பகுதி 18 = நூறு பேர்கள்

எகிப்து நாகரீகத்தை இழந்தது, ஐரோப்பா விஞ்ஞானத் தலைமையை இழந்தது, அமெரிக்கா தொழிலின் முதன்மையை இழந்தது. வேதரிஷிகள் பரம்பரை ஆன்மீகப் பலனை இழந்தனர். ஆனால் மனிதன் முன்னோடியாக இருப்பதை இழக்கக்கூடாது என்பது ஸ்ரீ அரவிந்தம்.

அன்னையிடம் நெடுநாள் முன்வந்தவர்கள் முன்னோடிகள். நாம் அவர்களைப் பெருமையாகக் கருதுகிறோம். முன்னோடியின் இந்தச் சட்டம் அவர்களுக்குப் பொருந்தும். முன்னோடிகள் தொடர்ந்து முன்னோடியாக இருக்கலாம். நடைமுறையில் இருப்பதில்லை. பெரும்பாலும் தங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சீக்கிரம் தவறாகப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். எனவே அன்னையை நெடுநாள் அறிந்தவர்களை நாம் சரியாக அறிய முயலவேண்டும். அவர்கள் இன்றைய நிலை என்ன என்று அறியும் பாகுபாடு நமக்கு அவசியம்.

கருவியான குணங்கள் :

அகல்விளக்கு, கட்டைவண்டி, பனைஓலை விசிறி, எழுத்தாணி ஆகியவை பழைய கருவிகள். எலக்டிரிக் பல்ப், கார், மின்விசிறி, போன் புதிய கருவிகள். இவை மின்சாரத்தால் வேலை செய்கின்றன. மின்சாரம் ஒளி வீசும், நம்மை இழுத்துச் செல்லும், காற்று வீசும், என்றால், எங்கே, உன் மின்சாரத்தை இவற்றைச் செய்யச் சொல் என 1900த்தில் சொன்னால், அது அர்த்தமற்றது. மின்சாரம் ஒளி வீசும் எனில் பல்ப் மூலமாக ஒளி வீசும், நம்மைச் சுமந்து செல்லும் என்றால் பாட்டரி பொருத்திய கார் மூலம் செய்யும், காற்று வீசும் எனில் மின்விசிறி மூலம் வீசும். மின்சாரத்திற்குரிய கருவிகளின்றி, மின்சாரம் பயன்படாது. மின்சாரம் பயன்பட அதற்குரிய கருவிகளை நாம் பெறவேண்டும்.

சுயநலமானவனே அன்று பிழைத்தான். போட்டியிட்டால் தான் முன்னுக்கு வரலாம். பொறாமையும் மனிதன் முன்னுக்கு வர உதவுவதுண்டு. இன்று அன்னை சக்தி உலகில் வந்துள்ளது. சுயநலமான மனிதன் தன் எல்லாக் காரியங்களையும் தானே செய்து கொள்ள வேண்டும். அன்னை சக்தி வந்தபின் அவன் வேலையை அனைவரும் செய்வார்கள். ஆனால் அன்னை சக்தி சுயநலம் மூலமாகச் செயல்படாது. அன்னை சக்தி செயல்பட தன்னலமற்ற குணம் வேண்டும். போட்டியிடும் இடத்தில் ஒருவர் போட்டி மற்றவரை அழிக்கும். போட்டியால் ஏற்படும் வளர்ச்சி சிறியது. அன்னை சக்தி வந்தபின் அபரிமிதமான வளர்ச்சிக்கு வழியுண்டு. பாங்குகள் 1969 வரை ஒன்றோடு ஒன்று போட்டியிட்டன. அப்படி அத்தனை பாங்குகளும் சேர்ந்து பெற்ற டெபாசிட் 4000 கோடி. தேசியமயமான பின் பாங்குகள் ஒத்துழைத்தன. இன்று அதே டெபாசிட் 70 மடங்கு அதிகமாயுள்ளது. அன்னை சக்தி செயல்பட்டு அதிக வளர்ச்சி ஏற்பட நாம் அதற்குரிய கருவியை உற்பத்தி செய்ய வேண்டும். அது ஒத்துழைப்பு. சுயநலம், போட்டி மனப்பான்மை, பொறாமையுள்ளவர் ஏன் அன்னை சக்தி செயல்படவில்லை என்றால் மின்விசிறியில்லாமல் ஏன் என் வீட்டு மின்சாரம் காற்று வீசவில்லை என்பது போலிருக்கும்.

  • காலம் மாறுவதால் உலகம் முன்னேறுகிறது.
  • உலகை இயக்கும் சக்திகள் மாறுகின்றன.
  • புதிய பெரிய சக்திகள் எழுந்து சேவை செய்கின்றன.
  • பழைய சக்தி பழைய கருவிகளைப் பயன்படுத்தியது.
  • சக்தி மாறினால், அதற்குரிய புதிய கருவிகள் தேவை.
  • சுயநலம், போட்டி, பொறாமை மனித வாழ்வின் கருவிகள்.
  • மனித வாழ்வு கர்மத்திற்கும், காலத்திற்கும் கட்டுப்பட்டு,
  • தோல்வியையும், துன்பத்தையும் ஏற்று, பொய்யின் அடிப்படையில் இருக்கிறது.
  • அன்னை சக்தி வந்து அன்னை வாழ்வை உற்பத்தி செய்கிறது.
  • அதற்குரிய கருவிகள் பரநலம், ஒத்துழைப்பு, பெருந்தன்மை.
  • மாற்றத்தை நாடுவோர் கருவிகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

விட்டுக் கொடுத்து உறவை நெருக்கமாக வைத்துக் கொள்வதற்குப் பதிலாக, தவற்றை நல்லது எனப் புரிந்து கொண்டு நெருங்கி நெகிழ்தல் சிறப்பு.

விட்டுக் கொடுக்காவிட்டால் உறவில்லை. பிறர் தவற்றைக் கண்டபொழுது அதைப் பொறுத்துக் கொண்டு விட்டுக் கொடுப்பது நாகரீகம், பண்பு. அதன் மூலம் உறவு நீடிக்கும், நெருங்கும். இதுவே உலகவாழ்வின் உயர்ந்த அம்சம்.

அன்னை வாழ்வில் ஒருபடி அதிகமாகப் போக வேண்டும். பிறர் தவற்றைப் பொறுத்துக் கொள்வதற்குப் பதிலாக, பிறர் தவற்றை அவருக்கு நல்லது எனப் புரிந்து கொண்டு, அதனால் ஏற்றுக் கொள்ளுதல் விவேகம். அடுத்தபடியும் உண்டு. பிறர் தவற்றை நமக்கு நல்லது என்று அறிந்து ஏற்றுக் கொள்ளுதல் மாற்றம். தவறு எவருடையதாக இருந்தாலும், தவறு என்பது தவறில்லை, நல்லது என்று அறிவது, அறிந்து ஏற்றுக் கொள்வது, பூரண ஞானமாகும். இது யோகத்திற்குரியது.

ரயில் கம்பார்ட்மெண்டில் அனாவசியமாக நம்மிடம் ஒருவர் கடுமையாகப் பேசினால், பொதுவாக நமக்குக் கோபம் வரும். இது அவர் தவறு. கோபம் வருவதற்குப் பதிலாக நாம் பொறுத்துக் கொள்கிறோம். இது நல்ல குணம். அவர் பர்ஸைத் தொலைத்துவிட்டார். அதனால் நம்மீது பொரிந்து

விழுகிறார் என்று தெரிந்தால், அவருள்ள நிலையில் அவர் அப்படிப் பேசுவது வழக்கம் என்று நாம் அவரைப் புரிந்து ஏற்றுக்கொண்டால் அது பொறுமையாகும். கொஞ்ச நாழிகை கோபமாகப் பேசினால் அவருக்கு நல்லது, கோபத்தைக் கொட்டியபின் நிதானமாகப் பர்ஸைத் தேடலாம் என்று நமக்குப் புரிவது பொறுமையுடன் விவேகம் கலந்ததாகும். என்னிடம் ஒருவர் கோபமாகப் பேசியதைப் பார்த்தவுடன் இது ஏன் எனக்கு வந்தது என்று நினைத்தபொழுது, எனக்கு இதுபோல்தான் கோபம் வருவது வழக்கம், இப்பொழுது அடங்கியுள்ளது, பின்னணியிலுள்ளதை அவர் கோபம் சுட்டிக் காட்டுவது எனக்கு நல்லது எனப் புரிவது ஞானம்.

உலகம் ஓர் அற்புதம் (marvel) இவ்வற்புதம் தெரியும். மனமுடைய மனிதன் புலன்களால் உலகை அறிந்தால், இம்மனிதர் நம்மைத் திட்டுவதாக அறிகிறோம். இவர் திட்டுவது இறைவன் செயல், அதுவும் அற்புதமான செயல் என்பதை நான் அறிவேன் என்றுணர்பவர் பூரணயோக ஞானம் பெற்றவர்.

நட்பில், உறவில் இந்த ஞானம் இருந்தால் பிறர் தவறு நமக்கு நல்லதாகப்படும். அதனால் அவர் தவறு அவரைவிட்டுப் போகும். மனம் நெருங்கும், நெகிழும். இதுவே உறவுக்குரிய உயர்ந்த முறை.

நாம் பெற்ற ஞானம் உறவின் சூழலை உயர்த்தும். பிறர் தவற்றைச் சீக்கிரம் விலக்கும். அதனால் உறவின் நயம் பெருகும். நாம் இந்த ஞானத்தைப் பெற்றிருந்தால், பிறர் நம்மீது கோபப்படமாட்டார்கள். இந்த ஞானத்தைப் பெறும் தகுதி பெற்று, இன்னும் ஞானம் ஏற்படவில்லையானால், இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பட்டு ஞானம் வரும். அதுபோன்ற தெளிவிருந்தால் அவர் நம்மீது அனாவசியமாகக் கோபப்படும்

பொழுது, நமக்குக் கோபம் எழுவதற்குப் பதிலாக, நமக்கு ஞானத்தகுதி வந்துவிட்டது. இனியும் ஞானம் வரவில்லை. இவர் கோபம் எனக்கு ஞானத்தை அளிக்க முயல்கிறது என்று தோன்ற வேண்டும்.

நட்பில் காணும் குறை, நட்பையும், நம்மையும் உயர்த்தும் திறனுடையது.

நான் :

பூரணயோகத்தைச் சுருக்கமாகச் சொன்னால், அகந்தை அழியும் வகை எனலாம். சாங்கியம், பஞ்சபூதங்களுக்குப் பின்னால் சக்தி (force) அகங்காரம் இருப்பதாகச் சொல்வதை பகவான் குறிப்பிடுகிறார். அகங்காரம் சக்தி எழும்பொழுதுசிருஷ்டி ஆரம்பிக்கும்பொழுதுஎழுந்ததாகும். அது பஞ்ச பூதங்களுக்கும் முந்தையது என்றாகிறது. (பஞ்சேந்திரியங்கள்) புலன்கள் அகங்காரத்தின் கருவிகள். புலன்களை அழித்து நிலைபெறும் தியானம் உயர்ந்தது. புலன்களை அழித்து, அல்லது தூய்மைப்படுத்திப் பின்னரே அகங்காரத்தை அழிக்க முடியும்.

அகங்காரம் அழியாமல் சைத்தியப் புருஷன் வெளிவர மாட்டான். அகங்காரம் என்பது நாமறிந்ததுபோல் குறையான குணங்கள் மட்டும் கொண்டதன்று. ஜீவனைச் சுருக்கி, இறுக்கி, பிரபஞ்சத்திலிருந்து பிரித்து சிறியதாக்கும் சக்தி அகங்காரம். பூரணயோகத்திற்குப் பெரிதும் பயன்படும் முறை Self giving தன்னையே அர்ப்பணம் செய்வது, தான் என்பது ஜீவன். ஜீவன் தானில்லாத மற்றதான பிரபஞ்சத்திற்குத் தன்னை அர்ப்பணம் செய்ய, தன் சிறுமையை அழித்து, தன் கூட்டிலிருந்து வெளிவந்து பிரபஞ்சத்தை நோக்கிச் சென்று, பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்க முனைவது அர்ப்பணம்.

அகந்தையும் அர்ப்பணமும் எதிரானவை.

அர்ப்பணத்தை மேற்கொண்டால்மனிதன் இறைவனுக்குத் தன்னை அர்ப்பணம் செய்தால்ஜீவன் விரிந்து பெருகும். அகந்தை தன் செயல்கள் மூலமும், குணங்களாலும், நோக்கத்தாலும், நம்மைப் பிறரிடமிருந்தும், உலகத்தினிடமிருந்தும், பிரபஞ்சத்திடமிருந்தும் பிரிக்கிறது. பிரித்துச் சுருக்குகிறது. உதாரணமாக இது என் அபிப்பிராயம். இதில் தலையிடாதீர்கள், இவன் என் நண்பன். வேறெவரிடமும் பேசக்கூடாது, இவன் என் உடமை, எவரும் தொடக்கூடாது என்பவை மனத்தாலும், உணர்வாலும், செயலாலும் நாம் மற்ற அத்தனையிலிருந்தும் பிரிவதாகும். பிறர் அபிப்பிராயத்தைக் கேட்டுக் கொண்டால், நம் நண்பனைத் தனி உடமையாக்க முயலாவிட்டால், நம் பொருள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்று நினைத்தால், அவை ஆன்மீக அர்ப்பணத்தின் ஆரம்பம். இது நடைமுறை. ஆன்மீகப் பாஷையிலும் இதைச் செய்யலாம்.

தியானம் நெஞ்சில் அல்லது தலையில் நிலைப்படுவது வழக்கம். தலையில் (concentration) நிலைப்படும்பொழுது mental ego மனத்தின் அகந்தையில் அது நிலைக்கும். நெஞ்சில் நிலைப்பட்டால் அது emotional ego ஆசையின் அகந்தையில் நிலைக்கும். அகந்தை அற்ற மையம், சைத்திய புருஷன். அவன் நெஞ்சின் பின்புறம் ஆழ்ந்து மறைத்துள்ளான். தியானத்தை நெற்றியிலோ, நெஞ்சிலோ நிலைப்படுத்துவதற்குப் பதிலாக, நெஞ்சுக்குப் பின்னால் நிலைப்படுத்தினால், அகந்தைக்கு வலிமை சேர்க்கும் தியானம், அர்ப்பணத்தின் ஆன்மீகக் கருவியாகும்.

அகந்தையை அழிக்கும் இரு முறைகள் :

  1. எண்ணம், செயல், உணர்வு ஆகியவற்றை அவை எழுந்தபடி அனுமதிப்பதற்குப் பதிலாக, சமர்ப்பணம் செய்வது முதல் முறை.
  • தியானத்தை நெஞ்சுக்குப் பின்னால் ஆழத்தில் நிலைக்கச் செய்தல். முதல் முறை மனம், உடலுக்குரியது. இரண்டாம் முறை ஆன்மாவுக்குரியது. ஒன்று சமர்ப்பணம், அடுத்தது சரணாகதி.

அதிர்ஷ்டம் அதிர்ஷ்டமாக வருவதும் உண்டு, துர் அதிர்ஷ்டமாக வருவதும் உண்டு. நாம் மலர்ந்து நின்றால் வருவது அதிர்ஷ்டமாக வரும். நாம் காய்ந்து, தீய்ந்து, சுருங்கி, வதங்கி நின்றால், வரும் அதிர்ஷ்டத்தை நாம் வரவேற்க முடிவதில்லை. அதிர்ஷ்டத்தின் தீண்டுதல் நமக்கு ஆபத்தை விளைவிக்கும். வயிற்றுவலி உள்ளவனுக்கு விருந்து வைத்தால், சாப்பிட்டு ஜீரணம் செய்யும் திறமை அவனுக்கில்லாததால் வலி அதிகமாக, படுக்கையாவான். அதேபோல் அதிர்ஷ்டம் அதை ஏற்க முடியாத நிலையிலுள்ளவனுக்கு அவன் நிலைக்கேற்றபடி தன்னை அறிவிக்கும்.

எங்குச் சாதிக்க வேண்டுமோ அங்கு ஆனந்த அனுபவம் வேண்டும். அனுபவம் சாதிக்கும். சாதிக்க முடியாத இடத்தில் வெறுப்பு எழலாம். அதிர்ஷ்டம் வெறுப்பின் திரைமறைவாக இருக்கும். உனக்குப் பிடிக்காததாகவும், பயங்கரமானதாகவும், வெறுத்து ஒதுக்குவதாகவும் உள்ள செயல்களின் பின்னணியில் அதிர்ஷ்டம் இருக்கும். அதை மீறி வெறுப்பை விருப்பாக்கி, பயங்கரத்தை விரும்பக்கூடியதாக்கி, ஒதுக்குவதை நாடும் மனநிலையை ஏற்படுத்தினால், நம் அறியாமையின் திரை விலகி ஞானம் எழும். அந்நிலையில் அதிர்ஷ்டம் தன்னை வெளிப்படுத்தும்.

இது இருவகைகளில் நடைபெறும். நாம் நம்மனநிலையை பக்குவப்படுத்திக் கொள்வதால், அதிர்ஷ்டத்தின் முன்னால் உள்ள விரும்பத்தகாத திரை விலகி, அதிர்ஷ்டம் வெளிப்படும். இது நாம் அனுஷ்டிக்கும் விரதத்தின் பலன். விரதத்திற்கு

அடுத்த உயர்ந்த மனநிலையை ஏற்று விருப்பை வெறுப்பில் காணமுயன்றால், திரை விலகுவதற்குப் பதிலாக வெறுப்பான திரை விருப்பான திரையாக மாறும். இது யோகத்திற்குரிய பக்குவம். முதலில் சொல்லியது வாழ்வுக்குரிய மனப்பான்மை.

  • எதை வெறுத்து ஒதுக்குகிறோமோ அதை மனம் மாறி விரும்பினால்,
  • விரும்பி அனுபவிக்கும் மனநிலைக்கு வந்தால், அந்நிலையில் அதன்பின் மறைந்துள்ள அதிர்ஷ்டம் வெளிவரும்.

இனிய நண்பருக்கு எந்தப் பிரச்சினையுமில்லாத பொழுது, தவறு செய்ய பிறர் முனைந்தபொழுது தாம் வாய்மூடி மௌனியாக இருந்து உடந்தையாக இருந்தார் ஒருவர். நட்பை முறித்துக் கொண்டார். விலகினார். நண்பருக்குத் தவறு செய்தவர்கள் சாயம் வெளுத்தது. வாழ்வில் ஏற்றங்களையும், தாழ்வுகளையும் பார்த்தார். தமக்குத் தாழ்வு வந்தபொழுது விலகியிருந்த நண்பர் தாமே நெருங்கிவந்து, தாழ்வை ஏற்றமாக மாற்றிக் கொடுத்தார். அதன் பின்னும் அவர் மறுபடியும் விலகியே நின்றார். வாழ்வின் வக்ரங்களையும், வளங்களையும் பார்த்தவர், மனம் மாறியது. நண்பரைச் சந்திக்க விரும்பினார். முயன்றார். அவர் வாழும் ஊர் 100″க்கு மேல் மழை பெறும் இடம். இவர் மனம் மாறிய பின் அங்கு மழை 180″தைத் தாண்டியது. மழை அருள் என்பது அன்னை கூற்று. அவர் சொந்த ஊரில் பருவமில்லாத காலத்து 4 1/2″ மழை பெய்தது. அவர் மாறிய மனம் அருளை மழையாக, அளவுகடந்த மழையாகப் பெறுகிறது. வெறுத்து ஒதுக்கிய நட்பின் பின்னால் அருள் அணி வகுத்து வருகிறது. நல்லவரை ஒதுக்கினால் அதன்பின் நல்லதைக் காணமுடியும். கெட்டவரை ஒதுக்கினாலும், கெட்டதன் பின்னும் அருளும், அதிர்ஷ்டமும் நிற்பதும் இதே

சட்டப்படி என்பதால், அருளை அதன் பின்னும் தேடவேண்டும்.

தவளை, எலி, கொசு :

தியானம் செய்யும்பொழுது கொசு உள்ள இடத்திலும் கொசு கடிக்காது. உடல் நலிவுற்றுள்ளபொழுது கொசு அதிகமாகக் கடிக்கும், மனம் தளர்ந்திருந்தாலும், தாழ்ந்திருந்தாலும் கொசு கடிப்பது அதிகமாகும். ஏதோ காரணத்தால் அன்னையைப் பற்றி அதிகம் நினைக்கப் பேச வேண்டி வந்தால், புதியதாக அவர்கள் படம் வீட்டுக்கு வந்தால் சூழல் உயரும். எண்ணத்தை முன்னிட்டுச் சூழல் உயர்ந்தாலும் கொசு கடிப்பது குறையும்.

தினமும் அன்னையை மூன்று முறை சந்திக்கும் முக்கிய சாதகர். இவருக்கு ஏனோ கொசு வலை பிடிக்காது. கொசு அதிகமாகக் கடிக்கும். மிகவும் சிரமப்படுவார். பார்ப்பவரிடமெல்லாம் கொசுத் தொந்தரவைப் பற்றிப் பேசுவார். தியானத்தை அதிகமாக மேற்கொண்டவர் ஒருவர் வெளியூரிலிருந்து வந்தார். அவர் என்ன செய்கிறார் என்று விசாரித்தார். எங்கள் ஊர் கொசுவுக்குப் பேர் போனது. வீட்டில் கொசு அதிகம். நான் கொசுவால் பட்டபாடு அதிகம். அன்னையை அறிந்ததிலிருந்து, தியானத்தை மேற்கொண்டேன், கொசு கடிப்பதில்லை. மேலே உட்காருவதும் இல்லை என்றார். சாதகருக்கு முகம் சிவந்தது. நெருக்கமாக இருந்தாலும், அன்னையின் அருளை அபரிமிதமாகப் பெற்றாலும், தாழ்ந்த உணர்வு, மட்டமான நினைவு இவர் மனதை நிரப்பியதால் கொசுக்கடி தாங்கவில்லை.

தியானத்தால் கொசு விலகிய நிலையில், நாம் ஒரு பிரச்சினை விஷயமாக மனத்தை ஈடுபடுத்தினால், அந்தப் பிரச்சினை வம்பானதானால்குடியால் உடல்நலம் கெட்டு

ஆஸ்பத்திரியிலுள்ள நண்பன் பிழைக்க பிரார்த்தனை செய்தால்கொசுக்கடி அதிகப்படுவது தெரியும்.

பகவான் அறையிலுள்ள மின்விசிறி அவருக்குப் பின் போடப்பட்டது. அவர் கொசுவலையை விரும்பியதில்லை. உலகப் பிரச்சினைகளைத் தம் உள்ளுணர்வில் ஏற்றதால், அவர் பொன்னிற மேனியில் கொசுக்கடி வளையம் வளையமாக இருக்கும். ஒரு கொசுவையும் வதைப்பதை நான் பொறுக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டேன் என்றார் பகவான். கதவின் மீது குருவி உட்கார்ந்திருந்தபொழுது, கதவைச் சார்த்தினால், குருவிக்குச் சிரமம், அதைத் தொந்தரவு செய்யாதே என்றவர் பகவான்.

தாழ்ந்த உணர்வைக் குறிக்கும் என்கிறார். எலி, தவளை அப்படிப்பட்டவை. வெகு சுத்தமான வீட்டில பல ஆண்டுகளாக வாராத எலி வந்தபொழுது, இது என் சின்னபுத்தியைப் பிரதிபலிக்கிறது என்று பக்தர் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்ட பொழுது, எலி போய்விட்டது.

வாழ்க்கை நல்லதை மட்டும் அடுத்தடுத்த கட்டங்களில் காட்டும் நேரம். வெறுத்து ஒதுக்க வேண்டிய மனிதனை, யோகப் பக்குவத்திற்காக, விரும்பித் தலைவனாக ஏற்றுச் சேவை செய்தபொழுது, வாழ்வில் வெற்றி மட்டும் இருப்பதாகக் கண்டவர் ஒருவர். மயில் வெற்றியின் அறிகுறி. நகரத்துள் போய்க் கொண்டிருக்கும் பொழுது பகல் 11 மணி வெயில் மயில் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தது. இடம், பொருள், ஏவல், காலத்துக்கும் அன்னைக்கும் மாறிய மனத்திற்கும் இல்லை. நகரத்திலும் மயில் வரும். மேகமில்லாத பொழுதும் தோகை விரித்தாடும். அது மாறிய மனத்தின் மணம் வீசும் பிரதிபலிப்பு.

பூனையே வாராத வீடு. பக்தர் பலர் கூடி தியானம் செய்யும் இடம். அழைப்பும் நடத்துவதுண்டு. அன்னையைப் பற்றிப் பேசியவர்கள் அன்னை பக்தர்களைப் பற்றியும் பேசினார்கள். பலர் பேச்சில் அடிபட்டார்கள். பூனை வளர்க்கும் பக்தரைப்பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். வீட்டினுள் ஒரு பூனை நுழைந்தது. நம் மனதிலுள்ளவர் விரும்பும் பூனை அவரைப் பற்றி நினைத்தவுடன் நம்மை நோக்கி வருவதை life response வாழ்வின் எதிரொலியாகக் கண்டார். அதுவே சகுனத்தின் அடிப்படைத் தத்துவம்.

சிந்தனை :

சிந்தனை பெருங்கருவி. சிந்தனா சக்தி போற்றக் கூடியது. அதுவும் நல்ல சிந்தனை உயர்ந்தது. அன்னையை நெருங்கி வரும் பொழுது மனம் அமைதியாவதைக் காணலாம். திடீரென்று ஓர் எண்ணம் தோன்றி, நல்ல பலன் தருவதைப் பார்க்கலாம். இதை நாம் சிந்தனையின்றிச் செயல்படுதல் என அறிவதில்லை, சிந்தனையின்றிச் செயல்படுதல் எனில் அறிவில்லாமல் செயல்படுவது என நாம் அறிவோம். சிந்தனை செய்ய முடியாதவன், சிந்தனைக்குக் கீழுள்ளவன் நிலை அது. நான் மேலே சொல்வது சிந்தனையைக் கடந்த உயர்ந்த நிலை, சிந்தனை தேவையில்லாத நிலை. இது மௌன சித்தியாகும். தவத்தால் பெற பல ஜென்மங்களாகும். ஆனால் அன்னை நாமறியாமல் தருகிறார். பெற்றவர் பலர் அறிவதில்லை.

இந்த நிலைக்கு நாம் வந்தபிறகும் சிந்திப்பதுண்டு. அன்னை நமக்களித்த நிலை சிந்தனை தேவையற்ற நிலை. ஆனால் பழைய பழக்கத்தால் மனம் சிந்தனையை நாடுகிறது. இந்த நிலையில் நாமே முன்வந்து சிந்திப்பதை நிறுத்தினால், அன்னை அளித்த மௌனம் நிலைபெறும். நாம் குறுக்கிடும் வரை மௌனம் நிலைக்கும்.

ஜீவன் அருளால் பெரிய பேற்றைப் பெற்ற பின்னும் மனம் பழக்கத்தால் சிந்தனையை நாடுவது ஒரு நிலை. மனம் பக்குவத்தால் மௌனத்தைப் பெற்றபின்னும் ஜீவன் பழக்கத்தை வலியுறுத்துவதால் பெறும் அருளை இழக்கும் நிலை இது. வாழ்வில் இப்படிப்பட்ட பல நிலைகளைக் காண்கிறோம்.

  • பெரிய பட்டம் பெற்று உயர்ந்த பின்னும் neoliterates புதியதாகப் படித்தவர்கள் படிக்கும் பத்திரிகைகளைப் படிக்கும் வழக்கம்.
  • வயதானபின் சிறுபிள்ளைகள்போல் ( snacks) எப்பொழுதும் தின்பண்டம் சாப்பிடும் பழக்கம்.
  • அன்னையை ஏற்றபின் ஜாதகம், இராகுகாலம் பார்க்கும் பழக்கம்.

பிறரை மன்னிக்கும் அவசியத்தைப் பற்றி நினைக்கும் பொழுது மனம் இனிமையாக இருக்கிறது. இது சாதாரண மனிதனுக்குச் சரி. மௌனத்தைப் பெற்ற பின் மனம் மீண்டும் சிந்தனையை நாடுவது வழக்கம். முயன்று இச்சிந்தனையில் இருந்து விலகினால் மௌனம் சித்திக்கும். தபஸ்விகள் தவமிருந்து மௌனத்தைப் பெறுகிறார்கள். பெற்றால் அது பெரியது. அன்னை பக்தர்களுக்கு மௌனம் மேலிருந்து அவர்கள் மனத்துள் பாய்கிறது. மனிதன் மௌனத்தை நாடுவது வழக்கம். மௌனம் மனிதனை நாடுவதை நான் கேள்விப்பட்டதில்லை என்கிறார் பகவான். பதவியை நாடி ஜெயிப்பவன் வெற்றி பெறுகிறான். பதவி ஒருவனைத் தேடி வருவது சிலாக்கியம்.

அன்னையின் அருள் சாம்ராஜ்யத்தில் மௌனம் உள்பட எல்லா யோக சித்திகளும், எல்லா அதிர்ஷ்டங்களும் மனிதனைத் தேடி வருகின்றன.

பழிவாங்கும் எண்ணம் சிந்தனையை நிரப்புவது தவறு. பழிவாங்கும் நினைவை விட்டுவிடுதல் நல்லது. எவரைப்

பழிவாங்க நினைத்தோமோ அவரை மன்னிக்கும் எண்ணம் தெய்வீகமானது. அதனால் அது போற்றத்தக்கது, விரும்பத் தக்கது என்றாலும் அதுவும் சிந்தனையேயாகும். சிந்தனையைக் கடந்த மனத்திற்கு அதுவும் விரும்பத்தக்கதன்று. அறிவு, சிந்தனை, யோசனை ஆகியவற்றின் உயர்வை எவரும் மறுக்கமாட்டார்கள். மௌனத்திற்குத் தயாரானவன் தெரிந்து கொள்ளத் தேவையில்லாதவன். புரிந்து கொள்ளும் அவசியமில்லாதவன். ஏனெனில் சிந்தனையின்றிப் புரிந்து கொள்ளும் மௌனம் அவனைத் தேடி வருவதால், புரிந்து கொள்ளும் அவசியம் அவனுக்கில்லை.

புரிந்து கொள்ளும் அவசியம் அற்றுப் போனபின்

தெரிந்து கொள்ளும் அவசியம் உண்டு, அதுவும்

போன பின் மௌனத்தின் உச்சகட்டம் பலிக்கும்.

நம்பிக்கையில்லாதவருக்காகப் பிரார்த்தனை :

பொது ஸ்தாபனத்தில் சாமர்த்தியசாலிகள் நுழைவதுண்டு. அவர்களை விவரம் தெரியாமலும் பொது ஸ்தாபனங்கள் அழைப்பதும் உண்டு. அதுபோல் இனிய பழக்கமும், தறுதலை நடத்தையும் உள்ளவரை ஒரு ஸ்தாபனத்தார் அவர் உண்மையான குணம் தெரியாமல் அழைத்துவிட்டார்கள். தம் வேலையை இராஜினாமா செய்துவிட்டு, இங்குச் சேருவதாக ஏற்பாடு. இராஜினாமா செய்ததாகச் சொல்லிவிட்டு, உண்மையில் இராஜினாமா செய்யாமல் வந்து சேர்ந்தார்.

அதிகாரம் செலுத்திக் கட்டுப்பாட்டை நிலை நிறுத்தும் இடம் இல்லை. சேவா உணர்ச்சியை ஏற்று, நம்பிக்கையுடன் வேலை செய்யுமிடம். இவருடைய பிள்ளைகளும் இவர் போலவே. வந்தவர் வேலை செய்வதில்லை, வேலை செய்யும் இடத்தில் இருப்பதும் இல்லை. பணத்தை நம்பிக்கையுடன்

கொடுத்து வைத்தால் விரயம் செய்வதுடன், அளவுகடந்து சொந்தச் செலவுக்குப் பயன்படுத்தினார். இவர் பிள்ளைகள் எதற்கும் உதவாதவர்கள். எதிரில் அடக்கமானவர்கள். பின்னால் எதையும் செய்வார்கள்.

ஒருவன் எந்தப் பொருளைத் தொட்டாலும் உடைந்துவிடும். செய்யக்கூடாது என்ற வேலையைச் செய்து விபத்தில் மாட்டிக் கொண்டான். உடலெல்லாம் காயம். தலையில் அடி. தலையில்பட்ட அடி மூளையைப் பாதித்ததா, இல்லையா என்று x-ray நிர்ணயிக்க வேண்டும். பாதித்திருந்தால், உள்ளூரில் வைத்தியமில்லை. சென்னைக்குப் போக வேண்டும். இவருக்கோ, இவர் பிள்ளைகட்கோ அன்னை மீது நம்பிக்கையில்லை. x-ray எடுக்கப் போய்விட்டார்கள். நல்ல பதில் வரவேண்டும். தகப்பனார் உடல் நடுங்குகிறது. உதவிக்கு வந்த பக்தரைப் பிரார்த்தனை செய்யச் சொன்னார். இன்னும் ஒரு மணியில் ரிஸல்ட் வரும். நிலைதடுமாறிய நேரம். வேறு யாரைப் பிரார்த்திக்கச் சொல்லலாம் என மனம் நினைத்தது. மற்றொருவரை பிரார்த்திக்கச் சொல்லி lightning call அவசரப் போன்கால் போட்டுக் கேட்டார்கள். பிறருக்குப் பிரார்த்திப்பது, அதுவும் நம்பிக்கையில்லாதவருக்குப் பிரார்த்திப்பது, தவறு செய்து வம்பில் இருப்பவருக்குப் பிரார்த்திப்பது சட்டம் இல்லை. 10 நிமிஷத்திற்கொருதரம் அவசரமாகப் போனில் கூப்பிட்டுக் கேட்கிறார்கள். கேட்டவரே பிரார்த்திக்கலாமல்லவா? அவர் அடுத்தவரைப் பிரார்த்திக்கச் சொல்கிறார். தாம் இது நாள்வரை பின்பற்றிய சட்டத்தைப் பரிதாபத்தால் மீறிப் பிரார்த்தனை செய்தார் அடுத்தவர். மூளை பாதிக்கப் படவில்லை என ரிஸல்ட் வந்துவிட்டது. இரண்டுநாள் கழித்து, பிரார்த்தனை செய்தவர் மைத்துனர் அகாலமரணம் அடைந்தார். தவறான பிரார்த்தனை தவறான பலனைக் கொடுத்தது.

கொஞ்சநாள் கழித்து பிரார்த்தனை செய்தவர் தாம் செய்தது தவறு என்பதை உணர்ந்தபின், தம் மனத்தை அறிய இவர்களைப் பற்றி, சாவித்திரி என்ன சொல்கிறது என்று அறிய பார்த்தார். Mother of evil,children of darkness தீமையின் தாய், இருளின் குழந்தைகள் என்றிருந்தது.

அடிப்பட்டவன் தகப்பனார் இறந்தவர் ஈமக்கடன்களை இருந்து செய்யவேண்டிய சந்தர்ப்பம் இருந்தது. அடுத்த ஆண்டு இறந்தவர் பெண்ணுக்குத் திருமணம். ஈமக்கடன்களை உடனிருந்து செய்தவர் அழைப்பு வரும் என எதிர்பார்த்தார். வரவில்லை நன்றிகெட்ட ஜென்மங்கள் அல்லவா எனப் புரிந்துகொண்டார். அவர் மனம் புழுங்கியது.

அடிப்பட்ட விவரம், அவனுக்காகப் பிரார்த்தனை நடந்தது, அதன் பலன் மைத்துனர் தலையைக் கொண்டு போனது எதுவும் மைத்துனர் வீட்டிற்கோ, மற்ற எவருக்கோ தெரியாது. பிரார்த்தனை செய்தவருக்கு மட்டுமே தெரியும். நியாயம், முறை, ஒழுங்கு, நல்ல பழக்கம் எதைக் கருதினாலும் ஈமக்கடனை உடனிருந்து செய்தவருக்குத் திருமண அழைப்பு அளிக்காதது மன்னிக்க முடியாத குற்றம். தெய்வ நியாயம் வேறு. இறந்தவர் குடும்பம் சூட்சுமமாக இறந்ததன் காரணத்தை அறிவதால், அவர்களால் நன்றியுள்ள இடத்திற்கும் அழைப்பு அனுப்ப முடியாது. நாமறிந்த அநியாயங்களுக்குப் பின்னால் இப்படிப்பட்ட நியாயம் இருப்பதுண்டு. நாமறிந்த நியாயத்தின் பின்னால் நாமறியாத வேறு காரணங்களிருப்பதுண்டு. உள்ள காரணத்தை அறிய முனைவது மனத்திற்குரிய மாற்றம்.

ஆராய்ச்சியின் முடிவு :

வாழ்வில் சாதித்தவர்கள், தோல்வியடைந்தவர்கள், உடைந்த குடும்பம், எந்தச் சாதனையையும் மேற்கொள்ள நினைக்காதவர்கள், நெடுநாளைய நட்பு, நெடுநாளைய நட்பு

உடைந்தது, பெரிய சேவை போன்ற காரியங்கள், அண்ணன் மீது தம்பி போட்ட கேஸ், புது மருமகள் தனிக்குடித்தனம் போனது, சூன்யம் வைத்தது, பாகப்பிரிவினை போன்ற நிகழ்ச்சிகளின் பூர்வோத்திரத்தை ஆராய்ந்தால் அவை முடியுமிடம் ஒன்று பணம் அல்லது ஆண்டவன் செயல் என இருக்கும். இவை இரண்டும் சந்திக்கும் இடம்தான் வாழ்வின் சூட்சுமம் உள்ள இடம். அதுவே ஆன்மீக அனுபவத்தின் ஆரம்பம் என்பது முன்னோர்கள் முடிவு.

எந்தக் குற்றத்திற்கும் அடிப்படையில் பணம், சொத்து, அல்லது பெண் இருக்கும் என்பது துப்பறிபவர்கள் கூறுவது. பெரிய கம்பனி M.D. க்கு அவர் அண்ணன் மகன் சூன்யம் வைத்துவிட்டான் எனில், அவனே M.D.யாக வர விரும்புகிறான் என்பார்கள். அவன் ஓர் ஏழைப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். அவளே இதற்கெல்லாம் காரணம் என்பார்கள். அந்தச் சூன்யம் அவரை எதுவும் செய்யாதது எப்படி என்று கேட்டால் அவர் தெய்வ பக்தியுள்ளவர், பஜனை பாடுவார், கோயில் கட்டியிருக்கிறார் என்பார்கள்.

தெய்வ பக்தியால் பணம் வந்ததா, பணம் வந்தபின் தெய்வபக்தி எழுந்ததா என்று ஆராய்ச்சி செய்தால் மூன்று தலைமுறைக்கு முன் அவர் முன்னோர் காளி கோயில் பூசாரியாக இருந்தார். அவருடைய பக்தி சிறந்தது என்று தெரிய வரும். தெய்வபக்தி, பக்தியாகவே இருந்திருந்தால் தலைமுறை தலைமுறையாகப் பூசாரியாகவே இருந்திருப்பார்கள். பணம் சம்பாதிக்க ஆரம்பித்தபின் பக்தியை மறந்திருந்தால், பணம் குடும்பத்தை நாசம் செய்திருக்கும். பணமும், பக்தியும் சேர்ந்திருந்ததால்தான் செல்வமும், வளமும் செழித்து வளர்ந்தன என்று தெரிய வரும்.

பக்தியைவிட பணம் மீறிய குடும்பங்களில் மனம் வறண்டு, உறவு கருகி, உணர்ச்சி துவண்டு போயிருப்பதைப் பார்க்கலாம். பணத்தை மீறிய பக்தியுள்ள குடும்பத்தினர்

ஆசாரம், கட்டுப்பாடு, ஒழுங்கு, பண்பு நிறைந்து செல்வம் பெற்றவராக இருப்பார்கள். பக்தியால் பணம் சம்பாதிப்பதும், பணவரவால் பக்தி நிலையை உயர்த்துவதுமுள்ள குடும்பம் சந்தோஷம், மனவளம், நிம்மதி, செல்வம், செல்வாக்கு, அமைதி நிறைந்திருந்ததாக இருக்கும்.

  • பணமே அடிப்படை என்பது உண்மை.
  • அதற்கும் அடிப்படையானது நம்பிக்கை.
  • பக்தி நம்பிக்கைக்கு நயத்தை அளிக்கிறது.
  • பக்தியும், பணமும் ஒன்றையொன்று தழுவும் நிலை.
  • வாழ்வின் சூட்சுமம் வளமாகும் நிலையாகும்.

முதலாளியானமேனேஜர்:

மானேஜருக்கு அதிகாரத்தைக் கொடுத்த முதலாளி எதையும் செய்யமுடியாது. அந்தக் கம்பெனி நடைமுறைகள் அறிவுக்கோ, வழக்கத்திற்கோ பொருத்தமானதன்று. எந்த நேரமும் முதலாளி மானேஜரை விலக்கும் நிலைமை போய், எந்த நேரமும் மானேஜர் போய்விடுவேன் என்று கிராக்கி செய்யும் நிலை எழும். முதலாளி என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதை மானேஜர் நிர்ணயிப்பார். ஊழியர்களுக்கு மானேஜரே முதலாளி எனத் தெரியும். முதலாளி பரிதாபமான நிலைமைக்கு வந்து, கம்பெனிக்கு வருவதை நிறுத்திவிடுவார். அனைவரும் முதலாளியை மறந்துவிடுவார்கள். முதலாளிக்கே தனக்கொரு கம்பெனியிருப்பது மறந்து போகும்.

ஆன்மா தான் பிறப்பெடுப்பதற்காக, ஓர் உடலைப்பெற்று அதில் மனத்தை ஏற்படுத்தியது. ஆன்மா நம் தலைவன். உடல் அதன் பீடம். மனம் அதன் கருவி, இன்றுள்ள நமக்கு ஆன்மா நினைவில்லை. மனத்தையே மனிதன் என்கிறோம்; உலகம்

அதையே பேசுகிறது. ஆன்மாவுக்கு அதிகாரம் இல்லை. எல்லாச் செயல்களையும் மனமே நிர்ணயிக்கிறது.

மனம் எனும் மானேஜர் ஆன்மா எனும் முதலாளியின் இடத்தைப் பறித்துக் கொண்டான்.

மனம் நினைத்தால்தான் எதுவும் நடக்கும். ஆன்மாவை நாம் மறந்துவிட்டோம். ஆன்மாவுக்கு நினைக்கவும் தெரியாத அளவுக்கு அது தன்னை மறந்துவிட்டது. ஆன்மா தன் அதிகாரத்தை உணர்ந்தால், அதன் உத்தரவை மனமும், உடலும் ஏற்று நடக்கும். அத்துடன் பிறர் மனமும், ஜடமும் ஆன்மாவின் உத்தரவுக்குப் பணியும். Silent will மௌனமான பின் மனத்தில் எழும் சக்தி ஆன்மாவின் சக்தியில்லை; ஆனால் மௌனம் ஆன்மாவை நோக்கிப் போகும் பாதை என்பதால் ஓரளவு அதை ஆன்மசக்தி எனலாம். நம் எண்ணத்தை வெளியிடாவிட்டால், பிறர் நம் எண்ணத்தைப் பேசுவது மௌனத்திற்குப் பிறர் மனம் கட்டுபடுதவதாகும். சற்றுத் தீவிரமாக நினைத்தால் ஜடமும் மௌன சக்திக்குப் பணியும். அடுத்த அறையிலுள்ள புத்தகத்தை நாம் எடுத்து வர நினைத்தால், எழுந்து போய் எடுத்து வருவதற்குப் பதிலாக மௌனமாக நினைத்தால் சற்று நேரத்தில் வேறொருவர், சில புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுப்பார். அத்துடன் நாம் நினைத்த புத்தகமும் இருக்கும். இது மனத்தின் மௌனசக்தி மற்றவர் மூலம் புத்தகத்தை (ஜடத்தை) பணிய வைப்பதாகும். ஆன்மா விழிப்படைந்து அதற்கு நம் உடலும் கட்டுப்பட்டால், இதே நினைவுக்கு அப்புத்தகம் தானே நம்மிடம் வரும். அன்னையினுடைய குருவின் மனைவி தாம் செருப்புப் போட வேண்டும் எனில் செருப்பு அவர் கால் வந்து மாட்டிக் கொள்ளும். இதையே ஆன்ம விழிப்பில்லாதவர் சிறுதேவதை மூலம் சித்தாக விளையாடுவதுண்டு. பணத்தை முறையாகச் சம்பாதிப்பது, கள்ளமார்க்கட்டில் சம்பாதிப்பது, திருடிச் சம்பாதிப்பதுண்டு, மூன்றும் பணமாகாது.

புழுக்கமாக இருந்தால் ஒரு விசிறியால் (பனை ஓலை விசிறி) விசிறிக் கொண்டால் காற்று அசையும். மின்சார விசிறியால் காற்று எழும். காற்று வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தால், ஏராளமான காற்று வீசும். விசிறி உடலுழைப்பால் (physical work) காற்றை நகர்த்துகிறது. மின்விசிறி மெஷினால் (mechanically) நகர்த்துகிறது. பிரார்த்தனை காற்றை வீசச் செய்வது ஆன்மாவுக்குக் காற்று பணிவதாகும்.

இருளில் புதைந்துள்ள ஆன்மா வெளிவந்து, மனத்தையும் உடலையும் அதிகாரம் செய்தால், உலகில் ஒரு புரட்சி நடக்கும். இதையே நூலின் கடைசி அத்தியாயத்தில் பகவான் எழுதியிருக்கிறார். மனிதன் நினைத்தது நினைத்த மாத்திரத்தில் நடக்கும். அது யோகத்தின் கடைசி கட்டம். நான் கூறும் மாற்றம், முதலாளி விழித்துக் கொண்டு அதிகாரம், கம்பனி, பணம் ஆகியன தன்னுடையன, ஏதோ காரணத்தால் மானேஜர் இன்று ஆட்சி செலுத்துகிறான் எனில், முதலாளிக்குப் புதிய மரியாதை வரும், நிலைமை மாறும், அவமானம் போகும், வசதி வரும், தொழிலாளிகள் மரியாதை செலுத்துவார்கள்.

இன்று நாம் எந்தப் பெரிய காரியத்தைச் செய்ய நினைத்தாலும் நம்மால் முடியுமா? நம்மால் முடியாது என்று நினைக்கிறோம். மாற்றம் வந்தால் எதுவும் முடியும் எனத் தெரியும், முயன்றால் முடியும்.

மாற்றம் ஏற்பட ஆன்ம விழிப்பு அவசியம்.

ஆன்மா விழிப்புற்றால், தவறாது மாற்றம் எழும்.

முத்து, வைரம் :

முத்தை முத்து என அறிந்தால் அதைப் பயன்படுத்தலாம். வைரத்தின் தன்மையை உணர்ந்தால் வைரத்தைப்

பயன்படுத்தலாம். முத்துவுக்கும், வைரத்திற்கும் பொதுவானது எது என விஞ்ஞானி அறிந்தான். அதை அறிந்ததால் அவனால் முத்தைச் செய்யமுடிகிறது, வைரத்தைச் செய்யமுடிகிறது. முத்தும், வைரமும் பிரம்மம் என அறிந்த யோகியால் முத்தை வைரமாக மாற்ற முடியும். பொருள்களின் தனித்தன்மை, பொதுத்தன்மை, சாரம் (individuality,commonality,essentiality) ஆகியவற்றை, பகவான் நூலில் இதுபோல் விளக்கியுள்ளார். நம் வாழ்வில் இத்தத்துவத்தை நாம் பயன்படுத்த முடியும்.

கோபம், பொறாமை என்று இரு குணங்களை நாம் அறிவோம். கோபம் இருந்தால், பிறர் மீது கோபப்படலாம். கோபம் எப்படி உற்பத்தியாயிற்று, பொறாமை எப்படி வந்தது என்ற ஆராய்ச்சியின் முடிவில் நம்மால் கோபத்தை அழிக்க முடியும், பொறாமையை அழிக்க முடியும். இதே ஞானம் தைரியம், புத்திசாலித்தனம் ஆகியவற்றை உற்பத்தி செய்யமுடியும். இவையிரண்டும் பிரம்மம் என்று அறிந்தால் ஒன்றை மற்றதாக மாற்றலாம். கோபத்தைப் பொறாமையாக மாற்றலாம். கோபத்தைப் பொறாமையாக மாற்றுவது பயன் தாராது. பொறாமையைப் பெருந்தன்மையாக மாற்றுவதும் இதே சட்டப்படி என்பதால், அதைச் செய்வது பலன் தரும். குணங்களில் பொதுத்தன்மையை அறிந்தால் வேண்டாத குணங்களை அழிக்கலாம், வேண்டிய குணங்களை உற்பத்தி செய்யலாம். குணங்களின் சாரம் (esence) ஆதி, சொரூபம் என்று தெரிந்தால் தாழ்ந்த குணங்களை, உயர்ந்த குணங்களாக மாற்ற முடியும். மாற்றம் என்பது வேண்டாத குணங்களை வேண்டிய குணங்களாக மாற்றுவதாகும். எனவே மாற்றம் நமக்குப் பிரம்மத்தை உணர்த்தும்.

தீயகுணங்களை அழிக்க முடியும்.

தீயகுணங்களை நல்ல குணங்களாக மாற்ற முடியும்.

  • பொதுத்தன்மையை அழிக்க உதவும்.
  • சாரம் மாற்ற உதவும்.
  • குணத்தை மாற்றுவது பிரம்மத்தை உணர்வதாகும்.
  • எனவே மாற்றம் பிரம்ம ஞானத்தைத் தரும்.

சக்தியின் தரம் :

நேரு, பட்டேல், இராஜாஜி ஆகியவர்கள் நாட்டின் தலைவர்கள். இவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்தபொழுது அலகாபாத், அகமதாபாத், சேலம் ஆகிய ஊர்களில் இவர்களை அழைத்து முனிசிபல் சேர்மனாக இருக்கும்படிக் கேட்டுக் கொண்டார்கள். பிரதமமந்திரி, கவர்னர் ஜெனரலாகப் போகும் தலைவர்கள் முனிசிபாலிட்டி சேர்மனாக வேலை செய்தால், வேலையின் தரம் அளவு கடந்த உயர்வாக இருக்கும்.

நம் நாட்டில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ஆசிரியர்கள் 10 வகுப்பு படித்தவர்கள். கொஞ்ச நாள் முன்னதாக எட்டாம் வகுப்பு வாசித்தவர்களும் அங்கு ஆசிரியராக இருந்தார்கள். அதற்கு முன் 5ஆம் வகுப்பு படித்தவர்களும் ஆசிரியராக இருந்தார்கள். இங்கிலாந்தில் முதல் வகுப்பு ஆசிரியர் M.A. படித்திருப்பார். Ph.D. படித்த பின்னும் முதல் வகுப்பு ஆசிரியராக ஆரம்பிப்பதுண்டு. வகுப்பு குறைந்தால் பட்டம் அதிகம் என்ற நிலையும் உண்டு. அதனால் அந்நாட்டு படிப்பின் தரம் உயர்ந்ததாக இருக்கிறது.

நாம் வாழும் வாழ்வு (social life) சமூக வாழ்வு. இதை வெற்றிகரமாக நடத்த ( social personality ) சமூகத் திறனிருந்தால் போதும். ஆபீஸ் குமாஸ்தாவாக இருப்பதற்கோ, பெரிய ஆபீசராக இருப்பதற்கோ அப்படிப்பட்டவர்களுடன் பழகத் தெரிந்து, வேலையைச் செய்யத் தெரிந்தால் போதும்.

வாழ்க்கைச் சிக்கல்களை அவிழ்க்கத் தெரியவேண்டும் என்பது அவசியமில்லை. இதைவிட உயர்ந்த நிலை (psychological personality) மனிதனை அறிந்த மனநிலை. பிறர் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்க்கும் திறனுடையவராக இருப்பது. இவர்கள் சமூகத்தில் தலைவர்களாக இருப்பார்கள். குடும்பம் நடத்த இத்திறன் தேவையில்லை. இந்தத் திறமையிருந்து சிறிய உத்தியோகத்திலிருப்பவன், பெரிய அந்தஸ்துள்ளவனைப் போலிருப்பான். இதற்கடுத்த உயர்ந்த நிலை அரசியல் தலைமை (political personality). அதைக் கடந்தது ( psychological personality in public life). பொதுவாழ்வில் எழும் சிக்கலை அவிழ்க்கும் திறன். இது கடைசி கட்டமான திறமை. இதைக் கடந்தது யோக சக்தி (yogic power).

நாம் வாழும் எளிய குடும்ப வாழ்வை யோகசக்தியால் நடத்த முயன்றால், சிறிய காரியத்திற்குப் பெரிய சக்தியைப் பயன்படுத்துகிறோம். அதுவும் அன்னை சக்தி யோக சக்தியைப் பூரண யோகச் சக்தியாக்குவது. அதனால்தான் சில சமயங்களில் நாம் சிறிய காரியங்களைச் செய்ய முற்பட்டால், பெரிய மனிதர்கள் வந்து உதவி செய்வது. குக்கிராமத்திற்குக் கடனுதவியளிக்க பாங்க் சேர்மன் வந்து பேசியது அதுபோன்ற காரியம். Consultancy கன்ஸ்ல்ட்டிங் தொழில் ஆரம்பித்த புதிதில் நாட்டில் பெரிய கம்பனிக்காரர் வாடிக்கைக்காரராக வந்ததன் இரகஸ்யம் அதுவே. பொதுவாக மத்தியதரக் குடும்பங்கள் அன்னையிடம் வந்தபின், சக்தியின் அளவும், தரமும் அதிகமாக இருப்பதால் அளவுகடந்த பலன் பெற முடியும் என்பதால், மாற்றத்தை ஏற்பவருக்கு வருமானம் 10 மடங்கு உயரும் என்று நான் சொல்கிறேன். சக்தி தரம் மிக உயர்ந்ததாதலால், பலனின் தரம் அளவுகடந்து உயரும் வாய்ப்புண்டு.

கனவுலகம் :

இல்லாததை நாம் கனவு என்கிறோம். கனவில் கண்டதைக் கருத்தில் கொள்வதில்லை. கனவின் வகைகளை நூலில் பகவான் எழுதுகிறார். கடந்த கால நினைவு கனவாக வரும். கற்பனையும் கனவாக எழும். இனி நடக்கப் போவதும் கனவுலகம் அறிவிக்கும் என்றெழுதியவர், ஒரு வகையான கனவுக்கு நனவுலக உண்மையுண்டு என்றும் எழுதுகிறார் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சூட்சுமத்தில் முதலில் உருப்பெற்று, பிறகு நம் உலகில் நடப்பதால், அதுபோல் உருவாகும் நிகழ்ச்சி கனவில் தோன்றினால், அதற்கு உண்மையுண்டு, உண்மையான பலன் உண்டு என்கிறார்.

அன்னையிடம் தாம் கனவில் புலியைப் பார்த்ததாகவும், புலி தன்னை நகத்தால் கீறியதாகவும் ஒரு சாதகர் சொன்னபொழுது, அன்னை கீறிய இடத்தைப் பார்த்தார். கனவில் கீறினாலும், கீறிய இடத்தில் காயம்படும் அளவில் கனவுக்குச் சில சமயங்களில் உண்மையுண்டு என்றார்.

அன்பரின் வாழ்வில் துரோகம் எழுந்து, தன்னைப் பூர்த்தி செய்துகொண்டு தம் திருவிளையாடல்களை நெடுநாள் நீட்டித்தபொழுது, அன்னையின் அருள், விஸ்வாசத்தைச் சிறிதளவு எழுப்பியது. துரோகம் பல்வேறு கட்டங்களை எட்டியபொழுது, விஸ்வாசமும் வளர ஆரம்பித்து அதற்குரிய பல்வேறு கட்டங்களைத் தொட்டது. துரோகம் வலுவிழந்து, விஸ்வாசம் வாழ்வில் பலிக்க ஆரம்பித்தது. பலிக்க ஆரம்பித்த விஸ்வாசம் சிறு பலனில் ஆரம்பித்து, வாழ்க்கைப் பலனாக வளர்ந்து வந்தது. விஸ்வாசம் பல ரூபங்களிலும், பல இடங்களிலும் பக்தியாய் மிளிர்ந்து பலன் தெரிய ஆரம்பித்தது. துரோகமும், நன்றியும் பல்வேறு அளவில் எழுந்து அவர் வாழ்வில் போரிட்டன. நன்றி பலித்து அன்னைக்கேயுரிய அருட்பலன்கள் தெரிய வந்தன.

துரோகத்தின் விளைவுகளை நட்பிலும், உறவிலும், சேவையிலும், பொருளிலும், செய்யும் காரியங்கள் அனைத்திலும் பெருவாரியாக அனுபவித்ததே அவர் வாழ்வின் முக்கிய அம்சம். அதேபோல் சிறு அளவில் விஸ்வாசம், நன்றி, நல்லது, அவற்றிற்குரிய பலனை, சொல்லாகவும், உணர்ச்சியாகவும், நிகழ்ச்சியாகவும், செயலாகவும், (human relationships) மனித உறவாகவும் நனவுலகத்தில் எழுப்பின. அவை ஒரு சமயம் கனவுலகத்திலும் அதேபோல் தோன்றின. நன்றிக்குரிய சொற்கள் காதில் விழுந்தன. நன்றியுணர்வை ஒரு சிலர் தெரிவித்தனர். செயலாகவும் அவை நிகழ்ந்தன. நனவுலகில் செயலின் அளவு, தரம், சிறிது சிறிதாக வளரும் பொழுது, கனவுலகில் ஒரு நாள் அவை தென்பட்டன. நன்றியை மனிதன் தெரிவிப்பது குறைவு. பிறரிடமிருந்து பெறுதல் அரிது. கனவில் சொல் ஒலித்தது. உணர்வும் எழுந்தது. உடலும் நன்றியை உணர ஆரம்பித்து, செயலாகக் கனவில் ஒரு சமயம் பூர்த்தியாகும்பொழுது ஒரு நிமிஷம் உச்சகட்டத்தையும் அடைந்ததை அன்பர் நனவுலக உண்மையுணர்வாகப் போற்றினார்.

அன்றே வாழ்வு பலன் தர ஆரம்பித்தது. பெரிய வாய்ப்புகள் வந்து பலிக்காமல் போனவை மூன்று மீண்டும் உயிர்பெற்றன. உயிர் பெற்றெழுந்த வாய்ப்பின் சுவடுகள் கனவுலக ஆனந்த நன்றியின் அனுபவத்தைப் பிரதிபலித்தது ஆச்சரியத்தைத் தந்தது. அன்னை ஜீவியத்தில் நன்றியுணர்வுக்குக் கனவிலும் கனத்த உண்மையுண்டு எனத் தெரிந்தது. கனவிலும் அன்னை உண்மையாகிறார்.

மாற்ற முடியாத தலைவிதிமனிதனின் பூரணச் சுதந்திரம் (fate & free will)

விதியை மதியால் வெல்லலாம் என்பது மனித நாகரீகத்தின் வரலாறு. மனிதனுக்குச் சுதந்திரம் இல்லை.

குடும்பம், ஊர், உலகம், சர்க்கார், சமூகம், மனச்சாட்சி, சட்டம் ஆகியவை மனிதன் தன்னிஷ்டப்படி நடப்பதைத் தடுக்கிறது. சுயநலமாக நடக்க முனைந்தால் குடும்பம் தடுக்கிறது. அடுத்தவனுக்குத் தீங்கு செய்ய நினைத்தால் ஊர் அனுமதிக்காது. சட்டத்தை மீற சர்க்கார் அனுமதிக்காது. மனச்சாட்சி நம் ஆசைகளில் ஆயிரத்தை அனுமதிக்காது. அதனால் மனிதன் (fate) விதிப்படி நடக்க விரும்பினாலும், சூழ்நிலை ஆயிரம் தடைகளை ஏற்படுத்தி அவன் சுதந்திரத்தைப் பறிக்கின்றது. இந்தத் தடைகள் எதுவும் இல்லாத நிலை ஒன்றிருந்தால் மனிதன் தன் இஷ்டப்படி, ஆசைப்படி, தடையின்றி நடப்பான். அப்படி நடக்கும்பொழுது அவனது விதி செயல்படும். விதியை நிர்ணயிப்பது ஜீவாத்மா. எனவே மனிதச் செயலின் சிறு அம்சங்களும்அடுத்த நிமிஷம் நான் என்ன செய்யப் போகிறேன், எத்தனை வார்த்தை பேசுவேன்விதியால்நிர்ணயிக்கப்படுகின்றன. அதாவது ஜீவாத்மாவால் நிர்ணயிக்கப்படுகிறது. ஜீவாத்மா, பரமாத்மாவின் பகுதி என்பதால், பரமாத்மா மனிதனின் சிறு அசைவுகளையும் நிர்ணயிக்கின்றது.

எனவே பரமாத்மாவின் பூரணச் சுதந்திரத்தை அனுபவிக்கும் மனிதன், தன் தலைவிதிப்படி நடக்கின்றான்.

மனிதன் தன்னை மனிதன் எனக் கருதினால் விதி செயல்படுகிறது, ஜீவாத்மா எனக் கருதினால் அவன் செயல் மாற்றமுடியாத விதி என்பதற்குப் பதிலாக, ஜீவாத்மா நிர்ணயிக்கும் செயலாகிறது; தன்னை, பரமாத்மாவாக அறிந்தால், பரிபூர்ணச் சுதந்திரமாக மனிதன் உணர்ந்து தன் வளர்ச்சியைத் தானே நிர்ணயிக்கும் செயலாக அவன் வாழ்வு மலருகிறது.

நான் கூறும் மாற்றம் மனிதன் தன்னை ஜீவாத்மாவாக அறிந்து, விதியை மாற்றி, வாழ்வாக வாழ்வதாகும்.