ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் எங்கெல்லாமோ சென்று விட்டு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்ததும் சொந்த வீட்டிற்கே திரும்பி வந்து விட்டதைப் போல் உணர்ந்தார்.
அன்னை மரகதம் மரணப்படுக்கையில் கூறிய “அருணாசலா” என்ற சொல், மைந்தனின் இதயத்தில் ஓங்கார நாதமாய் ஒலித்து, எதிரொலித்தது. அந்த ஒலியே உள்ளொளியாக உருமாறி, பேரண்டப் பெருவெளியெங்கும் படரும் பேரொளியாய் வழிகாட்ட, அருணையம்பதி வந்து, அருளொளி பரப்பும் அருணாசலத்தை அடைக்கலம் அடைந்தார் அவர்.
தாம் கற்பனையில் கண்டு, சித்திரமாகத் தீட்டி, தியானத்தில் இறுத்தி வழிபட்ட மாமலையை கண்ணெதிரில் கண்டதும், தன் நிலை உணர்ந்து, தன்னை மறந்து, “தான்” கரைந்து, “அது”வாகி விட்டார்.
மலையாக வீற்றிருக்கும் அருணாசலமே, அர்த்தநாரீசுவரராக, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாராக ஆலயத்தினுள் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தைக் கண்டு மனத்தைப் பறி கொடுத்தார் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அம்மையையும், அப்பனையும் எந்நேரமும் கண்டு களித்துக் கொண்டிருந்தார். சிவலிங்கமாய்க் கோயிலில் சமாதி நிட்டையில் அமர்ந்திருபார். சட்டென்று எழுந்து, உற்சவ மூர்த்தியாய்த் தெருவில் அலையத் தொடங்கி விடுவார். உலகைத் துறந்து, உடலை மறந்து, உன்மத்தராய், ஞானப் பித்தராய், மோன தவமியற்றிக் கொண்டிருந்தார்.
அருணாசலத்துடன் ஐக்கியமாகி விட்ட பிள்ளையைப் பற்றி அஞ்ஞானத்தின் காரணமாக சிற்றப்ப ராமசுவாமி ஜோசியரும், சித்தி கல்யாணி அம்மாளும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தனர். “குழந்தை எங்கு இருக்கிறானோ? எப்படி இருக்கிறானோ? சாப்பிட்டானோ? தூங்கினானோ?” என்று எந்நேரமும் ஏக்கமுற்றிருந்தனர். பெற்றவளைக் காட்டிலும் அதிகமாக பாசம் வைத்து வளர்த்து விட்டதால், பிரிவாற்ராமை தாங்காமல் கலக்கமுற்றாள் கல்யாணி அம்மாள். சேஷாத்ரியின் கதியை நினைத்து நினைத்து மனத்திற்குள் மறுகினாள், உருகினாள், உருக்குலந்து போனாள். ஊண், உறக்கம் மறந்து, உடல் மெலிந்து, உள்ளம் நலிந்து உயிருக்காகப் போராடியவளை, உர்றார் உறவினர் துயரக் கண்ணீரோடு சூழ்ந்து நின்றனர். காலனுக்குக் கருணை பிறந்தது. கடிதில் வந்து கல்யாணியை அழைத்துச் சென்று விட்டான்.
மனைவியை இழந்து, மனமுடைந்து ஆறுதல் கூறுவாரின்றி அமர்ந்திருந்த ராமசுவாமி ஜோசியருக்கு, அத்தான் ஆத்துவாம்பாடி வெங்கடரமண சாஸ்திரியாரிடமிருந்து வந்த ஒரு கடிதம் சற்று நிம்மதியை அளித்தது. அக்கடிதத்தில் அவர், ஸ்ரீ சேஷாத்ரி திருவண்ணாமலையில் சுற்றிக் கொண்டிருக்கும் செய்தியைத் தெரிவித்திருந்தார். உடனே பறந்து சென்று, “குழந்தையைக் காண வேண்டும்” என துடித்தார் ஜோசியர். எப்பாடு பட்டாவது அவரை மீண்டும் காஞ்சிபுரத்திற்கே திரும்ப அழைத்து வந்து விட வேண்டும் என்று முடிவு செய்தார்.
மறுநாளே ராமசுவாமி ஜோசியரும், சேஷாத்ரியின் தம்பி நரசிம்ம ஜோசியரும் திருவண்ணாமலைக்குப் புறபட்டுச் சென்றனர். கோயில் குளமெல்லம் தேடினர். சத்திரம், சாவடிகளிலெல்லாம் நுழைந்து புறப்பட்டனர். எங்கும் சேஷாத்ரியைக் காண முடியவில்லை. கடைசியில் ஏதோ ஒரு தெருவில் அவரைக் கண்டனர். அவர் அப்போது இருந்த கோலம் ராமசுவாமி ஜோசியரின் வயிற்றைக் கலக்கியது. தம்பியின் கண்களைக் குளமாக்கியது.
அழுக்குத் துணி, பரட்டைத் தலை, ஒட்டிய கன்னங்கள், குழி விழுந்த கணகள், வாடிய வயிறு, சோறு தண்ணீர் இல்லாமல், பைத்தியக்காரனைப் போல் தனக்குத் தானே ஏதோ பெசிக் கொண்டு, கவனிப்பாரற்ரு சென்ற சேஷாத்ரியை அப்படியே கட்டிக் கொண்டு “ஓ” வென்று கதறி விட்டார் ராமசுவாமி ஜோசியர். “சேஷு, குழந்தே, உன் சித்தி போயிட்டாடா. அவ கொடுத்து வச்சவ.உன்னை இந்த கோலத்தில் பார்க்காமே போய்ச் சேர்ந்துட்டா அந்த மகராசி. நான் என்ன பாவம் பண்ணி இன்னும் உயிரோட இருக்கேனோ தெரியலே….. அப்பனே…. நீ என்னோட இப்பவே காஞ்சிபுரத்துக்கு வந்துடு. இன்னும் கொஞ்ச நாள்தான் நான் உயிரோடு இருப்பேன். அதுக்கப்புறம் நீ எங்கேயாவது போ!…….. இப்படி நீ அனாதை மாதிரி பட்டினியா அலைஞ்சிண்டிருக்கிற போது, எனக்குச் சோறு இறங்குமா> …… வந்துடு….. சொல்றதைக் கேளு! ……” என்று நடுத்தெருவில் நாலு பேர் பார்க்கிறார்களே என்ற கூச்சம் கூட இல்லாமல் கதாறினார். நரசிம்ம ஜோசியரோ, :அண்ணா, அண்ணா” என்று அலறியபடி சுவாமிகளைத் தழுவிக் கொண்டார். கன்னத்தைத் தடவிக் கொடுத்தார். அவிழ்ந்திருந்த வேஷ்டியை கட்டி விட்டார். தலையைக் கோதி விட்டார்.
சேஷாத்ரி சுவாமிகள் உணர்ச்சி வசப்பட்டதாகவே தெரியவில்லை…. கண்கள் சூன்ய வெளியை வெறித்துப் பார்க்க, உதடுகள் ஏதோ முணுமுணுத்தன. பந்த பாசங்க்களை என்றோ அறுத்துக் கொண்டு விட்டவருக்கு, உறவினரின் அன்பும் பரிவும் இரும்புத் தளைகளாக கனத்தன. அவர்கள் பிடியில்ருந்து த்பபித்துக் கொண்டு மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தார் அவர்.
ஊர் ஜனங்கள் வேடிக்கை பார்த்து நின்றனர். அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. “பாவம், பையனைப் பார்த்தால், களையா, நல்லா இருக்கான். புத்திசுவாதீனம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடி வந்துட்டான் போலிருக்கிறது. பெத்தவங்க வயிறு பத்தி எரியாதா?” என்று பேசிக் கொண்டார்கள். அன்றுதான் முதன் முதலில் திருவண்ணாமலைவாசிகள் தங்கள் ஊரில் இப்படியொரு ஜீவன் நடமாடிக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டார்கள்.
ராமசுவாமி ஜோசியர் கடையில் பட்சணம் வாங்கி வைத்திருந்தார். “இதையாவது சாப்பிடேன்” என்று சேஷாத்ரியிடம் வாஞ்சையுடன் கொடுத்தார். அதில் கொஞ்சம் எடுத்துச் சாபிட்டு விட்டு கையை அழுக்கு வேட்டியில் துடைத்துக் கொண்டே திரும்பிப் பார்க்காமல் வேகமாய்ப் போய் விட்டார் அவர்.
ராமசுவாமி ஜோசியரும், நரசிம்ம ஜோசியரும் நம்பிக்கையை இழக்கத் தயாரில்லை. சேஷாத்ரி மனம் மாறி ஒரு வேளை காஞ்சிபுரம் திரும்பி விடலாம் என்று நினைத்து இரண்டு நாட்கள் திருவண்ணாமலியிலேயே தங்கி, சேஷாத்ரியைப் பார்த்த போதெல்லம் அவர் எதிரில் போய் நின்றனர். அமிருதக் கடலில் மிதப்பவரை சம்சாரக் குட்டையில் அமிழ்த்தி விட முயன்றார்கள்.
பேரருளின் திட்டம் வேறாக இருக்கும் போது, பெற்றவரின் திட்டம் பலிக்குமா? இறுதியில் நம்பிக்கையை இழந்து இருவரும் காஞ்சிபுரத்துக்கே திரும்பி விட்டனர். திருவண்ணாமலையிலிருந்து புறப்படுவதற்கு முன், ராமசுவாமி ஜோசியர் அன்னசத்திரத்தின் மணியக்காரரிடம் சென்று, சேஷாத்ரி அங்கு வரும் போதெல்லாம் அவருக்கு வயிறு நிறைய சோறு போடும்படி கேட்டுக் கொண்டார். மக்களின் ஆன்மீகப் பசியைப் போக்குவதற்காக அவதரித்தவர்களின் வயிற்றுப் பசியைப் பற்றி உலகம் கவலைப் படத்தான் செய்கிறது.
இத்துடன் சுவாமிகளுக்கு உறவினர் தொந்தரவு தீர்ந்து விட்டது. அவருடைய மகிமை புரியப் புரிய ஊர் மக்களின் தொந்தரவு அதிகமாயிற்று. உள்ளத்தால் அவர் வாழ்ந்த உலகத்திற்கும், உடலால் வாழ்ந்த உலகத்திற்கும் தான் எத்தனை வேற்றுமை! அவரது சிந்தனை, சொல், செயல் மூன்றும் அவர் கண்டு களித்த உலகத்திற்கேற்ப அமைந்திருந்தன. மனமும், புத்தியும், பிரும்மத்தில் லயித்து விடும் பெரு நிலை அது. அந்நிலையைப் புரிந்து கொள்ள முடியாத உலகம், இத்தகைய மகான்களுக்கு பைத்தியம் என்று எளிதாகப் பட்டம் சூட்டி விடுகிறது. இந்தப்பைத்தியக்கார உலகத்தைக் கண்டு அந்த மகான்கள் பரிதாபப்படுகிறார்கள்.
இப்படிபட்ட “பைத்தியம்” இந்தப் “பைத்தியக்கார” உலகத்தில் நாற்பது ஆண்டு காலம் நடமாடி விட்டு, லீலைகள் பல புரிந்து விட்டு, தன் சத்திய நிலையை பல்லாயிரம் மக்களுக்கு உணர்த்தி விட்டு, நம் கணகளிலிருந்து மறைந்து விட்டார். நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ காஞ்சியில் அவதரித்து, பராசக்தியின் மடியில் தவழ்ந்து, தபோதனராய் அருணாசலத்தை வலம் வந்து, அந்த ஒளியுடன் ஒன்றி, அவ்னைக்கோர் அருட்சுடராய், கருணைக் கனலாய் இன்றும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் தமது பத்தொன்பதாவது வயதில், அதாவது 1898-ம் ஆண்டில் அருணாசலத்திற்கு வந்தார். ஏழு ஆண்டுகள் கழித்து 1896-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி, மார்க்கண்டேயனின் வயது நிரம்பிய ஒரு சிறுவர் மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அவரும் அருணாசல ஒலி உள்ளத்தில் ஒலிக்க, அதைத் தேடி வந்தவர்தான். ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அப்பனின் அரவணைப்பில் திளைத்து விட்டு, சரீரத்தை சட்டையென களைந்தெறிந்து விட்டு அருட்பெரும் ஜோதியோடு கலந்து விட்டவர்.
சேஷாத்ரி சுவாமிகள் சாதாரணமாகப் பக்தர்கள் கணகளுக்கு அகப்பட மாட்டார். அப்படி அகப்பட்டாலும் உபதேச மொழிகள் கூருவது மிக அபூர்வம். ஆனால், ரமணருடைய பக்தர்கள் தம்மிடம் வந்தால், மிகவும் சந்தோஷப்படுவார். அவர்கள் உயர்நிலை எய்துவதற்காக இரண்டு வார்த்தைகளாவது பேசி அனுப்புவார்.
லட்சுமியம்மாள் என்ற பெண்மணி திருவண்ணாமளைக்கு வந்து, மலையிலிருந்த ரமண மகரிஷிக்கு ஒரு வாரம் வரை தொண்டு புரிந்து விட்டு, ஊருக்குப் புரப்படத் தயாரானாள். ஆனால், சேஷாத்ரி சுவாமிகளைத் தரிசிக்காமல் செல்ல வேண்டியிருக்கிரதே என்ற வருத்தம் அந்த அம்மாளுக்கு. அதை எச்சம்மாளிடம் தெரிவித்தார். ஒரு வாரமாக இங்கே இருந்தும் என்னால் சேஷாத்ரி சுவாமிகளைத் தரிசிக்க முடியலே. எங்கேயெல்லாமோ சுற்றினேன். அவர் என் கண்களுக்குத் தென்படவேயில்லை…..” என்று குறைப் பட்டுக் கொண்டாள். மறுநாள் லட்சுமியம்மாள் ரமணாசிரம் செல்லும் வழியில் கோயிலுக்குச் சென்றாள். அங்கே சுவாமிகள் இருப்பதைக் கண்டு, கீழே விழுந்துகும்பிட்டாள். இந்த மகானுக்குச் சேவை செய்ய எனக்கு கொடுக்க வைக்கலேயே” என்று மனத்திற்குள் நினத்துக் கொண்டாள். அவ்வளவுதான்! பிறர் மனத்தில் உள்ளதை அபடியே அறியும் சக்தி வாய்ந்த சேஷாத்ரி சுவாமிகள், “இங்கே என்றால் என்ன, அங்கே என்றால் என்ன” என்று கூறியபடி சென்று விட்டார்.
ரமணரும் தாமும் ஒருவரேயென்பதை எத்தனை அழகாக சுவாமிகள் சொல்லி விட்டார்…..!
சோமசுந்தர சுவாமி என்பவர் ரமணரின் சீடர். ரமணாசிரமத்தில் எதிர்பார்த்த சாந்தி கிடைக்காததால், அவர் ரமணரை விட்டு ஒரு வாரம் தனியாக இருந்தார். வேறு யாரிடமாவது சென்றால்தான் தனக்கு நல்லுபதேசம் கிடைக்கும் என்றும், ஞானமார்க்கத்திற்கு வழி பிறக்கும் என்றும் நினைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தவரின் எதிரில் சேஷாத்ரி சுவாமிகள் வந்தார். சற்று ஒதுன்பி நின்று கும்பிட்ட சோமசுந்தர சுவாமியைப் பார்த்து சுவாமிகள், “ரமணர் கிட்டே போ” என்றார். தன் மனத்திலுள்ளதைச் சொல்ல முயன்றார் சோமசுந்தரம். அதை மிகத் தெளிவாக அறிந்திருந்த சேஷாத்ரி சுவாமிகள் மிகவும் அழுத்தம் திருத்தமாக, “போ……போ…..போ…..ரமணர் கிட்டே போ….இங்கே நிற்காதே”….. என்று அவரை விரட்டினார்.
ஏ.வி. அய்யர் என்ற ரமண பக்தர் மகரிஷியைக் காணச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனேயே, சேஷாத்ரி சுவாமிகள் எதிரில் போய் நின்று கொண்டிருந்தார். அதை உடனே அறிந்து கொண்டு விட்ட சுவாமிகள் “மகரிஷிகள் தரிசனம் பரம பாவனம்” என்று அவரைப் பார்த்து கூறினார்.
முற்றும் துறந்த இவ்விரு ஞான வைராக்கிய சீலர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். விருபாட்ச குகையில் ரமணர் தங்கியிருந்த போது சேஷாத்ரி சுவாமிகள் அங்கு வருவார். இருவரும் சேர்ந்தே சாப்பிடுவார்கள். இவ்விரு மகான்களும் கண்களாலேயே பேசிக் கொள்ளும் அற்புதக் காட்சியைக் கண்டு புண்ணியம் பெற்றவர்களும் உண்டு.
ஒரு சமயம் இருவரும் வாய் விட்டு நேருக்கு நேர் பேசிக் கொண்டதை வாசுதேவ சாஸ்திரி என்பவர் அருகிலிருந்து கேட்கும் பாக்கியத்தைப் பெற்றார்.
மௌனமாக அமர்ந்திருந்த ரமணரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் சேஷாத்ரி சுவாமிகள். பிறர் மனத்திலுள்ளதை ஒரு நொடியில் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்த சுவாமிகளுக்கு அன்று ரமணரின் மன ஓட்டத்தை ஆராய முடியவில்லை. மகரிஷியை சுட்டிக் காட்டி “இது என்ன நினைக்கிறதோ, தெரியவில்லையே” என்றார்.
ஆனால் மகரிஷியின் மௌனம் கலையவில்லை. சேஷாத்ரியே தொடர்ந்து பேசினார். அருணாசலேஸ்வரரை வணங்கினால் நற்கதி கிடைக்கும்” என்றார்.
அப்போது மகரிஷி, மௌனத்தைக் கலைத்து “வணங்குகிறவன் யார்? வணங்கப்படுகிறவன் யார்?” என்று சேஷாத்ரியைப் பார்த்து கேட்டார்.
அதன் பின்னர் ரமண பகவான் அத்வைத தத்துவத்தைப் பற்றி ஒரு மணி நேரம் பேசினார். உலகமும் கடவுளும் தனி மனிதனின் ஆத்மாவும் பிரும்மமே என்றும், அதைத் தவிர இரண்டாவது வஸ்து கிடையாது என்று விளக்கினார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சேஷாத்ரி சுவாமிகள், “அது என்னமோ, இதெல்லாம் எனக்குப் புரியவேயில்லை. எனக்கு பக்திதான் முக்கியம். நான் சுவாமிக்கு நமஸ்காரம் பண்றேன்” என்று சொல்லி விட்டு, அண்ணாமலையில் சிகரத்தை நோக்கி பதினைந்து முறை கீழே விழுந்து கும்பிட்டு விட்டு மலையிலிருந்து இறங்கிப் போய் விட்டார்.
இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டி, சேஷாத்ரி சுவாமிகளுக்கு அத்வைத ஞானமோ, ஆத்மானுபவமோ இல்லை என்று கூறி விட முடியாது. மகரிஷியைப் போன்றே அவரும் எல்லா ஜீவராசிகளையும் ஜடப் பொருள்களையும் பிரும்ம சொரூபமாகவே கண்டு களித்து, எந்நேரமும் சச்சிதானந்த நிலையிலேயே லயித்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு சாதாரண நிகழ்ச்சி இந்த உண்மையை மிக நன்றாக விளக்குகிறது.
திருவண்ணாமலை அக்கிரஹாரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சேஷாத்ரி சுவாமிகள் சட்டென்று நின்று, அங்கு கட்டப்பட்டிருந்த ஓர் எருமைக் கடாவை வைத்த கண் வாங்காமல் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அருகிலிருந்த ஒருவர், “சாமி எதைப் பார்த்துக் கொண்டிருக்கு>: என்று கேட்டார்.
“”இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் சேஷாத்ரி.
சாமி இந்த எருமையையா பார்த்துக் கொண்டிருக்கு? என்று சற்று ஏளனமாகக் கேட்டார் அவர்.
உடனே சேஷாத்ரி அங்கு நின்றிருந்த மற்றொருவரைப் பார்த்து “இது என்ன சொல் பார்க்கலாம்? என்றார்.
உடனே அவர் “இது ஒரு எருமை மாடு” என்றார்.
அதைக் கேட்டதும், “எருமையா? எருமையா? சே….பிரும்மம்னு சொல்லு” என்று கூறி விட்டு வேகமாக நடந்து சென்றார் சுவாமிகள்.
நடனானந்தர் என்ற நடேச முதலியார், ஆரம்பப் பள்ளி ஆசியர். ஞான மார்க்கத்தை நாடி திருவண்ணாமலைக்கு வந்தவர். அவர் ரமண மகரிஷியிட்ம சென்று சரணடைந்தார். ஆனால், அவருக்கு குருவருள் கிட்டவில்லை. அவர் விரும்பிய ஆசியோ உபதேசமோ கிடைக்க வில்லை. மனமுடைந்து போயிருந்தவரிடம் ஒருவர், “நீங்கள் சேஷாத்ரி சுவாமிகளைத் தரிசித்து முதலில் அவருடைய் ஆசியைப் பெறுங்கள். அவர் யாரையும் அருகில் சேர்க்க மாட்டார். விரட்டியடித்து விடுவார். அப்படிப்பட்டவரிடம் அனுக்ரஹம் கிடைத்தால், அதையே நல்ல சகுனமாக நினைத்து மீண்டும் ரமணரிடம் செல்லுங்கள் என்று கூறியிருந்தார்.
வெகு நாட்கள் சுவாமிகளை தேடி அலைந்து, கடைசியில் ஒரு நாள் அவர் இருக்கும் இட்ம அறிந்து அங்கு சென்று தன் மன வேட்கையைத் தெரிவித்தார் நடேச முதலியார்.
அதைக் கேட்ட சேஷாத்ரி சுவாமிகள், “குழந்தே! ஏன் மனத்தைப் புண்படுத்திக் கவலைப்பட வேண்டும்? ஞானம் என்றால் என்ன? எது அநித்யமோ அதையெல்லாம் புத்தியால் நீக்கிய பிறகு, எது நீக்க முடியாமல் மிஞ்சுகிறதோ அதுதான் ஞானம். மலையேறிப் போனால்தான் ஞானம் வரும். குகையில் போனால்தான் ஞானம் வரும் என்று அங்கும் இங்கும் அலைவது பைத்தியக்காரத்தனம்….. பயப்படாதே….போ!” என்று ஆசி வழங்கி அனுப்பினார்.
இதற்குப் பிறாகு நடேச முதலியாருக்கு ரமணரின் நல்லாசியும் நல்லுபதேசமும் கிடைத்தது.
அருணாசலேசுவரரும், ரமணரும் தாமும் ஒருவரே என்பதையும் சேஷாத்ரி சுவாமிகள் மறைமுகமாக அடிக்கடி கூறியிருக்கிறார்.
“திருவண்ணாமலையில் மொத்தம் மூன்று லிங்கங்கள் இருக்கின்றன. ஒன்று ஜோதி லிங்கமான அருணாசல மலை. இரண்டாவது ரமண சுவாமி. மூன்றாவது சேஷாத்ரி – என்று அவர் கூறுவதைப் பலர் கேட்டிருக்கின்றனர்.
ரமண மகரிஷிக்கு தினமும் அன்னம் அளித்து வந்த எச்சம்மாளிடம் மிகவும் அன்பும் பரிவும் காட்டி வந்தார் சேஷாத்ரி சுவாமிகள். மாலை நேரத்தில் மலையிலிருந்து இறங்கி வரும் எச்சம்மாளைப் பார்த்து, “ரமண மகரிஷிக்கு சாப்பாடு கொடுத்தாகி விட்டதா?” என்று விசாரிப்பார். பொழுது சாய்ந்து இருட்டியிருந்தால், அந்த அம்மாள் வீடு வரை துணை போவார்.
ஒரு சமயம் எச்சம்மாள் வேதாந்த மகா வக்கியங்களைப் பற்ரி சுவாமிகளிட்ம கேட்டார். ரமண பக்தை என்ற ஒரே காரணத்திற்காக, அந்த அம்மாளுக்கு நான்கு மணி நேரம் அரிய வேதாந்தக் கருத்துக்கள் அடங்கிய உபந்நியாசம் செய்தருளினார் சேஷாத்ரி சுவாமிகள்.
மற்றொரு நாள் எச்சம்மாள் வீட்டிற்கு வந்து, “நீ எதைப் பூஜை செய்கிறாய்?” என்று கேட்டார்.
ரமண மகரிஷி படத்தையும், உங்கள் படத்தையும் வைத்துத்தான் சுவாமி நான் பூஜை செய்கிறேன் என்றார் அந்தப் பெண்மணி.
உடனே சேஷாத்ரி, “நீ ஏன் தியானம் பழகக் கூடாது?” என்று கேட்க, “சுவாமி, தியானம் செய்வது எப்படி?” என்று அந்த அம்மாள் வினவினார். அந்தக் கணம் காலை மடித்து கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்த சேஷாத்ரி சுவாமிகள் ஐந்து மணி நேரம் சமாதியில் லயித்திருந்தார். இறுதியில் கண்களைத் திறந்து, “எச்சம்மா, பார்த்தாயா, இதுதான் தியானம்” என்று கூறினார்.
சேஷாத்ரி சுவாமிகள் ரமணரை விட பத்து வயது மூத்தவர். அவருக்கு முன்பே அருணாசலத்தை அடைந்தவர். வயதிலும், தோற்றத்திலும், வாழ்ந்த முறையிலும் இருவருக்கும் இடையே வேற்றுமைகளும், மாறுபாடுகளும் இருந்தாலும், ஞான நிலையில் இருவரும் ஒருவரே. அதனால் தான் பக்தர்கள், சேஷாத்ரியை பெரிய சேஷாத்ரி என்றும் ரமணரை சின்ன சேஷாத்ரி என்றும் குறிப்பிடுவது வழக்கம். பராசக்தியின் அம்சமாக விளங்கிய சேஷாத்ரி சுவாமிகள், தம்மை பார்வதி தேவி என்றும், ரமணரை குமரக் கடவுள் என்றும் அடிக்கடி கூறுவது வழக்கம். அது உண்மைதான் என்பதை உலகிற்கு காட்டுவதே போல் சேஷாத்ரி சுவாமிகள் 1929-ம் ஆண்டு விதேக கைவல்யம் அடைந்த போது, அவரது சமாதி சடங்குகளில் மகனுக்குரிய உரிமையோடும், கடமை உணர்ச்சியோடும் ரமணர் கலந்து கொண்டார். ஒரு மணி நேரத்திற்கு மேல் அங்கு மௌனம் கலையாமல் ரமண பகவான் நின்றிருந்த திருக்கோலம், இவர்களிடையே நிலவிய ஆத்ம உறவுக்குச் சாட்சியாக காலமெல்லாம் நிலைத்திருக்கும் காட்சியாகும்.. ஒரு மகாராஜாவுக்குரிய முறையில் நடந்த இறுதி நிகழ்ச்சிகளில் ரமண மகரிஷி முழுமையாக கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை ரமணாசிரமத்துக்கு வடபுறம் அமைந்துள்ள ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அதிஷ்டானம், ஞானத்தையும், யோகத்தையும் நாடி, தேடி வரும் பக்தர்களுக்கு, இன்றும் ஒரு வழிகாட்டியாக, ஞான தீபமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
பார்வதி தேவியும், முருகப்பெருமானும் சேர்ந்து, அருணகிரியாரின் திருப்புகழின் மேன்மையை உலகறியச் செய்தார்கள். அத்தெய்வத் தொண்டில் ஈடுபடுவதற்காக அம்மகான்களின் முழுமையான ஆசியைப் பெற்றவர்தான் “வள்ளிமலை வள்ளல்” என்று அழைக்கப்பட்ட திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள. அன்னாரது தெய்வீக வரலாறு அருணாசலத்திற்கு மேலும் பெருமை கூட்டுகிறது.