அத்தியாயம் – 2
ஆலவாயான ஆயர்பாடி
தாதாடு பூஞ்சோலைத் தத்தாய்! நமை ஆளும்
மாதாடும் பாகத்தன் வாழ்பதி என்?- கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேல் சிவபுரம் போற் கொண்டாடும்
உத்தர கோச மங்கை ஊர்
– திருவாசகம்
(தாதாடு – பூந்தாது உண்ணும்; தத்தாய் – கிளியே; மாதாடும் பாகத்தன் – அர்த்த நாரீச்வரன்; வாழ்பதி – வாழுகின்ற ஊர்; கோதாட்டி – பாராட்டி; பத்தர் – பக்தர்; சிவபுரம் கைலாஸம்; உத்தரகோச மங்கை – ஒரு பாண்டி நாட்டுத்தலம்.)
சிவ – சக்தியரின் பொலிவு மிக்கது ஆந்திர தேசம். மூன்று சிவ மூர்த்தங்கள் – த்ரி லிங்கங்கள் – எல்லை கட்டுவதாலேயே ‘த்ரிலிங்க தேசம்’ எனப் பெயர் பெற்று, பிறகு ‘தெலுங்கு தேசம்’ எனத் திரிந்த நாடு அது. நம் நாட்டில் அக்ஷராப்யாஸத்தின்போது குழந்தைகளுக்கு நாராயண அஷ்டாக்ஷரத்தை உபதேசிக்கிறோமெனில், தெலுங்கு நாட்டிலோ எழுத்தறிவிக்கத் தொடங்கும்போது ஸகல வகுப்புக் குழந்தைகளுக்கும் சிவ பஞ்சாக்ஷரத்தையே உபதேசிக்கிறார்கள். தெலுங்கு எழுத்து வலப்புறமாக அன்றி, இடப் பக்கமாகச் சுழித்தெழுதப்படுவது ஒரு சிறப்பாகும். இதை ‘வாமாவர்த்தம்’ என்பார்கள். வாம பாகம், வாம மார்க்கம் ஆகிய இடதுசாரி’ சமாசாரமெல்லாமே அம்பிகை சம்பந்தமானதல்லவா? அதனால் ஸ்ரீசக்ரத்திலேயே மாத்ருகாக்ஷரங்களாகப் பொறிக்கக் கூடிய அலாதித் தகுதி தெலுங்கு லிபிக்குத்தான் உள்ளது. ஆக, ஆந்திரத்தில் நாடு சிவ ஸ்வரூபம்; மொழி சக்தி ஸ்வரூபம்.
சிவ – சக்தி அவதாரமாக அடியார் பலர் உணரும் நம் சரிதநாதர், சிவ – சக்தி என்று தம்மைத் தாமே 1963 குரு பூர்ணிமையில் பிரகடனம் செய்து கொண்டவர், அவதரித்தது சிவ – சக்தி மயமான ஆந்திரத்தில்தான். மன்னாதி மன்னனாகத் தாம் கொடி கட்டிப் பறக்கப் போவதற்கேற்ப ‘ராயல சீமை’யில் பிறந்தார். பிறந்த மாவட்டம் அனந்தப்பூர் எனப்படும் அனந்தபுரம். மெய்யாலுமே மாவட்டம்தான். ஆதி அந்தமில்லாத பூரணம், அனந்தம், ஒரு பெரிய வட்டமாகவே மண்டலித்திருக்கிறது. திருக்கோவலூர் ஞானாநந்தகிரி ஸ்வாமிகள், இந்நூலாசிரியரின் நண்பர்களான ஒரு குடும்பத்தினரிடம், “புட்டபர்த்தி அனந்தப்பன் கேட்டதெல்லாம் கொடுப்பானே!” என்று மனஸாரக் கூறினாராம்.
குண்டலம் போல் மண்டலித்த அனந்தனையே இன்னொரு நிலையில் ஆதிசேஷன் என்ற அரவமாகவும் சொல்வார்கள்.
மாவட்டம் மட்டுமின்றிப் பிறந்த ஊரும் அரவத் தொடர்பு கொண்டது. இன்று பக்தர்கள் பூலோக கைலாஸமாக, பூலோக வைகுண்டமாக மதித்துத் தொழும் புட்டபர்த்தி என்ற சிறு கிராமத்துக்குத்தான் இவரைப் பெறும் அதிருஷ்டம் கிடைத்தது. ‘புட்டவர்த்தினி’ என்பதே ‘புட்டபர்த்தி’ என்றாயிற்றாம். ‘புட்ட’ என்றால் புற்று. ‘புட்டவர்த்தினி’ எனில், ‘புற்றுக்கள் விருத்தியாகியுள்ள ஊர்’ என அர்த்தம். ‘பர்த்தி’ என்ற பதம் ஊர் என்பதைக் குறிப்பதாக அநேகத் தெலுங்கு ஊர்ப் பெயர்களின் முடிவில் வருகிறது.
‘புட்ட’ என்பது தெலுங்கு மொழியில் பிறப்பதையும் குறிக்கும். புற்றுக்கள் வளர்ந்த புட்டபர்த்தியே மெய்யன்பரின் பிறப்பறுக்கும் “புட்டஹர்த்தி”யுமாகும்.
புற்றுவாழ் அரவத்துக்கு நம் மதத்தில் உள்ள மதிப்பு அலாதியானது. சிவனுக்கு அது அணி; திருமாலுக்கு அணை; விநாயகருக்குப் பூணூல்; ஸுப்ரம்மண்யத்தின் மாற்று வடிவே ‘ஸுப்பராயன்’; கண்ணனோடு பலராமனாக, ஸ்ரீராமனோடு இலக்குவனாக வருவது அதுவே. பாம்புக்கு ஏன் இத்துணை பெருமையெனில், அதுவே ஆதிபராசக்தி. புற்றுக்குள் பாம்பு காற்றை உண்டே வாழ்வதுபோல், வடிவு கொண்ட மஹாப் பிரபஞ்சப் புற்றுக்குள் பிராணசக்தியாக விளங்கும் பாம்பு அவள் தான். ஜீவர்களின் உடலான புற்றுக்குள் சுவாசம் விடும் ஆதாரக் குண்டலினிப் பாம்பும் அவளே. ஆன்ம லிங்கமான அரனை அரவாகி அணைத்திருப்பவள் அவளன்றி யார்?
நம் காவிய நாதரைப் பொதுவாக அனைத்துக் கடவுளராகவும், அதாவது ஸர்வ தேவ ஸ்வரூபமாகவும், குறிப்பாக ஷீர்டி ஸாயி பாபாவாகவும் அடியாருலகத்தில் சொல்கிறோம். இருந்தாலும் தனிப்பட அடியார்களை வினவினால் பெரும்பாலோர் அவரைக் கண்ணனாகவோ அம்பிகையாகவோ வழிபடுவதாகவே தெரிகிறது. கண்ணனின் நகரம் வட மதுரை. கண்ணி அங்கயற்கண்ணி அரசோச்சிய தலைநகரம் தென்மதுரை. “இது (வட) மதுரையாக, பிருந்தாவனமாக, திருப்பதியாக ஆகப் போகிறது” என்று நம் காவியபதியே புட்டபர்த்தியைப் பற்றிச் சொன்னதுண்டு.
வட மதுரை பாலாகப் பொழிந்த இடம். தென் மதுரையோ பாம்பு சுற்றி வளைத்து எல்லையிட்டு விஷ ஜ்வாலை வீசிய இடம். அதனாலேயே ஆலவாய் என்றும் ஹாலாஸ்யம் என்றும் பெயர் பெற்ற இடம். வட மதுரை அமுது; தென் மதுரை நஞ்சு என்று சொல்லி விடலாமா? கூடாது. ஏனெனில் ஆலஹால நஞ்சை ஈசன் உண்டபோது, அப்படி விழுங்கிய நெஞ்சைத் தொட்ட மாத்திரத்தில் நஞ்சையே அமுதாக்கினாளே, அந்த அம்ருத சைதன்ய
ரூபிணியான அம்பிகையைத்தான் இன்னொரு அவஸரத்தில் அவன் அரவாபரணமாக ஆக்கி அணிந்துகொண்டான். எதிரிகள் நெருங்கா வண்ணம் வங்கிய சேகர பாண்டியனின் தலைநகருக்குச் சுற்றுமதில் அமைக்கும் பொருட்டு இந்த அரவையே காவல் வேலியாக அமைத்தான். அதனால் அந்நகர் ஒரே போதில் ஆலவாய் என்ற விஷப் பெயரையும், மதுரை என்ற அமுதப் பெயரையும் பெற்றது.
நம் ஸ்வாமி பிறந்த சமயத்தில் புட்டபர்த்தி ஆலவாயாகத்தான் இருந்தது. ஊர் எல்லை நெடுகிலும் பாம்புப் புற்றுக்கள் தான். கிராமத்துக்குள்ளும் கால் வைத்த இடமெல்லாம் புற்று, புற்று, புற்றுத்தான்.
ஆனால், அதற்கு முன்பு ஒரு காலத்தில் இதுவே பால் பொழிந்த வட மதுரையாக, திரு ஆய்ப்பாடியாக இருந்திருக்கிறது! “ஆயர்பாடி” என்பதன் நேர் மொழிபெயர்ப்பான “கொல்ல பல்லி” என்றே அக்காலத்தில் இக்கிராமத்துக்குப் பெயர். கண்ணன் விளையாடிய புண்ணிய பூமியின் ஒரு பகுதியே எவ்வாறோ இங்கு தெறித்து விழுந்ததாக ஐதிஹ்யம். நந்தகுமாரன் நீந்தித் திளைத்த யமுனையே நந்திமலையிலிருந்து இங்கே சித்ராவதி நதியாக ஓடுவதாகக் கொள்ளலாம். இங்கும் சைவ – வைணவ ஸமரஸம். ஈசனின் நந்தியும் நந்த நந்தனனும் இணைகிறார்கள்.
ஆதியில் கொல்லபல்லி என்ற பெயருக்கேற்ப அவ்வூர் பசு வளத்துக்குக் குறைவில்லாதிருந்தது. அந்த நிலை அடியோடு மாறிய உத்பாதம் பிற்பாடு நிகழ்ந்தது. அந்தக் கதையைப் பார்ப்போம்:
மேய்ச்சலுக்குப் போகும் பசுக்களில் ஒன்று. நாள்தோறும் கொட்டிலுக்குத் திரும்புகையில் பாலையெல்லாம் இழந்து வெற்று மடியாகத் திரும்பிற்று. இது கண்டு வியப்பும் கோபமும் கொண்டான் ஆயன். இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க எண்ணி, ஒரு நாள் கண்குத்திப் பாம்பாக அந்த மாட்டின் சஞ்சாரத்தைப் பின்தொடர்ந்து கவனித்தான்.
பசு புற்றொன்றின் பக்கலில் போய் நின்றது. புற்றிலிருந்து நாகம் வெளிவந்தது. ஜம்மென்று படமெடுத்தது. தூக்கிய தலையைப் பசுவின் மடியில் வைத்தது. சகஜமாகப் பாலைப் பருகத் தொடங்கியது. பசுவும் சற்றுக்கூட பதற்றமின்றி வெகு இயல்பாகத் தன் கன்றுக்குப் பாலூட்டுவதே போல ஸர்ப்பத்துக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தது.
(அநேக ஸ்தல புராணங்களில் இந்தப் பாம்புப் பாலூட்டு பற்றி வருகிறது. நவீனர்களுக்கு இது கட்டுக்கதையாகத் தோன்றலாம். ஆனால் காப்டன் ஃப்ரெட்டீ கெஸ்ட் இதன் யதார்த்த உண்மைக்குச் சான்று பகர்கிறார். குதிரைப் படை வீரரான அவர் 1944ல் பெங்களூருக்குச் சமீபத்தில் இத்தகையதொரு காட்சியை நேரில் கண்டு தம் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.
விடிகிற நேரத்தில் கெஸ்ட் குதிரை மீது சென்று கொண்டிருந்தாராம். ஓரிடத்தில் குதிரை பயப்பிராந்தி அடைந்து இடக்குச் செய்தது. காரணத்தைக் கண்டறிய அவர் சுற்றிலும் பார்த்தபோதுதான் அந்த அதிசயக் காட்சி தென்பட்டது. ஒரு கொழுத்த நாக ஸர்ப்பம் பசுவொன்றின் பின்னங்கால்களைப் பின்னிச் சுற்றிக் கொண்டு, அதன் மடியில் நேராக வாய் வைத்து க்ஷீரபானம் செய்தது!
சற்றுத் தொலைவிலே பாம்பு இருந்த போதிலும் இவர் சவாரி செய்த குதிரை மிரண்டு குதித்தது. பசுவோ பாம்பின் ஸ்பரிசத்திலே கட்டுண்டு சிலையாக நிற்கிறது.
குதிரையைச் சரிப்படுத்துவதற்காக கெஸ்ட் சவுக்கைச் சொடுக்கினார்.
அரவம் கேட்ட அரவம் பசுவை விட்டுச் சரேலென விலகி ஓடிற்று அப்போதும், தன் சுபாவப்படிப் பசுவை ஒரு போடு போடாமல் அது போனது விந்தைதான்.
எனவே இது அன்று மட்டும் அகஸ்மாத்தாக நடந்த விஷயமல்ல என்றாயிற்று. அப்பாம்பின் புஷ்டியை நினைத்தபோது, இந்த ஜீரபானம் தற்செயலாக ஒரு நாள் நடவாமல், தினந்தினமும் நடந்து வந்திருக்க வேண்டும் என்று கெஸ்ட்டுக்கு உறுதிப் பட்டதாம்.
இனி விரியவிருக்கும் சரிதையில், “சத்தியம் கட்டுக்கதையை விட விந்தையானது” (Truth is stranger than fiction) என்ற படி அதிசயத்துக்கு மேல் அதிசயமாகப் படிக்கப்போகிறவர்களுக்கு துவுமே அவநம்பிக்கை யூட்டுவதற்கில்லை.)
“பாழும் பசுவே! நாள்தோறும் நாகத்துக்குப் பாலூட்டியா என்னை ஏமாற்றுகிறாய்?” என்று சினம் கொண்டான் ஆயன்.
ஆயினும் பசுதானே அவனது மூலதனம்? அதோடு, எந்த ஹிந்துவும் பசு வதையை எண்ணியும் பார்க்க மாட்டானே! எனவே ஆயன் ஆத்திரம் முழுதையும் பாலுண்ட பாம்பின்பாலே திருப்பிக் கொண்டான். அருகேயிருந்த ஒரு பாறாங்கல்லை எடுத்துத் தலைக்கு மேல் தூக்கி வீசினான் பாம்பை நோக்கி.
ஆனந்தமாகப் பால் மடுத்து முடித்த அரவம், அடடா, இதோ, அடுத்த நொடியில், அடியுண்டு நசுங்கித் துடித்தது.
மரிக்குமுன் அது மனம் கொதித்துச் சாபமிட்டது. “இனி இந்த ஊரில் யாதவர்கள் நசிக்கட்டும். பசுப் பெருக்கமும் பால் வளமும் குன்றி ஒழியட்டும். சாகும் என்னொருவனுக்காகப் பழி தீர்க்க இவ்வூரெங்கிலும் நாகப்படை செழித்தோங்கட்டும். இங்கு மண்ணெல்லாம் புற்றாகட்டும்” என்று சூளுரைத்து மாண்டது நாகம்.
இதன்பின் தான் கொல்லபல்லி புட்டபர்த்தியாக மாற்றுருவம் கொண்டது.
புற்றிடம் கொண்ட ஒற்றியீசனாக இதையே தம் ஜன்மபூமியாகவும் ராஜதானியாகவும் உகந்தார் நம் சரித ஸ்வாமி.
திரு ஒற்றி ஈசன் மட்டுமல்ல, “பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்” என்ற வாக்கில் வரும் திரு ஆரூரனும் புற்றிடம் கொண்ட பிரான்தான். புற்று மண் பிருத்வீ தத்வத்தைக் குறிப்பது. ஆகாச ரூபியான ஆண்டவன் மிகவும் ஸ்தூலமாக வருவது பிருத்வியாகத்தான். ஆரூர் போலவே பிருத்வீ க்ஷேத்ரமாக உள்ளது காஞ்சி. இங்கே பிலம் என்ற புற்றிலே காமாக்ஷி ஆகாச ரூபிணியாக இருக்கிறாள். விண்ணவன் மண்ணுக்கு வந்து அவதரிப்பதற்குப் ‘புற்றுவர்த்தினி’யைவிடப் பொருத்தமான இடம் இல்லைதான்.
ஸ்தல மாஹாத்மியத்தை மேலும் கொஞ்சம் பார்ப்போம். பிரபஞ்சத்தின் இதயமாகத் தில்லையும், திருவருணையும், கச்சியும், காசியும் கூறப்படுவதே போல், புட்டபர்த்தியையும் ஐந்தாவதாகச் சேர்த்துக் கொள்ளலாம். இங்கு இதயம் என்பது அகண்ட ஆத்ம ஆகாசம். புற்று என்ற மண்கூடு சரீர தத்வம். உடல் வாழ உயிர் வேண்டும். உயிராயிருப்பது மூச்சுக் காற்றே. காற்றை உண்ணும் திறன் பெற்ற புற்றரவம் மூச்சின் ஆதாரமான பிராண சக்தியாகும். அந்த சக்திக்கும் ஆதாரம் எது என்று ஆழ்ந்து பார்க்கும்போது, வெளிக் காற்றானாது ஆகாயத்தில் பிறப்பது போல், மூச்சும் ஓர் ஆகாயத்தில்தான் பிறக்கிறதெனத் தெரியும். அந்த ஆகாயத்திலேயே ஒருமைப்பட்டு நின்றால் மூச்சும் அடங்கி மூல சத்தியத்தோடு ஒன்றுகின்ற ஸமாதிய நுபவம் கூடும். விளக்கவொண்ணாத ஏதோ ஒரு விதத்தில், புட்டபர்த்தி க்ஷேத்திரத்தை ஸ்மரிப்பதால், இந்த மூச்சும் பேச்சும் அடங்கிய “ஹ்ருதய”த்தின் சாந்தச் சாயலை அநுபவிக்க முடிகிறது. (இவ்வநுபவத்துக்கு நம் ஸ்வாமியிடமிருந்தே அற்புத ஒப்புதல் கிடைக்கிறது பஜனைப் பாடல்களில் “பர்த்தி விஹார” என வரும் இடங்களில் அவர் “ஹ்ருதய விஹார” என்றே மாற்றிப் பாடுவதில்.)
உடலாம் அன்னமய கோசத்துக்கு மீதாக, உத்தரமாக, உள்ள பிராணமய கோசம்தான் மூச்சுப் பாம்பு சஞ்சரிக்கும் உத்தர கோசமங்கை. சிவபெருமானின் தலைநகரமாகத் திருவாசகம் வர்ணிக்கும் உத்தரகோசமங்கையின் பிறிதொரு வடிவம்தான் ‘பர்த்தி’ எனப் பார் புகழும் புட்டபர்த்தி.
புகழ் ஸமீப காலத்தில்தான். 1930களின் பின்பாதி வரை அவ்வூர் வெளியார் அறியாக் குக்கிராமமாகவே அக்ஞாத வாசம் செய்து வந்தது. தேசப்படம் எதிலும் அதற்கு இடமில்லை. ரயில் நிலையம் கிடையாது. (இன்றும் கூடத்தான்). அன்று அது பஸ் மார்க்கத்திலும் இல்லை. சித்ராவதி ஆற்றை (அது மணற்படுகையாக உள்ள காலமே அதிகம்) காலாலோ கட்டை வண்டியாலோ கடந்துதான் அவ்வூரை அடைய முடியும்.
அநாமதேயமாயினும் அதன் அழகுக்கு என்றுமே குறைவில்லை. நாற்புறமும் குன்றுத் தொடர்கள் சூழ்ந்து தந்தையென கம்பீரமாகப் பாலிக்க, அன்னையெனக் குளிர்ந்தோடும் சித்ராவதியின் உள்ளூற்று அமுதைப் பருகிக்கொண்டு பச்சென வளரும் பச்சைக் குழந்தை புட்டபர்த்தி.
புட்டபர்த்தி போலவே சித்ராவதியும் பாரமார்த்திகமான உட்பொருள் படைத்ததாகும். இப்படிப்பட்ட ரஹஸ்யார்த்தங்களை (esoteric significance) கூறாவிடில் இந்நூல் நிறைவுறாது.
சுவாஸம் எங்கே பிறக்கிறது என்று ஆய்ந்து, ஆழ்ந்து நோக்கினால் அப்பிறப்பிடத்திலேயே மனம் ஒடுங்கிவிடும். ஆத்மாகாசமான அப்பிறப்பிடத்தைத்தான் அநுபூதிச் செல்வர்கள் “ஹ்ருதயம்” என்பர். இதிலே ஒன்றி நிற்பதுதான் மோக்ஷம். மூச்சு பிறக்கும் இதே இதயத்தில் தான் எண்ணமும் பிறக்கிறது. அதாவது பிராணன், மனம் இரண்டும் ஒரே ஆதாரத்தில்தான் தோன்றுகின்றன. மூச்சினுடைய மூலம் எங்கே என்று ஆராய்வதால் இதயப் பெருவெளியில் கரைவது போலவே, எண்ணம் முளைப்பது எங்கே என ஆழ்ந்து விசாரம் செய்தாலும் மனம் அங்கே ஒடுங்கிவிடும்; ஆத்மா மட்டில் ஸ்வயம் பிரகாசமாகத் துலங்கும்.
புட்டபர்த்தி என்ற ஊர் ஆத்மனைப் பிராண சக்தியின் மூலமாகச் சுட்டுகிறதெனில், சித்ராவதி ஆறோ அதே ஆத்மனை மனோ சக்திக்கு மூலாதாரமாகக் காட்டிக் கொடுக்கிறது. சித்ர விசித்திரமாக அலை பாய்ந்து கொண்டிருக்கும் சித்தம்தான் சித்ராவதி. பர்த்தியில் இந்நதி பெரும்பாலும் மண்ணுள் வற்றிச் சுவறி இருப்பதால் சிந்தனை ஓட்டம் நின்றுவிட்ட ஆத்மாநுபவத்திற்கு வழிகாட்டப்படுகிறது.
சித்த – சித்தத்தை; ராவம் – அழ வைப்பது (அதாவது வருத்தி, நீக்குவது) தான் சித்ராவதி. சித்தம் நின்றபின் சித் என்ற தன்னுணர்வு மட்டுமே விளங்குகிறது. சித்–தன்னுணர்வை; ராதி – தருகிறது. சித்ராவதி.
அந்த உணர்வே ஆனந்தம் எனப்படும் பேரின்ப வீடாகும்.
இறைவனின் ஊர் உத்தரகோச மங்கை எனத் திருவாசகம் சொல்வது பர்த்திக்குப் பொருந்துகிறதெனில், அவனது ஆறு பற்றி,
வான்வந்த சிந்தைமலம் கழுவ வந்திழியும்
ஆனந்தம் காண் உடையான் ஆறு
என்று அது புகல்வதும் சித்ராவதிக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.
சித்ராவதீ தீர வாஸி ராம்! ஜய
பர்த்தீ புரீசா ஸாயிராம்!
என்று பாடுகையில், அலை அலையான நம் எண்ண ஓட்டங்களின் இக்கரையில் அமைதி மயனாகவும், நம் உடலத்தின் உட்குகையில் உயிர் மயனாகவும் இலங்கும் ஆத்ம ஸ்வரூபத்தை உன்னி உணர்வோமாக!
***
இன்று உலகின் நாற்கோடிகளிலுமுள்ள கோடானு கோடி பக்தருக்குப் பிறந்தகத்துக்கு மேலாக விளங்கும் “பிரசாந்தி நிலயம்” தோன்றுமுன், பர்த்திக் கிராமத்துக்கு மையமாக இருந்தது வேணு கோபால ஸ்வாமி ஆலயமே. அங்கு குடிகொண்ட கோபால ஸ்வாமி விக்கிரஹம் – அன்று பாம்பை நசுக்கி வதைத்த அதே பாறாங்கல்தான்!
அந்தக் கல்லிலே அரவத்தின் குருதி கொப்பளித்து. அச்சிவப்புத் தடம் ஆழப் பதிந்துவிட்டது.
நேராக மாட்டு மடியிலிருந்து பால் மடுத்த அரவம் யார்? பிராணனையே இசையாக்கிப் புல்லாங்குழல் என்ற புற்றின் வழியே புன்னாகவராளியாக ஊதும் கோபாலன்தான் இப்படி அரவமாக வந்தான். இந்தப் பெரிய உண்மையை எளிய கிராமவாசிகள் எவ்வாறோ அறிந்துவிட்டனர். தங்களது எளிமையாலேயே ஒருவேளை அறிந்திருக்கலாம்.
சிலுவையில் அறையுண்டாலும் மெய்யான கிறிஸ்து அதனால் மரிக்கவில்லை. மாறாக அதுவே அவரது மெய்யான உருவை வெளிக்கொணர்ந்தது. அதுபோல, கல்லடிபட்டு அந்தப் பாம்பு இறந்ததால் அமரக் கண்ணன் மரித்துவிடவில்லை. மாறாக இதனாலேயே அவனது கருணைச் சாறான ரத்தம் உலகுக்கு நலன் பயக்க வெளிப்படப் படிந்துவிட்டது. கிறிஸ்துவின் ரத்தத்துக்குக் கூறப்படும் அன்புச் சிறப்பு தெரிந்ததுதானே? இதனால்தானோ இன்றும் ரக்த வஸ்திரதாரியாக நம் கிருஷ்ண – கிறிஸ்து ஸ்வாமி விளங்குவது?
செம்மைத் தடம் கொண்ட கல்லையே கோபால ஸ்வாமியாகப் பிரதிஷ்டை செய்து, அதற்குக் கோயிலெடுத்து வழிபட்டு, பழைய சாபம் தீரும் நாளைக் கிராமத்தார் எதிர்பார்த்திருந்தனர்.
பிற்காலத்தே நம் ஸாயிக் கண்ணன் அக்கல்லின் மீது சந்தனக் குழம்பை அப்பச் செய்து, “இதோ பாருங்கள்” என்று காட்டினார். பாம்பாக வந்த கோபாலாம்சத்தின் பழி தீர்க்கும் வெம்மை சந்தனத்தில் தணிந்ததோ, அல்லது இந்தப் பூர்ண கோபாலனின் சங்கற்பத்தில் தணிந்ததோ, குழலூதும் கண்ணனின் திவ்ய வடிவம் அக்கல்லிலே புடைப்புச் சிற்பமாக விம்மி எழுந்ததாம். பலர் இக்காட்சியைக் கண்ணாரக் கண்டிருக்கிறார்கள்.
(கோபாலஸ்வாமி ஆலயத்தைத் தம் பொன்விழாவின்போது நம் கதாநாதர் சிறப்புறத் திருத்தியமைத்து, திருத்தேரும் செய்து வைத்திருக்கிறார்.)
இவரது அவதாரத்துக்கு முன், பாம்பின் சாபப்படி, புட்டபர்த்தியில் பசுச் செல்வம் அடியோடு அழிந்தேயிருந்தது. ஊரெங்கிலும் பாம்பு மயமாக இருக்கையில் எப்படிப் பசுவை வைத்து ரக்ஷிப்பது? பக்கத்துக் கிராமங்களிலிருந்துதான் இவ்வூருக்குப் பால் வந்தாக வேண்டும். தப்பித் தவறி பர்த்திக்குப் பசு பிடித்து வந்தால் அதற்குக் கோமாரி முதலிய நோய் பீடித்துக் கதையை முடித்துவிடுமாம்.
ஸ்வாமி அவதரித்ததிலிருந்து ஆச்சரியமான முறையில் நிலைமை மாறலாயிற்று. புற்றுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப் போகலாயின. பிற்காலத்தில் “கான்ஸர் கான்ஸல்” (Cancer cancel) என்று கூறிய மாத்திரத்தில் பலரது புற்று நோயைத் தீர்த்தவர், முதலில் தமது ஊரின் ‘புற்று நோயை’யே தீர்த்திருக்கிறார்! பாம்புப் பயம் இல்லை என்றபின் இங்கும் பசுக்களை வைத்து வளர்க்கலாமே எனப் பரீட்சை பார்க்கும் தைரியம் பிறந்தது. இப்போது நோய் எதற்கும் பசுக்களைப் பீடிக்கும் தைரியம் இல்லை. எனவே பர்த்தியிலும் பசு வாழ முடியும் என்றாயிற்று. ஸாயி கோபாலன் கல்லிலே வேணுகோபாலனைக் கொண்டு வந்ததிலிருந்து கோ ஸம்ருத்தி மேலும் செழித்தது. இன்றோ கேட்கவே வேண்டாம். ஸ்வாமி அவதரிக்கு முன் பசுவைப் பற்றிக் கனவுகூடக் காணமுடியாத ஊர் இது என்று நம்ப முடியாதபடி, ஆநிரை நிறைந்த அற்புத கோகுலமே அங்கு உருவாகியுள்ளது. நம் நவ கோவிந்தன்தான் 1975 கோகுலாஷ்டமியன்று ஏராளமான பசுக்களை முன்னின்று அழைத்து வந்து இந்த கோகுலத்தை நிறுவி, ‘அந்த கோகுல நந்தனனே நான். அவனது ஆய்ப்பாடியே இப் புட்டபர்த்தி’ என்று நிலைநாட்டியிருக்கிறார். (தம் கிருஷ்ணத்வத்தைக் காட்டுவதற்கேபோல் பெங்களூர் ஒயிட் ஃபீல்டில் தமது இருக்கைக்கு “பிருந்தாவனம்” எனப் பெயரிட்டுள்ள இவர் அங்கும் ஒரு கோகுலம் வைத்திருக்கிறார்.1)
குக்கிராமமாயினும் ஒருங்கே வட – தென் மதுரைகளாக இருக்கும் மஹா க்ஷேத்திரமே புட்டபர்த்தி என்று தெரிகிறதல்லவா? அதனால்தான் இந்த அநாமதேயப் பட்டிக்காட்டைத் தன் ஜன்மஸ்தலமாக ஐயன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
2 சில ஆண்டுகளுக்கு முன் ‘பிருந்தாவனம்’ புத்தமைப்பு பெற்று ‘த்ரயீ பிருந்தாவனம்’ ஆகியுள்ளது. ‘த்ரயீ’ என்பது வேதங்களையும், வேறு பல புனித மும்மைகளையும் குறிப்பதாக ஸ்வாமி விளக்கினார்.
***
ஆம், தமது பிறப்பிடம், குலம், குடி, தாய் தந்தை எல்லாவற்றையும் தாமே தேர்வுசெய்து பிறந்ததாகத்தான் அவர் சொல்கிறார் திருமால் தானே பெற்றோரைத் தேர்வு செய்து கொண்டு தாசரதியாகப் பிறந்தான் (பிதரம் ரோசயாமாஸ்) என்று வால்மீகி கூறுவதே போல.
உங்கள் அனைவரின் பிறப்புக்கும் இறைவனின் அவதாரத்துக்கும் நிரம்ப மாறுபாடு உண்டு. நீங்கள் உங்களுடைய பூர்வ பாப புண்ணியங்களை முன்னிட்டே பிறக்கிறீர்கள். ஆனால் அவதாரங்களோ ஹிரண்யகசிபு போன்ற தீயோர்களின் பாபங்களையும், பிரஹ்லாதன் போன்ற தூயோர்களின் புண்ணியங்களையும் முன்னிட்டே நிகழ்கின்றன. அவதாரங்களுக்கு பூர்வ கர்மச் சுமை ஏதும் இல்லை. மற்ற ஜீவர்களைப்போல் கர்ம பலனை அனுபவிப்பதற்காக அவை தோன்றவில்லை. தர்ம ஸம்ஸ்தாபனத்துக்காகவே உலகில் அறத்தை நிலை நிறுத்துவதற்காகவே அவதாரங்கள் ஏற்படுகின்றன.
“ஒரு மாலை உள்ளதெனில் அதில் பற்பல வண்ண மலர்கள் கோக்கப்பட்டிருக்கின்றன. பலப்பல செடி கொடிகளிலிருந்து மாலாகாரன் மலர்களைத் திரட்டி ஹாரமாகத் தொடுக்கிறான். அவன் மாலை தொடுக்கு முன்பே இங்கிங்கிருந்து இன்னின்ன புஷ்பங்கள் எடுக்க வேண்டுமெனத் திட்டமிட்டு விடுவான். இவ்வாறேதான், ஓர் அவதாரம் நிகழ்கிறதெனில், அது பிறக்கு முன்பே அதன் சரிதத்தின் ஸகல நுணுக்கங்களும் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. ஒரு நாடகம் மேடையில் நடிக்கப்படு முன்னரே கதையாக முற்றிலும் உருவாக்கப்பட்டு விடுகிறதல்லவா? இதுபோலவே, அவதரிக்கும் இறைவனால் அவதார சரிதமும் முன்னதாகவே சங்கற்பிக்கப்பட்டு விடுகிறது. ஆண்டவனின் அவதார வரலாறு ஒரு வண்ண வண்ண மாலையே ஆகும். எவரெவரோ எப்பொழுதெப்பொழுதோ பெற்ற வரங்கள், சாபங்கள் ஆகியவற்றை நிறைவேற்றத்தக்க நிகழ்ச்சிகளை நானா மலர்களாக்கி இக்கதம்பக் கோதையை இறைவன் தொடுத்துக் கொள்கிறான்” இவ்வாறு கூறுவார் நம் சரிதப் பூங்கோதையின் ‘மாலாகாரர்.’
மேலும் சொல்வார்: “நீங்கள் ஓரளவுக்கு உங்களுடைய மனைவி அல்லது கணவன், நண்பர்கள், யஜமானர்கள், பணியாட்கள் ஆகியோரைச் சுதந்திரமாகத் தேர்வு செய்து கொள்வதுபோல இருக்கிறது. ஆனால் நான் என் பெற்றோரையே முன்கூட்டித் தேர்வு செய்துகொண்டு பிறந்தவன்.”
இதன்படியே எந்தப் பூர்வ புண்ணியத்தின் பலனாகவோ, புட்டபர்த்தியில் ஒரு குறிப்பிட்ட குடியில் லோக கல்யாண தீபம் வந்து சுடரிட்டது!
மன்னு நாரண நம்பி பிறந்தமை
பன்னு பாடல் வல்லார்க்கில்லை பாவமேஎன்ற ஆழ்வார் வாக்குப்படி அவதாரனின் ஜனன கட்டத்தைப் படிப்பதே புண்ணியமாகும்.