பகுதி 14 – நூறு பேர்கள்

பின் பற்றுவதாகும். ஆசையை அழித்தாலும், இயலாமையை வென்றாலும், பிராணமயப் புருஷனுக்கு வலிமை சேரும்.

பரீட்சையில் கடைசி முறை எழுதித் தவறி விட்டால், அவன் இனி எனக்கு வழியில்லை என அறிகிறான். அறிந்ததை ஏற்றுக் கொள்கிறான். வாழ்வு அவனை விட வலிமையானது என்பதை வாழ்வு நிரூபிப்பதை அவன் பணிந்து ஏற்கிறான். இதற்கு மாற்று இல்லை. அன்னையை ஏற்றுக் கொண்டவனுக்கு மாற்றுண்டு. மாற்றத்தால் பலன் பெற்றால், வாழ்வை அவன் வென்று விடுகிறான். இது பிராணமயப் புருஷனின் ஒரு வெற்றி. வலியது லிமிட்டைக் கடந்து விட்டதால் இனி சர்க்கார் வேலை கிடைக்காது. கோர்ட்டில் கேஸ் தோற்றுவிட்டதால், இனி சொத்து கைவிட்டுப் போய்விடும். கம்பனியில் செலவு வரவுக்கு மேலாகிவிட்டது, அதுவும் தொடர்கிறது, மார்க்கெட் நிலவரம் இனி மேலும் மோசமாகிறது என்பதால் எவ்வளவு சீக்கிரம் கம்பெனியை மூடுகிறோமோ அவ்வளவு நல்லது என்ற நிலைக்கு வந்தவன் செய்வதற்கொன்றுமில்லை. உள்ளூர் ரௌடி என் சொத்தை ஆக்கிரமித்துக் கொண்டான், அவனை எதிர்க்க நம்மால் முடியாது என்றால் தெய்வம் விட்டவழி என்றும் மனதைத் தேற்றிக் கொள்ள முடிவதில்லை. தெய்வம் தான் இந்த வழியை விட்டிருக்கிறதே!

அன்னையிடம் வந்தவர்கட்கு இதுவே முடிவன்று. அன்னையே முடிவு. பிரார்த்தனை உதவும். சமர்ப்பணம் பலிக்கும். எது பலித்தாலும் அதன் ஆன்மிகப் பொருள் என்ன? இல்லை என்ற வாழ்வு அன்னை சக்திக்குட்பட்டு, தான் மறுத்ததைச் செய்ய முன் வந்து செய்கிறது. இந்தச் சக்தி நம் பிராணமயப் புருஷனுக்குண்டு. (பிராணன் எனில் வாழ்வு எனப் பொருள்). பிராணமயப்புருஷனை அன்னை சக்தி ஓரிழை வலுப்படுத்திற்று என்றாகிறது. பிராணமய

புருஷன் வெளிப்படுவது யோகச் சித்தியானால், ஒரு செயல் பிராணமயப் புருஷன் வலுப்படுவது யோக வாழ்வுக்கு வழிகோலும்.

பிரார்த்தனையால் பலன் பெறும்பொழுதும், சமர்ப்பணத்தால் பிரச்சினையைத் தீர்க்கும்பொழுதும், பலனைக் கருதாமல், மாற்றத்தின் கோணத்தில் பிரச்சினையை ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு முறை பலன் வரும் பொழுதும் மாற்றம் ஓரளவு பலிக்கிறது என்று புரிந்து கொள்கிறோம்.

மாற்றத்தைப் பூர்த்தி செய்யும் மார்க்கம் அநேகம். பிரார்த்தனையும், சமர்ப்பணமும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மார்க்கங்களனைத்தும் மாற்றத்தைப் பூர்த்தி செய்பவை என உணரலாம்.

இம்முறை மாற்றத்தைப் பூர்த்தி செய்ய நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக உதவும். ஆனால் முழுப் பலன் தரக் கூடியது. யோகச்சித்தியின பகுதி என்பதால், சக்தி வாய்ந்த முறையாகும்.

பிரம்மம் என்பது வாழ்வின் பண்பாக நம்மிடம் வருகிறதுஎன்கிறார் பகவான்.

வாழ்வு, மற்ற அனைத்தைப் போலவும், பிரம்மமானது. பிரம்மம் என்பதை (existence) நாம் சத்தியம் என்கிறோம். சச்சிதானந்தத்தின் ஒரு பகுதி. வாழ்வு எப்படியிருக்க வேண்டும் என நாம் நிர்ணயித்துள்ளோம். நம் நிர்ணயிப்பைத் தாண்டி வாழ்வு வேறு விதமாகவும் இருக்கும். எப்படியிருந்தாலும் வாழ்வு பிரம்மமாகும்.

பெருமை நிறைந்த வாழ்வு, வெற்றி மிகுந்த வாழ்வு, பெரிய குடும்பத்தைக் கட்டிக் காப்பது, காடும், வீடும் பெற்றிருப்பது, ஆசாரமாக இருப்பது, நாணயமாக இருப்பது, கடமையைச் செய்வது, நல்லவனாக இருப்பது என்பவை வாழ்வின் ஒரு பகுதி.

சிறுமையானது, தோல்வி நிறைந்தது, குடும்பத்தைக் கை விட்டது, திவாலானது, அனாசாரமாக இருப்பது, நாணயம் கெட்டிருப்பது, கடமையைத் தவறுவது, கெட்டவனாக இருப்பது போன்றவை வாழ்வின் அடுத்த பகுதி.

பெருமையாக ஒருவரை நாடும் பிரம்மம், சிறுமையாக அடுத்தவரை அடைகிறது. இவைபெருமை, சிறுமைவாழ்வின் பண்புகள். வாழ்வின் பண்பாக வருபவை பிரம்மத்தின் உருவங்கள். வாழ்வில் இப்படியிருக்கலாம், அப்படியிருக்கக்கூடாது என்ற நியதியுண்டு.

  • எப்படியிருக்க வேண்டும் என்பது வாழ்வின் சட்டம்,
  • எப்படியிருந்தாலும் அது பிரம்மம் என்பது பிரம்மத்தின் சட்டம்.
  • மனிதன் உலகத்திற்காக (வாழ்வது) இருப்பது வாழ்வு எனப்படும்.
  • மனிதன் இறைவனுக்காக (வாழ்வது) இருப்பது பிரம்மமாகும்.

குடும்பத்திலிருந்தாலும், திருமணமாகாமல் குடும்பமில்லாமல் இருந்தாலும், உத்தியோகத்தில் இருந்தாலும் நாம் உலகத்திற்காக வாழலாம், நமக்காகவும் வாழலாம், இறைவனுக்காகவும் வாழலாம்.

இறைவனுக்காக உலகில் நாம் வாழ்வது யோக வாழ்வு.

இறைவனுக்காக உலகில் வாழலாம்.

இறைவனுக்காக நாம் வாழலாம்.

நமக்காக உலகில் வாழலாம்.

நமக்காக இறைவன் வாழ்வை ஏற்கலாம்.

|

இறைவனுக்காக வாழ்வது தவம்.

இறைவனுக்காக நம் வாழ்வை ஏற்பது பூரணயோம்.

நமக்காக வாழ்வது மனித வாழ்வு.

நமக்காக இறைவன் வாழ்வை ஏற்பது யோக வாழ்வு.

மனித வாழ்வை எந்த வகையில் இறைவனை நோக்கி உயர்த்தினாலும், முடிவில் அது யோகமாகிறது. அதற்கு முன் நிலையில் யோக வாழ்வாகிறது. யோக வாழ்வு மனித அடிப்படையிலே உள்ளது. அடிப்படையை மாற்றினால் அது யோகமாகும். அதைத் தெய்வீக வாழ்வு என்கிறார் பகவான்.

ஜீவனின் எல்லை :

நாம் நம்மை அறிவதில்லை. நாம் காரியங்களைச் செய்யும் பொழுது குறைந்தபட்சம் தேவைப்பட்டதை மட்டும் செய்ய விரும்புகிறோம். நல்ல பழக்கம் இருந்தால் மேலும் ஓரளவு அழகாகச் செயல்படுவோம். காம்ப்வுண்டைத் தாண்டி சைக்கிள் அல்லது மோட்டார்பைக்கை எடுத்து வந்தால், முதலில் கேட்டைத் திறந்து பிறகு வெளியில் வருகிறோம். வெளியே வர கேட்டைத் திறப்பது அவசியம். திறந்து விட்டோம். வெளியே வந்த பிறகு கேட்டை மூடுவது நமக்கு அவசியமில்லை. அப்படியே கேட் திறந்தபடி இருக்கும்பொழுது போக மனம் நினைக்கிறது. சைக்கிளை நிறுத்தி விட்டு திரும்பப் போய், கேட்டைத் தம் வீட்டில் மூடுபவர் குறைவு. வேறொருவர் அதைச் செய்தால் தேவலை போலிருக்கிறது. வேறு வீடு, ஆபீஸ் போன்ற இடங்களில் அதைச் செய்பவர்கள்

இல்லை எனலாம். இருந்தால் அது அதிசயம். பிறர் நம்மைத் தவறாக நினைப்பார்களே என்று செய்பவர்களும் குறைவு.

கேட் திறந்திருந்தால் மாடு உள்ளே வரும். செடி அழியும் என்பதைத் தடுக்க கேட்டை மூட வேண்டியது அவசியம். கேட்டுக்கு உயிர் உண்டு. திறந்த கேட்டை மூடாவிட்டால், கேட் வருத்தப்படும் என நாம் அறிவதில்லை.

குடிக்க வெந்நீர் பிளாஸ்க்கில் ஒருவர் வைத்திருப்பது வழக்கம். ஒரு சமயம் மகனை வெந்நீர் எடுத்துக் கொடுக்கச் சொன்னார். வாரத்தில் ஓரிரு சமயங்களில் மட்டும் வெந்நீரைப் பயன்படுத்தினாலும், தினமும் வெந்நீர் வைப்பது வழக்கம். மகன் வெந்நீர் கொடுத்துவிட்டு, பிளாஸ்க் மூடியை நன்றாக மூடாமல் போய்விட்டான். அது சரியில்லை என அவர் எழுந்து பிளாஸ்க்கை நன்றாக மூடினார். அன்று மூன்று தரம் அவர் வந்து வெந்நீர் எடுக்க வேண்டியதாயிற்று. பிளாஸ்க்கைச் சரியாக மூடியது பிளாஸ்க்குக்குக் கவனம் செலுத்துவதாகும். அதற்கு பிளாஸ்க் பிரியப்படுகிறது. பிளாஸ்க்குக்கு உயிர் உண்டு. அது தன் மீது செலுத்தும் கவனத்தை பிரியமாக ஏற்றுக் கொண்டு, அவரை மீண்டும், மீண்டும் தன்னிடம் அழைக்கிறது. நாம் இதுபோல் பிளாஸ்க்கை அறிவதில்லை. எதையும் இதேபோல் அறிய முற்படுவதில்லை. பொருள்கள், மனிதர்கள், நிகழ்ச்சிகள், அசைவுகள், செயல்கள், சப்தம், காட்சி என அனைத்துக்கும் உயிர் உண்டு. நம்மைச் சுற்றியுள்ள அனைத்துடனும் நாம் ஜீவனுள்ள தொடர்பு கொண்டால், நாம் நம் ஜீவன் எல்லையைக் கடக்கும்பொழுது அகந்தையை விட்டு அகலுவோம், மனத்தைத் தாண்டி வருகிறோம். சர்வம் பிரம்மம் என்ற கொள்கை நம் வாழ்வில் உயிர் பெறும். அதனால் நம் செயல்கள் உயிர் பெற்றெழும். நம் ஜீவியம் மலரும்.

Moped வண்டிக்கு அதிக வேலையில்லாதவர் ஓரளவு தேவைக்கும், பேரளவு ஆசைக்காக அதைத் தவணை முறையில் வாங்கினார். எப்பொழுதோ ஒரு முறை அதைப் பயன்படுத்துவார். சில சமயங்களில் அடிக்கடியும் பயன் படுத்துவார். ஓரளவு கையில் பணம் வந்த பின், பாங்கில் தவணை பாக்கியாக இருந்த முழுத் தொகையையும் கட்டினார். அன்றிலிருந்து வண்டியை அடிக்கடியும், அதிகமாகவும் பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் எழுந்த வண்ணமிருந்தன, அவர் சிந்தனையைத் தூண்டிற்று.

பாங்க் கடன் அடையும்வரை வண்டி பாங்குக்குச் சொந்தம். அதை வண்டியால் சூட்சுமமாக உணர முடிகிறது. கடன் அடைந்த பின் வண்டி ஓட்டுபவருக்குச் சொந்தம். உரிமை முழுமையாக வந்தவுடன் வண்டி முதலாளியுடன் அதிக தொடர்பை விரும்புகிறது. எனவே வாழ்வு அதிகச் சந்தர்ப்பங்களைத் தானே அளிக்கிறது. இது உரிமையைப் பொருத்த உண்மை. இதைத் தாண்டி வண்டிக்கு உயிர் உண்டு. அதைத் தாண்டி வண்டி பிரம்மம். அதனோடு தொடர்பு கொண்டால் அந்த அம்சங்கள் செயல்படும்.

பிரம்ம ஞானம் என்பது பிரம்மத்தை அறிவது. அதை ஆன்மாவில் அறிந்தவர் பிரம்ம ரிஷி. வண்டியின் பிரம்மத்தை நாம் அறிவது, பிரம்ம ஞானத்தை வாழ்வில் அறிவதாகும்.

மாற்றத்தை நாடுபவர் தாமுள்ள இடத்திலிருந்து ஒரு நிலை உயர முயன்றால் மாற்றம் அவர் வாழ்வில் ஆரம்பமாகும். மனித நல்ல குணத்தின் உச்சகட்டத்தை அடையும்வரை மாற்றத்தைத் தொடர்ந்தால், அவரைப் பொருத்தவரை மாற்றம் முடிந்துவிடும். பொருள்களோடு ஜீவனுள்ள தொடர்பு மாற்றத்திற்குதவும். அதேபோல் நிகழ்ச்சிகளுடனும் தொடர்பு கொள்ளலாம். நேரம், காலம், இடம், மனிதர் உறவு, நிகழ்ச்சி,

பொருள், செயல் இவற்றுடன் ஜீவனுள்ள தொடர்பை ஏற்படுத்தினால் மாற்றம் ஆரம்பமாகும்.

புத்தகம் அச்சிடுவது ஒரு வேலை. நம் பங்கு அதற்குரிய எழுத்து, செலவு, பொறுப்பு. அச்சிடுவது அச்சாபீஸ் கடமை. எவ்வளவு சுத்தமாக அச்சிடப்படுகிறது என்பது அச்சகம் செய்ய வேண்டியது. அச்சகம் அக்கடமையைச் சரிவரச் செய்வதில்லை என்பதால் அதை மேற்பார்வையிட ஒருவரை நியமிக்கின்றோம். புத்தகம் எவ்வளவு அழகாக, நேர்த்தியாக, பக்கங்கள் சரியாக பைண்ட் செய்யப்பட்டு, அச்சுப் பிழையின்றி தயாராகிறது என்பது அவர் பொறுப்பு . பார்வைக்கு நன்றாக இல்லாத புத்தகம் உயர்ந்த கருத்துடையதாக இருப்பதுண்டு. சில சமயங்களில் அச்சுப் பிழை குறைவாக இருப்பது உண்டு. பார்வைக்கு அட்டை அழகாக மட்டும் உள்ளவை சில. புத்தகம் எல்லா அம்சங்களிலும் குறையின்றி இருப்பதே சரி. அச்சகம் செய்யாததை நாம் நியமித்தவர் செய்ய வேண்டும். அவர் செய்யாவிட்டால், நாமே செய்யவேண்டும். ஒரு ஸ்தாபனத் தலைவர் கோவாப்பரேட்டிவ் சொஸைட்டி, ஆடிட்டர் ஆபீஸ், தாசில்தார், தலைமை ஆசிரியர்அச்சுப் பிழை முதற் கொண்டு பார்க்க முடியாது என்பது உண்மை. அன்னைச் சேவையில் அப்பிழையிருந்தால், பொறுப்புள்ளவரை விலக்க வேண்டும். அவர் கடமையில் தவறினால் அவருக்குச் சேவை நீடிக்காது. தவறு எவருடையதாக இருந்தாலும், consciousness responsibility பொறுப்பு தலைவரைச் சேரும்.

நாம் வெளியிட்ட 15 புத்தகங்கள் ஓரளவு தெளிவாக இருந்தாலும், எல்லா விஷயங்களிலும் சரியாக இருந்தாலும், அச்சுப் பிழை மலிந்தே காணப்படுகிறது. ஒரு புத்தகமும் பிழையின்றி அமைந்தது எனச் சொல்ல முடியாது. இந்தப் பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டு ஒரு புத்தகத்தை 7, 8 பேர்கள் பிழை திருத்தம் செய்ததின் விளைவு, அப்புத்தகம்

அச்சுக்கே போகவில்லை. என் சிரமத்தை அறிந்த அன்பர், இது சம்பந்தமான தொழிலிருப்பதால், தானே பிழையின்றி அச்சுக் கோத்துக் கொடுக்க முன் வந்தார். 15 நண்பர்களைப் பிழைத்திருத்தம் செய்யச் சொன்னார். Error free பிழையே இல்லை என என்னிடம் அதைச் சேர்ப்பித்தார். நான் படித்தேன். 3 பிழைகள் இருந்தன. அடுத்த இருவர் ஆளுக்கு ஒரு பிழை கண்டனர்.

இதன் மூலம் எங்கிருக்கும்? அதைக் கண்டு களைய முடியுமா? என நான் யோசனை செய்தேன். ஆர்யா பத்திரிகை நடத்தும் பொழுது, பகவான் ஸ்ரீ அரவிந்தர் proof பிழைத்திருத்தத்தைத் தாமே 6 முறைகள் செய்தார். 32 வருஷங்களுக்கு முன் பள்ளியில் நான் வேலை செய்யும் பொழுது magazine பள்ளி ஆண்டு மலரை அச்சிடும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். பள்ளியில் மாணவர் கட்கு மலரில் வெளியிடும் அளவு கட்டுரை ஆங்கிலத்தில் எழுத முடியாது. ஆசிரியர்களில் ஒருவர் மட்டுமே ஒரு கட்டுரை எழுதினார். அதில் இலக்கணப் பிழை ஏராளம். அதைத் திருத்தக் கூடாது என்றார். தலைமையாசிரியர் தலையங்கம் எழுதினார். வாக்கியங்கள் அமைப்பு சரியில்லை. இலக்கணப் பிழைகளுடன் எல்லாப் பிழைகளும் இருந்தன. என்னிடம் அதைக் கொடுத்துத் திருத்திப் போடச் சொன்னார். தலைமை ஆசிரியர் எழுதியதை நான் ஆசிரியராக இருந்து திருத்துவது சரியில்லை. அவர் சொற்களிலேயே கட்டுரையைப் பிழையின்றிச் சரி செய்வது கடினமாக இருந்தது. வேறு 10 கட்டுரைகள் தேவை. எழுத எவரும் முன் வரவில்லை. நானே அத்தனைக் கட்டுரைகளையும் எழுதி, சில ஆசிரியர்கள், பல மாணவர்கள் பெயர்களில் அச்சுக்கு அனுப்பினேன். அச்சகம் பிழைத் திருத்தத்திற்கு என்னிடம் கொடுக்காமல் மலரை அச்சிட்டு அனுப்பிற்று. மலரில் பக்கத்திற்கு ஒன்று, இரண்டு என பிழைகள் இருந்தன. அவர்களை விசாரித்தபொழுது, அவர்கள் தலைமை ஆசிரியரிடம் proof பிழை திருத்தக்

கொடுத்ததாகவும், அவரே பார்த்து அனுப்பிவிட்டதாகவும் சொன்னார்கள். மலரில் வெளியான கட்டுரைகளை அனைவரும் விரும்பினர், போற்றினர். பிழையை எவரும் கவனிக்கவில்லை. இது எனக்கு நினைவுக்கு வந்தது. யார் தவறு செய்தாலும், பொறுப்பு என்னுடையது. 32 வருஷங்கள் கழித்து அன்று திருத்தாத பிழைகள் இன்று என் புத்தகங்களிலும், மாத இதழிலும் உயிரோடு இருக்கின்றன.

பிழையின்றி புத்தகம் வெளியிட முயன்றதன் விளைவு கடந்த இரு ஆண்டுகளாக எந்தப் புத்தகமும் வெளிவரவில்லை.

புத்தகம் வெளியிட்டால் புத்தகத்தோடு ஜீவனுள்ள தொடர்பு கொள்கிறோம். அதன் விளைவாக புத்தகம் அன்பர்களிடம் போய்ச் சேருகிறது. அவர்களுக்குப் பயன் தருகிறது. அது முதற்படி. அடுத்தாற்போல் அதன் தோற்றம், பொலிவு, அழகு, நேர்த்தியுடன் தொடர்பு கொண்டால், அது அழகாக வெளி வருகிறது. அதைத் தாண்டி perfection பிழையற்ற சிறப்புடன் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் அது அச்சாகும் நிகழ்ச்சி, விற்பனையாகும் விவரம், வாசகர்கள் பயன்படுத்தும் பாணி, ஆகிய அனைத்துடனும் தொடர்பு கொண்டால், ஜீவனுள்ள தொடர்பு முழுமையான தொடர்பாகும். முழுமையான தொடர்புக்கு முழுமையான பலன் உண்டு. பகுதியான பொறுப்புக்குப் பகுதியான பலன் வரும். மாற்றத்தை நாடினால் நம் பொறுப்பிலுள்ள அனைத்து நிகழ்ச்சிகளுடனும், முழுமையான தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.

முழுமையானது என்பதென்ன?

நானுள்ள இடத்தில் மற்றவர்களைவிடப் பல மடங்கு அதிக வேலை செய்வேன். வேலையில் பலனுள்ள பகுதியுண்டு. பலனற்ற பகுதியுண்டு. பலனற்ற பகுதியை, சாஸ்திரத்திற்காக, ஒப்புக்காக, தோற்றத்திற்காக, மேலுள்ளவர் அதிகாரத்திற்காக,

நிர்ப்பந்தமாகச் செய்ய வேண்டிய நேரங்களுண்டு. அவற்றை நான் தலைவிதியே எனச் செய்வேன். ஆசிரியர் தொழில் மாணவனுக்குப் பாடம் புரிவது பலன் தரும் பகுதி. இதை அளவு கடந்த ஆர்வத்தோடு நான் நிறைவேற்றுவேன். மனப்பாடம் செய்வது, இன்ஸ்பெக்ஷனுக்காக வைத்துள்ள ரிஜிஸ்டர், கட்டுரை நோட்டு போன்றவற்றை நான் புறக்கணிப்பேன். நிர்ப்பந்தம் வரும்பொழுது வெறுப்போடு நிறைவேற்றுவேன்.

ஆசிரமம் வந்தபின் நான் ஒரு முதிய சாதகருடனிருந்தேன். இது குருசிஷ்ய உறவு. இவருக்கு எதிரான பழக்கம் உண்டு. பலன் தரும் காரியங்களை அவருக்குச் செய்யத் தெரியாது. ஜீவனற்ற காரியங்களைத் தோற்றத்திற்காகச் செய்வது மட்டுமே அவர் ஏற்றுக் கொண்ட வேலை. அதுபோன்ற பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்து, என்னை விற்கச் சொன்னார். பையன் மனப்பாடம் செய்து எழுதியதை, திருத்தி, அதில் பிழை திருத்தி, DEOக்காகக் காட்டும் கட்டுரை நோட்டு போன்ற வேலை அது. அவர் தமிழர் அல்லர். தமிழ் பத்திரிகையை ஆரம்பித்து தம்மை ஆசிரியராக்கினார். அப்பொழுது தமிழர்கள் ஆசிரமம் வருவதில்லை. அவரைச் சுற்றி 4, 5 பேர்கள் தமிழ்ப் பேசுபவர்கள். அவர்களுக்குத் தமிழ்ப் படிப்பில்லை. பகவான் நூல்களை அவர்கள் படித்ததில்லை. அன்னை மீது நம்பிக்கையற்றவர்கள். பகவான் நூல்களை புரிந்து கொள்ளும் திறனற்றவர்கள். பழைய பழக்கங்களை முழுவதும் பின்பற்றுவார்கள். இவர்கள் கட்டுரை எழுதி, அப்பத்திரிகையில் அச்சிடுவார்கள். அவர்களால் அப்பத்திரிகையின் பிரதிகளை 2, 3ம் விற்க முடிந்ததில்லை. அன்னை மீது நம்பிக்கையில்லாத, பழைய பழக்கங்களைத், தமிழ் அறிவு இல்லாதவர் பகவான் நூல்களை மொழி பெயர்த்து எழுதினால், கட்டுரையைப் படிக்க இயலாது. வெள்ளைக்காரன் பேசும் தமிழ் போலிருக்கும். இதை நான் விற்க வேண்டும். எனக்குப் பிடிக்கவில்லை. Self

discipline கட்டுப்பாட்டின் பெயரால் நமக்கு வரும் நிகழ்ச்சிகளை நம் அந்தரங்கம் தேவைப்படுகிறது எனக் கொண்டு, அதனால் ஏற்றுக் கொண்டு செயல்பட்டேன். அளவு கடந்து பத்திரிகை விற்றது. அப்பொழுது எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ஆசிரியராகக் கட்டுரை நோட்டுத் திருத்தியது போலிருக்கிறது இந்தத் தண்டனை என நினைத்தேன். அவரை விட்டு வந்தேன். தலைவிதி விட்டது என நிம்மதியை உணர்ந்தேன்.

இன்று பிழையின்றி அச்சடிக்க முடியவில்லை, 15 புத்தகங்களிலும் அச்சுப் பிழைகள் மலிந்துள்ளன. தியான மைய வெளியீடும், ஸ்ரீ அரவிந்த அன்னையும் 60,70 பிரதிகளில் ஒன்று கூட பிழையின்றி அச்சடிக்கப்படவில்லை. இலண்டனில் போய் ரிப்போர்ட் அச்சடிக்கக் கொடுத்தால், தவறே அறியாத இலண்டன் அச்சகம் ரிப்போர்ட்டில் 16 பிழை செய்திருந்தது. இது மேல்நாடுகளில் நம்ப முடியாதது. புத்தகம் அச்சுக்குப் போகும் 11/2மணிக்கு முன் பிழைகளை அவர்களிடம் கொடுத்து திருத்தச் சொன்னோம். ஸ்ரீ அரவிந்தர் முழுமை, பூரணம், ஆதியின் பூரணம், (absolute) பிரம்மத்தின் சிருஷ்டிக்கு முந்தைய நிலை (the unmanifest absolute Brahman) என்று கூறுவதின் உட்கருத்து இதன் மூலம் எனக்கு விளங்கியது.

காரியம் என்பதில் பல பகுதிகள் உள்ளன. அர்த்தமுள்ளது, அர்த்தமற்றது என இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். அர்த்தமற்ற பகுதிக்கு ஆன்மிக அர்த்தம் உண்டு. அர்த்தமற்ற பகுதியையும் அர்த்தபுஷ்டியோடு செய்து நிறைவேற்றினால்தான் காரியம் முழுமை பெறுகிறது என்று நான் புரிந்து கொண்டேன். தோற்றத்திற்காகவோ, ஒப்புக்காக, நாலு பேருக்காக, சாங்கியமாக, சாஸ்திரத்திற்காக செய்பவையும், அர்த்த புஷ்டியானது, அதை விருப்பமாகச் செய்யாமல், அந்நிலையைக் கடக்க முடியாது என்று நான் அறிந்தேன். பிழையின்றி

அச்சிடுவது என் பழைய பாக்கிகளை இப்பொழுது நிறைவேற்றுவதாகும். எனவே நான் பிழைத் திருத்தும் பொறுப்பை ஏற்றுச் செய்கிறேன்.

ஏன் அர்த்தமற்ற காரியத்தைச் செய்ய வேண்டும்?

அர்த்தமற்ற காரியங்கள் அஸ்திவாரமாக அமைகின்றன.

ஒரு காரியத்தில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று பலர் கண்ணிலும் படுவது. அடுத்தது எவர் கண்ணிலும் படாமல் அத்தியாவசியமாக அமைவது. விழாவில் மேடை நிகழ்ச்சிகள் அனைவரும் பார்ப்பது. மேடைக்கு விழா வருமுன் செய்ய வேண்டியவை பல. விழா முடிந்த பின், கவனிக்க வேண்டியவை ஏராளம். இது details of work எனப்படும். இவை சரியாக இல்லாவிட்டால் விசேஷமில்லை.The devil is in the details என்பது ஆங்கில வழக்கு. தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மேடைக்குரியவர்கள். தொண்டர்கள் பின்னணிக்கு உரியவர்கள். தொண்டர்கள் சேவை சுவையற்றது, ஆனால் இன்றியமையாதது. இவை அர்த்தமுள்ள காரியங்களாகும். அர்த்தமற்றவை வேறு.

ஆபீஸில் வேலை செய்பவர்கட்கு இது புரியும். எவருக்குமே தேவைப்படாத காரியங்களச் செய்யும்படிச் சட்டம் இருக்கும். செய்தால் எவருக்கும் பலன் இல்லை. செய்யாவிட்டால் பொறுப்பு கட்டியவருக்குத் தண்டனையுண்டு. பூஜை, திருமணம் போன்ற விசேஷங்களில், உத்சவத்தில் முக்கால் பகுதிக்கு மேல் இப்படிப்பட்ட காரியங்கள். கோயிலுக்குப் பக்தியோடு போகிறவர்கள் குறைவு. பக்தியில்லாமல் கோவிலுக்குப் போகிறவர் மனம் வெறுப்பாக இருக்கும். இதனால் எவருக்கும் பலன் இல்லை. ஓர் ஆடிட்டர் ஆபீசில் ஏராளமாகக் கணக்குப் புத்தகங்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன. வரும் கட்சிக்காரரை எடுத்துப் போகச் சொன்னால், அவர்கள் தங்கள் நோட்டுப் புத்தகங்களை

எடுத்துப் போவதில்லை. வியாபாரியின் வரவு செலவுக்குச் சம்பந்தமில்லாதது இது. சர்க்காருக்காக இல்லாத கணக்கை எழுதி, கணக்கு முடித்த நோட்டுகள் இனி யாருக்கு வேண்டும்? என்றார் ஒருவர்.

மாமியார் அதிகாரம் செல்லும் காரியங்களில் மருகமகளுக்கு இதுபோன்று தேவையில்லாத பொறுப்புகளைக் கொடுத்து அதிகாரத்தைச் செலுத்துவதுண்டு. ஆசிரியர் எழுதும் Notes of lessons பாடக்குறிப்பு, மாணவன் மனப்பாடம் செய்து எழுதும் கட்டுரை, சாஸ்திரத்திற்காகச் செய்யும் சீர்வரிசை போன்றவை முழுவதும் அர்த்தமற்றவை. அதிகாரத்திற்குட்பட்டு அவற்றைச் செய்யும்பொழுது வெறுப்பு வரும்.

ஏன் அர்த்தமற்ற காரியத்தை நான் செய்யும்படி அமைந்தது என்ற கேள்விக்கு அன்னையின் பதில், காரியத்திற்கு அர்த்தமற்றது, உன் ஆன்மிக வளர்ச்சிக்கு அர்த்தமானது, அவசியமானது. அர்த்தமற்ற காரியத்தை நாம் செய்யும் சந்தர்ப்பம் இருந்தால், அது நமக்கு அவசியம் என்று பொருள். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போகுமுன் அதற்கு முன்னுள்ள நிலையில் கடமை பூர்த்தியாக வேண்டும். அர்த்தமற்ற காரியங்களை விருப்பமாக ஒரு நிலையில் செய்யாதவரை, அவை நம்மை அடுத்த நிலைகளில் தொடரும், அடுத்த நிலையில் வரும் வாய்ப்புகள் நிறைவேறுவதைத் தடுக்கும்.

செயலுக்கும், சம்பந்தபட்டவருக்கும் அர்த்தமற்றதாக

அமையும் காரியங்கள், ஆழ்ந்த உணர்வில் காரியம்

பூர்த்தியாகி அஸ்திவாரம் சிறப்பாக அமைய அவசியம்.

இது சூட்சுமமான கருத்து. நடைமுறையில் நாம் புரிந்து கொள்ளாதது. அன்னை வாழ்வில் அவசியம் அறிய வேண்டியது. அடுத்த கட்டத்தை அடைய இது அவசியம்.

அடுத்தகட்ட வாய்ப்புகள் தவறினால், முன் கட்டத்தில் அர்த்தமற்ற செயல்கள் குறையாக இருக்கின்றன எனப் பொருள்.

காரியங்களைத் தடையின்றி, சிறப்பாக, விரைவாக, வெற்றிகரமாக முடிப்பவர்கள் இதுபோன்ற அர்த்தமற்ற செயல்களை நிதானமாக, பொறுமையாக, ஏதோ வெகு முக்கியமான காரியம்போல் பொறுப்போடு எரிச்சலின்றி நிறைவேற்றுவதைக் காணலாம். பகவான் சாதர்களுக்கு இரவெல்லாம் கண் விழித்துப் பதில் எழுதியது இவ்வகையைச் சேர்ந்தது.

Sincerity என்ற கட்டுரை :

ஒரு நாள் நான் உண்மையைப் (sincerity) பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது, கேட்டுக் கொண்டிருந்தவர், தாம் முதல் நாள் உண்மையைப் பற்றிய கட்டுரையைப் படித்த விவரத்தைச் சொன்னார். அவர் படித்த பொழுது பேப்பர்கட்டுரை எழுதிய பேப்பர்பளபளக்க ஆரம்பித்துப் பொன்னிற மாயிற்று என்றார். படிப்பவர் மனதில் உண்மையிருந்தால், கட்டுரையின் கருத்து பளபளக்கும். உண்மை (sincerity) என்பது தங்கம் என்பார் அன்னை. அது யாருக்காக எழுதப் பட்டதோ அவர் அதுபோன்ற அனுபவம் கட்டுரை மூலம் பெறவில்லை. அன்னை வலியுறுத்தும் குணம் sincerity உண்மை. அது சத்திய ஜீவியத்திற்குரியது. அதன் நிறம் பொன்னிறம். Sincerity is golden என்பது அன்னைக்குரிய வழி. அளவு கடந்த பெரிய வாய்ப்பு வந்தால், அல்லது சிறிய மனிதர் நல்லவர் என்பதால் அவருக்கு மிகப் பெரிய நல்லதைச் செய்ய முயன்றால், உடல்நலம் அளவு கடந்து குன்றுதல், பெரிய நஷ்டம், பெரிய ஆபத்து நெருங்கி வருவதைக் காணலாம். ஏனெனில் சிறிய ஏரியில் பெரிய அளவு நீர் வந்தால், கரை உடையும் என்பதைப்போல், சிறிய ஜீவனுக்கு

வரும் பெரிய வாய்ப்பு அவரைச் சுற்றி அசம்பாவிதமான அறிகுறிகளாக எழும். இதைத் தவிர்க்கலாம். செய்யும் வேலையை முறைப்படுத்தினால், (organise) எந்தக் குறையும் வேலையில் எழாது. நேரம் தவறாது காரியங்களை அமைத்தால், கால தாமதம் எந்த இடத்திலும் குறுக்கிடாது. பொறுப்புகளை நல்லெண்ணம் உள்ளவர் கையில் ஒப்படைத்தால், அவர்கள் அரணாக அமைவார்கள். நல்லெண்ணமுள்ளவர் மூலம் குறை, தடை, நஷ்டம் வராது. இதுபோல் வேலையின் எல்லா அம்சங்களையும் அதற்குரிய முறை, நெறியுடன் செய்தால், நாம் எச்சரிக்கையான இடங்கள், நபர்கள், செயல்கள் மூலம் தவறு ஏற்படாது. செய்யும் வேலை மிகப் பெரியதானாலும் அல்லது அன்னையின் சேவையானாலும், இவ்வளவும் செய்த பிறகு, காரியம் கெட்டுப் போக வெளியிலிருந்து தடைகள் கீழ்க்கண்ட உருவில் எழுவது வழக்கம். ஹர்த்தால் விசேஷத்தைத் தடுத்தது, அன்று புதிய சட்டம் வந்து வந்த வாய்ப்பு இல்லை என்றாயிற்று, என்பவை போன்ற பெருந்தடைகள் நமது வேலைக்குப் புறம்பாக இருந்து எழும். சாதாரண மனிதன் இதற்குத் தவறாது பலியாவான். அன்னை பக்தர்களுக்கும் இதிலிருந்து தப்புவது எளிதல்ல. இதற்கு அன்னை சொல்லும் வழி ஒன்றுண்டு. அது உண்மை sincerity. இந்த காரியத்தைப் பொருத்தவரை எல்லாச் செயல்களையும், சந்தர்ப்பங்களையும் நினைவுபடுத்தி மனம் அவற்றைப் பொருத்தவரை உண்மையாக இருந்தால், வெளியிலிருந்து தீய சக்திகள் மூலம் எதிர்பாராத தடைகள் எழாது என்கிறார் அன்னை.

மனத்தின் உண்மை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்றும்.

பக்தர்கள் பெரிய திட்டங்களை ஆரம்பிக்கு முன், இதுபோன்ற பேராபத்து வராமல் தடுக்க, மனத்தால் உண்மை மூலம் திட்டத்திற்கு அரண் கட்ட வேண்டும்.

  • முப்பது கோடி நிகர இலாபம் சம்பாதிக்க கையில் ஆர்டர் வாங்கிய பின், மறு நாள் காலையில் ஜனாதிபதியின் (veto) அதிகாரத்தால் திட்டம் இரத்தானது.
  • 650 ரூபாய் சம்பாதிப்பவரை அழைத்து 2000 ரூபாய் சம்பளம் கொடுத்து வேலையில் சேர்ந்த பின், டாக்டர் சர்டிபிகேட்டால், வேலை போயிற்று. இது 25 வருஷத்திற்கு முன் நடந்தது.
  • 4 இலட்சம் வியாபாரமாகும் கம்பனிக்கு 4 கோடி ஆர்டர் கிடைக்கும் வாய்ப்பை காக்கா வலிப்புக் காரனுக்குச் செய்த உதவியால் இழந்தார் ஒருவர்.
  • 7 கோடி வியாபாரம் ஆகும் கம்பனிக்குக் கொடுத்த ஆலோசனை கம்பனியை இரு ஆண்டுகளில் 100 கோடிக்கு உயர்த்திய பின்னும், ஆலோசனைக்குப் பீஸ் இல்லாமல் போய்விட்டது.

இது போன்ற சம்பவங்களை மனத்தின் உண்மை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றும்.

லைப் டிவைன் படித்த மாணவி, அதைப் படிக்கும் பொழுதுதெல்லாம் வாய் இனிப்பதாகச் சொன்னாள். சைத்திய புருஷன் இனிமைக்குரியவன். அவன் மேலெழுந்து வந்தால் இனிக்கும். விடும் மூச்சு சுவையாக இருப்பதுண்டு. எச்சில் இனிக்கும். இப்பெண் கோபப்படும்பொழுதெல்லாம் வாய் இனிப்பதை உணர்ந்தாள். கோபம் இனிமையானதா? கோபத்திற்கும், இனிமைக்கும் என்ன தொடர்பு? கோபம் உணர்ச்சி வசப்படுவது. கோபம் பொல்லாதது. உணர்ச்சி வசப்படும் நேரம் சைத்தியப் புருஷன் கோபத்தையும் மீறி, இனிக்கின்றான். இந்த இனிமையுள்ள நேரம் செய்யும் காரியம் காலத்திற்கும் இனிக்கும்.

எங்கள் ஆபீசில் அன்னையின் தரிசனத்தை அனைவரும் விரும்புகின்றார்கள். தலைப்பே அழகாக இருக்கிறது என்றார்

ஓர் இன்ஜினீயர். அந்தத் தலைப்பைக் கொடுத்தது அமுதசுரபி ஆபீஸ். தலைப்பைப் பார்த்தவுடன், இந்த இனிமையைக் கண்டேன். ஏற்றுக் கொண்டேன். 9 வருடங்கள் கழித்து அந்த இனிமை படிப்பவர்க்குத் தெரிகிறது. எங்கள் ஆபீசில் ஒருவர் உங்கள் கட்டுரைகளைத் தொகுத்துக் கொடுத்தார். அவர் அதற்கு ஒரு தலைப்பும் கொடுத்து உள்ளார் என்று விக்கிரமன் என்னிடம் 1985-இல் சொன்னது நினைவிருக்கிறது. அவர் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஆன்ம விழிப்போடு செய்த காரியம் இத்தலைப்பை எழுதியது. இக்கட்டுரை முழுவதும் நான் விளக்க முயலும் மனநிலை அந்த ஆன்ம விழிப்பு.

மேதையின் ஞானம் :

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் அவர் ஆசிரியர் A.N வொயிட் ஹெட் என்பவரும் சேர்ந்து Principia Mathematica கணிதத்தின் தத்துவம் என ஒரு நூல் எழுதினார்கள். இதை உலகில் 12 பேர்களே புரிந்து கொண்டார்கள் என்று சொல்வதுண்டு. ஸர் ஐசக் நியூடன் எழுதிய புத்தகத்திற்கும் அதே பேர் உண்டு. மேதைகள் எழுதுவது அவர்கள் காலத்தில் அவர்களைப் போன்றவரைப் போலிருப்பவர்களுக்கு மட்டும் புரியும். அடுத்த நூற்றாண்டில் அது பள்ளியில் பாடப் புத்தகத்தில் வரும். வேதம் அன்று இரகஸ்யமாக இருந்தது. வேதக் கருத்துகளை மேல் நாட்டு அறிவாளிகள் பயின்று மொழிபெயர்த்து எழுதியுள்ளார்கள். தமிழில் மறை எனப்படும் வேதம் மறை பொருளாக இருந்தது. இன்று கல்லூரி மாணவர்க்கு வேதக் கருத்துகளை அவர்கள் பயிலும் பாடத்தில் ஒரு பகுதியாக அமைத்துள்ளார்கள்.

ஒரு காலத்து மேதை ஞானம் அடுத்த காலத்தில்

அனைவரும் அறியும் ஞானமாகிறது.

இன்று லைப்டிவைன் எவர்க்கும் புரியாத நூல். புரிந்தவர்கள் ஒரு சிலர் என்று கருதப்படுகிறது. எதிர்காலத்தில் ஸ்ரீ அரவிந்தம் எளிமையாகி எல்லோருக்கும் புரியும் கருத்தாக மாறும். அன்று எப்படி அவற்றைப் புரிந்து கொள்வார்கள் என இன்று நாம் சிந்தனை செய்தால், எண்ணமும், கருத்தும் எத்தனை மாறுதல் அடைந்து முதலில் என்ன உருவம் பெறும் எனக் கண்டால், இன்று நமக்கு அது உதயமாகும். அது அனைவருக்கும் புரியாவிட்டாலும், ஆழ்ந்த பக்தியுள்ளவர்க்குப் புரியும். மாறிய மனநிலை எதிர்காலத்தில் அதைப் புரிய வைக்கிறது. உலகம் சூரியனைச் சுற்றி வருகிது. அடிமையும் மனிதன்தான்; அரசன் இறைவனால் ஏற்படுத்தப் பட்டவனில்லை; நாம் பிரகிருதி; என்பனவற்றை முந்தைய நூற்றாண்டு மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்றைய மாறிய மனநிலையில் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. பகவான் எழுதியவை எதிர்காலத்தில் எளிமையாகப் புரியும் என்பது அன்று மனநிலை மாறுவதால் தான். அந்த மனநிலையை இன்று நாம் ஏற்றுக் கொண்டால் லைப் டிவைன் புரியும். நான் கூறும் மனமாற்றம் அதுவே.

அந்த மனமாற்றத்தின் அம்சங்கள் :

  • நல்லவனாக இரு.
  • எண்ணத்தாலும் தூய்மையாக இரு.
  • எண்ணத்தின் உற்பத்தி ஸ்தானத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும்.
  • தீமைக்கு எதிரான நல்லது, சிறிய நல்லது.
  • தீமையோடு தொடர்பற்ற நல்லதே பெரிய நல்லது,
  • ழுமையான நல்லது.
  • எண்ணத்தாலும், உணர்வாலும், செயலாலும், அவற்றின் உற்பத்தி ஸ்தானத்திலும் நல்லது மட்டும் உள்ள நல்லவனாக இருத்தல் வேண்டும்.

அப்படிப்பட்ட நல்லவனாக நாமிருக்கின்றோம் என்பதற்கு ஓர் அடையாளம் உண்டு. கெட்டவர்களைக் கண்டால் நமக்குப் பிடிப்பதில்லை, எரிச்சல் வருகிறது, வெறுப்பு வருகிறது. அவற்றை மறுத்து அவர்களிடமும் நல்ல முறையில் பழகுகிறோம். நம்மிடம் அஸ்திவாரத்திலுள்ள தீய குணங்களே பிறரிடம் உள்ள தீமையைக் கண்டு எரிச்சல் படுவது. நம்மிடம் அதுபோன்ற தீமையின் சுவடு இல்லா விட்டால் தீயவர்களைக் கண்டால் வெறுப்பு எழாது. வெறுப்பு என்று உள்ளே இருந்தால்தானே எழ முடியும்? அவர்களோடு நாம் பழகினால் அவர்கள் எப்படி நம்மைப் புரிந்து கொள்கிறார்கள் என்பது நம் தூய்மைக்கும், நல்ல குணத்திற்கும் ஓர் அளவுகோல். நமக்கு அவர்கள் மீது எந்த வெறுப்புமில்லை என அவர்கள் புரிந்து கொண்டால், நாம் மனதால் நல்லவர்களாக இருக்கிறோம் என்று பொருள். அதுபோன்ற நல்ல உள்ளமிருந்தால் லைப் டிவைன் புரியும்.

ழுமையான நல்ல உள்ளம் பகவான் எழுதியதைப்

புரிந்து கொள்ளும் திறன் உடையது.

இருப்பதும்இல்லாததும்:

சத்தியம் உள்ளது, மாயை இல்லாதது. உழைத்தால் பலன் வரும், உட்கார்ந்து பேசினால், கற்பனைத் திட்டங்களை தீட்டினால் பலன் வாராது. பாடம் புரிந்தால் அறிவு வரும், மனப்பாடம் செய்தால் அறிவு வர வழியில்லை. ஓர் உத்தியோகமோ, தொழிலோ செய்தால் குடும்பத்தைக் காப்பாற்றலாம், திண்ணைப் பேச்சு, மாமனார் உதவி, நண்பர்கள் கூட்டம் எதுவும் குடும்பத்தைக் காப்பாற்றாது. சொந்தமாகப் புதிய எண்ணங்கள் மனத்தில் உற்பத்தியானால், புத்தகம் எழுதலாம், பலரும் பயன் அடைவார்கள். பேராசிரியர்கள் சேர்ந்து கருத்தரங்கு நடத்தி அவற்றைத் தொகுத்து எழுதும் புத்தகம் விற்பனையாகாது.

உள்ளம் உற்பத்தி செய்வது உண்மை. அதை வெளிப்படுத்தினால் அது பலனுடையதாக இருக்கும். வெளியில் உற்பத்தியாவதை உள்ளம் கருதினால் அங்கு உண்மை இருக்காது, உற்சாகம் எழாது, உள்ளம் கருகும்.

உள்ளம் உற்பத்தி செய்வது இருப்பது (reality),

புறத்தைக் கருதும் உள்ளம் உண்மையை அறியாதது (illusion)

மாற்றம் எனப்படுவது மனமாற்றம். தோற்றத்தின் மாற்றம் மாற்றமாகாது. மாற்றம் மனதில் எழுந்து, புறத்தில் வெளிப்பட வேண்டும். நாம் கூறும் பலனைத் தரவல்லது அது.

உழைப்பும், எண்ணமும் :

உழைப்பை இருவகைகளாகப் பிரிக்கலாம். வெறும் உழைப்பு என்பது உடலால் உழைப்பது. மனதின் இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும் உழைப்பை நல்ல உழைப்பு எனலாம். உழைப்புக்குப் பலன் உண்டு. நல்ல உழைப்புக்கு உயர்ந்த பலன் உண்டு. விவசாய நெல் பயிரிட்டால் எந்த எண்ணமுமில்லாமல் பயிரிடலாம். நெல் உற்பத்தியாகும். நான் பயிரிடுவதால் குடும்பம் முன்னுக்கு வர வேண்டும், நாட்டில் உணவு உற்பத்திப் பெருக வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் பயிரிடலாம். நல்ல எண்ணத்தோடு பயிரிட்டால் நெல் அதிகமாகப் பயிராவதுடன் பயிரிடும் விவசாயியின் மனம் வளர்ந்து நல்ல பலனைக் கொடுக்கும்.

மனிதர்களில் நல்லவர், கெட்டவர் என்பவருண்டு. கெட்டவரானாலும், நல்லவரானாலும் உழைப்பு தவறாமல் பலன் தரும். உழைப்பில்லாமல் பலன் வாராது. உழைப்புக்கு, அதுவும் அறிவுடை முயற்சியின் உழைப்புக்குப் பலன் நிச்சயம்.

உழைப்பு பலன் பெறத் தவறியதில்லை.

ஆனால் கெட்டவர் உழைப்பு, பலன் தரும்பொழுது, கெட்ட பலனாக நிச்சயமாக இருக்கும். அதிலிருந்து தப்ப முடியாது. மனிதன் கெட்டவனானாலும், நல்ல எண்ணத்தை மேற்கொண்டு உழைத்தால், பலன் பொருளாக வாராது. கெட்டவன் நல்லவனாக மாற அவ்உழைப்பு உதவும். பொருள் எனும் பலன் அவர் கைக்குப் போய்ச் சேராது. நல்லவர்களுடைய வெறும் உழைப்பு, உழைப்புக்குரிய பலனை அவர்கட்குத் தரும். நல்லவர்களுடைய நல்லெண்ணத்தோடு கூடிய உழைப்பு உலகத்திற்கும் பலன் தரும்.

  • கெட்டவருடைய உழைப்பு கெட்ட பலனைத் தரும்.
  • கெட்டவருடைய நல்ல உழைப்பு மாற்றம் தரும், பலன் தாராது.
  • நல்லவருடைய வெறும் உழைப்பு, அவர்களுக்குப் பலன் தரும்.
  • நல்லவருடைய நல்ல உழைப்பு, உலகத்திற்கு அவர் உழைப்பு மூலம் பலன் தரும்.

அன்னை பக்தருடைய உழைப்பெல்லாம் உலகத்திற்குப் பலன் தருவதை நாம் காணலாம்.

இலஞ்சம் வாங்கி பணம் சேர்த்தார் ஒருவர். சிக்கனம், பணத்தின் மீது ஆசை இலஞ்சம் வாங்கச் சொல்லிற்று. இலஞ்சமாகப் பணம் சேர்ந்தது. அது புகாரைச் சேர்த்தது. வேலைக்கு ஆபத்து வந்து, உயிரை மாய்த்தது. மனச் சாட்சியுள்ளவர் இலஞ்சம் வாங்கினால் மனம் உறுத்தும், அது உயிரை மாய்க்கும். பாசம் அதிகம் என்பதால் இவரால் பாசம் உள்ளவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. உடன்பிறந்தோரும், பெண் கொடுத்தோரும் இவர் வருமானத்தை விரும்பினர். அத்தனைப் பணமும் ஊதாரியின வீண் செலவுக்கும், கெட்ட எண்ணக்காரரின் சோம்பேறியான சுயநலத்திற்கும் போய்

விரயமாயிற்று. தன் குடும்பத்திற்கு உதவியதைவிட பிறருக்குச் செலவானதே அதிகம். கணக்கு என்று ஒன்றிருந்தால் உழைத்துப் பெற்ற சம்பளம் குடும்பத்திற்கும், ஊரார் கொடுத்த பணம் ஊதாரிச் செலவுக்கும் போயிற்று என்பது தெரியும்.

கெட்ட வழியில் பெற்றது நல்ல செலவுக்குதவாது.

சரக்கு என்ற பெயரில் எதையோ விற்று, சம்பாதிக்க முனைந்தால் கலப்படம் கணிசமான பணம் தருகிறது. 9 பங்கு கலப்பும், 1 பங்கு சரக்கும் விற்று சம்பாதித்தவர் பணம், இலஞ்சம், பெருமை, வீண் செலவு, விளம்பரம், ஆகியவற்றிற்கு 9 மடங்கும், சொந்த இலாபமாக 1 பங்கும் பெற்றார்.

எந்த வழியில் வந்ததோ, அதே வழியில் செல்வதில் பணத்திற்கு நிகர்; அதுவேயாகும்.

நோக்கமும், தேவையான மாற்றமும் :

நல்ல எண்ணம், நல்ல நோக்கம், நல்ல பலன் தரும். தவறான நோக்கம் தவறான பலன் தரும். தவறான நோக்கம் பூர்த்தியாகும் பொழுதுள்ள சுவை நல்ல நோக்கம் பூர்த்தியாகும்பொழுது இருக்கிறதா? என மனதைச் சோதித்தால் நாம் கோட்டுக்கு மேலேயிருக்கின்றோமா, கீழேயிருக்கின்றோமா எனத் தெரியும். பிரமோஷன் வந்த பொழுது இல்லாத சந்தோஷம், எதிரியின் மீது அவர்கள் ஆபீசில் நடவடிக்கை எடுத்தார்கள் என்ற பொழுதுள்ளது என்பது பொதுவான மனநிலை. அதுபோன்ற மனநிலைகளை அவற்றிற்கு எதிரானவையாக மாற்ற வேண்டும்.

எனக்கு அப்படியில்லை என்று சொல்லும் அளவுக்கு நாகரீகம் உண்டு, ஆனால் உணர்ச்சி அவ்வளவு பெருந் தன்மையாக எப்பொழுதும் இருப்பதில்லை.

ஆசை, பொறாமை, கர்வம், வர்மம், அறியாமை, பெருமையால் எழும் மனநிலைகள் இவை.

எனக்கு நகை மீது ஆசை என்று சொல்லும் பெண்கள் உண்டு. முழு ஆசையிருந்த பொழுதும் நகை மீதெல்லாம் எனக்கு ஆசையில்லை என்று பிறரிடம் சொல்பவர் உண்டு. தாமே அதை நம்புபவர்களும் உண்டு.

மாற்றத்தை நாடினால் எதன் மீதும் ஆசை கூடாது. ஆசை மனதிலிருந்தால் அதை ஏற்றுக் கொண்டு அதை வெல்லவோ, அழிக்கவோ முயல்வது நல்லது. ஆசையை அடக்கினால், அது திரை மறைவிலிருந்து பிறகு அதிக வலிமையுடன் வெளிவரும். வாழ்வின் சக்தி வெளிப்படும் ரூபம் என்பதால் அதை அடக்கி ஒழிக்க முயல்வது தவறு என்கிறார் அன்னை. மனதால் ஆசையைக் கடந்து அதை அழிப்பது சரி, அதைக் கண்டு வெட்கப்பட்டு, மறைத்து, அடக்கி அழிக்க முயன்றால், அது நம்மை மீறி எழும்.

ஆசையை வெல்வது என்றால் என்ன? விளையாட்டு, பணம், சாப்பாடு போன்றவற்றில் ஆசையிருப்பதுண்டு. 22 தோசைகள் சாப்பிட்ட பின், இன்னும் ஒன்று மட்டும் போதும் என்று கேட்பவர், தம் சாப்பாட்டு ஆசையை ஆராய்ந்து பார்த்தால், இவர் பட்டதாரியானாலும், படிப்பில் ஆர்வமில்லாதவர், நியூஸ் பேப்பர் படிக்கும் அளவுக்கும் மனம் அறிவை நோக்கிச் செல்லவில்லை என்பது தெரியும். மனம் உடலின் சக்தியைப் பெரிதும் செலவு செய்யக் கூடியது. மனவளர்ச்சி, அறிவு பெறும் ஆர்வமிருந்தால், சக்தி அறிவால் செலவிடப்படும். அறிவுக்கு வேலையில்லை என்றால், அந்த சக்தி வேறு வகையாகச் செலவாக வேண்டும். பண்பான பழக்கம் இருந்தால், கட்டுப்பாடாகப் பேச, செயல்பட வேண்டும் என்பதும், அதற்குரிய முயற்சியும் சக்தியைச் செலவு செய்யும். எரிச்சலாகவும், மட்டமாகவும், குத்தலாகவும், பிறர் மனம் புண்படும்படியும், வெட்கமற்ற சுயநலமாகவும்,

சோம்பேறியாகவுமுள்ளவர் இவர். அறிவும், பண்பும் இல்லை, சுறுசுறுப்பும் இல்லை. எனவே சக்தி எந்த உயர்ந்த வகையிலும் செலவாக வழியில்லை. இவர் தகப்பனார் பெரிய சொத்து சம்பாதித்தவர்; உடலுழைப்பால் தொழிலாளியாக ஆரம்பித்து நெடுநாள் உழைத்து வெற்றி பெற்றவர். உடலால் உழைத்தவர்கள் அதிகமாகச் சாப்பிடுவார்கள். இவர் தகப்பனார் தொழிலாளி என்பதால் இவரிடம் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. இவற்றைப் புரிந்து கொண்டால்தான் மற்றவர்கள் 5 தோசைகள் சாப்பிடும் பொழுது, தான் மேலே சாப்பிட முயல்பவன், தொழிலாளி மகன் , வெட்கம் கெட்டவன் , சோம்பேறி , அறிவில்லாதவன் என நினைவு படுத்தும். இதமாகப் பேசும் பண்பைப் பெற முயன்றால், அதிகச் சாப்பாடு மறந்து போகும். ஆசையை அறிவால் வெல்லலாம்.

சிறிய மனிதன் பரந்த உலகில் வாழ்வதால், சிறியது பெரியதாக முனையும்பொழுது ஆசை எழுகிறது என்பது தத்துவம். இதன் முந்தைய நிலை பயம். மிகச் சிறியதாக இருக்கும்பொழுது ஆசைப்படவும் தைரியமிருப்பதில்லை. சற்று வளர்ந்தால் பயம் குறைந்து ஆசை எழுகிறது. சிறியது ஆன்மாவை நாடினால், பெரியதாகிறது. பயம் அழிகிறது. அத்துடன் பெரியதாக வேண்டும் என்ற அவசியமும் இருப்பதில்லை. எனவே ஆசையும் அழிகிறது.

மனதால் வாழ்தல் சிறியதாகும்.

சிறியது பெரியதை நாடுவது ஆசை.

ஆன்மாவால் வாழ்ந்தால் சிறியது பெரியதாகும்.

ஆசை அழியும்.

சாதாரண மனிதர்களுக்கு ஆசை, நகை மீது ஆசை என்பதெல்லாம் சரி. மாற்றத்தை மனம் நாடிய பின், எதன் மீதும் ஆசையிருக்கக் கூடாது என்ற நோக்கத்தை மனம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முதல் மார்க் வாங்க ஆசை. இது நல்ல ஆசை என்பது தெளிவு. அன்னை பிள்ளைகளைத் தம்மோடு போட்டியிட வேண்டும் என்கிறார். பிறரைவிட அதிக மார்க் வாங்க வேண்டும் என்பது நல்லதானாலும், நாம் ஏற்கனவே வாங்கியதைவிட அதிக மார்க் வாங்க வேண்டும் என்ற நோக்கம், நம்முடன் நாம் போட்டியிடுவதாகும். இதைவிடச் சிறந்த முயற்சியும் உண்டு. முதல் மார்க் வேண்டும், எத்தனை மார்க்குகள் வாங்க வேண்டும் என்பதைவிட, பாடத்தைப் படிப்போம், எழுதுவோம், புரிந்து கொள்வோம், பரீட்சை எழுதுவோம், மார்க் அன்னையின் பங்கு, நம் பங்கு படிப்பது என்றால் பலன் சிறப்பாக இருக்கும். முதல் மார்க்கும், அதிக மார்க்காக வரும்.

ஆசையில்லாமல் படிப்பால் முதல் மார்க் வாங்குதல் நல்லது.

* எனக்கு மாமாவைக் கண்டாலே பிடிக்கவில்லை,

போன்ற வெறுப்புகள் பல இருப்பதை நாம் அறிவோம். வெறுப்பு நல்லதன்று. வெறுப்பு நம்மிடம் இருந்தால், அதை அழிக்க முயலவேண்டும். ஏன் மாமா மீது வெறுப்பு ஏற்படுகிறது? என்று ஆராய்ச்சி செய்தால் அதன் பலன் பல்வேறு வகைகளாக இருக்கும். எந்த ஆராய்ச்சியும், வெறுப்பின் காரணத்தை நமக்கு அறிவுறுத்தும்.

உதாரணமாக மாமா ஒழுங்கு நிறைந்தவரானால், நாம் ஒழுங்கற்றவரானால், அவர் நம்மைப் பார்க்கும்தொறும், உன் துணிகளைக் கண்ட இடத்தில் போடாதே, பரீட்சைக்குப் போகும் பொழுது பேனாவை மறக்காதே, சைக்கிளுக்குப் பஞ்சர் உடனே ஒட்டு என்று சொல்லியபடியே இருப்பார். அதனால் அவரைக் கண்டாலே பிடிக்காது. இம்மனநிலையில் நாம் என்ன செய்யவேண்டும்? நம் ஒழுங்கு குறைவு மாமா மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. அதனால் நான் ஒழுங்கைக் கற்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். மாமா ஒழுங்கு மிகுந்தவராதலால், அவருக்குச் சேவை செய்தால் ஒழுங்கு வரும்.