புட்டபர்த்தி – 13

அத்தியாயம் – 13

செப்பினட்லு சேஸ்தாரா?”

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

ராமலிங்க ஸ்வாமிகள்

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே! ஸத்யா உரவகொண்டாவுக்கு வருமுன்னரே அவனது புகழ் அங்கு பரவி விட்டது. எனவே அவன் வந்தவுடன் ஊராரின் நாவிலெல்லாம் தெலுங்கு பண்டிதருடையதம்முடுவின் பிரதாபமே அலை வீசியது. பள்ளிக்கூடத்தில் பத்தாவது வகுப்பு ஆசிரியர்களில் ஒவ்வொருவரும் தாங்கள் போதிக்கும் ஸெக்ஷனிலேயே ஸத்யா இடம் பெறவேண்டும் என்று போட்டி போட்டனராம்!

ஸத்யாவின் அமுதமான பிரார்த்தனையுடன்தான் தினமும் பள்ளி தொடங்கும். சிள்வண்டுபோல் சின்ன ஸத்யம் பாடிய துதிகள் பள்ளியைப் பாவனப்படுத்தின.

அவன் பக்திப் பாட்டில் முதல், படிப்பில் முதல், சடுகுடுவில் முதல், நாடகத்திலும் முதல்.

ஸத்யாவிடம் அத்யந்த பிரியம் கொண்ட ஆசிரியரான ஸ்ரீ தம்மிராஜு அவனையே பள்ளி மாணவர் நடிப்பதற்காக ஒரு புது நாடகம் எழுதித் தரச் சொன்னார். ஒரு சில நாட்களுக்குள் அவன் முடித்துத் தந்த நாடகத்தைப் பார்த்து அவர் பிரமித்துவிட்டார்.

அதை முற்றிலும் பார்க்காவிட்டாலும் ஓரளவுக்கு நாமும்தான் பார்ப்போமே! தர்மத்தில், ஒழுக்கத்தில் அவனுக்கு எத்தனை நாட்டம், அவை அவமதிக்கப்படுவதில் எத்தனை நாட்டம், இவற்றைப் பன்னிரண்டே வயதில் எத்தனை நுட்பமாக அவன் இலக்கியமாக்கினான் என்பதைக் கவனித்தால் நாமும் பிரமிக்காமலிருக்க முடியாது.

செப்பினட்லு சேஸ்தாரா?” – “சொன்னபடி செய்கிறார்களா?” என்ற தலைப்பிலேயே எத்தனை கலை நயம்!

முதல் காட்சியில் ஓர் அம்மாள் தன்னொத்த பெண்டிருக்கு பாகவதம் படித்து விளக்குகிறாள். தானத்தின் மகிமை பற்றிய கட்டம். பாத்திரமறிந்தே பிச்சையிட வேண்டும் என்பதை விளக்குகிறாள். மெய்யாலும் தீனராக உள்ளவருக்குத்தான் தானமிடவேண்டும்; வேலைசெய்ய வசதியிருந்தும் பிச்சை எடுப்பவர்களுக்கு ஐயமிடுவது சோம்பேறித்தனத்துக்கு ஊக்கம் தருவதேயாகும் என்று எடுத்துச் சொல்கிறாள். பெண்கள் கலைகிறார்கள். பரம தீனமாக உள்ள ஒருவன் பிச்சைக்கு வருகிறான். உபதேசம் செய்த அம்மாள் அவனை அடிக்காத குறையாக விரட்டுகிறாள். உடனே ஒரு தடியாப்பிள்ளை, பார்த்தாலே போலி என்று தெரிகிறதுவேங்கடரமணா, ஸங்கடஹரணா, கோவிந்தா, கோவிந்தா!” என்று ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு வருகிறான். அவனுக்கு அந்த அம்மாள் ஆசார உபசாரம் செய்து செம்பு வழிய அரிசியால் நிரப்புகிறாள்.

இதைப் பார்த்துக்கொண்டே இருந்த பிள்ளை கிருஷ்ணன், “அம்மா, நீ இத்தனை நாழி சொன்னதென்ன? இப்போது செய்கிறதென்ன?” என்கிறான்.

அதிகப் பிரசங்கி! நாம் சொன்னபடியெல்லாம் இருந்து விடமுடியுமா? என்னை எதிர்த்துக் கேட்கிறாயே!” என்று அம்மாக்காரி ஏசுகிறாள். பிள்ளையைக் கரகரவென்று கணவரிடம் இழுத்துக்கொண்டு போய்ப் புகார் கொடுக்கிறாள்.

அடுத்த காட்சி, தகப்பனார் பிள்ளைக்குச் செய்யும் தர்மோபதேசம். “பெரிய விஷயங்களையெல்லாம் பற்றிப் பசங்கள் பேசப்படாது. பள்ளி நாளில் படிப்பு மட்டும்தான் முக்கியம்என்று சொல்லிக் கல்வி மகிமை, வித்யாதானம் குறித்துப் பிரசங்கமே செய்கிறார் அப்பாக்காரர். அப்போது ஓர் ஏழைப்பிள்ளை வந்து, பள்ளிக் கட்டணத்தில் ஒரு ரூபாய் குறைவதாகச் சொல்லி அவரை யாசிக்கிறான். “இல்லாவிட்டால், இன்று கடைசி நாள், பேரை அடித்துவிடுவார்கள்என்று அழுகிறான். “காசே யில்லை யப்பாஎன்று கையை விரித்து அவனை அனுப்புகிறார் வித்யாதான வாசாலகர்!

அவரது ஆபீஸைச் சேர்ந்த சக குமாஸ்தாக்கள் வருகின்றனர். புதிதாகப் பதவி ஏற்கும் ஆபீஸருக்கு வரவேற்பு கொடுப்பது பற்றி இவரிடம் ஆலோசனை கலக்க அவர்கள் வந்திருக்கிறார்கள். புது ஆபீஸருக்குஸோப்புப் போட்டுவசமாக்கிக் கொள்ள விரும்பும் அப்பாக்காரர் தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி, அப்போதே அவர்களிடம் இருபது ரூபாய்களை எடுத்து வீசுகிறார்.

கிருஷ்ணனால் தாங்க முடியவில்லை. “அப்பா, அந்தப் பையனிடம்…” என்று ஆரம்பிக்கும்போதே அவர் சீறுகிறார்.” சொல்கிறபடியெல்லாம் செய்யமுடியுமா என்ன? உன்னிடம் நான் சொன்னதென்ன? உனக்குப் படிப்புத்தானே முக்கியம்? இங்கே நிற்காதே, குறுக்கே பேசாதே, போ பள்ளிக்குஎன்று கையை ஓங்குகிறார்.

பள்ளிக்கு ஓடுகிறான் பாலன்.

அடுத்த காட்சி. பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம், “நாளைக்கு இன்ஸ்பெக்டர் வருகிறார். அவர் எத்தனை பாடம் நடந்திருக்கிறது என்று கேட்டால் நீங்கள் யாரும் 23 என்று உண்மையைச் சொல்லிவிடக் கூடாது. 32 என்று சொல்ல வேண்டும். அவர் வருகிறபோது நான் 33ம் பாடத்தை, அப்போதுதான் முதல் தடவை சொல்லிக் கொடுப்பது போலடீச்பண்ணி உங்களைக் கேள்வி கேட்பேன். ஆனால் உண்மையில் இப்போதே அந்தப் பாடத்தை நடத்திவிடப் போகிறேன். அப்போதுதான் நீங்கள் நாளைக்குடக்’ ‘டக்என்று பதில் சொல்லி எனக்கு நல்ல பேர் வாங்கித் தர முடியும்என்கிறார்.

ஆகா. அந்த 33ம் பாடம், அது சாக்ஷாத் ஹரிச்சந்திரனைப் பற்றியது! வகுப்பு முடிந்தபின் கிருஷ்ணன் ஆசிரியரிடம் போய், “ஹரிச்சந்திரன் பாடத்தில் நீங்கள் சொன்ன தர்மமென்ன? நாளைக்கு எங்களுக்கென விதித்துள்ள அதர்மமென்ன?” என்பதை நாசூக்காகக் கேட்கிறான். பழைய கதை தான். இந்தத் துக்குணியூண்டுப் பிள்ளை தனக்கு தர்மம் சொல்லவா என்று எரிந்து விழுகிறார் ஆசிரியர். மீண்டும்செப்பினட்லு சேஸ்தாரா?” தான்!

மறுநாள். கிருஷ்ணன் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று வீட்டிலேஸ்டிரைக்செய்கிறான். பெற்றோரால் அவனை அசைக்க முடியாததால், ஆசிரியருக்குச் சொல்லியனுப்புகிறார்கள். அதிபுத்திசாலியான கிருஷ்ணனைக் கொண்டே இன்ஸ்பெக்டரிடம் வோட்டு வாங்கி விடலாம் என்று ஆசைப்பட்ட ஆசிரியர் விழுந்தடித்துக் கொண்டு வருகிறார். “இன்ஸ்பெக்ஷன் தினத்தன்று நீ வராதிருக்கலாமா?” என்று மன்றாடுகிறார்.

எனக்கு நானே, உள்ளுக்குள்ளேஇன்ஸ்பெக்ட்பண்ணிக் கொண்டுதான் இப்படி முடிவு பண்ணினேன்என்கிறான் பாலன். எனக்குப் பள்ளியும் படிப்பும் போதும். தாங்களும், என் தாய் தந்தையரும் பள்ளியில் பயின்றவர்கள்தாம். ஆனால் பயின்ற தர்மம் எதையும் வாழ்க்கையில் மேற்கொள்வதற்கில்லை என்று காட்டிவிட்டீர்கள்! அப்படியிருக்க, இந்தப் பள்ளிப் படிப்பால் எனக்கென்ன பிரயோஜனம்?” என்று வெண்கல மணியெனக் கேட்கிறான்.

பெரியோர் வெட்குகின்றனர். அவர்களுடைய கண் திறக்கிறது. “நீ தானப்பா எங்கள் குருஎன்கின்றனர்.

பிட்ல குருவுஇந்த நாடகத்தை எழுதி, அதில் தானே கிருஷ்ணனாக நடித்தான். கதை, கருத்து, நடிப்பு அனைத்தையும் ஊரெல்லாம் போற்றியது. இன்றைக்கும் சரி, பெற்றோரும் போதகரும் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இல்லாததில் நம் காவிய நாயகர் மனம் வெதும்பிப் பேசுவார்; அனல் தெறிக்கவும் பேசுவார்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ என்று குழந்தைகளுக்கெனவே அமைந்த ஸாயி மன்றங்களானபால விகாஸ்களின் மஹாநாடுகளில் தவறாமல் எடுத்துரைப்பவர் அவர். ஆனால் பெரியோரிடம் பேசும்போது, மாதாபிதாகுருதெய்வம் என்று சொல்லப்பட்டாலும், இதில் முதல் மூவர் எப்படிச் சற்றும் தெய்வாம்சம் இல்லாமலிருக்கிறார்கள் என்பதையும், அவ்வளவு உயர்வாகப் போகாவிட்டாலும், சாமான்ய மனித நன்னெறிகளில் கூட இவர்கள் எவ்வளவு தாழ்ந்து, பின் தலைமுறையினரையும் சறுக்குப் பாதைக்கு இழுத்துவிட்டிருக்கிறார்கள் என்பதையும் இடித்துக் காட்டுவார்.

வெற்று இந்திரிய சுகங்களின் உச்சிக்குப் போயும் நிறைவு காணாததால் வெளிநாட்டார் நமது பக்தி, யோகம், வேதாந்தம் இவற்றை நாடி வருகிறார்கள். ஆனால் நம் நாட்டுப் பிள்ளைகளோ புராதன பாரதப் பண்பாட்டில் வேர் ஊன்றப் பிடிக்காமல், வெளிநாட்டார் தூவென்று தள்ளிய மட்டமான அம்சங்களைப் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள். நடை, உடை, பாவனை எதிலுமே பாரதக் கலாசாரத்தின் வாடைகூட வீசக் கூடாதென்று கருதும் மேற்கத்திய ஸ்வீகாரப் புத்திரர்களைக் கொண்டதுதான் இன்றையசுதந்திரபாரதம்! ஆத்மிகமாகவும், தார்மிகமாகவும், உண்மையான கலையுலகிலும், அறிவுலகிலும் சாதிக்கவேண்டிய சாதனைகள் எத்தனையோ இருக்க நம் இளைஞர்கள் போயும் போயும் கேசத்தை வளர்த்துக் கொள்வதையும், கிருதா வைத்துக் கொள்வதையும், ட்ரெயின்பைப் நிஜார் போட்டுக் கொண்டு அசங்கியமான மெட்டுக்களைச் சீட்டியடிப்பதையும் பெரிய சாதனையாக நினைப்பதை என்னென்பது? ஆனால் நான் அவர்களைக் குறை சொல்லமாட்டேன். அவர்களுக்கு நல்வழி காட்டத் தவறியவர்களும், அவர்களுக்கு உபதேசம் செய்ய ஒருவித யோக்கியதையும் பெறாதவர்களுமான பெற்றோரையும், ஆசிரியர்களையும்தான் குற்றத்துக்கு முழுப் பொறுப்பாக்குவேன். இன்றுள்ள முன் தலைமுறையினர் இளம் தலைமுறையினரின் தப்பிதமான போக்குக்களைத் தாங்களும் மேற்கொள்ள முடியாதா என்று உள்ளூரத் தாபம் கொண்டவர்கள்தாம். விதைதான் பயிராகும். குளத்தில் இருப்பதுதான் குழாயில் வரும். முன் தலைமுறையினரின் மானஸிக முறைகேடே பின் தலை முறையில் காரியத்தில் வெளிவந்திருக்கிறதுஎன்பார்.

இங்கே நடுவில் கேசத்தை வளர்த்துக் கொள்ளும் பிரஸ்தாவம் வந்தது. நம் கதாநாதருக்கே அவரதுஹேர்ஸ்டைலால் தான் ஒரு பிரக்கியாதி! அவரது திருமுடி இப்படியிருப்பதற்குப் பிற்பாடு காரணம் ஆராயலாம். இங்கே நாம் கவனிக்கவேண்டியது. அவருக்கு நாகரிகக் கேசம், மீசை, ஸைட் பர்ன்ஸ் இத்யாதி அடியோடு பிடிக்காது என்பதுதான். ஸத்யஸாயி கல்லூரி மாணவர்கள் இவ்விதம் தம்மைஅலங்கரித்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அது மட்டுமில்லை, அனைத்துக் கல்லூரி மாணவருக்கென அவர் ஒயிட்ஃபீல்டில் நமது கலாசாரம் குறித்துக் கோடைப் பயிற்சி (Summer Course) நடத்துவதுண்டு. வகுப்புகள் தொடங்குவதற்கு முன்தினம் ஒவ்வொரு மாணவனிடமும் வந்து உற்றுப் பார்த்து, ஹிப்பி முடி, பழுவேட்டரையர் மீசை முதலியன வைத்திருப்பவர்களை முதற்காரியமாக ஸலூனுக்குப் போய் வந்து, பிறகே முகாமில் சேரப் பணிப்பார். “மாடர்ன்சாமியார் என்று நினைக்கப்படும் நம் சரித நாயகர் அநேக விஷயங்களில் பலை நாதனிகளையும் விடக் கடுமையாக இருப்பவர் என்பது பலருக்குத் தெரியவில்லை.

மேற்சொன்ன பயிற்சி முடிந்து சான்றிதழ் வழங்கும் விழாவுக்காக அத்தனை ஆடவ மாணவர்களுக்கும் சட்டையோடு வேஷ்டி வழங்குவார். “இன்று ஒரு நாளாவது கல்லூரி மாணவர்கள் மரபுப்படி மூலைக்கச்சமாக வேஷ்டி கட்டிக் கொள்ளவேண்டும்என்பார். மாணவர்களும் அவ்விதமே ஆடை புனைந்து அவரை வணங்கி ஆசி பெறுவர்.

ஆனாலும், இன்னொரு விஷயமும் இங்கே மனத்தில் தோன்றுவதை எழுதாமலிருக்க முடியவில்லை. வேள்வி உட்பட்ட வைதிகச் சடங்குகளிலும் ஸ்வாமியின் அணுக்கத் தொண்டர் உள்பட ஸாயி பக்தர் பலரும் பான்ட் போட்டுக் கொண்டும், நெற்றியில் திருநீறு இருக்கிறதா என்பதே தெரியாமல் அவ்வளவு லேசாக இட்டுக் கொண்டும்தான் வருகிறார்கள். ‘வைதிக ஸதாசாரம், பாரதீய ஸம்ஸ்க்ருதி இவற்றை அடிக்கடி இயம்பும் ஸாயிநாதனின் அடியார்கள் ஒரே மடிசஞ்சியாக இல்லா விட்டலும் இன்னும் கொஞ்சத்தில் கொஞ்சம்பாரதீயர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டால் நன்றாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. இல்லாவிடில் இவர்கள் ஸ்வாமியை வேத சாஸ்திரக் காவலராகப் போற்றுகையில் இவர்களைக் குறித்தேசெப்பினட்லு சேஸ்தாரா?” கேட்கும்படியாகத்தானே இருக்கும்?

செப்பினபடி செய்யாதது தான் இன்று நம் நாட்டைப் பீடித்துள்ள பெரிய சாபத்தீடு என்பதை ஸ்வாமி ஓர் அழகிய உவமையால் விளக்குவார்: “இப்போது நம் நாட்டில் வேதாந்தத்தையும் பக்தியையும் பற்றிச் சண்டப் பிரசண்டமாகப் பேசுவதற்கு ஒரு குறைவுமில்லை. அநுஷ்டானத்தில் தான் அதில் ஒரு சிறு அம்சமும் காணோம். விருந்துணவைச் செரித்துக் கொண்டால்தான் அது தேகத்துக்கு ஊட்டம். அல்லாமற்போனால் அதுவே டாக்ஸின் ஆகி, உடம்பை நச்சால் நலிவித்து விடும். இன்று ஏராளமாக ஆத்மிகப் படிப்பும், பேச்சும் இருந்தபோதிலும், அது கொஞ்சம்கூடக் காரியத்துக்கு வராமல், இதயத்தில் கரையாமல், அதாவது செரிக்காமல், வாயோடு மூளையோடு தேங்கி நின்று விடுவதால், அகங்காரடாக்ஸின்உண்டாவதோடு முடிந்து விடுகிறது!”

***

துளித்துளியாக, படிப்படியாகத் தன் அவதார மகிமையைப் புரிந்துகொள்ளும் திராணியை வெளியுலகுக்கு ஏற்படுத்தி வந்த ஸத்ய நாராயணன் இச் சமயத்தில் அவர்களை இவ்வழியில் இன்னொரு படி உயர்த்தினான். அதாவது, அவர்கள் ஏதாவது பொருள் காணவில்லை என்று தெரிவித்தால் அது இருக்குமிடத்தைப் பளிச்சென்று கூறலானான்.

இதில் பூர்வாவதாரமான ஷீர்டி பாபாவை அடியொற்றிச் செல்லும் அழகினைக் காண்கிறோம். அவர் இளம் பருவத்தில், ஷீர்டி சென்று சேருமுன்னர், அநாமதேயப் பக்கிரியாக கோதாவரி தீரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் தமது அருமைக் குதிரையைச் சிலகாலம் முந்திப் பறிகொடுத்துவிட்டு, வெறியாகத் தேடிக் கொண்டிருந்த தூப்காம் தனிகர் சந்த்படேல் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட மாத்திரத்தில் இளம் பக்கிரி தாமாகவே, “உன் குதிரை இதோ உன்னிடம் வந்து சேரும்என்றார். விந்தையாக அப்படியே நடந்தது. சந்த் படேல் இளைஞரை இறைவராகவே எண்ணினார். தம்முடன் தமது மருமான் திருமணத்திற்காக அவரையும் ஷீர்டிக்கு அழைத்துச் சென்றார். ஷீர்டியில் பிரவேசித்துக் கண்டோபா மஹாதேவ ஆலயப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த பக்கிரியை ஆலய பூஜாரி ம்ஹால்ஸாபதி கண்டதுதான் தாமதம், அவரை ஒரு மின்னல் வெட்டிப் பக்கிரியின் பாதத்தில் விழச் செய்தது – “ஸாயி பாபா!” என்று அவரை ஆர்த்தழைக்கவும் வைத்தது.

அன்றிலிருந்தே, அதாவது காணாத குதிரையைக் கண்டு கொடுத்ததன் தொடர்ச்சியாகவே அநாமதேயப் பக்கிரி அகிலப் பிரஸித்தமானஸாயி பாபாநாமத்தினைப் பெற்றார். ‘ஸாயிஎன்பதுஸ்வாமிஎன்பதன் திரிபு. ‘கோஸ்வாமிகளை வடக்கேகோஸாயின்என்பதிலிருந்து இது புலனாகிறது. மகானைக் குறிக்கும்ஸாஹி’, ‘ஷாஹிஎன்ற பெர்சிய வார்த்தையேஸாயிஆயிற்று என்பாரும் உண்டு.

பாபாஎன்பதும் பெர்சிய வார்த்தையே. ‘தந்தைஎன்பது நேர்ப்பொருள். எனவே பெரியார் எவரையும் குறிக்கும்.

ஸாயி பாபாஎன்ற சொற்றொடர் பொதுவில் ஒரு முஸ்லீம் பெரியாரையே நினைவூட்டும்.

ஸாயின்என்றால் வடமொழியில் குதிரைக்காரன் என்று ஒரு அர்த்தமிருப்பது அதிசயப் பொருத்தமாகும். குதிரையைக் கண்டு பிடித்துக் கொடுத்தவரைக் குதிரைக்காரர் என்றே சொல்லலாம் தானே? ஸாயி பாபாவுக்கே உரித்தான உபகாரப் பணி ஆரம்பித்தது இதில்தான்.

இங்கே ஸத்யாவும் வெளி உலகுக்கு பஹிரங்கமாகக் காட்டிய முதல் லீலை குதிரையைக் கண்டுபிடித்துத் தந்ததுதான்! இதுவரையில் அவன் தன்னொத்த பாலருக்கே தின்பண்டம், நோட்டு, பென்சில் போன்றவற்றை வரவழைத்துத் தந்தானே ஒழிய, வெளி உலகுக்கு அமானுஷ்ய சக்தியால் உதவி புரிந்தானில்லை. உபாத்தியாயரை நாற்காலியில் ஒட்டியதைபாபாத்வம்வாய்ந்த உபகாரத்தோடு சேர்ப்பதற்கில்லை. பாலரிடமும்கூடத் தான் சிருஷ்டித்ததாகச் சொல்லாமல்ஸத்யாம்மா பிரஸாதம்என்றே கூறி வந்தான். இப்போது, தன் பெயரிலேயே, வெளி உலகுக்கு அதிமானுட ஆற்றலால் உதவியைத் தொடங்க ஒரு குதிரைக் கண்டுபிடிப்பையே அங்குரார்ப்பண மாக்கிக் கொண்டான்.

முஸ்லீம் ஜட்காவாலா ஒருவனது குதிரை காணாமற்போய் விட்டது. தெலுங்கு வாத்தியாரின் தம்பிக்குத் தேவ சக்திகளின் உதவியிருப்பதாகச் சொல்கிறார்களே என்று ஸத்யாவிடம் ஓடி வந்தான். பரியைப் பறிகொடுத்தவன்.

ஸத்யா, “ஊருக்கு வெளியில் ஒன்றரை கல்லில் பெரிய தோப்பு இருக்கு பாரு, அங்கே போ, உன் குதிரை புல் மேய்ஞ்சிட்டிருக்கும்என்றான்.

ஜட்காக்காரன் அங்கு ஓடினான். குதிரையும் மேய்ந்து கொண்டிருந்தது! அதைப் பிடித்துக் கொண்டு திரும்பினான்.

மொழியிலக்கணப்படிஅச்வம்என்றாலும்விச்வம்என்றாலும் ஒன்றேதான். திசை தவறி ஓடிய விச்வத்தை வழி திருப்பி விடவே வந்த அவதாரம் என்று காட்டத்தானோ இரு ஸாயிக்களும் முதன்முதலாகத் தறிகெட்டோடிய அச்வத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தது? விச்வம், ச்வம் என்றால் இன்றிருப்பதுபோல் நாளைக்கு இல்லாமல் மாறிக் கொண்டிருப்பது எனப் பொருள்படும். ஓயாமல் மாறும் சம்ஸாரத்தில் மாறாத தர்ம மார்க்கத்தைக் காட்டிக் கொடுக்க வரும் அவதாரம் தாம் என்பதற்கு அடையாளமாகவே குதிரை கண்டுபிடித்துத் தந்திருப்பரோ? கலியுகாவதாரமாம் கல்கிக்கு உள்ள குதிரைத் தொடர்பும் இங்கு நினைவுறத் தக்கது.

அன்றிலிருந்து ஜட்காக்காரர்கள் யாவரும் தங்கள் வண்டியில் ஸத்யா ஏறினாலே அதிருஷ்டம் எனக் கருதி, அவன் எங்கே நடந்து சென்றாலும் அங்கே போய் அவனை ஏறிக்கொள்ளச் சொல்லி அன்புத் தொல்லை கொடுக்கலாயினர்.

***

ள்ளி ஆசிரியர் ஒருவர் தமது பேனாவைக் காணோம் என்றார். வேலைக்காரன் ஒருவன் பெயரைச் சொல்லி அவன்தான் களவிட்டவன் என்றான் ஸத்யா.

அவனா? ஒருநாளும் இராது. அவன் சத்தியசந்தன்என்றார் ஆசிரியர்.

இல்லை. அவன் தான் குற்றவாளிஎன்றான் மாணவன்.

வேலைக்காரன் இல்லாதபோது அவனுடைய அறையைச் சோதித்த ஆசிரியர் பேனாவை அங்கு காணவில்லை.

அதெப்படி அங்கே இருக்கும்? அவன் தான் அனந்தப்பூரில் படிக்கும் தன் பிள்ளைக்கு அனுப்பிவிட்டானே!” என்றான் ஸத்யா.

இதை நிரூபிப்பதற்காக, எழுதப்படிக்கத் தெரியாத அந்த வேலைக்காரன் தன்னைவிட்டு எழுதச் சொல்வதாகக் கள்ளத்தனம் செய்து அனந்தப்பூர் பிள்ளைக்குக் கடிதம் எழுதினான். (யானையைக் காட்டி யானையைப் பிடிப்பதுபோல்கண்ணி வைத்துத் திருடரைப் பிடிப்பது அன்றிலிருந்து இன்றுவரை நீதி சாஸ்திரத்தால் ஒப்பப்படுவது தானே?) கடிதத்தில் வழக்கமான யோக க்ஷேமங்கள் விசாரித்துவிட்டு, “புதிதாக அனுப்பி வைத்த பேனா நன்றாக எழுதுகிறதா? அதை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்விலை உயர்ந்த வஸ்துவாதலால் யாராவது திருடிப்போய் விடுவார்கள் என்று உஷார்ப்படுத்தினான்! பதிலுக்கு உறையும் வைத்தான்.

நாலாவது நாள் பதில் வந்தது. ஸத்யாவின்ஜோஸ்யம்நிரூபணமாயிற்று என்று சொல்லவும் வேண்டுமா?

***

ந்தக் காலத்தில் தோழர்கள் இம்மாதிரி களவு பற்றித் தெரிவித்தால், பண்டத்தை எடுத்தவர்களின் பெயரில் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் மட்டும் சொல்லி அவர்களைக் கொஞ்சம் திண்டாடவிட்டுத் தாம் குஷிப்பட்டதாகப் பிற்காலத்தில் ஸ்வாமி கூறியிருக்கிறார். உதாரணமாகஎஸ்என்று ஸத்யா சொன்னால் அதுஸ்ரீ நிவாஸவாக இருக்கலாம், அல்லதுசங்கரவாக இருக்கலாம், அல்லதுஸத்ய நாராயணவாகவே இருக்கலாம் அல்லவா?மகா பெரிய கள்வன் ஒருவனின் பெயரையும் அவன் அறிவிக்கப் போகிற தருணம் நெருங்கிவிட்டது. ஸத்ய நாராயணன் என்ற சிறுவனாக ஒருத்தன் உலவுகிறானே, இவன் ரத்னாகர நடராஜு வீட்டுப் பிள்ளை அல்லவே அல்ல. இவனுக்குள்ளே ஒரு கள்ளத் தலைவன், வேதம் சொல்கிற ‘தஸ்கராணாம் பதி’ ஒளிந்து கொண்டிருக்கிறான்! அவனுடைய பெயரை ஆரம்ப எழுத்தும் கடைசி எழுத்தும் மட்டுமின்றி முழுமையாகவே இவன் அறிவிக்கப் போகிறான். அற்புத முறையில் தனக்குத் தானே நாமகரணம் செய்துகொண்டு இவன் புனர் ஜன்மம் கொள்ளப்போகிற அந்த நாள் இதோ நெருங்கி விட்டது!