சச்சிதானந்தம் = 7

மனத்தில் மௌனம் குடி கொள்வது முனிவர் நிலை. அலைபாயும் எண்ணம் நிற்பது முதற் கட்ட மௌனம். வெளியிலிருந்து வரும் எண்ணத்தை நிறுத்தலாம். நம் உள்ளிருந்து எழும் எண்ணங்கள் அடுத்த கட்டம். அது கடினம். சிந்தனையற்றுப் போகும் மனம் பெரிய மனம். அதற்கடுத்தும் உண்டு. மனம் உள்ளவரைதான் இவ்வளவும், மனமே கரைவது நிர்வாணம். அதற்குமேல் சத்திய ஜீவிய மௌனம் உண்டு.

இளம்பெண் அடிக்கடி கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பது போல் நாம் அடிக்கடி, நம்மையும், நம் குடும்பத்தையும், வேலைகளையும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இது என்ன? நாம் நம்மை நினைப்பதுபோல், அன்னையை நினைப்பவர் பக்தர். நமக்காக அன்னையை நினைப்பது சுயநலமான பக்தி. அன்னையை அன்னைக்காக நினைப்பது பக்தி. மனம் நினைக்கும்வரை அது மனத்தின் பக்தி. உணர்வின் பக்தியுண்டு. ஆன்மாவிற்கும் பக்தி உண்டு. சைத்தியப் புருஷனின் பக்தி, பக்திக்குரிய இலட்சணம் உடையது. நம் இன்றைய வாழ்வை ரசித்து அனுபவிப்பவர் அன்னைக்குகந்தவரில்லை. அதை ரசிக்கக் கூடாது. அதை ரசிக்கும் வரை அங்கு அன்னையிருக்கமாட்டார்கள்.

நாம் சிறுபிள்ளையாய் இருக்கும்போது ஓடிவிளையாடி, உருண்டு புரண்டதை ரசித்தோம். வயது வந்தபின் அப்படிச் செய்வதில்லை. உணர்வில் சிறுபிள்ளையாய் இருப்பவர்கள் ஆர்ப்பாட்டமான வாழ்வை ஆர்வமாக ஏற்று திளைக்கிறார்கள். அது (child soul) பாலகனான ஆத்மாவிற்குரியது. நிதானம், அமைதி வளர்ந்த ஆத்மாவிற்குரிய முறை. ஆத்ம வளர்ச்சி இல்லாம் ஆர்ப்பாட்டமாக இருப்பது தவறல்ல. ஆனால் அழகல்ல, நமக்காக அன்னையை நினைப்பது சுயநலமான பக்தி, ஆனாலும் அன்னையைத் தெரியாமல் இருப்பதைவிட உயர்ந்தது. அன்னையை அறிந்த பிறகு அன்னைக்காக அன்னையை நினைப்பது ஆண்டாள், மீரா பக்தியை போன்றது. நாம் எப்படி அன்னையை அணுகினாலும் அன்னை நம்மை அப்படியே ஏற்கிறார். நம்முடைய வயதிற்கும், படிப்பிற்கும், அந்தஸ்திற்கும், ஆன்ம விழிப்பிற்கும் ஏற்றவாறு அன்னையை அணுகுவது சிறப்பு.

வாழ்வு என்றால் என்ன? உடலாலான வாழ்வு என்பது உழைப்பாளியின் வாழ்வு. Vital (பிராணன்) வாழ்வு என்பது கடைக்குப் போவது, தரிசனத்திற்குப் போவது ஆர்ப்பாட்டமான வாழ்வு. ஒரு யோசனைப்படி வாழ்பவர் (mental life) மனத்திற்குரிய வாழ்வை வாழ்பவர் மூளை வேலைக் செய்பவர். ஆன்மீக வாழ்வு என்பது பூஜை, தியானம், நிஷ்டை ஆகியவை. அவற்றிற்கு ஒத்துவராததை விட்டுவிட்டு ஆன்மாவிற்குத் தகுந்தபடி வாழ்பவர்கள் அவர்கள். உதாரணமாக இப்படிப்பட்டவர்களை டாக்டர் முட்டைச் சாப்பிடச் சொன்னால், அடுத்தாற்போல் அந்த டாக்டரிடமே போகமாட்டார்கள்.

மேல் மனம் (surface mind) ஆழம் (depth) என மனத்தில் இருநிலைகள் உள்ளன. மேல்மனத்திற்குரிய அம்சங்கள் 5. மேல்மனம், மனம், அகந்தை, சிறியது, காலம். (Surface, mind, ego, finite, time)

மேல்மனத்திலிருந்து உள்ளே போனால் (inner mind) உள்மனம் உண்டு. அதனுள் அடிமனம் (subliminal mind) உண்டு. மேலேயிருந்து உள்ளே போக நாம்.

  • அகந்தையை விட்டகன்று சைத்தியப் புருஷனை நாட வேண்டும்.
  • காலத்தைக் கடக்க வேண்டும்.
  • சிறியதை விட்டுப் பெரியதாக வேண்டும்.
  • மனத்தைக் கடந்து சத்திய ஜீவியத்தை எட்டவேண்டும்.

விகாரத்தில் அழகைக் காண்பவன் கவி. நம் எண்ணம், செயல், உணர்ச்சி, உடல், மனம், ஆத்மாவுக்கு உள்ள ஆணவ மலம் இல்லாமலிருந்தால் ஆன்ம விழிப்பு வரும். ஆன்மவிழிப்பு உள்ளவர்க்கு பிறரின் ஆத்மா ஒளியாகத் தெரியும். அதிகமான பேரின் ஆத்மா தெரிந்தால் ஹிருதய சமுத்திரம் தெரியும். நாம் சுத்தமாக இருந்தால் ஆன்மா வெளிவரும். ஹிருதய சமுத்திரம் சிந்தனையாளனுக்கு சிந்தனைக் கடலாகத் தெரியும். கவிக்கு செய்யுள் மழையாக எழும். காவியம் அது. கலைஞனுக்கு ஓவியக்குவியலாகவும், புதையலாகவும் தெரியும். யோகிக்கு ஹிருதய சமுத்திரமாகத் தெரியும்.

ஆன்ம விழிப்பு யார் யாருக்கு எப்படித் தெரியும்?

  1. என்னை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் நீங்கள் தான் என்று ஒருவர் நம்மிடம் சொன்னால் நமக்கு ஆன்ம விழிப்புண்டு என்று பொருள். ஆன்ம விழிப்பு முழுமையாக இருந்தால் உலகம் ஹிருதய சமுத்திரமாகவும், ஜடப்பொருள்கள் சக்தியலைகளாகவும், மனிதர்கள் உருவம் கரைந்து சக்தி வடிவமாகவும் தெரியும். ஓரளவு இருந்ததால் ஒரு அம்சம் தெரியும். பிறரை சரியாகப் புரிந்து கொள்வது ஒரு அம்சம்.
  2. ஆன்ம விழிப்புள்ளவர்கள் பிறரை சந்தித்தால் அவர்களுடைய ஆசை, அபிலாஷை, சோகம், துக்கம், சந்தோஷம் தெரியும். அவற்றைப் பூர்த்தி செய்ய முயல்வார்கள். ஆன்ம விழிப்புள்ளவரை சந்தித்த பின் ஆசைகள், தேவைகள் தானே பூர்த்தியாகும்.
  3. ஆன்ம விழிப்பிற்கு அடுத்த நிலை சத்தியம். சத்தியத்தை மனம் ஏற்றுக்கொண்டால் அவனுக்குப் பிறர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அம்சமிருக்கும் (சத் ஆன்மாவாகி சத்தியமாகிறது.)

சத்தியம்அகம் என்ற சத் தன்னைப் புறமாகப்

பார்ப்பது சத்தியம். இவற்றை இணைப்பது ஆன்மா. (சத் —- ஆன்மா — சத்தியம் 

  • ஆன்ம விழிப்புள்ளவர்கள் செய்யும் செயல் பிறருக்கு ஆனந்தம் தரும்.

காலத்திற்குள் இருக்கும்வரை ஹிருதய சமுத்திரம் தெரியாது. அடை, இட்லி, தோசை, உப்புமா, அதிரசம் எல்லாமே அரிசியில் செய்தவை என்றாலும், நமக்குள் இவற்றுள் உள்ள அரிசி தெரியாது. அரிசி இருக்கிறது என்று அறிவுக்குத் தெரியும், கண்ணுக்குத் தெரியாது. அரிசி தெரிய வேண்டுமானால் முன் கட்டத்திற்குச் செல்ல வேண்டும். அதாவது அடை, இட்லி, தோசைக்கு அரிசியை ஊறப்போடும் கட்டத்தில் பார்த்தால் அரிசி தெரியும். ஹிருதய சமுத்திரம் அரிசி எனில் நாம் பார்ப்பது ஹிருதய சமுத்திரம் இல்லை. காலத்தைக் கடந்து சென்றால் ஹிருதய சமுத்திரம் தெரிகிறது. காலத்துள்ளிருக்கும் பொழுது பொருள்களும், மனிதர்களும், இட்லியும், தோசையும் தெரிகின்றன.

T.V.க்குப் பின்னால் உலகம் இருப்பது போல் (T.V பார்க்கும் பொழுது நமக்கு T.V. மட்டுமே தெரிகிறது), உலகத்திற்குப் பின்னால் ஹிருதய சமுத்திரம் உள்ளது. ஹிருதய சமுத்திரத்தைக் காணும் ஆத்மா பெரிய ஆத்மா. நாம் பார்க்கும் T.V. நம்மைப் போன்ற மனிதர்கள் உற்பத்தி செய்தது. ஹிருதய சமுத்திரத்தைப் பார்க்கக் கூடிய ஆன்மா உலகத்தை சிருஷ்டிக்கவல்லது.

ஹிருதய சமுத்திரம் நம் கண்ணுக்குத் தெரிந்தால், எல்லாமே அர்த்தமற்றதாகிவிடும். அறிவுச் சொல்வதை உணர்வு ஏற்றுக் கொள்ளாது. அறிவு புரிந்து கொள்வதற்கு உணர்வு ஒத்துழைக்கும். உணர்வு ஒத்துழைக்காவிட்டால் அறிவுக்குப் பலன் குறைவு. அறிவு செயல் செயல்படாது.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்தவன் நகரத்தின் நவீன தேவைகட்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மாற்றிக் கொள்கிறான். நாம் பிரவாகத்தைக் கண்ணுற்றால், அதற்குத் தகுந்தாற்போல் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்யும் பொழுது நமக்கு என்ன வசதியுண்டு என நினைப்பது குறுகிய மனப்பான்மை. அது நடக்காது என்று புரிந்தவுடன் அதை விட்டுவிடுகிறோம்.

படிக்காதவன் படித்தவனைவிட அறிவுள்ளவனாகப் பேசுவது, பணக்காரன் முன் ஏழை தன்பெரிய வசதியை விவரிப்பது, நாம் காணக் கூடியவை. இது எல்லோரிடமும் இருப்பதால் நம்மிடமும் இருக்கும். தத்துவத்தை அடிக்கொண்டு ஆராய்ச்சி செய்தால்.

யாராவது ஒருவரிடம் ஒரு குணமிருந்தால் அது அனைவரிடமும் இருக்கும்.நம்மிடம் இருப்பதைக் கண்டுபிடிப்பது நமக்கு உதவும். கண்டுபிடிப்பது ஞானம், விலக்குவது சித்தி. கண்டுபிடித்தவன் அதை விலக்குவது அறையிலுள்ள காற்றை விலக்குவது போலாகும். அக்குறையை விலக்கியபின் ஏற்படுவது அடக்க உணர்வு. அடக்கத்திற்கு ஓர் அடையாளம் உண்டு. அவை பல நிலைகளில் உள்ளன.