புட்டபர்த்தி – 5

அத்தியாயம் – 5

பிராம்மண பாலுடு

பிறந்தது மறக்குலத்தில்அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்
சிறந்தது பார்ப்பனருள்னே

பாரதியார்: ‘கண்ணன்என் தந்தை

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் காவியக் குழந்தைகள் ஓவியமாக வளர்வதைச் சொல்வார்கள். நம் கதாநாதன் வளர்ந்ததை அப்படிச் சொல்லலாமா?

நடுவே பலப்பல ஆண்டுகள்நாளொரு மேனிஎன்று சொல்லவே முடியாதபடி நவயௌவனம் அதிகம் மாறாமல்என்றும் பதினாறுபோலத்தான் இந்த அதிசய புருஷர் இருந்திருக்கிறார். ஐம்பதாண்டுகள் நெருங்கிய நாளாகவோ பன்னிலும் இளமையாக மாறியிருக்கிறார்! நரை தோன்ற வேண்டிய சமயத்தில் இவரது கொழித்த கேச பாரம் முன்னிலும்கரு கும்என்று ஆகியிருக்கிறது! முதன்முறை தரிசிப்பவர் இவருக்கு இத்தனை பிராயமா என்று நம்பவே முடியாதபடி சீரிளமை ததும்புகிறது.

நரை திரை இல்லாதது போல் வெள்ளெழுத்தும் வரவில்லை, அரைநூறாண்டு ஆன பின்னும். “அஜரம் யுவானம் என்று வேதம் சொன்னதற்கு இதைவிட விளக்கம் இருக்க முடியாது.

வயது முதிர்ந்திடினும் எந்தை
வாலிபக்களை என்றும் மாறுவதில்லை;
துயரில்லை; மூப்புமில்லை என்றும்
சோர்வில்லை; நோபொன்று தொடுவதில்லை

என்று அமரகவி என்றோ பாடியது நம் ஸ்வாமியை தீர்க்க திருஷ்டியில் கண்டுதானோ என்று தோன்றுகிறது.

இப்படி நாளொரு மேனியாக இல்லாமல் எந்நாளும் ஒரே மேனியாக இருக்கும்போதே இன்னொரு விசித்திரம், கணத்துக்குக் கணம் அவரது தோற்றம் மாறிக் கொண்டேயிருப்பதாகக் காண்பதுதான். புகைப்படங்களில் ஒன்றுக்கொன்று சம்பந்தமேயில்லாமல் முக ஜாடையும் உருவ அமைப்பும் வித்யாசப்பட்டிருக்கின்றன என்றால் நேரில் பார்க்கும் போதும் இப்படித்தான் மாறி மாறி மயக்குகிறார். ஆனால் புகைப்படங்களில் சில தோற்றங்கள் அவ்வளவாக இன்னாததாக இருக்க, நேரிலோ மாறி மாறி வரும் உருவங்கள்தனிலும் மாறா இனியராக இருக்கிறார். எது மாறினாலும், அந்த இடக் கன்ன மறுவும், இரு புருவங்களிடை பிறை ரேகை போல் காணும் சதை மடிப்பும், மேல் வரிசைப் பற்களின் மத்தியிலுள்ள சிறு இடுக்கும் இவரதுஸ்பெஷாலிடியாக மோகிக்க வைக்கின்றன. நடுத்தர உயரத்துக்கும் குறைந்தவரே எனினும் சில சமயங்களில் இவர் மிகவும் உயரமானவர் போன்றதோர் பிரமை ஏற்படுகிறது. இவரது திரண்ட புஜத்தோடும் திண்ணிய மார்போடும் பார்க்கையில் முழங்கைக்குக் கீழ் கரமும், கால்களும் மிக மெல்லியனவாகும். ஆயினும் இந்த முரண்பாடு தெரியாமல் ஒத்து உருவின தேகத்தவர்போலவே காண்கிறார். ஸ்வாமியின் முன்புறப் பருமனுக்கும் சற்றே கூனியது போன்ற முதுகுப்புறக் கொடித் தோற்றத்துக்கும் உள்ள மாறுபாடும் தெரியாமல் இன்னிசைவின் ரூபமாக விளங்குகிறார். இதற்குள்ளேயே ஒரு சமயம் பூசினாற்போலவும், மற்றொரு சமயம் மெலிந்தவராகவும் தோன்றுகிறார். ஒரு சமயம் உதரம் சற்று உப்பினாற்போல் உள்ளது. மற்றொரு சமயம் தடுக்காக உள்ளடங்கிக் காண்கிறது. சில சமயங்களில் வட்ட வதனம் மகுடி வடிவாக மாறுகிறது. தளதளக்கும் தக்காளிக் கன்னங்களில்ஓவர்சதைப் பற்று ஓரொரு சந்தர்ப்பங்களில் தெரிகிறது. அழகிய நயனம் இடுங்கி, இமை வெகுவாகக் கனத்துக் காணும் சமயங்களும் உண்டு. ஆனால் அடுத்த கணமே இயல்பான ஸுந்தர ஸாயியாகி விடுவார். தனிப் பேட்டியில் அருகே நின்று பேசும்போது அவரது முகமண்டலம் மிகவும் விஸ்தரித்தது போலவும், அவரே அதி புஷ்டியாகிவிட்டது போலவும் தோன்றும். குழந்தைமுகம் பல விதமிருக்கும் என்பதைபாபலு முகாலு பதி விதாலுஎன்பர். “பாபாலுமுகம் மட்டுமின்றி முழுத்தோற்றமுமே இப்படிப் பலபிராம்மண பாலுடுவிதமாகத்தான் உள்ளது! மாறாதது ஆத்மா ஒன்றே; வெளித் தோற்றம் மாறிக்கொண்டேயிருப்பதுதான் என்ற மஹா தத்வத்தை உணர்த்துகிறாரோ?

இவ்விதத்தில் இன்றும் கணமொரு மேனியாக உள்ள ஐயன் குழந்தையாக வளர்ந்தபோது நாளொரு மேனியாக ஏன் இருந்திராது? மொட்டு புஷ்பமாகும்போது நவ நவ எழிலுடன் மலர்வதுபோல் இருந்திருக்கும்.

பொழுதொரு வண்ணமாகஒருவர் எப்படியிருக்க முடியும் என்று வியப்பவர்களுக்கெல்லாம், “இதோ! என்னைப் பாருங்களேன்என்று சொல்லாமல் சொல்கிறார் நம் ஸ்வாமி. பொதுவில் அவர் மாநிறம் என்கிற சியாமள வண்ணர்தான். ஆயினும் அதற்குள்ளேயே, அதற்கு மாறாகவும் வண்ணம் அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும்.

மாந்தரிடை காணவே முடியாத அசாதாரண குளிர்நீலச் சாயல் அவர் நிறத்தில் மேவியிருப்பதைப் பலர் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கர் ஒருவர் இவரை வண்ணப் புகைப்படம் எடுத்தார். சுற்றுச்சூழலும், ஸ்வாமியின் ஆடையும்கூட அந்த உயர் ரகக் காமிராவின் திறத்தில் உள்ளபடியே பதிந்திருக்க, இவரது திருமுகம் மட்டும் நல்ல நீலமாக டெவலப் ஆயிற்று! ‘ரஸாயனத் தவறா? அப்படியாயினும் ஓரிடத்தில் மட்டும் அது எப்படித் திட்டமாக நேரும்?’ என்று புகைப்பட நிபுணருக்குப் புதிராக இருந்தது! பிறகுதான்,

நீலமேனி, ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே

என்று ஆழ்வாராதியர் அநுபவித்த மோஹன வஸ்து இவர் என்பதைப் புரிந்துகொண்டார்.

ஸ்வாமி முகத்தில் செம்மை பாய்ந்து செழித்திருக்கும் சமயங்களும் உண்டு. சிவராத்ரியன்று லிங்கோத்பவத்துக்கு வருகையில் புத்தம் புது ரோஜாக் குவியல்போல், ராஜராஜேச்வரியே, ரோஜாரோஜேச்வரியானது போல விளங்கியதை பக்தர்கள் வியந்து கூறுகிறார்கள். உத்பவத்துக்குப் பின் வெளேரென்று நிலாவாகத் திரும்பி இருக்கை செல்கையில் கசிந்த கண்கள் பல. 1975 மத்தியில் நூலாசிரியர் ஸ்வாமியை ஒயிட் பீல்டில் தரிசித்தபோது இத்தனை வெளுத்துவிட்டாரே என்று அதிசயமாக இருந்தது.

பல நிறம் மாறுவது தெய்வங்களின் இயல்பு போலும்! ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு குணத்தைக் குறிப்பதாகும். இவ்வாறே ஒவ்வொரு தெய்வமும் குறிப்பாக ஒரு குண ஸம்பத்தின் உருவமாயினும், அடியார் பக்குவமடைய அடைய ஸகல கல்யாண குணங்களும், ஏன், அகல்யாண குணங்களும், முடிவாக நிர்குணமும்கூட இதே மூர்த்திதான் என்றுணர்த்துமுகமாக, ஒரே தெய்வம் பல்வேறு வண்ணங்களில் தரிசனம் சாதிப்பதாக அநுபவிகளின் வாக்கிலிருந்து அறிகிறோம்.

பரமபுருஷன் உலகவடிவாம்விராட்டாக விரிகையில் கறுப்பாகவும், உலகின் இயற்கையை இயக்கும்ஸூத்ராத்மாவாக உள்ள போது பச்சையாகவும், இயற்கை உள்ளடங்கிக் கிடக்கும்அவ்யாக்ருதமாக இருக்கையில் சிவப்பாகவும், இதற்கும் ஆதாரமாம் சுத்தப் பிரம்மமாம்துரீயநிலையில் வெளுப்பாகவும் இருப்பதாக சாஸ்திரம்.

திருமழிசையாழ்வார் நீலமேக ச்யாமனையேபாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை அதாவது வெளுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை முதலிய வண்ணங்கள் கொண்டவனாக வர்ணிக்கிறார். மணிவாசகர் வெண்சிவத்தைவெளியாய்என்பதோடு, “கரியாய்! பச்சையனே! செய்ய (சிவந்த) மேனியனே!” என்றும் அழைக்கிறார்.

அபிராமிபட்டர் அந்தாதி முடிவில் அம்பிகையைக் குயில் (கருப்பு), மயில் (பச்சை நீலம்), வெயில் (நிர்குண வண்ணமின்மை), அன்னம் (வெளுப்பு) எனக் கூறுவார்.

திருமால் யுகத்துக்கு ஒரு வர்ணமாக, க்ருத யுகத்தில் வெளுப்பாகவும், த்வாபரத்தில் செம்மஞ்சளாகவும், த்ரேதா யுகத்தில் பச்சையாகவும், கலியில் நீலமாயும் இருப்பதாகச் சொல்வதுண்டு. எனவே அவர்யுகமொரு வண்ணரேஅன்றிப்பொழுதொரு வண்ணர்அல்லர்! சிவபெருமானோ பொழுதொரு வண்ணராகவே ஒரு தலத்தில் உள்ளார்! உறையூர் எனப்படும் திருமூக்கீச்சுரத்தில் அவரது திருநாமமே பஞ்சவர்ணேச்வரர் என்பதாகும். பிரம்மாவுக்கும், உதங்க முனிவருக்கும் இங்கே சிவபெருமான் ஒரே நாளில் ஐந்து காலங்களில் ஐந்து வர்ணங்களில் காட்சி தந்திருக்கிறார். (1972ல் ஸ்வாமியிடமிருந்து உத்பவித்த சிவராத்ரி லிங்கத்தின் வர்ணம் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது!) “பஞ்சவர்ணன்என்ற பெயர் முருகனுக்கும் அவனது அஷ்டோத்தரசதத்தில் காணப்படுகிறது. காயத்ரி தனது ஐந்து முகங்கள் ஐந்து வர்ணங்களாக இருக்கிறாள். நம் கதாநாதனைஸர்வ வர்ணேச்வரர்என்று வர்ணிக்கலாம்!

திருமழிசையாழ்வார், மாணிக்கவாசகர், அபிராமி பட்டர். உதங்க முனிவர் போன்ற மகான்களும் சதுர்முகப் பிரம்மன் போன்ற தேவருமே ஏனைய தெய்வங்களிடம் கண்டநுபவித்த நானா வர்ண நூதனத்தைப் பாமரரும் நுகர்ந்து இன்புற வழங்குகிறார் இச் சரித நாயகர்.

அநல வருஷப் பிறப்பன்று ஸ்வாமி சென்னைக்கு விஜயம் செய்தபோது அவரிடம் அநேகர் வண்ணமாற்ற அதிசயத்தைக் கண்களாரக் கண்டனர். ‘அனல்வருடத்தில் புனலாய்க் குளிர்விக்கவே வந்தாற்போல் அதிகாலை தரிசனத்தின்போது கொண்டல் வண்ணனாக நின்றார். ஆனால் ஒன்பது மணிக்குஸுந்தரம்என்ற தமது சென்னை இருக்கையில் கிருஹப்பிரவேசம் செய்யும்போதோ கருங்கொண்டல் முடிக்கிடையே ஸ்வாமி முகம் மதியம் என நிலா வீசியது. கார்மேகக் கண்ணனைக்கதிர் மதியம் போல் முகத்தான்என்று ஆண்டாள் பாடிய மர்மம் இதுதானோ? மேடையில் அமர்ந்திருக்கையில் வெண்சலவைப் பதுமையாக இருந்தார். மாலைக் கூட்டத்தின்போதோ சந்திர வெண்மையில் மஞ்சள் மங்களம் கலந்து பொன் மெருகிட்டாற் போலப் பொலிந்தார். பொதுவில் அவர் சியாமள முகராக இருக்கும் போதும், அவரது கரங்கள் முகத்தைவிட வெண்மையாகவும், திருவடிகளோ கரத்தைவிடவும் பிரகாசமாகவும் இருப்பது வழக்கம். இன்றோ ஸர்வாங்கமும் தங்கத் தகதகப்பு! பொற்பாதம் என்பது உபசார வார்த்தையாக இன்றி, அசலே பொன்னாக இருந்தது. ஸ்வாமி சென்னையிலிருந்து புறப்படும் வரை, அதாவது அடுத்த இரு தினங்களும், “பொன் வண்ணத்து அந்தாதிக்கு உரியவராகவே திகழ்ந்தார். முதன்முறையாக இப்போதே அவரைக் கண்டவர், ‘இவரையா மாநிறம் என்கிறார்கள்?’ என்று ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.

அரும் பொன்னே மணியேஎன்றும், “இப்பொன் நீஎன்றும் ஈசனைத் தங்கத்தோடு இழைப்பது நம் ஸ்வாமிக்குப் பாங்குறப் பொருந்திவிட்டது. “பங்காருஎன்றே அவர் பாங்குற அடியாரை அழைப்பது வழக்கம். மட்டிக் களிமண்ணாக, கட்டிக் கரியாக உள்ள நம்மை அந்தக் கட்டிக் கரும்புக் குரல்பொன்னேஎன்றழைப்பதை என்னே சொல்ல? பதிலுக்கு, மெய்யாலுமே பொன்னனான நம் மன்ன்னை,

பங்காரு பர்த்தி பாபா
சிங்கார வதனா ஸாயீ

என்று பஜனை பாடி மகிழ்வோம்.

(நம் ஸ்வாமி பங்காரு மூர்த்தியாகியிருப்பதை இந்நூலாசிரியர் அன்பர் சிலரிடம் வியந்து கொண்டிருந்தபோது தபாலில் ஒரு பிரஸாதம் வந்ததுதஞ்சை பங்காரு காமாக்ஷியின் குங்குமம்!)

***

குழந்தை ஸத்யா நன்கு வளர்ந்தான். நீந்தினான், தவழ்ந்தான், ‘ங்குசொன்னான், அப்புறம் நின்றான், நடந்தான். பேசவும் தொடங்கினான்.

அவனது பச்சைக் குழந்தை விளையாட்டில் ஈச்வரம்மா குறிப்பிட்டுச் சொல்வதொன்றுண்டு. சின்னாட் குழவியாக இருக்கையில் தாயின்முகம் பார்ப்பதைவிட அம்முகத்திலிட்ட பெரிய திலகத்தையே உற்றுப் பார்ப்பானாம். தந்த விரலால் குங்குமத்தைத் தொட்டுத் தொட்டுச் சிரிப்பானாம். ஆயினும் குங்குமம் அழியாதாம், உதிராதாம். செவ்விய உள்ளத்துச் செவ்வாடை ஸ்வாமி அன்றே சிவப்பை உவந்து விட்டான். அன்பின் வர்ணம் அதுவேயல்லவா?

தவழும் காலம். வாயில் வரை தவழ்ந்து தவழ்ந்து சென்று விடுவான். அங்கே பிச்சைக்காரர்கள் நின்றிருந்தால், உள்ளே தவழ்ந்து வருவான். வீட்டாரின் கவனத்தைக் கவர்ந்து, பரிதாபப் பார்வை நிறைந்த தனது முகத்தை வாசலுக்குத் திருப்புவான். “போடு பிச்சை!” என்ற கட்டளை அப்பரிதாபத்திலேயே பளிச்சென வெளியாகிவிடும். ஈகையே குழந்தைக்கு இயற்கையாக இருந்திருக்கிறது.

அதிசயக் குழந்தையின் மவுனக் கட்டளைப்படி வீட்டார் பிச்சை போடுவார்களாம். அவர்கள் யாசகருக்கு அன்ன பிட்சை போட்ட பல சந்தர்ப்பங்களில், உள்ளே அன்னம் குறையாமல் வளர்ந்தும் இருக்கிறதாம்! இப்படியாக, முதலாவதான அன்னமய கோசத்திலிருந்து ஐயன் அருள் பசுங்குழவிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது.

மழலை என்பதாகக் குழந்தை குழறிக் கொட்டியதே இல்லையாம். பேச ஆரம்பித்த அன்றிலிருந்தே வாக்குத் தெளிவு. நறுக்கு நறுக்கென்று உச்சரிப்பானாம். இன்றும் அவரது

ரீங்காரக் குரல் எத்தனை ஸ்பஷ்டமாக நம்முள் துளைத்துப் புகுகிறது!

கவர்ச்சி நிறைந்த குழந்தை கறுப்பு வெல்வெட் குல்லாய் முடியாலும், மினுக்கு விழியாலும், நறுக்கு மொழியாலும் ஊருக்கே செல்லமாகி விட்டது. ‘புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற்கன்று போலே உருவம் அழகிய நம்பியைப் பார்க்க ஊர் ஜனங்கள் ஓயாமல் பெத்த வெங்கப்ப ராஜுவின் வீட்டை முற்றுகையிட்டார்கள்.

குழந்தை பிறந்த நாளாகப் பாம்புகள் குறைந்து, பசு வளம் மீளத் தொடங்கியது. அதனால் போலும், ஆயர்கள் குறிப்பாக நிறைய வந்தனர். பாலும் வெண்ணையும் தயிரும் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆனால் ஆதி கோபாலன் இவற்றைக் களவிட்டும் உண்டானெனில், இன்றைய பாலகோபாலனோ இவற்றை ஊட்டினாலும் உண்பதில்லை.

இன்றைக்கும் ஸ்வாமிக்குப் பால், தயிர், வெண்ணெய், நெய் இவை தள்ளுபடிதான். கேட்டால், பூர்வாவதாரத்தில் இவற்றை அமிதமாக உண்டு திகட்டிவிட்டதாம்! ஏழை மக்கள் பொருட் செலவு செய்து தம்பொருட்டு இவற்றை வாங்கி அர்ப்பிக்கக் கூடாது என்பதற்காக ஐயன் புரிந்த தியாகமே இது என்றும் நம்ப இடமுண்டு.

ஒரு விதிவிலக்கை இங்கேயே கண்டுவிடலாம்:

பாலசமுத்ரம் என்பதாகப் பெயரிலேயே பாலை வைத்துக் கொண்டு ஓர் ஊர் பர்த்திக்கு அருகே பெங்களூர் மார்க்கத்தில் இருக்கிறது. பிரசாந்தி நிலயப் பூஜகரான ஸ்ரீ பத்மநாப சாஸ்திரியின் இல்லம் அங்குதான் உள்ளது. பொருளாதாரத்தில் மத்யதரத்துக்கும் கீழ்ப்பட்ட குடும்பம். ஆனால் குடும்பத்தினரின் பக்தி சிரத்தை பரம உத்தமமானது. பர்த்திநாதனைப் பரந்தாமனாகவே வழிபட்டு வருபவர்கள்.

இவர்கள் வீட்டுப் பூஜையில் பீங்கானால் செய்யப்பட்ட ஒரு கண்ணனும் பசுவும் இருந்தன. பிரசாந்திக் கண்ணன் இங்கு லீலை தொடங்கினான். அவ்வளவுதான், தினந்தோறும் பீங்கான் மாட்டின் மடியிலிருந்து சொட்டுச் சொட்டாகப் பால் சிந்தலாயிற்று! இப்படி ஒரு நாளில் ஒரு கிண்ணம் நிரம்பிவிடும். இந்தப் பாலிலிருந்து எடுத்த நவநீதத்தை நவயுகக் கண்ணனுக்குப் பூஜகர் அன்றாடம் சமர்ப்பித்து வந்தார். ஐயனும் இதனை உவந்து ஏற்றார். இப்படிப் பல நாட்கள் நடந்தது. ஒரு வேளை அது காமதேனுவின் பாலேதானோ?

ஆதிக் கண்ணனுக்கும் ஸத்யாக் கண்ணனுக்கும் வேறு சில வேற்றுமைகளும் உண்டு. கண்ணன் ஓயாத தொல்லையாக ஊருக்குச் செய்த தீம்புகளைத்தான் பாகவதமும், நாலாயிரப் பிரபந்தமும், பாரதிப் பாடல்களும் அடுக்கிக் கொண்டு போகின்றன. ஸத்யாவோ ஊருக்கே நல்ல பிள்ளை, ஸாதுப் பிள்ளை. அதி சமர்த்துப் பிள்ளை, கொள்ளையன்புக் கிள்ளை அனைவரையும் ஆகர்ஷணம் செய்தது.

கர்ஷணம்உள்ளவனேக்ருஷ்ணன்’. எத்தனை பொல்லாங்கு செய்தாலும், கன்னற்குடம் திறந்தாற் போன்ற கணகணச் சிரிப்பாலேயே ஆதிக்கண்ணன் மக்களை வசியம் செய்தான். பொல்லாங்கே செய்யாமல் பொல்லென்ற சிரிப்புடன் பொலிந்த ஸத்யா ஊரை வசியம் செய்ததில் விந்தை என்ன?

கண்ணன் தன்னொத்த சிறாரை ரகசியமாகக் கிள்ளுவான். அவர்களின் காதுகளில் கட்டெறும்பைப் போடுவான். ஸத்யா இதற்கு நேர்மாறு. சிசு நாளிலேயே அவற்றின் இயல்புப்படி வேறொரு குழந்தையின் கையிலிருப்பதை இழுப்பதோ, மற்றக் குழந்தைகளைக் காரணமின்றி அடிப்பதோ கிடையாது. இது மட்டுமில்லை. மற்றக் குழந்தைகள் ஸத்யாவை அடித்து ஹிம்ஸித்தால் கூட இவன் பதிலடி தரமாட்டான், அழ மாட்டான், பெற்றோரிடம் சொல்லவும் மாட்டான். வேறுயாராவது சொல்லித்தான் விஷயம் வெளிவரும், ‘கோளுக்கு மிகவும் சமர்த்தனாகவும், ‘பொய்மை குத்திரம் பழி சொலக் கூசாச் சழக்கனாகவும் இருந்த பாலகிருஷ்ணன் இந்தமறுபதிப்பில்தன்னை ரொம்பவுந்தான் சமர்த்துப் பாப்பாவாகஎடிட்செய்துகொண்டு விட்டான்! பூர்வக் கண்ணன்வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடும் புழுதியும் கொண்டுநீராட வாராமல் பிடிவாதம் பிடித்தவன். ஸத்யாவோ ஸதா சுத்தம். இன்றைக்கும் பாருங்கள். எப்போதும் எத்தனை சுசிருசியாகக் காண்கிறார்! ஸ்நானம் செய்து எத்தனையோ மணிகளான பின்பும் அப்போதுதான் குளித்து வந்தாற்போலக் காண்கிறார். ஸதாவும் சுதாவாகவே புதுமைத் தெளிவு! பிரணவம் (ப்ர நவம்) என்றாலேவிசேஷப் புதுமை

என்பதுதான் பொருள். கசகசக் கோடை இறுக்கத்திலும் உள்ளே பட்டு வேஷ்டியும், மேலே கழுத்தோடு கால்வரை காற்றே புகாத பட்டங்கியும் கர்ண கவசமாகக் கழற்றாமலே அணிந்திருந்தும் வாடுவதில்லை, வதங்குவதில்லை என்றால் அதிசயம்தான் ஐயா! இவர் நிர்மலம் நீங்காதது போலவே, புழுதியில் தழையத் தழையப் புரளும் அந்த அங்கி ஓரம் கூட அழுக்காக மாட்டேன் என்கிறதே, அது இதைவிட அதிசயம், “(அலக்) நிரஞ்ஜன்என்றே கோரக்நாத் சம்பிரதாயத்தார் கூறும் மாசற்றவன் தான்!

பாலப் பருவத்திலேயே துளிக்கூட அழுக்குப் படியக் கூடாதாம். நன்றாக நீராடி நீறு பூசிக்கொள்வான். விபூதி கலையவே கூடாது. கலைந்தால் எந்த வேளையானாலும் மறுபடி திருநீற்றைக் குழைத்து அழகிய நெற்றியில் வெள்ளை வெளெரென்று பட்டை போட்டுக் கொள்வான். தமது கையிலிருந்தே விபூதி மழை பொழியத் தொடங்கி, லீலா விபூதியை விரிவாக்கத் தொடங்கியதிலிருந்துதான் ஸ்வாமி திருநீறு பூசுவதை நிறுத்திவிட்டார். குழந்தைப் பருவத்திலேயே ஓர் ஆயுள் முழுதற்குமான விபூதிக் கந்தாயத்தைத் தீர்த்துக் கட்டி விட்டாரோ? கண்ணனுக்குரிய வெண்ணெய் திகட்டினாற்போல, முக்கண்ணனுக்குரிய வெண்ணீறும் போதுமென்றாகிவிட்டதோ? அல்லது விபூதி தாரணத்தால் தாம் சைவ மதத்துக்கே விசேஷச் சார்புடையவர் என்ற தப்பபிப்பிராயம் ஏற்பட்டு விடக்கூடாதென்றே ஸர்வமத ஸம்மதரான ஸ்வாமி தமது நீறு தீற்றிய திருமுக தரிசன பாக்கியத்தை நமக்கு மறுத்துவிட்டாரோ?

பிஞ்சு ஸத்யாவுக்கு விபூதி மட்டும் போதாது. அன்னையின் திலகத்தை நிமிண்டியவனாயிற்றே! விபூதிப் பட்டைக்கு நடுவே வட்டமாகக் குங்குமத் திலகமும் மின்ன வேண்டுமாம்! இங்குதான் சமர்த்து ஸத்யா அம்மாவுக்கு அடங்காமல் முரண்டு செய்வான். அவள் ஏன் பிள்ளைக்குத் திலகமிடமாட்டாள் என்றால், கண்பட்டுவிடும் என்ற பயம்தான் காரணம். குங்குமச் சிமிழை ஒளித்து வைத்துவிடுவாள். சலிக்க மாட்டான் ஸத்யா. தன் அக்காள்மாரின் அழகு சாதனப் பெட்டியைக் குடைவான். இங்கு மட்டும் திருட்டுத்தனம்! குங்கும டப்பியைத் தேட்டை போட்டு, தானே எடுத்து அப்பிக் கொள்வான். அம்மா நெற்றியில் உதிராமலே நிற்கின்ற அந்தப் பொல்லாத குங்குமம் இவன் நெற்றியில் சிறிது மட்டுமே நின்று, மீதி ஆடையில் சிந்திவிடும். பொட்டிட மறுத்ததற்குப் பழியாகப் பிள்ளையாண்டான் குங்குமாபிஷேகமே செய்துகொண்டு நிற்பதைப் பார்த்துத் தாய்க்காரி பெருமூச்சு விட்டாளோ, பூரித்து நின்றாளோ?

அன்று உடையில் குங்குமத் திட்டுக்கள் மட்டுமே பெற்ற பாலன் பின்னொரு நாள் ஆபாத க்ரீவம் செவ்வாடை அணிந்து சிவிகையில் சிவையாக நவராத்ரி பவனி வரப்போவதையும், அப்போது அந்த நவராத்ரி நாயகியின் நெற்றி முழுதும் தானாகவே குங்குமம் குமுகுமுத்துப் பொங்கப் போவதையும் ஈச்வராம்பா கற்பனைகூடச் செய்திருக்கமாட்டாள். “விபூதி ஸுந்தர காய் நாத் என்றும், “குங்கும தாரண குவலய ரக்ஷண என்றும் சிவசக்தி ஸ்வரூபமாகத் தன் மகன் பஜனைத் துதி பெறப்போகிறான் என்று அன்று அவள் கனவேனும் கண்டிருப்பாளா?

***

த்யா அன்னமுண்ணத் தொடங்கியபோது ஒரு விசித்ரம் செய்தான். ரத்னாகரம் ராஜுக்கள் புலால் உண்பவரே என்று முன்னர் கண்டோமல்லவா? குழந்தையோ உணவிலே சுத்த சைவம் கொண்டாடியது! அசைவ பதார்த்தங்களின் சம்பந்தப்பட்ட பாத்திரத்தில் தனக்கு உணவு படைக்கப்பட்டால்கூட அதைத் தீண்ட மறுத்தான். தாத்தா கொண்டம ராஜு தீவிர சைவமல்லவா? அவரது வீட்டுக்குச் சென்றே அமுது கொள்வான். தொண்டு கிழங்களான தாத்தா பாட்டிக்குப் பேரனிடம் ஏற்கனவே பெருமிதம். இப்போது அந்த ஆரமுது தங்களிடமே அமுதுண்ண வருவதில் மகிழ்ச்சி இரட்டிப்பாயிற்று.

எனினும், பூரண பாக்கியத்தையும் இவர்களுக்கே தந்தால் தாளாது என்று ஸத்யா என்ணினானோ என்னவோ? அமுதூட்டும் பேற்றில் மற்றொரு புனித ஜீவனுக்கும் பங்கு கொடுத்தான்.

அப்புனித ஜீவன், புட்டபர்த்தி கிராமக் கர்ணத்தின் தர்ம பத்னியான சுப்பம்மா. வெங்கம ராஜு குடியிருந்து, நம் ஸத்ய நாராயண ராஜு பிறந்தது கர்ணத்துக்குச் சொந்தமான வீட்டில்தான். அவதரிக்க அகம் அளித்தவளுக்கே, தனக்குப் போனகம் ஊட்டும் பாக்கியத்திலும் பங்கு தந்தான். இன்றும் ஸாயி பக்தர்கள்சுப்பம்மாஎன்றாலே தழைந்துத் தலை வணங்குவர். ஸ்வாமியும் அவளை நினைத்தால் உருகிப் பேசுவதே அலாதியாக இருக்குமாம். ஒருத்தி மகனாகப் பிறந்து வேறொருத்தி மகனாக வளர்ந்த கண்ணனைப் போல் ஸ்வாமி ஈச்வராம்பாவை தேவகியாகவும் சுப்பம்மாவை அசோதையாகவும் உவந்திருந்தார் எனலாம்.

சுப்பம்மா பிராம்மண மாது. அக்காலத்தில் ஒரு க்ஷத்திரியப் பிள்ளையை பிராம்மணர் வீட்டில் சேர்த்து உணவூட்டுவது நினைத்தும் பார்க்க முடியாத விஷயம். ஆனால், இந்த அம்மை புரட்சி செய்யும் எண்ணம் லவலேசமும் இன்றியே, ஸத்யாவிடம் சுரந்த சுபாவமான அன்பின் வேகத்தில் இக்காரியத்தைச் செய்தாள். சுப்பம்மாவின் வீட்டிலேயே குழந்தை பெரும்பாலும் வளர்ந்தது. ஊரார் விளையாட்டாக அதைபிராம்மண பாலுடுஎன்று குறிப்பிடலானார்கள். இந்தப்பார்ப்பாரப் பிள்ளையும் உண்மை அந்தணருக்குரிய செந்தண்மைகளை அஹிம்ஸை, ஸத்தியம், தியாகம், தூய்மை முதலிய பண்புகளைப் பெருக்கிட்டுக் காட்டியது. அஹிம்ஸையில் புத்தரை நிகர்த்த குழைவு! ஆடு பன்றிகளையோ, பட்சிகளையோ வதைக்கும் இடத்தின் வழியாகக்கூடப் போகமாட்டான். மீன் பிடிக்கும் குளம் குட்டையிலோ, ஏரியிலோ கண்ணைச் செலுத்தாமல் பதறி ஓடுவான். பட்சிப்பதற்காகப் பிடித்து வைத்திருக்கும் பட்சிகளை எடுத்துத் தன் சின்ன மார்போடு சேர்த்தணைத்துக் கொஞ்சி உருகுவான். இவன் அஹிம்ஸைப் பிரசங்கம் செய்யாவிட்டாலும், இந்த இரக்க உருக்கத்தினாலேயே அந்த அசைவர்களுக்கும் சில சமயங்களில் இளக்கம் உண்டாகிவிடும்.

வேறொன்றை ஒருவர் கொல்லின்
அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும்
ஐய நின் அருள் அறியுமே

எனத் தாயுமானாரும்,

கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்

என வள்ளலாரும்ஐயோபோட்டுச் சொன்ன ஜீவகாருண்யம் ஸத்யாவின் இள நெஞ்சில் இளநீராய்த் தளும்பியது.

கோழிச் சண்டை என்று ஊர் முழுதும் குதூஹலிக்கும். ஸ்த்யாவோ நெட்டுயிர்த்து நெகிழ்ந்து போவான்.

தொலி ஏகாதசிஎன்கிற விழாத் தினத்தில் புட்டபர்த்தி திமிலோகப்படும். சித்ராவதிப் படுகையில் நடக்கும் ரேக்ளா ரேஸுக்கு ஆண், பெண், பாலர் அடங்கலும் செல்வார்கள். ‘ஐயோ, மாடுகள் பாடுபடுமே!’ என்று வாடுவான், தவிப்பான் பால ஸத்யா. வீட்டாரையும் விளையாட்டுத் தோழரையும், ‘இந்தப் பாதகத்தைப் பார்த்து ரஸிக்கப் போகாதீர்கள்என்று தடுப்பான்.

காலச் சகடம் பல சுற்றுச் சுற்றிய பின் ஒரு நாள். ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா தம்மிடம் சிறிது முன் விடை கொண்ட சில பக்தர்களை மீண்டும் அழைத்து வர ஆளனுப்பினார். பக்தர்கள் என்னவோ ஏதோ என்று ஆர்வத்துடன் திரும்பிவந்தனர். ஸ்வாமி அவர்களிடம், “ஒன்றுமில்லை. நீங்கள் இத்தனை பேர் ஒரே வண்டியில் வந்திருக்கிறீர்கள். மாட்டுக்குக் கஷ்டந்தான். சாதாரணச் சாலையிலாவது பரவாயில்லை. சித்ராவதி மணலில் ரொம்பவும் சிரமப்படும். ஆகையால் ஆற்றுப்படுகை தாண்டுகிற வரையில் வண்டியிலிருந்து இறங்கி நடந்து செல்லுங்கள். இதைச் சொல்லவே கூப்பிட்டேன்என்றார். ஸர்வ பூத தயாபரன்!

ஸத்யா தன் தோழர்களையும் மனத்தில் தைக்குமாறு பேசி அஹிம்ஸையில் ஈடுபடுத்தினான். அஹிம்ஸைக்கு அடுத்த பரம தர்மமான ஸத்தியத்திலும் அவர்களைத் தோய்த்தெடுக்கத் தன்னாலானதெல்லாம் செய்தான்.

குழந்தைப் பிராயத்திலேயே இவனுக்கென்று சொந்த ஆசை ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இதையெல்லாம் பார்த்தும், அதோடு அறிவொளியைக் கண்டும் ஊரார், “ஸத்யாவா? அது பிரம்ம ஞானி, பிராம்மண பாலுடுஎன்பர்.

பலப்பல ஆண்டுகளுக்கு முற்பட்ட சம்பவம். ஷீர்டி பாபாவைக் காண பிரம்ம ஞான சபை மாதொருத்தி செல்கிறாள். ஏனோ அவரை அணுகுகையில், ‘இவரை மகானாக எண்ணி வருகிறோமே! உண்மையில் இவர் அநேக துருக்க மந்திரவாதிகளில் ஒருவராக இருந்துவிட்டால்…?’ என்ற கலக்கம் அவளுக்கு ஏற்படுகிறது. அனைத்தும் அறியும் ஸாயி பாபா அவளை மருளோடு நோக்கித் தெள்ளத் தெளியச் சொன்னார்: “அம்மே! இது ஒரு பிராம்மணன். சுப்ரமான (வெள்ளையான, தூய்மையான) பிராம்மணன். லக்ஷக்கணக்கானவரை சுப்ர மார்க்க்தில் சேர்க்கப் போகிற பிராம்மணன்.”

பலரால் துருக்கராக நினைக்கப் பெற்ற மசூதிவாசியான ஷீர்டி பாபா பிறிதொரு சந்தர்ப்பத்தில் தாம் பாரத்வாஜ கோத்திரத்தில் ஆபஸ்தம்ப ஸூத்திரத்தில் தோன்றிய பிராம்மணர் என்று சொல்லிக் கொண்டார்.இன்று ஊரில் பலபேர் புகழாகவும், சிலபேர் கேலியாகவும் “பார்ப்பாரப் பிள்ளை” என்று பேரிட்டபோது குட்டி ஸத்யம் அந்தப் பழங்கதையையெல்லாம் நினைத்துச் சிரித்துக் கொண்டிருப்பானோ?