூடம் போதவில்லை. சுப்பம்மாவும் கமலம்மாவும் வெளியே ஒரு கொட்டகை போட்டனர். அதுவும் போதாமல் அதை நீட்டினர். அப்படியும் போதவில்லை.

வந்தோருக்கெல்லாம் அன்னம் படைக்கச் சொல்வார் பாபா. அந்தக் காலத்தில் புட்டபர்த்தி கிராமத்தில் ஹோட்டல் ஏதும் கிடையாது. (பாபாவைப் பார்க்க ஹிந்துப்பூர் ராணுவ அதிகாரி ஒருவர் ஜீப்பில் சித்ராவதியைக் கடந்து வந்தபோதுதான் அந்தக் கிராமம், முதன்முதலாக ஒரு ஜட வாகனம் யந்திர சக்தியில் ஓடுவதையே பார்த்தது என்றால் அது இருந்த நிலையை ஊகிக்கலாம்.) குண்டும் குழியுமான சாலையிலும், ஆற்றுப்படுகையிலும் நடந்தே வந்த அக்கால அடியாருக்கு உணவு படைப்பதைத் தம் பொறுப்பாகவே ஏற்றிருந்தார் பாபா.

சமையலறைக்கு வருவார். இரு தேங்காய்கள் கேட்பார். அவற்றை ஒன்றோடொன்று மோதி உடைப்பார். இரு காய்களும் சரிபாதியாக உடைந்திருக்கும். அதிலிருக்கும் இளநீரை எடுத்து அன்னத்தின் மீதும், மற்றும் குழம்பு, கறி, மோர் முதலியவற்றின் மீதும் தெளித்துவிட்டு, ‘பரிமாறலாம்என்பார். பகலிலிருந்து தொடங்கி அந்தி சாயும்வரை வருகிற அத்தனை அடியார்களுக்கும் பரிமாறப் பரிமாற த்ரௌபதி, மணிமேகலைகளின் அக்ஷய பாத்திரமாக அவை சுரந்து கொண்டேயிருக்கும்! பரதன் பரிவாரத்துக்கு பரத்வாஜர் இட்ட அக்ஷய அன்ன லீலை இன்று இந்த பாரத்வாஜியிடம் தினே தினே தொடர்ந்தது. கார்த்திகைத் திங்களன்று பிறந்த இந்த சோம சுந்தரரின் திருவிளையாடல்களை அறுபத்து நாலாக இன்றி அறுபத்து நாலாயிரமாக வர்ணிக்கும்போது, ‘அன்னக் குழி அழைத்த படலம்என்பதே ஒரு தனிப் புராணமாக விரிந்து விடும்!

இந்திரா தேவி என்ற இந்தியப் பெயர் தரித்த, அமெரிக்கப் பிரஜையாகிவிட்ட, ருஷ்ய மாதரசி பாபா குறித்து எழுதியுள்ள Sai Baba and Sai Yoga என்ற நூலில் கூறும் ஒரு விவரம்: 1968ல் சிவராத்ரிக்கு மறுநாள் புட்டபர்த்தியில் குழுமியிருந்த முப்பதாயிரம் மக்களுக்குப் பாரணையாக உணவுப் பொட்டலங்கள் பிரசாந்தி நிலய போஜன சாலையிலிருந்து பாபாவின் அன்பளிப் பாக வழங்கப்பட்டதைக் கண்டார் இந்த அம்மை. தாம் கண்ட அளவில் இத்தனை பெரும் கூட்டத்துக்கு உணவு தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் ஏதும் அந்த போஜன சாலையில் செய்யப்படவில்லை என்று அவருக்குத் தோன்றியது. ஆச்சரியமுற்று, சம்பந்தப் பட்டவர்களை எப்படி இந்த ஜன சமுத்திரத்துக்கு போஜனம் தயாரித்தனர் என வினவினார். அதற்கு அவர்கள் கான்டீனால் முடிந்த ஓரளவுக்குத்தான் உணவு தயாரித்ததாகவும், அதுவே ஸ்வாமியின் கர ஸ்பரிசத்தால் பல்லாயிரவருக்கும் பரிமாறப் பரிமாற விருத்தியானதாகவும் தெரிவித்தார்கள். ஐந்து ரொட்டித் துண்டங்களையும், இரு மீன்களையுமே இயேசு நாதன் ஒரு பெருங்கூட்டத்துக்கு வயிறார விநியோகித்த விந்தையை அம்மை நினைவு கூர்கிறார்.

இப்பேர்ப்பட்ட அன்னபூர்ணேச்வரியால் அந்த இரு தேங்காய்களை மட்டும் ஸ்ருஷ்டிக்க முடியாதா என்ன? காலிப் பாத்திரத்தில் கைவிட்டே எவ்வளவோ முறை அதில் அன்னத்தை நிரப்பியவர், இப்போது இவர்கள் முன்னரே கொஞ்சம் சமைத்து வைத்ததைத்தானா இளநீர் தெளித்து விருத்தி செய்ய வேண்டும்? சங்கல்ப மாத்திரத்திலேயே உணவு படைத்து விடலாமே! எதற்குத் தேங்காயும், இளநீரும், சிறிதளவு உணவு வகைகளும் வேண்டுமாம்? இதுதான் லீலா விநோதம் என்பது! உபயோகத்தை மட்டும் பூர்த்தி செய்வது யந்திர கதியாகிவிடும். அதிலே ஓர் இன்பத்தை, கிளுகிளுப்பை, ஆர்வ அம்சத்தை, கலை எழிலை உண்டாக்கினாலே லீலையாகிறது. அன்று பாகவத காலத்தில், மழையே பெய்யக் கூடாது என்று கோவிந்தன் சங்கற்பித்திருந்தாலே போதும். இந்திரன் ஓய்ந்து போயிருப்பான். ஆனாலும், பகவான் ஏன் அவனை மழை பெய்யவிட்டுத் தாம் கோவர்த்தனத்தைத் தூக்கி நின்று அதைத் தடுத்தார்? பக்தருக்கு லீலானந்தத்தையும், தன் அன்பின் இன்பையும் தரத்தானே?

இன்னொன்று: மக்கள் தங்களால் முடிந்ததைக் கூடச் செய்யாமல் எல்லாமே அத்புத சக்தியால் நடக்கட்டுமென்றிருப்பது தவறு அல்லவா? அதனால்தான் பக்தர்கள் முடிந்த அளவு சமைக்கச் செய்து, அதையே அத்புத சக்தியால் அக்ஷயமாக்கினார் நம் அக்ஷயவருஷ அவதாரர் எனலாம்.

நாலாண்டுக் காலம் கர்ணத்தின் இல்லமே ஐயனின் இருக்கையாயிற்று.

இச்சமயத்தில் தொடங்கி, அடுத்த சில ஆண்டு முடியத்தான், பழங்கால ஸாயி பக்தர்களால் பாடப்பெறும் ஏராளமான கீதங்களை அவர் யாத்து அளித்தது. ‘யாத்துஎன்றால் யோசித்து, இட்டுக் கட்டினாரா என்ன? ஆசுகவி என்றாலும் போதாது; அத்தனை வேகமாக அவர் வாக்கிலே புதுப்புதுப் பாடல்கள் புனலாகத் துள்ளி வந்து சில்லெனப் பாயும். யாவும் பக்திப் பாடல்கள். அவற்றை மக்கள் திருப்பிப் பாடுகையில் அவற்றின் சொல், இசை இரண்டுமே அவர்களுக்கு பக்தி உணர்வை உசுப்பிவிட்டு விடும். அதோடு எதிரே அமர்ந்து அவற்றைப் பாடுவதோ பாபா. பரவசத்துக்குக் கேட்பானேன்! இவை மிகப் பெரும்பாலும் தெலுங்குப் பத்யங்களாகும். ஓரிரு தமிழ்ப் பாட்டுக்களும் உண்டு! நிறைய நாமாவளிகளும் பாடினார்.

எப்படிப் பாடினார்? பக்தனாகவா பாடினார்? பரமனைக் கரைந்துருகியா வேண்டினார்? இல்லை. பக்தித் துதிகளில் பெரும்பாலானவற்றுக்கு உரிய தீனமும் சோகமும் அவர் பாடும்போது அதிகமாக தொனிக்காது. பக்தர்களுக்கு நைச்சியமும், தைனியமும், பாப மன்னிப்புக் கோரும் பச்சாத்தாப உணர்வும் இருக்கவேண்டுமென்ற அளவுக்கு அவர்களை முன்னிட்டு இவ்வகையிலும் தாமே பாடிக் கற்றுக் கொடுத்ததும் உண்டுதான். இப்படி சொந்த ஸாஹித்யம் மட்டுமின்றிப் பிற மஹான்களின் கீதங்களும் இசைத்துப் பயிற்றுவித்தார். எனினும் பகவானாக அன்றி பக்தனாகத் தம்மை ஒருபோதும் நினைக்க முடியாத அவர், மிகப் பெரும்பாலும் உற்சாகத்தில் களித்துக் கொண்டுதான் பாடுவார். முதலிலேயே மத்திம காலத்தில் பாடுவார். பிறகு வேக கதியில், அதிவேக கதியில் பாடுவார். பிறரும் விருவிருப்புடன், ஆனந்தமாகப் பாடுவதையே வெகுவாக ரஸிப்பார். விதவிதமாகக் கைகளால் தாளமிட்டும், குழந்தைபோல் தொடையில் குத்திக் கொண்டும், வட்டவட்டமாகச் கரங்களைச் சுழற்றியும், சிரத்தை உருட்டியும் ரஸிப்பார். கொஞ்சம்கூடத்தொய்ந்துபோகவிடாமல் பான்டமாஸ்டர் போல், விரல் வீச்சாலேயே தாளகதியை விரைவு படுத்துவார். உயர்ஜாதி அரபுப் புரவிகள்போல் சங்கீர்த்தனம் உயிர்த்துடிப்புடன் செல்வதைத்தான் அவர் விரும்புவார். அவரே பாடும்போது ஆனந்தமான இறையுணர்வு தான் பஜனையில் நாம் காண்பதே தவிர, சோகமான பிரார்த்தனைப் பிளிறல் அல்ல. நாம் பகவானிடமிருந்து பிரிந்து இருப்பதால் சோகித்துப் பாடுகிறோம்; அவரோ ஒன்றியிருப்பதால் சுகித்தே பாடுகிறார். சுகத்தின் முடிவான சாந்த ஸமாதியில் அவர் பிரம்மாகத் தோய்ந்திருப்பதையும் பிறர் பாடி அவர் ரஸிக்கிறபோது காண்கிறோம்.

குழந்தையாக பாபா பஜனை செய்த நாளிலிருந்தே இது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். அவர் தாமே பக்தனாக இருந்து தழைந்து, கரைந்து, கும்பிட்டது என்பது கிடையவே கிடையாது. பக்தரைப் போலப் பிரார்த்தனை பாடிய போதிலும், பள்ளியிலே மணியடித்துப் பூஜை செய்தபோதிலுங்கூடத் தம்மை தீனனாக அவர் காட்டிக் கொண்டதில்லை.

மற்ற மஹான்களுக்கும் இவருக்கும் இது ஒரு பெரிய வேறுபாடு. முற்றிலும் நமக்கு வழிகாட்டவே வந்துள்ள எளிமை பின் நிறைவான ராமகிருஷ்ணர், சாரதாமணி தேவி, காஞ்சி முனிவர் போன்றோர் குட்டிக் கிராம தேவதைகளுக்குக்கூடக் கும்பிடு போடுபவர்கள். ஆனந்தமயீ மா, நம் கதாநாயகரைப் போலவே, “நான் சாதனை செய்து ஆத்மிகத்தில் வளர்ந்தவள் அல்ல; பிறந்ததலிருந்தே நான் பூரண வஸ்து. ஒரு லீலையாகவே மந்திரதந்திரஜபயோகபூஜாதி சாதனைகள் செய்வதாகக் காட்டினேன்என்பவர், இவரும் ஒரு கோயில்குளம் என்று சென்றால் அங்கே வணங்கி வழிபடுவார், கண்ணீர் விடுவார். பாவ சமாதி அடைவார். பகவான்பக்தன் என்ற பேதம் நினைக்க வொண்ணாமல் ஆத்மனாகவே இருந்த ரமணமஹர்ஷிகளும்கூட அருணாசலேசுவரர், மீனாக்ஷி என்றால் பக்தனாக நெகிழ்ந்து வழிபட்டுத்தான் நிற்பார். ஏன், ஷீர்டி பாபா எத்தனை எளிமையுடன் பக்தி பண்ணியிருக்கிறார்! ஆனால் பர்த்தி பாபா பிறந்ததிலிருந்து என்றுமே எந்த ஸாதனையும் செய்யாமல் தாமேஸாத்யமாக, ஸத்யமாக இருந்து அஸாத்யங்களைச் செய்தது மட்டுமின்றி, ஒருபோதிலும் தமக்கு வேறாக ஒரு தெய்வமிருப்பதாக பாவனைக்குக்கூட காட்டி வழிபட்டதில்லை. அவதாரங்களுக்குள்ளேயே இப்படி வெவ்வேறு சாயல்கள் வீசுகின்றன என்று காட்டவே இதைச் சொல்கிறோமேயன்றி. இவர்தான் மற்றவர்களைவிட சிரேஷ்டர் என்று நாட்டுவதற்கல்ல.

எல்லாத் தெய்வங்களையும் குறித்து பஜனைகள் இயற்றித் தந்தார் ஸத்ய ஸாயி. இன்றும் ஸத்ய ஸாயி பஜனை மண்டலியினர் எல்லாக் கடவுள் வடிவங்களையும் தவறாமல் பாட வேண்டும் என்று விதித்திருக்கிறார். “பஜனைக்கு வருகிறவர்களில் ஒவ்வொருவருக்கும் ஓர் இஷ்ட தெய்வம் இருக்கும். அதைப் பாடவில்லையே என்ற குறை எவருக்கும் இருக்கக்கூடாதுஎன்கிறார். ‘இஷ்டதெய்வம் இருக்கலாமே தவிர அதாவது, பல தெய்வ வடிவங்களில் ஒன்றில் விசேஷமான பிடிப்பு இருக்கலாமே தவிர எவருக்கும்துவேஷதெய்வம் இருக்கக்கூடாது என்பதால்தான் எல்லோரும் எல்லா மூர்த்திகளையும் பாடவேண்டும் என்கிறார். ஸாயி பஜனைக்காரர்கள் நகர ஸங்கீர்த்தனம் செய்துவரும் போது தம் படத்தை எடுத்துப் போகக் கூடாது என்றும் கண்டிக்கிறார். இப்படிச் செய்வதால் இவரிடம் ஈடுபாடு இல்லாத ஆஸ்திகர்களுக்கு பஜனையில் கலந்து கொள்ளும் பாக்கியம் பறிமுதலாகிவிடும் என்பதால் தான்! இவர்களில் பலருக்கு பஜனையின் நடுநடுவில் மற்ற தெய்வங்களின் பெயர்களோடு ஸாயி நாமமும் வந்தால் ஏற்புடையதாக இருக்கலாம்; ஆனால் இவர் படத்தையே நடுநாயகமாகத் தூக்கி வந்தால் அதைப் பார்த்த மாத்திரத்தில் விலகிப் போகத் தோன்றலாம் என்பதால் இவ்விதம் இவர் பணித்திருப்பதன் கருணைச் செவ்வியை என்னென்பது! அவர்களுக்கு இவரிடம் பக்தியில்லாவிட்டாலும், இவருக்கு அவர்களிடமும் அருளுக்குக் குறைவில்லை அன்றோ!

பஜனைப் பாக்களை இயற்றி அருளுகையில் மற்ற தெய்வங்களோடு புதிதாக ஷீர்டி பாபா மீது நாமாவளிகளும் கீதங்களும் சொல்லிக் கொடுத்தார். அவர் வசித்த புண்ய ஸ்தலமான ஷீர்டியை வர்ணித்துப் பாடினார். அங்கே ஸாயிநாதர் உயிர் வாழ்ந்தபோது கோயில் கொண்டத்வாரகா மாயீஎன்ற மசூதி, உடலை உகுத்தபின் கொண்ட சமாதி, அவர் உகந்த வேப்பமரம், அணையாத அக்னி குண்டத்திலிருந்து அவர் சர்வரோக நிவாரணியாக அளித்துவந்த உதி எனும் விபூதி இவை யாவும் இப்பாடல்கள் மூலம் தென்னக பக்தர்களுக்கு நன்கு பரிசயமாகத் தொடங்கின.

பக்தர்கள் மற்ற தெய்வரூபங்களைப் பாடியதோடு திருப்தி அடையவில்லை. ‘போல்தே சல்தே தேவ்என்று சொல்லப்பட்ட ஷீர்டி பாபாவைப் போலவே, தம்மிடை காணும்பேசுகிற, நடமாடுகிற தேவனைப் பாடிப் பரவ அவாவுற்றனர். ஆசையிருந்ததே தவிர கவித்துவம், இசைப் புலமை இல்லை. எனவே நம் ஸ்வாமியே தம் மீதும் நாமாவளிகளையும் கீதங்களையும் இயற்றித் தந்தார்.

பக்தரல்லாத மற்றோருக்கு, தன்மீது தானே பாடிக் கொள்வதா என்று வித்தியாசமாகப் படும். பக்தர்கள் அப்படி எண்ண மாட்டார்கள். அநுபூதி நிலையில் பாடிய சம்பந்தர்எனதுரை தனதுரையாகஎன்று ஈசனே தம்முட் புகுந்து தன்னையே பாடிக் கொண்டதாகத்தான் சொல்கிறார். நம்மாழ்வார், “தானே யான் என்பானாகித் தன்னைத்தானே துதித்துஎன்கிறார். பகவானே தான் பக்தனும், பக்தியுங்கூட! அப்படி உணராத நிலையில் உள்ளவர்களுக்குப் பக்தி ஊட்டுவதற்காக அவனே துதி செய்து தந்தால் அது தற்பெருமையல்ல, அவர்களிடமுள்ள தண் கருணையே ஆகும். ரமண மஹர்ஷிகள்கூட இப்படிப் பக்தர்களுக்காகத் தாமே தம் மீது தம்மை முருகனாக வர்ணித்துக் கொண்டு பாடியிருக்கிறார்! வேதாந்த தேசிகன் தாமே தமது விக்கிரகத்தைச் செதுக்கிக் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் சுயநலம் அடிபட்டுப்போன நிலை என்பது அடியாருள்ளம் தெளிவாக அறியக் கூடியது.

ராமன், கிருஷ்ணன், சிவன், தேவி, ஷீர்டிபாபா முதலிய எந்த தெய்வத்தைப் பாடும்போதும் நான் அவற்றை என்னில் பிறிதாக நினைத்துப் பாடவில்லை. பஜனையின் லக்ஷியமாகவே இருக்கிற எனக்கு நாம சங்கீர்த்தனம் செய்வதால் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை. பி.. படித்த ஆசிரியரானாலும் குழந்தைக்குப் பாடம் சொல்லித் தரும்போது ஆனா ஆவன்னா எழுதுகிற மாதிரிதான். பங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே நான் பஜனை செய்கிறேன். ஓட்டப்பந்தய வீரனும் தன் கைக்குழந்தைக்காக நடைவண்டியைப் பிடித்துக்கொண்டு நடந்து காட்டுவதைப் போலத்தான் நான் கீர்த்தனம் செய்வது. உங்களுக்காக இதைவிடத் தாழ்ந்து வரவும் நான் தயார். உளையில் அகப்பட்டு கொண்ட குழந்தையைக் காப்பதற்காகத் தானும் சேற்றில் குதிக்கும் தாயாக உங்கள் உபத்திரவங்களில்கூட நானும் சிக்கியதுபோல் நடிப்பேன். ஏன், திருடனைப் பிடிப்பதற்காகப் போலீஸாரே திருட்டுவேஷமும் போட்டுக் கொள்வதைப்போல, உங்கள் தப்புக்களைக்கூட நானும் செய்வதுபோல நீங்கள் மயங்குமாறு சில சமயங்களில் நடிப்பேன்என்று கூறும் பாபா, தாமேயான மற்ற மூர்த்தியரைப் பாடியது போல் இந்த ஸத்யஸாயி மூர்த்தியையும் பாடினார்!

அடவுல யந்துன்ன ஆகாச முனனுன்ன
பட்டணமுத நுன்ன பல்லெ நுன்ன
குட்ட மீதனுன்ன எத்ஸோட நீவுன்ன
பட்டு விடுவபோடு பர்த்தி ஸாயி

(அடவியில் இருந்தாலும், ஆகாசத்திருந்தாலும், பட்டணத்திருந்தாலும், பட்டியிலிருந்தாலும், எத்திசை மீதிலே எங்கு நீ இருந்தாலும் பற்றும் கை விடமாட்டான் பர்த்தி ஸாயி) என்று பாடினார். மற்றோர் என்ன வேண்டுமாயின் சொல்லட்டும், பக்தர்களுக்கு இதைப் பாடும்போதே அந்தவாக்கில், பண்ணில் பர்த்தி வாஸனின் கை மலர்ந்து நீண்டு தங்களைச் சுற்றிச் சுருண்டு அணைத்துக் காக்கும் இன்பமே கிட்டும்!

இப்படிப் பாடிய பாடல்கள் ஒன்றா, இரண்டா? பானைக்கு ஒரு சோறு பார்ப்பதோடு இங்கே நாம் திருப்திப்பட வேண்டியது தான்! இப்படி வெள்ளமாக வந்த பாடல்களில் ஒன்று மட்டும் பிறருக்காகப் பாடாமல் தானே பாடுவதாக அமைந்துவிட்டது. போனால் போகிறதென்று பிறருக்காகப்பாஹி’, ‘தேஹிஎன்று கொஞ்சம் தீனமாகக்கூட எப்போதாவது பாடிய ஆனந்த ஸ்வரூபர் தாமாகவே பாடிய போது அதில் பேரின்பமே அலைமோதும் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை! பாட்டைப் பார்ப்போம்.

விச்வமெல்லட வ்யாபியை வெலயுவாடு
பக்தஜனுலகு ப்ராபுடை பரகுவாடு
பக்தினொஸகி ரக்ஷிம்செடி சக்திமயுடு
பர்த்தி வாஸூடு
ஏலமீ ஸ்ருதயான ஹத்து கொனடோ?

(உலகெல்லாம் வியாபித்து ஒளிரும் ஆற்றலைக் காட்டுகிறார். அடியார்கணம் அவதியுறும்தோறும் துணைக்கு ஓடுகிறார். பக்தியையும் தாமே தந்து ரக்ஷிக்கும் பராசக்தி மயமாக இருக்கிறார். பர்த்திவாஸன் இப்படியெல்லாம் இருந்தும் அவரை ஏன் உங்கள் இதயத்தில் ஒட்டிக்கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்?)

விச்வ வேதனையோடு இப்படிப் பாடினார் ஆனந்த மூர்த்தி!

பக்தியையும் தாமே தந்து ரக்ஷிப்பவர்இவர் என்றால் அவர்களது இதயத்தில் இவர் ஒட்டிக் கொள்ளத்தானே வேண்டும்? பின், ஏன் முரணாகப் பாடினார் என்றால், அந்த பக்தியைத் தானாக விரும்பி அவர்கள் கேட்டால்தான் தரமுடியும்! மனித மனத்துக்குச் கொஞ்சம் ஸ்வதந்திரம் இருக்கிறது. அதன் ஸ்வயேச்சையில்லாமல் தெய்வமாக ஆட்கொள்வது யதேச்சாதிகாரம் தான். சுந்தரமூர்த்தி நாயனார் மாதிரி சிலபேரை மட்டும் பகவான் தாமே வலிந்து ஆட்கொண்டாரே; இப்படி நம் எல்லாரையும் செய்யக் கூடாதா என்று தோன்றலாம். ஆனால் இப்படி எல்லோரையும் தாமாக ஆட்கொள்வதைவிடப் பரமாத்மா சிருஷ்டி என்றே ஒன்றில்லாமல் இருந்துவிடலாம்! ஸ்ருஷ்டி என்பதே கொஞ்சம் தன்னிலிருந்து விலகின மாதிரி ஜீவர்களை விட்டுவைத்து, ஆட்டம் பார்ப்பதற்குத்தானே? விலகின மனம் தன்னிடம் ஓடிவராதா என்ற அன்புத் தாபம் இறைவனுக்கு, அதற்குத்தான் உலகம் வியாபிக்கும் ஆற்றலை, அற்புதத்தைக் காட்டுகிறான். துன்பம் தீர்த்து அன்பைக் காட்டுகிறான். இவற்றிலிருந்து நம்பிக்கை கொண்டு மனத்தை ஸமர்ப்பிக்கத் தயாரானால் அதில் பக்தி வித்தையும் நடுகிறான். ‘இத்தனை சக்தி எனக்கிருந்தும் என்னை நீங்கள் இதயத்தில் ஒட்டிக்கொள்ளச் செய்யமுடியவில்லையே!’ என்று ஆனந்த ஸ்வரூபரே அருள் வெறியில் பரம சோகமாகப் பாடிவிட்டார்! சார்லஸ் பென் என்ற அமெரிக்க விமானி பாபாவிடம் உணர்ந்தபரமனின் பரம வேதனை (agony of God)’ இதுதான்!

தமிழில் அமிழ்தொழுக பாபா தம்மையே பாடிக் கொண்டதற்குஸாம்பிள்கேட்க ஆசைதானே? ‘மீராதிரைப் படத்தில் ஸ்ரீமதி சுபலக்ஷ்மி இனிக்கப் பாடியகாற்றினிலே வரும் கீதத்தின் மெட்டில் அமைந்து இதய வீணையை மீட்டும் பாடல். ‘காற்றினிலே வரும் கீதத்தின் வார்த்தைகளைக்கூட அடியொற்றியே அமைத்திருக்கிறார்! அவரருளால் பின்னாளில் இந்நூலாசிரியன் வாக்காலும் சில வரி சேர்த்திருக்கிறார்!

ஸாயி உன்றன் திருநாமம்
உள்ளம் உருக்கிடும், சொன்னால் போதும்
ஜனன மரணம் தவிர் நாமம் (ஸாயி)

பட்ட உயிர்கள் தளிர்ப்பிக்கும் நாமம்,
பண்ணொளி மிஞ்சிடும் நாமம்

காட்டு விலங்குக் குணத்தையும் மாற்றிக்
கனிவு செய்திடும் நாமம்
நெஞ்சினிலேநெஞ்சினில் இன்னல் புயலை அடக்கி
நித்யஸுகம் தரும் நாமம் (ஸாயி)

விண்ணிலும் மண்ணிலும் நிறைந்த நாமம் மனம் கவர்ந்திடுமே
வானவெளிதனில் தாராகணங்கள் தயங்கித் துதித்திடுமே
ஹா, என் சொல்வேன், நாமத்தின் மகிமை,
துன்பமெலாம் தீருமே (ஸாயி)

ஜயஜய ஸாயி, ஜயஜய பாபா, ஜயஜய ஸத்ய ஸ்வரூபா
ஜயஜய ஸத்ய ஸ்வரூபா, ஜயஜய பாபா ஜயஜய ஸாயீ!
காலமெலாம்காலமெலாம் உன்றன் பாவன நாமம்
ஜபித்து ஜபித்துக் கரைவேனே
(
ஸாயி உன்றன் திருநாமம்
உன்றன் திருநாமம்
திருநாமம்)

க்தரல்லாதவருக்குத் தூக்கி வாரிப் போடலாம், சிரிப்பு வரலாம், எரிச்சல் ஏற்படலாம். பக்தருக்கோ, தங்களது பகவான் அகங்கார லேசமும் இல்லாமல், லேசாக அமர்ந்து, லேசான தும்பை மலர் போன்ற வெள்ளை நெஞ்சோடு, தும்பைக் குவியல் போன்ற வார்த்தைகளை, அதிலிருந்து பொசியும் தேனான சாரீரத்தில், எந்தத் தும்பைக்குமில்லாத தூய அன்பின் ஸுகந்தம் வீச ஆனந்தமாக கானம் செய்வதை எண்ணி எண்ணிக் காலமெல்லாம் நெஞ்சு கரையவே செய்யும்.

***

மீரா கேட்டாளே, காற்றிலே மிதந்து வந்த வேணுகானம், அதை நம் கண்ணனிடம் கேட்கமாட்டோமா என்று கமலாபுரத்திலிருந்தும் உரவகொண்டாவிலிருந்தும் வந்த பக்தர்கள் ஆசைப்பட்டார்கள்.

வேணுகானம்தானே வேண்டும்? வாருங்கள் இங்கேஎன்று பாபா அவர்களை ஒவ்வொருவராக அருகே அழைத்தார். அவர்கள் செவியைத் தம் இதயத்தோடு ஒட்டச் சேர்த்து அணைத்துக் கொண்டார் அவர்கள் இவரை ஒட்டி வைத்துக் கொள்ளாதகுறைதீர்ந்தாற்போல்!ஆஹாஹா! பாபாவின் இதயத்திலிருந்து குளுகுளுவென்று குமுகுமுவென்று அவர்கள் ஒவ்வொருவர் செவியிலும் குழலொலி பாய்ந்தது! வேணுவே இல்லாமல் வேணுகானம்! அவர்களது உடலை ஊடுருவிக்கொண்டு உயிரில் தோய்ந்தது ‘ஸர்வ ப்ராணபதி’யான ஐயனின் மூச்சுக் காற்றினிலே பிறந்த மூல அன்பாம் கீதம்!