புட்டபர்த்தி – 4

அத்தியாயம் – 4

ஸத்ய நாராயணன்

ஸத்பம்ஞானம்அனந்தம்ப்ரம்ம

தைத்திரீய உபநிஷதம்

ஸத்யம்சிவம்ஸுந்தரம்

பிரம்ம ஸமாஜ வாசகம்

சத்தியத்தில் வாசுதேவன் நிலைபெற்றிருக்கிறான். சத்தியம் வாசுதேவனிடத்தில் நிலைபெற்றிருக்கிறது. எனவே அவன்சத்தியன்என்றே சான்றோர்களால் நினைக்கப் படுகிறான்.

மஹாபாரதம்: உத்யோக பர்வம்.

பிரஸவ அறையில் இருந்தவர்கள் குழந்தையின் அடியில் அசைந்த துணிகளைத் தூக்கிப் பார்த்தனர்.

அசைவுக்குக் காரணம், அடியிலே நெளிந்த அரவம்!

வரியரவின் அணைதுயின்ற மாயோன் காண்மின் என்று ஆழ்வார் பாடிய அனந்த சாயியோ?

அனைவரும் திக்பிரமித்திருக்க, பாம்பு வளைந்து நெளிந்து மறைந்தே விட்டதுமாயமாக!

கண்ணன் அவதரித்தவுடன் வஸுதேவர் அவனை யமுனை வழியே தூக்கிச் செல்கையில் மழை பெய்ய, அப்போது அனந்தனே குடைபிடித்தான்சென்றால் குடையாம்என்ற வாக்குப்படி. இங்கோ அதே ஆழ்வார்புல்கும் அணையாம்என்று கூறியதற்கேற்பக் குழந்தைக்கு மெத்தையாக மெத்தென்று இருந்திருக்கிறான்!

குழந்தைக்கு ஜாதகர்மம் செய்தார்கள்.

***

ஜாதகர்மம் எனும்போது குழந்தையின் ஜாதகத்தைப் பற்றி எண்ணம் படருகிறது. அடடா, எப்பேர்ப்பட்ட ஜாதகம்! அகஸ்திய நாடி, புத நாடி, சுக்ர நாடி, பிருகு நாடி, பிரம்ம நாடி முதலியவற்றிலெல்லாம் போற்றப்படும் ஏற்றமிகு ஜாதகம்! நாடி சாஸ்திரங்களைத் தற்போது வெளியிடுகிறவர்களைப் பார்க்கும் போது இவற்றில் நம்பகமானதும் உண்டு, சூதும் உண்டு என்று தோன்றுகிறது. ஆயினும் புதுதில்லி இண்டியன் ஆஸ்ட்ரோ அக்கல்ட் ரிஸர்ச் கழக ஆராய்ச்சியாளரான டாக்டர் .வீ. சாஸ்திரி (“லியோ”) மேற்சொன்ன நாடிகளில் முதல் மூன்றின் சுவடிகளை மூவேறு இடங்களிலிருந்து பெற்ற போதிலும், அவற்றில் ஒவ்வொன்றிலும் நம் கதாநாதனின் ஜாதகம் அச்சடித்தாற்போல் ஒன்றாகக் காணப்படுவதும், ஜாதக விளக்கமாக மூன்று ரிஷிகளும் ஒரே குரலில் பேசுவதும் இவற்றின் மெய்ம்மைக்குச் சான்று என உறுதி கொள்ளலாம். இவரது சரிதம்பற்றி இருடியர் பைந்தமிழில் கூறும் புகழ்மொழிகள் நம்மைப் புளகமுறச் செய்கின்றன. உதாரணமாக, இவரைமின் மருத்துவக்கலைப் பண்டிதர்என்று அகஸ்திய நாடி கூறுவதில் எத்துணை நயம்? ‘எலெக்ட்ரிக் ஸ்பீடில் நோய் தீர்க்கும் தன்வந்தரியன்றோ நம் ஸ்வாமி? வெறும் வைத்திய நிபுணர்தாமா? அல்ல. ‘பள்ளிகள் பல நிறுவுவார். அறநூல்கள் அருளுவார். ஆயுள் முற்றிலுமே அறம் வளர உபதேசிப்பார்என்று நாடிகள் மொழிகின்றன. அவ்வளவுதானா? சிறு வயதிலேயே அவர் வீட்டைத் துறந்து தர்ம ஸம்ஸ்தாபனத்தைப் பிறவிப் பணியாகக் கொள்வார் என்கின்றன. சரி, இது அவர் வெளியிலே செய்வது, உள்ளுக்குள் அவர் யார்? அவர் பெருமை என்ன? அதையும் நாடிகள் இயம்புகின்றன. ‘முற்பிறப்பிலே ஏராளமான மக்கள் தொழுத குருவும் முனிவருமான ஸாயிபாபாவே அவர்என்று தெளிவாகக் கூறுகின்றன. “ஸாயியின் அவதாரமேதான்என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார் ஒரு நாடி ரிஷி. அவர் பேரானந்தத்திலேயே மூழ்கியிருப்பவர்என்று புத நாடி புகலும். அவரைஅருளின் திவ்வியப் பிறப்புஎன்றும், “அகிலத்தார் பிதாவாக ஒளிர்வார் என்றும் அகமகிழ்ந்தோதுகிறார் அகஸ்தியர். அன்பு, அருள், ஒளி (ஞானம்) மூலம் அவர் நித்யானந்தத்தை நீணிலத்தில் நிலைநாட்டுவார் என்றும், அவர் உறையும் ஆலயம்தவநிலையாகத் திகழும் என்றும் கூறுகிற சுக்ர நாடி, அவரை மக்கட் பணியிலேயே மகிழ்வு காண்பவராகச் சொல்லி, முடிந்த முடிபாக, முத்தாய்ப்பாக, “அவதாரத்திலொன்றுஎன்கிறது! நாடி சாஸ்திரம் கூறுவது நம் நாடியுள்ளும் பாயத்தான் செய்கிறது.

வராகனேரி அன்பர் ஸ்ரீ எம். சின்னதுரை பிரம்ம நாடியிலிருந்து பெயர்த்தெழுதியிருப்பதில் அடியார் உள்ளத்தை அள்ளும் சில வாசகங்கள்:

மாயாவதாரி பர்த்திவாசன் சத்தியசாயி நாராயணன் லிங்க சொரூபியாய், சக்தி சொரூபியாய் நரவுடல்தனில் அவதரித்தவன்

சக்தி சிவ அவதார, சீரடி சாயிபாபா அவதார, சித்ராவதி தடாக பர்த்தி சாந்தாலயம்1 தனில் சாந்த சொரூபியாயமைந்த சத்திய நாராயணன்.”

ஸ்ரீ கிருஷ்ணாம்ச, ஸ்ரீ ருத்ராம்ச, ஸ்ரீ லிங்காம்ச, ஸ்ரீருத்ரகாளி (பத்ரகாளி?) அம்ச, ஸ்ரீசக்தி அம்ச, ஸ்ரீ விஷ்ண்வம்ச, ஸ்ரீ மக முனிவனாய், மானிட வடிவமதில் அவதாரம் செய்ததோர் சத்திய புருஷனுமாய், மராட நகரமதில் (மஹாராஷ்டிர தேசத்தில்) சீரடி எனும் புரமதில் சீரடி பாபாவாய் அவதரித்தும், நைந்த ஆடையதும் உடுத்தி, ஏழ்மையுடன் தோற்றமுறவே எளிய வாழ்க்கையுடனும் வாழ்ந்து, பின்னும் ஓர் அவதாரம் சத்திய நாராயணனாய் சர்ப்ப சயனத்துடன் அவதரித்தான்

2 ‘ப்ரசாந்தி நிலயம்என்பதையே நாடிசாந்தாலயம்என்கிறது. இதை விடவும் மறைமுகமாக நாடிகளில் இயற் பெயர்கள் மாற்றிக் கூறப்படுவதுண்டு. ஒரு நாடி ஸ்ரீ ஸத்ய ஸாயிக் கல்லூரி உள்ள ஒயிட் ஃபீல்ட் காடுகுடியைவனாலயம்என்றே சொல்லும். (வனம்காடு; ஆலயம்குடி.)

நிஷ்களங்க நிராமய நிராதார நிராலம்ப ஏக சுயம்பு மகேஸ்வரன்போல் மானிடரோடு மானிடனாய் ஜனித்தானே…”

தத்தாத்ரேய சொரூபம் போல்நர சொரூபமாய் அவதரித்துதிரி மூர்த்தியும் கூடும் அவதாரமாய்…”

சக்தி சொரூபியாய் அமர்ந்த சத்குருநாதன்…”

பிரேமசாயி எனும் சத்திய சாயி பின் அவதாரம் தனில் ஜனித்திடவும்1

ஞாலமதே மெச்சும் ஞானசிகாமணியாம் கோலமணி மார்பழகன், கொவ்வை அதரமும்…”

பாலகனாம் சத்திய சாயி எனும் பகவன் சீலமதாய்க் கொண்டாடும் குருவாரம்…”

சாந்தமூர்த்தி, சாம்பமூர்த்தி, ஞானமூர்த்தி, ஞானேஸ்வரன், சக்தீஸ்வரன், லிங்கேஸ்வரன், சத்திய சாயி நாதனவன்…”

2 முன்பு ஷீர்டி ஸாயியாக வந்த தாம், தற்போதைய ஸத்யஸாயியாக 96 வயது இவ்வுடலில் வாழ்ந்து. பின்னர் கர்நாடகத்தில் மண்டயத்தில் பிரேம ஸாயியாக இன்னோர் அவதாரம் நிகழ்த்தப் போவதாக நம் ஸ்வாமி கூறுவார். நாடி எழுதப்பட்ட காலத்தில் ஷீர்டிஸாயி, ஸத்யஸாயி ஆகியோரும் கூட எதிர்காலத்தவர்தாம்…!

நேராக இவரது பெயரிலுள்ள நாடிகளைவிடவும் நம்பகமான இரு சான்றுகள் உள்ளன. சான்று கூறும் ஒருவர் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஸ்ரீ பகவத்தயாள் சர்மா. மற்றவர் பம்பாயைச் சேர்ந்த ஸ்ரீ ஜே.பி மரூ. இவர்கள் தனித்தனியாகப்ருகு ஸம்ஹிதைஎன்ற சம்ஸ்கிருத நாடியைப் பார்த்தவர்கள். நமது நாயகரைக் குறித்தல்ல; தங்களுடைய ஜாதகத்தையே நாடியில் பார்த்துக் கொண்டார்கள். அப்போது இவர்களுக்கும் சரி, இவர்களுக்கு ஆரூடம் கூறிய நாடி சோதிடர்களுக்கும் சரி, நம் ஸ்வாமியைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆயினும் ஸ்ரீ கர்மாவுக்காக ப்ருகு ஸம்ஹிதையைச் சோதித்துப் பார்த்த சோதிடர், “நீங்கள் பிரசாந்தி நிலையத்தில் மனித உருவில் வந்துள்ள இறைவனின் அவதாரத்தைப் பார்க்கப் போவதாக இதில் காண்கிறதுஎன்றாராம். அப்போது பிரசாந்தி நிலயம் யாருடையது. அது எங்கே இருக்கிறது என்ற விவரம் எதுவும் சர்மாவுக்குத் தெரியவில்லை. நாடி சாஸ்திரியாருக்கும் தெரிந்திருக்கவில்லை. “இதில் இருப்பதைச் சொன்னேன். அவ்வளவுதான்என்று கூறிவிட்டார். பிற்பாடு நாடி சொன்ன இடத்தை நாடித் தேடி ஸ்ரீ சர்மா நம் நாயகனை வந்தடைந்தது வேறு கதை!

இதே போலத்தான் ஸ்ரீ ஜே.பி. மரூவின் எதிர்காலத்தை ஸம்ஹிதையில் ஆராய்ந்த நேபாளியரான நாடி ஜோதிஷர், “உங்களுக்கு 1967 நவம்பர் நாலாந் தேதியன்றுபிரத்யக்ஷ தேவ தரிசனம்கிடைக்கப் போவதாகச் சுவடி கூறுகிறதுஎன்றார். அதற்கு அதிகமாக விவரம் தர அவரால் இயலவில்லை. அதே தேதியில் தான் ஸ்ரீ மரூ நம் ஸ்வாமியைத் தம் இல்லத்திலேயே வரவேற்கும் பேற்றினை அடைந்தார்.

சந்தேகப் பிராணிகளையும் சிந்திக்கத் தூண்டும் இரு சான்றுகள் தாமே?

***

ஜாதகர்மம். பிறகு நாமகர்மம். ஸத்ய நாராயண பூஜைக்குக் கைமேல் பலனாக, சேஷ பர்யங்கத்தில் பிறந்த பிள்ளைக்கு வேறென்ன பெயர் வைப்பார்கள்? ஸத்ய நாராயணன் என்றே நாமமிட்டனர்.

நாமப் பொருத்தம், ஆஹா, சொல்லத்தரமன்று. பாலிக்கும் பொறுப்புப் படைத்த, இதன் பொருட்டே அவதாரங்களும் செய்கிற, காப்புத் தெய்வத்தின் அஷ்டாக்ஷரீ மந்திரத்தில் கூறப்படுவதுநாராயணநாமமே. உள்ளும் புறமும் அனைத்தும் நாராயணனே என்பதாக வேதமும் இப்பெயரையே விசேஷித்துநாராயண ஸுக்தம்பாடுகிறதுகண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்றுதானே ஆழ்வாரும் ஆரவாரிக்கிறார்? நரரின் புகலிடமே நாராயணன். ஜீவ தத்வத்துக்கும் கருணைத் தத்துவத்துக்கும் உருவான நீராம்நாரத்துக்கு உறைவிடமே நாராயணன்.

இந்த நாராயணன் அற்புத அற்புதங்கள் செய்து அருள்புரிவதற்காக எடுத்ததோர் அவதாரத்தையே விசேஷமாக ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும், உத்கலத்திலும் (ஒரிஸ்ஸா), மஹாராஷ்டிரத்திலும்ஸத்யநாராயணன்என்று வழிபட்டு, பாராயணம், பூஜை, விரதம், ஸமாராதனை முதலியன நடத்துகிறார்கள். ஆம்miracle எனப்படும் அற்புதங்கள் பல கொண்டது இந்த ஸத்ய நாராயண சரிதம். இத்தனை அற்புதங்களும் செய்த அந்த அவதாரன் வெற்றுச் சித்து நிபுணனல்லன், சத்தியமாக அவன் நாராயணனே என்பதால்தான் அவனைஸத்யநாராயணன்என்றே பெயரிட்டுப் போற்றுகிறார்கள். நமது ஸ்வாமிக்கு இப்பேர் இடப்பட்டது தனிப் பொருத்தம் வாய்ந்ததுதானே?

ஸத்யமாக நாராயணன் என்பதோடு ஸத்யமான நாராயணன் என்பதாலும் ஸத்யநாராயணன். ஆம், பரம ஸத்தியமான பிரம்மம், அல்லது ஆத்மாதான் நாராயணன். எனவே ஸத்ய நாராயணன் என்னாமல் ஸத்யன் என்றே சொல்லிவிட்டாலும் போதும்! இதற்கேற்பவே, இன்று ஸத்ய ஸாயி பாபா என்று உலகம் துதிக்கும் வியக்தியின் அன்றைய முழுப்பெயர்ரத்னாகரம் ஸத்ய நாராயண ராஜுஎன்பதாயினும், செல்லமாகக் குறுக்கிஸத்யாஎன்றே அழைத்தார்கள். அன்னை ஈச்வரம்மா போன்றவர்கள்ஸத்யம்என்றும் சொல்வார்கள்.

எல்லாமாகப் பரந்து விரிந்த ஒன்றே ஒன்று இருக்கிறதே, அதற்குஸத்’, ‘ஸத்யம்என்றே பெயர். ‘ஏகம் ஸத்என்றே வேதம் கூறும். திருமாலைக் கண்ணனாக அவதரிக்குமாறு தேவர்கள் வேண்டியபோது, “ஸத்ய வ்ரதம், ஸத்யபரம், த்ரி ஸத்யம், ஸத்யஸ்ய ஸத்யம்என்றெல்லாம் வர்ணித்ததாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. ஸத்தியத்திலேயே குடிகொண்ட மெய்ப்பொருள் ஸத்தியத்தை நிலைநாட்டுவதையே ஜன்ம விரதமாகக் கொண்டு அவதரிக்கிறது. ஸத்யதர்மசாந்திப்ரேமை என்பதாக முதலிடத்து சத்தியத்தை கூறுவதுதான் நம் ஸ்வாமி தந்துள்ள ஜீவ சூத்திரம். குரு நானக்ஜப்ஜீயில் அழகுற மொழிவார்: “ஒன்றேயான பொருள் ஓம், அதன் பெயர் சத்தியம் ஏக் ஓம், ஸத் நாம்!” இயேசு நாதனும் இறைவன் மீள உலகுக்கு வரும்போது Truth (ஸத்யம்) என்பதே அவனது பெயராக இருக்கும் என்றார்.

இந்தஸத் நாமைவைத்துக் கொண்டுள்ள குழந்தை பிற்காலத்தில் ஸத்ய நாம், ஸத்ய நாம், ஸத்ய நாம், ஜேய் போலோ” என்று வேக வேகமாய்ப் பாடி லக்ஷோபலக்ஷம் மக்களையும் அப்படிப் பாட்டுவிக்கப் போகிறது!

கற்பகத் தருவோடு வரப் போகும் காந்தனை எதிர்பார்த்து முன்னரே இங்கு வந்து கோயில் கொண்டுவிட்டாளே, அவள் பெயரும் ஸத்யாதான். ஸத்யபாமா என்பதில் பாமா என்றால் மங்கை நல்லாள் என்று அர்த்தம். ஸத்யா என்பதே அவளது இயற்பெயர். ஸத்யப் பொருளான கண்ணனின் மணாட்டி ஸத்யபாமா என்றும் கொள்ளலாம்.

பாமாதேவி உண்மையில் பூமாதேவிதான். இது பௌதிகமான நிலத்தைக் குறிப்பதாக மட்டும் எண்ணினால் ஹானிதான். ஆத்மிகமான ஸத்யக் கண்ணனோடு சேர்க்காமல் தனியாக உலக சுகத்தைமட்டும் பார்த்தால் பேராபத்துதான். புயல் மழையாக வந்த வெற்று உலகாயதச் சுழலில் மக்கள் பாமாவைக் கண்ணனிடமிருந்து பிரித்து விட்டார்கள். அப்போதுதான் அவள் நல்லறமாகிய கற்பகவிருக்ஷத்தை உலகுக்கு கொண்டு வர நாதனை எதிர்பார்த்துக் கொண்டம ராஜுவின் கனவிலே தோன்றியிருக்கிறாள்!

இப்போது காந்தனிடமிருந்து பிரிந்திருப்பதாக வெளியே தோன்றினாலும் உள்ளூர இருவரும் ஒன்றேதான். இதைக் காட்டவேஸத்யாஎன்பதாக இவள் பெயரையே பாபாவும் சூட்டிக்கொண்டாரோ? பொறுமையின் வடிவம் இப் பூதேவி எனில், நம் பிழை பொறுப்பதில் பாபாவும் பாமாவே தான்.

பூமா என்றாலே பிரம்ம தத்வம், அளவு கடந்த அகண்ட தத்வம் என்று சாந்தோக்யம் சொல்கிறபடியும் அவர் அந்த இறுதி ஸத்யமான பூமாதான்.

1963ம் ஆண்டு தீபாவளியின்போது உரையாற்றிய பாபா, கண்ணன் துணைகொண்டு பாமை நரகனை வதைத்த வரலாற்றைச் சொல்லி, “கண்ணன் பரமாத்மா, பாமா ஜீவாத்மா, நரகன் அஞ்ஞானம். கடைசியில் அஞ்ஞானம் நீங்கிய பின் ஜீவாத்மாவே பரமாத்மாவாகி விடுகிறது. பாமாவே கண்ணனாகி விடுகிறாள். ஸத்ய நாராயணன் தன் பரமாத்மத்வத்தை மறக்காமலேதான் ஸத்ய பாமா என்ற ஜீவாத்மாவாக நடித்தான்என்று கூறியருளினார். புட்டபர்த்தியில் இட்டமுடன் குடிகொண்ட கொண்டமரின் ஸத்ய பாமாவை அக்கிராம மக்கள், மேற்சொன்ன தத்வார்த்தங்கள் தெரியாமலே, இயல்பாகஸத்யம்மா, ஸத்யம்மாஎன்று அன்போடு சொல்லித்தான் வழிபட்டனர், வழிபடுகின்றனர்.

1961ம் ஆண்டில் பிரசாந்தி நிலய சஞ்சிகையானஸநாதன ஸாரதியின் நவராத்ரி இதழில் ஓர் அன்பொழுகும் சித்திரம் வெளியிடப்பட்டது. நம் பாபா இரு குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு அணைத்திருக்கும் பிரேம காவிய புகைப்படம். அன்னைத் திருவிழாவாம் நவராத்ரிக்குப் பொருத்தமாக இதனை முகப்புச் சித்திரமாக வெளியிட்ட ஆசிரியர் ஸ்ரீ கஸ்தூரிஸத்யஸாயி மாதாஎன மகுடமிட்டார். அச்சேறு முன் கைப்படியை அம் மாதாவிடமே காட்டினார். மகுடத்தைப் பார்த்த பாபா தாய்மை கனக்கும் குரலில் கூறினார்: “இதில்ஸாயிஎதற்கு, ஸாயி? ‘ஸத்ய மாதாஎன்றாலே போதுமே! எல்லோருக்கும் பெற்ற தாயரெல்லாம் பொய் அம்மாக்கள்தான்மித்யா மாதாக்கள்தான். நானே நிரந்தரமான, நிஜமான, மெய்யம்மாஸத்ய மாதா.”

ஒரு பிறவியோடு பொய்யாகிவிடாமல் ‘தொடர்ந்து வரும் தாயான்!’

ஒரு சமயம் சித்ராவதி தீரத்தில் பக்தர் புடைசூழ நம் பகவான் இனிமை பெருக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஓர் அடியார், “ஸ்வாமீ! உங்களை எப்படி மனமுருகிப் பிரார்த்திப்பது என்பதற்கும் நீங்களேதான் வாசகம் கொடுக்க வேண்டும்என்று வேண்டினார்.

உடனே நம் நாயகர், “இப்படிப் பிரார்த்தியுங்களேன்: ‘ஸாயி அம்மா! நாங்கள் யாவரும் உன் கர்ப்பத்தில்தான் இருக்கிறோம். கருப்பைக் குழவி உதைப்பதையும் அன்னை அன்புடன் பொறுப்பதே போல், நாங்கள் பாபம் புரிந்து உன்னை உதைப்பதையும் நீ கருணையோடு பொறுத்துத் தாங்கிக் கொள்கிறாய். குழந்தை நலனுக்காகவே தாய் ஸகலமும் செய்வதுபோல், எம்பொருட்டே எல்லாக் காரியங்களும் செய்யும் எம்பிராட்டி நீ. துர்க்கையாக வந்து எம் இடர் கடிந்து காக்கிறாய். ஸரஸ்வதியாக ஞானம் போதிக்கிறாய். லக்ஷ்மியாகித் தேவைக்குரிய அளவான செல்வத்தை நல்குகிறாய். அன்னபூர்ணியாக உணவூட்டுகிறாய். குழந்தை கேளாமலே தாய் ரக்ஷிப்பதுபோல் நீயே எங்களுக்கு உரியதை உரியபோது உவந்தளிப்பாய். எனினும் எங்கள் திருப்திக்காக வேண்டுகிறோம். எங்களது மனத்துக்கு பக்தி உணவும், அறிவுக்கு ஞான உணவும் ஊட்டுவாய்! எங்குமாய் யாவுமாய் உள்ள சக்தி நீயே எனக் காணும் திருஷ்டியை அருள்வாய்!” என்றார்.

தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன்
வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்

என்ற ஆப்தர் மொழிக்கு இதனிலும் ஆதரிச வடிவம் உண்டா?

***பேரன் பிறந்தது கேட்டுப் பூரித்த கொண்டம ராஜு தாம் கோயிலெடுத்த ஸத்யம்மா தேடிய நாயகனே பரம ஸத்ய அம்மாவாகத் தம் இல்லத்தில் வந்திருப்பதை உணர்ந்திருப்பாரா? இப்பிள்ளை இங்கு மெய்யாலுமே கற்பக விருக்ஷம் கொணரப் போவதை அநுமானித்தேனும் இருப்பாரா?