ஸ்ரீ அலங்காரவல்லி சமேத முக்தீஸ்வரர் எழுந்தருளியிருக்கும் காவேரிப்பாக்கம், புராணச் சிறப்புப் பெற்ற தலமாகும்.
அகத்திய முனிவரிட்ட சாபம் நீங்கும் பொருட்டு, அன்னை காவேரி அங்கு ஏரி வடிவில், கைலாசநாதனைக் குறித்துத் தவம் இருந்தாள். ஸ்ரீ பத்ம புராணத்தில் “சுவேர நகரம்” என்றும், வரலாற்றில் “சதுர்வேதி மங்கலம்” என்றும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
பரமனும், பார்வதி தேவியும் சோமகன் என்ற அரசனுக்கு வேடுவன், வேடுவச்சியாகக் காட்சி தந்து திருவிளையாடல் புரிந்த புண்ணைய பூமி இது. கைலாசபதி மானாக மாறிய போது அம்பிகை அதன் கழுத்தை அலங்கரிக்கும் நவரத்ன மாலையாக மாறியதால், சிருங்கார நாயகி என்றும், அலங்காரவல்லி என்றும்,திருநாமம் பூண்டாள். அம்பிகை, ஐயனின் ஒப்புதல் பெற்று, அரசனின் வளர்ப்பு மகளாக அந்தப்புரத்தில் வளர, பரமன் பிரும்மச்சாரி வேடம் புனைந்து, நாட்டியம் பயிற்றுவிக்கும் ஆசானாக உள்ளே புகுந்து அவளை மயக்கி, மணம் புரிந்து கொண்ட தலம் இது. முக்தீஸ்வரர், காவேரியின் சாபத்தை போக்கி அவளை அகத்திய முனிவருக்கு மணம் முடித்து வைத்ததாகவும் இத்தல வரலாறு கூறுகிரது.
இத்திருத்தலத்தில் சேஷாத்ரி அலங்காரவல்லியை குறித்து கடும் தவம் இருந்ததால், அம்பிக்கை, அவருக்கு காட்சி தந்தி பூரண ஞானம் அருளியதாக கூறப்படுகிறது.
ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயத்திலுள்ள நவராத்திரி மண்டபத்தில் அன்ன ஆகார்மைன்றி, ஸ்ரீ சேஷாத்ரி சில நாட்கள் நிஷ்டையிலிருந்தார்.
அப்போது ஒரு நாள் சுவாமியின் பெரியம்மாவான சுந்தரக்கா வந்து அவரை சாப்பிட வரும்படி வீட்டுக்கு அழைத்தார். சுவாமி, தயிர் சாதமும், புளீயஞ்சாதமும் செய்து வரும்படி பெரியம்மாவிடம் கூறினார். சுந்தரக்கா அவ்விதமே செய்து வந்து தர, ஸ்ரீ சேஷாத்ரி அந்த சாதத்தினால் அர்ச்சனை செய்தார். பிறகு அந்த லிங்கத்தை கையில் எடுத்துக் கொண்டு, எதிரிலுள்ள குளத்தில் இறங்கி கழுத்தளவு நீரில் நின்று இரண்டு நாட்கள் தவமிருந்தார்.
இச்செய்தி கேட்டு, காஞ்சிபுரத்திலிருந்து சிறிய தந்தை ராமசுவாமி ஜோசியரும், சிற்றன்னை கல்யானி அம்மாளும் வந்து சேர்ந்தனர்.
உலகத்தையும், உடலையும் மறந்து, அற்புத சமாதியில் ஆழ்ந்திருந்த புத்திரனைக் கண்டு இருவரும் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். அவர் நிட்டை கலைந்து கண்களைத் திறக்கும் வரை அருகிலேயே காத்திருந்தனர்.
பிரும்மானந்தத்தில் திளைத்திருந்த சேஷாத்ரி, கண்களைத் திறந்து அருளொளி படர, சுற்றியிருந்தவர்களைப் பார்த்தார். சிற்றப்பாவும் சித்தியும், கலங்கிய கண்களுடந் தம் அருகில் நிற்பதையும் கவனித்தார். ஆனால், அந்தப் பார்வையில் பாச உணர்வு இல்லை; வைராக்கிய பொலிவு இருந்தது. ராமசுவாமி ஜோசியர் ஆவேசம் வந்தவர் போல் கத்தினார்.
“குழந்தே! எங்களை மன்னித்து விடப்பா. உன் மகிமை தெரியாமல் உன்னைத் துன்புறுத்தி விட்டோம். நீ எங்களை விட்டு எங்கும் போய் விடாதே. நீ இல்லாமல் எங்களால் வாழ முடியாது என்று கதறிக் கொண்டே சேஷாத்ரியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார்.
கல்யாணி அம்மாளும் உணர்ச்சி வசப்பட்டாள். அழுது கொண்டே பேசினாள்.
“அப்பா, சேஷு, உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவா மன்னி எங்கிட்டே ஒப்படைச்சுட்டுப் போனாள்? நீ வீட்டை விட்டுப் போனதிலிருந்து எனக்கு சோறு தண்ணி இறங்கலேடாப்பா. நான் தூங்கி எத்தனை நாளோ ஆச்சு. நீ எங்களோடு வந்துடு. உன்னை கோவில்லெ வெச்சு கும்பிடறேன். எப்படியோ இருக்க வேண்டியவன். இப்படிப் பரதேசி மாதிரி, அன்ன ஆகாரம் இல்லாமே சுத்திண்டிருக்கியே! ராஜா மாதிரி இருப்பியே! கன்னம் ஒட்டி, கண்கள் இடுங்கி, தாடியும், மீசையுமா அநாதை மாதிரி ஆயிட்டியே! நாங்க உயிரோட இருக்கிற போது நீ ஏன் இப்படியெல்லாம் இருக்கணும்? வந்துடு, இப்பவே புறபடு” என்று தாய்க்குரிய ஆதங்கத்துடன் புலம்பினாள் கல்யாணி அம்மாள்.
சேஷாத்ரி சிரித்தார். தமக்கு இனி குடும்ப வாழ்க்கையோ வீட்டு வாசமோ கிடையாது என்று அவர்களுக்கு எடுத்துக் கூறினார். ஆறுதல் வார்த்தைகள் கூறி அவர்களை தேற்றினார். திரும்பிப் போகும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அஞ்ஞானத்தில் சிக்குண்டவர்கள், அந்த பிரும்மஞானியை மீண்டும் மீண்டும் சம்சார பந்தத்தில் சிக்க வைக்க முயன்றார்கள்.
பேச்சு பயனற்றுப் போகவே, சேஷாத்ரி மௌன விரதம் ஏற்றுக் கொண்டார். “பிள்ளையின் மனம் மாறாதா, உடன் வர மாட்டாரா?” என்ற அசட்டு நம்பிக்கையுடன் வெகு நேரம் அங்கேயே நின்றிருந்து விட்டு, ராமசுவாமி ஜோசியரும், கல்யாணி அம்மாளும் ஏமாற்றத்துடன் காஞ்சிபுரம் திரும்பி விட்டனர்.
கடும் தவமியற்றிக் கொண்டிருந்த சேஷாத்ரியை தரிசிக்கவும், அவரது ஆசியைப் பெறவும், அக்கம் பக்கத்திலிருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் காவேரிப்பாக்கம் வந்த வண்ணமிருந்தனர். நாளுக்கு நாள் பக்தர் கூட்டம் பெருகவே, தனிமையை நாடி ஒரு நாள் அங்கிருந்து பறப்பட்டு விட்டார் அவர்.
இரண்டு மூன்று மாதங்கள் கடந்தன. சேஷாத்ரி இருக்குமிடம் ஒருவருக்கும் தெரியவில்லை. “இந்த ஊரில் பார்த்தேன்”, அந்த ஊரில் பார்த்தேன்” என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. “செங்கற்பட்டிலிருக்கிறார்” என்ற செய்தியைக் கேட்டு அங்கு போனால், “வந்தவாசிக்குப் போய் விட்டார்” என்று சொல்லுவார்கள். வந்தவாசிக்குப் போனால், “காலையில் கோயிலில் பார்த்தேன். அப்புறம் எங்கே போனாரோ, தெரியவில்லை” என்பார்கள். இப்படி தமது யோக மகிமையால் பல இடங்களில் தோன்றி மறைந்து கொண்டிருந்தார் சேஷாத்ரி.
எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து விட்டு கடைசியில் திண்டிவனம் வந்து சேர்ந்தார். அப்போது அவர் மௌனமாக இருந்தார். யாருடனும் பேசுவதில்லை. முக்கியமான விஷயமாக இருந்தால் எழுதித்தான் காட்டுவார். எல்லோரும் அவரை மௌன சுவாமிகள் என்றே குறிப்பிட்டனர்.
ஒரு நாள் மௌன சுவாமிகள் அந்த ஊரில் தம்மை ஆதரித்து வந்தவர்களிடம் தமக்கு நிட்டையில் இருக்க தனிமையான இடம் வெண்டுமென்று கேட்டார். டி. கே கண்ணய்யர் என்பவர், திந்திரிணீஸ்வரர் கோயிலைச் சேர்ட்ந்த குப்புசமி குருக்களிடம் இதைக் கூறி, கோயிலுள்ள யாகசாலையைத் திறந்து விடும்படி கேட்டுக் கொண்டார். குப்புசாமி குருக்களும் அவ்வாறே செய்தார். சேஷாத்ரி அந்த அறைக்குள் சென்று அமர்ந்தார். வெளியே பூட்டிக் கொள்ளும்படியும், ஒரு மாதம் கழித்துக் கதவைத் திற்ககும்படியும் கூறி விட்டு, தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அவரது பக்தர்களும் சுவாமிகளின் ஆணைப்படியே செய்தனர்.
நான்கு நாட்கள் சென்றன. ஐந்தாவது நாள் காலையில் குப்புசமி குருக்களுக்கு கவலை வந்து விட்டது. “இப்படி ஆகாரமில்லாமல் இவர் தியானத்தில் இருக்கிறாரே, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? அந்தப் பழி நம்மைத்தானே வந்து சேரும். அது மட்டுமா? அவர் இறந்து விட்டால் கோயில் அசுத்தமாகி விடுமே! அதைப் போக்குவதற்கான சடங்குகளைச் செய்ய யார் பணம் கொடுபார்கள்? கடைசியில் நாந்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்” என்றெல்லாம் நினைத்து மனத்தைக் குழப்பிக் கொண்டார். அது அச்சமாக மாறியது. கதவைத் திறந்து சுவாமிகளை வேறு எங்கேயாவது அழைத்துப் போகும்படி பக்தர்களிடம் மன்றாடினார்.
கண்ணய்யர் வேறு வழியில்லாமல் கதவைத் திறந்தார். சேஷாத்ரி மரக்கட்டையைப் போல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அதைக் காண ஊர் ஜனங்களெல்லாம் கூடி விட்டனர். அரை மணி கழித்து சேஷாத்ரி நிட்டை கலைந்து கண் விழித்துப் பார்த்தார். குருக்களின் எண்ணத்தை மெள்ள அவரிடம் தெரிவித்தார் கண்ணய்யர்.
உடனே சேஷாத்ரி அவ்விடத்தை விட்டு எழுந்து வெளியே வந்து விட்டார்.
பக்தர்களும், சீடர்களும் செஷாத்ரி சுவாமியைப் பின் தொடர்ந்தனர். “இது திருவண்ணாமலைக்குப் போகிறது” என்று எழுதிக் காட்டி விட்டு வேகமாக நடந்தார் சுவாமி. மார்செட்டிக்குளத்தின் வழியே போகும்போது, கரையிலுள்ள கிளாக்காயைப் பறித்து தரும்படி கேட்க, உடன் வந்தவர்கள் பறித்துக் கொடுத்தனர். அதில் கொஞ்சம் புசித்துக் கொண்டே ஐயன் தோபு என்ற கிராமத்திற்கு வந்தார் சுவாமி. அப்போது காலை வேளையானதால், பின் தொடர்ந்து வந்த மூவரும் நீராடச் சென்றனர். அவர்கள் திரும்பி வருவதற்குள் சேஷாத்ரி எங்கேயோ மாயமாக மறைந்து விட்டார்!
அடுத்த சில மாதங்கள் சுவாமி எங்கே சஞ்சரித்துக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காஞ்சிபுரத்திற்கு தெற்கேயுள்ள தூசி, மாமண்டூர் கிராமத்திலுள்ள பாண்டவர் குகையில் அவர் தவமிருப்பதாக செய்தி பரவவே, கூட்டம் கூட்டமாக மக்கள் அங்கு சென்றார்கள். சுவாமியின் சகோதரரான நரசிம்ம ஜோசியரும் தமையனைக் காண வேண்டும் என்ற ஆவ்லைல் ஓடி வந்தார். ஆனால், அங்கே சுவாமியைக் காண முடியவில்லை. அவர் அதற்குள் வேறு எங்கேயோ சென்று விட்டார்.
அடுத்து, சுவாமி வட ஆற்காடு மாவட்டதிலுள்ள திருப்பத்தூரில் காணப்பட்டார். அங்குள்ள முத்துக்குமாரசுவாமி ஆலயத்திலும், கோட்டை வீதியிலுள்ள பிரும்மேஸ்வர சுவாமி ஆலயத்திலும் அவர் சிறிது காலம் தங்கியிருந்தார்.
பிரும்மா தவம் புரிந்த தலம் அது. மிக்ப புராதனமான கோயில். அன்னை திரிபுரசுந்தரியைக் காணக் கண கோடி வேண்டும். அக்கோயில் தற்போது இருக்கும் நிலையைக் காணும் போது மிகவும் வேதனையாயிருக்கிறது. அறங்காவலர்களின் நன் முயற்சியால் அங்கு திருப்பணியும், குடமுழுக்கும் நடக்க ஏற்பாடாகி வருகிறது என்பதை அறிந்த போது மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
சேஷாத்ரி சுவாமி திருபத்தூப்ருக்குச் சென்ற காரணம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்! ஆனால், சேஷாத்ரியின் அத்தை வெங்கடலட்சுமியின் எண் காகினி, தன் கணவருடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த திருப்பத்தூருக்கு அவரை விதித்தான் அழைத்துச் சென்றதோ?
காகினிக்கும், சேஷாத்ரிக்கும் நடந்திருக்க வேண்டிய திருமணம் முறிந்தது. பின்னர் அவள் வெங்கடரமண ஐயரை மணந்து திருப்பத்தூரில் குடித்தனம் நடத்தி வந்தாள். சேஷாத்ரியோ, இல்லற வாழ்க்கையைத் துறந்து, மனம் போன போக்கில் அலைந்து திரிந்து, அதே திருபத்தூருக்கு வந்து சேர்ந்தார்.
காஞ்சிபுரத்திலிருந்து ராமசுவாமி ஜோசியர் தம் சகோதரியின் மாப்பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில், “சேஷாத்ரியைத் திருப்பத்தூரில் கண்டால் எனக்குத் தெரிவிக்கவும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கடிதம் வந்த ஒரு வாரத்துக்கெல்லாம், சேஷாத்ரியைக் கடை தெருவில் கண்டார் வெங்கடரமணய்யர். அவரிடம் நல்ல வார்த்தைகள் பேசி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். காஞ்சிபுரத்திலிருந்து சிறிய தந்தை எழுதியிருந்த கடிதத்தைக் காட்டினார். பின்னர் வீட்டுக்குள் வரும்படி அழைத்தார்.
ஆனால், சுவாமி உள்ளே வர முடியாது என்று கண்டிபாக கூறி, வெளித் திண்ண்பையிலேயே உட்கார்ந்து விட்டார்.
அவரது வாடிய முகத்தையும், ஒட்டிய வயிற்றையும் கண்ட வெங்கலட்சுமி மனம் புழுங்கினார். அத்தை என்ற உறவைக் கூட பாராட்டாமல், கேட்ட் அகேள்விக்கு அவர் விட்டேத்தியாக பதில் கூறியதைக் கேட்டு அவள் நெஞ்சு குமுறியது. பொங்கி வந்த கண்ணீரை அட்ககிக் கொண்டு, “உள்ளே வாயேம்பா” என்று அழைத்தாள். அதை சேஷாத்ரி காதில் சரியாகப் போட்டுக் கொண்டதாகவே தெரிய வில்லை. தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர் லேசாகப் புன்னகை புரிந்தார்.
காகினிக்கு மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. தன் கணவராக இருக்க வேண்டியவ அம்மாஞ்சி பரதேசியாய், பரப் பிரும்மமாய் திண்ணையில் அமர்ட்ந்திருக்கும் கோலத்தைக் கண்டு துடித்துப் போனாள். “ஐயோ பாவம்” என்று அவள் பெண் மனம் வருந்தியது. அவரை ஏதாவது விசாரிக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. பேசினால் குற்றமோ என்று அஞ்சி, பேசாமலிருந்து விட்டாள். அவள் இருந்த பக்கம் கூட திரும்பிப் பார்க்க வில்லை சேஷாத்ரி.
ஏதோ ஆகாரம் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை உண்டு திண்ணையிலேயே படுத்து விட்டார் சேஷாத்ரி. அவருக்குத் துணையாக வெங்கடரமண ஐயரும் பக்கத்திலேயே படுத்துக் கொண்டார்.
விடியற் காலையில் வாசலில் நீர் தெளித்து, கோலம் போடவந்த வெங்கலட்சுமி, திண்ணையில் சேஷாத்ரியைக் காணாமல் திடுக்கிட்டுப் போனாள். வெங்கடரமணய்யரும் எழுந்து, தெருவெங்கும் தேடினார். ஊரெங்கும் சுற்றிப் பார்த்தார்.
சேஷாத்ரி சுவாமி திருப்பத்தூரிலேயே இல்லை! அவர் அருணாசலத்தை நாடிச் சென்று கொண்டிருந்தார்.
போளூரிலிருந்து வேலூர் செல்லும் பாதையில், பத்தாவது மைலில், “சந்தவாசல்” என்ற சிற்றூர் இருக்கிறது. அதைக் கடந்து மேற்கே மூன்று மைல்கள் சென்றால், படவீடு என்ற கிராமத்தை அடையலாம். அங்கு அன்னை பராசக்தி ரேணுகாம்பாளாகக் கோயில் கொண்டிருக்கிறாள். தென்னகத்திலுள்ள முக்கியமான பிரார்த்தனை தலங்களில் இதுவும் ஒன்று
பண்டைக் காலத்தில் அங்கு மா மன்னர்களின் ராணுவம் தங்கியிருந்ததால் அவ்விடத்திற்கு படைவீடு என்ற பெயரும் உண்டு. அப்பகுதியிலுள்ள மலைக்காடுகளில் வேடுவர்கள் தங்கியிருந்த காரணத்தால் படைவேடு, படவேடு என்ற பெயர்களையும் அது பெற்றுள்ளது.
அகில உலக நாயகி அருளாட்சி செலுத்தும் திருச்சந்நிதியில் இயற்கையன்னை எழில் நடம் புரிவதில் வியப்பில்லை. மண் வளமும், நீர்வளமும் நிறைந்த பூமி அது. தென்னையும், வாழையும், மாமரங்களும், பசுமையான சோலைகளும் கணகளுக்கு விருந்தளித்து உள்ளத்தை குளிர்விக்கின்றன. இந்த ரம்மியமான சூழ்நிலையில், சுற்றிலும் கம்பீரமாக நிற்கும் மலைகளுக்கு மத்தியில், மலைமகள் மோனத் தவம் புரிந்து கொண்டிருக்கிறாள்.
ஸ்ரீ ஜமதக்னி முனிவரின் ஆஸ்ரமம் விளங்கிய அந்த மண்ணில் கமண்டல நதி பாய்ந்தோடுகிறது. ஸ்ரீ ராமபிரானும் பக்த ஆஞ்சநேயரும் அங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். சிறு குன்று ஒன்றின் மீது முருகப் பெருமான் கோயில் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ ரேணுகாம்பாளை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். மிகப் பெரிய உருவம். நான்கு கரங்களிலும் உடுக்கை, கத்தி, சூலம், கபாலம் ஏந்தி, ராஜசிம்மாசனப் பீடத்தில் அமர்ட்ந்திருக்கும் திருக்கோலம். அஞ்ஞானத்தைச் சுட்டெரித்து கலை ஞானம் வழங்கும் அருள் நோக்கு.
கீழே அன்னை சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறாள். வலப்பறத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாண லிங்கத்தை குருக்கள் நமக்குக் காட்டுகிறார். உற்று நோக்கி, உள்ளம் சிலிர்க்க கன்னத்தில் போட்டுக் கொள்கிறோம்.
திருப்பத்தூரை விட்டுக் கிளம்பிய ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ ரேணுகா தேவியம்மனைத் தரிசிக்க ஜவ்வாது மலைக் காடுகளைக் கடந்து, கல்லும் முள்ளும் நிறைந்த பாதைகளில் நடந்து, கழனிக் காடுகளில் புகுந்து படவேடு புனிதத் தலத்திற்கு வந்து சேர்ந்தார்.
இரண்டு நாட்கள் அன்னையின் அரவணைப்பில் மூழ்கித் திளைத்தார். காஞ்சியில் காமாட்சியாகக் காட்சி தந்த அம்பிகை காவேரிப்பாக்கத்தில், அலங்காரவல்ல்யாக அருள் புரிந்த ஜகன்மாதா, படவேட்டில் ரேணுகாம்பாளாக ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளை ஆட் கொண்டாள்.
படவேட்டிற்கு ஏழாவது மைலில் ஆத்துவாம்பாடி என்று ஒரு குக்கிராமம் உள்ளது. போளூரிலிருந்து எட்டாவது மைலில் உள்ள கேளூரைக் கடந்து நான்கு மைல்கள் சென்றால் அந்தக் கிராமத்தை அடையலாம். அடுத்து சுவாமிகள் அக்கிராமத்திற்கும் சென்றார்.
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் பெரிய அத்தை லட்சுமி அம்மாள். அவளுடைய பிள்ளை வெங்கட்ரமண சாஸ்திரி. அவர் அப்போது ஆத்துவாம்பாடியில் கிராம முன்சீப்பாக இருந்தார். ஆனால், அவர் வீட்டுக்கு சுவாமிகள் போகவில்லை. அந்த கிராமத்தின் வழியாக எங்கோ சென்று கொண்டிருந்தவர், அத்தானின் கண்களில் பட்டார். அவ்வளவுதான்!
குடும்பத்தைத் துறந்து, வீட்டை விட்டு திருவண்ணாமலையை நோக்கிப் புறப்பட்ட சேஷாத்ரி சுவாமிகள், வழியில் தம் உறவினர் வசித்த ஊர்களுக்கெல்லாம் சென்றிருக்கிரார். அதன் ரகசியம் புரிய வில்லை. அவர்கள் எல்லோரும் தம்மைக் கானும்படி செய்தாரேயொழிய, அவர்களுடன் உறவாடவில்லை. பிறப்பால் பிணைக்கப் பட்டவர்களுக்கும் பரகதி கிடைக்க வெண்டும் என்று அவர்களுக்கெல்லாம் தரிசனம் தந்தருளவே அவர் அங்கெல்லாம் சென்றதாகத் தோன்றுகிறது.
ஆத்துவாம்பாடி கிராமத்தில் ஆயக்குட்டை என்றொரு குளம் இருக்கிறது. ஒரு நாள் அதில் கிராம முனிசீப் வெங்கட்ரமண சாஸ்திரி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சேஷாத்ரி சுவாமிகள் கையில் ஒரு குச்சியை சுழற்றிக் கொண்டே கரையோரமாக் நடந்து போய்க் கொண்டிருந்தார். அம்மாஞ்சியை அடையாளம் கண்டு கொண்டு விட்டார் அத்தான். “சேஷு,… குழந்தே……” என்று கையைத் தட்டிக் கூப்பிட்டார். சுவாமிகள் திரும்பிப் பார்த்தார். ஆனால், நிற்கவில்லை. வேகமாக நடந்து கொண்டிருந்தார்.
அத்தான் வெங்கடரமண சாஸ்திரி அவசரம் அவசரமாக தலையைத் துவட்டிக் கொண்டு அவர் பின்னாலேயே ஓடினார். சுவாமிகளின் கையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு வீட்டுக்கு வரும்படி கெஞ்சாத குறையாக அழைத்தார். வீட்டுக்கு வர முடியாது என்று அவர் கண்டிப்பாக மறுத்து விட்டார்.
“உன்னைப் பார்த்து எத்தனையோ நாள் ஆறது. ரொம்ப நேரம் இருக்க வேண்டாம். இத்தனை தூரம் நடந்து வந்திருக்கியே, கொஞ்சம் வந்து ஒரு வாய் பால் சாப்பிட்டு விட்டுப் போயேன்…..வாப்பா…..” என்று அத்தான் அன்போடு அழைத்தார். அன்புக்கு கட்டுண்டவர் போல் அவர் பின்னாலேயே நடந்து வந்து அத்தானின் வீட்டு வாசலிலேயே நின்று விட்டார் சுவாமிகள்.
வீட்டுக்குள் சென்று பால் எடுத்துக் கொண்டு வருவதற்குள் சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டு விட்டார். பால் பாத்திரத்துடன் ஓட முடியாத காரணத்தால், தலையாரியை விரட்டினார் கிராம முன்சீப். “வெகமாகப் போய், அவரை எப்படியாவது இங்கு அழைச்சுண்டு வா.”
தலையாரி வேகமாக நடந்தார். அதைவிட வேகமாக நடந்தார் சுவாமிகள். அடுத்துள்ள துரிஞ்சிக்குப்பம் என்ற கிராமத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்!
இது நடந்து இப்போது எண்பது வருடங்கள் ஆகி விட்டன. சுவாமிகளும், வெங்கடரமண சாஸ்திரியாரும் மறைந்து விட்டார்கள். ஆனால், ஆத்துவாம்பாடியும் ஆயக்குட்டையும் அப்படியே இருக்கின்றன.
நாங்கள் ஆயக்குட்டையைக் காணச் சென்றபோது, அதில் ஒரு சிறுவன் குளித்துக் கொண்டிருந்தான். புதிதாக யாரோ கிராமத்துக்கு வந்திருக்கிறார்களே என்று ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு, எங்களிடம் விசாரித்தான்
“நீங்களெல்லாம் யாரு? எங்கேயிருந்து வந்திருக்கேள்> உங்களுக்கு யாரைப் பார்க்கணும்?”
“எங்களுக்கு ஊர் மெட்ராஸ். இந்த ஊர் மணியக்காரரைப் பார்த்து சில விஷயங்கள் விசாரிக்கணும்னு வந்திருக்கோம். அவர் வீட்டிலே இல்லெ. வசூலுக்கு போயிருக்கிறாராம்.
நான் அவர் பிள்ளைதான். என்ன வேணும்?”
“சேஷாத்ரி ஸ்வாமிகள்னு ஒருத்தர் இருந்தார். அவர் இந்த ஊருக்கு வந்திருக்கார். அதைப் பற்றி விசாரிக்கணும்னுதான் வந்திருக்கோம்.
“எனக்கு அவரைத் தெரியுமே….. எங்களுக்கு அவர் உறவு. அவரைப் பற்றி அப்பா எனக்கு நிறைய சொல்லியிருக்கார்.”
“எப்படி உறவு?”
“அதாவது, எங்க அப்பாவுக்கு வெங்கடரமண சாஸ்திரின்னு ஒரு தாத்தா இருந்தார். அவர் சேஷாத்ரி சுவாமிகளோட சொந்த அத்தான்.”
ஏங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன ஆசசரியம்! குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பையனிட்ம எதையோ விசாரிக்கப் போக, அவன் சுவாய்களுக்கு உறவு என்கிறானே! எண்பது வருடங்களுக்கு முன் இந்த ஆயக்குட்டையில், வெங்கடரமண சாஸ்திரி குளித்ததைப் படித்து விட்டு இங்கு வதால், அதே ஆயக்குட்டையில் அவருடைய கொள்ளுப்பெரன் இன்று குளித்துக் கொண்டிருக்கிறானே!
ரவீந்திரன் புத்திசாலிப் பையன். சரியான அரட்டை. வாய் ஓயாத பேச்சு. பெரிய அனுபவசாலி போல் பேசுகிறான். வேதாந்தமாக பொழிந்து தள்ளுகிறான்; கேட்டால், எல்லாம் பாட்டி சொல்லிக் கொடுத்தது என்று பெருமிதத்தோடு கூறுகிறான்.
பேசிக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வெங்கடரமண சாஸ்திரி எண்பது வருடங்களுக்கு முன்பு வசித்த வீடு அப்படியே இருக்கிறது. அதாவது அதில் காலம்தான் கை வைத்திருக்கிரது. மனிதர் கை வைக்கவில்லை.
பழமையான சின்னகளைப் பார்க்கும் போது அதைச் சுற்றி நிகழ்ந்த சரித்திர நிகழ்ச்சிகள் கண்முன் பசுமையாகக் காட்சியளிக்கின்றன. அந்த வீட்டைப் பார்த்த போது, வாசலில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் நிற்பதும், பால் கொண்டு வர வெங்கடரமண சாஸ்திரிகள் பரக்க பரக்க உள்ளே ஓடுவதும் கண் முன் நிழற்படம் ஆடின.
சற்றைக்கெல்லாம் வசூலுக்குச் சென்றிருந்த மணியக்காரர் வந்தார். அவர் பெயரும் வெங்கடரமண சாஸ்திரியின் புத்திரர்களில் ஒருவரான அருணாசல சாஸ்திரியின் குமாரர். சுவாமிகளைப் பற்றித் தம் தாயாரும் பாட்டியும் சொல்லியுள்ள கதைகளை பெருமையோடும், பூரிப்போடும் கூறினார் அவர்.
ஆத்துவாம்பாடியிலிருந்து ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அடுத்திருக்கும் துரிஞ்சிக்குப்பம் கிராமத்திற்குச் சென்றதாகவும், அங்குள்ள “சந்நியாசிப் பாறை” என்று அழைக்கப்படும் ஒரு மகானின் சமாதியைத் தரிசித்ததாகவும் நான் படித்திருக்கிறேன். அதைப் பற்றி வெங்கடரமண ஐயரிடம் விசாரித்தேன். அந்த மகானைப் பற்றி அவர் கூறிய வரலாறு என் நெஞ்சை அள்ளியது. அதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் புல்லரிக்கிறது.
முந்நூறு வருடங்களுக்கு முன் சோழ தேசத்திலிருந்து ஒரு சந்நியாசி காசி யாத்திரைக்குப் புறபட்டார். அவருக்கு பூர்வாசிரமத்தில் ஒரு பெண் உண்டு. இளம் வயதிலேயே கணவனையிழந்தவள் அவள். காசிக்குத் தன்னையும் அழைத்துச் செல்லும்படி “தந்தை”யிட்ம மன்றாடினாள். அவர் மறுத்தார். அது தாம் ஏற்றுக் கொண்டுள்ள ஆசிரமத்துக்கு உகந்ததல்ல என்று எத்தனையோ எடுத்துச் சொன்னார். ஆனால், அந்தப் பெண் கேட்கவில்லை. கண்ணீர் விட்டு அழுதாள். உலகத்தைத் துறந்தவருக்கு உறவை உதறித் தள்ள முடியவில்லை. சம்மதித்தார். இருவரும் யாத்திரையாக துரிஞ்சிக்குப்பம் வந்து சேர்ந்தார்கள்.
அந்தக் கிராமத்தில் நிறைய அந்தணர் குடும்பங்கள் இருந்தன. அவர்களிடம் பிட்சை பெற்று சிறிது காலம் அங்கு தங்களாம் என்று அந்தப் பெரியவௌர்க்கு ஏனோ தோன்றியது. ஊரின் எல்லையில் மலையடிவாரத்தில் தமக்கு ஒரு பர்ணசாலையை அமைத்துக் கொண்டார். சற்றுத் தொலைவில் பெண்ணுக்கும் ஒரு குடில் அமைத்துக் கொடுத்தார். தினமும், ஊருக்குள் சென்று, அந்தஆன்ர் வீதியில் அன்னம் பெற்று வன்து, தாமும் உண்டு, மகளுக்கும் அளித்து வந்தார்.
ஒரு நாள் அவர், கையில் கப்பரை ஏந்தி அன்னம் யாசிக்கச் சென்ற போது எல்லார் வீட்டுக் கதவுகளும் அடைக்கப் பட்டிருந்தன. தினமும் அன்போடும் பரிவோடும் உணவு அளித்தவர்கள் எல்லாம் அன்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள்.
இப்படியும் ஒரு நாள் கழிய வேண்டும் என்பது ஆண்டவனின் திருவுள்ளம் போலும் என்று நினைத்து பட்டினியோடு அமர்ந்திருந்த துறவியிடம் மாடு மேய்க்கும் சிறுவர்கள் நாங்கைந்து பேர் வந்தனர்.
“சாமி, இன்னிக்கு உனக்கு யாரும் சோறு போடவே இல்லியா?” என்று ஒருவன் கேட்டான்.
“ஆமாண்டா தம்பி. எல்லார் வீட்டுக் கதவுகளும் சாத்தியிருந்தது” என்றார் பெரியவர் வெகுளித்தனமாக.
“அது ஏன் தெரியுமா சாமி? நீ ஒரு பாப்பாத்தியை வெச்சுக்கிட்டிருக்கியாம். உனக்கு இனிமே சோறே போடப் போறதில்லையாம். நேத்து எல்லோரும் பேசிக்கிட்டாங்க!” என்றான் சிறுவன் சிரித்துக் கொண்டே. எத்தனை பயங்கரமான குற்றச்சாட்டை எத்தனை சாதாரணமாக சொல்லி விட்டான்?
தர்ம வழி நின்றவர் சங்கடப்பட்டார். சத்திய நெறி தவறாதவராகயிருந்தும், தவறான எண்ணம் பரவக் காரணமாக இருந்து விட்டோமே என்று குமுறி விட்டார். சத்தியத்தில் மாசு படிந்து விட்டது.
அந்தச் சிறுவர்களை அருகில் அழைத்து, வறட்டியும், சுள்ளியும் எடுத்து வரச் சொன்னார் சந்நியாசி. அதைச் சிதையாக அடுக்கினார். அதில் தம் பெண்ணைப் படுக்கும்படி கூறினார். கையிலிருந்த தண்டத்தை உயரே தூக்கி ஏதோ மந்திரத்தை ஜபித்தார். சத்திய தேவன் அக்னி ஜ்வாலையாகத் தோன்றினான். மறுகணம், அவர் மாசுபடக் காரணமாய் இருந்த மங்கையைச் சாம்பலாக்கி விட்டு மறைந்து விட்டான். அப்பெண் எரிந்து போன இடத்தை இன்றும் “பாப்பாத்திக்குளம்” என்று அழைக்கிறார்கள்.
“பெண்” மறைந்த மறு கணம் அருகிலிருந்த வற்றிப் போன ஏரியில் இறங்கினார் அந்த சந்நியாசி. அதில் ஒரு குழியை தோன்டும்படி அச்சிறுவர்களைப் பணித்தார். விளையாட்டுப் பிள்ளைகள், அதையும் ஒரு விளையாட்டாகவே நினைத்து மளமளவென்று பள்ளம் தோண்டினார்கள். அதில் இறங்கினார் சந்நியாசி. சிறுவர்களிடம் அருகிலிருக்கும் கற்பாறையை எடுத்து அக்குழியை மூடிவிட்டு மணலை அள்ளிக் கொண்டு போகும்படி கூறினார். அச்சிறுவர்கள் அதையும் ஒரு விளையாட்டாக எண்ணி அப்படியே செய்தனர். மடியில் அள்ளி வைத்துக் கொண்ட மணல், கடலையாகவும், கற்கண்டாகவும் மாறின. சிறுவர்களின் குதூகலத்திற்குக் கேட்க வேண்டுமா?
சந்நியாசி மறைந்து விட்டார். அதற்கு அடையாளமாக சந்நியாசிப் பாறை இன்றும் இருக்கிறது.
“சந்நியாசிப் பாறை” ஒரு ஜீவ சமாதி. அப்பகுதி மக்கள் பய பக்தியுடன் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் அதாற்குப் பூசை போடுகிறார்கள். பூசை செய்து விட்டு திரும்புவதற்குள் பேய் மழை கொட்டி, அப்பகுதியே வெள்ளக் காடாகி விடுகிறதாம்.
அந்த மகானின் நற்பெயருக்கு களங்கம் கற்பித்த அந்தணர் குடும்பம் ஒன்றுமே தற்போது துரிஞ்சிக்குப்பத்தில் இல்லை. ஆண் வழிச் சந்ததியே பூண்டோடு அழிந்து விட்டதாகவும், பெண் வழிச் சந்ததிகள் சிலர் இருப்பதாகவும் மணியக்காரர் கூறினார்.
இந்த வரலாற்றைக் கேட்டதிலிருந்து சந்நியாசிப் பாறையை தரிசிக்காமல் திரும்ப எங்கள் மனம் இடம் தரவில்லை. ஆத்துவாம்பாடி வாசி ஒருவரின் துணையோடு, கடும் வெய்யிலில், வயற்காடுகளையும், வரப்பு மேடுகளையும் கடந்து இரண்டு மைல்கள் நடந்து சென்று பெரிய ஏரி மைதானத்தை அடைந்தோம். அதன் மத்தியில் தரை மட்டத்தில் இருக்கும் அந்தப் பாறையைக் கண்டதும் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. சத்தியத்தின் தூய்மையைக் காத்த மகான் ஒருவரின் காலடியில் நிற்கும் உணர்வு நம்மைப் பற்றிக் கொள்கிறது. வெகு அருகில் செல்லவோ, அப்பாறையைத் தொடவோ துணிவு பிறப்பதில்லை.
உட்ன வந்தவர், நீராடி விட்டு மடித்துணியுடன், தேங்காய் உடைத்து, சூடம் கொளுத்தி, வணங்கி எழுந்தார். நாங்களும் பய பக்தியுட அந்த சத்தியப் பாறையை வலம் வந்து, கீழே விழுந்து, வணங்கி எழுந்தோம்.
சத்திய ஒளி பர்பபும் இந்தப் பாறையை தரிசித்து விட்டு, நித்திய ஒளி பர்பபும் அருணாசலத்தை அடைந்தார் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.