ஏன் இந்த ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்டது? என்று ஒரு சாதகர் பகவானைக் கேட்டார். மற்றொருவர், ஏன் என்னைப் போன்ற எதற்கும் உதவாத மனிதனை யோகம் செய்ய அழைத்தீர்கள்? இலட்சியப் புருஷர்களை ஒன்று சேர்த்து ஆசிரமம் நிறுவக் கூடாதா? என்று கேட்டார். அவற்றிற்குப் பதிலாக பகவான், இந்த ஆசிரமம் வேறொரு நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டது என்றார். இலட்சியப் புருஷர்களைச் சேர்த்திருந்தால் தம் நோக்கத்திற்கு அவர்கள் உடன் பட்டிருப்பார்களா என்பது சந்தேகம் என்றார். வேறொரு நோக்கம் என்பது திருவுருமாற்றம். உலகிலுள்ள ஒவ்வொரு குணத்தையும், சுபாவத்தையும் அதற்கெதிரான தெய்வீகக் குணமாகவும், சுபாவமாகவும் மாற்றுவதே பகவானுடைய நோக்கம். அந்த நோக்கம் நூறு பேரில் நிறைவேறினால், சுமார் 10 அல்லது 12 சத்தியஜீவன்கள் பிறப்பார்கள். அதன் மூலம் பூவுலகம் மரணத்தை அழிக்கும். அவருடைய வாழ்நாளில் இது நிறைவேறாததால், பகவான் உடலை நீத்து, சூட்சும உலகுக்குச் சென்று தம் யோகத்தைத் தொடர்ந்ததின் பலனாக, 6 வருஷம் கழித்து அது நிறைவேற ஆரம்பித்து, அதன் முதற்பகுதியான பொன்னொளி உலகை வளர்த்துக் கொண்டேயிருப்பதையும், 1967இல் அது பெற்ற திறனையும், 1969 இல் அது பெற்ற உருவத்தையும் அன்னை விவரித்துள்ளார். அச்சக்தி உலகில் செயல்படுவதால்
மூன்றாம் உலகயுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டது; இந்தியா பெற்ற சுதந்திரம், தாம் நடத்திய போராட்டத்தால் பெறப்பட்டதாலும், இச்சக்தி பூவுலகில் வந்திறங்கிய பின் அதன் விளைவாக 40 நாடுகளுக்கு மேல் சுதந்திரம் பெற அது உதவியது. உலக அரசுகள் தனி மனித வாழ்வின் பொறுப்புகளில் அடிப்படையான சிலவற்றை ஏற்க முன் வந்துள்ளன. இதுவரை நடக்காதது, நடக்க முடியாதது எனக் கருதப்பட்டவை மாறி இனி அவையும் நடக்க முடியும் என்ற சூழலை இச்சக்தி உருவாக்கியுள்ளது. இதன் காரணமாகவும், பக்தர்களுடைய பாங்கைப் பார்க்கும்பொழுதும் தோன்றிய எண்ணமே நூறு பேர்கள் யோகவாழ்வை மேற்கொள்ள முடியும் என்பது.
இந்து மதம் தவத்திற்குப் பேர் போனது. தவம் சன்னியாசிக்குரியது. சன்னியாசம் காட்டிற்குரியது. ஆனால் இந்து மதம் மற்றவர்களை வழிபாட்டிலிருந்து விலக்காமல், அவர்களுக்குரிய வழிபாட்டை வகுத்துக் கொடுத்தது ஒரு பெரிய பேறு. வசதி உற்பத்தியானால் முதலில் அதை உயர்ந்தவர்கள் மட்டுமே பெற முடிகிறது. நாள் செல்லச் செல்ல மற்றவர்களும் அதைப் பெற வழி செய்வதுண்டு. இந்தியாவுக்கு ஜனநாயக தேர்தல் மூலம் வந்த முதலில் படித்தவனும், சொத்துள்ளவனுமே ஓட்டுரிமை பெற்றார்கள். சுமார் 30 ஆண்டுகட்குப் பின் அதே உரிமை அனைவருக்கும் கிடைத்தது. கார், போன், T.V. பிரிஜ், ரேடியோ போன்ற புதுமைச் சாதனங்கள் ஆரம்ப நாட்களில் வசதியுள்ளவர்க்கு மட்டுமே கிடைக்கின்றன. நாளாவட்டத்தில் அடுத்தடுத்த கட்டத்திலுள்ளவர்க்கும் அவை கிடைக்கும்படி அளவில் சிறியதாகவும், மலிவாகவும் செய்யப்படுகின்றன. அளவு சிறியதானாலும், விலை மலிவானாலும், அவற்றின் தரம் மாறுவதில்லை. பரம்பரையாக எல்லாத் துறைகளிலும் மனித குலம் அனுஷ்டிக்கும் முறையிது. பூரணயோகம்
எல்லோருக்கும் உரியதன்று என்று நாம் அறிவோம். அதன் ஆன்மீகச் சிறப்பின் தரம் குறையாமல், அளவு, உருவம், பாங்கு மாற்றி அமைக்கப்பட்டால் அது அடுத்த கட்ட நிலையிலுள்ள அநேக பக்தர்கட்கு உதவும் என்பது என் எண்ணம். பகவான் குடும்பஸ்தனை யோகத்திலிருந்து விலக்கினார்; ஆனால் யோகப் பலனிலிருந்து விலக்கவில்லை. யோகத்தின் கடுமையிலிருந்து விலகி, யோகப் பலனை வாழ்வில் பெறும் முறையை வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் விளக்கும் கட்டுரை இது.
யோகம் செய்ய அன்னை அமைத்தது ஆசிரமம். அனைவரும் அங்குக் கூடி வசித்தல் அவசியம் என்றார். யோக வாழ்க்கையை, குடும்பஸ்தன் மேற்கொள்வதால், அவனால் அதுபோல் தன் குடும்பத்தை விட்டு ஓரிடமாக வந்து சேர முடியாது. அது யோக வாழ்க்கைக்கு அவசியமும் இல்லை. அந்த அவசியம் தேவைப்படாத முறை ஒன்றைக் காண்பதே என் நோக்கம். Divine Life தெய்வீக வாழ்வு என்பது பகவான் வர்ணிப்பது. வாழ்வை யோகவாழ்வு என இக்கட்டுரை விளக்குவதற்கும் உள்ள வேறுபாடுகளை, தெளிவாக அறிதல் நன்று. தெய்வீக வாழ்வு யோகத்தின் முந்தைய நிலை, நேரடியாக யோகத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது, யோக வாழ்வு என்பது வாழ்வின் அடிப்படையில், வாழ்வு நிலையை உயர்த்தி, யோக சக்தியை அன்னை கோட்பாடுகளின் மூலம் வாழ்வில் பயன்படுத்தி வாழ்வை வளப்படுத்துவது. எனினும் யோக வாழ்வு மனித வாழ்வுக்கும், மனித வாழ்வின் உச்சகட்டத்திற்கும் செல்வதாகும். கட்டுரையின் முடிவில் இவ்வேறுபாடுகளை, சிந்தனை செய்தால் தெளிவு ஏற்பட உதவும்.
இதுவரை என் கட்டுரைகளில் சொல்லாத எதையும் இங்கு நான் எழுத முற்படவில்லை. இங்குக் காணப்படும் கருத்துகள் ஏற்கனவே நான் எழுதியவையே, உதாரணங்களில் பல
அத்தன்மையுடையவையே. எனினும், அடிப்படையான மாறுதல் ஒன்றுண்டு. அது நம் நோக்கம். நோக்கம் attitude மாறிய பின் நிகழ்ச்சியின் தோற்றம் மாறுகிறது. இதுவரை நான் எழுதியவற்றின் நோக்கம், பிரார்த்தனை பலிக்க வேண்டும். இப்பொழுது எழுதும் நோக்கம் வாழ்வின் அடிப்படை மாற வேண்டும். 20 வருஷமாகக் குடியிருந்த வீட்டை இன்று விலைக்கு வாங்கிவிட்டால், இனி எதுவும் மாறப் போவதில்லை. வசதியோ, இடமோ மாறப் போவதில்லை. வாடகை கொடுப்பதற்குப் பதிலாக, வீட்டு வரி கட்டப் போகிறோம் என்றாலும் உரிமை மாறுகிறது, உணர்வு மாறுகிறது. நேற்று, கதவு படாரென சாத்தப்பட்டால் உணர்ச்சியைத் தொடாது. இன்று கதவு உடைந்துவிடும் என சொந்த உணர்வு எழும். சுவரில் ஆணி அடிக்கும்பொழுது நம் மாறிய நோக்கம் மனத்தைத் தொடும். புதுவையிலேயே இருந்து அன்னையின் சிறப்பை அறியாமல் வேறு வேலையாக அடிக்கடி ஆசிரமம் சென்றவர், அன்னையின் மகிமையை அறிந்த பின் சமாதிக்குப் போகும்பொழுது, பழைய வேலை புது உணர்வைத் தருவதைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் பிரபலமான எழுத்தாளர் தம் வாழ்வை கம்பாசிட்டராக ஆரம்பித்தார். அன்றே அவருக்கு இன்றுள்ள திறமையுண்டு. உலகம் அவர் திறமையை இன்று ஏற்றுக் கொண்டதே மாற்றம். அவரிடம் மாற்றமில்லை. அவரை அறிபவர்களுடைய மனநிலையில் மாற்றமுள்ளது. அவர் உறவினர்கள் அன்று அவரை அறிந்ததும், இன்று அறிவதும் மாற்றமானவை. அதே அண்ணன்தான், அதே தம்பிதான், மாமாதான் ஆனால் இன்று புதிய பார்வையுடன் அவரை அவர்கள் காண்கிறார்கள். அதனால் உறவு புதியதாகிறது. பலன் புதியதாகிறது. அபரிமிதமானதாகிறது.
நாம் இதுநாள்வரை வாழ்ந்த உலக வாழ்வை, இன்று நாம் அன்னை கோட்டுபாடுகளின் மூலம் வாழ ஆரம்பித்தால் அதே வாழ்வு இன்று மாறுகிறது, மாறிய பலனைத் தருகிறது.
அந்த மாற்றம் அளவு கடந்த ஏற்றத்தைக் கொடுக்கிறது. அது உயர்ந்ததாக அமைகிறது. உயர்ந்தது எனில், உயர்ந்த மனித வாழ்வாகிறது, தெய்வீக வாழ்வாக மாறுவதில்லை. யோக வாழ்வு உயர்ந்த மனித வாழ்வு, தெய்வீக வாழ்வில்லை.
வாழ்வு என்பது ஒன்றேயானாலும் அதன் நிலைகள் நூறாகும். அதனால் மாறுபட்டுத் தோன்றும். மாணவனுடைய நிலையிலிருந்து குடும்பப் பொறுப்பை ஏற்றால் வீட்டைப் பொறுத்தவரை எந்த மாற்றமில்லை என்றாலும், சுதந்திரமாக வாழ்ந்த மாணவனுக்கு, பொறுப்பு வந்த வகையில் மாற்றம் பெரியது. வயதால் வாழ்வு பல நிலைகளையுடையது, வசதியால் பல்வேறு நிலைகளுள்ளன, மனநிலையால் ஒரே சந்தர்ப்பம் இருவருக்கு வேறாகத் தோன்றுகிறது, பொறுப்பால் ஏற்படும் மாறுபாடுகள் பல. வேலை நிறுத்தம் முதலாளிக்கு வேதனை, தொழிலாளிக்கு ஓய்வு. மழையாலும், வெய்யிலாலும், அரசியலாலும், மார்க்கெட் நிலவரத்தாலும், மாறிய பழக்க வழக்கங்களாலும் வாழ்வு நிலைகள் ஆயிரம். ஒரு நிலையிலுள்ளவர்க்கு, அடுத்த நிலையின் மனநிலை பொருந்தாது. எனவே ஒரே சட்டத்தை, பல நிலைகளில் சொல்லும்பொழுது பல உருவங்களைப் பெறுகின்றது. சொல்ல வேண்டிய சட்டங்கள் நூறு; விளக்கப்பட வேண்டிய வாழ்வு நிலைகள் நூறு. முடிந்தவரை கருத்து, தெளிவு படும்வரை சொல்ல முயல்கிறேன்.
அன்னை ஆரம்பித்த ஆசிரமத்தில் ஆயிரம் பேர் இருந்தாலும் யோகத்தை அவர்கள் இருவருமே மேற்கொண்டார்கள். பகவான் தம் இலட்சியம் பலிக்காததால், உடலை நீத்தார் எனில், இன்று யோகவாழ்வை மேற்கொள்ள நூறு பேர் அழைப்பை ஏற்று வரப் போகிறார்களா? இது நடக்குமா? என்ற கேள்வி எழுகிறது. 17 வருஷம் நேருவும், 18 வருஷம் இந்திராவும் செய்த பகீரதப் பிரயத்தனம் நாட்டை முன்னேற்ற முடியவில்லை, இனி நரசிம்மராவ்தான் சாதிக்கப்
போகிறாரா? என்று கேட்பது நியாயமான கேள்வி. பெருந்தலைவர்கள் பலனைப் பொறுத்தவரை தோல்வி அடைந்தாலும், அவர்கள் இட்ட அஸ்திவாரம் கல்வி, தேசீயமயம், போக்குவரத்து போன்றவை கொஞ்சம் கொஞ்சமாகப் பலித்து இன்று முயன்றால் பலன் கிடைக்கலாம் என்ற நிலையை நாட்டில்உருவாக்கியிருப்பதால், எளிய பிரதமரும் எட்டாக்கனியான முன்னேற்றத்தில் பலன் பெற வாய்ப்பு உண்டு.
பத்து ஆண்டுகட்கு முன் எழுத்தாளர் ஒருவரை சந்தித்து, தமிழ்நாட்டுப் பத்திரிக்கை ஒன்றில் அன்னையைப் பற்றி எழுத வேண்டும் எனக் கேட்டபொழுது, தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிக்கையும் அன்னையைப் பற்றி எழுத சம்மதிக்க மாட்டார்கள். வேண்டுமானால் எதிர்ப்பாக எழுதுவார்கள் என்றார். இன்று அம்மனநிலை மாறியுள்ளது. ரா. கணபதி ஆனந்தவிகடனில் எழுதியபொழுதும் ஆசிரமம் விலக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் அவர். நிலைமை மாறியிருப்பதாலும், பக்தர் மனம் பக்குவமாக இருப்பதாலும், நாம் செய்யும் நல்ல காரியத்தை மன நிறைவுடன் செய்தால், அன்னை நினைவுடன் செய்தால், பலன் கருதாமல் செய்தால், மீதி அன்னையின் பங்காகும். சென்னையில் தியானம் நடத்த வேண்டும் என ஒரு பக்தர் சொல்லியபொழுதும் நான் இதையே நினைத்தேன். சந்தேகப்படவில்லை, முடியுமா? என்ற கேள்வியை எழுப்பவில்லை, யார் இதை எடுத்து நடத்தப் போகிறார்கள், மாதந்தோறும் வரும் அளவிற்கு பக்தியிருக்குமா? என நினைக்கவில்லை. இன்று மண்டபம் நிறைகிறது. ஆரம்பித்தவர் இல்லை. அவர் போனார். வேறொருவர் வந்தார். எவரும் போகலாம், எவரும் வரலாம், பக்தி நிலைக்கும், அன்னை நிலைப்பார் என்று மனம் நிலையாக இருக்க வேண்டும். அருகிலுள்ளவர் ஏற்காததை, ஆரம்பித்தவர் மறந்துவிட்டதை, நெடுநாள் சேவையை மறந்து, துரோகம் செய்தவர் விலக்கியதை, தூரத்திலுள்ளவர் ஏற்பார்கள், பின்னால் வந்தவர்கள் பெறுவார்கள், விஸ்வாசமுள்ளவர்கள் விதிவிலக்காகச் செயல்படுவார்கள்.
குருவாயூரப்பன், குருக்கள் பக்தியை ஏற்று அவரை மோட்சத்திற்கு அழைத்துக் கொள்வதாகச் சொல்லி விமானம் அனுப்பியபொழுது, வீட்டுக் கோலத்தில் விமானம் வந்திறங்கியது. குருக்கள் வீட்டிலுள்ளோர் அனைவரையும் உடன் அழைத்தார். அவர்களுக்குக் கோலம் தெரிகிறது, விமானம் தெரியவில்லை. அவரைப் பயித்தியம் என்றார்கள். வேலைக்காரிக்கு விமானம் தெரிந்தது. அவருடன் போக அவள் சம்மதித்தாள் என்று கதை. வீட்டிலுள்ளவர்கள், நெருக்கமாக உள்ளவர்கள், உடனேயே ஐம்பது வருஷமாக இருந்தவர்கள் அறியாமற் போவதுண்டு. அதனால் அனைவரும் அறியப் போவதில்லை என்று சொல்ல முடியாது. அம்சம் உள்ளவர் கண்ணுக்கு விமானம் தெரியும். அப்படிப்பட்ட பக்தி அம்சமுள்ளவர் அநேகர் இருப்பதாக என் கணிப்பு. அதனால் இந்த அழைப்பை நான் விடுத்தேன்.
பேரொளியாகும் உள்ளொளி விளக்கும் மாற்றத்தைப் பெற விடுத்த அழைப்பு இது. அந்த மாற்றத்தை இரு வகைகளாகப் பெறலாம். ஒன்று நாமுள்ள நிலையிலேயே ஏற்படும் மாற்றம். அடுத்தது நம்மைவிட உயர்ந்த நிலைகளில் ஏற்படும் மாற்றம் (horizontal & vertical shifts). நாம் எங்கு வேண்டுமானாலும் வரிசையில் மணிக்கணக்காக நிற்க வேண்டியிருக்கிறது என்பவர் மனத்தை மாற்றிக்கொண்டால் வாழ்வு நிலையிலிருந்து அன்னை நிலைக்கு அடுத்த நாள் போனவுடன் வரிசையில்லாமல் எளிமையாகக் காரியம் நடக்கிறது. இந்தப் பலனில் தெரியும் மாற்றம் மனமாற்றத்தால் ஏற்பட்டது. இது போன்ற மற்ற எல்லா இடங்களிலும் பெறுவது முதல் நிலை மாற்றம் (horizontal shifts). சிறிய காரியங்களில் பலன் தெரிகிறது. பெரிய காரியங்கள் நடக்கவில்லை. ஹைஸ்கூல் அட்மிஷன் பலிக்கிறது, காலேஜ் அட்மிஷன்
பலிக்கவில்லை என்பவர் முயன்று வெற்றி பெற்றால் அது உயர்ந்த மாற்றம். அதையே அந்நிலையிலுள்ள எல்லாக் காரியங்களிலும் பெறுவது உயர்ந்த மாற்றத்தை நிலையான மாற்றமாக்குவதாகும். முதல் நிலை மாற்றத்திற்கும், அதை முழுமைப்படுத்தவதற்கும் தேவையானது முயற்சி. அடுத்த நிலை மாற்றத்திற்கு வெறும் முயற்சி போதாது. அறிவுடைய முயற்சி தேவை.
எங்குப் போனாலும் இலஞ்சம் தரும் நிலையில் ஒரு பக்தர் அதைப் பல இடங்களில் ஏற்றுக் கொண்டார். மகள் அட்மிஷன் வந்தபொழுது, மகளுக்கு அது பிடிக்கவில்லை. எனவே நேர்மையாக இடம் தேடினார். பலன் கிடைக்கவில்லை. இதுவரை ஒரு முறையை ஏற்றுக் கொண்டு, இன்று மாறினால் எப்படிப் பலிக்கும் என யோசித்தவர், சரி, இம்முறை பழையபடி அட்மிஷன் பெறுகிறேன். இனி எக்காரணத்தை முன்னிட்டும் இம்முறையை நினைப்பதில்லை என முடிவு செய்து தம்பியிடம் பணம் கொடுத்து அனுப்பினார். தம்பி வெளியில் போனவுடன், தபால் அட்மிஷன் கார்டு வந்துவிட்டது. தம்பி, பணத்தை அவர் வாங்க மறுத்துவிட்டார் எனத் திரும்பக் கொண்டு வந்துவிட்டான். அட்மிஷன் விஷயத்தில் பலித்ததை இதுபோன்ற எல்லாக் காரியங்களிலும் அவர் பின்பற்றுவது முதல் நிலை. அவரே கம்பெனி ஆரம்பிக்க, லைசென்ஸ் பெற வேண்டுமானால், இம்முறையை ஏற்க மனம் தயங்கும். ஏற்பது இரண்டாம் முறை. அது பலித்தால், அதை அவ்வுயர்ந்த நிலையில் எல்லாக் காரியங்களிலும் பலிக்கச் செய்வது vertical shift இரண்டாம் முறையை நிலைக்கச் செய்வது. இந்தப் பக்தருக்கு அட்மிஷன் முக்கியம். ஆனால் அன்னை வழியை ஏற்பதும் முக்கியம். அதனால் என்ன செய்வது என்ற தெளிவு இல்லை. மனதில் குழப்பம். மகளுக்கு அட்மிஷனை விட நேர்மையாகப் பெறுவதே முக்கியம். எனவே குழப்பம் அதிகரித்த நிலையில்
ஒருவாறாக மேற்சொன்ன முடிவுக்கு வந்து பணம் அனுப்பினார். முடிவும், பணம் அனுப்பியதும் தூய்மையான முறைகள் அல்ல. ஆனால் அவை ஆதாயத்தால் எடுத்த முடிவில்லை. குழப்பத்தால் எடுத்த முடிவு. மனம் தூய்மையாகவே இருந்தது உண்மை. மனம் தூய்மையாக இருந்ததால், அனுப்பிய பணம் திரும்பி வந்தது. செயல் முக்கியம். செயலைவிட, செயலுக்கு அடிப்படையான எண்ணம் முக்கியம். இங்கு எண்ணம் தூய்மையானது.
வன்முறையை அன்னை ஒரு பொழுதும் ஏற்றதில்லை. ஆனால் தற்காப்புக்கு வன்முறை ஏற்கக் கூடியது என்கிறார். நாம் வன்முறையை ஆரம்பித்தால் வன்முறையை நம்பும் மனம் தவறு செய்கிறது. பிறர் வன்முறையை ஆரம்பித்த பின், சூழ்நிலை வன்முறைக்கு உட்படுகிறது. சூழ்நிலைக்கேற்ற நிலையில் செயல்படுவது அவசியம் என்பது வன்முறையைப் பின்பற்றக் கூடாது என்பதை விட முக்கியம்.
மாற்றத்திற்கு நிலையுண்டு. நிலைக்கு அளவு உண்டு. நிலை முழுவதும் பரவிய மாற்றமே மாற்றம் எனப்படும்.
Seven experiments that can change the world உலகை மாற்றக்கூடிய ஏழு பரிசோதனை என்ற தலைப்பில் ஷெல்டிரேக் என்ற தாவர நூல் பேராசிரியர் சமீபத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டார். இது மனிதர்களுடைய பழக்கத்தைப் பற்றியது. ஒரு புதுக் காரியத்தை முதலில் ஒருவர் செய்வது கடினம். ஒருவர் செய்தபின் மற்றவர் செய்வது அவ்வளவு கடினமில்லை. ஓரிடத்தில் ஏராளமான பேர் அதைச் செய்து விட்டால், பிறகு உலகம் முழுவதும் அது பரவுவது எளிது என்பது அப்புத்கத்தின் முக்கியக் கருத்து. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை இது புரட்சிகரமான கருத்து. ஷெல்டிரேக் சொல்வது உண்மையானால் அவர் டார்வினும் ஐன்ஸ்டீனும் சேர்ந்தது போலாவார் என ஒரு விஞ்ஞானி கூறினார். இந்த
உண்மையை விஞ்ஞான முறைப்படி நிலை நிறுத்த முயல்கிறார் ஷெல்டிரேக். இது ஓர் ஆன்மிக உண்மை. ஆசிய நாடுகளில் பரவலாக நம்பப்படுவதாகும். பூரணயோகத்தைப் பற்றி, பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறியவை இந்த அடிப்படையிலேயே சொல்லப்பட்டவை. பூரணயோகத்தை முதன் முறையாகச் செய்வது கடினம். ஒருவர் செய்து முடித்துவிட்டால் அடுத்தவர்கள் செய்வது அவ்வளவு கடினமில்லை. சுமார் (12) பன்னிரண்டு பேர் இதைச் சாதித்தால் இதன் பலன் தானே உலகெங்கும் பரவும் என்பதே அதன் சுருக்கம். அதே அடிப்படையில்தான் அன்னை, உலகில் ஒரு நல்லது நடக்க வேண்டுமானால், முதலில் அது இங்கு நடக்க வேண்டும். இங்கு பூர்த்தியானால், பிறகு எளிதில் எங்கும் பூர்த்தியாகும் என்றார்.
யோக வாழ்க்கை என்ற கருத்துக்கும் இது பொருந்தும். முதலில் ஒருவர் செய்வது கடினம். அவர் செய்த பின் பலர் அவரைப் பின்பற்றிச் செய்ய முடியும். அதுபோன்று பலர் (100 பேர்) செய்து முடித்தால், பிறகு அனைவரும் செய்வது எளிது. இக்கருத்தை மனதில் கொண்டு நான் இந்த முயற்சியை மேற்கொள்கிறேன்.
உரிமையிருப்பதாலோ, ஒருவருக்கு முடியும் என்பதாலோ, அனைவருக்கும் முடியுமா? பல பேருக்கு முடியுமா? என்ற கேள்வி பலர் மனதில் எழலாம். நாட்டில் தொழில் செய்ய உரிமையுண்டு, பெரிய பட்டம் பெற உரிமையுண்டு, கலையிலும், அரசியலும் முன்னேற உரிமையுண்டு. எல்லாக் காரியங்களையும் செய்ய, எல்லோருக்கும் உரிமையுண்டு என்ற இன்றைய நிலையில் சிலர் சாதிக்கிறார்கள், அனைவராலும் சாதிக்க முடிவதில்லை என்பது உண்மை. படிக்க உரிமையில்லை என்ற காலம் இருந்தது. தொழில் செய்ய சர்க்கார் அனுமதியில்லை என்ற நிலை 1950 வரையிருந்தது. இன்று உரிமை வந்துவிட்டது. உரிமை மட்டும் இருந்தால்
சாதித்துவிட முடியுமா? எத்தனை பேர் சாதிக்கலாம்? படிக்க உரிமை வந்தால், குடும்பநிலை படிக்க அனுமதிக்க வேண்டும்; படித்தால் வேலை கிடைக்கவேண்டும். படிக்க, பணவசதி பெற முடிகிறது. யோக வாழ்க்கை பலிக்க, அன்னையின் அருள் உண்டு. அருளுடைய சக்தி உதவக் காத்திருக்கிறது. இதுவரை எத்தனை பேர் இதைச் சாதித்துள்ளார்கள் என்ற கேள்விக்கு என்ன பதில்? எவரும் சாதிக்காததை இனி ஒருவர் சாதிக்க முடியுமா? மீண்டும் மீண்டும் இந்தக் கேள்விகள் மனதில் எழுந்தபடியிருக்கும்.
பிறர் சாதித்ததை, தாம் சாதிக்க முன்வருபவர் follower பின்பற்றுபவர். முதன் முதலாக, தாமே முன் வந்து ஒன்றைச் சாதிக்க முயல்பவர் முன்னோடி pioneer. இம்முயற்சி முன்னோடிகட்குரியது. அன்னை உலகுக்குப் புதியவர். அவர் வாழ்வு பூமிக்குப் புதியது. அதை முதலில் ஏற்பது சமூக முன்னோடியல்லர் உலக முன்னோடியாவர், அன்னையை ஏற்றுக் கொள்பவர்கட்கு அது போன்ற முன்னோடியாகும் வாய்ப்புண்டு. அன்னையின் எந்தக் கோட்பாட்டையும் ஏற்றுப் பூர்த்தி செய்ய முன்னோடி மனப்பான்மையுள்ளவராலேயே முடியும். தெய்வமாக வழிபடுகிறவர்கள், பிரார்த்தனைக்குரிய பலனை நாடுபவர்கள். அவர்கள் பொதுவான மனப்பான்மை உடையவர்கள். நாலு பேர் செய்வதை விரும்பிச் செய்பவர்கள். உலகத்தோடு ஒத்து வாழும் மனப்பான்மையுடைய சாமான்ய குடிமக்கள். சாமான்ய குடிமகனுக்குச் சாமான்ய பலன் உண்டு. அரசியல் உரிமையைப் பலனாக மாற்ற தேர்தலில் ஜெயிக்க தனி மனிதனால் முடியாது. கட்சி ஆதரவு தேவை. இறைவன் அளித்த உரிமையை வாழ்க்கைப் பலனாக மாற்ற தனி மனிதனுக்கு சிரமம். அவன் அன்னை எனும் ஸ்தாபனத்தின் துணையை நாட வேண்டும். தனி மனிதனால் முடியாததை ஸ்தாபனம் கட்சியின் ஆதரவு சாதிப்பதைப்போல் பக்தனால் முடியாததை அன்னையின் அருளின் ஆதரவு சாதிக்கும். அதைப் பெற அவன் அருளின் கோட்பாடுகளை
ஏற்று (shift) தன்னை மனிதவாழ்விலிருந்து யோகவாழ்வுக்கு மாற்ற முயல வேண்டும்.
மனிதன் என்பவன் பலதரப்பட்ட சக்திகளின் சேர்க்கையால் ஆனவன். மோட்டார், எலக்ட்ரிசிட்டியால் ஓடுகிறது. மோட்டாரை இயக்குவது ஒரே சக்தி. மனிதன் அது போலில்லை. நம் பார்வைக்கு மனிதன் பழக்கத்தாலானவன். சற்று ஆழ்ந்து கவனித்தால் பழக்கம், சுபாவத்தின் பிடியிலுள்ளது. சுபாவத்திற்கும் மேலாக (personality) சொந்தத் திறமை என்று ஒன்று உண்டு. அன்றாடக் காரியங்களை நடத்துவது பழக்கம். பெரிய காரியங்களை நிர்ணயிப்பது சுபாவம். புதுக் காரியங்களைச் செய்யும் திறனளிப்பது சொந்தத் திறமை. இவை மூன்றும் கலந்தவனே மனிதன், அவனுடைய திறமை. அத்திறமையின் அளவே அவன் அன்னையிடமிருந்து பெறும் அளவை நிர்ணயிப்பதாகும். அதை நாம் உயர்த்துவது அவசியம்.
அன்றாடக் காரியங்களை முடிக்கப் பழக்கம் போதும். சொத்து வாங்க, சம்பந்தம் செய்யப் பழக்கம் போதாது. சுபாவத்தின் திறன் தேவை. உதாரணமாக நிதானம் தேவை. நிதானமில்லாதவன் சொத்து வாங்கப் போனால், அவன் அவசரத்தைக் காண்பவர்கள், வில்லங்கமுள்ள சொத்தை அவன் தலையில் கட்டி விடுவார்கள். இந்த ஊருக்குக் கல்யாண மண்டபம் புதியது என்றால், அதைக் கட்டிப் பலன் பெற சுபாவத்தின் திறன் போதாது, புதியன படைக்கும் திறன் உள்ளவரே அங்குப் பலன் பெறமுடியும். நம்மூர் செட்டியார் எவ்வளவோ திறமைசாலி, பஸ் ரூட் வாங்கி அவரால் சமாளிக்க முடியவில்லை என நாம் கேள்விப்படுவது, புதியன படைக்கும் திறன் இல்லை அவருக்கு என்று பொருள். அதுவும் அன்னைக் கோட்பாட்டை ஏற்கப் போதாது. அதன் நிலையை உயர்த்தினால் முடியும். பரம்பரையாக வந்த இராகு காலத்தை மறக்கவோ, பணத்தை அன்னையை நம்பி, தாராளமாகச்
செலவு செய்யவோ சுபாவத்தின் திறன் போதாது. புதியன படைக்கும் மனம் வேண்டும். அதுவும் உயர்ந்த நிலையில் வேண்டும். அருள் உன்னைத் தேடி வேறு ஜாதிப் பெண்ணாக வந்தால், வேறு ஜாதி கண்ணுக்குத் தெரிந்தால் சுபாவத்தால் செயல்படுகிறோம். அருள் தெரிந்தால் புதிய மனப்பான்மையால் செயல்படுகிறோம். அருள் மனைவி உருவத்தில் வருவது அரிதினும் அரிது. அது வந்தாலும் நாம் ஏற்றுக் கொள்ளும் வகையில், நம் சுபாவத்திற்கு ஒத்துக் கொள்ளும் வகையில் வாராது. பக்தனுக்கு அருள் புரிய காமாட்சி தன் சுய உருவத்தில் வரவில்லை. பிரசாதத்தை குங்குமமாகக் கொண்டு வரவில்லை. வேலைக்காரியாக வந்தாள். பிரசாதத்தை வெற்றிலைப்பாக்கு எச்சிலாகக் கொணர்ந்தாள். வெற்றிலைப்பாக்கு எச்சிலை பிரசாதமாகக் காணும் புதியன படைக்க மனமே முன்னோடியாக வரமுடியும். வெற்றிலைப் பாக்கு எச்சிலை, எச்சிலாகக் கருதுவது பக்தியன்று, பழக்கம். பழக்கம் மூலமாக அருள் செயல்படாது. மலர்ந்த ஜீவியத்திற்குரிய மாற்றத்தை நாடுபவர்கள் புதியன படைக்கும் மனப்பான்மையை ஏற்றுக் கொள்வது அவசியம். அதன் அடிப்படை (energy-direction-organisation-efficiency) சக்தி எழுந்து முறைப்பட்டு, செயலாக மாறுவதாகும். அம்பாள் தன் தெய்வீக உருவத்தில் வந்தால் எவரும் அறிவார். அம்பாள் வேலைக்காரியாக வந்தால், நான் எப்படி அதைப் புரிந்து கொள்ள முடியும்? நான் வேலைக்காரியை அம்பாளாக எப்படிப் புரிந்து கொள்வது? என்ற கேள்வி எழலாம். பூரணயோகத்தில் அதற்குப் பதில் உண்டு. அம்பாள் சொல்வதை மறுக்க நினைக்கும்பொழுது, மறுப்பதற்குப் பதிலாக, மறுப்பை, சமர்ப்பணம் செய்தால், சமர்ப்பணம் வேலைக்காரியை அம்பாளாகக் காட்டும், எச்சிலை, பிரசாதமாகக் காட்டும்.
ஜீவியம் மலர்ந்து மனிதவாழ்வு உயர்ந்து, யோக சக்தியை மனித வாழ்வின் உயர்வுக்குப் பயன்படுத்த வேண்டுமானால்,
முதற்படியாக மனிதவாழ்வு தன் திறனை (efficiency) உச்ச கட்டத்திற்கு உயர்த்த வேண்டும். Energy-direction-organisation-power-efficiency முதல் நிலை சக்தியை (energy) ஒரே திசையில் (direction) செலுத்தினால் அது (force) செயல்படும் சக்தியாகும். அச்சக்தியை (organise) முறைப்படுத்தினால் அது பலன் தரும் சக்தியாக (power) மாறும். அதுவே நம் திறனை (efficiency) நிர்ணயிக்கும். பலன் அதன் அளவைப் பொறுத்தது. இதை ஓர் உதாரணத்தின் மூலமாக விளக்கலாம். சிறுவனுக்கு அளவு கடந்த சக்தி உடலில் எழுகிறது. இதை இப்படியே அனுமதித்தால், அது விளையாட்டில் செலவாகும். படிப்பில்லாமற்போகும். பெற்றோர் சிறுவனின் சக்திக்கு ஒரு திசையை அளிக்கின்றனர். படிப்பு என்ற திசையில் அது செலுத்தப்படுகிறது. அப்படிச் செலுத்தப்படாவிட்டால் 20ஆம் வயதில் அவன் வெறும் கூலியாக நிற்பான். பள்ளியில் படிப்பின் பலனைப் பெற அவன் தன் திறமைகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் (organise). பள்ளிக்கு எல்லாப் புத்தகங்களையும், பேனா, பென்சில்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டுப் பாடம் எழுத வேண்டும். அதை நினைவாக, பரீட்சையில் எழுத வேண்டும். இவையெல்லாம் எவ்வளவு சிரமம் என மாணவர்களும், அதைவிட அவர்கள் பெற்றோர்களும் அறிவார்கள். சிறுவனின் சக்தி படிப்பில் செலுத்தப்பட்டு அவனால் முறைப்படுத்தப்பட்ட பின் பட்டம் என்ற பலனைத் தருகிறது. பட்டம் 35% மார்க் பாஸிலிருந்து, II கிளாஸ், I கிளாஸ், முதல் ராங்க்வரை பல அளவிலுண்டு. வாழ்விலும் இம்முறையுண்டு. ஜீவியம் மலர்வதை நாடுபவர்கள் முதலில் வாழ்வின் உச்சகட்டத்திற்கு, I கிளாசுக்கு வர வேண்டும்.
அன்னையின் அருளைப் பெறுவது நம் திறன் (efficiency). திறனின் உயர்வுக்குரிய அளவு அருளைப் பெறலாம். நான் என்பது திறன். திறனை உயர்த்தினால், நம்மை உயர்த்திக் கொள்கிறோம். திறன் உச்சகட்டத்தை
அடைந்த பின்னரே ஜீவியம் மலரும். வேறோர் உதாரணத்தின் மூலமும் இதைச் சொல்லலாம். காலையில் எழுந்து, சோபாவில் அரை மணி நேரம் உட்கார்ந்திருந்து, மீண்டும் படுக்கலாம் என நினைப்பவர் தெம்பில்லாதவர். இவர் ஆபீஸில் ஒதுக்கப்பட்டவராக இருப்பார். வீட்டை நிர்வாகம் செய்யும் பெண் எழுந்திருக்கவே தெம்பில்லாதவரானால், அவருக்கு ஏன் பொழுது விடிகிறது என்றிருக்கும். இரு விருந்தினர் வந்து விட்டால், தலை சுற்றும். வேறு சிலர் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எழுந்தவுடனே பக்கத்து வீட்டிற்குப் போய் அரை மணி கதை பேசுவார்கள். கதைப் புத்தகம் படிப்பார்கள். காமிராவை எடுத்துக் கொண்டு படம் பிடிக்கப் போய் 10 மணிக்கு வருவார்கள். மனம் வேலை பக்கம் திரும்பாது. சமையல் அறை நினைவு வாராது. வீடு பெருக்கியிருக்காது. படுக்கை அலங்கோலமாக அப்படியே இருக்கும், சுருட்ட மாட்டார்கள். ஆனால் மற்ற அர்த்தமற்ற எல்லா விஷயங்களுக்கும் அளவு கடந்த ஆர்வம் காண்பிப்பார்கள். இவர்களுக்கு சக்தியுண்டு. அதன் திசை கடமையில், வீட்டு நிர்வாகத்தில் செலுத்தப்படவில்லை, வாழ்க்கையை அனுபவிப்பதில் செலுத்தப்படுகிறது. எந்தக் கட்டத்தில் நாம் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறோமோ, அதுவே நமக்கு முடிவான கட்டம். அதற்கு மேல் இந்த ஜென்மத்தில் முன்னேற்றமில்லை. வீட்டில் வசதியிருக்கிறது. அதனால் வேலை செய்யமாட்டேன், கடமைகளைச் செய்யமாட்டேன், என் வேலையையும் பிறர் செய்ய வேண்டும், அதற்கு ஆள் வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டால், அதை நிறைவேற்ற அவர்களால் முடியும். ஆனால் அவர்களைப் போன்ற மற்ற குடும்பங்கள் தொடர்ந்து முன்னேறும்; அந்தஸ்து உயரும்; 15 ஆண்டுகளுக்குப் பின், மற்றவர்கள் வீட்டுப் பையன் அமெரிக்கா போவான், இவர்கள் வீட்டுப் பையன் B.A. முடிக்காமல், ‘படிக்காத மேதை‘ யில்லையா? என பேசிக் கொண்டு இருப்பான். பிறர் வீட்டு
விசேஷத்திற்குப் பெரிய மனிதர்கள் வருவார்கள். இவர்கள் வீட்டு விசேஷத்திற்கு அழைக்க எந்தப் பெரிய மனிதரும் அறிமுகமில்லை என்று தெரிய வரும். தமக்குத் தெரிந்தவர்களை, அவர்கள் மட்டமாக இருப்பதால், அழைக்க மனமிருக்காது. விசேஷத்திற்கு நாம் அழைத்தவர்களில் பாதிப் பேர் வரமாட்டார்கள். Direction திசை என்ற முதல் நிலைக்குரியவை இவை. இதற்கடுத்தாற்போல் orgaisation, power முறை, சக்தி என இரு கட்டங்களுண்டு. நாம் அன்றாட வாழ்வில் காண்பவை இவை. இன்றைய வாழ்வின் உச்சிக்குப் போன பின்னரே ஜீவியம் மலரும் முறை பலிக்கும்.
மனிதவாழ்வு, யோகவாழ்வு, தெய்வீக வாழ்வு என மூன்று பகுதிகளாக நான் வாழ்வைப் பிரித்தேன். நாமறிந்தது மனிதவாழ்வு, இதுவரை உலகில் ஏற்படாதது தெய்வீக வாழ்வு. அதன் அடிப்படை யோகம். மனித வாழ்வின் அடிப்படை Might is right பலம் பலன் தரும் என்பது. மனித வாழ்வின் அடிப்படை பலம் என்பதாலும், இன்று சத்தியத்திற்கு அப்பலமில்லை என்பதாலும், பொய் அதன் அடிப்படையாக இருக்கிறது.பொய் என்ற அடிப்படையை எதிராக மாற்றி சத்தியமாக்கினால் மனிதவாழ்வு, தெய்வீக வாழ்வாகும். அது யோகமாகும். இக்கட்டுரை அதைப் பற்றியில்லை. மனிதவாழ்வு, பல கட்டங்களில் அமைந்துள்ளது. தாழ்ந்த கட்டங்களில் பொய் அபரிமிதமாகவும், உயர்ந்த கட்டங்களில் பொய் குறைந்தும் உள்ளது. நாம் இரண்டுக்கும் இடையேயுள்ளோம். மனிதவாழ்வை உயர்த்தினால், பொய்யின் அடிப்படை குறையும். அதை மனித முயற்சியால் செய்வது சிரமம். அன்னைக் கோட்பாடுகளை ஏற்று மனிதவாழ்வை உயர்த்த முடியும். இது சிரமத்தைக் குறைக்கும். கோட்பாடுகள் யோகசக்தியைப் பயன்படுத்துவதால் உயரும் மனித வாழ்வு யோகவாழ்வாக மாறும். ஆனால் அது தெய்வீக வாழ்வில்லை. மனிதவாழ்வின் பொய்யான அடிப்படையை அன்னைக் கோட்பாடுகளை ஏற்று மாற்றினால், பொய் குறைந்த
மனித வாழ்வாக அது உயரும். இம்முயற்சிக்கு வாழ்க்கைத் திறன் (efficiency in life) உதவும். அதாவது நம் இன்றைய வாழ்வை எவ்வளவு திறம் படைத்ததாக மாற்ற முடியுமோ, உயர்த்த முடியுமோ, அந்த அளவுக்கு உயர்த்திக் கொள்வது ஆரம்பநிலைக்குரிய நிபந்தனையாகும்.
இம்முயற்சியில் உண்மையுடன் ஈடுபட்டால், நம் அந்தஸ்து, ஆரோக்கியம், வருமானம், சந்தோஷம் பத்து மடங்கு உயரும். அதுவே குறைந்தபட்சப் பலன். அதிகபட்சப் பலன் வேறு. நாம் எந்தப் பதவியை நாடினாலும், எந்த அந்தஸ்தை விரும்பினாலும், எந்த வருமானத்தைப் பெற முயன்றாலும், அதை நம்மால் சாதிக்க முடியும் என்ற தெளிவு அதிகபட்சப் பலனாக மனதில் எழும். இந்தத் தெளிவும், இவ்வுயர்ந்த பலனைப் பெற்றால் அப்பலனும் மனிதவாழ்வைச் சேர்ந்ததாகும்; அதன் உச்சகட்டத்தைச் சேர்ந்ததாகும்; தெய்வீக வாழ்வாகாது. யோக வாழ்வு உச்சகட்ட மனித வாழ்வாகும்.
இதை நாடும் தகுதி நமக்குண்டா என நினைத்தால், நாம் இன்று வாழும் வாழ்வில் நல்ல முறையில் நம்மைப் போன்றவர்களை விட உயர்ந்திருந்தால், நமக்கு இதை நாடும் தகுதியுண்டு. மனதால் உயர்ந்து செயலால் உயராதவர்கள் இதை விரும்பினால் மனத்தின் சிறப்பைப் பயன்படுத்தி செயலை உயர்த்திக் கொள்ள வேண்டும். செயலால் உயர்ந்து, மனம் தாழ்ந்திருந்தால், மனத்தை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். எனக்கு மனமோ, செயலோ உயர்வாக இல்லை, மிகவும் தாழ்வாக இருக்கின்றன, ஆனால் மனம் இந்த மாற்றத்தை நாடுகிறது எனில், அந்த நாட்டம் ஆர்வமாகும். ஒரு துளி ஆர்வத்தால் மனத்தையும், செயலையும் மாற்ற அவர்கள் முன் வந்தால் பெரும்பாடுபட்டு நெடுநாளில் வெற்றி பெற முடியும். அது முடியாவிட்டாலும் மனம் மேலும் இம்மாற்றத்தை விழைபவருக்கு உரிய பதில்,
•1. பிறர், பலர் மாறிய பின் உங்கள் முயற்சி பலன் தரும்.
அல்லது 2. பொறுமையாக இருந்தால் நூறு பேர்கள் மாறிய பின், உங்கள் முயற்சியின்றி மாற்றம் தானாகவே உங்களை நாடி வரும்.
இக்கருத்தில் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று முயற்சிக்குரியது. அதை மேலே விளக்கியுள்ளேன். அடுத்தது நம்பிக்கைக்குரியது. நமக்குத் தகுதியுண்டா? என்ற எண்ணம் எழுந்தால் நம்பிக்கையில்லை எனப் பொருள். நம்பிக்கை இல்லாவிட்டால் எதுவுமேயில்லை. நமக்கும் அன்னைக்கும் உள்ள தொடர்பு என்ன? அன்னை அருளின் உறைவிடம். அருள் தானே செயல்படுவது. தகுதியுண்டா என்ற கேள்வியையோ, வெறெந்தக் கேள்வியையோ எழுப்பினால் அருள் விலகும். கேள்வியை எழுப்பாத மனநிலை நம்பிக்கை உள்ள மனநிலை. அன்னை நம் தகுதிக்குத் தகுந்தாற்போலக் கொடுத்தால் எவ்வளவு கொடுக்க முடியும்? எதைக் கொடுக்க முடியும்? அன்னை கொடுப்பது எதையும் பெற நாம் தகுதியுள்ளவரில்லை. தகுதியைப் புறக்கணித்து அருள் செயல்படுவதால்தான் நாம் பெறுகிறோம் என்பதைக் கருதினால் தகுதி வந்துவிடும். அன்னையை அறிந்த பின் நாம் எதற்கும் தகுதியுடையவர் ஆவோம் என்பதை அறிவதே நம்பிக்கை. நம்பிக்கை முயற்சியை விடச் சிறந்தது. நம்பிக்கை இல்லாவிட்டால் முயற்சி அவசியம். நம்பிக்கையிருக்கும்பொழுதும் முயற்சியை மேற்கொண்டால், அது நம்பிக்கையின் நிலையை உயர்த்தும். அகந்தையுள்ளவரை நம் முயற்சி தேவை. அகந்தையழிந்தால், முயற்சி தேவையில்லை. அதன்பின் நமக்குப் பதிலாக அன்னை நம்முள் முயற்சியை மேற்கொள்கிறார்.
அரசியல் தலைவர்கள் கல்லடிக்கோ, சுட்டுக் கொல்லப்படுவதற்கோ பயப்பட முடியாது. தலைவர், தலைமை எனில் ஆபத்து அவசியம் உடன் வரும். ஆபத்தைத் தவிர்க்க
விரும்புபவன் தலைமையை நாட முடியாது. அதற்கடுத்த நிலையிலுள்ள தலைவர்கட்கும், பிற ஊழியர்கட்கும் அந்த ஆபத்தில்லை; ஆனால் கட்சியின் செல்வாக்குண்டு. தலைமையை யோகத்திற்கு ஒப்பிடலாம். யோகவாழ்க்கையை அடுத்த நிலைக்கு ஒப்பிடலாம்.
யோகத்தை மேற்கொண்டால் எல்லா நேரங்களிலும், எந்த ஆபத்தும் வரும். பகவானே இடறி விழுந்து காலை முறித்துக் கொள்ள நேர்ந்தது. சொத்துரிமை யோகத்தை மேற்கொண்டவர்க்கில்லை; உறவில்லை, குடும்பம் இல்லை, பாசமில்லை, கடமையில்லை, யோகம் பலன் தரும் என்ற உறுதியும் இல்லை. அவர் பங்கு சரணாகதி. என்ன நடக்கும் என்று யோசனை செய்யவும் உரிமையில்லை.
இவையெல்லாம் யோக வாழ்வுக்கில்லை. இங்கு ஆபத்தில்லை. ஆபத்திலிருந்து அவசியம் அன்னை பாதுகாப்பார். குடும்பம், சொத்து, உரிமை, உறவு, பாசம் உண்டு. குடும்பம் உயர்ந்த குடும்பமாக யோக சக்தி பயன்படும். சொத்து வளர அருள் உதவும். உரிமையைப் பாதுகாக்க அன்னை விரைவார். உறவும், பாசமும் சிறக்கும். ஏனெனில் இது மனித வாழ்வு. மனித வாழ்வின் உயர்ந்த பகுதி. மனித வாழ்வெனினும் life force வாழ்வின் சக்தியைப் பயன் படுத்தாமல், yogic force யோக சக்தியைப் பயன்படுத்துகிறது. யோகசக்தியைப் பயன்படுத்துவதால் இது யோகமாகாது. இதிலிருந்து யோகத்திற்குப் போக முடியாது. யோகத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் யோகவாழ்வு, தெய்வீக வாழ்வாக மாறவேண்டும். அதாவது வாழ்வின் அடிப்படை பொய்யிலிருந்து, சத்தியத்திற்கு மாறவேண்டும். இக்கட்டுரையில் அதைக் கருதவில்லை.
ஒருவகையில் இக்கட்டுரையில் எதுவுமே புதியதன்று. வேறொரு கோணத்தில் பார்த்தால், கட்டுரை முழுவதும்
புதியது. அதாவது விஷயம் ஏற்கனவே எழுதப்பட்டது. பார்வை, கோணம், முற்றிலும் புதியது. புதிய பார்வையை விளக்க, பழைய விஷயங்கயும், கருத்துகளையும், நிகழ்ச்சிகளையும் பயன்படுத்துகிறேன்.
இப்புதிய நிலையில் வாழ்வும், வாழ்வின் நிகழ்ச்சிகளும் மாறா. நம் பார்வை, கோணம், நோக்கம் மாறும். மாறிய நோக்கம் வாழ்வின் அடிப்படையை மாற்றும். (Shift) மாற்றம் நிகழும்.
இதனுடைய அம்சங்களும் அனந்தம். அவற்றை ஒவ்வொன்றாய்க் கருதுவோம். நிகழ்ச்சியை முதலில் எடுத்துக் கொள்வோம். நிகழ்ச்சி என்பது செயல். செயல் பலன் அளித்தால் பூர்த்தியாகிறது.
செயல் பலன் அளிப்பதெப்படி? பலனின் அளவை நிர்ணயிப்பது எது? அதிகப்படுத்தமுடியுமா? எளிமையாகப் பெறமுடியுமா? அதில் அருளுக்குப் பங்கு உண்டா? நம் பங்கு அதில் எதுவாக இருக்கமுடியும்? அன்னையை ஏற்றுக்கொண்ட பின், நம் பங்கை எப்படி மாற்ற வேண்டும்? மாற்றுவது அவசியமா?
நிகழ்ச்சி என்று நான் குறிப்பிடுவது காரியம். அன்றாடச் சிறு காரியங்களிலிருந்து புது பர்னிச்சர் வாங்குவது – பெரிய காரியங்கள்வரை (திருமணம், கம்பெனி ஆரம்பிப்பது போன்றவை) எல்லாம் காரியங்களே. ஆனால் நம் முன்னுள்ள காரியம் எனப்படுவது வாழ்க்கை. நம் முழு வாழ்க்கையையும் நமக்குரிய காரியமாக நாம் கருதும் பகுதியிது. விளக்கத்திற்காக சிறிய, பெரிய காரியங்களை எடுத்துக் கொண்டாலும், காரியம் எனப்படுவது நம் எதிர்கால வாழ்வாகும்.
- பிறப்பால் நம் வாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது.
- நாம் அதில் ஒரு பகுதியையே பெறுகிறோம்.
- முழு முயற்சியுடையவனுக்கு நிர்ணயிக்கப்பட்டது முழுவதும் கிடைக்கும்.
- அதைப் பெற அவன் ஏற்றுக் கொள்வது பெரு முயற்சி.
- அன்னையை ஏற்றுக்கொண்ட பின் பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டதன் நிலை உயருகிறது.
- மனித முயற்சி அதையும் குறைத்து ஓரளவுக்குள் கொண்டு வருகிறது.
- முயற்சியின் தரம் மாறினால் சிரமம் குறையும்.
- காரியத்தின் முதன்மைகளை அறிந்தால், அவற்றை எளிதாகப் பூர்த்தி செய்யலாம்.
- அன்னையை ஏற்றுக் கொண்டதால், புதிய வாய்ப்பை அதிகபட்சம் பெறுவதில் ஏற்படும் பிரச்சினைகளையும், அவற்றைத் தீர்ப்பதையும் காணும் பகுதி இது.
- முறையை உயர்த்தினால் காரியத்தை எளிதில் பூர்த்தி செய்யும் சூட்சுமம் clue தெரியும்.
- எல்லாச் சூட்சுமங்களையும் அறிந்த பின், அவற்றின் பலன்களையும் பெற்ற பின், இச்சூட்சுமங்களைச் சுருக்கும் சூட்சுமம் (master clue) ஒன்றுண்டு எனக் காணலாம். அப்பலன் பெற அதற்கு முன்னுள்ள எல்லா நிலைகளிலும் எல்லாப் பலன்களையும் பெற்றிருத்தல் வேண்டும்.
உலகம் விவசாயத்தில் ஆரம்பித்து, வியாபாரத்திற்கு வந்தது. பணம் வந்த பின், பணத்திற்கு மரியாதையும், power சக்தியும் வந்தது. சொத்தும், பணமும் அந்தஸ்தைக் கொடுத்தன. அவற்றின் மூலம் பதவி, அரசியல் பதவியைப்
பெற முடிந்தது. இவற்றிடையே கல்வி எழுந்து ஓரளவு இவற்றின் பலனைப் பெற்றுத் தந்தது. கிராமப்புறத்திலிருந்து நகரத்திற்கு வந்தால் நாகரீகம் எழுகிறது. பழைய பழக்கங்களைக் கைவிட்டுப் புதிய முறைகளை ஏற்றால் (modernisation) புதிய நகர்ப்புற நாகரீகம் வருகிறது. இவற்றை urbanisation,modernisation,sophistication நகர்ப்புற வாழ்வு, புது நாகரீகம், பண்பின் உயர்வு பெற்ற நாகரீகம் என்கிறோம். பல அளவில் இந்நிலைகள் கலந்துள்ளன. காரியம் என்றால் இந்நிலையிலுள்ள பலர் அவரவர்கள் செய்யும் முறை வேறாக இருக்கும். ஒரே காரியம் ஒரு நிலையில் சிரமமானது, அடுத்த நிலையில் எளிதாக அமையும், முடியாதது முடியும். இவையெல்லாம் நாம் அறிந்தவை எனினும் ஒரு சில குறிப்புகளை மட்டும் எழுதுகிறேன்.
- நகரத்தில் குடியிருப்பவர் தம் 40 ஏக்கர் நிலத்திலிருந்து வருஷத்தில் ரூபாய் 15,000 பெறும்பொழுது, கிராமத்திலிருப்பவர் அதே போன்ற 40 ஏக்கரிலிருந்து 15 இலட்சம் ரூபாய் வருஷத்தில் சம்பாதிக்கின்றார்.
- கிராமத்திலுள்ளவர் பையனை B.A. படிக்கச் செய்யும் செலவில் டெல்லியிலுள்ளவர் பையனை அமெரிக்காவிற்கு அனுப்புகிறார்.
- இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் 1952இல் M.P. எலக்ஷனுக்கு நின்று விமானமூலம் நோட்டீஸ் வினியோகம் செய்து தோற்றபொழுது, வருமானமில்லாத உள்ளூர் வக்கீல் ஜாதியின் பெயரால் அமோக வெற்றி பெற்றார்.
இதன் தத்துவம் ஓர் இரகஸ்யம். உடல் உழைப்பு உயர்ந்தது. ஆனால் குறைந்தபட்சப் பலன் தரும். உணர்வால் உழைத்தால் பலன் உபரியாகும். அறிவின் உழைப்புக்கு அதிக பலன் வரும் எனினும், பலன் பலிக்க நாளாகும். ஆன்ம உழைப்புக்கு
பலன் அதிகமாக, நிச்சயமாக, உடனே கிடைக்கும். உடல் முதல் நிலை, உணர்வும், அறிவும் அடுத்தடுத்த நிலைகள். ஆன்மா முடிவான நிலை. அன்னையை அதற்கும் சிகரமான நிலையாகச் சொல்லலாம், அல்லது ஆன்ம நிலையிலேயே சேர்க்கலாம். உடலால் செய்வதை உணர்வால் செய்வது எளிது. அதை அறிவது clue சூட்சுமமாகும். அதையே அறிவாலோ, ஆன்மாவாலோ செய்தால் மேலும் எளிதாகச் செய்யலாம். அவை higher clues உயர்ந்த சூட்சுமங்கள். இந்த சூட்சுமங்களுக்கெல்லாம் சூட்சுமமாக இருப்பது ஒன்று. அனுபவம் முதிர்ந்து, விவேகம் ஏற்பட்டால் இவற்றை அறியலாம். அனுபவமில்லாமல் சூட்சுமத்தை அறிய முயல்வது ஆபத்தாகும். ஏதோ ஓர் ஆபத்திலிருந்து தப்ப, பெரியவர்கள் அது போன்ற சூட்சுமத்தையும் சில சமயங்களில் அறிவிப்பதுண்டு.
நாளாக நாளாக நாகரீகம் வளரும்பொழுது, சமூகம் இது போன்ற உபாயங்களை ஏற்படுத்தி பொது மக்களுக்கு வழங்கியுள்ளது. சில இடங்களில் மட்டுமே இது சமூகத்தில் முடியும். தனிப்பட்ட மனிதன், அன்னையை ஏற்றுக் கொண்டு, இவ்விஷயங்களை அறிய முற்பட்டால், உபாயங்களின் பலன் அதிகம். மேலும் அன்னை சக்தி இவற்றைச் சிறப்பாக்கும். ஒரு வகையில் இவற்றைப் புரிந்து கொள்வது கடினமென்றாலும், அன்றாட வாழ்வு நிகழ்ச்சிகளாக இருப்பதால், அனைவரும் புரிந்து கொள்ள முடியும். ஆர்வமுள்ளவர் அனைவரும் பயின்று பலன் பெறலாம்.
மெஷின்கள் அறிவால் கண்டு பிடிக்கப்பட்டவை. நடந்து போவது உடல் உழைப்பு. அறிவால் கண்டு பிடிக்கப்பட்ட பஸ்ஸில் போவது அறிவால் உழைப்பதாகும். அறிவால் வேலை செய்யும்பொழுது, வேலை எளிதாகவும், விரைவாகவும் முடிகிறது. அதையே ஆன்மாவால் செய்யலாம். வெளியூர் போய் ஒருவரைச் சந்தித்து, காரியம் பேச நடந்து
போவது அல்லது பஸ்ஸில் போவது உடலாலோ, அறிவாலோ செயல்படுவதாகும். ஆன்மாவைக் கலந்து, நமக்குப் பதிலாக ஆன்மாவை வேலை செய்யச்சொன்னால், ஆன்மிகச் சக்தி எழுந்து செயல்படும். அவர் நம்மைத் தேடி வருவார். நாம் பேரம் பேசவேண்டியதை, நாம் கேட்பதற்கு முன் கொடுப்பார். இது ஆன்மாவின் சக்தி. நடந்து போகின்றவன், வழியில் ஒரு வண்டி போவதைக் கண்டு, தானும் அந்த வண்டியில் ஏறிக் கொண்டால் நடை மிச்சமாகிறது. பஸ்ஸில் போக வேண்டுமானால், யார் அந்த ஊருக்குப் போகிறார்கள் எனத் தெரிந்து அவரிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினால், போக்குவரத்து மிச்சமாகும். சூட்சுமம் clue எனப்படும் சுருக்கு வழிகள் இவை. நாம் அன்றாடம் இவற்றைப் பயன்படுத்துகிறோம். சந்தர்ப்பப்பட்டால் ஒத்து வரும். நிலையாக எதிர்பார்க்க முடியாதவை இவை. சமூகம் முன்னேறும் பல வழிகளில் ஒன்றாக மனிதன் ஒரு காலத்தில் சிரமப்பட்டுச் செய்ததை, வருங்காலத்தில் எளிமையாகச் செய்யும் முறைகளைக் கண்டு பிடித்துப் பயன்படுத்துகிறான். அவைகளில் தலையாயது விஞ்ஞானக் கருவிகள். அவை இலட்சக்கணக்காகப் பயன்படுத்தப்படுவதால் நாம் அவற்றின் சிறப்பை மறந்து விடுகிறோம். அடுத்தாற்போல் organisation,system அமைப்பு முறை, நிர்வாக முறைகள் சிரமமான காரியங்களை எளிமையாக்குகின்றன. அக்பருக்கு 100வது மைல் குழந்தை பிறந்தவுடன் செய்தியை விரைவாக எப்படிச் சொல்வது என்று பலரும் விவாதித்தபொழுது, பீர்பால் 3 மைலுக்கு ஒருவராக மேளம் கொட்டுபவரை உயர்ந்த இடங்களில் அமைத்தார். செய்தி மேளதாளமாக, சில நிமிஷங்களில் வந்து சேர்ந்தது. இது போன்று நாம் இன்று உபயோகப்படுத்தும் systems முறைகள் ஏராளம். உதாரணமாக சர்க்கரை வேண்டுமானால் நாமெல்லோரும் ஆலையில் போய் வாங்கிக்
கொள்ளலாம் என்பதற்கு பதிலாக விநியோக முறையில் ஆலை, கமிஷன் ஏஜெண்டு, மொத்த வியாபாரி, ஸ்டாக்கிஸ்ட், சில்லறைக் கடை என்ற முறை ஏற்பட்டிருப்பதால், நாம் நினைத்தபொழுது, அருகில் சர்க்கரையை வாங்க முடிகிறது. நாகரீகத்தின் பகுதிகள் இவை. சமூகம் வகுத்தது.
நாம் நம் சொந்த விஷயங்களை நன்கு கவனித்தால், இவை போன்ற அமைப்பு முறைகள் இல்லாததால், பல காரியங்களைச் செய்ய முடிவதில்லை. வேறு சில காரியங்களுக்கு அதிகப்படி பணம் செலவாகிறது. ஒரு சில செயல்களை முடிக்கப் பல பேர் உதவி தேவைப்படுகிறது. இவற்றை எல்லாம் நாம் சிந்தித்துப் பார்த்தால் உழைப்பால் செய்வதை உணர்வால் செய்தால் அல்லது அறிவால் செய்தால் முடியாதது முடியும். அதிகச் செலவில் கூடி வருவது குறைந்த செலவில் முடியும். பெருமுயற்சி, சிறுமுயற்சியால் நடக்கும்.
இத்தனைக் காரியங்களையும் ஆன்மாவால் செய்யக் கற்றுக் கொண்டால், நாம் சுமார் 100 ஆண்டு முன்னேறுவதைக் காணலாம்.
இவை கற்பனையல்ல. இன்று நடைமுறையில் சிலருக்கு இது உதவுகிறது. ஏழைக்கு முடியாதது, பணக்காரனுக்கு முடியும். பணக்காரன் அதிகச் செலவில் சாதிப்பதை, செலவு இல்லாமல் பதவியிலுள்ளவன் சாதிக்கிறான். டாக்டரால் முடியாதது, பிரார்த்தனையால் முடிகிறது. மனித வாழ்விலிருந்து யோகவாழ்வுக்கு மாறினால், எல்லாக் காரியங்களையும் சுலபமாகச் செய்யக் கற்றுக்கொண்டால், அவற்றிற்குரிய சூட்சுமங்களை அறிந்தால் இந்த shift மாற்றத்தைச் செய்ய உதவும். இவற்றிற்கு உதவும் வழி வகை, முறைகள், பண்புகள் பல. அவை