புட்டபர்த்தி – 20

அத்தியாயம் – 20

பால ஸாயி

தந்தை, தாய், தமர், தாரம், மகவென்னும்
இவை எலாம் சந்தையிற் கூட்டம்;
இதிலோர் சந்தேகமில்லை.

தாயுமான ஸ்வாமிகள்

ராமன் எங்கு செல்வான்? ஆஞ்ஜநேயர் இருக்குமிடத்துக்குத் தான்! ஸாயிராமன் எங்கு சென்றான்? ஆஞ்ஜநேயுலுவின் வீட்டைச் சுற்றியுள்ள தோப்புக்கு.

புத்தர் தர்மசக்கரத்தைச் சுழற்றத் தொடங்கிய ஸாரநாத மான்தோப்பு அவரது அடியார்களுக்கு எத்தனை புனிதமானதோ, அத்தனை புனிதமானது இந்த மாந்தோப்புபர்த்திநாதர் பக்தருக்கு.

மரங்களுக்கிடையே, ஒரு பாறை மீதேறி அமர்ந்து கொண்டார். வீட்டைப் பொறுத்தமட்டும் இதயம் பாறையாகி விட்டது. உலகைக் குறித்தமட்டிலோ பாறைக்குள் நீர்ச்சுனைகள் நரம்போடின! விடுதலை என்ற மெய்யான வீட்டில் இருக்கும் ஞான பர்வதங்கள் எல்லாவற்றுள்ளும் இந்தக் கருணைச் சுனை பொசிந்து கொண்டுதானிருக்கும்.

தெலுங்குப் பண்டிதரின் தம்முடு வீட்டைவிட்டு ஓடினார். வீட்டை மட்டுமே விட்டோடினார்; தங்களைவிட்டு ஓடவில்லை. இன்னும் சொல்லப்போனால் தங்களுக்காகவே வீட்டிலிருந்து வெளிப் புறப்பட்டுவிட்டார்என்று கேள்விப்பட்ட ஊர் ஜனங்கள் கலால் இன்ஸ்பெக்டரின் தோட்டத்தில்கூட ஆரம்பித்தனர்.

நம் கதாநாதர் ஸத்ய ஸாயி பாபாவாக முற்றிலும் ஆகிவிட்ட பின் முதல் முதலாக பஜனை போதிக்கத் தொடங்கி விட்டார்.

மரபுப்படி, குரு வந்தனத்தில் தொடங்கினார்:

மானஸ பஜரே குரு சரணம்
துஸ்தர பவ ஸாகர தரணம்

(மனமே! கடக்கவொண்ணாத ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பதான ஆசாரியனின் அடிமலரை வழிபடுவாய்!)

எத்தனையோ காலமாக இந்தத் தேசத்தில் பாடப்பெற்ற வரிகள் தாம். ஸத்யஸாயி இசைத்த பின்னோ ஐந்து கண்டங்களில் இருப்போரின் கண்டங்களும் பாடுகின்றன. ஆத்மிகத்தின் நுழைவாசல் ஆசானின் சரணங்களை அண்டுவதுதான். அந்த நுழைவாயிலே கருவறை மூர்த்தியுமாகி விடுகிறது என்பதை உணர்த்தும் அமர வாக்குகளை அன்று நூறு நூறு மக்கள், புதிதே பிறந்ததோர் எழுச்சியுடன் பாடினர். நாலு முழ வேட்டிக்குக் கீழே தெரியும் குட்டிக் குருவின் குஞ்சுக் சரணங்களைப் பார்த்துக்கொண்டே நெகிழ்ந்து பாடினர்மானஸ பஜரே குரு சரணம்!”

மக்கள் வந்தபடியிருந்தனர். மட்டிப்பாலும், கற்பூரமும் கொண்டு வந்து பூஜித்தனர்.

தங்கள் ஸத்யா இனி பள்ளிக்கு வரமாட்டான், ஸ்வாமிகளாகி விட்டான்என்றறிந்த மாணவர்கள், குறிப்பாகப் பத்தாம் படிவத்தில் உடன் பயின்ற தோழர்கள், விம்மியழுதனர்.

இனிமே அவரு ரொம்பப் பெரியவரு. அவருக்குக்கிட்டே கூட நாம் போறத்துக்கில்லைஎன்று சொல்லிக்கொண்டு, எட்ட நின்று தரிசனம் செய்வதற்காகத் தோப்புக்கு வந்தனர்.

அவர்கள் நினைத்ததற்கு முற்றிலும் மாறாக, அவர்களை அருகழைத்து அமர்த்திக் கொண்டார் பாபா. பஜனை பாட வைத்தார். பிரஸாதம் சிருஷ்டித்துத் தந்தார். ‘அப்பாலுக்கும் அப்பால் இருப்பது இப்பாலுக்கும் இப்பாலே இழைவதுஎன்று காட்டினார்.

மூன்று நாட்கள் இப்படி ஓடின.

புது சாமியாரைப் புகைப்படம் பிடிக்க ஒருவர் வந்தார். சப்பணமிட்டு உட்கார்ந்திருந்த பாபாவின் முன் ஒரு கல் இருந்ததைப் பார்த்து, “அதைக் கொஞ்சம் அந்தண்டை தள்ளிடுங்க ஸ்வாமீ!” என்று கேட்டுக் கொண்டார்.

பாபா அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்தச் சாமியார்போஸ்கொடுக்கமாட்டார் என்று தெரிந்தது.

வேறு வழியின்றிப் புகைப்படக்காரர்கிளிக்கினார். மறுதினம். ஃபிலிமைக் கழுவி ப்ரின்ட் போட்டவர் ப்ரமித்து விட்டார். ஃபோட்டோவைத் தூக்கிக்கொண்டு மாந்தோப்புக்கு ஓடி வந்தார்.

பாபாவின் முன் இன்றும் அந்தக் கல், சாக்ஷாத் அதே மலைப்பிஞ்சாகவே இருந்தது.

ஃபோட்டோவை அவர் முன் வைத்தார், மலைப்பு நீங்காத புகைப்படக்காரர். ஃபோட்டோவைப் பார்த்த எல்லோருமே மலைத்து விட்டனர். அதில் பாபாவுக்கு முன் இருந்த கல் ஷீர்டிஸாயி விக்ரகமாக உருவம் மாறி விழுந்திருந்தது!

பலப்பல ஆண்டுகளுக்குப் பின்

உஸ்மானியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஒய்.ஜே. ராவிடம் பாபா ஒரு கல்லைக் காட்டி, “உங்கள் ஜியாலஜிப்படி இதில் என்ன இருக்கிறது?” என்றார்.

அவர் ஜியாலஜியால் அந்தக் கல்லின் தன்மையைத் துளைத்துப் பார்க்கும் போது என்னென்ன தெரியுமோ அவற்றை விளக்கினார்.

இதிலே அவ்வளவுதான் இருக்கா?” – பாபா குழந்தையாகக் கேட்டார்.

ஆமாம்.”

சரி, இப்போ பாருங்கோ” – ‘ஸர்வப்ராணபதேஎன்ற ஆரதி கீத மொழிப்படி தங்கள் பிராணேசனாகவே பக்தர் உணரும் புனிதர் கல்லின்மீது தமது சுவாசத்தை ஊதினார்.

அது வேணுகோபாலக் கண்ணனாகிவிட்டது!

வடிவம் மாறியது மட்டுமில்லை. அதன் அணுக்கள், மூலக்கூறுகள் யாவுமே மாறிவிட்டன! இப்போது அது கல் விக்ரஹம் அல்ல, கல்கண்டு விக்ரஹம்! சீனிக்கட்டியாலான சீனிவாஸச் சிலை!

ப்ரொஃபஸர்! நீங்கள் உங்கள் ஸயன்ஸ்படி இதற்குள் ஏதேதோ கண்டு சொன்னீர்கள். ஃபிஸிக்ஸில் இதன் அணுவுக்குள் துளைத்துக் கொண்டுபோய் எலெக்ட்ரான், ப்ரோடான், ந்யூட்ரான் என்று நிறுத்துகிறார்கள். ஆனால் அவற்றுக்கும் உள்ளே இருப்பது பரம்பொருள். ஒரே பரம்பொருள் தான் வேறுவேறாகத் தோன்றும் பலவாகவும் ஆனது. எலெக்ட்ரான் ப்ரோடான்களான ஜடசக்தியாக மட்டும் நிற்பவரில்லை கடவுள். உயிர் துளும்பும் பிரேம் சக்தியாக இருப்பவர். அந்தப் பிரேமையைக் காட்டத்தான் பரமாத்மா இதில் வேணுகானம் செய்கிறார். தன் இதய மதுரத்தைக் காட்டவே கல்கண்டாகியிருக்கிறார்என்றார்கல்லைக் கனிவிக்கும் சித்தர்.’

***

மாந்தோப்பில் ஐயனின் பஜனையை மாந்தி இன்புற்றுக் கொண்டிருந்த மாந்தரின் கவனம் உள்ளே நுழைந்த மாதின் மீது பதிந்தது.

அவள் கண்ணீரும் கம்பலையுமாக பால ஸாயியிடம் விரைந்து கொண்டிருந்தாள். இவர் பால ஸாயியாகி விட்ட பின்னரும், ‘தன்ஸத்யா என்றே உறவு பாராட்டிக் கொண்டு வருகிறாள். புட்டபர்த்தியிலிருந்து வெங்கப்ப ராஜுவுடன் வந்த ஈச்வரம்மாதான்!!

மாயி, மாயிஎன்று எல்லோரும் ஸாயியின் அம்மா வந்ததைப் பற்றிக் கிசுகிசுத்தனர்.

மாயியா? மாயா!” என்று சிரித்தார் பால ஸாயி.

வைராக்கிய சிகர மஹாபுருஷர்களையும்தான் ஆடாவிடினும் தன் சதை ஆடும்என்றபடி கொஞ்சமேனும் ஆட்டுவித்த அம்மாப் பாசம் நம் காவியநாதருக்கு அடியோடு இல்லை!

ஈச்வராம்பாகோவென்று கதறினாள்.

வெங்கப்ப ராஜுபிள்ளையை வீட்டுக்குத் திரும்புமாறு பலவிதமாக எடுத்துச் சொன்னார்; வாதம் செய்தார்; பிடிவாதம் செய்தார்; வேண்டுகோள் விடுத்தார்.

மாயை, மாயைஎன்ற ஒன்றையே சொல்லிக்கொண்டு அசைந்து கொடுக்காமலிருந்தார் பிள்ளைப்பெருமாள்.

திடீர்னு இப்படிச் சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டியே நாயனா! பெத்த தாய்க்குத் தாங்குமா? உன்னை இன்னம் கொஞ்சம் சீராட்ட விட்டிருக்கக் கூடாதா?… சீராட்ட வேண்டிய குழந்தைநாளில்கூடச் சோறு கிடையாதுன்னு சொன்ன பாவியாச்சேன்னு சொல்லிக்காம புறப்பட்டுட்டியா அப்பனே?” என்று புலம்பினாள் ஈச்வராம்பா.

ஆதியில் ஒரு நாள் பிள்ளைக்கு உணவு கிடையாது என்று சொல்ல, குழந்தை பட்டினி கிடந்ததன் ஞாபக வடு மீண்டும் விண்டு புண்ணாகியிருந்தது தாயுள்ளம்!

பாலஸாயியின்முரண்டுகொஞ்சம் சுருண்டது. பாசம் போகலாம். நேசம் போகமுடியுமா? காருண்ய வடிவனாயிற்றே!

சரி, எனக்கு உன் கையாலேயே சாதம் போடு” – என்று சொல்லிக்கொண்டு எழுந்தார். ‘நுழைவதில்லைஎன்று தீர்மானித்த அண்ணன் வீட்டுக்குத் தாயோடு சென்றார். இரக்கம் என்று வந்துவிட்டால் தீர்மானமாவது, இன்னொன்றாவது?

தாய் வகைவகையாய், ருசி ருசியாய், சுவைக் சுவையாய் சமைத்துப் பரிமாறினாள்.

பாலஸாயி அன்னம், வியஞ்சனங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டுப் பிசைந்தார். இனிமேல்ஏக ரஸம்தான். தனித்தனி ருசிகள் என்ன வேண்டிக் கிடந்தது? பிச்சைக்காரன் கப்பரையாகக் குழப்பி இருந்த கலவையைப் பந்துகளாக உருட்டினார்.

அன்னையிடம், “அன்னிக்குச் சாதம் போடாத குறைதானே உனக்கு? அதைத் தீர்த்துக்கோ, உன் கையாலேயே எடுத்துப் போடுஎன்று தாமரைக் கையை நீட்டினார்.

அவள் ஒரு கவளம், இரண்டு கவளம், மூன்று கவளம் வைத்தாள். மகா மகனின் குட்சியில் அவை இறங்கின. “போதும், போதும்! இதோடு மாயா பந்தம் தெறித்தே விட்டது!” என்று புத்திரர் எழுந்திருந்தார்.

மாந்தோப்புக்குத் திரும்பிவிட்டார்.

***

ன்று குருவாரம்.

உரவகொண்டாவில் நறவமாகப் பெருகியது பரமனின் நாம ஸங்கீர்த்தனம்

மற்ற எல்லோரையும் விட ஆர்வத் துடிப்புடன் ஓர் அம்மையார் அங்கு வந்தார். ‘தான் கேள்விப்பட்டது மெய்தானா? இவர்அவர்தானா? இனிமையே உருவான இந்த இளவல் போலியாக இருக்க முடியாது என்று இதயம் சொன்னாலும் புத்தி ஏதேதோ ஐயங்களைக் கிளறிவிடுகிறதே! நாம் ஏமாறிவிடப் போகிறோமே!’ என்ற எண்ணத்தில் அலைப்புண்ட அம்மை பாலஸாயியை நெருங்குவதா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருந்தார்.

பாலரின் செங்கை பரிவோடு சைகை காட்டிற்று: ‘அசடே! வா இங்கேஎன்று,

அம்மையார் அவரது அருகே சென்றார். தமக்கு வலப்புறம் அண்மையில் அம்மையாரை அமர்த்திக்கொண்ட ஐயன் தண்மை கசியும் ரஹஸ்யக் குரலில், “குழந்தே! கடைசியில் வந்து சேர்ந்துவிட்டேஎன்று ஹிந்தியில் கூறினார்.

செவி வழியே நேராகச் சித்தக் கருவுக்குள்ளேயே புகுந்து அம்மையை ரோமாஞ்சமுறச் செய்தது அக்குரல். ஆம், ஸாக்ஷாத் ஷீர்டிநாதனின் குரலேதான். மாறிய சரீரத்திலிருந்து மாறாத சரீரத்தால் பேசுகிறார்!

கொடுத்த வாக்கைக் காத்துவிட்டார் என் ஷீர்டிநாதர்என்று கண் மல்கினார் அம்மை.

நைஜாம் ராஜ்யத்தில் கலெக்டராக இருந்த ஷீர்டி பக்தர் ஒருவரின் புதல்வியாகப் பிறந்தவர் அவர். சாரதா என்று பெயர். பெயர் வைத்ததே ஷீர்டி பாபாதான். சாரதை மூன்றாம் வயதில் தந்தையோடு சென்று முதல் முறையாக பாபாவை தர்சித்தாள். இரண்டாம்முறை, ஏழாம் வயதில் சென்றபோது அவளுக்குத் திருமணமாகி விட்டிருந்தது. ஏனோஐயோ பாவம்!” என்று பரிதவித்தார் ஷீர்டிநாதர். (இன்று பர்த்திநாதர் அடிக்கடி பகரும்

ஐயோ பாபம்ஷீர்டியின் தொடர்ச்சியே போலும்!)

பரிதவிப்புக்குக் காரணம் பிறகுதான் புரிந்தது. சாரதை மங்கையாகிப் பெற்ற நான்கு குழந்தைகளையும் குழியில் வைத்துக் கதறினாள்.

தந்தையின் ரத்த விசேஷமோ என்னவோ, இவளுக்கும் பாபாவிடம் அதீத பக்தி இருந்ததால் ஷீர்டி சென்று பாபாவின் இணையடிகளைப் பற்றிக்கொண்டான். “பிள்ளை, குட்டிகள் போனதெல்லாம் போகட்டும். இதெல்லாம் மாயை என்ற திடமான நானத்தைத் தாருங்கள்.

சஞ்சலத்திலிருந்து என்னைத் தூக்கி விட்டு மோட்சம் தாருங்கள்என்று அவருடைய காலைக் கட்டிக்கொண்டு பிரார்த்தித்தாள்.

அவர் காலை உதறினார். இவளை உதைத்தாரோ என்று கூடத் தோன்றியது. சில சமயங்களில் அவர் அப்படி ரௌத்திராகாரம் காட்டுவதுமுண்டு.

மோக்ஷமா? அதற்குள்ளா? நிறையப் பழைய பாக்கியிருக்கே!”

அதைத் தீர்ப்பதற்குத்தான் திருவடி பிடித்தேன்.”

இருந்தாலும், கொஞ்சம் அநுபவித்துத்தான் ஆக வேண்டும். உனக்கு இப்போதே மோக்ஷம் தருவதற்கில்லை. மறுபடி நான் ஆந்திரதேசத்தில் வரப்போகிறேன். அப்போது உன்னை என் கூடவே வைத்துக்கொண்டு கரையேற்றுகிறேன்முடிவாகச் சொல்லி விட்டார் பாபா.

இது நடந்தது 1917ல். மறு ஆண்டே பாபா உடலை உகுத்துவிட்டார்.

ஊருக்குத் திரும்பிய சாரதைக்கு மனத்திலே ஒரு தெளிவு பிறந்தது. மெய்யான பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு வலுத்தது. நல்ல படிப்பறிவும், ஸங்கீத ஞானமும் இருந்ததால் ஊர் ஊராக ஸத்கதா காலக்ஷேபம் செய்து பக்திப் பிரசாரம் புரிந்தார். “ஸாயி ஸதன்என்ற பெயரில் அநாதைப் பெண்களுக்கு இல்லம் எழுப்பிப் பரிபாலித்தார். அதன் பராமரிப்புக்காகப் பல ஊர் சென்று நிதிதிரட்டும் போதுதான், ராஜுப் பையன் ஒருவன் தன்னை ஸாயி பாபாவாகப் பிரகடனம் செய்து கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டார். ‘ஆந்திர தேசத்தில் வருவேன்என்று ஷீர்டிநாதன் சொன்னதை மறவாமலிருந்ததால், புது அவதாரத்தைச் சென்றடையப் பேரவாக் கொண்டார். விசாரித்துக் கொண்டு உரவகொண்டா அடைந்துவிட்டார்.

எங்கேயும் எப்போதும் பக்தர்களைப் போல் சந்தேகக்காரர்கள், பரிகசிப்பவர்கள் ஆகியோரும் இருக்கத்தானே செய்வர்? உரவகொண்டாவில் அப்போதிருந்த இப்படிப்பட்டபுண்ணியாத்மாக்கள் சிலர் தாறுமாறாக ஏதேதோ கூறி அம்மையை ஐயப்பாடு கொள்ளச் செய்தனர்.

பதினாலு வயதேயான ஐயன் அருளொழுகும் ஷீர்டிக் குரலில் ஹிந்தியில் பேசி, இந்த ஐம்பது வயதுக்கு மேலான பாட்டிக்குழந்தையை அழைத்துக் கொண்டவுடனேயே அம்மையாரது சிந்தை குளிர்ந்தது. நிம்மதி பிறந்தது.

ஸாயியின் கை அவரிடம் நீண்டது. “பாக்கி இருக்கிற பதினாறு ரூபாய்க் கடனைத் திருப்பிக் கொடு அம்மே!” என்றார்.

பாக்கியா? கடனா?”

ஆமாம், ஷீர்டியில் நடந்த தசராக் கொண்டாட்டத்துக்கு அனுப்ப வேண்டுமென்று நீ ரூபாய் சேர்த்து வைத்திருந்தாய் அல்லவா? ஒரு சமயம் பலராமுக்கு அதிலிருந்தே நாற்பது ரூபாய் எடுத்துக் கொடுத்தாய் நினைவு வருகிறதல்லவா? அவன் உனக்கு எவ்வளவு திருப்பிக் கொடுத்தான்? இருபத்திநாலு ரூபாய் தானே? அதை மட்டுந்தான் நீ என் பூர்வ சரீரத்துக்காகச் செலவிட்டாய். எனக்காக உத்தேசித்த காணிக்கையில் நீ அவனிடம் வசூலிக்காமல் விட்ட பாக்கி பதினாறு ரூபாய் கடன் நிற்கவில்லையா?” பால ஸாயிபகபகவெனச் சிரித்தார்.

என் பகவானே!” என்று ஆர்த்தார் சாரதம்மை. எத்தனை ஆண்டுகட்கு முன் நடந்த எத்தனை சிறிய விஷயம்! பாபா தவிர வேறு யார் இதை நினைவுகொண்டு கேட்கமுடியும்?

தணிந்த குரலில் ஸாயி சொன்னார்: “எனக்கு உன் பணமும் காசும் வேண்டாம். ஷீர்டி ஸாயிபாபாவேதான் நான் என்று உனக்கு உறுதி பிறக்கவே இதைச் சொன்னேன். உனக்குப் பூரண நம்பிக்கை வராததால் தானே என் பாதங்களைத் தொட்டு வணங்காமலே பக்கத்தில் உட்கார்ந்தாய்?”

க்ஸ்ரேயைவிட ஆழமாக மனிதருள்ளத்தைத் துளைத்துக் கண்டுவிடுவார் போலிருக்கிறதே! இல்லை. “நான் பிறர் மனங்களைத் துளைத்துப் பார்க்கிறேனென்றால் மற்றச் சமயங்களில் அவர்களுக்கு வெளியே இருக்கிறேன் எனவும், ஏதோ ஒரு சமயத்தில் மட்டுமே அவர்கள் சித்தத்தைக் குடைந்து பார்க்கிறேன் எனவும் அல்லவா ஆகும்? இது தப்பு. நான் எப்போதுமே எல்லோர் சித்தத்திலும் இருந்து கொண்டிருக்கும் ஸர்வாந்தர்யாமிஎன்பார் நம் கதாநாதர்.

சாரதா அம்மையார் வீட்டையும், ஸாயி ஸதனையும் மூட்டை கட்டி வைத்துவிட்டுப் புட்டபர்த்திக்கே வந்துவிட்டார். தொண்ணூற்றுக்கு மேற்பட்ட பிராயத்தினரான அவர் பெரிய குங்குமம் நெற்றியில் ஒளிரபெத்த பொட்டு அம்மாஎன்ற பெயரில் பிரசாந்தி நிலயத்தில் சாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.1

2 1986 கிறிஸ்துமஸ் தினத்தன்று ஸாயியுள் அடக்கமாகிவிட்டார்.

***

சாரதா அம்மாள் புட்டபர்த்திக்கு வந்த கதை இருக்கட்டும். நம் ஸாயிநாதரே இப்போது உரவகொண்டாவில்தானே இருக்கிறார்? பெற்றோருடன் புட்டபர்த்திக்குத் திரும்ப மாட்டேன் என்றல்லவா அடம் பிடிக்கிறார்!

பெற்றோர் ஆலோசித்தனர். ஒரு முடிவுக்கு வந்தனர். பிள்ளையேதான் அந்த முடிவை அவர்களுக்கு ஸ்புரிக்கச் செய்திருக்கவேண்டும்! அவரிடம் வந்து அடக்கத்துடன், “உன்னை இனி ஸ்வாமியாகவே வைத்துக்கொள்கிறோம். எங்கள் பிள்ளையாக நினைக்கவில்லை. எந்தவிதமான கட்டுப்பாடும் செய்யவில்லை. நீ எங்கேயோ ஓரிடத்தில் ஆசிரமம் வைத்துக்கொண்டுதானே பக்தர்களைக் காப்பாற்றிக் கொண்டும், தர்மத்தை வளர்த்துக் கொண்டும் இருக்கவேண்டும்? புட்டபர்த்தி வீட்டையே அப்படிப்பட்ட ஆசிரமமாக வைத்துக்கொள் என்றுதான் வேண்டிக்கொள்கிறோம். எங்கள் பிரார்த்தனையை மறுக்காதே!” என்று நெஞ்சுருகிக் கேட்டுக்கொண்டனர். முக்கியமாக ஈச்வரம்மாதான் இவ்வாறு விடாது வேண்டியது.

பாபாவும் புட்டபர்த்தியைத்தான் இந்த அவதாரத்தின் தலைநகரமாக முன்னரே சங்கற்பித்திருக்க வேண்டும். என்றாலும் இவர்களுடைய கர்மாவுக்காகக் கொஞ்சம் அலைக்கழிக்க வைக்க வேண்டியிருந்தது போலும்! இப்போது இவர்களே ஸத்யாவாக இன்றி, சுதந்திர ஸாயி பாபாவாக இவரைக் கொள்வதாகச் சொல்லிப் புட்டபர்த்திக்கு அழைத்தவுடன், “ஆகாஎன்று ஒப்புக்கொண்டார். தாயார் சொல்லுக்குத் தெய்வ மகனும் கட்டுப்படுவதாகக் காட்டினார்.

பெற்றோருடன் புட்டபர்த்திக்குப் புறப்பட்டார்.

ஊருக்கே உயிர் தந்த அன்புச் சுடர் புறப்பட்டுவிட்டதே என்பதில் உரவகொண்டா பெருந்துயருற்றது. ‘புட்டபர்த்தியில் பிறந்தார்; உரவகொண்டாவில்தான் துறந்தார். அவதார ஜன்மம் நம் ஊரில்தான்என்று இதுவரை கொண்ட பெருமிதம் போய், ‘என்ன இருந்தாலும் நம்மை விட்டுப் பிரிந்து பிறந்த ஊருக்குத்தானே புறப்பட்டுவிட்டார்?’ என்ற தாபத்தில் அவ்வூர் மக்கள் தவித்தனர்.

வழியனுப்பு மரியாதையை மேள தாளங்களோடு திருவிழாவாகச் செய்து பால ஸாயிக்குத் திருவீதி உலா நடத்தினர். பதினாலில் பழுத்தவிட்ட முதியோனுக்கு வழி நெடுக கற்பூர ஆரதி காட்டினர். ஸத்ய ஸாயி தனது தர்மசக்கரத்தைச் சுழற்றத் தொடங்கிய தோப்பின் தாற்காலிக உரிமையாளரான ஆஞ்ஜநேயுலு பாபாவுக்கு முதல் பாத பூஜை செய்தார். கொடுத்து வைத்தவர்!

***

புட்டபர்த்திக்கு மீண்டும் வந்து சேர்ந்தார் கதாநாதர்.

தம்வீட்டிலேயே முதலில் தங்கினார். ஆனால்பொருந்தவில்லை.

வெங்கமர் சாமான்ய மனிதர்தாமே! அவர் உரவகொண்டாவில் கொடுத்த வாக்கை உள்ளபடி காக்க முடியவில்லை. அவ்வீடு ஸமத்வத்துடன் சுவாதீனமாக பக்தர்கள் வந்து போகிற ஆசிரமமாக இல்லாமல் வெங்கப்பராஜுவுடைய வீட்டின் ஒரு பாகமாகவும் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. அவர் பாபாவின் மீது அப்பா என்று பாத்தியதை காட்டாவிடினும், மற்ற பக்தர் மீது தாம் ஸ்வாமியின் தந்தை என்பதாகச் சிறிதே உயர்விடம் கோரத்தான் செய்தார்போலிருக்கிறது. சாதாரண மக்களை விடவும் வெங்கப்பர், ஈச்வம்மா ஆகியோர் எளியோராக, ‘அப்பாவிகள் எனும் அளவுக்கு ஸாதுக்களாக இருந்தவர்தாம் என்பதில் ஐயமில்லை. எனினும் அப்பாவித்தனம் வேறு, உயர்பக்குவம் வேறுதானே? ஆகவே, பிறப்பினால் மாதா பிதாக்களான இவர்களுடனேயே பாபா இருக்கை கொள்கையில் இவர்கள் ஏனைய பக்தர்களுக்கு ஸமஸ்தானத்தில் தங்களை வைத்துக் கொள்வதில் ஆங்காங்கு இடறல்கள் இருக்கத்தான் செய்தன. இவர்கள் எவ்வளவோ அடங்கிக் கிடந்தாலும்கூட பக்தர் சிலரே அவதாரனை ஈன்ற தெய்விக ஜீவர்கள் என்று இவர்களை உயர்த்தி வைத்து, ஆச்ரம ஸமத்வத்தைச் குலைக்கத்தான் செய்தார்கள். பாபாவோ எந்தப் பிள்ளையும் தன் பெற்றோரை அழைக்கத் துணியாத விசித்திரமாகத் தந்தையைக்ருஹ அப்பாயிஎன்றும், தாயைக்ருஹ அம்மாயிஎன்றும் குறிப்பிடலானார். அதாவதுவீட்டுப் பிள்ளை”, “வீட்டுப் பெண்என்று அர்த்தம்! தமையன் சேஷமராஜுவைத்தெலுங்கு பண்டிட்என்றே அழைக்கலானார்! இவரது அசாமானிய வைராக்கியத்துக்கும் அவர்களது சாமானிய சுபாவத்துக்கும் எத்தனை காலம் ஒத்து வரும்?

பாபா பிறந்த வீட்டைத் துறந்தேயாக வேண்டியதாயிற்று. தாய்மாமனும் அக்காள் கணவருமான சுப்பாராஜுவின் இல்லத்துக்குச் சென்றார். அங்கும் இதே சூழ்நிலை விரைவில் ஏற்பட்டதால், அங்கிருந்தும் புறப்பட்டார்.

ஒருத்தி மகனாகப் பிறந்து இன்னொருத்தி மகனாக வளர்ந்தாரே, அந்த இன்னொருத்தியான சுப்பம்மாவுக்கு அடித்தது மஹாபாக்யம்! ‘ஸத்யாவிடம் ஈடுபாடு கொள்ளாத அவளது கணவரான கர்ணம் இன்று இவ்வுலகில் இல்லை. அவர் போனதிலிருந்து காலமெல்லாம் இந்த பாலனை நினைந்தே உருகிக்கொண்டிருந்தாள் அவள். அவளது சகளத்திரியான கமலம்மாவுக்கும் நம் கதா நாதரிடம் ஓர் ஈர்ப்பு இருந்ததால்அயம் விசேஷஆயிற்று.

கர்ணத்தின் வீடு பாலஸாயி கோயில் கொண்ட பாலாலயம் ஆயிற்று!

அடடா, இதிலிருந்தே பிற்பாடு எத்தனை விபரீதங்கள் புறப்படப் போகின்றன?விபரீதத்திற்கு முன்பு ஒரு நல்விளைவைப் பார்த்து விடுவோம். தங்களது பிள்ளையார் இடம் மாறியதன் காரணம் பெற்றோர் மனத்தில் ஆழப் பதிந்தது. இனியும் தாங்கள் ‘பெற்றோர் அகம்பாவனை’யை விடாவிடில் புட்டபர்த்தியை விட்டே அவர் புறப்பட்டுவிடக்கூடும் என்று அவர்கள் அஞ்சியிருக்கவேண்டும். அன்றிலிருந்து வெங்கமராஜுவும், ஈச்வராம்மாவும் ‘ஓர் அவதாரனின் பிறப்புக்குக் கருவியாயிருந்தவர்கள் இப்படியும் லவலேசக் கருவம் அற்ற எளியராக இருக்கமுடியுமா?’ என்று உலகு வியப்புறுமாறு வாழ்ந்து காட்டினர். அவ்விருவரும் பக்குவத்தில் உயர் சிகரம் எய்தாமலே கடைசிவரை இருந்திருக்கலாம். ஆயினும் இந்த எளிமையின் சிகரத்துக்காகவே அத்தம்பதியருக்கு முக்கியமாக அன்னை ஈச்வரம்மாவுக்கு நம் வந்தனங்களை அளிப்போம்.