அத்தியாயம் – 11
ஸத்யாவின் சபதம்
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான்.
– பாரதியார்: ‘கண்ணன் – என் தோழன்
ஸத்யா ஜில்லெனக் குளிரப் பாடிக் கொண்டும், ஜல் ஜல் என்று நளினமுற ஆடிக் கொண்டும் பண்டரிபுரத்தையும் கண்ணனையும், கேள்விப்படாத அந்த இன்னொரு க்ஷேத்திரத்தையும் இன்னொரு மூர்த்தியையும் புட்டபர்த்திக்குக் கொண்டு வந்தபோது சிறார் மட்டுமின்றிப் பெரியோர்களும் அதில் ஈர்க்கப்பட்டனர். இந்த வாண்டு பக்த ‘ட்ரூப்’பின் புகழ் கிராமத்துக்கு வெளியிலும் பரவி, அண்டை ஊராரும் இந்த பால பாகவத கோஷ்டியைத் தங்கள் ஊர்களுக்கு அழைக்கலாயினர். புட்டபர்த்திக்குச் சுமார் நாற்பது மைலில் உள்ள ஹிந்துப்பூர் போன்ற ஊர்களுக்கும் நமது குழந்தைக் குழு சென்று குதூகல பஜனையில் ஜனங்களைப் பரவசமுறச் செய்தது.
ஸத்யாவின் ஈர்ப்புச் சக்தி மட்டுமின்றி மற்றொரு காரணமும் சேர்ந்து வெளியூர்க்காரர்கள் அவனுடைய பண்டரி கோஷ்டியை வரவழைக்கச் செய்தது.
1935ல் அனந்தப்பூர் மாவட்டமெங்கும் காலரா நோய் பரவி கூட்டங்கூட்டமாக மக்களைக் காலனிடம் வாரிவிட்டுக் கொண்டிருந்தது. அதிசயத்திலும் அதிசயமாக புட்டபர்த்தி மாத்திரம் தனித்துத் தப்பி நின்றது! ஸத்யத்தின் பண்டரி பஜனையே நோயை விரட்டிய மஹாமருந்து என்று மக்கள் கண்டு கொண்டனர். அதனால் சுற்றுப்புற ஊர்களிலிருந்து பாலர் பஜனை கோஷ்டிக்கு அழைப்பு வந்தவண்ணமிருந்தது.
ஸத்யாவின் உற்சாகத்தால் புது வேகம் பெற்றோ என்னவோ இச்சமயத்தில் அவனது குடும்பத்தினரும் புது உற்சாகத்துடன் தங்களுடைய திறந்தவெளி நாடகங்களை இயற்றி நடிக்கலாயினர். 1937-ஐ ஒட்டிய சமயம். அப்போது ஒரு பஞ்சம் ஆந்திர நாட்டைப் பீடித்தது. பஞ்ச நிவாரணத்துக்காக ஸத்யா குடும்பத்தினர் பல ஊர்களுக்குச் சென்று பாணாசுரம், உஷா பரிணயம், த்ரெளபதி மான ஸம்ரக்ஷணம், கம்ஸவதம் முதலிய நாடகங்களை நடத்தினர். ஸத்யாவின் தந்தை பெத்த வெங்கம ராஜு இப்போது பிள்ளையிடமிருந்து ‘இன்ஸ்பிரேஷன்’! பெற்றது போல் யுதிஷ்டிரனாகவும், பாணாஸுரனாகவும் வேஷம் போட்டு ஜமாய்க்கலானார்.
ஊர் ஊராக நாடகக் குழுவுக்கு அழைப்பு வந்ததில் அதிசயம் இல்லை. சிறுவன் ஸத்யத்தின் பண்டரி பஜனுக்கும் இதைவிட வரவேற்புக் கிடைத்ததுதான் அதிசயம். படிப்புக்குக் குந்தகம் இன்றி விடுமுறை நாட்களிலேயே இந்தப் பகவத் பணியைப் புரிந்து வந்தான். படிப்பு என்ற கடமையை ஸத்யா ஒரு நாளும் கைவிட மாட்டான். சகாக்களுக்கும் அப்படியே விதிப்பான்.
தன் பலம் கொண்டு அம்பலம் ஏறித் தானே ஹீரோவாகி விட்ட ஸத்யாவின் பிராபல்யத்தைக் கண்ட பெரியவர்கள் தங்களது நாடகங்களிலும் பங்குகொள்ளுமாறு அவனை அழைத்தனர்.
“ஆகா” என்றான் ஸத்யா. “ஆனால் ஒரு நிபந்தனை. எனக்கான வசனங்களை நானேதான் தயாரித்துக் கொள்வேன். என் பாட்டுக்களையும் நானே கவனம் செய்து கொள்வேன்” என்றான்.
ஸத்யாவின் கலையறிவை அறிந்த பெரியோர்கள் பரீட்சை தான் பார்க்கலாமே என்று ஒப்புக்கொண்டனர். அதன் முடிவில் தங்களுக்கான வசனங்களையும் பாடல்களையும்கூட ஸத்யாவே மாற்றி எழுதித் தர வேண்டுமென்று கேட்கலாயினர்! அந்தச் சின்ன வயசிலேயே அவனது வசனங்களில் கவர்ச்சிகரமான கவித்துவம் மிளிர்ந்தது. கவர்ச்சி என்பதால் கௌரவம் குறைந்திருக்கவில்லை.
தூய்மையும் தார்மிகமும் ஆத்மிகமுமே கலை என்பதை அந்த நாளிலேயே காட்டினான் ஸத்யா. வீரம், ஹாஸ்யம், பிரேமை, சோகம் ஆகிய எல்லா உணர்ச்சிகளையும் உன்னத முறையில், நன்னெறிக்கு வழிகாட்டும் முறையில் வசனமாக, கானமாக ஆக்கித் தந்தான். எல்லா உணர்ச்சிகளையும் பக்திக்கே தலை பணிய வைத்தான்.
நாடகத்துக்கு மக்கள் மீதுள்ள மகத்தான சக்தியைக் கருத்தில் கொண்டு இன்றும் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா அதை தர்ம வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதில் விசேஷ கவனம் காட்டிவருகிறார். தமது எண்ணற்ற அலுவல்களிடையே தெய்விகமான நாடகங்கள் பலவற்றை இயற்றித் தமது கல்விசாலைகளின் மாணவர்களைக் கொண்டு அவற்றை நடிக்கச் செய்கிறார். கதை, வசனம், பாடல், டைரக்ஷன், காஸ்ட்யூம் சகலத்திற்கும் அவரே முக்கியமான பொறுப்பேற்றுச் செய்கிறாராக்கும்!
ஆதியில் பெரியோர்களின் நாடகத்தில் அவர் ஏற்ற பாத்திரங்களில் கிருஷ்ணனையும், மோஹினியையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் கண்ணனாகவே இவரைப் பலர் ஆராதிக்கப் போகிறார்கள். மோஹினி அமுதம் தந்தது போல இவரும் பலருக்கு அமிருதம்’ வழங்கப் போகிறார்! மற்ற நடிகர்கள் மேடைக்கு வெளியே நிஜமாகவும், மேடை மேல் வேஷதாரிகளாகவும் இருப்பர் எனில், ஸத்யாவோ வெளியே ராஜு குடும்பத்தானைப் போன்ற வேஷதாரியாகவும், மேடையில் தனது நிஜமான பழைய கிருஷ்ண, மோஹினி ரூபங்களை எடுத்தவனாகவும் இருந்தான்!
ஸத்யா மேடையில் தோன்றிவிட்டாலே அவையோரின் ஆனந்தம் தாங்க முடியாது. பார்த்தால் பசி தீரும் பால் வடியும் முகம். கணீரென்று வசனங்களை மொழியும் தெளிவு அவற்றில் கலை நயம், தர்ம போதனை. கானம் செய்தாலோ நாரத வீணைதான். நாட்டியமும் செய்துவிட்டால், அந்த இன்பம் சொல்லி முடியாது. “இது மனுஷ உடம்புதானா? பூப்பந்து கணக்காயில்லே குதிக்குது இந்தப் பிள்ளை? தேவருங்க கால் பூமியிலே பாவாதுன்னுவாங்களே, அது மாதிரி இந்த படராஜு விட்டுப் படு சுட்டியின் பாதமே பூமியைத் தொடாத மாதிரியில்லே ஸ்பிரிங்காத் துள்ளுது?” என்று வியப்பார்கள்.
“கிருஷ்ண லீலா”வில் தேவகி அல்லது கண்ணனாக ஸத்யா நடப்பான். இவ்விரு வேஷங்களிலும் அவனது சிறப்பைக் கண்டவர்கள் ஒரு சமயம் தேவகி அல்லது கண்ணனாக இல்லாமல் தேவகி, கண்ணன் இருவராகவும் ஒரே நாடகத்தில் அவன் நடிக்க வேண்டும் என்றனர். அதனால் கண்ணனே, கண்ணனுக்கான உடையலங்காரத்துடனேயே, தேவகியாகவும் நடிக்க வேண்டி வந்தது. பிறகு கம்ஸன் தர்பாரில் நாட்டியக் காட்சி வந்தது. மோஹினியாக ஸத்யா ஆடியிருப்பதைக் கண்டிருந்த ரஸிகர்கள், இப்போதும் “கொண்டு வா ஸத்யாவை!” என்று ஆர்ப்பரித்தனர். கண்ணனே கம்ஸ சபையில் நாட்டியமாடும் விசித்திரமும் நிகழ்ந்தது!
பிற்காலத்தில் இதையெல்லாம் அவர் மகிழ்வுடன் நினைவு கூறுவதுண்டு. “த்ரௌபதிமான ஸம்ரக்ஷணத்தில் ஒரு சமயம் நான் த்ரௌபதியாக நடித்தேன். துச்சாஸனன் துகில் உரிய உரிய அது வளர வேண்டுமல்லவா? அதற்காக எனக்கு ஏழு புடவைகளை ஒன்றின் மேல் ஒன்றாகச் சுற்றி விட்டிருந்தார்கள். ஆனாலும் அப்படித் தெரியக்கூடாது என்பதற்காக அமுக்கு திமுக்கு என்று வயிற்றோடு கட்டி, என்னைப் படுத்திய பாடு உண்டே” என்று கூறிச் சிரிப்பார். ஏழு தாதுக்களுக்குள் உள்ள ஆத்மாவே ஏழு சுற்றுகளுக்கு (பிராகாரங்களுக்கு) உள்ளே இருக்கும் அரங்கநாதன் என்பார்கள். அரங்கில் ஏறி நடிக்கையில் அவனையே ஏழு புடவைகளைச் சுற்றிப் பாடுபடுத்தியிருக்கிறார்கள்!
பாடுபடுத்தியிருக்க வேண்டாம்தான். இந்த துரௌபதியே கண்ணனாகி, வாஸ்தவமாகவே வஸ்திரத்தை அக்ஷயமாகப் பெருக்கிக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் கண்டார்களா? ஆனாலும் பிற்பாடு இப்படி நடந்ததென்னவோ வாஸ்தவம்.
***
அப்போது ஸத்யாவுக்கு இருபது வயது இருக்கலாம். வெறும் ஸத்யாவாக இல்லாமல் ஸத்ய ஸாயி பாபாவாகி விட்டார்.
பண்ணுருட்டியிலிருந்து ஒரு தம்பதியர் அவரைத் தரிசிக்க வந்திருக்கிறார்கள். பொம்மைக்குப் பெயரெடுத்த ஊரல்லவா அது? இவர்கள் பெரிய பார்வதி – பரமேசுவரப் பொம்மைகளை பாபாவுக்கு அர்ப்பிக்கின்றனர். அதோடு பாபா அணிவதற்காக சரிகை வேஷ்டி, அங்கவஸ்திரமும் சமர்ப்பிக்கின்றனர்.
புத்தாடைகளை அவர் அணியவில்லை. பொம்மைப் பரமசிவனுக்கே வேஷ்டியைக் கட்டி, அதன் தலையில் அங்கவஸ்திரத்தை வரிந்து சுற்றுகிறார். ஈசனுக்கு இந்தக் கோலமும் அழகாகத்தான் இருக்கிறது. பாபா பண்ணுருட்டித் தம்பதியரைப் பார்த்துக் கண் உருட்டிக் குறும்புப் புன்னகையுடன், “பார்வதியம்மாவுக்குப் புடவை எங்கே?” என்கிறார். அவர்கள் ஒன்றும் சொல்லத் தெரியாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்.
பாபா மதுரமாக, “பாவம், பரவாயில்லை” என்கிறார்.
இந்தப் ‘பாவம்’ அல்லது ‘ஐயோ பாவம்’ அவரது அதரத்திலிருந்து அடிக்கடி உதிரும் சொல்லாகும். ‘பாப(ம்)’ என்று அவர் சொல்வதையே இங்கு ‘பாவம்’ என்று வகாரமாக மாற்றி இருக்கிறது. ஏனெனில் தமிழகத்தில் ‘பாவம்’ என்று சொல்வதுதான் பரிதாபச் சொல்லாக உள்ளது; ‘பாபம்’ என்பது எரிச்சல் உணர்விலேயே கூறப்படுகிறது.
ஏதோ செய்துகொண்டிருப்பார், எவருடனோ பேசிக் கொண்டிருப்பார், நடுநடுவே சம்பந்தமில்லாமல் ‘பாவம்’, ‘ஐயோ பாவம் சொல்வார். ‘சம்பந்தமில்லாமல்’ என்று எப்படிச் சொல்லமுடியும்? உலகக் குழந்தைகள் அறியாமையால் ஓயாமல் பாவத்தில் மாட்டிக் கொள்வதை எண்ணி அவர் அனவரதமும் உருகுகிறார். அவ்வப்போது அவர்களில் அடியார்கள் எழுப்பும் தீனக்குரல் இவர் எங்கிருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், எவரோடு பேசிக் கொண்டிருந்தாலும் இவர் காதில் விழுகிறது. “அடியார்க்கு ஆ ஆ என்றிரங்கி” என்று ஆழ்வார் சொன்னதுபோல் ‘ஐயோ பாவம்’ என்று ஓயாமல் பரிதவிக்கிறார். தம் எதிரில் இருப்பவர்களின் பாவத்தையும் அடிக்கடி நினைப்பார் போலும், பரிதாபத்துடன் ‘பாபம்’, என்கிறார்.
“பாவம், பரவாயில்லைதான்!” பண்ணுருட்டித் தம்பதியர் அம்பாளுக்குச் சேலை கொண்டு வராவிட்டால் என்ன? பாபா தமது இடது உள்ளங்கையில் வலக்கை விரல்களை வைத்துத் தோல் உரிந்தால் அதை எடுப்பது போல் பாவனை செய்கிறார். இல்லை, இல்லை, தோலை உரிக்கவில்லை! இவர் வலக்கை விரல்களால் இழுக்க இழுக்க இடக்கை உள்ளிருந்து சிறிது சிறிதாக ஓர் அருமையான சேலையே வந்து விடுகிறது! அதைப் பார்வதி பொம்மைக்கு அணிவிக்கிறார்!
***
குழந்தைகளின் பஜனை, ரத்னாகர ராஜுக்களின் நாடகம், ஸினிமா இவற்றோடு ஒரு டிராமா கம்பெனியார் வேறு வந்து டேரா அடித்தார்கள். அவர்கள் போட்ட நாடகங்களைவிட மக்களைக் கூட்டம் கூட்டமாக ஈர்த்த அம்சம், நடிகைகளில் ஒருத்தியான ருஷ்யேந்திரமணி செய்த ஒரு சாகஸந்தான்.
எந்த நாடகமானாலும் சரி, கதைக்குப் பொருத்தமிருக்கிறதோ இல்லையோ இடையே இவள் வருவாள். தலைமீது ஒரு பாட்டிலை வைத்துக்கொண்டு அது விழாமலே நடனமாடுவாள். கொஞ்சம் கொஞ்சமாகத் தரையோடு தரையாகக் குனிந்து பூமி மீதுள்ள ஒரு கைக்குட்டையை வாயில் கவ்விக் கொண்டவாறே பழையபடி எழுந்திருப்பாள். பாட்டில் அப்படியே தலைமேலிருக்கும். இதைக் கண்டு ரஸிக மஹாஜனங்களின் உற்சாகம் கரைபுரண்டுவிடும்!
ஸத்ய நாராயணனும் வீட்டாரோடு சென்று இந்த ஸாஹஸத்தைப் பார்த்து வந்தான். திரும்பிய பின் வீட்டில் இதேதான் பேச்சு. “இத்தனைக்கும் அதுவும் சிறுசுதான். எப்படியோ அசுர சாதனையாப் பழகிடுச்சு. வேறே யாரும் நினைச்சுக்கூடப் பார்க்க முடியுமா?” என்று சொன்னார்கள்.
“நினைச்சுப் பார்க்கிறதென்ன? நடத்தியே காட்டிட்டாப் போச்சு!” என்று அலக்ஷ்யமாகச் சொன்னான் ஸத்யா.
தரையில் ஒரு கைக்குட்டையைப் போட்டான். தலையில் ஒரு பாட்டிலை எடுத்து வைத்துக்கொண்டான். அது விழாமலே எப்படியோ நிறுத்திக்கொண்டான். பல காலம் பழகியவனைப் போல ததிங்கிணதோம் போட்டு ஆடினான். குனிந்தான்,
கைக்குட்டையைக் கவ்வி எடுத்தான், நிமிர்ந்தான், நிர்த்தமிட்டான்! இத்தனை அண்ட கோளங்களும் எதில் ‘பாலன்ஸ்’ ஆகின்றன என்றே தெரியாமல் விசுவ நடனம் செய்கிற மஹாசக்தியில் ஒன்றுபட்டவன் பாட்டிலை பாலன்ஸ் பண்ணுவது ஒரு அதிசயமா?
ஆனால் அவனுடைய ரகசியத்தைத் தெரிந்துகொள்ளாத அவனது வீட்டாருக்கு இவன் அதைப் பூரணமாக அவிழ்த்து விட்டால்தானே அவர்கள் தெரிந்துகொள்ளலாம்? இது மஹா அதிசயமாக இருந்தது.
இனித் தங்கள் நாடகங்களிலும் அவன் இந்த பாட்டில் நாட்டியத்தைச் செய்தால் தங்கள் புகழ், செல்வம் ஆகியன ஓங்கும் என்று எண்ணி, “ஸத்யா, இனிமேலே இந்த அயிட்டத்தை நம்ப டிராமாக்களிலே சேர்த்துவிடலாம்” என்றார்கள்.
“ஒருகாலும் முடியாது” என்று பளிச்செனச் சொன்னான் ஸத்யா. இரவல் சரக்கைக் கொண்டு லாபம் பெறவும், அதன் அசல் சொந்தக்காரர்களுக்கு நஷ்டம் விளைவிக்கவும் குழந்தையின் தர்ம உள்ளம் இடம் தரவில்லை. ஸத்ய தர்ம நாயகனன்றோ?
இருந்தாலும் வீட்டார் வெளியே சொல்லி ஊரெல்லாம் ஸத்யம் செய்த சாகஸ நடனம் பிரசித்தி பெற்றுவிட்டது. அண்டையிலுள்ள கொத்தச்செறுவில் தேர்த் திருவிழா வந்தது. அவ்வூரார் ஸத்யாவிடம் வந்து பாட்டில் நாட்டியம் ஆடுமாறு கேட்டுக்கொண்டனர். டிராமாக் கம்பெனியாரிடமோ ருஷ்யேந்திர மணியிடமோ இப்போது போட்டி ஏதுமில்லாததால் அவனும் ஒப்புக்கொண்டான். நாட்டியமாக இருப்பதால் பெண் வேஷத்தில் தோன்றினால்தான் நன்றாக இருக்கும் என்று முடிவாயிற்று.
திருவிழாவன்று பார்வதம்மாவும் வெங்கம்மாவும் தம்பியைச் சிங்காரித்ததுண்டே ‘மாதாய மாலவனை’ என்றபடி கொண்டையும், திலகமும், கூடை நகையும், நாட்டியக் கட்டுமாக ஸத்யா வீட்டாருடன் கொத்தச்செறுவு சென்றான்.
அப்போதுதான் அவ்வூரார் உற்சாக மிகுதியில் செய்த ஒரு ‘திரிசமன்’ தெரிந்தது. அதாவது ருஷ்யேந்திரமணியே அன்று நடனமாடப் போவதாக அவர்கள் சுற்றுப்புறம் முழுதும் விளம்பரம் செய்துவிட்டார்கள்! ஸத்யாவும், ‘ஏதோ அசட்டு உற்சாகத்தில் செய்துவிட்டார்களே தவிர இதில் வஞ்சனை யொன்றுமில்லை. அவர்கள் தமாஷைக் கெடுக்க வேண்டாம்’ என்று பேசாமல் இருந்துவிட்டான்.
திரை விலகியது. “ருஷ்யேந்திரமணி” தலையில் பாட்டிலும் இடுப்பிலே கைகளுமாக நின்றாள். முன்னைவிட அழகாகவும், இளையவளாகவும் ஆகிவிட்டாளே என்று அவையோரில் பலருக்கு ஆச்சரியம்!
டூப்ளிகேட் ருஷ்யேந்திரமணி ஒரிஜினலையே தூக்கியடிப்பது போல் வளைந்து நெளிந்து, துள்ளித் தடுகுட்டமாக ஆடினாள்! அநாயாசமாகக் குனிந்தாள். அடடா, பழைய சாகஸத்தைவிட அசாத்திய சாகஸம் கைக்குட்டை அல்ல, ஓர் ஊசியையே கவ்வி எடுக்கிறாள்! அதுவும் எப்படி? பல்லால் கவ்வவில்லை. இடது கண் இரப்பையாலேயே ஊசியைக் கொந்தி எடுத்து விட்டாள்!
அவை அல்லோல கல்லோலப்பட்டது.
சாதனை செய்தது புட்டபர்த்தி ஸத்யாவாக்கும் என்ற உண்மை அவிழ்த்துவிடப்பட்டது. அவ்வளவுதான்! ரதோத்ஸவ ஸ்வாமியை மறந்து இவனுக்கே மக்கள் தேர்விழா நடத்திவிடுவார்கள் போலாயிற்று. ஆனானப்பட்ட ருஷ்யேந்திர மணியை விழுங்கிவிட்ட பயல் நம் பக்கத்து ஊர்க்காரனாயிற்றே என்ற அபிமானத்தில் அங்கே கூடியிருந்தவர்கள் வெள்ளிக் கிண்ணங்களையும் மற்றப் பரிசுகளையும் அவன்மீது வருஷித்துவிட்டனர்.
பெருங்கூட்டம் ஆரவாரித்தபோது ஓர் இதயம் மட்டும் தங்கி நின்றது. தாய் இதயம்தான் அது. ‘இத்தனை பேர் கண்படக் குழந்தை ஆடிவிட்டானே! திருஷ்டி தோஷம் வந்துவிடப் போகிறதே!’ என்ற கவலை ஈச்வரம்மாவை பிடுங்கித் தின்றது.
அவள் பயந்தபடியே ஆயிற்று.
புட்டபர்த்திக்குத் திரும்பியவுடன் ஸத்யாவின் செவ்வலரிக் கண்களில் குத்தல் வலி கண்டு விருவிருவென வீங்கின. இடைவிடாமல் கண்ணீர் வழியலாயிற்று. கண்வலியும், அதன் விளைவான கடுங்காய்ச்சலுமாக ஸத்யா படுக்கையில் சுருண்டு கிடந்தான். தென்றலில் தளிர்த்தாடிய ஒரு பசும் நாற்று திடுமென வைக்கோலாகிச் சாய்ந்து விட்டாற்போலிருந்தது. ஆனால் அவனோ முனகக்கூட இல்லை. பொறுமையின் உருவாக இருந்தான். தங்கள் ‘குருவு’ குருடாகிக்கிடப்பதைப் பார்த்துச் சிறுவர் பொருமினர். நாட்கள் ஓடின.
ஒரு நாள் நள்ளிரவு. ஈச்வராம்பாவுக்கு உறக்கம் கொள்ளவில்லை. ‘எந்த வைத்தியத்துக்கும் பிடிபடாமல் குழந்தை இப்படியாகிவிட்டானே?’ என்று தவித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் காதுகளில் கேட்டது ஓர் ஒலி! ‘லொட்’ ‘லொட்’ சப்தம். பாதக் குறட்டின் சப்தந்தான். சந்தேகமில்லை.
ஆனாலும் இவள் கண்களுக்கு எவரும் தெரியவில்லை.
ஆதியில் பாலன்னமிட்ட மாயத் தாத்தாதானோ?
தன் கண்ணுக்குப் பாதம் தெரியாவிடினும் அதன் குறட்டொலி இதோ தன்னை சமீபிக்கிறது, பக்கத்தே வந்துவிட்டது, தாண்டியும் சென்று ஸத்யத்தை அடைகிறது!
அதன் பிறகு லொட்டுச் சப்தம் இல்லை. இனம் தெரியாத அடர்த்தி செறிந்த ஒரு நிசப்தம்!
பிள்ளையிடம் ஓடினாள். அந்த ‘கிண்டன்’ ஒன்றையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் படுத்திருந்தான். அம்மாக்காரி அவனை அப்படியே பற்றி அணைத்துக் கொண்டாள். என்ன ஆச்சரியம்! காய்ச்சலுற்று வெந்து கிடந்த மேனி சந்தனமாக வியர்த்திருக்கிறது.
விளக்கை எடுத்து வந்து பார்த்தாள். கண் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் வடிந்து விட்டிருந்தது! அலர்ந்த தாமரையுள் அமர்ந்த கருவண்டு போன்ற விழிகளால் அன்னையைக் குறு குறு என்று பார்க்கிறான் ஸத்யா.
ஆயினும் ‘தாத்தா’வைப் பற்றி அவனிடம் தாய் ஒன்றும் கேட்கவில்லை. கேட்டாலும் சொல்லமாட்டான் என்று அவளுக்குத் தெரிகிறது. வயிற்றில் பால் வார்த்து விட்டான். அது போதும்!
பாதக் குறடு அணிந்து வந்தவரின் அருள்தான் என அன்னை ஊகிக்கிறாள். அன்றொரு நாள் பாலன்னம் ஊட்டிப் பசி தீர்த்த தாத்தாவேதான் இன்று பார்வை தந்திருப்பவர் என உறுதி பிறக்கிறது.
***
பன்னிரண்டாம் வயதில் ஸத்ய நாராயணன் ஹைஸ்கூல் சேர வேண்டியதாயிற்று. அவன் படிப்பில் துடியாக இருந்ததால், எத்தனை கஷ்டப்பட்டாகிலும் அவனை பி.ஏ. ஆக்கிச் சர்க்கார் ஆபீஸராகச் செய்துவிட வேண்டுமென்பது பெற்றோர் ஆசை.
நம் ஸ்வாமி நிறுவிய பெங்களூர் கல்லூரியில் 1972 யுகாதி விழாவில் பேசிய புத்திசாலி மாணவர் ஒருவர், ‘இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பி.ஏ. பெற்றுவிடுவது ஒரு பெரிய விசேஷமில்லை. அது எல்லாக் கல்லூரி மாணவரும் பெறுவதுதான். எங்களுடைய விசேஷம் என்னவென்றால் பி.ஏவுக்குப் படிக்கும் போதே டபுள் பி.ஏ. ஆக B.A. B.A எங்களுக்குக் கிடைத்திருப்பதுதான்’ என்றார்.
பி.ஏ படிக்கப் போகாத இந்த டபுள் பி.ஏக்காரரை ஹைஸ்கூல் அனுப்ப ஏற்பாடாயிற்று! பெற்றோர் எத்தனை கஷ்டப்பட்டாகிலும் அவனைப் படிக்க வைப்பதாகச் சொன்னது அர்த்த புஷ்டி வாய்ந்தது. ஏனெனில் எதிர்பாராத சூழ்நிலையால் இப்போது அக்குடும்பம் மிகவும் நொடித்துப் போயிருந்தது.
ஸத்ய நாராயணனின் மூத்த சகோதரர் சேஷம ராஜு கடப்பை ஜில்லா கமலாபுரத்தில் திருமணமாகி, வேட்டகத்தில் இருந்து வந்தார். வேறு வழியின்றி ஸத்யாவையும் அங்கேயே படிப்புக்கு அனுப்பிவைக்கும்படி ஆயிற்று.
புட்டபர்த்தி வெறிச்சோடியது. கண்ணனில்லாத பிருந்தாவனம்தான்.
அவனது அருமை பெருமை தெரியாத அண்ணனின் வேட்டகத்தில் அடிமைபோல் வேலை செய்து வந்தான் கிடைத்தற்கரிய ஸத்யா.
கமலாபுரத்தில் தண்ணீர்ப் பஞ்சம். மதனி வீட்டார் தண்டச் சோறு சாப்பிடும் சம்பந்தி வீட்டுப் பிள்ளையிடமே வீட்டின் தண்ணீர் ஸப்ளை வேலை முழுவதையும் கருணைகூர்ந்து அளித்திருந்தனர்.
ஸத்யம் காவடிபோல் ஒரு கம்பில் இருபுறமும் குடங்களைக் கட்டித் தோளின் மேல் வைத்துக்கொண்டு எங்கோ போய், ஓர் அகாதக் கிணற்றிலிருந்து நீர் சேந்தி வருவான். ஏகநாதருக்குக் கண்ணனே ‘கண்டியா கிருஷ்ணனாக வந்து செய்த அதே தண்ணீர்ச் சேவை. ஆனால் இவர்களுக்கு ஏகநாதரின் நெஞ்சிளக்கம் இல்லையே!
படிப்புக்கிடையே, சற்றும் முணமுணக்காமல் மலர்ச்சியோடு குடம் குடமாக நீர் கொண்டுவந்து கொட்டிய குழந்தை, ஒரு நாள் ஏதோ உற்சாகத்தில் அந்த வீட்டிலுள்ள ஆடும் நாற்காலியில் அமர்ந்து முன்னும் பின்னும் ஆடி மகிழ்ந்தான்.
இதைக் கண்டதும் சேஷம ராஜுவின் மைத்துனர் சுப்பாராஜுவுக்கு ஆத்திரம் பொங்கியது. “ஏ பயலே! என்ன கொழுப்பு உனக்கு? பெரியவங்க உட்காருகிற நாற்காலியில உட்கார்ந்து ஆடறே! இந்த வீட்டிலே அது ஒண்ணுதான் நாற்காலி, அதை உடைச்சுத் தொலைச்சிடுவே போலிருக்கே. பெரிய ராஜகுமாரன், நாற்காலி கேட்கிறதோ நாற்காலி?” என்று கையை ஓங்கிக்கொண்டு போனார்.
ஸத்யா ஒரு துள்ளுத் துள்ளினான். வாசலில் நின்றான். இளநெஞ்சில் ரோஷம் வெடித்து வந்தது. “பாவா! என்னை என்னமோ நினைச்சுப் பேசிப்பிட்டீங்க. நான் ராஜகுமாரனா, அதுக்கும் மேலேயான்னு ஒரு நாள் காட்டாட்டாப் பாருங்க! வெள்ளி வெச்சு இழைச்ச நாற்காலியிலே, சிம்மாசனத்திலே இந்த ஸத்யா உட்காரத்தான் போறான், அதை நீங்களும் பார்க்கத்தான் போறீங்க!” என்று சிங்கக்குட்டியாக கர்ஜித்தான்.
“லே! டிராமாவிலே நடிச்சு நடிச்சு டயலாக்னா பேசறே! வீட்டிலே அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லை வெள்ளிச் சிம்மாசனத்துலே உட்காருவாராமில்லே…” என்று அவர் உத்தண்டமாகச் சொல்கையில் சேஷம ராஜு வந்துவிட்டார். என்ன இருந்தாலும் மாப்பிள்ளை என்பதால் மைத்துனர் வாய் மூடிற்று.
அண்ணா இல்லாத சமயத்தில்தான் தம்பியை அவர்கள் வேலை வாங்குவது, கரித்துக் கொட்டுவது எல்லாம். இவற்றை அவன் தமையனிடம் சொல்லமாட்டான் என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. அதன்படியே ஸத்யாவும் தனக்கு உப்பிட்ட வீட்டாரைப் பற்றிக் கடுகளவும் வெளியே சொல்லியதில்லை.மேலே சொன்ன சம்பவம் வெளிவந்ததே ஒரு சுவாரஸ்யமான சூழ்நிலையில்தான். அதைப் பின்னால் பார்ப்போம்…