புட்டபர்த்தி – 6

அத்தியாயம் – 6

யார் அந்தத் தாத்தா?

அன்னம் உண்ண அழைத்தனர்;
நான் ஆடும் மலர் அடித் தேன்
அருந்துகிறேன் என உரைத்தேன்;
அதனா(லே அன்று)
துணிந்தெடுத்து வளர்த்தவளும்
சோர்ந்த முகம் ஆனாள்

ராமலிங்க ஸ்வாமிகள்

ன்றோ குழந்தை ஸத்யா கொல்லாமை நோன்பிருந்தது இன்றும் பயன் தருகிறது! இன்று ஸத்ய ஸாயி வழிபாடு சற்றேனும் பரவாத தேசமில்லை அல்லவா? பல்லாயிரம் காதம் கடந்துள்ள ட்ரினிடாட் தேசக் குழந்தைகள் நம் ஸாயி ராமாயணத்தின் பாலகாண்டத்தைக் கேட்டனர். “ஆஹா! நம் ஸ்வாமி குழந்தையாயிருந்தபோதே புலாலை விலக்கினாரா? ஸ்வாமி நம்மை விலக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாமும் புலாலுணவைத் தொடாதிருப்போம்என்று அக்குழந்தைகள் அற்புத சபதம் செய்துவிட்டன. இதனைப் படிக்கும்போது ஐயனால் அலர்ந்து வரும் அன்பு யுகத்தை எண்ணி வியக்கிறோம். உபதேசத்தைவிட வாழ்வின் உதாரணமே பிறர் மனத்துள் பதிந்து அவர்களைக் கட்டாயப்படுத்தாமல் தூநெறி சேர்ப்பிக்கும் என்பதற்கு பாலஸத்யாவின் அஹிம்ஸா சக்தி அற்புதச் சான்று.

ஒருவரின் அன்புச் சக்தி மற்றோரிடம் அன்பை ஊற்றெடுக்கச் செய்வது ஒரு பக்கம். எதிர்வெட்டாகச் சில சமயங்களில் அன்பாலேயே விரோதங்களும் தோன்றுவது இறைவனின் லீலா விநோதம்! முடிவில் இதுவும் அன்பின் அமர சக்தியை நிலைநாட்டத்தான் எனலாம்.

சுப்பம்மா ஸத்யாவிடம் காட்டிய அன்பாலேயே வீட்டிலும் ஊரிலும் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டாள். அவளுக்குப் புத்திரப் பேறு இல்லாததால் கணவரான கர்ணம் கமலம்மாவை இரண்டாந்தாரமாக மணந்தார். அவளுக்கும் சந்ததி வாய்க்கவில்லை. பிறகு சுப்பம்மாவின் மருமானான கோபால் என்ற பிள்ளையை ஸ்வீகாரம் செய்துகொண்டார். இதன் பிறகும் ஸத்யாவே சுப்பம்மாவுக்கு கோபாலனாக இருந்தான். இதனால், உலக ரீதியில் உரசல்கள், மன விரிசல்கள் ஏற்படத்தானே செய்யும்?

முன்பே சொன்னாற்போல் கதாபாத்திரங்களில் பலர் ஜீவிய வந்தராக இருப்பதால் விவரங்களைப் புட்டுக் கூறுவதற்கில்லை. நம் ஸ்வாமியிடம் துவேஷம் பாராட்டிச் செய்யப்பட்ட காரியங்களை விளக்கப் புகுந்தால், அப்படிச் செய்தோரிடம் நமக்குத் துவேஷம் உண்டாகத்தான் செய்யும். ஆனால் இதை நம் ப்ரேம பகவான் அறவே ஒப்பமாட்டார். எதிர்ப்புகள் எவ்வளவுதான் ஏற்பட்டாலும் அவற்றை அநாயாஸமாக நிஷ்பலனாக்குவதில் ஸ்வாமியின் அதிமானுட வல்லமையையும், எந்த எதிர்ப்பிலும் ஆட்டம் கொடுக்காத சுப்பம்மா போன்றோரின் ஆழ்ந்த பக்தி சிரத்தையையும் வெளிக்கொணரவே சதிகளும் சூழ்ச்சிகளும் மூண்டதாகத்தான் நாம் கொள்ள வேண்டும். எதிர்ப்பாளரிடம் காழ்ப்புக் கொள்ளலாகாது. லீலை என்று வந்தால் நானா தினுசுகளும் இருக்கத்தானே செய்யும்? இல்லாவிடில் ஏது ருசி?

தன்னால் சுப்பம்மாவுக்குத் தொல்லை ஏற்பட்டதால், தாத்தா வீட்டுக்குத் திரும்பினான் ஸத்யா. ‘பிஞ்சிலேயே பழுத்தது. இதுவும் தாத்தாதான்என்று ஊரார் சொல்லிக் கொண்டனர். ஆம், பாலப் பருவத்திலேயே வைராக்யத்தாலும் ஞானோபதேசத்தாலும் தாத்தாவாக இருந்திருக்கிறான். இன்றோ, தாத்தா என்று குறிப்பிடப்படவேண்டிய வயதிலும் அதிபால்யத்தோடு, ‘பாலா உலா விநோதினிஎன்றபடி, குழந்தை விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்!

லீலை என்று வந்ததால் ஸ்வாமியும் வெளிப்பார்வைக்குப் பல சிரமங்களுக்கு ஆளாகத்தான் நேர்ந்திருக்கிறது. அவற்றியோன்றாக, பாட்டி லக்ஷம்மா பரகதி அடைந்து விட்டாள். சுமங்கலியாக அவளுக்குக் கிடைத்ததுவிசேஷந்தான். ஆனால், பாட்டனார்பேரனார் பாடுதான் திண்டாட்டமாயிற்று. வேறுவழியில்லாமல் அந்த வானப்பிரஸ்தரும், அவரைவிட முற்றிய குஞ்சு சந்நியாசியும் பெத்த வெங்கமரின் வீட்டிலேயே தனியாக சைவச் சமயல் செய்யச் சொல்லி உண்ண வேண்டியதாயிற்று.

அது ஓர் அவிபக்த குடும்பம். கொண்டமரின் இரு பிள்ளைகளும், பெண்களில் ஒருத்தியும், மாற்றுப் பெண்களும், பேரக் குழந்தைகளுமாகச் சுமார் இருபது பேர் கொண்ட பெரிய குடும்பம். குடும்பத்துக்கே மூத்த கிழவருக்கும், குட்டி ஸத்யாவுக்கும் அதில் தனி மரியாதை!

பிஞ்சிலேயே இவன் தாத்தா என்பது மட்டுமல்ல. தாதாவாகவும் இருந்தான். மூன்று, நாலு வயசிலேயே ஸத்யாவுக்கு இருந்த தானதர்ம சிந்தை அதிசயமானது. ஏன், தவழும் பருவத்திலேயே வீட்டாரை அன்னதானம் செய்ய வைத்தவனன்றோ? ஆனால்தானம்என்ற வார்த்தையைச் சொன்னாலே நம் நூல் நாயகர் முகத்தைச் சுளிப்பார். “நம்மை உயர்ந்தோராகவும், மற்றவர்களைத் தாழ்ந்தோராகவும் நினைத்து உதவுவதாக எண்ணும் போதுதான்தானம்என்ற எண்ணம் பிறக்கிறது. சாக்ஷாத் நம்மவருக்கே நாம் பட்டுள்ள அன்புக் கடனை அபிமானத்தோடு ஆற்றும்போதுதானம்’, ‘தாதாஎன்ற அஹம்பாவ வார்த்தைகளுக்கு இடமில்லைஎன்பார்.

புட்டபர்த்தியில் நவராத்ரி போன்ற விழாக்களில் பல்லாயிரம் ஏழையர்க்கு உணவிடுவதை ஒருவர்அன்னதானம்எனக் குறிப்பிட்டபோது. ஸ்வாமி சற்றே வெகுண்டு, “அப்படிச் சொல்லக்கூடாது; ‘நாராயண சேவைஎன்று திருத்திச் சொல்என்றார். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ஸ்வாமி வேஷ்டியும் சேலையும் வழங்கக் கண்ட ஒரு பிரமுகர், “இங்கே இவ்வளவு சமூக சேவை செய்வது வெளியுலகுக்குத் தெரிய வில்லையே! இதையெல்லாம் புகைப்படம் எடுத்துப் பிரசுரிக்க வேண்டும்என்று ஆலோசனைசொன்னார். ஐயன் உடனே, “ஒரு தாயார்க்காரி குழந்தைகளுக்குத் துணிமணி வாங்கிக் கொடுத்து விருந்து செய்து போட்டால் அதைஅட்வர்டைஸ்பண்ணிக்கொள்வாளா?” என்று சுரீலெனக் கேட்டார்.

பால ஸத்யாவுக்கு ஏழையரையும், ஏதலரையும் தன் அங்கமாகவே காண்கிற பரிவு இருந்தது. வீட்டுக்கு எத்தனை பிச்சைக்காரர்கள் வந்தாலும் அத்தனை பேருக்கும் போட்டேயாக வேண்டும் என்று பிடிவாதம் செய்வான். இவனுடைய பிடிவாதத்தைத் தெரிந்துகொண்டே யாசகர்களும் அவ் வீட்டை ஓயாமல் படையெடுத்தார்கள். வீட்டாரால் எத்தனை பேருக்குப் பிச்சைபோட முடியும்? அது ஒரு மத்யதரக் குடும்பந்தானே? புத்திசாலி ஸத்யாவுக்கு இது மட்டும் ஏன் புரியவில்லை என்றால், இங்கே அவனது புத்தியெல்லாம் இதயத்திடம் அஸ்தமித்து விட்டது! ‘அம்மா பசிக்கிறதுஎன்ற தீனக்குரல் கேட்டால் கரைந்துருக மட்டுமே அப்பிஞ்சு மனஸுக்குத் தெரிகிறது. இதனால் தினமும் ஸத்யாவுக்கும் வீட்டாருக்கும் போராட்டமாக இருந்தது. அவர்கள் பிச்சைக்காரரை விரட்டிவிட்டால் இவன் பரிதாபமாக அழத் தொடங்குவான். செல்லத்தின் அழுகை பொறுக்காமல் அவர்களே பிக்ஷாண்டியை தேடிப் போய்ப் பிச்சையிடும்படி ஆகும்!

தனக்கு மிஞ்சிய தர்மம் ஈச்வரம்மாவால் தாங்க முடியாத அளவுக்கு ஒரு நாள் அதிகமாயிற்று. அவள் கோபத்துடன், “ ஸத்யம்! இங்கே கொட்டிக்கிடக்கலை. இனிமேலே பிச்சை போடறதானா உன் சாதத்திலிருந்துதான் போடணும். ஆமாம்என்று கூறிவிட்டாள்.

!” என்று சவாலாகச் சொன்னான் இளவரசன். தன் குஞ்சுக் கை கொள்ளாத அளவுக்கு அள்ளி அள்ளி யாசகர் குவளையை நிரப்பினான்.

சாப்பாட்டு வேளை வந்தது.

சாப்பிட அழைத்தாள் அம்மா. அருமைப் பிள்ளையிடம் சபதத்தை விடாதிருக்க முடியுமா?

ஆனால் பிள்ளையாண்டான் சபதத்தை விடவில்லை. அம்மா கூப்பிட்டதற்கு வாய் திறந்துகூடப் பதில் சொல்லாமல் கையை மட்டும் அலட்சியமாக வீசிவேண்டியதில்லைஎன்று ஸ்மிக்ஞை காட்டினான்.

முளைச்சு மூணு இலை விடலை. இத்தனை ரோஷமா? வா, எழுந்திருந்துஎன்றாள் தாய்.

ஊஹூம்! அசையவில்லை ஸத்யா.

நயமாகவும் பயமாகவும் வீட்டார் எத்தனையோ சொன்னார்கள். “மலரினும் மென்மை. அதுவே (மனம் வைத்து விட்டாலோ) வஜ்ராயுதத்திலும் கடுமையாகிவிடும்என்று வடமொழியில் சொல்வதற்கேற்ப, நம் மதுர ஸத்யாவா இவன் என்று ஆச்சரியப்படுமாறு வீம்பு பிடித்தான்.

எங்கோ வெளியே போய் வந்தான். சாப்பிடாத களைப்பு அவனிடம் லவலேசமும் இல்லை. ‘கேர் கேர்என்று ஏப்பமும் விட்டான்.

சரிதான், சுப்பம்மா வீட்டில் உண்டு வந்திருக்கிறான்என்று வீட்டார் அநுமானித்தனர்.

மாலையும் வெளியே சென்று இரவுதான் திரும்பினான். அவனிடம் சோர்வோ வாட்டமோ இம்மியும் இல்லை. அலாதி உத்ஸாஹத்துடன் துள்ளிக் கொண்டிருந்தான். ‘மறுபடி ஐயாவாள் கர்ணத்தின் அகத்தில்தான் சக்கை போடு போட்டு வந்திருக்கிறார். இதனால் சுப்பம்மாவுக்கு ஏற்படுகிற சங்கடம் இவனுக்குத் தெரியாதா என்ன? எனவே ஏதோ வீறாய்ப்பில் இன்று அங்கே போனாலும், நாளைக்கு நம்மிடமே படிந்து வந்து விடுவான்என்று வீட்டிலுள்ளவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் மேலும் ஓரிரு வேளையும் இவன் அகத்தில் சாப்பிடாமலே, வெளியே போய்விட்டு வயிறுமுட்ட உண்டாற்போலத் திரும்பியபோது அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! ‘மானியான ஸத்யா பிறரது கஷ்டத்தை உணர்பவன் கர்ணத்தின் வீட்டில் கஷ்டம் கொடுத்துக்கொண்டு இப்படிச் சாப்பிடமாட்டான். அவன் சாப்பிடக் கூடிய இடம் வேறெதுவும் இல்லையே!’

சுப்பம்மாவை விசாரித்தபோது குழந்தை அங்கே சாப்பிடவில்லை என்று உறுதிப்பட்டுவிட்டது.

ஈச்வரம்மாவுக்குப் பெற்ற வயிறு இல்லையா? தவித்துவிட்டாள் தவித்து! ‘கிடைக்கமாட்டாத செல்லக் கண்மணி தன் சுடுசொல் பொறுக்காமல் இத்தனை வேளை ஒட்ட ஒட்டக் கிடந்து விட்டானே!’ அந்த வயிறு காய்ந்ததில் தாய் வயிறு பகீரென்றது. ‘ஆனாலும் அவன் ஒட்டக் காய்ந்த மாதிரி இல்லையே! வழக்கத்தைவிட கனகுஷியாக அல்லவா ஓடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறான்? அதெப்படியானாலும் அந்தப் பச்சைக் குழந்தைக்குச் சரியாக நான் எதிர் வீம்பு இனியும் செய்வதற்கில்லை!’

அடுத்த சாப்பாட்டு வேளை வந்தது.

நாயனா! இப்படிப் பண்ணலாமாம்மா? ஓடி வா, சாப்பிட. இனிமே உன்னைக் கண்டிக்கவே மாட்டேன் கண்ணூஎன்று கெஞ்சினாள் ஈச்வரி. பழம் வேண்டாம்என்று சினந்த ஈச்வரி குமாரன் போலவே நம் பால ஸத்யா. ‘வேணாம் ஒண்ணும். நான் சாப்பிட்டாச்சுஎன்றது தீர்மானமாக.

அப்படி சொல்லாதே மகனே! நீ எங்கே சாப்பிட்டே? யார் உனக்குச் சாதம் போட்டாங்க? சும்மாவுக்காகக் கதைக்கக்கூடாது ராஜா! பொய் சொல்லப்படாதுன்னு ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணற நீயே பொய் பேசலாமா? தோதகம் பண்ணாம வாம்மா சாப்பிடஎன்று வருந்தியழைத்தாள் அன்னை.

பொய்யா? நானா பொய் சொல்றேன்?” என்று சீறிற்று சிங்கக்குட்டி. ரோஷமான ரோஷம் நம் சின்ன ஸ்வாமிக்குநிஜமாத்தான். நான் நல்லா வயிறு ரொம்பச் சாப்பிட்டாச்சு. எனக்கு ஒரு தாத்தா பாலும் நெய்யும் வெல்லமும் சாதத்தோட சேத்து அமிருதம் மாதிரி உருட்டி உருட்டி வேளாவேளைக்குப் போட்டுக்கிட்டேதான் இருக்காரு. சந்தேகமானா பார்த்துக்கோ என் வயித்தைசட்டையைத் தூக்கிக் காட்டினான் ஸத்யன். ஆழ்வார் வாக்கில் ஓரிடத்தில் பிள்ளையாரைச் சொல்வது போல் சூட்டிக் கண்ணனையேபேழை வயிற்றன்என்று சொல்லியிருக்கிறது. ஈச்வரம்மாவின் பிள்ளையாரான நம் கண்ணன் வயிறும் இப்போது அப்படித்தான் பூசணிக்கொட்டையாகப் புடைத்திருக்கிறது!

அசோதை கோபித்ததால் உண்ணமாட்டேன் என்று கண்ணன் வீம்பு செய்த ஒரு சந்தர்ப்பம் உண்டு. ஆனால், கண்ணன் சத்யாவைப்போல் யாசகருக்குத் தன் பங்கைக் கொடுத்து உபவாஸமிருக்கவில்லை. மாறாக, கன்னியர்சிறுசோறுஎன்பதாக விளையாட்டில் செய்த சமையலை இவன் குறும்பிலே வாரிக்கொட்டினான். அசோதை கோபித்தாள். அவன் பட்டினி கிடந்து பயமுறுத்தினான்.

சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு அப்போது
நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை

என்பார் அசோதை பாவத்தில் ஆழ்வார்.

வாஸ்தவத்திலோ கண்ணன் பட்டினியும் கிடக்கவில்லை. கோபியர் வீட்டில் களவாடி உண்டுகொண்டுதான் இருந்தான்! அது மட்டுமில்லை. ஓர் ஆய்ச்சி மாதந்தோறும் செய்யும் திருவோண விரதங்களைச் சேர்த்து வருடாந்தர விழாவாகச் செய்தாள். பன்னிரண்டு விரதங்களுக்கும் உரிய பணியாரங்களைச் சேர்த்து ஒரு மொத்தமாக நிவேதித்தாள். அது முழுவதையும் கண்ணன் ஒரு கை பார்த்துவிட்டான்! அப்படியும் பசி ஆறவில்லை. வயிறோ குழைந்தே கிடந்தது. அவளிடம்இன்னம் போடுஎன்றான்!

பன்னிரண்டு திருவோணம் அட்டேன்
இன்னம் உவப்பன் நான்என்று சொல்லி
எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்

என்று பாடுகிறார் ஆய்ச்சி பாவத்து ஆழ்வார்.

ஸத்யாவோ வாஸ்தவமாகவே பட்டினி கிடந்தததாகத்தான் தெரிகிறது. ஆனாலும் வயிறுமுட்ட உண்டதாகக் காட்டுகிறானே! இதென்ன மாயம்? வயிற்றிலே மூச்சை எக்கி உப்ப வைத்துக் காட்டுகிறானா என்ன? அவனை ஆழம் பார்க்க முடியாமல் அம்மா சோர்ந்து விட்டாள். அக்காள்மாருக்குச் சிரிப்பாக வந்தது அவன் சொன்ன தாத்தாக் கதை கேட்டு.

அவர்கள் கிளறிவிட்டதில் அம்மாக்காரி, “யாரோ தாத்தாவாவது? வேளை தப்பாமல் வெல்லச் சாதம் போடவாவது? இந்த அளப்பெல்லாம் செல்லாது. அப்பாயி!” என்று கூறிவிட்டாள்.

ஸத்யாவுக்குத் தன்னை அசத்தியன் என்று அம்மாவே சொன்னால் மட்டும் அசாத்திய ஆத்திரம் வந்துவிடும்.

ஆமாம், தாத்தா வரத்தான் வந்தாரு. வேளாவேளைக்குச் சாதம் போட்டாரு. சத்தியம், சத்தியம். இப்பக்கூடச் சாதம் போட்டுட்டுத்தான் போனாரு. இதோ மோந்து பாருபஞ்சுக்கையில் பிஞ்சு பிஞ்சாக மொட்டிட்ட விரல்களைத் தாயின் நாசிக்கெதிரே நீட்டினான் ஸத்யா.

ஆஹா! கமகமக்கிறது அக் கரமலர், அக்கார அன்ன மணத்திலே! ஆம், ஞானசம்பந்தர் போல தெய்விகப்பால் அடிசில்உண்டிருக்கிறான் என்பது நிச்சயம். பூவுலகப் பசுவிடமிருந்தன்றிக் காமதேனுவிடமே கறந்த பாலும், அதன் நெய்யும் தான் இப்படி தெய்விகமாக மணக்கின்றனவா? தெய்வலோகப் பாலும் வெண்ணெயும் இவனது உணவானதால்தான் மண்ணுலக மாட்டின் பாலையும், தயிரையும், நெய்யையும் தவிர்த்துவிட்டானா?

நீ சோறு போடாவிட்டால் என்ன? எனக்கொரு தாத்தா எப்படிப்பட்ட அமுது படைக்கிறார் பார்! அதில் நூற்றிலொரு திட்டம் உனக்கு வருமா?’ என்று குறுகுறுக்கும் சுடர் விழிகளால் கேட்காமல் கேட்கிறான் ஸத்யா!

ஈச்வரம்மா குழந்தைப் பிள்ளையிடம் அஞ்சுமளவுக்கு மரியாதை கொள்கிறாள். ‘என் பிள்ளைதானா இவன்? உண்மையில் இவன் யார்? இவன் என் கருவில் குமுறிக் கொண்டிருந்தபோதே தம்பூராவின் நாத கர்ப்பம் குமுறி வெளிவந்ததே! மிருதங்கம் பிருதங்கள் கூறி இவனை வா வா என்று அழைத்தனவே! பிறக்கையிலேயே இவன் பாம்பணைப் பள்ளிக் கிடக்கவில்லையா? தவழும் நாளில் இவன் காட்டிய ஜாடைப்படி யாசகருக்கு அன்னமிட்ட போது குறையாமலே சோறு வளர்ந்ததே இவனுக்கு அன்னமிடவும் இவனைப் பட்டினி போடவும் நான் யார்? அது சரி, இவன்தான் யார்?’

அன்னைக்குத் தன்பால் ஏற்படும் அதீத உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டான் ஸத்யா. தனது நாடகத்துக்கு அது உதவாது என்பதால் அவ்வுணர்வைக் கிள்ளி எறிந்தான். அன்று கோவிந்தனும் இப்படித்தான் செய்தான். கோபர்களுக்கும், பெற்றோருக்கும், வளர்ப்புப் பெற்றோருக்கும் அவ்வப்போது தன் இறைமை நிறைந்த அற்புதங்களைக் காட்டினான். ஆனால் இது காரணமாக அவர்கள் தன்னுடன் இழைந்து நில்லாமல், விலகி நிற்கும் நிலை வந்துவிடக் கூடாதெனக் கருதிச் சடக்கென்று அவர்கள் மீது மாயமூட்டத்தைப் போர்த்தி விடுவான். மனிதர்களோடு மனிதனாக இருக்க வேண்டுமென்றுந்தானே வைகுந்தம் விட்டு வையம் வந்திருக்கிறான்?

பிள்ளையின் மகாபெருமையை மறந்தாள் ஈச்வராம்பா. ஆனால், அவனுக்கு உணவருத்திய தாத்தாவை மறக்கவில்லை! இவளுடைய ஸ்தானத்தில் ஸத்யாவுக்குச் சோறு போட்டவராயிற்றே அந்தத் தாத்தா! ‘யார் இவன்?’ என்பது போய், ‘யார் அந்தத் தாத்தா?’ என்பதே கேள்வியாயிற்று. ஆனால், இவனிடம் அந்தக் கேள்வியை எழுப்பவோ எவருக்குமே திராணியில்லை. சூட்டிப் பிள்ளையாக உடன் இருந்துகொண்டு கும்மாளியிடும் போதே அவதார ரஹஸ்யம் என்று வரும் சமயங்களில் அவர்களை எட்ட நிறுத்தி விடுவான்!

கிடைத்தற்கரிய மாத்ரு ஸ்தானத்தை ஈச்வராம்பா அந்தக் கிழவருக்கு விட்டுக் கொடுப்பாளா? பிள்ளையிடம் கெஞ்சிக் கூத்தாடி அன்னமிடும் பாக்கியத்தை மீண்டும் பெற்றாள்.

இதன்பின், வீடு தேடி வந்த யாசகர் போதாதென்று ஸத்யாவே தேடிப் போய் இழுத்து வந்த கூன், குருடு, நொண்டி, முடவருக்கும் ஆக்ஷேபணை சொல்லாமல் பிச்சை போட வேண்டியதாயிற்று. களஞ்சியத்தின் அடிவரை பிறாய்ந்து அங்காள்மார் யாசகர்களின் கப்பரைகளை நிரப்ப, இளஞ்சீயமாகச் சின்ன எஜமான் மிடுக்கோடு பார்த்து நின்றார்! அது சரி, பிறாயப் பிறாயக் களஞ்சியம் வற்றாமலே கொடுக்கிறதா என்ன? ஸத்யாவின் வற்றாத அன்பு ஊற்று செய்யும் விந்தையோ?

இன்றைக்கும் ஸ்வாமி சஞ்சாரம் செய்யும்போது, வழியில் ஒரு தீனமான பிச்சைக்காரன் தென்பட்டால் காரை நிறுத்தி ஐயமிடாமல் அப்பால் போவதில்லை.

***

ன்று ஸத்ய ஸாயி பாபா என்ற மாத்திரத்தில் எவருக்கும் நினைவு வருவது அவரது விநோத முடிதான். குழந்தை நாளிலேயே இப்படித்தான் ஒவ்வொரு கேசமும்ஸ்ப்ரிங்போல் சுருண்ட, கொத்துக் கொத்தான குழல் அவனுக்கு. ஆனாலும், ‘முடியிறக்குவதுஎன்ற குடும்பப் பழக்கம் உள்ளதே! அதனால் மூன்றாம் வயதில் ஸத்யாவுக்கு முடியிறக்கினார்கள். அப்போதே அவனுக்குக் காதும் குத்தப்பட்டது.

சின்ன ஸத்யா! மொட்டைத் தலையும் கடுக்கனுமாக நீ நிற்பதும் ஒரு அழகாகத்தான் இருக்கிறது. பிற்காலத்தில் உன் விரித்த முடியில் இந்தக் காதுகள் எங்கள் பார்வையிலிருந்து பெரும்பாலும் மறைந்தே இருக்கப் போகின்றன. இந்தக் குறை தீர, எங்கள் குறை முழுவதையும் கேட்கும் அந்தக் காதுகளில் கடுக்கன் மின்னுவதை இதோ மானஸிகமாகத் தரிசித்துக் கொள்கிறோம். பால ஸத்யா! ஒரு காலத்தில் பலர் உன் இருப்பிடமே திருப்பதி எனக்கொண்டு குழந்தைகளைப் பர்த்திக்குக் கொண்டு வரப்போகிறார்கள். நீ உன் பட்டுக் கையை அக்குழந்தைகளின் முடியில் வைத்து வழிக்கப் போகிறாய். என்ன விந்தையப்பா! பூ எப்படிக் கத்தி ஆகும்? நீ பூங்கரத்தால் வழித்த வழிப்பில் கேசம் முழுதும் மழித்தாகியிருக்கும்! கத்தியின்றியும் குழந்தைகளைக் கத்தவிடாமலும் முடியிறக்கி விடுவாய்! பிறகு அக்குழந்தைகளின் அடிக்காதை நீ வெறுமே தொடுவாய். அவ்வளவே. அவற்றில் கடுக்கன் மிளிரும்; தொங்கட்டான் ஆடும்! துளியும் வேதனையின்றிக்கர்ண வேதனம்செய்து விடுவாய்!

***

நாட்கள் ஓடின. மொட்டைத் தலை கிராப் ஆயிற்று. எல்லோரையும் போன்ற சாதாரண கிராப் தலையனாகத்தான் இருந்தான் பால ஸத்யம். ஆனால், அப்போதே தலைவனாகவும் ஆகியிருந்தான். அத் தலைமை வெளிப்பட்டது ஒரு சுவையான நிகழ்ச்சி!

ராம நவமி. மலர்களால் அலங்கரித்த வண்டியில் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் பெரிய படத்தை வைத்து ஊர்வலமாகக் கொண்டு வருகிறார்கள்.

பெத்த வெங்கப்பராஜுவின் வீட்டு வாசலுக்கு ஊர்வலம் வந்துவிட்டது.

ஸத்யாவுக்கு தெய்வ சமாசாரம் என்றால் ரொம்ப இஷ்டமாச்சே! இச்சமயம் பார்த்து எங்கே போய்விட்டான்?’ வீட்டார் தேடுகிறார்கள். பிள்ளையாண்டானைக் காணவில்லை.

சரி, நாமும் தரிசனத்தை இழக்கவேண்டாம் என்று வாசலுக்கு வருகிறார்கள். அலங்கார வண்டியை நோக்குகிறார்கள்.

பெற்றோர் உற்றோரின் மனம் புளகமுறுகிறது. பிள்ளையாண்டான் ஆண்டவர் பிள்ளை போல அல்லவா உயர்வு பெற்றிருக்கிறான்! ஆம், ராமபிரானின் படத்துக்குக் கீழே வண்டியின் மீதே மலர்க்குவியலுக்கிடையில் ஒரு பாரிஜாதமாக ஆரோஹணித்திருக்கிறான் அஞ்சு வயசுக் குஞ்சு! பால ராமனைப் போன்ற காம்பீர்யம்! ஊராரில் இவன் பெருமை உணர்ந்து இத்தனை மதிப்புத் தந்து, இவனை இறைவனோடு சேர்த்து உயர்த்தி வைத்து ஊர்வலம் கொண்டு வருபவர்களும் இருந்திருக்கிறார்கள்.

ஆதி சங்கரர் குழந்தையாக இருக்கையில் வீதி பவனி வந்த ஈசனாகவே தம்மைத் தந்தைக்குக் காட்டிக் கொண்டார். வெங்கமருக்கு அவ்வளவு அதிருஷ்டம் இல்லாவிடினும் தெய்வத்தோடு சேர்ந்து தன் மகனும் உலா வருவதைக் கண்டு பூரித்தார்.

வண்டிக்கு முன்னால் தெருவில் ஸத்யாவின் சகாக்கள் ஸ்ரீ ராம நாமாவளிகளைக் கீச்சுத் தொண்டையில் கூச்சலிடுகின்றன. எல்லாம் ஸத்யா சொல்லிக் கொடுத்தது தான். அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? அது தேவ ரஹஸ்யம்!

வெங்கப்பர் தமது பூரிப்பிலேயே விளையாட்டாக அக்குழந்தைகளைச் சீண்டுகிறார். “பசங்களா! நீங்கள்ளாம் கால் தேயவர்றீங்க. தொண்டை வத்தக் கத்துறீங்க! அந்தப் பய மட்டும் வண்டி மேலேயே ஜம்முனு குந்திக்கிட்டு உங்களுக்கு ஸபாஷ் போட்டுக்கிட்டு வர்றானே! இது என்ன நியாயம்?” என்கிறார்.

குட்டிப்படை பளிச்சென்று பதில் சொல்கிறது: “இதிலே என்ன மாமா தப்பு? ஸத்யா அப்படித்தான் வரணும். அவன் எங்களோட குரு இல்லை?”

தந்தை சிந்தை மேலும் குளிர, ஊர்வலத்தோடு வந்த பெரியவர்களில் சிலரும், ‘பிட்ல குருவு, பிட்ல குருவுஎன்று மகிழ்ந்து ஆமோதிக்கிறார்கள். குட்டிக் குருநாதனாம்! ஞான பண்டித ஸ்வாமி போல!

அன்றே சிறுவர் அனைவருக்கும் குருவாக பஜனை சொல்லிக் கொடுத்துத் தலைவனான ஸத்யா, இன்று பார் போற்றும் ஒரு ஜகத்குருவாகப் புவிமிசைத் தலைமை எய்திருக்கிறார்.

பிற்காலத்தில் நம் சரித நாயகருக்கு அஷ்டோத்தர சதம், ஸஹஸ்ரநாமம் எல்லாம் தோன்றியது ஒரு பக்கம் இருக்கட்டும். வாண்டு ஸத்யாவுக்கு வாய்த்த மூன்று நாமங்கள் வெகுவிசேஷந்தான்: “பிராம்மண பாலுடு”, “பிரம்ம ஞானி”, “பிட்ல குருவு”.ஒவ்வொன்றுக்கும் உட்பொருளாக ஓர் உலகமே உள்ளது.