சேஷாத்ரி ஸ்வாமிகள் வரலாறு = 1

பாரத நாட்டின் பழம் பெரும் நகரங்களில் தலை சிறந்து விளங்குவது ஸ்ரீ காஞ்சி. ஸ்ரீ பராசக்தியின் ஸ்ரீ சக்கர பீடத்தின் உருவாகவே அமைந்திருக்கிறது. காமராஜ பீடம் என்று போற்றப்படுகிற ஸ்ரீ காமகோடி பீடத்தை ஸ்ரீ சக்கரத்தின் நடுவிலுள்ள பிந்து ஸ்தானமாக உடையது.

மகா திரிபுரசுந்தரியும், ஸ்ரீ வித்யா சொரூபிணியுமான ஸ்ரீ காமாட்சி, காமகோடி நற் பீடத்தின் அதி தேவதையாக கொலு வீற்றிருப்பதால் இத்தலம் ஸ்ரீ வித்யையின் இருப்பிடமாக விளங்குகிறது. அத்வைத ஞானத்திற்கு ஸ்ரீ வித்யா உபாசனை அடிப்படை சாதனமானதால், இத்தலம், அத்வைத தத்துவத்திலும், பிரம்ம ஞானத்திலும் உயர்ந்தோங்கி வந்திருக்கிறது. இங்கு தர்ம தேவதை ஆனந்த நடம் புரிகிறாள்.

எனவேதான் யோகீஸ்வரர்களும், ஞான வள்ளல்களும், மாமுனிவர்களும் ஸ்ரீ காஞ்சியை நாடி வருகிறார்கள்.

அம்பிகையின் கடாட்சத்தை நாடி அடியார் திருக்கூட்டம் ஸ்ரீ காஞ்சிக்கு வருகிறது. அன்னையோ, ஐயனினருள் வேண்டி அருணாசலத்திற்குச் சென்றாள். இங்கு பார்வதிதேவி கம்பா நதி தீரத்தில் மணலில் லிங்கம் செய்து, எகாம்பரநாதனை வழிபட்டு, பின்னர் திருவண்ணாமலைத் திருத்தலம் சென்று, மெய்த்தவம் இயற்றி, சாபம் நீங்கி, ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றாள். இது புராண வரலாறு. ஸ்ரீ காமாட்சி தேவியின் பரிபூரண அருள் பெற்று விளங்கிய ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஸ்ரீ காஞ்சியில் தவம் இயற்றி, அருணாசலம் சேர்ந்து, ஒளியுடன் கலந்தது சரித்திர நிகழ்ச்சி.  காலச்சக்கரம் சுழலும் போது, புராணம் சரித்திரம் ஆகிறது. சரித்திரம் புராணம் ஆகிறது.

நம் வேத தர்மத்தின் கலங்கரை விளக்கமாய்ப் பட்டொளி வீசி, பாரதத்தின் ஆன்மீக ஒளி பாரெங்கும் பரவக் காரணமாக இருந்த ஸ்ரீ ஆதி சங்கர பகவான், காஞ்சிக்கு எழுந்தருளினார்கள். வேதத்தைக் காக்கவும் பிரம்ம ஞானத்தைப் பரப்பவும், குரு பீடம் ஒன்றை அமைத்தார்கள். ஸ்ரீ வித்யையின் ரகசியங்களையும், மந்திரங்களையும், யந்திரங்களையும் பல சீடர்களுக்கு உபதேசம் செய்து அருளினார்கள். தேவி உபாசனையின் பல அம்சங்களை உலகம் அறியும் பொருட்டு பல தோத்திரப் பாடல்களை இயற்றினார்கள்.

ஸ்ரீ காமாட்சியை ஆராதிப்பதற்காக சில உபாசனா முறைகளைத் தோற்றுவித்த ஸ்ரீ ஆதி சங்கரர், அவற்றைச் சரிவர நடத்தி வருவதற்காக நர்மதா நதிக் கரையிலிருந்து முப்பது தேவி பக்தர்களை, அவர்களுடைய குடும்பங்களுடன் காஞ்சிக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஸ்ரீ காமாட்சி தேவியை குல தெய்வமாகக் கொண்டு ஸ்ரீ வித்யையைப் பரப்பினார்கள். அவர்கள் காலத்திலிருந்து தேவி ப்கதி செழித்தோங்கத் தொடங்கியது. அவர்களுக்கு காமகோடியார் என்ற பெயரும் வழங்கப் பெற்றது.

காமகோடியாரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் யாவரும் காமாட்சி தாசர்கள். வேதத்தை முறைப்படி அத்யயனம் செய்தவர்கள். சகல சாஸ்திரங்களையும் கற்றவர்கள். இதிகாச புராணங்களை அறிந்தவர்கள். கலியின் கொடிமையால் இந்தப் பரம்பரை சிறிது சிறிதாக மறைந்து கொண்டே வந்து, மூன்று நாங்கு குடும்பங்களே எஞ்சி நின்றன. அதர்மம் மேலோங்கியிருந்த போதிலும் அக்குடும்பத்தினர் மன உறுதி தளராமல் தங்கள் முன்னோர் வாழ்ந்து காட்டிய தூய வாழ்வுக்கு ஓர் எடுத்துக் காட்டாக அறநெறியை விட்டு வழுவாமல் வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலர் ஜோசிய சாத்திரத்தில் தேர்ச்சி பெற்று விளங்கியதால், ஸ்ரீ வரதராஜர் கோயிலில் இவர்களுக்கு பஞ்சாங்கம் வாய்ஸ்க்கும் உரிமையும் அதற்கான மான்யங்களும் அளிக்கப்பட்டிருந்தன.

காமகோடியார் மரபில் அஷ்டசகஸ்ர வகுப்பில் சுமார் நூற்றுஎண்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மகான் அவதரித்தார். அவருக்கு காமகோடி சாஸ்திரிகள் என்று பெயர். ஸ்ரீ வித்யையில் சிறந்து விளங்கிய அவர், இளம் வயதிலேயே சகல சாத்திரங்களையும் கற்றரிந்தார். வேத, வேதாந்தங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராக இருந்ததால் யாவரும் இவரிடம் வந்து தங்கள் சந்தேகங்களைக் கூறித் தெளிவு பெற்றுச் சென்றனர்.

அம்பிகையின் அருள் பரிபூரணமாக நிரம்பப் பெற்றவர் ஆதலால், சங்கீத தேவதை காமகோடி சாஸ்திரிகளுக்கு ஏவல் புரிந்து நின்றாள். தேவி பூஜையின் போது தேனினும் இனிய சாரீரத்தில், கல் மனமும் கரைந்து உருகும் வண்ணம் கண்ணீர் மல்கி கான மழை பொழிவார். சிவபெருமானையும், பெருமாளையும், அம்பிகையையும் போற்றி வடமொழியிலும், தெலுங்கிலும் பல பாடல்களை இயற்றியிருக்கிறார் இவர்.

காமகோடி சாஸ்திரிகள் ஓர் ஆசார சீலர். எந்நேரமும் அம்பிகையின் தியானத்திலும், காயத்திரி ஜபத்திலும் ஈடுபட்டிருந்த அவரது வதனம் அருட்பிரகாசத்துடன் பொலிந்தது. வேத நெறிக்கு உட்பட்ட நியம நிட்டைகளிலும், ஆசார அனுட்டானங்களிலும் ஆழ்ந்திருந்த அவர் ஒரு மகரிஷியைப் போலவே வாழ்ந்து வந்தார். அவரது குடில், ஒரு தபோவனமாகவே காட்சியளித்தது. அங்கு தெய்வம் கோயில் கொண்டிருந்தது. தர்ம தேவதை குடியிருந்தாள். தம்மை நாடி வந்தவர்களுக்கெல்லம் நன்னெறியை காட்டி, நல்லுபதேசம் செய்தருளினார் அந்த மகான். அவரது ந்ன் முயற்சியால் பக்தி தழைத்தது. வளம் கொழித்தது. பல அன்பர்கள் மெய்யன்புடன் மீண்டும் மீண்டும் அழைத்ததால், காமகோடி சாஸ்திரிகள் வந்தவாசி தாலுகாவிலுள்ள வழூர் என்ற சிற்றுக்குச் சென்று தங்கினார்.

ஆனால், அவரது வம்சம் வளர அம்பிகை சாஸ்திரிகளுக்கு ஆண் மகவை அருளவில்லை. சேஷம்மாள் என்ற பெண் குழந்தைக்குத் தந்தையான அவர், தமது சகோதரர் சிதம்பர சாஸ்திரிகளின் குழந்தைகளை தம் சொந்தச் செல்வங்களைப் போல வளர்த்து வந்தார். சிதம்பர சாஸ்திரிகளுக்கு இரண்டு திருக்குமாரர்களும், இரண்டு திருக்குமாரத்திகளும் இருந்தனர்.