ஏற்காதது நம் அறிவுக்குப் புலப்பட்டால், அதை ஏற்க முடிவதில்லை. We are a social person;not a psychological individual. நாம் நாலு பேரில் ஒருவர். சொந்தமாகச் சிந்தனையுள்ள மனிதரில்லை என்பது புலப்படும்.
கல்வி மனிதனைச் சொந்தமாகச் சிந்திக்கச் செய்கிறது. அதுவே கல்வியின் உச்சகட்டப்பயன். விலங்கான மனிதனைக் கல்வி நாகரீகம் பெறச் செய்து சமூகத்தில் அழகுற அமையும் அங்கமாக்குகிறது. இது கல்வியின் குறைந்தபட்சப் பலன். குறைந்தபட்சப் பலனை நாம் அனைவரும் பெற்றுவிட்டோம். அதிகபட்சப்பலனை ஏன் நாம் நாடக்கூடாது? அதைப் பெற்றால் அது மாற்றத்திற்கு உதவும்.
கல்வி பெற்றவர் கல்வி பெறாதவருடைய பிரச்சினைகட்கு உட்படுவதில்லை. மூடநம்பிக்கைகளை ஏற்பதில்லை. வறுமையை ஒத்துக் கொள்வதில்லை. உரிமையை விட்டுக் கொடுப்பதில்லை. சட்டத்தை மீறுவதில்லை. நாட்டில் புதியதாக வரும் மருந்து, வசதிகளைப் பெறத் தவறுவதில்லை. அன்னை சக்தி புதியதாக வந்திருப்பதை, அவர்கள் பெற வேண்டும் என்பதை நான் மாற்றம் பெற வேண்டும் எனக் குறிக்கிறேன்.
இனிமை, கவர்ச்சி
சாப்பாடு உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது அவசியம். நல்ல சாப்பாட்டை, சுத்தமாகத் தயார் செய்து சாப்பிட்டால் உடல்நலம் பெறும். ஆரோக்கியம் பெருகும். ஆனால் நாம் ருசியை நாடுகிறோம். ருசியே முக்கியம். ருசிக்காகவே சாப்பிடுகிறோம். ஆரோக்கியமே நினைவு இருப்பதில்லை. சூடாகச் சாப்பிடுவது ருசி. அதனால் சூடே ஒரு ருசி என்ற பழமொழியுண்டு. இட்லி சூடாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அது இட்லிதான். பசியை அடக்குகிறது. ஆனால் சூடே நமக்கு முக்கியமாக இருக்கிறது. பசி,
ஆரோக்கியம் முக்கியம். ருசி முக்கியமில்லை எனில் புரியும். எவரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். எல்லா இடங்களிலும் இந்த இரண்டு அம்சங்கள் உண்டு. ருசி போன்ற அவசியமில்லாத அம்சம். ஆரோக்கியம் போன்ற அவசியமான அம்சம். மனம் ருசியை நாடும். ருசிக்காகவே வாழ்வதாக மனத்திற்கு நினைவு. ருசியை நாடும் மனம் உயர்வை எட்டாது. ஆரோக்கியத்தை நாடும் மனம் உயர்வானது. மனம் ஆரோக்கியத்தை அவசியமாகக் கருதினால், நாம் சாப்பிடும் உணவில் ரஸா தெரியும். ருசி என்பது எவரும் அறியக் கூடியது. உணவில் ஆழ்ந்து மறைந்துள்ள ருசி ஒன்றுண்டு. இதை ரஸா என்பார்கள். அது உயர்ந்த ருசி. ஆன்மா ரசிக்கக் கூடியது. அதை அறியும் திறனுள்ளவர்க்கு எந்தச் சாப்பாடும் இனிமையாக இருக்கும். ருசியை வெளித்தோற்றத்திற்குரியது எனவும், ரஸா என்பதை உண்மையான உள்ளுறை விஷயத்திற்காகவும் சொல்லலாம். பிறந்தநாளில் பரிசு கொடுக்கும் நண்பன், பாஸ் செய்தால் பாராட்டுபவன் தோற்றத்தில் முறையாக இருப்பவன். மனத்தில் விஸ்வாசமானவன், ஆபத்தில் உடனிருப்பவன், ஆழ்ந்த உறவில் அற்புதமான நண்பன். நாம் பரிசையும் பாராட்டையும் விரும்புவதுபோல், விஸ்வாசத்தையும், உண்மையையும் கருதுவதில்லை.
தோற்றம் இனிமையாக இருக்கும், கவர்ச்சியாக இருக்கும். இனிமை எளிமையாகவும், உண்மையாகவும், அழகாகவும் இருக்கும். கவர்ச்சி பகட்டாகவும், ஆடம்பரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் இருக்கும். கவர்ச்சியை நாடும் மனம் வளர்ச்சியற்றது. இனிமையை ஏற்கும் மனம் பக்குவமுடையது. இனிமைக்குப் பவித்திரமுண்டு. கவர்ச்சி பவித்திரத்தைக் குலைக்கும்.
இது எல்லாக் காரியங்களுக்கும் பொதுவான அம்சம். வீடு எப்படியிருக்க வேண்டும் என்றால் சுத்தமாக, வசதியாக, அழகாக இருப்பது ஒரு வகை. ஆடம்பரமாக, பல
வர்ணங்களாகப் பார்ப்பவர் மெச்சும் வகையாக இருப்பது மற்றொரு வகை. அழகும், சுத்தமும் அன்னைக்குரியது. ஆடம்பரமும், கவர்ச்சியும் மனவளர்ச்சி குன்றிய மனத்திற்குரியது. சிறியதைத் தவிர்த்து, பெரியதை மனம் நாட வேண்டும்.
நல்ல பெண், அழகான பெண் இருவரில் அழகான பெண்ணை எவரும் விரும்புவார்கள். பொதுவாக அழகிருந்தால் கர்வமிருக்கும். அழகுள்ளவர்க்கு நல்ல குணம் அமைவது கடினம். நல்லதை நாட வேண்டும். தோற்றம் இரண்டாம்பட்சமாக இருக்க வேண்டும். மனத்தின் இனிமையை வெளிப்படுத்தும் புன்னகை தெய்வீக அழகுடையது. கவர்ச்சியான சிரிப்பு கவனத்தை ஈர்க்கும். அதில் உயர்வு இருக்க முடியாது.
பேச்சு, பழக்கம், செயல், எண்ணம், வீடு, உறவு, சாதனை, வாழ்வு போன்ற அனைத்திலும் இவ்விரு அம்சங்களுண்டு. ஒன்று கோட்டுக்குக் கீழேயுள்ள சாமானிய மனிதனுக்குரியது. அதில் சிறப்பில்லை. அது கவர்ச்சியை நாடும் மனம். அடுத்தது கோட்டுக்கு மேலேயுள்ள உயர்ந்த இனிமையுடையது. அது நம் குறிக்கோள் மாற்றத்திற்குரியது. இனிமை ஆன்மீகக் கவர்ச்சியுடையது.
அன்புக்குக் கட்டுப்படும் பண்பு, அதிகாரத்திற்குக் கட்டுப்படும் பழக்கம்.
வேலை நடந்து பலன் வரும் இடங்கள் ஆயிரம். அதைப் போன்ற இடங்களில் அதிகாரம் முழுமையாக இருக்கும். பெரும்பாலும் நேரடியாக இருக்கும். எப்படித் தொழிலாளிகள் இவ்வளவு பொறுப்பாக இருக்கிறார்கள்? இந்த மானேஜருடைய விஸ்வாசம் நம்ப முடியவில்லை. உங்கள் வீட்டு மனிதர்களுடைய கட்டுப்பாடு நான் எங்கும் பார்த்ததில்லை.
இது சர்க்கார் ஆபீஸ் என்றாலும், எந்த அளவுக்குச் சிப்பந்திகள் பயந்து வேலை செய்கிறார்கள் என்று நாம் நினைக்கும் இடங்களை ஆராய்ந்து பார்த்தால், தொழிலாளி பொறுப்பாக இல்லாவிட்டால், மறுநாள் வேலையில்லை, விஸ்வாசமுள்ள மானேஜரின் பிடி முழுவதும் முதலாளி கையிலிருக்கிறது, வீட்டு மனிதர்கள் கட்டுப்பாடு குறைந்தால் பூகம்பம் எழும், சர்க்கார் ஆபீஸ் என்றாலும், இந்த ஆபீசர் பட்டாக்கத்திபோல் இருப்பார் என அறிவோம். முழுமையான அதிகாரம், தண்டனை, அபராதம் போன்ற கடுமையான உருவத்திலாவது, மறைமுகமாக வசதி போய்விடும் என்றாவது இல்லையெனில் பொறுப்புள்ள விஸ்வாசம், அடக்கம், ஒழுங்கு, பயம் கீழிருப்பவர்களுக்கு இருக்காது.
இதை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், இருக்கும் கண்டிப்பை ஒரு நாள் தளர்த்தினால், ஏற்படும் மாற்றம் நம்ப முடியாததாக இருக்கும். தாமதமாக வந்தால் தண்டனை கொடுக்குமிடத்தில், அப்பழக்கத்தை மாற்றி, இப்படி லேட்டாக வந்தால், எப்படி வேலை நடக்கும்? என்று நல்ல முறையில் ஒரு நாள் கேட்டால், அடுத்த நாள் இருந்த கட்டுப்பாடு உடையும். 100 பேரில் 7 பேர் 10 நிமிஷம் தாமதமாக வருவார்கள்.
பெரிய ஆபீசர் வீட்டு விசேஷத்திற்கு 500 பேர் வருவது பழக்கமானால், அவர் ரிடையர் ஆன அடுத்தமாதம் நடக்கும் விசேஷத்திற்கு 100, 150 பேர் குறைவாக வருவார்கள். வந்தவர்களும் ஆர்வமின்றி இருப்பார்கள். முதல் நாள் இரவு வந்து, அடுத்த நாள் காலையில் போனவர்கள் நிலைமை மாறிய பின், விசேஷத்தன்று காலை வந்து மாலையில் புறப்பட்டு விடுவார்கள். இப்பொழுது ரிடையர் ஆகி விட்டாரல்லவா? என்று பலரும் புரிந்துகொள்வார்கள். இது அதிகாரத்திற்குக் கட்டுப்படும் பழக்கம். உலக வழக்கு இது.
எவரும் காணக் கூடியது. நான் சொல்லும் மாற்றம் இந்த மனநிலையுள்ளவர்க்கு வாராது.
இதற்கு மாறான நிலைமை உலகில் உண்டு. அது குறைவு. அரிபொருள் என்றும் சொல்லலாம். விசேஷத்திற்கு வருபவர், கொல்லையில் வேலையில் செய்பவர், வீட்டில் சமையல் செய்து பரிமாறுபவர், வீட்டுப்பாடம் எழுதும் மாணவன், இன்ஸ்பெக்ஷனுக்கு தயாராகும் ஆபீஸ் ஆகிய இடங்களில் எந்த நிலை மாறினாலும், செயல் மாறாத நிலையுண்டு. அது அதிகாரத்திற்காகச் செய்யப்படுவதில்லை. அந்தஸ்தை நாடுவதால் எழுவதில்லை. பணத்தால் பலன் தேடுபவரால் நடப்பதில்லை. பகட்டான பணத்தின் சூழலில் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் சேர்ந்து கொள்ளும் இலட்சியவாதிகளின் கடமை அன்று. அவை அன்புக்காகச் செய்யப்படுபவை. கடமைக்காக நடக்கும் காரியங்கள் முறையை முறைமைக்காகவே பின்பற்றும் பண்பைப் போற்றும் மனிதர்களால் நடத்தப்படுவது. இன்று உலகில் இது உண்டு. காணப்படுவது குறைவு.
அதிகாரத்தை, அன்பால் மாற்றியமைப்பது நான் கூறும் மாற்றத்திற்கு வழி செய்யும். அன்புக்காக அதுபோல் செயல்படுவதற்கு மனிதன் மனதில் பண்புக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். மனத்தில் பண்பு சேர அது முன் தலைமுறையிலிருந்து வர வேண்டும். பண்பு உற்பத்தியாக வளம் அபரிமிதமாக வேண்டும். வளம் குறைந்திருந்தாலும் படிப்பு அதிகமாக வேண்டும். படிப்புக்கும் அஸ்திவாரம் வளமும், வசதியும். வளமும் வசதியும் உழைப்பால் வரும். அயராத உழைப்பு, அதிக வசதியைப் பல தலைமுறைகளில் பெற்றவர் அதனால் பெற்ற பண்பு, மனத்தை வளப்படுத்தும். அதுவே அன்புக்குக் கட்டுப்படும். ஆயிரம் தலைமுறைகளில் பெறுவதை அன்னையின் அருள் அளிக்க வல்லது. அன்னையை ஏற்கும் அளவைப் பொருத்து
மனம் அன்பைப் பெறுகிறது. அதிகாரம் விலகி, அன்பு ஆட்சி செலுத்தும் மனம் தானே மாறவல்லது.
Thy will be done, not my will.
அன்னையின் சித்தம், என் பாக்கியம்.
இக்கட்டுரையில் இதே கருத்தை முன்பு எழுதினேன். அகந்தை அழிய அன்னை அளிக்கும் மூன்று முறைகளில் இது. முறையாகச் செய்தால் அகந்தை கரையும் என்றும் அன்னை கூறுகிறார். அத்துடன் இம்முறையைப் பூர்த்தி செய்ய உடலால் செய்யக் கூடியது சாஷ்டாங்க நமஸ்காரம் என்கிறார்.
இறைவனே உலகில் அவதாரம் எடுத்து வந்தாலும், அவன் இறைவனுக்குள்ள அதிகாரம், சுதந்திரம், சக்தி இவற்றைப் பூரணமாகப் பயன்படுத்த முடியாது, அவதாரத்திற்குரிய சட்டத்திற்கே கட்டுப்பட வேண்டும் என்பது சட்டம். மனிதனாக அவதாரமெடுத்தால், மனித வாழ்வின் சட்டம் கட்டுப்படுத்தும். நரசிம்மமாக அவதாரம் எடுத்தால் சிங்கத்தின் சட்டம் கட்டுப்படுத்தும். வாலியை நேரே நின்று எதிர்த்தால், அவதாரம் என்பதால் வாலி பெற்ற வரம் சக்தியை இழக்காது. வரம் செயல்படும், அவதாரச் சிறப்பு அதை மீற முடியாது. ஆத்திரம், ஆவேசமானால் அது அடங்க நேரமாகும் என்ற விலங்கின் சட்டப்படி நரசிம்மம் இரண்யனைக் கொன்ற பின் அடங்க 6 மாதம் ஆயிற்று. நரசிம்ம அவதாரம் என்பதால், ஆத்திரமும் எழும், நான் அடக்குவேன் என்று சொல்ல முடியாது.
எவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமானாலும், உச்சரிக்கும் மனிதனுடைய மனப்போக்கே, மந்திர சக்தியின் அளவை நிர்ணயிக்கும் என்பதின் ஒரு பகுதியை முன்பு எழுதினேன். இம்மந்திரம் அளவு கடந்த சக்தி வாய்ந்தது. அகந்தையையே கரைக்கக் கூடியது. உலகின் பிரச்சினைகள் அனைத்தும்
அகந்தையால் உற்பத்தியாவதால், அகந்தையைக் கரைக்கும் மந்திரம், எந்தப் பிரச்சனையையும் கரைக்கும். பகவான் இவற்றையெல்லாம் கடந்த மந்திரம், ஸ்ரீ அன்னை என்பதை இந்த யோகத்தில் எங்கள் இருவர் பெயர்களும் மந்திரம் என்று எழுதியிருக்கிறார். மந்திரத்தின் சக்தி மனிதனுடைய மனப்பாங்கால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை நாம் கவனித்தால், நம் மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
18 வயதுப் பையன் அகால மரணமடைந்து விட்டான். பெற்ற வயிறு துடிக்கிறது. ஒரு மணிக்கொரு முறை ஆத்திரம் பீறிட்டெழுகிறது. எதற்கும் கட்டுப்படவில்லை என்ற நிலையில் இம்மந்திரம் ஆத்திரத்தை அடக்கும். மந்திரத்தைச் சொல்லும் வரை அடங்கும். நிறுத்தினால் மீண்டும் ஆத்திரம் எழும். அதற்குரிய முறை எது? மந்திரத்தைச் சொல்லும்பொழுது ஆத்திரம் அடங்கும். அது அடங்கிய நிலையில் ஒரு அமைதியிருக்கும். அந்த அமைதியின் பொழுது, நம் concentration மனத்தின் ஆழத்தை அதிகப்படுத்த முடியும். மந்திரத்தை மனத்தின் ஆழத்திலிருந்து சொல்ல வேண்டும். ஆனால் மனம் பிரச்சினைக்கு வெளியிலேயே நிற்கும். பிரச்சினையை ஊடுருவி அதனுள் சென்று எழும் சொல், பிரச்சினையினுள்ளிருந்து எழுதல் அவசியம். அப்படி எழுந்தால் பொதுவாக 3,4 முறை இம்மந்திரத்தைச் சொல்லியபின் சோகம் கரைந்துவிடும். முதல் முறையிலேயே கரைந்து விடுவதுண்டு. சொல் புறப்படும் இடம் சோகத்தினுள்ளிருந்து எழுந்தால்தான் இப்பலன் உண்டு. சோகம் வயிற்றில் ஓர் உருண்டையாகத் திரண்டு வயிற்றைப் பிசையும். கலக்கும். மந்திரம் அதுவரை போகும். அதை ஊடுருவ முனைந்தால் இடம் கொடுக்காது. ஆத்திரம் அடங்கி எழுந்த அமைதியைப் பயன்படுத்தி, சோகத்தை ஊடுருவி சொல்லை, சோகத்தினின்று எழுப்பினால், சோகம் நிமிஷக் கணக்கில் அடங்கும், கரையும், மறையும்.
நாம் வாழ்க்கையில் வாழ்கிறோம். வாழ்வு எனில் உணர்வு. நாம் உணர்வோடு உணர்வாக இரண்டறக் கலந்திருப்பதால், வாழ்வு எது எனப் புரிவதில்லை. உணர்விலிருந்து நாம் பிரிந்து, உணர்வைத் தனியாகப் பார்ப்பது detachement that gives awareness தன்னறிவைத் தரும் தெளிவாகும். பிரிந்த நிலையில் நாம் வேறு, நம் வாழ்வு வேறு எனத் தெரியும். வாழ்வின் மையம் புலப்படும். மனத்தின் ஆழத்தை வாழ்வு மையத்திற்கு எடுத்துச் சென்றால், அங்கிருந்து ‘Thy w ill noty my will,அன்னை சித்தம் என் பாக்கியம்‘ என்று சொல்ல ஆரம்பித்தால், உள்ளே எழும் மாற்றம் படிப்படியாகத் தெரியும். புறவாழ்வில் மாற்றம் ஏற்பட்டு நிலை பெறும்வரை இதை மேற்கொள்ள வேண்டும். வாழ்வுணர்வை ஊடுருவுவது சிரமம். ஊடுருவினால் ஒவ்வொரு முறை உச்சரிப்பதற்கும் பெரும் பலனுண்டு. நிலையான பலன் புறவாழ்வில் ஏற்பட நெடுநாள் பயிற்சி தேவை.
பழக்கம் ருசியானது
பழக்கம் ருசிக்கும் என்பது ஓர் உண்மை. உயர்ந்தவை என்பதால் அவற்றை நாடுவதைவிட பழகியவை என்பதால் அவற்றை நாடுவதும் மனித இயல்பு. இதுவே சட்டம் என்பதன்று. ஆனால் சில சமயங்களில் நமக்கு வியப்பூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் மூலம் இதை நாம் அறிய நேரும்.
Coco cola கோகோ கோலா என்பது உலகப் பிரசித்தி பெற்ற சோடா கலர் கம்பெனி. இவர்கள் இந்தியாவிற்கு வந்து வியாபாரம் செய்தனர். இவர்களுடைய பானம் ருசி மிகுந்ததால் அமெரிக்காவில் ஆரம்பித்து ஐரோப்பாவுக்குப் போய் ஆசியா, ஜப்பான் என எல்லா நாடுகளுக்கும் பரவிவிட்டது. இக்கம்பெனியின் வியாபாரம் இந்திய பட்ஜெட்டை விடப் பெரியது. பானத்தின் ருசியை இரகஸ்யமாக வைத்திருப்பதால், எதிரிகள் இவர்களை வெல்ல முடியவில்லை. இவர்கள்
வளர்ந்ததற்கு ஒரு முக்கியக் காரணம் தங்கள் dealer விநியோகஸ்தர்கள் கோடீஸ்வரர்களாக வேண்டும் என்ற கொள்கையை மேற்கொண்டதால்தான். அக்கொள்கையையும் நிறைவேற்றினார்கள். பணத்தை நியாயமாக, தாராளமாகச் செலவு செய்தால் பணம் பெருகும் என்பது போல், பிறர் வாழ முயல்பவனுடைய சொத்து தானே பெருகும் என்பது அன்னையின் கோட்பாடுகளில் ஒன்று.
கம்பெனி 40, 50 வருஷமாகி விட்டபடியால், பானங்களின் ருசியை அதிகப்படுத்த முயன்று, புதிய பானம் ஒன்றைச் செய்தனர். ஏற்கனவே பிரபலமான கோலாவை விடப் புதிய பானம் மிகவும் ருசியானது. கம்பெனிக்கு மிகவும் சந்தோஷம். உலகம் மாறுகிறது. எவ்வளவு வெற்றி கிடைத்திருந்தாலும், தாங்களும் காலத்திற்கேற்ப மாறிக் கொள்வது சரி என்று புதிய பானத்தைத் தயார் செய்து மார்க்கெட்டில் அனுப்பி பழைய கோலாவை வாபஸ் செய்ய முனைந்தார்கள்.
புதிய பானத்தைப் பாராட்டாதவரில்லை. ஆனால் கோலா சாப்பிடுபவர்கள் பழைய கோலாவையே வாங்கினார்கள். கம்பெனி பழைய கோலாவை வாபஸ் செய்ய முனைந்தவுடன் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் ஆரம்பித்தார்கள். கம்பெனி புதிய கோலாவை வாபஸ் செய்ய வேண்டியதாயிற்று. ருசி மிக்கது என்றாலும், மனமும், ருசியும் பழகியதையே நாடுகிறது என்பது உண்மை. பழக்கம் ருசியானது. அதை மாற்றுவது எளிதன்று.
ஏழாவது வயதில் நடுப்பகல் குளிக்க குளத்தில் இறங்கிய சிறுவன், தன்னுள் ஏதோ நுழைவதைக் கண்டான். அது ஒரு கறுப்பு தேவதை. 30 ஆண்டு அதன் பிடியிலிருந்தவன் அது போக வேண்டும் எனவும் நினைக்கவில்லை. நினைக்க தெரியவில்லை. அன்னை தரிசனத்திற்கு முதல் வந்தவுடன், அவரெதிரே போன பொழுது இது அவனை விட்டுப் பிரிந்தது. வாழ்வு அகன்று பரந்து மலர்ந்தது. ஆனால் அதனுடன்
நெடுநாள் வாழ்ந்துவிட்டதால், அது இல்லாமல் அவனுக்கு வாழ்வு ருசியாக இல்லை. கூப்பிட்டான். அடுத்த க்ஷணம் அது உள்ளே வந்துவிட்டது. கோபுரம்போல் எழுந்த வாழ்வு சரிந்தது.
15 வருஷம் வெறி பிடித்தவர் போலிருந்த பெரிய ஆபீசர் தூங்கியதேயில்லை. அன்னையின் அறையில் நுழைந்தவுடன் அவரைப் பிடித்திருந்த வெறி தலையை விட்டு நீங்கியது. சில மாதம் கழித்து அவர் அதை மீண்டும் பெற்றார். பெற்றார் எனில் மீண்டும் அழைத்துக் கொண்டார்.
கறுப்பு தேவதையும், வெறியும் பழகி விட்டதால் விட முடியவில்லை எனில் பழக்கம் வலுவானது என அறிகிறோம். மாற்றத்தை நாடுவோர் பழக்கத்தை விட முன் வரவேண்டும்.
ஸ்ரீ அரவிந்தம்
உலக விஞ்ஞானி, எழுத்தாளர், சிந்தனையாளர்களுடைய கருத்துகளை அன்னையிடம் அடிக்கடி சிஷ்யர்கள் கொண்டு வந்து காண்பித்து அபிப்பிராயம் கேட்பார்கள். அவரும் உரிய பதிலைச் சொல்வதுண்டு. ஒரு முறை அன்னை,
ஸ்ரீ அரவிந்தர் உலகிலுள்ள எவரையும் விட அதிகம் தெரிந்தவரல்லவா?
என்று கேட்டார். எவரும் தங்கள் குருவைப் பற்றி அப்படி நினைப்பது வழக்கம். அன்னை அப்படிச் சொல்கிறார் என்று நாம் கொள்ள முடியுமா? இதன் உட்கருத்தென்ன?
எழுத்து :
தாகூர், ஐன்ஸ்டீன், நீயூடன், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா போன்றவர்கள் கவி, விஞ்ஞானி, மேதையாவார்கள்.
கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் இவர்கள் நூல்களைப் போதிப்பவர்கள் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், எவ்வளவு உயர்ந்த ஆசிரியரானாலும் அவர்களை மேதைக்கு ஒப்பிட முடியாது. மேதைகள் சிருஷ்டிகர்த்தாக்கள். தலைவன், வீரன் என்பவர்கள் முதிர்ந்த வயதிலும் எழுவதுண்டு. 20 வயதிலும் தலையெடுத்த உலகத் தலைவர்கள் உண்டு. எழுத்தாளர்கள், கவிகள் சிறுவயதில் பிரபலம் அடைவதுண்டு. பெரும்பாலும் வயது முதிர்ந்து, அம்முதிர்ச்சியால் பெரிய காவியங்களை, இலக்கியங்களை இயற்றுவர். திறமை பிறவியிலிருந்தாலும், அனுபவம் திறமையை இலக்கிய எழுச்சியாக்குவது உலக அனுபவம். பொதுவாக இவர்கள் 10, 20, 50 நூல்கள் இயற்றுவார்கள். பிற்காலத்து எழுத்தே பிரபலமான எழுத்தாகும். மனம் கருத்தை ஏற்று, அனுபவத்தால் முதிர்ந்து, படிப்படியாக உயர்ந்த மேதையின் நிலை உயரும். இது உலக இயற்கை. உலக வரலாறு.
ஸ்ரீ அரவிந்தர் நூல்கள் எழுதத் திட்டமிடவில்லை. தம் கருத்துக்களைச் சுருக்கமாக 1914க்கு முன் 547 கருத்தாக எழுதி, தம் எழுத்துப் பாணியை முடித்துக் கொண்டார். அவர் பெற்ற சித்தியின் சாரம் இக்கருத்துக்களில் பொருந்தியுள்ளது. 1914இல் அன்னை வந்து பகவானை எழுதும்படிக் கேட்ட பொழுது, அவர் தம் திட்டத்தை மாற்றி எழுத ஆரம்பித்தார். எழுத்தாளன் திறமையையும், அனுபவத்தையும் மனத்தில் சேர்த்துக் கருத்தாக்கி எழுதுகிறான். அது போன்ற கருத்தின் நிலை உயர்ந்து மனத்தின் உச்சகட்டத்திற்குப் போகிறது. ஸ்ரீ அரவிந்தர் யோகி. எழுத ஆரம்பித்த காலத்தில் அவருடைய யோக சித்தி, அவரை மனத்தைக் கடந்து அழைத்துப் போயிற்று. எழுத வேண்டுமானால், யோக நிலையிலிருந்து மீண்டும் இறங்கி மனத்திற்கு வந்து எழுத வேண்டும். ஒருவர் மந்திரி அல்லது பிரதமராக வேண்டுமானால், கீழிருந்து தொண்டர், தலைவர்,
MLA,MP, முக்கிய MP என உயர்ந்து மந்திரியாகவோ, பிரதமராகவோ ஆக வேண்டும். ராஜீவ் முதலில் பிரதமரானார். நரசிம்மராவ் முதலில் பிரதமரானார். பிறகு அப்பதவிக்காக MP ஆனார்கள். எழுத்தாளர் கீழிருந்து மேலே செல்பவர். ஸ்ரீ அரவிந்தர் எழுத வேண்டிய அவசியத்தை முன்னிட்டு ஞானத்திலிருந்து கீழே வந்து நம்மைப்போல் எழுதினார். அவர் எழுத ஆரம்பிக்கும் முன் பெற்றது யோக ஞானம், உலக ஞானம், சச்சிதானந்த ஞானம். அதனால் எழுதுவதால், எழுத்தாளர் பெறுவதுபோல் அவர் ஞானம் பெற முடியாது. ஏனெனில் ஏற்கனவே எல்லா ஞானங்களும் அவரிடம் இருந்தன. அது நிகழ்கால ஞானம், எதிர்கால ஞானம், கடந்தகால ஞானம், ஆகியவற்றை தன்னுட் கொண்டதால், எவருக்கும் அவர் ஞானம் இருக்க முடியாது என்று அன்னை கூறுகிறார்.
மனத்திலிருந்து எழுத்தால் உயருபவன் எழுத்தாளன். ஞானத்திலிருந்து மனத்திற்கு வந்து எழுதுபவன் யோகி.
- வேதரிஷிகள் தெய்வங்களைத் தொழுதார்கள். இயற்கையும், இறைவனும் வாழ்வில் ஒன்றே என்று நடைமுறையில் கண்டார்கள். அதன்படி வாழ்ந்தார்கள்.
- சாங்கியம் பிரகிருதி என்பதையும் அதைச் சார்ந்து நிற்கும் ஆயிரமாயிரம் ஜீவாத்மாக்களையும் உலகுக்கு ஞானமாக அளித்தது.
- உபநிஷதம் சச்சிதானந்திற்கு அப்பால், அசத் உள்ளது எனக் கூறி சத்தும், அசத்தும் பகுதிகளே. இவற்றின் ழுமை இவற்றைத் தாண்டிய பிரம்மம் என்றது.
- பகவத்கீதை முதன் முறையாக ஜீவாத்மா, பிரபஞ்சத்தின் ஆத்மா, பரமாத்மா ஆகியவற்றைப் பிரித்துத் தெளிவாக அவற்றை உணர்த்தியது. சரணாகதியால் மோட்சம் பெறலாம் எனவும் கூறியது.
ஸ்ரீ அரவிந்தம்
- சிருஷ்டியில் லீலையைத் தத்துவரீதியாக, விஞ்ஞான ரீதியாக விளக்குகிறது.
- மனிதன் தெய்வத்தை நாடிப் போகும் நிலையில், தெய்வங்களைச் சிருஷ்டித்த இறைவன் மனிதனை நாடி வரமுடியும் என்று கூறுகிறது. கூறியதைச் செயல் படுத்தியது. அத்தெய்வ சக்தியைப் பொன்னொளியாக உலகுக்கு வரவழைத்துத் தம்முடலில் பகவான் ஏற்று 5 நாள் அந்நிலையில் தம் திருவுடலை வைத்திருந்தார். பின்னர் பூவுலகுக்கே அச்சக்தியை 1956இல் தருவித்தார்.
- அவதாரம் ஆயுதமேந்தியும், ஆயுதமேந்தாமலும் போரிடும் என்ற நிலையில் உலகம் அறியாமல் ஸ்ரீ அரவிந்தம் உலகயுத்தத்தை ஜெயித்து, அடுத்து வரக்கூடிய யுத்தத்தை சூட்சுமச் சக்தியாலும், ஆரோவில் என்ற யுக்தியாலும் தடுத்தார்.
- ஆதியும், அந்தமும், அசைவும், அழிவுமில்லாத ஆன்மாவை மனோமயப் புருஷனிலிருந்து விஞ்ஞானமயப் புருஷனாகவும், ஆனந்தமயப் புருஷனாகவும் வளர்த்தார்.
- பிரபஞ்சத்தில் அகந்தையின் ஆட்சிக்கு முடிவு கண்டார்.
- உலகுக்கு, தெய்வத்தை உணர்த்த அவதாரம் வரும் நிலையில், இறைவனே செய்யும் யோகத்தை மனிதன் மேற்கொள்ளும் உபாயத்தை சரணாகதி எனக் கண்டு, தாமே இறைவனான நிலையை எய்தினார்.
- வேதம், உபநிஷதம், கீதை முக்கியமளிக்காத அன்னை சக்திக்கு அவதார நிலையும், இறைவனின் பூரணநிலையும் உண்டென, அன்னை எனும் அவதாரத்தை உற்பத்தி செய்து, அவதாரம் இறைவனாகும் என்று நிலைப்படுத்தினார்.
- 30,000 வருஷப் பரிணாமம் 300 ஆண்டுகளில் அல்லது 30 ஆண்டுகளிலும் சுருங்கும் என்பதை தம் வாழ்நாளில் யோகசித்தியாக உலகுக்கு அளித்தார்.
- பரிணாமம் எப்படி நடக்கிறது என்று புரியாத இன்றைய உலகுக்கு பரிணாமத்தைச் சுருக்கிக் காட்டினார்.
- மதத்தின் காலத்தை முடித்து ஆன்மீகத்தை வாழ்வாக்கும் நிலையை நமக்களித்தார்.
அன்னையோ, பகவான் ஸ்ரீ அரவிந்தரோ தாங்கள் செய்தவற்றை மறைவாகவே செய்ததால், அதன் உட்கருத்தை அவர்கள் வெளிப்படையாக விளக்க முயலவில்லை. வாழ்வை விலக்கும் யோகத்தை, பொய்யாக விலக்கி வாழ்வையும் உடலையும் ஏற்று, உடலைப் பொய்யின் உருவம் என்று கருதாமல், சத்தியத்தின் பேருருவம் என அறியவேண்டும் என்றார்.
உலகத்தில் முதன்மையான அறிவாளிகள் அவர்கள் பாடத்தைப் (subject) பற்றி ஸ்ரீ அரவிந்தர் எழுதியுள்ள விளக்கம் புரியவில்லை என்ற நிலையில், பகவானுக்கு உலகில் எவரையும்விட அதிகம் தெரியுமல்லவா என்று அன்னை கூறுவது (under statement) அவை அடக்கமான சொல்லல்லவா? பகவான் எழுதியதை மற்றவர் எழுத்தோடு ஒப்பிடுவது நமக்கு இரண்டும் புரியவில்லை என்பதைக் காட்டுகிறது.
சிருஷ்டியின் இரகஸ்யம் – மாற்றம் (shift)
நூல் சிருஷ்டியின் இரகஸ்யத்தை ஆனந்தம் (Delight) என்ற அத்தியாயத்தில் முக்கியமாகவும், வேறு பல
இடங்களிலும் குறிக்கின்றார். நான் மாற்றம் என்பது இறைவனின் லீலையை ஆரம்பித்ததில் முடியும் (scale of values) அளவுகோல் ஆகும். லீலையைக் கடைசி கட்டமாகவும், மாற்றத்தை முதற்கட்டமாகவும் பிரபஞ்சத்தை 100, 200 நிலைகளாகவும் பிரிக்கலாம். அதனால் லீலையைப் புரிந்து கொள்ள முயன்றால் — முடியாவிட்டாலும் கூட – மாற்றமும் அதன் உட்கருவும் புரியும். தெரியாததைத் தெரிந்து கொள்வது இன்பம் பயக்கும். புதியதாக எதைக் கற்றுக் கொண்டாலும், அதைச் செய்ய ஆர்வம் எழும். அதுபோல் ஆர்வமும், இன்பமும் பெறும் நிலைகளில் முடிவானது தன்னை முழுவதும் மறந்து, மீண்டும் (self discovery) அதைக் காணுவது. குழந்தைகள் மறைந்து பிடிப்பதை அதற்கு உதாரணமாகச் சொல்கிறோம். குழந்தைகள் விளையாட்டில் அதிக சந்தோஷம் தருவது அதுவே. பிரம்மம், தன்னை முழுவதும் மறந்து ஜடமாகி, மீண்டும் தன்னைக் கண்டுபிடிப்பது பிரம்மம் இதுவரை அனுபவிக்காத ஆனந்தம், அது சச்சிதானந்தத்தின் ஆனந்தத்தை (bliss) விட ஒரு படி உயர்ந்த சிருஷ்டியின் ஆனந்தம் (delight) என்கிறார். பிரம்மம் அதை நாடச் செய்த ஏற்பாடு சிருஷ்டி என்பது பகவானின் விளக்கம். இதுவே இரகஸ்யம். பிரம்மம் தன்னை மறந்து ஜடமானதே சிருஷ்டி. இனி ஜடம் தன்னை உணர்ந்து வெளிவந்து பிரம்மத்தைக் காண்பது பரிணாமம்.
படிப்போ, பணமோ, திறமையோ, அந்தஸ்தோ இல்லாதவனுக்குரிய அடக்கம், பணிவு, அடக்கமாகாது. எதுவும் இல்லாதவன் ஒன்றுமில்லாமலிருப்பது எப்படி அடக்கமாகும்? பெரிய படிப்புள்ளவர் தங்கள் படிப்பைக் கருதாதிருந்தால் அது அடக்கம். தங்களுடைய படிப்பு அவர் செயலோ, நடையிலோ, மனதிலோ இல்லாவிட்டால் அவரை அடக்கமானவர் என்கிறோம். அதிகப் படிப்பிருந்து, அதை மறந்து, அடக்கமாக இருக்க அடக்கம் மனத்திலிருக்க
வேண்டும். படிப்பும், பணமும், திறமையும், அந்தஸ்தும் உள்ளவர் நடையில் அவை எதுவும் வெளிப்படாமலிருந்தால், அவ்வடக்கம் எழ அவர் முயல்வது பெரும்பாடு. பிரம்மம், உலகைத் தன்னுள் கொண்டது. அது ஜடமாகி, தான் தெய்வம், இறைவன், அனந்தன், சச்சிதானந்தம் என்பதை மறந்து ஜடமாக இருக்க வேண்டுமானால் அவ்வடக்கம் மனதிலோ, ஆன்மாவிலோ இருந்தால் போதாது. ஆன்மாவின் பிறப்பிடமான, பிரம்மத்திலேயே அடக்கம் – ஆதியில் அடக்கம் – வேண்டும். இனி பிரம்மம் தன்னை மறந்துவிட்டதால், தன்னைத்தானே நினைவு கூர்வது மிகச் சிரமம். அதிகச் சிரமத்திற்கு அதைவிட ஒன்றில்லை. அதை எப்படிச் சாதிப்பது? அதற்கும் மாற்றத்திற்கும் தொடர்பு உண்டா? மாற்றத்தை நான் பல வகைகளில் சொன்னாலும், மனித அடிப்படையிலிருந்து தெய்வீக அடிப்படைக்கு மாறுவதே மாற்றம். மனிதன் தன்னை மறந்த இறைவன் தான் என உணர்ந்து மாறுவதே மாற்றம் எனப்படும்.
தன்னை மறந்த பிரம்மம் மனிதனாயிற்று. தன்னை பிரம்மாக உணர்ந்த மனிதன் மாறுகிறான்.
மாற்றத்தின் ஒரு விளைவு அபரிமிதமான சந்தோஷம், சௌக்கியம், வசதி, செல்வம் என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன். இந்தக் கோணத்திலிருந்து இதைப் பரிசீலனை செய்வோம்.
விவசாயி நெல்லில் ரூ. 1000 முதலீடு செய்தால் 100 நாள்கள் கழித்து அதிலிருந்து ரூ. 400 இலாபம் பெறுகிறான். மீண்டும் ஒரு முறை நெல் பயிரிடலாம். ரூ. 1000 முதல் ரூ.800 இலாபம் தருகிறது. அதாவது 80% இலாபம் பெறலாம். வியாபாரி ரூ. 1000 சரக்கு வாங்கி ரூ.400 இலாபம் பெற்றால் அந்தச் சரக்கு 1 மாதத்தில் விற்கிறது. எனவே அந்த ரூபாய் வருஷத்தில் 12 முறை பயன்படும், ரூ. 4800 இலாபம் தரும்.
480% இலாபம். நாம் அனைவரும் காண்பது இது. எத்தனை முறை முதல் புரண்டு வருகிறதோ, அவ்வளவு இலாபம் உயரும். எவ்வளவு சீக்கிரம் சரக்கு உற்பத்தியாகி விற்கிறதோ அவ்வளவு சீக்கிரம் இலாபம் வரும். அது அதிக இலாபமாகும்.
உற்பத்தி, விற்பனை சீக்கிரமானால் இலாபம் அதிகமாகும்.
இந்தச் சட்டம் எல்லா இடங்களுக்கும் பொருந்தும். உதாரணமாக சக்தி (தெம்பு) இந்தச் சட்டப்படி வளரும். இறைவன் ஆனந்தமயமானவன், சிருஷ்டியில் சிருஷ்டி ஆனந்தம் பெற அவன் நல்லதைச் செய்கிறான். அதை மீண்டும் மீண்டும் செய்கிறான். நிமிஷத்திற்கு நிமிஷம் சிருஷ்டி தன்னைக் கலைத்துக் கொண்டு, மீண்டும் சிருஷ்டிக்கிறது என்பது தத்துவம். அதிக விரைவில் அது செயல்படுவதால் ஆனந்தம், அன்பாகி, சரணாகதியாகிறது என்பது பகவான் விளக்கம்.
மனித சக்தியை நாம் கருதினால், சக்தியை எத்தனை முறை நாம் செலவிடுகிறோமோ, அந்த அளவு அது பெருகும். சக்தி நல்ல சக்தியானால் நல்லது அளவு கடந்து பெருகும். முதல் நிலை நல்லதை நாம் சந்தோஷம், சௌக்கியம், வசதி, செல்வம் என அறிகிறோம்.
அன்றாட நடைமுறையில் நாம் இடையறாது பாதுகாப்பது நம் மரியாதை. எதற்கெடுத்தாலும் நம் மரியாதை என்னாவது என்று நாம் செயல்படுவதால், நம் மரியாதை காப்பாற்றப் படுகிறது. பக்தனுக்கு மரியாதை என்பது அகந்தை. இறைவனுடைய மரியாதையே பக்தனுக்குரிய மரியாதை. மரியாதையை இலட்சம் முறை காப்பாற்ற முனைவதற்குப் பதிலாக, இறைவன் சிருஷ்டியில் வெளிப்படுத்தும் அடக்கத்தை, பக்தன் மேற்கொண்டு, அகந்தைக்கு நேர் எதிரான நல்ல காரியங்களை விரைவாக இடைவிடாமல் செய்தால் வளரும் அடக்கம் மாற்றத்தைக் கொடுத்து அபரிமிதமான சந்தோஷத்தையும், செல்வத்தையும் தரும்.
தன்னை பிரம்மமாக உணர மனிதன் அடக்கத்தைக் கைக் கொள்ள வேண்டும்.
அடக்கம் மாற்றத்தைத் தரும்.
அடக்கம் பிரம்மத்தை மனிதனாக்கியதால், அடக்கம் மனிதனை பிரம்மமாக்கும் மாற்றத்தின் முடிவு இது. மாற்றத்தின் முதற்படி நடைமுறை அடக்கவுணர்வு.
என்னை ஒரு முறை பார்த்தவருக்கும் நான் பொறுப்பேற்கிறேன் என்று அன்னை கூறுகிறார்.
60 வயதான பெண்மணிக்கு ஆபத்து வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து செயற்கை சுவாசம் ஏற்படுத்தினார்கள். நிலைமை நாளுக்கு நாள் மோசமானபொழுது, டாக்டர்கள் எதையும் நம்ப முடியாது. எங்களுக்கு நம்பிக்கையில்லை, உங்கள் திருப்திக்கு வைத்தியம் செய்கிறோம் என்கிறார்கள். பெண்ணின் தாயார் அன்னை பக்தை. அவர் கணவன், பிள்ளைகளுக்கு நம்பிக்கையில்லை. ஒரு மகளுக்கு நம்பிக்கையுண்டு. தம்பிகள், தங்கைகளுக்கு நம்பிக்கையுண்டு. அவருக்கே அன்னையைத் தெரியாது. நம்பிக்கையில்லை. எல்லோரும் பிரார்த்தனை செய்தார்கள். அவர் பிழைத்துவிட்டார். டாக்டர்கள் தங்களுக்குப் புரியவில்லை என்றனர். பிரார்த்தனை செய்தவர்கட்கெல்லாம் நம்பிக்கை வளர்ந்து, மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
பிழைத்து எழுந்து நடமாட ஆரம்பித்த பின், தம்பி, தங்கைகள், தாயார், மகள் ஆகியோர் அன்னை மீது வைத்திருக்கும் நம்பிக்கை அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்னை மீது பிழைத்த பின்னும் நம்பிக்கை வரவில்லை. அவர் இனி பிழைக்க மாட்டார் என்று டாக்டர் சொன்ன அன்று அவருக்கு அன்னை காட்சியளித்ததாகச் சொன்னார். அத்துடன் தாம் சிறு பெண்ணாக இருந்தபொழுது தகப்பனாருடன் அன்னையை பால்கனி தரிசனத்தில்
பார்த்ததாகவும், அன்னையை அதே உருவத்தில் அன்று காட்சியில் கண்டதாகவும் சொன்னார்.
உயிர் பிரியும் நேரத்தில் பெண்ணின் மனமும் மறந்துவிட்ட நிகழ்ச்சியை அவர் ஆன்மாவும் நினைவு கூறாத நேரத்தில், அன்னை தம் பொறுப்பை நிறைவேற்ற அவருக்குக் காட்சியாக வந்து உயிரையும் காப்பாற்றினார் என்று எவரும் அறிய முடியவில்லை.
அன்னையின் கூற்றை நிரூபிக்கும் நிகழ்ச்சி இது.
அன்னையை அறிந்தவர்கள், ஏற்றுக் கொண்டவர்கள், வழிபடுபவர்கள், தொடர்ந்து நெருங்கி வருபவர்கள் வாழ்வில் நடக்க முடியாததில்லை. நான் கூறும் மாற்றம் அதில் சிறு பகுதி. அப்படிப்பட்ட பக்தர்களின் வாழ்வில் அன்னைச் சூழல் ஏற்படுத்திய வாய்ப்பு அனந்தம். 3 வயதுக் குழந்தை ஒரு வீட்டில் அதன் போக்குக்கு விடப்பட்டால், அந்த வீட்டில் உள்ள எந்த வசதியை அதனால் பெறமுடியும். தன் போக்குக்கு விளையாடி, பொருள்களை அலங்கோலமாகக் கலைத்துப் போட்டுவிட்டு ஓடி விடும். மனிதர்கள் அதுபோல் செயல் படுவதாக அன்னை கூறுகிறார். நம்மைச் சுற்றியுள்ளதை நாம் அறிவதில்லை, நமக்குள்ள வாய்ப்பை அறிவதில்லை, சக்தியைக் குழந்தைபோல் விரயமாக்குவதே நம் பழக்கம் என்கிறார்.
கண்ணைத் திறந்து பார்த்து, நம்மை (organise) முறைப்படுத்திக் கொண்டு, மனத்தையும், வாழ்வின் போக்கையும் மாற்றிக் கொண்டு, கெட்டதை விலக்கி, நல்லதை முனைந்து நாடி மாற்றத்தைத் தேடினால், மாற்றம் ஏற்படும். சூழல் வாய்ப்பால் செறிந்துள்ளது என்ற அன்னை சொல் பலிக்கும். அன்னை கூறியது அக்ஷரமும் பொய்த்ததில்லை. பகவானைப் பற்றிக் கூறியதும் பொய்த்ததில்லை.
மாற்றம் சாதனையில் முடிய வேண்டும். சாதிக்காத மாற்றம் மாற்றமில்லை. எந்தச் சாதனைக்கும் பலன்
வருவதற்கு முன் சக்தி (power) வேண்டும். (Power) என்பதைப் பலன் தரும் சக்தி எனலாம். ஆங்கிலத்தில் power, force என்ற சொற்களுக்குத் தமிழில் நாம் பொதுவாக சக்தி என்பதால் அவற்றைப் பிரித்துக் கூறுதல் அவசியம். Energy சக்தி எனவும், force முறைப்படுத்தப்பட்ட சக்தி எனவும், (power) பலன் தரும் சக்தி எனவும் கூறலாம். சக்தியை ஒரே திசையில் செலுத்தினால் அது முறைப்படுத்தப்பட்ட சக்தியாகிறது. அது ஒரு ஸ்தாபனத்தின் மூலம் வேலை செய்தால் பலன் தரும் சக்தியாகும். போலீஸ் ஸ்டேஷன் என்ற ஸ்தாபனமே சர்க்கார் சக்தியை நமக்குப் பலன் தரும்படிச் செய்கிறது. நம் வீட்டில் திருடு போனால், சர்க்கார் நமக்கு உதவ விரும்பும் எண்ணம் வெறும் எண்ணமாகவே இருக்கும். சர்க்கார் சக்தியை நமக்குப் பலன் தரும் சக்தியாக மாற்றுவது ஒரு ஸ்தாபனம்.
சக்தி Energy
↓
direction முறைப்படுத்துவது
↓
force
↓
Organisation ஸ்தாபனம்
↓
power
↓
skill திறமை
↓
Result பலன்
சக்தி எழுந்து பலனாக மாறும்வரை நம் சக்தியை நாம் ஒரே திசையில் direction செலுத்த வேண்டும். அது Fprce முறைப்படுத்தப்பட்ட சக்தியாகிவிடும். அதை ஓர் அமைப்பு, ஸ்தாபனம் பயன்படுத்தினால் அது பலன் தரும். அப்பலனை நாம் நம் திறமை skill மூலம் பெறவேண்டும்.
நான் கூறும் மாற்றத்தின் அடிப்படை சக்தி. ஆனால் அது நம் சக்தியில்லை. நம் சக்தி சிறியது. அளவுக்குட்பட்டது. அதனால் சிறு அளவே சாதிக்க முடியும். நான் சொல்லும் சக்தி அன்னை சக்தி Mother’s Energy. அன்னை சக்தி அளவற்றது. அதனால் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும்.
சோர்ந்து, தளர்ந்து ஆபீசை நோக்கி ஒரு பக்தர் ஆமை போல் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது, அவர் ஆபீசைச் சேர்ந்தவர் அவரைத் தாண்டி வேகமாக நடந்து, திரும்பி கேலியாகப் பார்த்துவிட்டு அதிவேகமாக நடந்தார். அவரைப் பார்த்த பக்தர் அவருடன் ஈடு கொடுத்து நடக்கும் நிலையில் தாம் இல்லை என உணர்ந்தார். திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. ஏன் அன்னையை என் சார்பில் நடக்கச் சொல்லக் கூடாது என நினைத்தார். நினைத்தவுடன் பெரு வெள்ளமாகத் தன்னுள் சக்தி நுழைவதையும் தான் பறந்து செல்வதையும் கண்டார். ஆபீஸ் காம்பவுண்டுக்குள் இவர் நுழைந்ததும் கேட்டை மூடிவிட்டார்கள். கேட்டுக்கு வெளியே தன்னைக் கடந்து வந்தவர் வருவதைக் கண்டார்.
அன்னை சக்தி அதுபோல் பெருகும். அது பெருகும் வகைகள் அனைத்தையும் நாம் அறிய வேண்டும். அதுவே அடிப்படை. அடிப்படையில் சக்தி பெருகினால்தான் சாதனையைப் பற்றி நினைக்க முடியும்.
அன்னை சக்தி பெருகும் வகைகள்
ஒரு நாளில் நாம் பல ஆயிரம் முறை காரியங்களைச் செய்கிறோம். இவற்றை நாம் நம் பாணியில் செய்கிறோம். அதாவது ஒவ்வொரு முறையும் நம் அகங்காரம் வலுப்படும்படிச் செய்கிறோம். உலகத்தின் மனிதன் தன்னை, தன் அகந்தையைப் பாதுகாத்து, பேணி வளர்க்கும் முறை இதுவே. அகந்தையை வளர்ப்பதை மாற்றி, நம்முள் அன்னையை வளர்ப்பதே மாற்றம். அகந்தையை வளர்த்தால்
நாம் இருப்பதைக் கட்டிக் காக்கிறோம். அன்னையை வளர்த்தால் பூரணயோகப் பாதையில் அடி எடுத்து வைக்கிறோம். இந்த மாற்றம் சிருஷ்டியைப் பரிணாமம் ஆக்குகிறது. பிரம்மம் மூலம் கீழிருந்து மேலே செல்கிறது. என்றும்போல் நாம் வாழ்வது மனித வாழ்வு. மனித வாழ்வு மனிதன் வளரும் வாழ்வு. மனிதன் வளருவது என்பது அகந்தை வளர்வதாகும். இன்று நாம் மாற்றத்தைத் தேடுகிறோம். மாற்றம் என்பது சிருஷ்டியிலிருந்து பரிணாமத்திற்கு மாறுவது. மேலிருந்து கீழே வருவது (descent,involution) மாறி கீழிருந்து மேலே செல்வதே (ascent,evolution) மாற்றம். மனிதவாழ்வு தெய்வீக வாழ்வாவதே மாற்றம். அகந்தையை வளர்ப்பதற்குப் பதிலாக, அகந்தையை அழிக்க ஆரம்பிப்பதே மாற்றம். ஓடும் நதியைத் தடுத்து வந்த வழியே ரஷ்யாவில் அனுப்பியதைப்போல் வாழ்வின் போக்கைத் தடுத்து நிறுத்தி வந்த வழியே அனுப்புவது reversal மாற்றமாகும். நிமிஷத்திற்கு நிமிஷம் அகங்காரத்தைக் காப்பதற்குப் பதிலாக, அழிக்க முன்வருவது மாற்றமாகும்.
நம் அபிப்பிராயம் உண்மை என்பதை மாற்றி பிறர் அபிப்பிராயத்தில் உண்மையிருக்கிறதா எனக் கருதுவது மாற்றம். எண்ணத்தை நாடுவதற்குப் பதிலாக மனத்திற்குப் புதிய போக்குத் தேடினால் நாம் மாற முயல்வதாக அர்த்தம். பழக்கப்படி சிந்திப்பதற்குப் பதிலாக புதிய நோக்கில் சிந்தனை செய்ய முனைந்தால் மனம் மாற்றத்தைத் தேடுவதாகும்.
மாற்றத்தை மனத்தில் ஏற்படுத்துவதுபோல் உணர்விலும், உடலும் ஏற்படுத்தினால் மாற்றம் பூர்த்தியாகும். ஆசையே உணர்வு. ஆசையை வெல்வது மாற்றம். வேண்டியதை வேகமாகக் கேட்டால் உணர்வு உற்சாகப்படும். வேண்டியதைக் கேட்க மறுத்தால் அது மாற்றமாகும். பொறாமைப்படுவது இயல்பு. இயல்பை மாற்றுவதே மாற்றம். எவர் மீது பொறாமை எழுகிறதோ அவருக்கு உதவி செய்வது இவ்வழி. கோபமே
மனிதன். கோபத்தைச் சாந்தமாக்குவது முறை. உண்மை எனும் சத்தியத்தை எதிர்த்து அழிப்பதே மனித உணர்வு நாடுவது. உண்மையை ஏற்றுப் பூர்த்தி செய்தால் மாற்றம் இங்கும் ஏற்படும்.
உடல் சோம்பேறி, செய்வதைத் திரும்பித் திருப்பிச் செய்யும். சந்தேகப்படும். உணர்வைக் கட்டுப்படுத்தி உற்சாகமாக வேலை செய்ய வாராது. இருளால் நிரம்பியது. சுறுசுறுப்பாக வேலை செய்ய வாராது. சுறுசுறுப்பாக வேலை செய்தால் உடலை மாற வற்புறுத்துகிறோம். சந்தேகத்தை நம்பிக்கையாக்கினால், உணர்வின் உற்சாகத்தை ஆதரித்தால், இருளை ஒளியாக மாற்றினால், நம் உடல் மாற்றத்தை நாடும். நடைமுறையில் இவற்றைப் பின்பற்றுவது குறித்து 10 ஆண்டுகளாக நான் எழுதி வருவதை மீண்டும் ஒரு முறை எழுதுகிறேன்.
பிறர் நோக்கில் உள்ள உண்மையை மட்டும் அறிந்து, கோபத்தைக் கிளறுபவர் அன்னையின் பிரதிநிதி என அறிந்து, பழைய எல்லாப் பழக்கங்களையும் கைவிட்டு அவற்றுக்கெதிரான அன்னைக் கோட்பாடுகளை ஏற்று நாள் முழுவதும் அதே முயற்சியில் ஈடுபடுவது மாற்றமாகும்.
சமூகம் புதியதாக ஒரு வாழ்வு முறையைக் life style) கற்றுக் கொள்ள பெரும் பாடுபடுகிறது. கற்றுக் கொண்ட பின் அதைச் சமூக முன்னோடியான சிறுபான்மையோர் பின்பற்றுகின்றனர். புதிய முறையைப் பின்பற்ற ஆரம்பிக்கும் பொழுது பல விதமாகக் குறைகள் வரும். பல்வேறு புதிய சௌகரியம் கிடைப்பதைப்போல் பல்வேறு புதிய அசௌகரியங்கள் வரும். அசௌகரியங்கள் வருவதால் புதிய முறைகளைக் கைவிடுவதில்லை. அவற்றை விலக்கும் முறைகளை அறிய முற்படுவார்கள். சமூகத்தில் இப்புதிய முறைகள் பரவி எல்லா மட்டங்களுக்கும் வரும் பொழுதும் ஒவ்வொரு நிலைக்கும் அதே அனுபவம் ஏற்படும். பல
நல்லனவாகவும், ஏராளமானவை தவறானவையாகவும் இருக்கும். புதிய முறைகளின் நுணுக்கங்களை முழுவதும் அறிந்த பின்னரே அக்குறைகளின்றிச் செயல்பட முடியும்.
அப்படி இன்று சமூகத்தில் ஏற்பட்ட புதிய முறைகள் நூற்றுக்கணக்கானவை. சிறுவர்களாக இருந்து புதியதாக வேலைக்குப் போகும்பொழுது, திருமணம் ஆகி வாழ்க்கையை தொடங்கும்பொழுது, புதிய தொழிலை ஏற்கும்பொழுது, தல் குடும்ப நிர்வாகத்தை ஏற்கும்பொழுது இந்த அனுபவம் எவர்க்கும் உண்டு. பையன் தவற்றை விலக்கி ஜெயித்து வந்தால் நாம் ஆச்சரியப்படுகிறோம். அதற்குரிய காரணத்தை அறிகிறோம்.
தகப்பனார் போலிருக்கிறான்.
பெரிய குடும்பமல்லவா?
படிப்புக்குரிய திறமையுள்ளது.
சிறுவயதிலேயே கெட்டிக்காரன்.
நல்ல மனம், கூடி வருகிறது.
அதிர்ஷ்டம்,
என நாம் விளங்கிக் கொள்கிறோம். எல்லோரும்போல் பலவகையான தவறுகள் செய்வதால்,
புதிது, அனுபவம் போதாது,
என்கிறோம். எந்தப் புதிய முறைக்கும், அதற்குரிய எல்லா நுணுக்கங்களையும், அனுபவத்தால், அல்லது அறிவால் பெற்ற பின்னரே, முழு வெற்றி கிடைக்கும். அன்னை வாழ்வு என்ற புதிய முறைக்கும் இது அவசியம். வாழ்க்கை ஏற்காத தவறுகளை இங்கு செய்து விட்டு விஷயம் கூடி வரவில்லை, தவறாகப் போகிறது என்று குறைப்படுவதை நாம் கேள்விப்படுகிறோம். அவற்றை ஓரளவு சுட்டிக்காட்ட, பழைய
உதாரணங்களைப் புதிய கண்ணோட்டத்தில் சுருக்கமாக எழுதுகிறேன். வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் இது தழுவுவதால், பயன் தரும் எனக் கருதி எழுதுகிறேன். நல்ல உதாரணங்கள் வாழ்வில் குறைவு. அதாவது கூடி வந்தது குறைவு. கெட்டுப் போவது அதிகம். அதனால் உதாரணங்களில் பல தவறியவை. காரியம் கூடி வந்தாலும், காரியம் கெட்டுப் போனாலும் சட்டத்தைப் புரிந்து கொள்ள உதாரணம் உதவும் என்பதைக் கருத வேண்டும். படிக்கும் பையன் பாஸ் செய்கிறான். படிக்காதவன் பாஸ் செய்வதில்லை. இரு உதாரணங்களும் விளக்கும் சட்டம்,
பரீட்சை பாஸ் செய்ய படிக்க வேண்டும்.
நெடுநாள் கடினமாக உழைத்தது அன்று பலன் தரவில்லை என்றால், பலன் தாராமல் போகாது, வேறொரு வேலை செய்யும்பொழுது பலன் வரும். பெற்றோர் செய்த நல்லது நம் குறைகளை மீறிப் பலன் தரும். எது சரியோ அதைத் தைரியமாகச் செய்தால் தவறாது பலன் உண்டு, நம்பிக்கை வீண் போகாது, அன்னையிடம் நேரடியாகப் பேசினால் பலன் புயல் போல் வரும். அம்சமுள்ளவன் காணிக்கை தரும் மனநிலையில்லை எனில் தெய்வம் காணிக்கையைத் திருடி அவனுக்குப் பலனைத் தருவதுண்டு. நெடுநாள் இலட்சியம் பலிக்கும். வேண்டுமென்று பொறாமைப் பட்டால், அவர்களுக்குச் செய்த உதவி தொந்தரவை விளைவிக்கும், Life Divine லைப் டிவைன் படித்தால் இதுவரை இல்லாத உயரத்திற்குச் சூழல் உயரும், நம் இராசியால் கூடி வரும், அல்லது கெட்டுப் போகும், சேவைக்குப் பலன் உண்டு, நல்லவர் முனைந்தால் பலிக்கும். சுயநலம் தடுக்கும், பாகுபாடில்லை எனில் ஆபத்து வரும், கேட்காமல் செய்த சேவை, கேட்காத உதவியைப் பெறும், சமாதியுடன் அடிக்கடி தொடர்பிருந்தால் பலன் அதிகம், பெற்றோரானாலும் கெட்ட எண்ணம் பாதிக்கும், எவரானாலும் நல்ல எண்ணம் கற்பனைக்கெட்டாததையும்
சாதிக்கும், சூன்யக்காரன் குரு ஸ்தானத்திலிருந்தாலும் அவனுக்குச் செய்யும் நமஸ்காரம் வீட்டில் சாவுக்கு அஸ்திவாரம், பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நினைவு, ஒரு நிலையைக் கடந்த பின், நஷ்டத்திற்கு அஸ்திவாரம், பிரார்த்தனை காவிரியையும் பொங்க வைக்கும். நல்லவர் உறவு நயமான முறையில் பூர்த்தியானால் இதுவரை எட்டாத காரியமும் எதிர்பாராமல் கூடி வரும், மடமை ஜெயிப்பதுண்டு, அருளை நம்பும் மடசாம்பிராணி அதிகம் ஜெயிப்பதுண்டு, கர்வம் தலை குனியும், கர்வத்தை மீறியும் அருள் அனுக்கிரஹம் செய்ததுண்டு, மடமையின் கர்வம் தொடர்ந்து உயர்ந்து அருளால் பெரும்பான்மை பெற்று, அதனால் மடமை ஜெயிக்கிறது, கர்வமே கொள்கை என நினைத்த பின் 20 வருஷச் சாதனை இடிந்து கோபுரமாகும், நல்லெண்ணத்தைக் கர்வத்தால் களங்கப்படுத்தினால் எளிய வேலையும் சூன்யமாகும், நம் தொழில் வாடிக்கைக்காரரை அழித்தால் (சாவைக் கொடுத்தால்), நாம் போகும் இடங்களிலெல்லாம் சாவு கண்ணில் சகுனமாகப்படும், வயதிற்குக் கொடுக்கும் மரியாதையால் திமிராகப் பேசினால் வாழ்க்கை திமிரை அழிக்கும், விஸ்வாசத்தை அறியாத ஜாதியில் பிறந்தவன் விஸ்வாசமாக இருந்தால் ஊரில் தலைவனாகிறான், திறமையான சேவை சென்ற தலைமுறை அவமானத்தையும் மாற்றி இன்று பிரபலம் தரும், திட்டமிட்டு, முறைப்படுத்தி செய்யும் காரியம் முடியாததை முடியும் என்றும், 20 மடங்கு முடியும் என்றும் காட்டும், நினைக்க முடியாத நேரத்தில் (இடத்தில்) காணிக்கை வழங்கினால், நினைவுக்கெட்ட முடியாத பலன் வரும், ஸ்தாபருக்குத் துரோகம் செய்தால் கம்பனியை மூட வேண்டும், தற்செயலாய் செய்த சேவை தகுதிக்கு மீறிய பலன் தரும். சோம்பேறி மணிக்கணக்காய் சமாதியில் உட்கார்ந்தாலும், சோம்பேறித்தனமே பலிக்கும், அருளைத் தாங்கி வரும் குழந்தையை அவமரியாதையாகப் பேசினால் வீட்டிலுள்ள அனைவருக்கும் உயிர் போகும் ஆபத்து வரும், பக்தியோடு செய்யும் திறமையான வேலை சேவையாகி, சேவையைப்
பெறுபவர் நிலைக்கு நம்மை உயர்த்தும், நல்லெண்ணமும், நம்பிக்கையும் நினைத்ததைவிட, கேட்டதைவிட அதிகம் பெற்றுத் தரும், முதல் மாணவனின் நல்லெண்ணம் உலகின் உயர்வை நமக்குப் பெற்றுத் தரும், மேற்கூறியவை வாழ்வின் சட்டங்கள். இவற்றுள் பெரும்பான்மையானவை ஏற்கனவே முழுக் கட்டுரைகளாக எழுதப்பட்டவை. இவை வாழ்வு நெறிகள். இவற்றை அனுசரிக்க வேண்டும். மீறக் கூடாது. இவற்றை மீறி அல்லது புறக்கணித்துவிட்டு ஏன் அன்னை பலிக்கவில்லை என்பது சரியில்லை. இவை ஒவ்வொன்றையும் மீண்டும் ஒரு முறை விளக்குவது தேவையில்லை என்பதால் குறிப்பிட்டதுடன் விட்டு விடுகிறேன்.
அன்னை சக்தியே மாற்றத்திற்கு அடிப்படை என்றேன். நாம் அன்னையை ஏற்றுக் கொண்டபின் நம் சக்தி அன்னை சக்தியாக மாறாதா? என்று ஒரு கேள்வி எழும். நமக்குள்ள சக்தி human energy மனித சக்தி. அன்னை சக்தி திறனில் பெரியது. தரத்தில் உயர்ந்தது. உதாரணமாக நம் சக்தி உடல் அதிகப்பட்டால், உடல் சுறுசுறுப்பாகும். அன்னை சக்தி உடலில் பாய்ந்தால் உடல் புல்லரிக்கும். நரம்பில் நம் சக்தி அதிகப்பட்டால், உற்சாகம் எழுந்து தீவிரமாகி ஆவேசமாகும். அன்னை சக்தி ஆவேசமில்லாத தீவிரத்தையளிக்கும். மனம் நம் சக்தியால் பொறுமையிழக்கும். அன்னை சக்தியால் பொறுமையை இழக்காமல் மலரும்.
புதுவையில் அன்னைச் சூழல் உள்ளது. ஆசிரமத்தில் அன்னைச் சூழல் அளவு கடந்துள்ளது. நம் வீட்டில் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படங்கள் இருப்பதால், அனைவரும் அன்னையை ஏற்றுக் கொள்வதால் குடும்பச் சூழல், அன்னைச் சூழலாகி விட்டது என்பன எல்லாம் உண்மை. அத்துடன் வேறு உண்மைகளும் உண்டு. நம் வீட்டில் அடிக்கடி வந்து போகிறவர், நம்மை அதிகமாக அறிந்தவர், நமக்கு நெருக்கமாக வேண்டியவர், நம் நல்லது கெட்டதில் ஈடுபாடு
உடையவராகவுமிருக்கலாம், அல்லது அதில் கலந்து கொள்ளாதவராகவுமிருக்கலாம். கலந்து கொள்வது மனத்தைப் பொறுத்தது. நெருக்கத்தை மட்டும் பொருத்ததன்று. வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் வீட்டின் உரிமைகட்கும் புறம்பானவர்கள், வீட்டிலேயே இருந்தாலும் வீட்டின் உரிமையில் அவர்களைக் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை. பாட்டில் முழு ஆர்வம் உள்ள ஒருவர் வீட்டில், எவரும் அவர் ஆசையைப் பொருட்படுத்தாமலிருந்தால், அவர் உலகம் தனி, அவர் விஷயம் நமக்குத் தெரியாது என்ற அளவில் அவரிலிருந்து உலகம் பிரிந்து நிற்கும். குடும்பம் பிரிந்து நிற்பதுபோல் ஒருவர் குடும்பத்திலிருந்து பிரிந்து நிற்பதுண்டு. அதேபோல் நாம் புதுவையிலிருந்தாலும், அன்னைச் சூழல் நிறைந்துள்ள வீட்டிலிருந்தாலும், ஆசிரமத்திலேயே தங்கிச் சேவை செய்தாலும், எந்த அளவுக்கு நாம் அன்னையோடு நெருங்கி வருகிறோம் என்பது, எந்த அளவுக்கு அன்னையை மனதில் ஏற்றுக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.
நம் சக்தி அன்னை சக்தியாகத் தானே மாறாது. நாமே அன்னையை ஏற்று, நம் சக்தியின் உற்பத்தி ஸ்தானத்தில் அன்னையைப் பிரதிஷ்டை செய்து, நம் சக்தியை அன்னை சக்தியாக மாற்றாவிட்டால், நம் சக்தி அன்னை சக்தியாக மாறாது.
நம் சக்தி அன்னை சக்தியாக மாறும் அளவு நம் மாற்றத்தின் அளவை நிர்ணயிக்கும். Pure Existent சத்தியம் என்ற தலைப்பில் பகவான் ஓர் அத்தியாயம் எழுதியுள்ளார். நூலில் இது 9ஆம் அத்தியாயம். அகந்தையற்ற பார்வைக்கு உலகம் சக்திமயமான சமுத்திரம் என்று குறிக்கிறார். அப்பார்வையுள்ளவன் சக்தி அகந்தையற்ற சக்தியாகிறது. அகந்தையற்ற சக்தி அன்னை நினைவால் அன்னை சக்தியாகிறது. இடைவிடாத அன்னை நினைவு நம் முழுச் சக்தியை அன்னை சக்தியாக மாற்றும்.