மாமாவைப் பிடிக்காவிட்டால், அவருக்கே ஊழியம் செய்யவேண்டும் என்று பொருள்.
* எப்படியாவது என் எதிரி தொலைய வேண்டும்
என்பது எதிரியுள்ளவர்க்கெல்லாம் எழும் எண்ணம். இதுவே சரியான எண்ணம் என்றும் தோன்றும். ஒரு சிலர் இதையே பிரார்த்தனையாகக் கொள்வதும் உண்டு. இதுபோன்ற பிரார்த்தனைக்கு எந்தப் பலன் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பிறருக்கு நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது நமக்கே நடந்துவிடும். நாம் என்ன இங்கு நினைக்க வேண்டும்? நான் எதிர்ப்பை உணரக் கூடாது. எனக்கு எதிரி என்று ஒருவரும் இருக்கக் கூடாது. பிறர் என்னை எதிரி என நினைத்தாலும், எனக்கு அவர் மீது வெறுப்புக் கூடாது என்பதே நமக்குரிய முறை.
எப்படியாவது என் வெறுப்பு அழிய வேண்டும் என்பதே நமக்குரிய சரியான மனநிலை.
என்ன இருந்தாலும் நான் அதிகம் படித்தவனில்லையா? என்று தோன்றினால், என் படிப்புக்குரிய பக்குவம் எனக்கு வேண்டாமா?என்று அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நான் ஆசாரமான குடும்பத்தில் பிறந்தவனில்லையா? என்பதை, என் குடும்பத்திற்குரிய ஞானம் வேண்டாமா? என்று கொள்ளுதல் சரி.
பிறருடன் சண்டையிட்டார் IAS ஆபீசர். நான் ஒரு IAS ஆபீசரில்லையா? என்று கேட்பதற்கு முன், எனக்கு என் பதவிக்குரிய manners நடத்தை வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
கோபமாக அடுத்தவரைத் திட்டிய தலைவர் மற்றவரைப் பார்த்து, நான் ஓர் அரசியல் தலைவர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்பொழுது, அவர் தவைருக்குரிய பொறுமை வேண்டுமல்லவா? என்று தமக்குத் தாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.
தன்னை மதிக்காதவர்கள், புறக்கணித்தவர்கள், தன்னைப் பணத்தால் அடக்கியவர்களைப் பற்றி நிலைமை மாறிய பின், நினைக்கும் பொழுது, அவர்கள் எல்லாம் என்னை நாடி வந்து நிற்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு. மாற்றத்திற்குரிய நினைவு, அவர்கள் மீது எனக்குள்ள உறுத்தல் அழிய வேண்டும் என்பது.
- ரூ. 23 சம்பளம் வாங்குபவருடைய S.S.L.C படிக்கும் மகனைப் பார்த்து, நீ கெஜட் பதவிக்கு வந்தால் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன் என்ற பெண் தனக்கே சொல்ல வேண்டியது வேறு. எனக்கு அறிவு வேண்டும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்ள வேண்டும்.
- கிடைக்கும் என்று நினைக்க முடியாத வரனை அவமானப்படுத்தி, அளவு கடந்த கிராக்கி செய்து இழந்த பின், நான் எவரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் அவருக்கு 50 ஏக்கர் நிலமாவது இருக்க வேண்டும் என்று வருமானமில்லாத குடும்பத்தில் பலருடன் பிறந்த பெண் சொன்னால், அதற்கு என் தாழ்ந்த நிலையை வாய்ப் பேச்சால் பூர்த்தி செய்கிறேன் என்று புரிய வேண்டும்.
இது போன்ற சில மனநிலைகளும், மாற்றத்திற்குரிய அதற்கெதிரான நிலைகளும் :
* கோபித்துக் கொண்டு போன அண்ணன் தானே திரும்பி வர வேண்டும்.
நானே மனம் திருந்தி அண்ணனை நாடிப் போக வேண்டும்.
* என்னை ஊரில் தூற்றியவர் என் நியாய மனப்பான்மையை ஏற்க வேண்டும்.
அவர்களுடைய பொறாமை அவர்கள் அறிவு, பண்பு நிலைக்கு, ‘நியாயம்‘ என்று நான் அறிய வேண்டும்.
* ஏராளமான பணம் வந்து, தாராளமாக செலவு செய்ய வேண்டும்.
நினைப்புக்குத் தக்க உழைப்பு வேண்டும்.
* வாழ்க்கையை எல்லாக் கோணங்களிலும் அனுபவிக்க வேண்டும்.
அனுபவிப்பதற்கு முன் அறிவும், அதற்கு முன் உணர்வும், அதற்கும் முன் உழைப்பும் தேவை.
* பத்துப் பெரிய கம்பனிகள் நான் ஆரம்பிக்கும் ஸ்கூலுக்கு ஆளுக்கு இலட்ச ரூபாய் தர வேண்டும்.
அவர்களே அதைச் செய்யப் பிரியப்படும் அளவுக்கு ஸ்கூல் வளர வேண்டும்.
* நான் சொல்வதை (முழுப் பொய்யை) நம்ப வேண்டும்.
நான் முழுப் பொய்யன் என்பதை அனைவரும் எளிதில் அறிவார்கள்.
* 5ஆம் முறை S.S.L.C பாஸ் செய்தாலும், வேலை கிடைக்காத இந்த நாளில் உள்ளூரிலேயே வேலை வேண்டும் என்று கேட்பேன்.
பாஸ் செய்தது படிப்பால் இல்லை. என்னால் எத்தனை முறை எழுதினாலும் பாஸாகாது. எந்த ஊரிலும் எனக்கு உத்தியோகம் கிடைக்காது. போய்க் கேட்க எனக்கு மனிதரில்லை, என்று அவன் அறிய வேண்டும்.
அகந்தையாலோ, அறியாமையாலோ, தாழ்வு மனப்பான்மை யாலோ ஏற்படும் உணர்வுகள் இவை.
இவற்றை மாற்றி நியாய மனப்பான்மையைய ஏற்படுத்துதல் அவசியம்.
அன்னை :
நாம் அன்னையைத் தெய்வமாக வணங்குகிறோம். தெய்வத்திற்கு நம் குரல் பிரார்த்தனையாலோ, துதியாலோ எட்டினால், நாம் கேட்ட வரம் கிடைக்கும் என்று நாம் அறிவோம். அன்னையைத் தெய்வமாக மட்டும் வழிபடாமல், அவதாரமாக அறிந்து அணுகினால், என்ன பலன் வரும்? அவதாரங்கள் உலகுக்கு இறைவனின் செய்தியை அளிக்க அவதாரம் எடுத்தனர். அவதாரம் மனிதனுக்கு ஞானம் தருவதில் குறியாக இருக்கிறது. அன்னை தம்மை ஒரு சக்தி (force) என வர்ணிக்கின்றார். இந்த சக்தி ஒரு காரியத்தைப் பரிணாமம் என்ற காரியத்தைப் பூர்த்தி செய்ய வந்துள்ளது. வரம் கொடுப்பதோ, ஞானத் தழலை எழுப்புவதோ இதற்கு முக்கியமன்று. உலகில் இருளை அழிக்க, பொய்ம்மையை அழிக்க, வந்த சக்தி அன்னை. இருள் அழிந்தால் ஒளி ஏற்படும். பொய்ம்மை அழிந்தால், வாய்மையுண்டாகும். பரிணாமம் பலித்தால் யோகம் பலிக்கும். நாம் அன்னையை தெய்வமாகவும் வழிபடலாம், அவதாரமாகவும் பின்பற்றலாம்,
சக்தியாகவும் அறிந்து நம்முள் செலுத்தலாம். மூன்றையும் அல்லது இரண்டு நிலைகளைச் சேர்த்தும் செயல்படலாம்.
- அன்னையைத் தெய்வமாக வழிபட்டால் பிரார்த்தனை பலிக்கும்.
- அன்னையை அவதாரமாகப் பின்பற்றினால் ஞானம் வரும்.
- அன்னையைச் சக்தியாக நம்முள் ஏற்றால் யோகம் பலிக்கும்.
தீயசக்தி :
மனித குலம் அசுர குலம் என்கிறார் அன்னை (asuric humanity). மனிதனில் 99% தீய சக்தியுள்ளது என்கிறார் பகவான். குறிப்பாக இருள் நிறைந்த உடல் தீய சக்தி உறைவதாகச் சொல்கிறார்.
அன்னை எதிர்காலத்தில் வரும் அதிர்ஷ்டத்தை இப்பொழுதே கொண்டு வருவதால், அன்னையை ஏற்கும் நல்ல குணம் சீக்கிரம் தீர்ந்து விடுகிறது. நல்ல தன்மையால் அதிர்ஷ்டத்தைப் பெறுவதால், நம் வாழ்வில் வந்த அதிர்ஷ்டம், நம்மை நம் நல்ல தன்மையைச் செலவிட்டு விடுகிறது. அதன் அடியில் தீமையும், அதன் அடியில் தீய சக்தியும் ஏராளமாக இருப்பதால், அவை மேலே வருகின்றன. அன்னையிடம் வந்த பின் தொடர்ந்த முன்னேற்றம் உள்ளவரால் தொடர்ந்து பெற முடியும். முன்னேற்றம் தொடர்ந்து இல்லாவிட்டால், நல்லது தீர்ந்து போய், கெட்டது, தீயது, தீய சக்தி உள்ளிருந்து மேலே எழும். அவற்றால் நாம் மனம் தளரக் கூடாது. திருவுருமாற்றத்தை நாடி வரும் தீய குணங்களை நாம் கண்டு அதற்குரிய மாற்றத்தைச்
———————————————————————————————————- * Miniature
செய்வது யோகம். அதன் சிறு உருவமே நான் வாழ்வில் கூறும் மாற்றம்.
மாற்றத்திற்குரிய தகுதி :
அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் மேல்நாட்டுப் பழக்கப்படி தங்கள் ஞானத்தையும், கருத்தையும், சிந்தனைகளையும் ஏராளமாக எழுதியுள்ளார்கள். அன்னை எழுதியவை 30 வால்யூம்களாக இதுவரை பிரசுரமாகியுள்ளன. மகான்கள், யோகிகள், சித்த புருஷர்கள் எழுதுவதில்லை. எழுதினால் செய்யுளாக எழுதுவதுண்டு. அவர்கள் சீடர்கள் குருவின் கருத்தை விளக்கி எழுதுவதுண்டு. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திற்கே குறிப்பான சிறப்பு அவர்கள் கருத்து எழுத்தாக வெளியிடப்பட்டுள்ளதுதான்.
இது பக்தர்கட்கு ஓர் அரிய சந்தர்ப்பம். குறைந்தபட்சம் இந்த 60 வால்யூம்களைப் படித்துவிட வேண்டும் என்பது அவசியம். படித்தால் ஞானம் வருமா? எனக் கேட்கலாம். படிப்பால் ஞானம் வரும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. படிக்காவிட்டால் எதுவும் வாராது என்று அறுதியிட்டுக் கூறலாம்.
படிப்பை விட உயர்ந்தது எது? அன்பு. அன்பு பெருகிக் காண்பது மேல். அன்பு மேட்டால் – சைதன்யப் புருஷன் வெளிப்படும் – அது படிப்பதைவிட மேல்.
அதற்கடுத்த உயர்ந்த நிலையுண்டா? உண்டு. அது சக்தி – அளவு கடந்த அன்னை சக்தி – (infinite energy) உள்ளிருந்து தானே பெருகுவது அன்பு மேலிடுவதை விடச் சிறப்பானது.
கடைசிக் கட்டமான உயர்ந்த நிலை, பிறப்பிலேயே நமக்குப் பக்தி அம்சம் உள்ளது. நான் மாற்றத்திற்கு அழைப்பவருக்கு நிபந்தனையாக அளிக்க விரும்புவது முதல்
நிலை. இதுவும் நம் பக்தர்கட்குச் சிரமம் என்பதால், இந்த 60 வால்யூம்களில் உள்ளதின் சாரத்தைத் தமிழில் எழுதி அதை அவர்கள் படிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். படிப்பது கொஞ்சமாக இருந்தாலும் முழுக் கருத்தையும் மனதில் வாங்கிக் கொண்டால், சாரம் முழுவதும் மனத்தைத் தொடும். சாரம் மனத்தைத் தொட்டுவிட்டால், மாற்றத்திற்கு வழியுண்டு. படிக்க முடிந்தவர்கள் இந்த 60 வால்யூம்களைப் படிப்பது சிறந்தது. அது பூரண யோக ஞானமாக அமையும். ஜன்மம் சாபல்மடையும் வழி அது. பிறவிப் பயன் பெற்றதை உணர வைப்பது அப்படிப்பு.
Subconscious Yoga குருவின் புண்ணியம் சிஷ்யன் பெறுவது :
ஆசிரமம் ஆரம்பிக்கும் முன் பகவானைத் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை 12, 15 சாதகர்கள் சந்தித்து, உரையாடுவதுண்டு. அப்படி அவர் பேசியவை Evening Talks என வெளியாகியுள்ளது. 1926இல் பகவான் தனிமையை நாடும் முன் அவரை நெருங்கிய சிலர் அடிக்கடியும் சந்திப்பதுண்டு. சொந்த விஷயங்கள் பேசுவதுண்டு. அந்தக் காலத்தில் பூரண யோகம் என்றால் என்ன? ஆசனம் செய்யாமல், தியானம் செய்யாமல் நாள் முழுவதும் நாமெல்லோரும் என்ன செய்கிறோம்? என்ற கேள்வி எழுந்ததுண்டு. அன்னை 1920இல் வந்த பின்னரே காரியங்களை முறைப்படுத்தினார். யார் இங்கு யோகம் செய்பவர்? என்ற கேள்வி வலுவாக எழுந்த பொழுது, பிரதம சிஷ்யர் யோகம் செய்வதில்லை என்ற பேச்சு எழுந்தது. யோகம் என்றால் என்ன? எப்பொழுது யோகம் செய்யப்படுகிறது? என்ன செய்கிறோம்? என்ற கேள்வி எழுந்ததும், ஒருவர் பகவானையே, பிரதம சிஷ்யரே யோகம் செய்யவில்லை என்று பேசுகிறார்களே என்று கேட்டார்.
பகவானும், அன்னையும் செய்த யோகப் பலனை சிஷ்யர்கள் பெற்றார்கள். உடனிருப்பதால், (subconsciously) தானே பலன் சிஷ்யர்களை வந்தடைகிறது என்பது பரம்பரைத் தத்துவம், பழக்கம்.
ஒரு வீட்டில் 6 பேர்கள், ஆண்களிருந்தால் அனைவரும் சம்பாதிப்பது முறை. அப்படிச் சம்பாதித்தால், குடும்பம் நேரடியாகப் பலன் பெறுகிறது (consciously or directly). குடும்பம் என்பதால், வேற்றுமை பாராட்டாத மனப்பான்மையால், ஒருவர் மட்டும் சம்பாதித்தாலும், இருவர் சம்பாதித்தாலும் அனைவரும் அதன் பலனைப் பெறுவது மறைமுகப் பலனாகும். இது subconscious benefit போன்றது.
யோகம் என்பது மலை. மாற்றம் என்பது கடுகு. நேரடியாக முழுமையாக மாற்றத்தை ஏற்பதை பல்வேறு கோணங்களில் எழுத முயல்கிறேன். மாற்றத்தின் நிலைகள் பல. நான் எடுத்துக் கொண்டது ஆரம்ப (elementary) நிலைக்குரியது. மனம், மெய், முழுமையால் ஆழ்ந்த பக்தியுடையவர் பெறக் கூடியது. நம் குறிக்கோள் மிகச் சிறியதானாலும், தரம் பூரணமாக இருப்பதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன்.T.V. மிகச் சிறிய சைஸ் வாங்கினாலும், படம் தெளிவாகத் தெரிய வேண்டும். குரல் அழகாகக் கேட்க வேண்டும். அளவு சிறியது. தரம் முழுமையானது. மாற்றமும் அது போன்றது.
அனுபவம் பூர்த்தியானால் சாதனை பூர்த்தியாகும் :
சக்தி உருவம் பெறுவதைச் சுயரூபம், சொரூபம் என்று சொல்வார்கள். உருவம் பெற்ற சக்தி, தன்னைப் போன்றதைச் சந்தித்தால் ஒரு தத்துவம். எண்ணம், பேச்சு, செயல் ஆகியவற்றை இதுபோல் சொல்லலாம்.
மனோசக்தி, பேச்சு என்ற உருவம் பெறுகிறது. நாம் பிறருடன் பேசும்பொழுது நமது பேச்சும், அவருடைய பேச்சும்
சந்திக்கின்றன. எண்ணங்கள் பரிமாறினால், கருத்து சிறக்கிறது. நாம் கூறுவதை அவர் புரிந்து ஏற்றுக் கொண்டால், காரியம் முடிகிறது. அது சாதனை.
அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் பேச ஆரம்பித்தால், ஒருவர் மனத்தின் எண்ணம், பேச்சில்லாமல் அடுத்தவரை நாடி அவரால் ஏற்கப்படுகிறது. 10 கருத்துகள் பரிமாறிய பின் பதினொன்றாவதை அன்னை பேசுவார். பகவான் பதில் அளிப்பார். அருகிலிருந்து கேட்பவர்களுக்கு டேப் ரிக்கார்டர் இடைவெளி விட்டுப் பேசுவது போலிருக்கும் என்று அன்னை கூறுகிறார்.
பேச்சு சந்திப்பதைப்போல், கருத்து சந்திக்கும், உணர்ச்சியும் சந்திக்கும். தாயின் மடியில் உள்ள குழந்தை அயர்ந்து தூங்குவது, தாயின் உடலும், சிசுவின் உடலும் மேற்சொன்னபடி சந்தித்து, நம்பிக்கையான அமைதி எனும் உணர்வை எழுப்புவதாகும்.
சிருஷ்டியின் அமைப்பில் உடல் ஆரம்ப நிலை. உணர்வும், மனமும், ஆன்மாவும், அன்னை சக்தியும் அடுத்தடுத்த உயர்ந்த நிலைகள். இதற்கடுத்தாற்போலுள்ள 3, 4 நிலைகளை மனிதன் பொதுவாகக் காண்பதில்லை. அன்னை சக்தி, ஆன்மா மூலம் வெளிப்பட்டு, அதற்கு நிகரானதைச் சந்தித்து, அனுபவிப்பதை விளக்குவது சிரமம். அன்னை சக்தி, ஆன்மா மூலம் வெளிப்படுவது உச்ச கட்டத்திற்கு அடுத்த உயர்ந்த நிலை. மனத்தால் வெளிப்படுவதும், உணர்வாலும், உடலாலும் வெளிப்படுபவை அடுத்தடுத்த உயர்ந்த ஆன்மிக நிலைகள். அவற்றுள் ஒன்றை மட்டும் ஓரளவு விளக்க முயல்கிறேன்.
நாம் மனத்தால் பேசும் செயல் மனத்தின் சக்தியை வெளிப்படுத்துகிறது. மனத்தின் எண்ணத்தை சமர்ப்பணம்
செய்தால், அன்னை சக்தி மனத்தின் மூலம் வெளிப்படுகிறது. கேட்பவர் சமர்ப்பணம் செய்து கேட்டால், அன்னையின் சக்தி மனத்தின் மூலம் உருவம் பெற்று, அதைப் போன்றதைச் சந்தித்து அனுபவித்து சாதிக்கிறது எனலாம். இது தத்துவம். வாழ்க்கை நிகழ்ச்சி மூலம் இதை உதாரணத்தால் விளக்கினால் பலன் மூலமே விளக்க முடியும்.
சொல்பவர் சமர்ப்பணம் செய்து, கேட்பவர் சமர்ப்பணமின்றிக் கேட்டதற்குப் பலனாக வருஷத்தில் 29 கோடி ரூபாய் இலாபம் பெற்றவர், 60, 100, 130 என வருஷா வருஷம் இலாபம் உயர்ந்து 5ஆம் ஆண்டு 186கோடியாயிற்று. இருவரும் சமர்ப்பணம் செய்பவர்களாக அதிக உதாரணமில்லை. ஒரு கம்பனியில் குமாஸ்தாவாக இருந்தவர் சமர்ப்பணம் செய்து பேசிய சொற்களைச் சமர்ப்பணம் செய்து கேட்டதால், முதலாளியாகி, இரு பட்டங்கள் பெற்று, உலகப் பிரமுகர்களுடன் அறிமுகமாகி, சர்வதேச ஸ்தாபனத்திற்கு முக்கிய யோசனை சொல்லி, அதில் உறுப்பினராகவும் 7 ஆண்டில் மாறினார்.
ஒரு பக்தர் தம் நிலைமையில் உச்சகட்ட சிருஷ்டியின் ஆனந்தத்தை மேற்சொன்னதுபோல் அடைந்த அன்று, நெடுநாளைய அவர் திட்டம் பெரு நிறைவு பெற்றுப் பூர்த்தியாகியது.
பொறாமை, போட்டி, ஒத்துழைப்பு, படிப்பு :
ஒருவர் செய்தால், உடனே அனைவரும அதையே செய்வது நம்மவர் வழக்கம். எவரும் எதையும் செய்ய முன் வர மாட்டார்கள். ஒருவர் செய்து ஜெயித்து விட்டால், உடனே அனைவரும் அதைத் தவறாது செய்வார்கள். இதைப் போட்டி மனப்பான்மை என்கிறோம். போட்டி மனப்பான்மை
எவரையும் பிழைக்க விடாது; போட்டி மனப்பான்மை அனைவரையும் முன்னுக்கு வர உதவும். வாய்ப்பு (மார்க்கெட்) சிறியதானால் பலத்த போட்டியால் அனைவரும் அழிவர். அளவு கடந்த வாய்ப்பிருந்தால், அனைவரும் போட்டியால் முன்னுக்கு வருவார்கள்.
பொறாமை, போட்டி மனப்பான்மைக்கு முந்தைய நிலை, ஒத்துழைப்பு, போட்டி மனப்பான்மைக்கு அடுத்த உயர்ந்த நிலை. போட்டிப் போட முடியாதவன் பொறாமைப் படுகிறான். ஒருவர் வீடு கட்டினால், போட்டி போட்டுக் கொண்டு அனைவரும் வீடு கட்ட முடியும். வீடு கட்டும் நிலையில் உள்ளவர் அறிவாலும், முயற்சியாலும், ஆர்வத்தாலும், அயராத உழைப்பாலும் ஒரு பாக்டரி ஆரம்பித்தால், அவரை ஒத்தவரால் அதைச் செய்ய முடிவதில்லை. அதனால் பொறாமை எழுகிறது. பொறாமைக்கு முந்தைய நிலையொன்றுண்டு, போட்டிக்கு அடுத்த நிலையும் உண்டு. போட்டியிடுபவர்கள் படித்தவர்களாகவும், பக்குவம் உள்ளவர்களாகவுமிருந்தால் போட்டியை ஒழித்து ஒத்துழைப்பாக மாற்றி அனைவரும் பெரும்பலன் அடைவார்கள். கிராமத்திலிருந்து ஒரு பையன் நகரத்திற்கு வந்து படித்தால், போட்டியாகப் பல குடும்பங்கள் அதையே செய்யும். போட்டிப் போடுபவர்கள் வசதியான நாகரீகமான கிராமத்தைச் சேர்ந்தவரானால், அனைவரும் ஒத்துழைத்துத் தங்கள் கிராமத்திற்கே பள்ளியைக் கொண்டு வருவார்கள். ஒரு நிலையில் ஒத்துழைப்பவர்கள், அடுத்த நிலையில் ஒத்துழைப்பை விட்டுப் போட்டிப் போடுவார்கள். பொறாமைப்பட முடியாதவருண்டு. பொறாமைப்படுவதே அவர்களுக்கு முன்னேற்றம் போலும்! நம் வீட்டுப் பையன் காலேஜில் சேர்ந்தால், வேலைக்காரன் மகனுக்குப் பொறாமை எழுவதில்லை. அவன் 4 வகுப்போடு படிப்பை நிறுத்தியதால், அவன் தனக்குச் சம்பந்தமில்லை என்று இருப்பான். தன் நிலையைவிட இரண்டு, மூன்று நிலை உயர்ந்தவர்களைக்
கண்டு பொறாமைப்பட முடிவதில்லை, பொறாமைப் படுவதில்லை. அதேபோல ஒத்துழைப்புக்கு அடுத்த நிலையும் உண்டு. எவரும் செய்யாததை, நாம் செய்ய முனைந்தால், பிறரால் ஒத்துழைக்கவும் முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே அறிந்து செய்வது நமக்குப் பலன் தரும். பிறருடைய பொறாமையோ, போட்டியோ, ஒத்துழைப்போ எட்ட முடியாத நிலையிது. இந்த மனப்பான்மையே மாற்றத்திற்குரியதாகும். ஒருவர் மாற்றத்தை நாடினால், அதை எப்படிச் செய்து முடிப்பது என்று அறிந்து செய்தால், அவர் பிறரால் எந்தத் தொந்தரவுக்கும் ஆளாக மாட்டார். இது மனித வளர்ச்சியின் கடைசிக் கட்டத்திற்குரிய முறையை பின்பற்றுகிறது. அந்நிலைகள் வருமாறு,
- பொறாமைப்பட முடியாத தாழ்ந்த நிலை,
- பொறாமை,
- போட்டி,
- ஒத்துழைப்பு,
- ஒத்துழைப்பும் உதவாத உயர்ந்த நிலையை அறிவால் புரிந்து சாதிக்கும் நிலை மாற்றத்திற்குரிய மனநிலை.
- ஒத்துழைப்பும் பயன்படாத இந்நிலையிலும் ஒத்துழைக்கும் நோக்கமிருந்தால், அது ஆன்மிகப் பக்குவமாகும். அந்நோக்கமே மாற்றத்தைத் தரும்.
அன்னையின் ஸ்பர்சம் :
தமிழ்நாட்டில் கடல் பார்க்க வேண்டுமானால் சென்னை மெரீனா பீச்சுக்குத்தான் போக வேண்டும் என்ற அவசியமில்லை. உலகப் பிரசித்தி பெற்ற ரியோடிஜெனிரோ பீச்சுக்கு அடுத்தபடியாக அழகும், முக்கியத்துவமும் வாய்ந்தது மெரீனா. பம்பாயில் அதுபோல் இல்லை. தமிழ்நாட்டின் கிழக்கு எல்லை கடல். சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை எந்த இடத்திலும் கடற்கரையுண்டு. கடலைக் காணலாம்.
அன்னை நம்மைத் தீண்டினால் – ஸ்பர்சம் – தீண்டுதல் இதுவரை நாம் அறிந்திராத, குளிர்ந்த, இனிமையை உடல் பரப்பும். மாற்றம் நிகழ வேண்டி முறையோடு நிகழ்ந்தால், அன்னையின் ஸ்பர்சத்தை அறிய முடியும். ஆனால் அன்னையின் ஸ்பர்சத்தை, கடல் ஓரத்தைக் காண்பதுபோல, எத்தனையோ வழிகளில் அறியலாம். ஸ்பர்சம் எப்படி ஏற்பட்டாலும், அது மாற்றத்திற்கு உதவும். ஸ்பர்சத்தைப் பெறும் முறைகளில் சிறந்தது, அகந்தை அழிவது. அகந்தை அழிய வேண்டும் என்று முடிவு செய்தால், ஸ்பர்சம் ஏற்படாது, அது அழியாது. அகந்தையை அழிக்க முயன்றால், முயற்சி ஓர் எண்ணமாகவே நின்றுவிடும். எண்ணத்தைத் தாண்டிய பலன் வர வழியில்லை. அகந்தையை நேரடியாகத் தாக்க முயன்றால், அது வலுப்பெறும், நம் முயற்சி தோற்கும். அகந்தை வெளிப்படும் முறைகளைக் கண்டு அவற்றை மாற்றவோ, விலக்கவோ, அழிக்கவோ முயன்றால், அகந்தை கட்டுப்பட்டு, ஓரிழை அழிந்து, அன்னை ஸ்பர்சம் தெரியும். சுயநலம், கர்வம், மடமை, தன்னம்பிக்கை, கோபம், initiative செயலை ஆரம்பிப்பது, நான் எனும் உணர்வு, மரியாதை உணர்வு, சந்தேகம், பொறாமை போன்றவை அன்னைக்கு எதிரான அகந்தையின் வடிவங்கள். நமக்கு இவற்றுள் அல்லது இது போன்ற குணங்களுள் எது முனைப்பாக இருக்கின்றதோ, அதை நாம் கண்டு, பின் தொடர்ந்து, விலக்க முயன்றால், அது விலகும் இடத்தில், தலையில், நெஞ்சில், வயிற்றில் சில் என்ற உணர்வு எழும்.
ஒருவருக்கு, பிறர்க்குபதேசம் செய்வது இதுபோன்ற முனைப்பு எனில், உபதேசம் மனதில் எழுந்தொறும், அதைப் பார்த்து தொடர்ந்து அதன் வழிச் சென்று, அடக்க முயன்றால் எழுந்த எண்ணத்தைப் பேசாமல், விலக்கினால், அது எண்ணமானால், தலையில் ஒரு சொட்டு சில் என்றிருக்கும். அதே உந்துதல் உணர்வானால், வயிற்றில் சில் என்ற உணர்வு எழும். அது அன்னை ஸ்பர்சம். மாற்றத்திற்குப் பெரிதும் உதவும் திறனுடையது அது.
- மேல் மனம் திறந்து உள் மனம் வந்தால் ஸ்பர்சம் எழும்.
- சமர்ப்பணம் ஸ்பர்சத்தைத் தந்து, மாற்றத்திற்குதவும்.
- மௌனம் மனத்தில் நிலைத்தால், ஸ்பர்சம் கிடைக்க வழி ஏற்படும்.
- மனம் உண்மையை அதிகமாக ஏற்றால், ஸ்பர்சம் சில் என எழும்.
- அழைப்பு, அழைப்பு எழுமிடத்தில் ஸ்பர்சத்தைக் கொண்டு வரும்.
- நினைவு முதிர்ந்து, அழைப்பானால், ஸ்பர்சம் மாற்றத்தைத் தரும்.
சமர்ப்பணம், மௌனம், உண்மை, அழைப்பு, நினைவு, ஆன்ம விழிப்பு, அன்பு, ஆர்வம், சேவை, skill திறமை, அமைதி ஆகியவை மாற்றத்திற்குரிய கருவிகள். இவையனைத்தும் அன்னையின் ஸ்பர்சத்தைத் தருபவை. மாற்றமும், ஸ்பர்சமும் அன்னையிடம் நம்மைச் சேர்க்கும்.
7 கோடி வியாபாரமுள்ளவர் தம் தொழிலை இரு மடங்காக்கலாம் என்று நினைத்தவர், ஆலோசனையை நாடினார். தாம் 100 கோடி அளவுக்கு வளர முடியுமா என்று கேட்டார். இரு மடங்கிலிருந்து மனம் 150 மடங்குக்கும் தாவுகிறது. ஆலோசனை சொல்பவர் இருக்கும் நிலையை அறிந்து, மேலும் பேசலாம் என்றார். நான்கு மாதம் இவர் கம்பனிக்கு வந்து ரிக்கார்டுகளைப் பரிசோதனை செய்து preliminary report ஒரு ரிப்போர்ட் தயார் செய்தார். கம்பனிக்குத் தாம் முடிவாகச் சொல்லும் யோசனைகள் பலவற்றையும் அதில் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற ரிப்போர்ட்டுக்கு 5 முதல் 10 இலட்சம் கொடுப்பார்கள். ஆனால் இதுவரை ஆலோசகர் பெற்றது இரண்டு இலட்சமே அதிகபட்சம். முதலாளி ரிப்போர்ட்டைப் படித்தார்.
ஆலோசகரைச் சந்திக்க மறுத்தார். போனில் 1 3/4 மணி பேசி விளக்கம் கேட்டார். இந்த ரிப்போர்ட் சரியில்லை, எனக்கு வேண்டாம் என்றார். எழுதியவர் எதையும் பெறவில்லை. ரிப்போர்ட்டை அமுல்படுத்த ஆரம்பித்தார். எந்தக் கம்பனிக்கு எழுதப்பட்டதோ, அங்குப் பலன் ஓரளவுக்குத் தெரிந்தது. இரண்டாண்டில் முதலாளியின் கம்பனி 100 கோடியை எட்டி, 12 கோடி இலாபம் சம்பாதித்தது. தாம் மிகவும் கெட்டிக்காரத்தனமாகப் பிறரை ஏமாற்றியதாக அவர் மனம் பெருமைபட்டது போலும்.
அதே வாரம் வெளிநாட்டில் தொழில் நுணுக்கம் தேடிப் போனார். 20 இலட்சம் மார்க்கட் விலையுள்ளதை அவர் 1 3/4 கோடி சொன்னார். முதலாளிக்குத் தாம் முன்பு ஏமாற்றியதை இங்குக் கேட்கிறார்கள் என்று புரிய முடியாது.
நாடெங்கும் பல ஊர்களில் மனைகள் வாங்குகிறார். ஓர் ஊரில் ஊரின் நடுவே சதுர அடி 170க்கு விற்கிறார்கள். அதே ஊரில் இவர் அதிகாரிகள் ஊருக்கு வெளியே சதுர அடி 350க்கு வாங்கினார்கள் ! முதலாளி தம் 12 கோடி இலாபத்தையும், 100 கோடி வியாபாரத்தையும் நினைத்து உலகை மறந்த நிலையில் உள்ளார். இவருக்கு நான் கூறிய விவரங்களையும் ஒருவர் எடுத்துச் சொன்னால், யார் எவ்வளவு சாப்பிட்டாலும் எனக்குக் கவலையில்லை, முடிவாக எனக்கு என்ன கிடைக்கிறது என்பதே என் பிரச்சினை எனலாம். அது உலகத்திற்கும் சரி எனப்படலாம். அவர் கம்பனியில் இன்று நடப்பது முடிவன்று, முடிவின் முதல் நிழல். முடிவு 1 3/4மணி பேசிவிட்டு இவர் வெறுங்கையோடு கம்பனியை வேறொருவருக்குக் கொடுத்துவிட்டுப் போக வேண்டியிருக்கும். பொய்யும், ஏமாற்றும், வாழ்வில் முதலில் பலிக்கலாம். வாழ்விலும் முடிவாக என்றுமே பலிப்பதில்லை. மனிதன் நாணயங் கெட்டவன். ஏமாற்றுபவன். பக்தரை ஏமாற்றிவிட்டு, அவர் பலன் பெற முடியாது.
100 கோடி வியாபாரமானாலும், 100 ரூபாய் வியாபாரம் ஆனாலும் மனம் ஒன்றே. நாம் சிறிய விஷயங்களில் நம்மைச் சோதனை செய்யலாம். துடுக்காகப் பக்தரிடம் வக்கீல் சம்பந்தமில்லாத இடத்தில் பேசினார். 30 வருஷங்கள் கழித்து, வக்கீல் மகன் பக்தரை நாடி வணங்கிப் போவது, அன்று தகப்பனாரின் துடுக்குப் பேச்சுக்கு மாற்றுச் செய்ததாகும். அன்னை எந்தப் பலனையும் உடனே கொடுப்பவர். துடுக்காகப் பேசிய வக்கீல் தம் பிரபலத்தால் ஹைகோர்ட்டில் வேலை செய்யப் போய் 5 ஆண்டுகளில் நஷ்டமடைந்து திரும்பி வந்தார். நாம் பக்தர்களாக இருப்பதால் பலன் நல்லதும், கெட்டதும் உடனே வரும். கவனித்துப் பார்த்தால் விவரம் தெரியும்.
தவறு செய்தவன் நஷ்டமடைந்தால், நமக்கு என்ன வரும்? நமக்குப் பலன் வந்தால்தான் நமக்கு நல்லது எனலாம். பணத்தால் பலன் வருகிறது எனில், உடன் வந்து விடும். உயர்ந்த பலனுக்கு உரியவர் எனில், பலன் தள்ளிப் போகும். ஆன்மிகப் பலனை மனம் நாடிப் பெற்றுவிட்டால், பணத்தின் பலன் சிறப்பாக இருக்காது. ஆன்மிகப் பலனால், அதிகப் பணவரவை எதிர்பார்த்தால், அதற்குரிய முறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்தப் பக்தர் பெற்றவை அவருக்கு ஆத்ம திருப்தி அளிப்பவை. செல்வத்தால் அவர் பலன் பெறவில்லை.
ஸ்தாபன நிர்வாகி செல்வாக்குடையவர். பொதுவாக ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள், நிர்வாகிகள் செல்வாக்கைப் பயன்படுத்த பிரியப்படுவார்கள். பெரிய ஸ்தாபனம் ஒன்று. இதை ஆதரிக்கும் தொழில் அதிபர் ஒருவர். தம் தொழிலிலிருந்து வருஷா வருஷம் ஸ்தாபனத்திற்கு 5 இலட்சம் நன்கொடையாகக் கொடுப்பார். ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்ட 450 ரூபாய் சம்பாதிக்கும் வேறு தொழில் மானேஜருக்கு வந்த ஆர்டரில், இத்தொழில் அதிபரிடமிருந்து
பெறும் கச்சாப் பொருளை, சர்க்கார் (allot) கொடுத்தது. சர்க்கார் ஆர்டர் கொடுத்தாலும், பணம் கொடுத்து, கச்சாப் பொருளை வாங்க வேண்டும் என்பது நடைமுறை. மானேஜருக்கு ஸ்தாபன நிர்வாகியைத் தெரியும். நிர்வாகிக்கு அதிபர் கட்டுப்பட்டவர். கேட்கப் போவது பெரிய சலுகையில்லை, சலுகையேயில்லை. தாமதமின்றி சப்ளை செய்ய வேண்டும் என்பதே வேண்டுகோள். நிர்வாகி மறுத்தார். இவையெல்லாம் பிஸினஸ் விஷயம் நான் தலையிட மாட்டேன் என்றார். அத்துடன் அது போயிற்று.
வருஷங்கள் 18 ஓடின. மானேஜர் தம் கம்பனியை வாங்கினார். பல கம்பெனிகள் வாங்கினார். மேற்சொன்ன தொழில் அதிபர் தம் கம்பனியை மானேஜரிடம் விற்றார். நான் இந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன். என் வருமானத்தில் 5 இலட்சம் வருஷா வருஷம் நான் ஸ்தாபனத்திற்குக் காணிக்கையாகச் செலுத்துவதுண்டு என்று வாங்குபவரிடம் சொன்னார். வாங்கும் மேனேஜர், நானும் இந்த ஸ்தாபனத்தைச் சார்ந்தவன். நான் தொடர்ந்து, அந்த 5 இலட்சத்தைக் கொடுக்கிறேன் என்றார். முதல் வருஷ முடிவில் கொடுத்தார். நிர்வாகிக்கு அளவு கடந்த சந்தோஷம். அவருக்கு 18 ஆண்டுகட்கு முன் மானேஜர் வேண்டுகோளை மறுத்தது நினைவிருக்க முடியாததல்லவா? மானேஜருக்கு நினைவிருந்தது. அடுத்த ஆண்டு வந்தது. நிலைமை மாறியது. அவரால் 5 இலட்சத்தைக் கொடுக்க முடியவில்லை.
அன்று நிர்வாகி சிறிய உதவியைச் செய்ய மறுத்தார். சிறிய உதவியைச் சின்ன புத்தியால் அவர் மறுத்ததைச் சின்ன மனுஷனான மானேஜர் பெரிய மனதுடன் பொருட் படுத்தவில்லை. பெரிய மனம் இருந்ததால், கம்பனியே அவரிடம் வந்தது. பெருந்தன்மையால், சிறிய புத்தியுள்ள நிர்வாகியின் போக்கையும் புறக்கணித்து, காணிக்கையைத் தொடர நினைத்தாலும், நிர்வாகியின் அன்றைய செயல், இன்று காணிக்கையைத் தடுக்கிறது.
இன்று சின்ன புத்தியால் நிர்வாகி மறுத்ததால், பெரிய மனதுடையவனுக்கு நாளை கம்பனியே வந்து சேரும் என மானேஜர் அறியார், அது தெரிந்திருந்தால் நிர்வாகி அதை மறுத்திருப்பாரா?
- சிறிய புத்தியை மீறிப் பெருந்தன்மையும் நல்லது செய்ய முடியாது.
- பெரியவனுக்குச் சிறியவன் செய்யும் தீமை நன்மை பயக்கும்.
- பெரியவனின் சிறுமையைப் பொருட்படுத்தாதது பெரியது.
- சிறுமையைப் பொருட்படுத்தாத பெருமை பெரியதற்குரியது.
அன்னை பக்தர்கள், அதுவும் அன்னை சம்பந்தப்பட்ட இடங்களில் அநியாயமாகச் சிறுமைப்படுத்தப்பட மாட்டார்கள். அப்படி நடந்தால் மேற்சொன்னது போன்ற பெரியது தொடரும். மேற்சொன்ன மானேஜர், தொழில் அதிபருடைய கம்பனியைப்போல் மூன்று கம்பனிகள் வாங்கிவிட்டார். இதுவே அன்னையின் நியாயம். மாற்றம் என்பது சின்ன புத்தியை விட்டு விலகி பெருந்தன்மையை நாடுவதாகும்.
திறமை :
நம் திறமை இளம் பருவத்தில் வளர்கிறது. பிறகு ஒரு நிலையில் நின்றுவிடும். வளரும் பருவத்தில் நாம் வளர்ச்சியையும் நினைப்பதில்லை. வளரும் திறமைகளையும் கருதுவதில்லை. பொதுவாகப் பிறர் நம் திறமையைக் கண்டு நம்மிடம் சொன்னால், அவர்கள் சொல்லும்பொழுது அதை நினைப்போம். பிறகு அது மனதில் வாராது. செல்வம், புகழ், வளர்ச்சி, திறமை, நல்ல குணம் போன்ற அனைத்திற்கும்
இது பொது. தானே உடல் வளரும்பொழுது நாம் அவ்வளர்ச்சியைக் கவனிப்பதில்லை, கருதுவதில்லை, நினைப்பதில்லை, பேசுவதில்லை. பரம்பரையாகப் பணம் இருந்தால், அதை நாம் கருதுவதில்லை. குணம் பிறப்பிலேயே நல்ல குணமானால், நாம் நல்லவர் என்று தோன்றுவதில்லை. பிறரிடம் நாம் நல்லவர் எனப் பேசுவதில்லை. திறமை ஓரளவு இருந்து, போதிய அளவில் இல்லாவிட்டால் மனம் அதை நினைக்கும். பிறரிடம் நமக்குத் திறமை இருப்பதாகப் பேசுவோம். நான்கு பேரிடம் நம் நல்ல குணத்தை எடுத்து உரைப்போம். செல்வம் இந்தத் தலைமுறையில் இல்லாவிட்டால், சென்ற தலைமுறை செல்வத்தை மனம் நினைக்கும், வாய் பேசும்.
மாற்றத்தை நாடுபவர்கட்கு தாம் உள்ள நிலை தெரிவது நல்லது, அவசியம். அது தெரிந்தால், அதிருந்து எந்த நிலைமைக்குப் போகலாம் என அறிய முடியும். மேற்சொன்ன விதி நாம் நம்மை அறிய உதவும்.
- நான் திறமைசாலி என மனம் நினைத்தால் நமக்குப் போதிய திறமையில்லை எனப் பொருள்.
- என் திறமை எவருக்கும் தெரியவில்லை, நான் சொல்லாவிட்டால் எப்படித் தெரியும்? என்று நினைத்தால், பிறர் தானே தெரிந்து கொள்ளும் அளவுக்குத் திறமையில்லை என்றும், நமக்கே நம் திறமை போதாது என்றும் பொருள்.
நான் நல்லவனாக இருக்க வேண்டும், நான் நல்லவனாக இருக்கிறேன், என் நல்ல குணத்தைப் பிறர் அறியவில்லை, என் நல்ல குணத்தை நான் பிறருக்கு எடுத்து உரைக்க வேண்டும் என்றெல்லாம் மனம் நினைத்தால், நான் போதுமான அளவு நல்லவனாக இல்லை, நான் நல்லவனாக இல்லை, பிறர் அறியும் அளவு நல்ல குணம் இல்லை, எனக்கே நல்ல குணம் போதாது என்று தோன்றுகிறது என்றெல்லாம்
பொருள். மாற்றத்தை நாடுபவர்கள் தங்கள் சொற்களை, எண்ணத்தைச் சோதனை செய்து, அதன் உட்பொருளை அறிந்து, அதற்குரிய மாற்றத்தை நாடுதல் நல்லது.
- உள்ளது தன்னை நினைத்துக் கொள்ளாது.
- எதை நினைக்கிறோமோ, அது இல்லை எனப் பொருள்.
- எது இருக்கிறது என்று பேசுகிறோமோ, அது இல்லை எனப் பொருள்.
நான் திறமைசாலி, நல்லவன், பணக்காரன், புகழ் வாய்ந்தவன் எனப் பேசுபவர் மாற்றத்தை நாடினால், திறமையை, நல்ல குணத்தை, பணத்தை, புகழைத் தேடிப் பெற வேண்டும்.
பின் தங்கிய சமூகம் :
ஒரு நாடு முன்னேறாததற்குக் காரணம் ஒரு பகுதியினர் பின் தங்கியிருப்பதால் என்று தெரியும். இது உண்மை. பின் தங்கிய சமூகம் இல்லாத நாட்டையும், பின் தங்கியவர் உள்ள நாட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, இது நன்றாகத் தெரியும். 3 ஆண்களுள்ள இரண்டு வீடுகளுள், ஒன்றில் மூவரும் சம்பாதிக்கின்றார்கள், மூன்றாம் நபரால் சம்பாதிக்க முடியாது எனில், இரண்டாம் வீடு பின்தங்கியிருக்கும். அதில் ஆச்சரியமில்லை. மறுத்துப் பேச இடம் இல்லை.
இதையே வேறு கோணத்தில் பார்த்தால், புதிய உண்மை ஒன்று தெரிய வரும். பின் தங்கிய சமூகத்தை நாம் ஒதுக்கி விட்டால் நாடு பின்தங்கியதாகவே இருக்கும். பின்தங்கிய சமூகத்தை முன்னுக்குக் கொண்டு வர முயன்றால், நாட்டின் மற்ற பகுதிகள் அபரிமிதமாக முன்னேறும், அளவு கடந்தும் முன்னேறும். இதன் வேகம் மற்ற முன்னேறிய நாடுகளை எட்டிப் பிடிக்கவும், அவர்களைத் தாண்டிச் செல்லவும் உதவும். இது ஜப்பானில் நடந்தது. இதன் கருவான
உண்மையை அறிந்தால், அதை நமக்குப் பயன்படுத்தினால், நாம் மாறுவோம், தொடர்ந்தும் மாறினால் நம் சமூகத்தில் தன்மை பெறுவோம். மாற்றத்தை நாடுபவர்கள் கவனிக்க வேண்டிய இடம் இது. இதன் பலன் பெரியது.
ஒரு நாட்டில் எந்த நல்லது நடந்தாலும், அது நாடு முழுவதற்கும் உரியது. நாடு என்பது உடல்போன்றது. வலுவான கையிருந்தால், அது உடன் வலிமை. கைக்கு மட்டும் வலிமை என்று பொருளன்று. நாட்டில் ஒரு மேதை, பெரிய கவி, வீரன், தலைவன், செல்வர், அறிஞர் எழுந்தால், நாட்டின் (subconscious) ஆழ்ந்த நிலையில் சேகரம் செய்த ஞானம், வீரம் ஒருவரில் வெளிப்படுகிறது என்று பொருள். பென்சிலீன் கண்டுபிடித்தவர் தாம் ஆராய்ச்சி செய்த பல்கலைக்கழகத்தின் உதவியின்றியோ, இதற்கு முன் விஞ்ஞானிகளின் சாதனைகளின் உதவியின்றியோ, கண்டு பிடித்திருக்க முடியாது. கண்டுபிடித்த பெருமை அவரைச் சார்ந்தது. கண்டுபிடிப்பு நாட்டிற்குரியது. ஐரோப்பிய விஞ்ஞானிகளின் அறிவு ஐரோப்பாவிற்கு உரியது. தனி உடமையாக அறிவை உலகம் கருதுவது பிற்போக்கு மனப்பான்மை. இது சரியில்லை என்று பகவான் கருதுகிறார். இந்திய நாட்டின் ஆன்மிக வளர்ச்சி நாடு முழுவதும் முதிர்ச்சி அடைந்ததால் ஏற்பட்டதை பகவான் விவரிக்கிறார். அது வசிஷ்டருக்கோ, விஸ்வாமித்திரருக்கோ, அவர்கள் சந்ததிக்கோ மட்டும் உரியதன்று. அப்படி நினைப்பது குறுகிய, தவறான மனப்பான்மை என்கிறார். நாடு முழுவதும் ஆன்மிகம் வளர்ந்திராவிட்டால், வசிஷ்டரும், விஸ்வா மித்திரரும் உற்பத்தியாகியிருக்க மாட்டார்கள். இந்தக் கருத்தை உலகம் ஏதோ ஒரு வகையில் உணர்ந்ததால்தான், முடியாட்சி போய், மக்களாட்சி எழுந்தது.
ஐரோப்பாவும், அமெரிக்காவும், செல்வம் நிறைந்த நாடுகள். ஆசியாவும், ஆப்பிரிக்காவும், வறுமையுள்ள நாடுகள். வறுமையுள்ள நாடுகளை ஒதுக்கி செல்வரான
நாடுகள் தனித்து வாழ முடியும். கடந்த 20 ஆண்டுகளாக அவை ஒரு பெரிய உண்மையைக் கண்டன. ஆசிய – ஆப்பரிக்க நாடுகளை முன்னேற்ற அவர்கள் முன் வந்தால், அவர்கள் செல்வம் பெருகும் என்று கண்டனர். எனவே கோடிக் கணக்கான பணத்தை ஆசியாவில் முதலீடு செய்ய முன் வந்துள்ளனர்.
மதர்ஸ் சர்வீஸ் சொசைட்டி பங்கு கொண்ட சர்வதேச கமிஷன் ரிப்போர்ட்டின் கரு, பின் தங்கிய நாடுகள், உலகின் செல்வத்திற்கு ஊற்று என்பதாகும். மேல் நாடுகள் இந்த ஆழ்ந்த ஆன்மிக உண்மையை அவர்கள் பாஷையில், ஆசியாவில் பெரிய மார்க்கெட் உள்ளது. அங்குப் போனால் அதிகம் சம்பாதிக்கலாம் என்கிறார்கள். பாஷை வேறு, கருத்து ஒன்றே.
இன்று இந்தியாவில் நடப்பது இக்கருத்துக்குச் சான்று. 1947 முதல், நாடு சுதந்திரம் பெற்ற பின், இனி எவருக்கும் தடையில்லை, அவரவர் இஷ்டப்படி முன்னேறலாம் என்றக் கொள்கையைப் பின்பற்றியிருந்தால், நாடு ஆப்பிரிக்காபோல இருந்திருக்கும். சிறுபான்மையோர், அதுவும் ஏற்கனவே செல்வம் சேகரம் செய்தோர், அதிகம் பொருள் ஈட்டியிருப்பார்கள். நாடு அந்தக் கொள்கையைப் பின்பற்றவில்லை. படிக்காதவருக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பையும், தாழ்த்தப்பட்டவருக்கு கல்வி அளிக்கும் பொறுப்பையும், தாழ்த்தப்பட்டவருக்கு முன்னேறும் பொறுப்பையும், பின்தங்கிய பகுதிகட்கு முன்னேற உதவியும் கொடுப்பதைத் தன் கடமையாகக் கொண்டது. இதன் விளைவாக இன்று நாட்டின் முன்னேற்றம் உலகுக்கு வியப்பூட்டும் அளவிலிருக்கிறது. வளர்ச்சியின் வேகம் 5% என்றுள்ளது. மேல் நாடுகளில் 2% ஆக உள்ளது. வளர்ச்சி தொடர்ந்தால் ஒரு நேரம் இந்தியா அமெரிக்காவைத் தொடும். தொடர்ந்து அதே வேகம் நிலைத்தால், அமெரிக்காவைத் தாண்டும். இதை சொத்தை ஜப்பான் ஏற்கனவே
சாதித்துள்ளது. சிங்கப்பூரும், தைவானும், ஹாங்காங்கும் இதே பாதையில் வருகின்றன. நாட்டிற்கு எது உண்மையோ, அதுவே குடும்பத்திற்கும் உண்மை.
3 பேர்கள் சம்பாதிக்கும் குடும்பம் வசதியாக உள்ளது. இரண்டு பேர்கள் சம்பாதித்து 3 பேர்கள் சாப்பிடும் குடும்பம் வசதி குறைவாக இருக்கிறது. சம்பாதிக்க முடியாத நபரைச் சம்பாதிக்க வைக்கும் முயற்சியை இக்குடும்பம் மேற்கொண்டால், அல்லது வேறு எந்தத் துறையிலாவது அவரும் முன்னுக்கு வரவேண்டும் என்ற முயற்சியை எடுத்தால், இந்த இரண்டாம் குடும்பம் படாதபாடுபடும். ஆனால் பெரியதைச் சாதிப்பார்கள். முதற் குடும்பத்திற்குச் சமமாவார்கள், கொஞ்சநாட்கள் கழித்து அதையும் தாண்டிப் போவார்கள். இதை நாம் நாள்தோறும் பார்க்கிறோம்.
300 வீடுகளுள்ள செட்டியார் முனிசிபல் சேர்மன் ஆனார். பெரிய ஜவுளிக்கடை வைத்திருந்தார். ஏழை உறவினர் வீட்டில் சொந்தம் காரணமாகப் பெண் எடுத்தார். அவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தனர். வீட்டிலுள்ள 5, 6 பேர்களும் சொல்ப வருமானம் உள்ளவர்கள். அனைவரும் ஒருவர் சம்பாத்தியத்தை எதிர்பார்த்தனர். திறமைக்குரியவர் ஒருவர். ஆனால் அனைவரையும் முன்னேற்ற முடிவு செய்தார். 20ஆம் ஆண்டு பெரிய செட்டியார் பேர் ஊரில் எவருக்கும் நினைவில்லை. அவர் பெரிய கடையில் போணி ஆகாத நாளும் உண்டு. அவர் சம்பந்திகள் ஊரில் பெருந்தனவந்தரானார்கள். ஜில்லா முழுவதும் பிரபலம் ஆனார்கள். தொன்றுதொட்டு நடப்பது இது. நாம் இதைக் கவனிப்பதில்லை.
உலகத்திற்குரிய உண்மை, நாட்டிற்கும் பொது; தனி மனிதனுக்கும் பொது. ஒரு மனிதன் தனக்குரிய திறமையை வளர்த்துக் கொண்டே போனால், அவன் முன்னேறுவான்.
அதற்குப் பதிலாக, அவனுக்குத் திறமையில்லாத அம்சங்களை வளர்க்க முயன்றால், அவன் அளவு கடந்து முன்னேறுவான். திறமையுள்ள பகுதி, திறமைக்குறைவான பகுதியை மாற்ற முயல்வது பெரிய முன்னேற்றத்தைத் தரும்.
மாற்றத்தை நாடுபவர்கள் திறமையை வளர்ப்பதற்குப் பதிலாக, அதைப் பயன்படுத்தி திறமைகுறைவான பகுதிகளை வளர்க்க முயன்றால், நான் கூறும் மாற்றம் எளிதில் ஏற்படும். திறமையை முக்கியமாகக் கருதுவதற்குப் பதிலாக திறமைக் குறைவை முக்கியமாகக் கருதுவது மாற்றம்.
பரமாத்மா பக்குவமான ஆத்மாவில் பிறந்து, தம் வம்சத்தை வளர்க்கின்றார் என்று பகவான் லைப் டிவைனில் எழுதுகிறார். விலங்கு வளர்ந்து பெட்டையில் குட்டி போடுவதைப்போல், பரமாத்மாவுக்குப் பக்குவமான ஆத்மா செயல்படுகிறது எனவும் கூறுகிறார். இதன் உண்மை வெளிப்படையானது, விளக்கம் தேவையில்லாதது. எனினும், இக்கருத்தை நம் வாழ்வில் பல்வேறு இடங்களில் பொருத்திப் பார்த்தால் பகவானின் கூற்று மேலும் தெளிவுறும், அதன் சூட்சுமம் விளங்கும் வாய்ப்பு ஏற்படும்.
படித்த குடும்பம் அடுத்த தலைமுறையில் படிக்கும் திறன் பெற்று, படிப்பை அதிகமாக ஏற்கிறது. அடுத்த தலைமுறை படிப்பைப் பொருத்தவரை பக்குவம் பெற்றதாகும்.
படித்த குடும்பம் அடுத்த தலைமுறையில் தன்னை ஈன்றெடுக்கிறது எனலாம்.
பல்கலைக்கழகம் இருக்கும் சிற்றூர். அங்கு ஓர் உயர்நிலைப் பள்ளி. அந்தத் தலைமையாசிரியர், என் பள்ளியில் எந்தக் கலை நிகழ்ச்சியையும் ஒரே நாளில் மாணவர்கள் தயார் செய்வார்கள், என்பார். சுமார் 300, 400 ஆசிரியர்களும், பேராசிரியர்களும் உள்ள சிற்றூரில் பள்ளி முழுவதும்
அவர்கள் குழந்தைகள். அவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்துவது அநேகமாகத் தேவையில்லை. படித்த பெற்றோர்கள், குறிப்பாக அதிகம் படித்த தாயார்கள், பிள்ளைகளுக்கு அத்தனைப் பாடங்களையும் முன் கூட்டிப் போதிக்கும் பாங்கு உடையவர்கள். குழந்தைகள் வீட்டில் பாட்டு, வீணை, வயலின் போன்றவைகளிலிருந்து அமெரிக்காவில் புதியதாக வந்த விளையாட்டுவரை கற்கும் சந்தர்ப்பம் உடையவர்கள். ஒரு பள்ளியில் கலை நிகழ்ச்சி எனில் அதைத் தயாரிக்க ஒரு மாதமாகும்; பிள்ளைகளைத் தயார் செய்வது எளிதன்று. இவ்வூர்ப் பிள்ளைகள் அவ்வளவு பேரும் தயாரான பிள்ளைகள். பல்கலைக் கழகச் சமூகம் பள்ளி மாணவர்களிடையே கலையுணர்வாகப் பிறக்கின்றது எனலாம்.
சமூகம் முதிர்ச்சியடைந்ததானால், கல்வி நிலையங்களையும், மார்க்கெட் அமைப்பையும், கலை அரங்கங்களையும், தன் வாரிசாக ஈன்றெடுக்கின்றது.
வளமான பெற்றோர் நிறைவான குழந்தைகள் வாழ்வில் பண்பாகப் பிறக்கின்றனர்.
சிறந்த ஆசிரியரின் திறமை வெளிப்பட சிறந்த மாணவன் தேவை. பகவானும், அன்னையும் நேரடியாக ஏற்படுத்திய யோக ஸ்தாபனத்தில் எந்தச் சாதகர் வாழ்விலும் அவர்களால் ஜனிக்க முடியவில்லை. பிறகு வருகிறேன் என்கிறார் பகவான்.
பக்தன் பவித்திரமானால், மாற்றத்தை விரும்பி நாடினால், மனம் உண்மையால் தூய்மைப்பட்டிருந்தால், அவன் ஆன்மா கனிந்து, முதிர்ந்து அன்னை அவனுள் பிறப்பெடுக்கத் தயாராகிறான். அதற்குரிய மார்க்கத்தையே நான் மாற்றம் எனக் கூறுவது.