அன்னை பக்தனில் ஜனிக்கும் மார்க்கம் மாற்றமாகும். அதுவே பரமாத்மா பக்குவமான ஆத்மாவின் ஜீவாத்மாவாக ஜனிப்பதைப் போன்றதாகும்.
மனிதன் அறியாதது :
அன்னையை அழைத்தால், க்ஷணத்தில் பலன் வருவதைப் பார்த்த பக்தர்கள், பல நாட்கள் செய்யும் பிரார்த்தனை, பல வருஷங்களுக்கு நீடிப்பதையும் கண்டுள்ளனர். இரண்டையும் கண்டவர்கள் எப்படிப் புரிந்து கொள்வது?
அன்னை சக்தி செயல்பட நேரம் தேவையில்லை.
அதுவே உண்மையானால், ஏன் வேறொரு பிரார்த்தனை தாமதமாகிறது? இதற்கு மனித சுபாவத்தின் பல அம்சங்கள் காரணங்களாகும். அவற்றுள் முக்கியமானது ஒன்று.
அறிவு கூடாது என்பதை ஆசை கேட்பது,
என்ற மனநிலை மனிதனுக்குண்டு. அறிவும், ஆசையும் ஆமோதித்தால்தான் பிரார்த்தனை பலிக்கும். நமக்குள் பிணக்கு இருப்பதால் பிரார்த்தனை அன்னையை எட்டுவதில்லை. அரிபொருளாக வாழ்வில் நடக்கும் ஒன்றை உதாரணமாக குறிக்கின்றேன். பெரிய முதலாளி, நம்பிக்கையான ஜெனரல் மேனேஜருக்கு அதிகச் சம்பளம், அளவு கடந்த உரிமை, சலுகை கொடுத்துள்ள நேரம், முதலாளி அவருக்கும் பங்கு கொடுத்துக் கூட்டாளியாக்க விரும்பினால், எந்த மானேஜரும் உடனே ஏற்றுக் கொள்வார். முதலாளிகள் இதுபோல் நடப்பதில்லை. நடந்தால், அதை ஏற்கத் தயங்கும் மானேஜரே என் உதாரணம். மானேஜர் மனம், இன்றுள்ள நிலைமை நீடித்தால் போதும். நெருங்கி வந்தால், இதுவும் போய்விட்டால் என் செய்வது? என்று சொன்னால், அந்த நேரம் அவர் பிரார்த்தனைக்கு அவர் மனமே தடையாக இருக்கிறது. முதலாளி சொல்வதை
அப்படியே ஏற்க ஆசை அதிகமாக இருந்தாலும், அது கூடி வரச் செய்யும் பிரார்த்தனையை அவர் மனதிலுள்ள பயம் தடுப்பதால், முதலாளி சொன்னது அப்படியே நின்றுவிடுகிறது. பலிப்பதில்லை. அல்லது பலிக்க நெடு நாளாகும்.
நம் ஆசை தீவிரமாக நாடுவதை நமது அறிவு தீவிரமாகத் தடை செய்வதுண்டு.
எத்தனை மாதமாகப் பிரார்த்திக்கின்றேன், பலிக்கக் கூடாதா என்று ஆசை தீவிரப்படும்பொழுது கூடவே வேண்டாம் ஆபத்து என்று அறிவு குரல் எழுப்பும். இக்குரலை மனிதன் எழுப்பாவிட்டால், உடனே பலித்து விடும் என்பதை அறியவில்லை என்கிறார் பகவான். வேண்டாம் என்பது தடை, பலிக்குமா என்பது தடை, பாராமுகமாக இருப்பது தடை, நிச்சயமாகப் பலிக்காது என்பதும் தடை, என தடைகள் மனதில் பல்வேறு உருவங்களில் எழுந்தபடியிருக்கின்றன.
தடையின்றி மனிதன் கேட்பதை, தடையின்றிப் பெறலாம் என்று அவன் அறியவில்லை. அறிந்தால் கணம் தரியான் மனிதன்
என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.
அம்மனநிலையால் நாம் எதையும் பெறலாம் என்பது அன்னையின் அருள். அத்திறன் மனிதனுக்கிருப்பதால்தான் 30,000 வருஷம் 30 வருஷமாகச் சுருங்க முடியும் என்று பகவான் அறிவித்தது.
இங்கு நான் கூறும் மாற்றம் என்பது, மனம் தடை எழுப்பக் கூடாது என்பதே. அதனினும் அடுத்த உயர்ந்த நிலையுண்டு. தடையில்லாத மனம், ஆசையைப் பூர்த்தி செய்வது முதல் நிலையானால், தடையில்லாத மனத்தால் ஆசையை விட உயர்ந்ததைப் பெறலாம். அறிவு ஆமோதிப்பதை
ஆசையும் ஆமோதித்தால், மனத்தால் தடையை எழுப்ப முடியாது. ஆசை பூர்த்தியாகும். ஆசை என்பது ஆசையின் உருவத்தைத் தவிர்த்து, அறிவின் சிறப்பைத் தாங்கி வருவதால், ஆசையின் குறை அங்கு இருக்காது.
அறிவுக்குரியதை ஆசை நாடினால், ஆசையின் குறையிருக்காது, அறிவின் தடையும் இருக்காது. பலிப்பது தாமதம் ஆகாது.
இதை நமது பாஷையில் சொன்னால்,
உயர்ந்ததற்கு ஆசைப்பட்டால், உடனே பலிக்கும்.
இன்று மனிதன் ஆசைப்படக்கூடாது, உயர்ந்தது நமக்கில்லை, உயர்வு பலிக்காது என்று நினைக்கிறான். ஆசை அறிவால் உயர்ந்து, உயர்ந்ததை நாடினால், உடனே பலிக்கும் என்பது மனிதன் அறியாதது என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.
மலை ரோடு, வெந்நீர் :
டேராடூனில் உள்ள மகளை பக்தர் பார்க்கப் போயிருந்தார். மருமகனுடைய காரில் வெளியில் சென்றனர். பிரேக் வேலை செய்யவில்லை. கார் மேட்டை நோக்கிப் போகும் ரோட்டில் போய்க் கொண்டிருந்ததால், இன்ஜின் கோளாற்றால் இன்ஜின் எடுக்கவில்லை. பிரேக் பிடிக்கவில்லை என்பதால், கார் பின்புறமாக நழுவ ஆரம்பித்தது. இது பேராபத்து. எதுவும் செய்ய முடியாத நிலை. எதுவும் தோன்றவில்லை. பக்தர் அன்னையைத் தீவிரமாக அழைத்தார். கார் நிற்கவில்லை. பிளசிங் பாக்கெட்டைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு அதிதீவிரமாக அன்னையை அழைக்கவே உதவி செய்ய
வந்தவர்கள் பெருங்கற்களை டயர் அடியில் போட்டனர். முழுப் பலனில்லை. ஆபத்து விலகவில்லை. 5 ரூபாய் காணிக்கையை எடுத்து பிளசிங் பாக்கெட்டைத் திறந்து உள்ளேயுள்ள புஷ்ப பிரசாதத்தின் மீது படும்படி வைத்தார். கார் நின்றுவிட்டது. மனிதர்கள் பிழைத்தார்கள்.
அன்னையை அழைத்த குரல் முழுப்பலன் தரவில்லை. காணிக்கை, அழைப்பு செய்யாததைச் செய்யும் என்பது அன்பர் அனுபவம். அழைப்பு (vital) உயிரிலிருந்து எழுவது, காணிக்கை உடலைப் பிரதிபலிப்பது. உடல் உயிரை விட ஆழமானது என்பதால், அதிக சக்தி வாய்ந்தது. உயிரால் வாழ்பவருக்கு அன்னை அழைப்புக்கு பதில் அளிப்பார். உடலால் வாழ்பவருக்கு காணிக்கை பலன் தருகிறது.
குரல் அன்னையை எட்டவில்லை என்றவுடன், நமக்கும் அன்னைக்கும் உள்ள இடைவெளியை நீக்க பக்தர் செய்த உபாயம் சமயோசிதம். உடன் பலன் கிடைத்தது. உடன் திறனை பக்தர் அறியும் நிகழ்ச்சியாக இது அமைந்தது.
உடல் அற்புதங்களுக்கு உறைவிடம் என்பது நாம் அறியாத உண்மை. அன்னையை அழைத்தால் ஒருவருக்கு அத்தனையும் பலிக்கிறது, ஏன் எனக்கு அதுபோல் பலிக்கவில்லை என பக்தர் பலவிதமாக யோசனை செய்யும் நேரம். நம்பிக்கையில் செய்த சோதனை தண்ணீரை வாட்டத்திற்கு எதிராக அனுப்பியது. பக்தர் வெந்நீர் குழாயில் இன்னும் வெந்நீர் சூடாகவில்லை எனப் பார்த்து, குழாயைத் திறந்து, நீரைக் கையால் பிடித்தார். எதிர்பாராமல் அது வெந்நீராகவும், அதிக சூடாகவுமிருந்தவுடன், கை துடித்தது, கைக்கு என்ன போடலாம் என யோசனையும் செய்ய முடியாத அளவு கை துடிக்கிறது. அதையும் மீறி மனநிலையைப் (mind-set) பற்றிய எண்ணம் மேலோங்கியது. குளிர்ந்த நீர் என நான் நினைத்தேன். இந்த விரலே குளிர்ந்த நீர் என நினைத்தால், அம்மனநிலை நீரைக் குளிர்ச்சியாகக் காண வேண்டும்
அல்லவா? எனத் தோன்றியது. அதே நிமிஷம் விரல்களில் எரிச்சல் அறவே மறைந்துவிட்டது. மனம் கூறியதை (உடல்) விரல்கள் ஏற்றன. சூடு மறைந்தது. உடல் இதுபோல் மரணம் இல்லை என்பதை ஏற்றால், அதனால் சாக முடியாது!
பாய்லர், சைக்கிள் :
வீட்டிலுள்ள வெந்நீர் பாய்லரை எவருக்கும் பிடிக்கவில்லை. ஏன் இந்தக் காலத்திலும் இதை இங்கு வைத்திருக்கிறீர்கள் என்று தினமும் அனைவரும் கேட்டபடி இருந்தபொழுது, ஒரு நாள் தோட்டத்திலிருந்த பாய்லர் திருடு போயிற்று.
பொருள் மீது கவனம், பிரியம் வேண்டுமென அன்னை கூறும் பொழுது எங்கள் வீட்டாரின் வெறுப்பு தவறு. நானும் அதில் பங்கு கொண்டேன் என்றுணர்ந்த பக்தர் இனி என்ன செய்வது என்று அன்னை படத்திற்கு முன் சென்று செய்த தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மூன்று நாட்கள் கழித்து, தோட்டத்து வீட்டுப் பெண்மணி வந்து தொலைந்து போன பாய்லரைப் பற்றி விசாரித்துவிட்டு, எங்கள் வீட்டு வேலை – மாடிப்படி கட்டுவது – உங்கள் வீட்டில் திருடன் வர உதவியது. அதனால் நாங்களே உங்கள் பாய்லருக்குப் பொறுப்பு என்றுக் கூறியதைப் பக்தரால் நம்ப முடியவில்லை. மேலும், பாய்லர் விலையை நான் கொடுத்துவிடுகிறேன். என்னிடம் பணம் இல்லை. அதனால் ரூ. 1000 பெறுமான சைக்கிள் ஒன்றைத் தருகிறேன் என்று சொல்லி, சைக்கிளைக் கொண்டு வந்து கொடுத்தார்! நாமறிந்த மனித வாழ்வுக்குப் புதிய அனுபவம். அன்னை வாழ்வில் தவறாது நடப்பது.
அன்னையிடம் மன்னிப்புக் கேட்க மாறிய மனம், பாய்லரைக் கண்டு வெட்கப்பட்ட மனநிலையிலிருந்து, அது
தவறு என மாறியது. இது உண்மையான மாற்றம் என்பதால், உலகம் அறியாத பலன் வருகிறது. பலனையும் முக்கியமாகக் கருதாமல், பலன் வந்த வழியைக் கருதினால், இந்தப் பக்தர் மாற்றத்தை மேற்கொள்ளலாம். எல்லா நிகழ்ச்சிகளிலும் இதே மனநிலையிருந்தால் மாற்றம் பூர்த்தியாகும்.
மனம் தன் ஆராய்ச்சியை அறியும், விஷயத்தை அறியாது :
ஆபீஸ் குமாஸ்தா, காவல்காரன், கட்சித் தொண்டன், அரசியல் தலைவர், உயர்ந்த சர்க்கார் அதிகாரி, ரிஸர்வ் பேங்க் கவர்னர், மத்திய நிதி மந்திரி போன்றவர்களைச் சந்தித்து அவர்கள் ஆர்வமாக நினைக்கும் விஷயங்களில் ஈடுபட்டால், குமாஸ்தா தன் சம்பளம், சலுகை பிரமோஷன், சௌகரியத்தை மட்டும் நினைப்பது தெரியும். ஆபீசைப் பற்றிய நினைவு இருப்பதாகத் தெரியாது.
காவல்காரனுடன் ஒரு மணி பேசிய பிறகு, இந்த ஊர் ழுவதும் திருடர் மட்டும் இருப்பதுபோலவும், அனைவரும் அவன் தோட்டத்தையே நினைத்துக் கொண்டிருப்பது போன்றும் தோன்றும். கட்சியில் தன் சேவை எவர் கண்ணிலும் படவில்லை, இந்தக் கட்சியிருப்பதால் எனக்கோ, என் மனைவிக்கோ திருப்தியில்லை, எதிர்காலம் சூன்யமாக இருக்கிறது என்றெல்லாம் கேள்விப்படும்பொழுது தொண்டருடைய சேவை எங்கிருக்கிறது என்ற கேள்வியும், தொண்டர் கட்சியின் எதிர்காலம் பற்றிப் பேசவேயில்லை எனவும் தோன்றும். நிதி மந்திரி புள்ளி விவரங்களிலும், பண வீக்கத்திலும், வரி வசூலும் மனதைச் செலுத்தியதைக் கண்டால், நாடு, அதன் அரசியல் பிரச்சினைகள், எதிர்காலத் திட்டங்கள், அவர் மனதில்லை எனத் தெரியவரும்.
தங்கள் சௌகரியத்திற்காக ஸ்தாபனத்தில் உள்ளவர்கள் நிலையிது. குமாஸ்தா ஆபீசில் சம்பளம் வாங்கி இட்ட வேலையைச் செய்யவந்தவர். ஆபீசை அவர் ஏற்படுத்தவில்லை. அவரால் ஆபீசை நினைக்க முடியாது. ரிஸர்வ் பேங்க் கவர்னர் சம்பளம் பெறும் ஊழியர். அவர் பாங்கை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர். அவர் நாட்டைப் பற்றிச் சிந்திக்க வழியில்லை. அவருக்கும், நாட்டுக்கும் மனத்தளவில் சம்பந்தமில்லை. நாடு மக்களால் ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள் சர்க்காரை நடத்துகின்றனர். அவர்களால் நாட்டைப் பற்றி நினைக்க முடியும். அவர்களுக்குத்தான் நாடு என்றால் என்ன என்று தெரியும். IAS ஆபீசரும், பாங்க் சேர்மனும் பெரிய அதிகாரிகளானாலும், அதிகாரிகளே தலைவர்கள் இல்லை.
1969இல் பாங்குகளைச் சர்க்கார் உடமையாக்க பாங்க் சேர்மன்களைச் சேர்த்துக் கூட்டம் போட்டு இந்திராகாந்தி சொன்னார். நாட்டின் பெரிய பேங்க் சேர்மன் எழுந்து, இந்தத் தேசீயமயக் கொள்கை பாங்குக்கோ, நாட்டுக்கோ, மற்ற எவர்க்கோ நல்லது செய்யாது என்றார். கூட்டம் கலைந்த பின், இந்திரா அவரைப் பற்றி, விவரம் தெரியாதவர் என்றார். அன்று அத்தனை பாங்குகளிலும் 4000 கோடி டெபாசிட் இருந்தது. இன்று அதே டெபாசிட் 2,87,000 கோடியைத் தாண்டிவிட்டது. தமிழ்நாட்டில் அன்று 10,000 சிறு தொழில்கள் இருந்தன; இன்று இலட்சம் தொழில்கள் உள்ளன. பாங்க் தேசீயமயமானதால் 51 மில்லியன் டன் உணவு உற்பத்தி 187 மில்லியன் டன் உற்பத்தியாகிறது. அது இவ்வாண்டு 191 மில்லியனாகும் என்கிறார்கள். அதிகாரி எவ்வளவு பெரிய நிலையிலிருந்தாலும், அவருக்குத் தம் வேலைதான் தெரியும், நாடு அவர் கண்ணுக்குப் புலப்படாது, ஏனெனில் அவர் சிறிய மனிதர், அது அவர் கடமையன்று.
குடும்பம், ஆபீஸ், கட்சி, ஸ்தாபனம், கல்லூரி, ஆசிரமம் போன்ற இடங்களில் இவற்றால் பயன் பெற வருபவர்கள், இருப்பவர்கள் உண்டு. இவை பிறருக்குப் பயன்பட வேண்டும் என்று இவற்றை அமைப்பவர், அமைத்து நிர்வாகம் செய்பவருண்டு. அவர்களுக்கு இலட்சியம் புரியும், ஸ்தாபனம் புரியும். முதல் வகையைச் சேர்ந்தவர்க்குத் தாங்களும், தங்கள் வசதியும் புரியும். இவர்களால் ஸ்தாபனம் வளராது, நன்மை பெறாது. ஸ்தாபனத்தில் ஒரு கோட்டைக் கிழித்தால், இவர்கள் கோட்டுக்கு மேலும், கீழும் இருப்பார்கள். மேலே இருக்க வேண்டியவர்கள் கீழே வந்தால், அது துர்ப்பாக்கியம். கீழேயுள்ளவர் மேலே போனால் அது மாற்றம்.
சத்தியம் உலகைச் சிருஷ்டித்தது. ஆனந்தத்தால் சத்தியம் உலகையும், பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்தது. சத்தியத்திற்கும், ஆனந்தத்திற்கும் இடைப்பட்டது ஜீவியம்.
சத்து – சித்து – ஆனந்தம் (சத்தியம்) – (ஜீவியம்) – (ஆனந்தம்)
சத்திய ஜீவியம் (Supermind)
மனம்
மனம் சிருஷ்டியின் கருவி. மனம் சிருஷ்டிக்கவில்லை. சர்க்கார் ஆபீசை ஏற்படுத்தியது. குமாஸ்தாவும், அதிகாரியும் சர்க்காரின் கருவிகள். அவர்கள் தங்கள் கடமைகளை அறிவார்கள். சர்க்காரின் நோக்கத்தையோ, இலட்சியத்தையோ அறிய மாட்டார்கள். அதுபோல் மனம் தன் சிந்தனையை அறிய வல்லது. உலகைச் சிருஷ்டித்த சத்தியத்தை அறியாதது. நூலின் முக்கியமான கருத்துகளில் இது ஒன்று. குடும்பத்தில் நாம் பலனை உற்பத்தி செய்பவராக இருக்கலாம், அல்லது
பலனைப் பெறுபவராக இருக்கலாம். பலனை உற்பத்தி செய்பவர் சத்தியத்திற்கு உதாரணமாகவும், பலனைப் பெறுபவர் மனத்திற்கு உதாரணமாகவும் சொல்லலாம்.
பலனைப் பெறும் நிலையிலிருந்து பலனை உற்பத்தி செய்யும் நிலைக்கு மாறுவது மாற்றமாகும்.
இது மனத்திலிருந்து, மனத்தைக் கடந்து சத்தியத்திற்கு (reality) மாறுவது போலாகும்.
மனம் சத்தியத்தை அறிய முடியாததுபோல் மனிதன் பெரிய இலட்சியத்தை அறிய முடியாது. சிறிய மனிதன் மனம் மாறி பெரிய இலட்சியத்தை அறிய முயன்றால், அது முடியும்.
உறவு :
மனிதர்களுள் உள்ள உறவு, அன்னையிடம் உள்ளது என இரு வகைகளாக நாம் பிரிக்கலாம்.
அடிப்படையில் ஓர் உறவு இருக்க வேண்டியது போலிருப்பதற்கு ஓர் அடையாளம்;
பிணக்கு ஏற்பட்டால், அதன் மூலம் உறவு நெருங்கும், இதுவரை இல்லாத நெகிழ்ந்த நெருக்கம் ஏற்படும்.
நட்பு, உடன்பிறப்பு, தம்பதிகள், பெற்றோர் இவரோடுள்ள உறவுக்கு இலக்கணம் உண்டு. நட்பு நம்பிக்கையான பிரியத்தால் ஏற்படுவது; உடன்பிறப்பு இரத்தபாசத்தால் எழுவது; தம்பதிகள் ஒருவர் குறையை அடுத்தவர் நிறைவாகக் கருதுவர்; பெற்றோர் சிறு வயதில் பிள்ளைகளின் பொறுப்பையும், வயோதிகத்தில் பிள்ளைகள் அவர் பொறுப்பையும் ஏற்பது இவற்றிற்குரிய அடிப்படை. இந்த அடிப்படை சரியானால், பிணக்கு ஏற்பட்டால், அது கரைந்த பின், நெருக்கம், நெகிழ்ந்த நெருக்கமாகும். ஏன் பிணக்கு வர வேண்டும் எனலாம். பிணக்கு விரசமாக இருக்க வேண்டும் என்பதில்லை; பிணக்கில்லாமல் உறவில்லை. ஒரு
சைக்கிள், கார் போன்ற ஓடும் வண்டி எப்பொழுதும் ஓடிக் கொண்டேயிருக்க முடியாது. நின்றுவிட்டால், வண்டி தவறு என்றாகாது. நின்று, ஓடுவதுதான் காருக்கு இலட்சணம். நின்றால் பிறகு நன்றாக ஓடும். நிற்கக் கூடாது என்பவர் வண்டி என்றால் என்ன என்பதை அறியாதவர்.
உறவில் கருத்து வேற்றுமை, சொல் வேற்றுமை, உணர்ச்சி வேற்றுமை எழுந்தபடியிருக்கும். வேற்றுமையை மீறி உறவு நிலைக்க வேண்டும். வேற்றுமை எழக்கூடாது என்றால், உறவு சிறக்காது. ஓடும் வண்டி சர்வீஸுக்கோ, ரிப்பேருக்கோ நிற்கிறது. ஓய்வுக்காக நிற்கிறது. நின்ற பிறகு, சர்வீஸ் செய்த பிறகு, ரிப்பேரான பிறகு வண்டி மேலும் நன்றாக ஓடும்.
அன்னையோடு உறவு எனில் என்ன? உறவு உணர்வால் ஏற்பட்டது. உணர்வு தானே அன்னையை நோக்கிப் போய் உறவாகிறது. அன்னை நினைவில், அவ்வுணர்வில் வாழ்வது, வாழ்வு வளம் பெறுவது, வாழ்வு ஜீவியமாவது, அன்னை உறவு. எக்காரணத்தை முன்னிட்டும் அன்னை மீது சந்தேகம் எழுந்தால், அன்னை பலிக்குமா என்று தோன்றினால், அன்னைக்கு அளவு உண்டு அல்லவா என்ற எண்ணம் தோன்றுபவர்க்கு அன்னை உறவு அமையாது. உறவு உணர்வில் எழுவது. எண்ணம் தோன்றினால், அதாவது நினைத்தால், உணர்வுக்கு வழியில்லை. உறவுக்கு வேலையில்லை.
அன்னை உறவில் பிணக்கு வருமா?
அது பிணக்காக எழாது. பலிக்காமல் போகும். ஆனால் அன்னை மீது சந்தேகம் வராது. பலிக்காமல் போனது, பிணக்கு. பிறகு பலித்தால், பிணக்கொழியும். பிணக்கொழிந்த நிலையில், நெருக்கம் அதிகமாகும். பக்தி வலுவடையும்.
பிணக்கு, மனதில் விரிசல் ஏற்படுத்தினால், உறவின் அடிப்படை சரியில்லை.
கெட்டுப் போன விஷயம் அன்னை மீது நம்பிக்கையைக் குறைத்தால் முதலில் இருந்தது நம்பிக்கையில்லை, மூட நம்பிக்கை என்று பொருள்.
வதந்தி, பொறாமை, கோள், கயிறு திரித்தல் :
பெருந்தன்மை, நல்லெண்ணம், ஒத்துழைப்பு, பாராட்டு போன்ற உயர்ந்த குணங்கள் மட்டும் குடும்பத்திலிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. பொறாமை, பொய், போட்டி, கோள், வதந்தியும் இருக்கும். இதுவே இயல்பு. இவை குறைவாக அல்லது பின்னணியில் இருப்பது நல்ல குடும்பம். இல்லாமலிருக்க வேண்டும் என்பது மனித சுபாவத்தையும், மனித வாழ்வையும் முழுமையாக அறியாதவர் நினைவு. கழிவு உறுப்புகளில்லா உடல் தேவை, உடல் கழிவுப் பொருள்களை உற்பத்தி செய்யக் கூடாது என்று நாம் நினைப்பதைப் போலிருக்கும் அது. அவை பின்னணியிலிருக்க வேண்டிவை, எழுந்தவுடன் விலக்கப்பட வேண்டியவை. ஜீரணத்தைப் பயிலும் மாணவன் எப்படி உணவுப் பொருள் ஜீரணிக்கப்படுகிறது, இரத்தத்தில் கலக்கிறது, உணவுப் பொருளிலிருந்து எது விலக்கப்படுகிறது, எப்படி விலக்கப்படுகிறது என அறிவான். தொடர்ந்து ஜீரணமாக, உடல் வளமாக இருக்க, கழிவுப் பொருள் உற்பத்தியாவது அவசியம். அது விலக்கப்படுதல் அத்தியாவசியம்.
அதேபோல் ஒரு குடும்பத்தில் அல்லது ஸ்தாபனத்தில் வரும் செய்திகள், நிகழ்ச்சிகள் எப்படிப் பயன்படுகின்றன, எப்படிப் பரவுகின்றன, மாறி வதந்தியாகின்றன என்று தெரிந்தால் வதந்தி செய்தியின் மறுபுறம் என்று புரியும். ஸ்தாபனத்துள் செய்தி விரைவாக பரவுவது வழக்கம். அப்படிப் பரவாவிட்டால் ஸ்தாபனம் இல்லை. இப்படிப்
பரவுவதால், ஸ்தாபனம் இருக்கிறது, வளர்கிறது என்று நாம் அறிவோம். இதுபோல் விரைவாகச் செய்திகள் பரவாத ஸ்தாபனம் இல்லை. இருந்தால் சீக்கிரம் அது ஜீவனிழந்து நசித்து விடும். கெட்ட செய்தியும் இதே முறையில் பரவும். அது வதந்தி. வதந்தியும், கோளும் அளவுக்குள் இருக்க வேண்டும், நம்மை மீறுதல் தவறு.
- குடும்பம் உயிர் பெறுவது விரைவாகச் செய்தி பரவுவதால்,
- விரைவாகச் செய்தி பரவாத குடும்பம் சீக்கிரம் அழியும்.
- தவறான செய்தி விரைவாகப் பரவுவது வதந்தி. வதந்தியை அடக்க முயல்வது சரி, அழிக்க முயல்வது தவறு.
- வதந்தியை அழித்தால் குடும்பமும் அழிந்து போகும்.
- வதந்தியைச் செய்தியின் மறுபுறமாகக் காண்பது விவேகம்.
- ஸ்தாபனத்தின் ஜீவநாடியில் வதந்தி உறைகிறது.
- வதந்தியை அழிக்க முயன்று ஜீவநாடியை அழிப்பது தவறு.
வதந்தி, அநீதி :
வதந்திக்குச் சொல்லிய சட்டமே அநீதிக்கும் உண்டு. நாம் நியாயத்தைப் போற்றுகிறோம். அநியாயத்தை வெறுக்கிறோம். தூய்மையை வாழ்த்துகிறோம். இழிவை நினைக்கின்றோம். ஞானம், உயர்வு, அஞ்ஞானம் தாழ்வு. இவை மனிதனுடைய அபிப்பிராயங்கள். இவற்றின் உண்மைச் சொரூபம் தெரிய பகவான் சிந்தனைமணிகளில் பல்வேறு கேள்விகள் எழுப்புகிறார்.
- கோரத்தை உலகில் தேடினேன், காணவில்லை.
- ஞானக்கண் திறந்தபொழுது, ஆபாசத்தின் பெருமை,
- விகாரத்தின் கவர்ச்சி, முடவனின் அழகு தெரிந்தது.
- மன்னிக்க வேண்டும் என்கின்றனர். எதை மன்னிப்பது,
- யாரை மன்னிப்பது, எதற்காக மன்னிப்பது?
- தெய்வத் திருக்கரம் என்னை அடித்தபொழுது, நான் கடவுளை மன்னிக்கவா?
- அடித்து என்னைத் தீண்டிய ஆண்டவா, மீண்டும் என்னைத் தீண்டாதே எனவா?
- தரித்திரத்தைக் கண்டு நான் பயந்தபொழுது என்னுள் மடமை உயிர்ப்பெற்று, உருவம் பெறுகிறது.
- பிறர் துன்பப்படும்பொழுது, அவ்வதிர்ஷ்டம் எனக்கில்லை என்று நான் நினைப்பதுண்டு.
- தூக்கு மேடைக்குப் போவது, அருளின் அழைப்பாகும்.
- அன்பின் செறிவால் ஆண்டவன் சித்ரவதை செய்கிறார்.
- பாவ புண்ணியம் என் கண்ணுக்குத் தெரியவில்லை. லீலையே நான் காண்பது.
- புழுதியில் புரளும் குழந்தையைக் கண்டபொழுது அதன் புனிதமே என் கண்ணில் பட்டது.
மனிதனின் பார்வைக்கு முழுமையில்லை. முழுமையற்ற நிலையில் செயலின் பகுதி பாவமாகவும், செறிந்த அன்பு சித்ரவதையாகவும், புனிதத்தின் புறப்பாடு புழுதியாகவும், அருளின் அழைப்பு மரணமாகவும், அதிர்ஷ்டம் தரித்திரமாகவும், கருணையின் தீண்டுதல் அடியாகவும், ஆன்மாவின் அழகு முகத்தின் விகாரமாகவும் தெரிகின்றன.
ஞான திருஷ்டி எழுந்தால் அநீதியின் அவசியம் புரியும், கோரம் அழகாக மாறும். இவை உயர்ந்த தத்துவங்கள். இவற்றைப் பயிலலாம். பயன் பெறலாம். அன்றாட வாழ்வில் இவற்றால் எப்படிப் பயன் பெறுவது? அதனால் மாற்றத்தை நாடுவது எங்ஙனம்?
புரியாவிட்டாலும், மனத்தளவில் துரோகியை நம் எதிர்கால வாழ்வைப் பண்படுத்தும் கருவியாகக் கருதினால், அவன் என்ன ஆகிறான் என்பதைக் கருதாவிட்டால், நம் எதிர்கால வாழ்வு பண்பு பெறும். மனம் விசாலமடையும். அன்னையை நெருங்கி வருவோம். வாழ்வில் அதிகம் சாதிக்கலாம். மனித வாழ்விலிருந்து, யோக வாழ்வுக்கு மாறலாம். புரிந்தாலும், புரியாவிட்டாலும், இவை உண்மை என ஏற்றுக் கொண்டு செயல்படுவது மாற்றத்திற்குதவும்.
பேரம் :
பேரம் பேசும் மனநிலை உயர்ந்த மனப்பான்மைக்கு எதிரி. உயர்ந்த மனப்பான்மை என்பது, கேட்டதைக் கொடுப்பது, அதுவும் கேட்கும் முன் கொடுப்பது, கேட்பதைவிட அதிகமாகக் கொடுப்பது. இவை அன்னையின் போக்கு. பேரம் என்பது, எவ்வளவு குறைவாகக் கொடுக்க முடியுமோ, அவ்வளவு குறைவாகக் கொடுக்க முயல்வது. இவை எதிரெதிரான நோக்கங்கள். நாம் அன்னையை நெருங்கிவர வேண்டுமானால் பேரம் பேசும் மனநிலையை விட்டுவிட வேண்டும். இன்றைய உலகில் பேரம் பேசாவிட்டால், நாம் சீக்கிரம் திவால் ஆகி விடுவோம். நம் சம்பளம் முதல் வாரத்தில் செலவாகும். பேரம் பேசக் கூடாது என்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடையவர் பேரம் பேசாவிட்டால், அதற்குப் பதிலாக நாம் நஷ்டப்படாமலிருக்க ஒரு வழி சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்.
நடைமுறை வாழ்வில் இதற்குப் பதில் இல்லை. ஆனால் பதிலேயில்லை என்று சொல்ல முடியாது. பதிலை அறிய நாம் பேரத்தின் உட்கருத்தை அறிய முன்வர வேண்டும். பேரம் பேசுவதன் மூலம் நாம் என்ன எதிர்ப்பார்க்கிறோம்? அநியாய விலைக்கு வாங்கக் கூடாது. நம் பொருளை அநியாயமாக இழக்கக் கூடாது என்று எதிர் பார்க்கின்றோம். இதற்கு, நமக்குத் தேவையானது வலிமை.
மார்க்கட்டில் ஒரு பொருளின் விலையை அதன் தரம், அடக்க விலை, பயன் ஆகியவற்றை மட்டும் கொண்டு நிர்ணயிப்பதில்லை. விற்பவர் யார்? ஏழை விற்றால் பொருளுக்கு விலை குறைவு. பணக்காரனிடமிருந்தால் அதே பொருளுக்கு விலை அதிகம். மார்க்கட் நிலவரப்படி ரூ.5000 பெறுமான சொத்தை, திவாலானவன் விற்பதால், ஏலம் எடுப்பதற்கு எவரும் முன் வரவில்லை. ரூ.1200 கடன் கொடுத்தவர் தம் கடனுக்காக அந்தச் சொத்தை ஏற்கவும் மறுத்தார். விலை விற்பவனைப் பொருத்தது. விற்பவன் ஏழையானால், அல்லது வெளியூர்க்காரனானால், அல்லது அவசரப்பட்டால், சொத்தின் விலை பாதியாகும். இதுவே பேரத்தின் உள்ளுறை உண்மை.
வலிமை என்பது பணத்தாலும், அந்தஸ்தாலும் வருவது. நமக்கு அதே வலிமை அன்னையால் வரும். அது பொறுமை, நிதானம் தெளிவு மூலமும் வரும். மனம் தெளிவு பெற்று, நிதானமாகப் பொறுமையாய்ச் செயல்பட்டால் அன்னை அதன் மூலம் பேரத்தில் நமக்கு வலிமையைத் தருகிறார் என்பதை பக்தர்கள் பார்க்காத நாள் இல்லை.
பெரிய உத்தியோகத்திலுள்ள நண்பரை அணுகி, உதவி கேட்டால் கொடுப்பாரா என்ற நிலையில், நண்பரை அணுகியவுடன், மனம் அன்னைக்குரியதாக இருந்தால், என்ன வேண்டும் என்று சொல்லுங்கள், செய்கிறேன் என்றவர் செய்த முறை தமக்கே செய்து கொண்டதைப் போலிருந்தது. மேலதிகாரிக்கு அவர் கீழ்ப்படிதல்போல் தாழ்ந்த பதவியிலுள்ள பழைய நண்பருக்கு உதவினார்.
- பேரம் என்பது பேச்சு முறை.
- மனம் தெளிவானால், வலுவாக இருக்கும்.
- அன்னைக்குரியவை நிதானம், பொறுமை.
- பொறுமையும், நிதானமும் வலிமையைத் தரும்.
- வலிமை நியாய விலையைப் பெற்றுத் தரும்.
- பேரம் பேசும் அவசியம் அன்பர்க்கில்லை.
உள்ளம் கனிந்தால் உலகமே உருகும் :
ரஷ்ய நாடுகளில் சமூகம், புரட்சியின் விளிம்பில் நிற்கிறது. உலக வங்கி வந்து தங்களாலானதைச் செய்தனர். பலன் எதிர்மாறாகக் கிடைத்தது. மேலும் எதைச் செய்வது, யாருடைய ஆலோசனையைக் கேட்பது என்று தெரியாமல் நிற்கிறார்கள். நாள் தள்ளிப் போனால், உள்நாட்டுக் கலவரத்தைத் தவிர்க்க முடியாது என்பது நிலை. மாஸ்கோவில் ஒரு மாநாடு நடத்தி, இதற்கு ஒரு வழியுண்டு என்று நாம் சொன்னதை மாஸ்கோ வல்லுநர்கள் ஆமோதித்தார்கள். நாம் சொன்னதை சர்வ தேசக் கமிஷன் தன் முத்திரையோடு சொன்னால் ரஷ்ய சர்க்கார் ஏற்கும் வாய்ப்புண்டு. நாம் சொல்லும் கருத்துகள் புரட்சிகரமானவை. ஸ்ரீ அரவிந்தர் உலகப் புரட்சியின் ஊற்றல்லவா? அவர் கருத்தை மேல்நாட்டு வல்லுநர்கள் கேட்டுக் கொண்டு எதிர்ப்பு எழுப்பாதது பெரிய விஷயம். தங்கள் கையெழுத்து கமிஷன் முத்திரை போட்டு சம்மதம் தெரிவிப்பது ஆஸ்திகன் நாத்திகத்தின் பெருமையை ஏற்பது போன்றது. நம்பிக்கையை அன்னை மீது வைத்து ரிப்போர்ட்டில் ஸ்ரீ அரவிந்தர் கருத்துகளைத் தாராளமாக எழுதினோம். பலத்த எதிர்ப்பும், மறுப்பும் எழும் என்று தெரியும். இருந்தாலும் செய்தோம். தலைவர் பரந்த மனப்பான்மையுடையவராதலால், அவர் ஆதரவு கிடைக்கலாம் என எதிர்பார்த்தோம். அவற்றுள் எதுவும் இன்று உலகப் பேரரங்கில் ஏற்றுக் கொள்ளப்படாதது. ரஷ்ய நாடுகளைச் சீர்திருத்துவது அவற்றுள் ஒன்று. 2000 A.D. யில் பின் தங்கிய நாடுகளில் 100 கோடி வேலை (job) உற்பத்தியானால் வேலையில்லாத் திண்டாட்டமிருக்காது, இல்லையெனில் பஞ்சமும், புரட்சியும்
வரும். 20 கோடி வேலையும் உற்பத்தி செய்யும் நிலையில் உலகம் இல்லை என்பது நிலை.
பூனாவில் செய்த ஆராய்ச்சியின்படி அந்த ஒரு ஜில்லாவில் 7 3/4 இலட்சம் வேலை உற்பத்தி செய்யலாம், அதே கணக்குப்படி 100 கோடிக்குச் சற்று அதிகமாக வேலைகளைப் பின்தங்கிய நாடுகளில் உற்பத்தி செய்யலாம் எனவும் எழுதினோம்.
ஐ.நா. வில் (veto) ரத்து அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், மக்களாட்சி இல்லாத நாடுகளை வெளியேற்றுவது என்றும், உலகத்திற்கு ஒரே இராணுவம் (World Army), இராணுவச் செலவை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்து அதை நாட்டு முன்னேற்றத்திற்காகச் செலவிட வேண்டும் என்றும் எழுதினோம்.
ஐரோப்பாவில் வேலையில்லாதவர் 12%க்கு வந்ததால் எல்லாச் சர்க்கார்களும், எல்லா வேலைகளையும் போட்டுவிட்டு, இதைக் கவனிக்கிறார்கள். 12%, 18% ஆகும் என்கிறார்கள். அதைத் தீர்க்க உலகில் இதுவரை எவரும் வழி சொல்லவில்லை.
வேலை செய்யும் உரிமையை (guaranteed employment) அனைவருக்கும சட்டபூர்வமாக வழங்க வேண்டும் எனவும் எழுதினோம். இக்கருத்துகளை நாம் கூட்டம் முடிந்த பிறகு சொல்கிறோம். தலைவர் ஏற்று, உறுப்பினர்கட்கு அனுப்பி, அவர்கள் சம்மதம் தெரிவித்தால், ரிப்போர்ட் வெளி வரும். இது யுகப் புரட்சி.
நல்லெண்ணம் எதையும் சாதிக்கும், கனிந்த உள்ளம் உலகப் புரட்சியை வெல்லும் என்பது பூரணயோகக் கருத்துகள். என்னை வந்து சந்திக்கும் அன்பர்கள் சாதாரணமானவர்கள். இந்த ரிப்போர்ட் கருத்துகளை
அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. இந்தச் சமயம் நல்லெண்ணத்தின் மூலம் ஒரு சோதனையை மேற்கொண்டேன்.
நல்லெண்ணம் உள்ளவரின் நல்லெண்ணத்தைப் பலர் ஏற்றுக் கொண்டால், அது அவர் மனதைத் தொட்டால், அதன் மூலம் உள்ளம் உணர்ச்சி வசப்பட்டால், அது உடலுக்கும் போய்ச் சேர்ந்தால், எதுவும் நடக்கும் என்று தெரியும். நல்லெண்ணம் இருப்பது கடினம். அதைப் பிறர் ஏற்பது உலகில் நடக்காது. உலகில் இதுவரை நடக்காததை நடத்துபவர் அன்னை.
ஒருவர் நல்லெண்ணத்தைப் பற்றி அவருடன் சம்பந்தப் படாதவரிடமும், அவரை எதிரியாக நினைப்பவரிடமும் கூறினேன். நல்ல பல நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நாள்களில் (period) என்னிடம் வரும் அனைவரின் நல்லெண்ணத்தையும் ழுவதுமாக நான் ஏற்பது என முடிவு செய்தேன். இதன் மூலம்,
- தனக்குத் தீங்கு செய்தவருக்குப் பெரிய வேலை கூடி வர ஒருவர் முயன்று பலித்தது.
- தண்ணீர் வாட்டத்திற்கெதிராகப் போயிற்று.
- மூக்கு (உடல்) அன்னையை ஏற்று வழக்கத்திற்கு மாறாக வந்த வியாதியை தானே குணப்படுத்திக் கொண்டது.
- வெந்நீரை, கை விரல் குளிர்ந்த நீராகக் கண்டது.
இது போன்ற பல செய்திகள் உதிரியாகக் கிடைத்தன. எவர் நல்லெண்ணத்தை அவர் உலகம் ஏற்கவில்லையோ – அவர் மனமே முழுமையாக ஏற்க முடியவில்லையோ – நல்லெண்ணத்தின் ஆணி வேர், சல்லி வேரைக் கண்டு முழுமையாக நான் எண்ணத்திலும், செயலிலும் ஏற்றேன் அவர் உள்ளம் கனிந்தது. உலகம் உருகியது. அன்னை செயல்பட்டார்.
ரிப்போர்ட் தலைவருக்குப் போயிற்று. அவர் எதையும் மறுக்கவில்லை, எதற்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. உறுப்பினர்கட்கு அனுப்பினார். மறுப்பு என்று எவரும் எழுப்பவில்லை. உறுப்பினர் அல்லாத ஒருவர் (கூட்டத்திற்கு வந்தவர்) நான் மேற்சொன்ன பகுதிகளை விட்டு மற்றோர் இடத்தில் ஆட்சேபணை எழுப்பினார். ரிப்போர்ட் அச்சுக்குப் போயிற்று, வெளியாயிற்று. இன்றைய தினம் பெர்லினில் ரிப்போர்ட் ஜெர்மன் அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஸ்தாபனத்தால் உலகுக்கு (release) அளிக்கப்படுகிறது. நல்லெண்ணம் சாதிக்க முடியாததில்லை என்பதை நான் இதன் மூலம் கண்டேன். மாற்றத்தை நாடும் நாம், முழு நல்லெண்ணத்தைப் பெற முயல வேண்டும்.
- முழு நல்லெண்ணம் எழ, எண்ணம் அற்றுப் போக வேண்டும்.
- பிறர் நல்லெண்ணத்தை ஏற்பது உயர்ந்த நல்லெண்ணம்.
- நாம் ஏற்றதை அவரும் ஏற்றுக்கொள்வது உள்ளம் உருகுவதாகும்.
- உள்ளத்தின் உணர்வு நல்லெண்ணத்தால் உயர்ந்தால்,
- உலகத்தில் முடியாததில்லை என்பது சட்டம்.
- எழுந்த உணர்வு உடலைத் தொட்டால், அதைவிடப் பெரிய சக்தியில்லை.
- உள்ளம் உருகி, உணர்வு உடலைத் தீண்டினால், உடல் நிரந்தரமாகப் புல்லரிக்கும.
- புல்லரிக்கும் நிலை புனிதம் உற்பத்தியாகும் நிலை.
- புனிதம் உற்பத்தியாவது ஆன்ம விழிப்பால்.
- சைத்தியப் புருஷன் (ஆன்மா) விழித்தால் மனிதன் புனிதனாகிறான்.
- நல்லெண்ணம் ஆன்மிகப் புனிதத்தை எழுப்பி கற்பனைக்கு எட்டாததைத் தவறாமல் சாதிக்கும்.
இரவும், பகலும் :
எந்த நேரமும் நம் மனதை எதுவும் ஆட்கொள்ளுவதில்லை. இருக்கும் வேலையைக் கவனிக்கின்றோம். வேலையில்லாத நேரம் ஆசையுள்ளதைச் செய்கிறோம். ஆசையிருந்தால், கொஞ்ச நாள் அதையே நினைக்கின்றோம். அது போனால், மற்றொன்று. ஒன்று போனால், உடனே மற்றொன்று வருவதில்லை. அது போன்ற நேரம் மனம் மந்தமாக இருக்கும்.
வீடு கட்டிய புதிதில் மனம் வீட்டால் நிரப்பப்படும். எந்தப் பேச்சிலும் வீடு கலந்து வரும். வீட்டைப் பற்றிப் பேசாத நாளில்லை. வீடு மனத்தை முழுமையாக ஆட்கொள்ளும். அது சில வருஷங்களுக்கு நீடிக்கும். முதன் மந்திரியை ஒரு முறை பார்த்தவர், அதையே நினைத்துக் கொண்டிருப்பார். வீட்டில் அதுவே பேச்சாக இருக்கும். ஆண்டுக்கு ஒரு முறை முதன் மந்திரியைச் சந்தித்தால், தினமும் சந்திப்பதுபோல் மனம் நினைக்கும். எந்தப் பேச்சுடனும் முதன் மந்திரி கலந்து விடுவார். செல்வம் உள்ள நண்பன்; முதலாளியின் நம்பிக்கை; திருமணத்தின் முன் பெண் மீது நினைவு; சாதித்ததை நண்பர் ஏற்றால் அதில் சந்தோஷம்; நட்பின் சிறப்பு; தொழில் வெற்றி; வெற்றி மேல் வெற்றி தரும் தொழில்; நம் நாணயத்தையும், நேர்மையையும் உலகம் ஏற்பது போன்றவை மனத்தையும், பேச்சையும், வாழ்வையும், சிந்தனையையும், ஜீவனையும் ஆட்கொள்ளும். எந்த எண்ணத்திற்கும் பின்னணியாக அவை நிற்கும். இரவும், பகலும் பிரியாத இம்மனநிலை மனத்துள் பசுமையாக இருக்கும்.
அன்னையை, பிரச்சினை ஏற்படும்பொழுது நினைப்பவருண்டு. தரிசனச் சமயத்தில் நினைப்பவர் அதிகம். முக்கியமான விஷயங்கள் வந்தால் அன்னையை நினைப்பவர் பலர். வேறு சிலர் அன்னையைப் பற்றி மட்டுமே பேசுவார்கள், நினைப்பார்கள். வேறு பேச்சோ, சிந்தனையோ அவர்களுக்கு இருக்காது. அவர்கள் இரவும், பகலும், அன்னையைப்
பிரியாது வணங்குவார்கள். இது அத்தியாவசியமான மனநிலை. மாற்றத்தை நாடுபவர்க்கு அவசியம்.
அன்னையை அனுதினமும் நினைக்க முயன்றால், வேலையில் அன்னையை மறந்து விடுகிறோம். பிறருடன் ஆர்வமாகப் பழகும்பொழுது அன்னை நினைவு வருவதில்லை. மனம் நொந்து போனால், அன்னை மறந்து கவலை ஆட்கொள்கிறது. சாப்பிட ஆரம்பித்த பின், சமர்ப்பணம் மறந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு மணி நேரமாக அன்னை நினைவேயில்லை என திடீரெனப் புரிகிறது. அன்னையை மறந்துவிட்டேன் என ஒவ்வொரு முறையும் நினைவு வருவதே பெரியது. நினைவில்லை என்பதன் மூலம் நினைவு வைத்திருக்கிறோம் (negative memory).
பிரார்த்தனையாலோ, தியானத்தாலோ, அழைப்பாலோ, அவசியத்தின் மூலமோ, பழக்கத்தாலோ, தானே நினைவு எழுவதாலோ, சமர்ப்பணத்தாலோ, நினைவாலோ, நிதர்சனமாக அன்னையை அறிவதாலோ, இவையனைத்தும் சேர்ந்ததாலோ, இரவும், பகலும் இடைவிடாமல் அன்னை ஏதோ ஒரு ரூபத்தில் நம் மனத்தில்லாமல், மாற்றத்தை வெற்றிகரமாக நாட முடியாது.
இடைவிடாத நினைவு நிரந்தர மாற்றம்.
வக்ரம் – கட்டுப்படாத ஆசை – வேகமான உந்துதல் – கசந்த வெறுப்பு :
வாழ்வே வெறுப்பாக இருக்கிறது, கசந்துவிட்டது, எதையும் பிறரிடமும் சொல்ல முடியவில்லை, மனமும் அதை விட்டு அகலவில்லை, அன்றாடமும் அதை நம் கண்ணால்
காணவேண்டிய பரிதாப நிலையில் நானிருக்கிறேன் என்பவர் அரிபொருளான சிலர். இது எத்தனையோ பாதைகள் மூலமாக எழலாம். நான் மேலே எழுதியது ஒரு பாதை.
பெற்றவர் கைவிட்டது, பெற்றவரைப் புறக்கணித்து, கணவனின் துரோகம், மனைவியின் துரோகம், நண்பர், பார்ட்னரின் போக்கு போன்றவை மனத்தைக் கசக்க வைக்கும். இதே சூழ்நிலையில் சொரணையில்லாதவர் பாதிக்கப் படுவதில்லை. சந்தோஷமாகவும் இருப்பதுண்டு. சொரணையுள்ளவரே பாதிக்கப்படுவார். அவரே நமது கருத்துக்குரியவர்.
மனத்தின் ஏட்டைப் புரட்டிப் பார்த்தால், இன்றெழுந்த கசப்புக்கு நாம் கொடுத்த முதல் impulsice action அதிவேகமான உந்துதல். திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர், தொழில் மூலதனமிடுவது உயிரை அடகு வைப்பது போல், ஒரு வேலையை ஏற்பது career சர்வீசின் போக்கை நிர்ணயிப்பது. இது போன்ற காரியங்களை நின்று நிதானமாகச் செய்ய வேண்டியவற்றை கேட்டவுடன், கேட்ட இடத்தில், கேட்டவருக்குப் பதில் சொன்னால் அது தவறு, கேட்பவரின் அந்தஸ்து, உரிமை, கருதப்பட வேண்டியவை. உடனே பதில் சொல்வது முறையன்று. யோசனை செய்து பதில் கூறுதல் அவசியம்.
இந்த அதிவேகமான உந்துதலுக்கு மனம் எனும் file புத்தகத்தில் முந்திய ஏட்டில் சித்ரகுப்தன் எழுதிய குறிப்பு, கட்டுப்படாத ஆசை. கட்டுப்படாத ஆசைக்குக் கடந்த காலத்தில் இடம் கொடுத்ததால், அது மாறி இன்று உந்துதலாக வரும் என்பது மனோதத்துவம்.
மேலும் சுகர் நாடி ஜோஸ்யம் பார்ப்பதுபோல் முன் பக்கங்களைப் புரட்டினால் அங்குக் காணப்படுவது, வக்கிரபுத்தி, வக்கிரமான செயல். கடந்தகாலச் சமர்ப்பணம்
இவற்றை மனதின் முன் வைத்தால் இன்றைய கசப்பின் பூர்வோத்திரம் புரிகிறது. அடுத்தாற்போல் செய்யக்கூடியது என்ன?
அன்னைச் சட்டப்படி அன்றைய வக்கிரம், ஆசை, உந்துதல், கசப்பு ஆகிய அனைத்தும் இன்றைய மனத்தில், செயல் தொக்கி நிற்கும். அதைக் கண்டுபிடித்தால் முதல் வெற்றி கிடைக்கும்.
நல்லது பேசும்பொழுது, கேலியாக, அல்லது வாய்தவறி அல்லது காரணமில்லாமல் சற்று அசம்பாவிதமான சொல், துடுக்கான சொல், பொருத்தமில்லாத சொல், உயர்விலாத சொல் வெளிப்படுவதைக் காணலாம். கருவான இடம் இதுவே. இதைக் கண்டபின் இதனுள் ஆரம்ப வக்கிரம் புதைந்துள்ளதைக் காணலாம். வயதாலும், அனுபவத்தாலும், ஸ்தானத்தாலும் இன்று பண்போடு பழகினாலும் (subconscious) உள்ளது தவறி வெளி வருகிறது. அது தவறுதல் அன்று. அதுவே உண்மை. அதன் பின், அதாவது வக்கிரத்தின் பின், நாம் the persons- இருப்பதைக் காணலாம். கவனித்துப் பார்த்தால், நம் உருவம் வக்கிரமானது. சூட்சுமப் பார்வையுள்ளவர்க்கு அவ்வுருவம் தெரியும். நாம் இவ்வுருவத்தைச் சரண் செய்ய முனைந்தால், அது வருஷக்கணக்காக முடியாது. அதனால் இவ்வுருவமே முன் வந்து தன்னைச் சரண் செய்வது பலிக்கும். இவ்வுருவம் பிராணன் அல்லது உயிர் (vital). அதனுள் உள்ள ஒளியே இவ்வுருவத்தைச் சரண் செய்ய முடியும். அவ்வொளி பிராணமயப் புருஷன். நம் தியானம் ஆழ்ந்து, நம் பிராணனைத் தாண்டி, இவ்வுருவத்தைத் தொட்டு, அதை ஊடுருவி அதனுள் உள்ள ஒளியைத் தொட்டால், அவ்வொளி தன்னை ஆன்மாவுக்குச் சமர்ப்பணம் செய்தால், கசப்பு கரையும். அன்னை உண்மை ( sincerity) என்பது
உள்ளொளி, உருவத்தின் தன்மையை ஏற்பது, ஏற்றுச் சரணடைவதாகும்.
சத், அசத் (Being, Non-being) : சச்சிதானந்தத்தை எட்டுவது தபஸ்வியின் சிகரம். அதைப் புறக்கணித்து நிர்வாணத்தை எய்துவது அதனினும் பெரியதாகக் கருதப்படுகிறது. பகவான் யோகம் மாறியது. அதனால் பூரணம் பெற்று உயர்ந்தது.
சச்சிதானந்தத்தில் ஊன்றிய காலை எடுக்காமல் நிர்வாணத்தை எய்தியவனே பூரண மனிதன்.
தபஸ்வி ஆன்மாவை ஏற்று, வாழ்வை விலக்குகிறார். பகவான் நமக்கு நடைமுறையில் என்ன சொல்கிறார்?
பிரம்மச்சாரி சுதந்திரமானவன். குடும்பத்திலுள்ளவன் குடும்பத்தை விட முடியாது. மனைவியின் இனிமையைக் கண்ட கணவன், வெகு சீக்கிரம் அவள் கசப்பதைக் காண்கிறான். குடும்பம் என்று ஒன்றிருப்பதால், கணவன் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு மனைவியின் இனிமையையும், கசப்பையும் ஏற்கிறான். அவையிரண்டும் குடும்பம் என்பதன் பகுதிகள் என அறிவுறுத்துகின்றன. அதனால் கசப்பு, இனிப்பைக் கடந்து அவளை ஏற்று அவளைப் பெண் என்பதிலிருந்து மனைவி என்ற நிலைக்கு உயர்த்துகிறான். வேலையைவிட முடியாத ஆபீஸ் அதேபோல உன்னை மனத்தால் உயர்த்துகிறது. குடும்பம், ஆபீஸ், சமூகம், சர்க்கார் ஆகியவை நம்மைக் கட்டுப்படுத்தும் சக்திகள். அக்கட்டுப்பாடு நம்மை உழைப்பிலும், உறவிலும் முன்னேற்றுகின்றது.
புறநிர்ப்பந்தமில்லாத இடத்தில் அறிவு நம்மைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சன்னியாசி, நாத்திகன் இடத்தில் அறிவு நம்மைக் கட்டுப்படுத்த வேண்டும். அதுவே முடிவான உயர்ந்த ஒற்றுமை.
கசப்பால் மனைவியை ஒதுக்காமல், குடும்பத்திற்காக அவளை ஏற்கும் கணவன், அதுபோல ஆபீசை ஏற்பவர், சமூகத்தின் தாழ்ந்த செயல்களுக்காக அதை விலக்காத குடிமகன், சர்க்காரின் அநியாயங்களுக்காக அதைப் புறக்கணிக்காத பொதுஜனம், வாழ்வில் பூரணத்தை நாடும் பெரிய ஆத்மா.
B.E. அட்மிஷன் :
பையனுக்கு B.E. அட்மிஷன் பெறுவதற்காக அவன் வேலை செய்யாத இடத்திலிருந்து வேலை செய்ததாக சர்ட்டிபிகேட் வாங்கி பெரியவர்கள் கொடுத்துவிட்டனர். பையனின் பக்திக்கு அது ஒத்து வரவில்லை. நேர்முகத் தேர்வில் அவன் தன் சர்ட்டிபிகேட்டின் உண்மையைச் சொல்லிவிட்டான். ஆனால், அதையும் மீறி, அட்மிஷன் வீட்டிற்கு வந்தது. இனி என்ன செய்வது? மனதால் தவறு செய்யாவிட்டால், செய்த தவற்றை மீறியும் அருள் பலன் தரும். வாழ்வின் போக்கிலிருந்து மாறுவதே மாற்றம். மாற்றம் மனத்திற்கு வலிமை தரும்.
புதிய பஸ் ரூட் : புதுவையிலிருந்து பிரயாணத்தை மேற்கொண்டு கொச்சி போகத் திட்டமிட்டவர் எங்கு மாற வேண்டும் என்ற விபரத்தைத் தெளிவாக அறிந்து கொண்டார். அவர் புறப்பட இரண்டு நாளிருக்கும்பொழுது புதுவையிலிருந்து கொச்சிக்குப் புதிய பஸ் ரூட் நேரடியாக அனுமதிக்கப்பட்டது.
மனம் அன்னையில் லயித்திருந்தால், உண்மையைச் சொன்ன பின், அட்மிஷன் வருகிறது, தேவையைப் பூர்த்தி செய்ய புதிய பஸ் வருகிறது. மனம் மாறினால் வாழ்வு இதுபோல் மாறும்.