சச்சிதானந்தம் = 4

உலகில் எவர் எதைப் பெற்றாலும் அது அனைவருக்கும் உண்டு என்று சொன்னோம். பைபிளை மக்கள் படிக்கக் கூடாது என்ற காலம் இருந்தது. பிரிண்டிங் வந்தபின் பைபிள் அனைவருக்கும் கிடைத்துவிட்டது. டெக்னாலஜி முன்னேறும் பொழுது சமூகத்தின் கட்டுப்பாடுகள் உடையும். தான் கண்டுபிடித்தது தனக்கு மட்டுமே என்ற காலம் மாறி எவர் கண்டுபிடித்தாலும் நாட்டின் சொத்து என்று வந்துவிட்டது. நம் வீட்டுத் தோட்டத்தில் 3 சந்தனமரங்கள் இருந்தால் அவை நமக்குரியன இல்லை. அது சர்க்காருக்குரியது. செய்திகளை மறைக்க முடியாது என்பதால் விபரம் தெரிந்தவர் விபரம் தெரியாதவரை ஏமாற்ற முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. நமக்குத் தேவையான செய்திகளை Internet கொடுப்பது போல் அன்னையை அழைத்தால் நமக்குத் தேவையானது கண்முன் வருவது அன்பர்கள் அறிந்தது. அன்னையை அழைப்பதற்குப் பதிலாக அந்தக் காரியத்தை அன்னையிடம் ஒப்படைப்பது சிறந்தது. நம் வாழ்வையே அன்னையிடம் ஒப்படைக்கலாம். தமது வாழ்வையும், உழைப்பையும், உயிரையும், ஆன்மாவையும் அர்ப்பணம் செய்பவர்கள் அன்னையின் குழந்தைகள். மற்றவர் அர்த்தமற்ற சூன்யம் என்று அன்னை கூறுகிறார். அதை நம் பிரார்த்தனையின் பலனாகப் பெறுகிறோம். பிரார்த்தனைக்குப் பலனாக அன்னை கொடுப்பதை அன்னை என்னும் ஸ்தாபனம் அன்பருக்குக் கொடுக்கும் உரிமை என்று புரிந்தால் ஸ்தாபனத்திற்குள்ள அவ்வளவு திறமைகளையும் நாம் தெரிந்து கொள்ளலாம். தெரிந்து கொண்டால் பெற முயலலாம். திறமை, படிப்பு, ஞானம், அதிர்ஷ்டம், பாட்டு, பரிசு ஆகியவற்றை அன்னை நமக்கு இதன் மூலமாகத் தருகிறார்கள்.

பிரம்மம் என்பது சிருஷ்டிக்கு அப்பாற்பட்டது. பிரம்மம் சிருஷ்டிக்கஆரம்பிக்கும் போது அது முதலில் சிருஷ்டித்தது சத் புருஷனை. சத் புருஷன் மனத்திற்கு க்ஷர, அக்ஷர பிரம்மமாகவும், தெய்வத்திற்குப் புருஷனாகவும் தோன்றுகிறார். அக்ஷர பிரம்மத்துள் க்ஷர பிரம்மம் அடக்கம். அக்ஷர பிரம்மம் புருஷோத்தமனில் அடக்கம். சத் புருஷன் தன்னைப் பிறராக (objective) பார்த்தால் ஏற்படுவது சத்தியம். சித் என்பது சத் புருஷனுடைய அடுத்த நிலை. ஆனந்தம் சித்துடைய அடுத்த நிலை. சத்திய ஜீவியம் (சத்) சச்சிதானந்தத்தின் அடுத்த நிலை. மனம் அடுத்தது. வாழ்வும் உடலும் அடுத்த அடுத்த நிலைகள். உடல் முழுவதும் பொய். வாழ்வில் பொய் அதிகம். சத்தியத்தையும் சத் புருஷனையும் தொடர்புபடுத்துவது ஆன்மா (spirit). பிரம்மம் முதலில் சிருஷ்டிக்க ஆரம்பித்து சத் புருஷனை சிருஷ்டித்ததால் அது குறையவில்லை. சத் புருஷன் சத்தியமாக மாறுவதும், சித்தாக மாறுவதும் வேறு வேறு. மனம் மெய்யை நேரடியாக அறிய முடியாது, (trial and error) மூலம் அறியும். செய்து பார்த்து அறியலாம். நம் மனதில் ஆரவாரம் இருக்கும்வரை சிந்திக்க முடியாது. சிந்திக்க வேண்டுமானால் ஆரவாரம் அடங்கவேண்டும். அதே போல் சிந்தனை போய் மௌனம் வந்தால்தான் ஆன்மா வெளிப்படும். சிந்தனை இருக்கும் வரை ஆன்மா வெளிப்படாது. ஆன்மா முக்கியம். ஆனால் முழுமையல்ல. முழுமை என்பது ஜீவன் (ஜீவன் = mind+vital+body+soul). முழுமை என்பது சைத்தியப் புருஷனுக்குள்ளது. சைத்தியப் புருஷன் ஆன்மாவிலிருந்து வந்ததானாலும் (ஆன்மா முழுமை இல்லை) சைத்தியப் புருஷனுக்கு முழுமை உண்டு. மனிதனுடைய ஆத்மா ஜீவாத்மா. இது ஆதியும், அந்தமும் இல்லாதது. வளர்ச்சியற்றது. அதாவது இதற்குப் பரிணாமம் இல்லை. மேல் உலகத்திற்கு மட்டும் உரியது. மனித வாழ்வில் பங்கு கொள்ளாதது.சைத்தியப் புருஷன் பரிணாமத்தில் ஜீவாத்மாவின் பிரதிநிதி. பிரகிருதியின் பரிணாமச் சாரத்தைத் தன்னுள் சேர்ப்பது. சைத்தியப் புருஷன் பிரகிருதியின் ஆத்மா (Being of the Becoming). பரிணாமம் என்பதால் சைத்தியப் புருஷனுக்கு முழுமையுண்டு. இது மனதில் ஆரம்பித்து (double opening) மேலும் கீழும் போகிறது. முடிவாக ஈஸ்வரனை அடைகிறது.

ஜீவாத்மா, கடைசிவரை ஜீவாத்மாவாகவே இருக்கும்.

சைத்தியப் புருஷன் முதலில் ஜீவியமாக மனதில் ஆரம்பிக்கும், வளரும், உருவம் பெற்று ஜீவனாகும்.

இம்மாற்றம் நிகழும் பொழுது மேல் நோக்கியும், கீழ்நோக்கியும் செல்லும்.

கீழே உடன் சைத்தியப் புருஷனாகும். மேலே ஈஸ்வரனாகும்.

எனவே இதற்கு முழுமையுண்டு.

ஜீவாத்மாவைக் கல்லூரிப் படிப்பு எனவும் சைத்தியப் புருஷனை தொழிற்கல்வி எனவும் கூறலாம். முழுவதும் பொருத்தமானதன்று. கல்லூரிப் படிப்பு வாழ்க்கைக்கு உதவாது. தொழிற்கல்வி வேலை பெற்றுத் தரும். சொந்தமாகச் சம்பாதிக்க உதவும்.

சைத்தியப் புருஷன் நம்மை சத்திய ஜீவியத்திற்கு அழைத்துச் செல்லும். மனம் பகுதி பகுதியான மனம் சிந்திக்கும் வரை முழுமை கிடையாது. பகுதி சிந்திப்பதை நிறுத்தினால் முழுமை சித்திக்கும். அப்போது சத்திய ஜீவியத்தை அடையலாம்.சிந்தனை நின்றால் ஆனந்தம் வரும். ஆனந்தத்தை நாடவில்லை என்றால்சித், தாகிவிடும். (நம்மை நாம் உணர முயலவில்லை என்றால் சத்தாகிவிடுகிறோம்.) நாம் (ego)* இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை என்றால் பிரம்மமாகிவிடுகிறோம்.

* நாம் (ego) அகந்தையாக இல்லாவிட்டால் அது கீதை கூறும் பிரம்ம நிர்வாணமாகும். அப்பொழுது தெரிவது cosmic self கடவுள். சத் புருஷனாக இல்லாவிட்டால் சத் புருஷன் பிரம்மமாகிவிடும்.


மனத்தால் பொய்யை விலக்கினால் செய்யும் காரியங்கள் 100 மடங்கு அனுமதித்தால், அந்த மெய் நம்மை சத் புருஷன் உள்ள இடமான சத்தியத்திற்குக் கொண்டு போகும். மெய் சொல்வது என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம். கண்ணால் கண்டதை, காதால் கேட்டதை மாற்றாமல் சொல்வது மெய். அதை மட்டும் இங்குக் குறிப்பிடவில்லை. ஒருவர் தம் அண்ணனுடைய சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தினால் அவனுடைய வாழ்வின் அடிப்படையில் உண்மையில்லை. அவர் தாமே சம்பாதிப்பதாக நடித்தால் அது பெரிய பொய். அண்ணன் சம்பாதிப்பதை ஏற்றுக் கொண்டு அவர் வாழ்வை நடத்தினால் அவர் வாழ்வே பொய் என்பதால் அவர் சொல்லும் மெய் அனைத்தும் மெய்யாகாது. ஊரில் நியாயம் பேச, மத்தியஸ்தம் பேச இவர் போன்றவர்களை அழைக்கமாட்டார்கள். இவர் வாழ்வின் அடிப்படை பொய். அது குடும்ப வாழ்வு. அதுபோல் மனத்துக்குரிய வாழ்வுண்டு. அதன் அடிப்படைகளை நாம் சோதனை செய்தால் சில உண்மைகளாகவும், பல பொய்களாகவும் இருக்கும். உதாரணமாக ஒரு விஷயம் நடந்த பிறகு அதிலுள்ள உண்மையை எவரும் கூற மறுத்தால் நாம் மற்றவர்களை ஒட்டிப்போவோம் என்றால் நம் மன வாழ்வின் அடிப்படை பொய். மன வாழ்வின் அடிப்படை அனைத்தும் மெய்யாக இருப்பவர்கள் கூறுவதே மெய்யாகும். அதற்கு அடுத்தாற்போல் ஆத்மாவின் அடிப்படையிலுள்ள வாழ்வுண்டு. ஆத்மா இறைவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்வது மெய். தனக்கு மட்டும் மோட்சம் தேடுவது மெய்யாகாது. மெய் என நாம் கூறுவது மன வாழ்வு (அகவாழ்வு), ஆத்மாவினுடைய வாழ்வு உண்மையான அடிப்படையில் இருந்தால் நம் சொற்கள் சத்தியமாகும். **ரிஷிகள் தவம் செய்து அடைந்த அக்ஷர பிரம்மத்தை மெய்யை மட்டும் சொல்வதால் நாம் பொய்யை விலக்கிய நேரம் அடையலாம்.

** நிரந்தரமாக இதை அடைவது சத், சித், ஆனந்தமான சச்சிதானந்தத்தை சத்திய ஜீவியத்தைக் கடந்த சச்சிதானந்தத்தை அடைவதாகும்.