உள்ளே வேலையிருக்கின்றது
எல்லா விஷயங்களிலும் பலிக்கும் பிரார்த்தனை, ஒரு விஷயத்தில் பலிக்காவிட்டால், அவ்விஷயத்தில் மனத்தில் தடை, அல்லது குறையிருக்கிறது எனலாம். அந்தத் தடை எது என்று தெரியாது. வேறு சில சமயங்களில் தடையை நாம் கடமை என நினைத்துப் பின்பற்றுவோம். நமக்குத் தெரியாதது பிறருக்கு நம்மைப் பற்றித் தெரியும். அவர்கள் நாகரீகம் கருதிச் சொல்ல மாட்டார்கள். அவர்கள் சொல்லும் சமயத்தில், நமக்கு அவர்கள் அநாகரீகமானவர்கள், நம் பண்பின் உயர்வு புரியவில்லை அல்லது, நம் வீட்டுப் பண்பின் நுணுக்கம் இவர்கள் அறிய முடியாது என்று தோன்றும். அவர்கள் சொல்லும்பொழுது நம் தவறு புரிவதும் உண்டு. அடுத்த நிமிஷம் மறந்து விடுவோம். நம்மைச் சூழ்ந்துள்ள அனைவரும் சரி என நினைப்பது அன்னைக்குத் தவறு என்பது படிக்கும்பொழுதுதான் தெரியும். அதை அறிந்து அப்படியே பிரமித்துப் போவோம். மனம் மாறத் தோன்றாது. பிரச்சினை அப்படியே இருக்கும், பிரார்த்தனை பலிக்காது. எதை நாம் புனிதமாக நினைக்கிறோமோ அதை அன்னை தவறு என்கிறார் என அறிந்தவுடன் தலை சுற்றும். மாறும் பேச்சே இருக்காது. ஆனால் பலன் நம் தவற்றைக் காட்டியபடி இருக்கும். நம்மைச் சுற்றி நிகழ்பவை நேரடியாகவும், சூசகமாகவும் நமக்கு நம் குறையை உணர்த்தியபடியிருக்கும், அவை நம் கண்ணில் படா.
நிலைமை எதுவானாலும், பிரார்த்தனை பலிக்காதவரை உள்ளே வேலையிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
ஆசிரமத்திற்கு லட்ச ரூபாய் காணிக்கைக் கொடுத்துவிட்டு வெளியில் போனால் நம் கடையில் வாங்கிய சரக்கைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அதே லட்ச ரூபாய் கைவிட்டுப் போகிறது என்றால், நாம் செய்ததில் தவறு இருக்கிறதா? என நாம் யோசிப்பதில்லை. எரிச்சல் வருகிறது. இது என்ன சாமி என்று தோன்றுகிறது. காணிக்கையை மனம் கருதியபொழுது இயல்பாகக் கருதியது உண்மை. இயல்பான நினைவு காணிக்கையை பவித்ரமாக்கியது உண்மை. அதன்பின் நடந்தது நினைவுக்கு வருவதில்லை. காணிக்கை ஆசிரமம் போகும்பொழுது அதை அறிந்தவர்கள், காணிக்கை போகுமுன் பலரிடம் பெருமையாகச் சொன்னது நினைவில்லை. இப்பொழுதும் நினைவுக்கு வரவில்லை. கொடுக்கப் போகும் காணிக்கையைப் பலரும் அறியவேண்டும் என்ற கருத்து, காணிக்கையைத் தடம் புரட்டி விடுகிறது. காணிக்கை அன்னையிடம் போய்ச் சேராது. நம் பெருமைக்குக் காணிக்கைச் செலுத்திவிட்டோம். அன்னை பெருமையை அழித்துவிட்டார். காணிக்கைத் தன் வேலையைச் செய்துவிட்டது. காணிக்கை பணமில்லை, பக்தியின் சின்னம். பக்தி செலுத்துபவருக்கும் பெறுபவர்க்குமுள்ள தொடர்பு, அங்கு அடுத்தவர்க்கு வேலையில்லை. எவர் கண்ணில் பட்டாலும் காணிக்கையின் பவித்திரம் குறைந்துவிடும். இவை நம்முள்ளே உள்ள நிலை. அவற்றை மாற்றாமல் பிரார்த்தனை பலிக்காது.
தரிசனத்திலிருந்து திரும்பி வந்தால் நல்லது நடக்கும் என்பது அனுபவம். நல்லது மட்டுமே நடக்கும் என்பது சட்டம். வந்தவுடன் 2 பழம் அழுகிப் போயிருக்கிறது என்பது சரியில்லை. நிர்வாகம் வீட்டில் சரியில்லை. நம் பழக்கம் அழுகிப் போயிருக்கிறது எனப் பொருள். பக்தர்கள் வீட்டில் பொருள்கள் வீணாகக் கூடாது. அது பொருள்களை அலட்சியப்படுத்துவதாகும். அது போன்ற நிலை வீட்டிலிருக்கும்வரை மனநிலை பிரார்த்தனை பலிக்கத் தடை என்று அறிய வேண்டும். மனம் பிரார்த்தனையை நாடுவதற்கு பதிலாக, இனி பழம் அழுகாமல் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். அந்த இடம் குறையாக உள்ளவரை வெளியில் வேலை இல்லை. இது பலருக்கும் தெரியும். நம் மரபில் உண்டு. இதையும் தெரியாதவர்களுண்டு. அவர்களுக்கு வேலை உள்ளே இருக்கிறது.
தரிசனச் சமயங்களில் பல மனிதர்களைக் காணலாம். நாம் அன்னையைத் தரிசிக்க வந்தாலும், மனம் மற்ற நண்பர்களையும், முக்கியஸ்தர்களையும் நாடும். அவை ஸ்தாபனத்தைச் சேர்ந்தவை.
அன்னை வேறு, ஸ்தாபனம் வேறு.
தொழிலதிபர்களாக இருப்பதால், வசதியானவர்கள் என்பதால், பிரபலமானவர் என்பதால், நெடுநாள் பக்தராதலால், சாதகர் என்பதால், அன்னையை நெருக்கமாக அறிபவர் என்பதால் மனிதர்கட்கு முக்கியத்துவம் வருகிறது. எக்காரணத்தை முன்னிட்டும் மனம் மனிதனை நாடினால், அது தவறு.
மனம் மாற வேண்டும்.
நான் தரிசனத்திற்குப் போனேன். ஓரு நாள் சாப்பாட்டுச் செலவை அனைத்து பக்தருக்கும் ஆகும் செலவை ஏற்றேன், வீட்டுக்கு வந்தவுடன் பெருந் தொகையைக் காணோம். பதறிப் போய் பல மணி பிரார்த்தனை செய்தேன். அன்னை அருளால் கிடைத்தது என்பதை நாம் கேள்விப்படுகிறோம். முக்கியஸ்தரை நாடக் கூடாது என அறிவுக்குப் புரிகிறது, என்றாலும் மனம் அவரை நாடுகிறது. அதை நினைத்துப் பெருமைப்படுகிறது.
அறிவுக்குப் புரிந்தால் மட்டும் போதாது, மனமும் அடங்க வேண்டும்.
மனம் அடங்கும்வரை வேலையுள்ளே இருக்கிறது.
புது வேலையை ஒப்புக்கொண்டு முதல் நாள் பாக்டரிக்குப் போனால், மெயின் கேட் பூட்டியிருக்கிறது. யாருடைய தப்பு, எப்படித் திருத்தலாம் என்பனவெல்லாம் வேறு. உனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறதா? அடுத்தாற்போல் வேலை செய்ய ஆர்வமிருக்கிறதா? என்பதே கேள்வி. வேலையே கசப்பு என்றால் தான் இதுபோல் நடக்கும். வேலை பாக்டரியில் இல்லை. உள்ளே மனதில் வேலையிருக்கிறது. வேலையை வெறுப்பவருக்குக் காரியம் கூடிவர வேண்டுமானால், மனம் ஆர்வமாக வேலையை நாட வேண்டும்.
நான் பெரிய பட்டம் பெற்றுள்ளேன், அடுத்தது Ph.D. தான் பாக்கி. எவரும் என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்கள் எனில், மதிக்காமல் பழகுபவர்க்கு manners அழகாகப் பழகத் தெரியவில்லை என்பது உண்மை. ஓரிடத்தில் மட்டும் உனக்கு மரியாதை இல்லை என்றால், அது மரியாதை இல்லாத இடம். நீ போகும் மற்ற எல்லா இடங்களையும் நினைத்துப் பார். எல்லா இடங்களிலும் மரியாதை இருந்தால், ஓரிடத்தில் இல்லாமலிருப்பதற்கு அவர்கள் மட்டும் காரணம் எனலாம். எல்லா இடத்திலும் மரியாதை எனக்குச் சற்றுக் குறைவாகத்தானிருக்கும் என்பது உண்மையானால், மற்றவர்களை மட்டும் குறை கூறுவது பயன் தாராது.
வேலை உள்ளே இருக்கிறது.
மரியாதை பெறும் தகுதியை மனம் பெற வேண்டும்.
மனம் உயர்ந்து தூய்மையாக வேண்டும்.
வெளியில் மாற்றம் தேடுவது பலன் தாராது.
யோக பாஷையைச் சாதாரண பக்தர்கட்குக் கூற முடியாது. அதன்படி என்னை அனைவரும் மட்டமாகப் பேசுகின்றார்கள், நடத்துகிறார்கள் என்று உண்மையாக நினைத்தால், உன் மனம் பிறரை மட்டமாக நினைக்கிறது என்று பொருள். உனக்கு அது தெரியலாம், தெரியாமல் போகலாம். அதுவே உண்மை. தெரிந்தால், வேலையை அங்கு ஆரம்பிக்க வேண்டும். தெரியாவிட்டால், “எனக்கு இந்த மரியாதைதான் தகுதி” என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.
நியாயம்
ஸ்ரீ அரவிந்தர் நியாயம், பூரண நியாயம் என்று இரண்டைக் குறிப்பிடுகிறார். ஒன்று நாம் செய்த செயலுக்கு நியாயம் பெறுவது. அடுத்தது, நாம் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் சேர்ந்த பொது நியாயம்.
முதல் ராங்க் வந்தேன், பிரின்சிபால் அதை மாற்றி அடுத்தவனுக்குக் கொடுத்துவிட்டார் என்றால் அது அநியாயம். படித்துப் பெற்ற மார்க்குக்குரிய நியாயம் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் படித்ததற்குப் பலனுண்டு. இதைச் சொன்னவர் தமிழ் வித்துவான். அவர் பிற்காலத்தில் வைஸ் சான்ஸலரானார். ஆரம்பத்தில் செய்த காரியங்கள் நியாயம் தரவில்லை. ஆனால் எல்லாக் காரியங்களிலும் செய்த வேலைக்குப், பூரண நியாயமாகத் துணை வேந்தர் பதவி வந்தது.
- வாழ்க்கை ஒருவருக்கு செய்த செயலில் நியாயம் வழங்குகிறது.
- அடுத்தவருக்குப் பூரண நியாயம் வழங்க, தனித்தனிச் செயலில் நியாயம் கிடைப்பதில்லை.
- சிறு நியாயம் இல்லாமல் பெரு நியாயம் பெறுபவர், கீழிருந்து மேலே உயருபவர்.
- சிறு நியாயம் மட்டும் பெறுபவர், அதே நிலையிலிருப்பவர்.
- தனிச் செயல்களில் நியாயம் பெற்றுப் பூரண நியாயம் பெறுபவர் உயர்ந்த இடத்தில் ஆரம்பித்து மேலும் உயருபவர்.
- ஆனால் எல்லோருக்கும் எல்லா விஷயங்களிலும் வாழ்வு நியாயம் வழங்குகிறது.
- சிறுசிறு விஷயத்தில் அநியாயத்தைக் கண்டு பொருமினால், பூரண நியாயம் வருவது தடைப்படும்.
- சிறு விஷயத்தில் அநியாயம் பெற்றவர், உள்ளே போய் வேலையை ஏற்றுக் கொண்டால் அவருக்குப் பூரண நியாயம் உரிய காலத்தில் உண்டு.
பலருக்கு ஒருவர் செய்த பிரார்த்தனை பலிக்கும்பொழுது, அவருடைய விஷயம் ஒன்று நகராவிட்டால், வியாபாரத்தைப் பெருக்க முயன்றபொழுது வியாபாரம் சுருங்கினால்; அன்னை பக்தர்கள் ஆர்வமாக வந்து வேலையை மேற்கொண்டபொழுது திருடு போனால்; வேகமாக முன்னேறிய கம்பெனி தலைகீழாக மாறினால், மையத்தை நடத்துபவர் முக்கிய விஷயத்தில் அன்னையை நம்ப மறுத்தால்; வார்த்தை பலிக்கிறது என்று எவரைக் கருதுகிறாரோ, அவருக்கு வீட்டில் ஒருவரிடம் எதுவும் நடக்காவிட்டால்; ஸ்ரீ அரவிந்தர் ரூமில் அன்னை பவித்திரமாக காட்சியளித்த பின்னரும், மேற்கொண்ட வேலையில் பலனில்லை எனில்; அடியோடு போன முதல் இரண்டு முறை திரும்பி வந்த பிறகும் மனம் அதிருப்தி அடைகிறது எனில்; 20 வருஷமாக கம்பெனி சிறியதாக இருக்கிறதெனில்; தொழில் பெருகிய பின்னரும் மனம் முறையை ஏற்காவிட்டால்; வெளிநாட்டு வரன் வந்தும், பலன் கிடைக்கவில்லை எனில்; ஸ்ரீ அரவிந்தர் ரூமை தரிசனம் செய்தபின் இருந்த வேலை போய்விட்டதெனில்; அற்புதமாகக் குணமாக ஆரம்பித்த நோய் பாதியில் நின்றுவிட்டால்;
உள்ளே வேலை அதிகமாக இருக்கிறது
எனப் பொருள்.
ஒருவர் அடிபட்டுவிட்டார், பையன் பெயிலாகி விட்டான், பெருந்தொகை தொலைந்துவிட்டது போன்ற தவறான செய்தி வரும்பொழுது மனம் பதறுகிறது. அனைவரும் பதட்டப்படுவார்கள். சில சமயங்களில் ஒரு சிலர் அதைக் கேட்டு முகம் மலர்ந்து, சிரித்துவிடுவார்கள். அச்சிரிப்பு வயிற்றிலிருந்து எழும். அது உள்ளவர்கள் negative persons தவறானவர்கள். அவர்களை முன்னுக்கு வர அச்சிரிப்பு விடாது. அச்சிரிப்பு அடுத்த ஜென்மத்தில் தான் மாறும். அன்னையிடம் அப்படிப்பட்டவர் வந்தால் இந்த ஜென்மத்தில் positive persons ஆகத் திருந்தலாம். இவர்கட்கு அது போன்ற மாற்றம் வரும்வரை வாழ்க்கையில் எதுவும் கூடி வராது. உணர்ந்து, மாற பிரார்த்தனை செய்தால் உடனே பலன் தெரியும்.
மாறாதவரை இவர்கட்கு வேலை உள்ளே இருக்கிறது.
உள்ளே என்ன வேலை?
மனம் அடுக்கடுக்காக இருக்கிறது. ஒரு நிலையில் சுத்தம் செய்தால் அந்நிலைக்குரிய பலன் வரும். கோபத்தால் காரியங்கள் கெட்டுப் போகும் பழக்கமுள்ளவர், கோபத்தை அடக்கினால், காரியம் கெட்டுப் போவது நிற்கும். இதுவரை வெளிவந்த கோபம், இனி மனதிலிருக்கும். அது அடுத்த நிலை. மனதில் கோபம் உள்ளவரை சிறு காரியம் தடைபடாது. பெரியவை தடைபடும். மனதில் கோபம் தணிந்த பின், கோபம் ஓர் எண்ணமாக வரும். “இவனைக் கண்டால் ஏற்கனவே பொரிந்துவிடுவேன்” இப்பொழுது சரியில்லாதவன் வருகிறான் என்ற எண்ணம் எழுந்தது என்று அடுத்த நிலையில் கோபம் ஒளிந்திருக்கும். அடுத்த நிலையில் அவ்வெண்ணமும் எழாது, ஆனால் முகம் சுருங்கும். இது நிற்கும் அளவுக்கு முன்னேற்றம் வர பல வருஷங்களாகும். அதுவும் நின்றால் அவர் வந்தால் எனக்கொன்றுமில்லை என்ற நிலை எழும். இது போன்று மேலும் பல கட்டங்கள் தாண்டி,
எவரைக் கண்டால் கோபம் பீறிட்டு வந்ததோ
அவரைக் கண்டால் சந்தோஷம் வரவேண்டும்.
அதுவே உள்ளேயுள்ள வேலை. இதைப் போல் மனத்தைக் கலந்து, அறிவால் ஆராய்ந்து, தூய்மையை உற்பத்தி செய்யும் நிலைகள் அநேகம். ஒவ்வொரு முறை மனம் தன்னிச்சைப்படிப் பேசினால், அறிவு அன்னை கொள்கைகளை முன்னிருத்தி மனத்துள் வேலையை ஏற்பதே உள் வேலை.
பல்வேறு மனநிலைகளை எடுத்து அவையுள்ளவர்க்கு உள்ளே என்ன வேலை எனப் பார்ப்போம்.
- எரிச்சலாக இருக்கிறது, ஏதாவது படம் பார்த்தால் தேவலை போலிருக்கிறது.
சாதாரண மனிதன் வேலையை விரும்பமாட்டான். அவருள் உயர்ந்தவர் தங்கள் தொழிலில் திறமையை வளர்க்க முன்வரமாட்டார்கள். பொது அறிவை உயர்த்தமாட்டார்கள். உபயோகமாக ஒரு காரியம் செய்யத் தோன்றாது. அவர்களுள் தாழ்ந்த மனநிலையுள்ளவர் silly, shabby, shallow personalities, சிறு பிள்ளைத்தனமாக, அர்த்தமற்ற போக்குடையவர்கள். அவர்களுடைய மனநிலை இது. Serious, organised, weighty கருத்தான, முறையான, தீவிரமான மனிதராக அவர்கள் முயல்வதில்லை. அதுவே அவர்கள் செய்ய வேண்டியது, பொழுதைப் போக்க நினைக்கக் கூடாது.
- எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள். தனியாக எப்படியிருப்பது, போர் அடிக்கிறது.
இது பேச்சுத் துணையை நாடும் மனநிலை. இவர்கள் ஆபீசில் உள்ள வேலைகளில் பாக்கியுள்ளவர்களாக இருப்பார்கள். மனவளர்ச்சிக்குரிய புத்தகங்களைப் படிப்பதோ, தம் நிலையை உயர்த்தும் காரியங்களைச் செய்வதோ, பிறர் பயன்பட நடப்பதோ இவர்கட்குத் தோன்றாது. அப்படியிருந்தால் வெறுப்பாக இருக்காது.
- குழந்தைகள் சொல் பேச்சு கேட்கிறதா?
நாம் குழந்தைகட்குச் சாப்பாடு போடுவது, பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர, அவர்களைக் கவனிப்பதோ, அவர்கள் தேவைகளைப் புரிந்து கொள்ள முயல்வதோ, அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்று கண்டு அறிய முயல்வதோ இல்லை. நாம் சொல்வதைக் குழந்தைகள் கேட்க வேண்டும் என்றால் அது அதிகாரம். அன்பெங்கேயுள்ளது? குழந்தைகளைப் புரிந்து கொள்ள முயலாமல், நமக்கு அடங்கியிருக்க வேண்டும் என்பது குழந்தை வளர்ப்பு என்ற கருத்திற்கே மாறுபட்டது. அன்பான பெற்றோர் நமக்குத் தெரியுமானால், அவர்கள் குழந்தைகள் பெற்றோர் சொல்லைத் தட்டவே தட்டா.
- அதிகாரி என்றால் ஒரேடியாக அதிகாரம் செய்கிறார், அறையலாம் போலிருக்கிறது.
வேலையிடும் அதிகாரி, அதிகாரம் செய்யத் தேவையில்லை என்பது உண்மை. இது உலகம் ஏற்கும் பொது உண்மை. மனத்தூய்மையை நாடும் பக்தன், இதே அதிகாரியிடம் தன் வேலைகளில் குறை வைக்காமல், மனத்துள் தானறிந்த குறையில்லாமல் போனால், அவர் அதிகாரம் செய்வதில்லை என்பதைக் காணலாம்.
- யார் யாருக்கோ என்னென்னமோ நடக்கிறது, நமக்கு ஒன்றும் வரவில்லையே.
இது போன்று பேசியவர் ஒருவரை அவர் நண்பர்கள் சூழ்ந்து வேலை செய்பவனுக்கு நடக்கிறது. ஓயாமல் வேலை செய்பவனுக்குத் தவறாமல் காரியம் கூடி விடுகிறது. அவர்களை ஓர் picnic-க்குக் கூப்பிட்டால், வேலையில்லாவிட்டால்தான் வருவார்கள். உனக்கு வேலையில் நினைவில்லை. எல்லா என்டர்டெயின்மெண்ட்டும் முடிந்தபின், வேலைக்கு நேரமிருந்தால் செய்வாய் என்று விளக்கம் அளித்தார்கள்.
வேலை செய்பவன் எதிர்பார்ப்பதில்லை, எதிர்பார்ப்பவன் வேலை செய்வதில்லை.
- நம்மை யார் கண்ணுக்கும் தெரியலை.
பொதுவாக எல்லோருடனும் நல்லபடியாகப் பழகுபவர்கள் இப்படிப் பேசமாட்டார்கள். சிலர் ஆபீசுக்கோ, விசேஷத்திற்கோ வந்தால் முக்கியமானவர்களிடம் மட்டும் பழகிவிட்டு, மற்றவர்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்களை முக்கியமானவர்கள் கவனிப்பதில்லை. மற்றவர்களை இவர்கள் கவனிப்பதில்லை. நாம் சிலரைப் புறக்கணித்தால், உலகம் நம்மைப் புறக்கணிக்கிறது.
- நான் வெகு நாட்களாகச் சொன்னேன், நீங்கள் எடுத்துக் கொள்ளவில்ல.
இப்படிச் சொல்பவர்கள் விஷயம் தெரிந்தவர்களாகவும், அனுபவசாலிகளாகவும் இருப்பார்கள். இருந்தும் ஏன் அடுத்தவர் இவர் பேச்சை நெடுநாளாக ஏற்கவில்லை? இவர் தம் மனத்தைச் சோதனை செய்தால் நான் சொல்ல வேண்டும், என்னால் நடந்தது என்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கும். அது இருக்கும்வரை பிறர் இவர் யோசனையை ஏற்கமாட்டார்கள். யோசனையை மட்டும் சொன்னால், அங்கு “நான்” இல்லாவிட்டால் கேட்பார்கள்.
- இவ்வளவு பெரிய இடம் என்கிறார்கள், கேட்டால் எவரும் பதில் சொல்வதில்லை.
பெரிய இடத்திற்கு வருபவர்கள் பெரிய மனதுடன் வந்தால் கேள்விக்குப் பதில் வரும். பெரிய இடம் பெரிய மனிதனுக்குப் பதில் சொல்லும். பெரிய மனதுள்ளவனுக்குப் பதில் சொல்லும். நமக்கு அது வேண்டும்.
- அதெப்படி நான் விட்டுக் கொடுப்பேன்?
விட்டுக் கொடுப்பது பெருந்தன்மை, அன்னைக்குகந்தது அது.
- இந்தச் செய்தியை மாமாவுக்கு எழுத வேண்டும்.
மாமா சம்பந்தப்பட்ட செய்தியை மாமாவுக்கு எழுதுவது சரி. செய்தியை விட மாமாவுக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக இருந்தால், அது மாமா மீதுள்ள அன்பு. மாமாவுக்குச் சம்பந்தமில்லாத செய்தி, அவரிடம் சொல்லக் கூடாத செய்தியானாலும், மாமா மீதுள்ள ஆசையால் அதை எழுதத் தோன்றும். அப்படி எழுதினால் அந்த வேலை கெடும். வேலை கூடிவரும் நேரம், இதுபோன்ற உந்துதலுக்கு இடம் கொடுத்துவிட்டு ஏன் கூடிவரவில்லை என்பவர் உண்டு. வேலை கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது, தேவையில்லாததை நாம் செய்ததை அறியலாம். தேவையில்லாததைச் செய்ய உந்துதல் உள்ளவர்க்கு வேலை கெடும்.
- பிரார்த்தனை ஒரு லெவலுக்கு மேல் பலிக்கமாட்டேன் என்கிறது.
இது உண்மை. ஆனால் முழு உண்மையன்று. எவருடைய பர்சனாலிட்டிக்கும் ஒரு லெவல் உண்டு. அது திறமை, தெம்பு, குணம், நேர்மை போன்றவற்றின் கலப்பால் ஏற்பட்டது. அதற்குட்பட்ட பிரார்த்தனைகள் தவறாது பலிக்கும். அதற்கு மேற்பட்ட பிரார்த்தனைகளில், முனைந்து செய்யும் பிரார்த்தனை, லெவலுக்கு மேலும் பலிக்கும். அங்குத் தடை வரக் கூடாது.
உதாரணமாக சிறப்பான மாணவன் சிறிய குடும்பத்திருந்து வந்தால் பலர் சிறிய வேலைக்கும், யாரோ ஒருவர் பெரிய வேலைக்கும் போவார்கள். அப்பொழுது பிரார்த்தனை செய்து பலிக்காதவர்கள், எதற்கும் ஓரு லெவல் உண்டல்லவா, என்பார்கள். குடும்பம் சிறியதானால் கிடைப்பது சிறு உத்தியோகம். குடும்பம் பெரியதானால் பெரிய வேலை கிடைக்கும். இது பொது. பெரிய வேலைக்குரிய படிப்பு, திறமையிருந்தபின், அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், இந்தச் சட்டம் செல்லாது. குடும்ப நிலையை மீறி குணமும், திறமையுமிருந்தால், எந்தப் பெரிய வேலையும் கிடைக்கும். அன்னை பக்தர்கள், தங்கள் மனத்தை விசாலப்படுத்தாமல், பொதுச் சட்டம் பேசுவது தேவையில்லை. வேலை மனத்திலிருக்கிறது.
- என்ன செய்தால் வியாபாரம் பெருகும்?
உழைப்பாளிக்கு வியாபாரம் பெருகும். இக்கேள்வியை கேட்கமாட்டான். உழைப்பாளிக்கும் வியாபாரம் பெருகாத நிலையுண்டு. வாரபலன் படிப்பவர்கள், அரசியல் செல்வாக்கால் லைசென்ஸ் பெறுபவர்கள், அதிர்ஷ்டம் எதிர்பார்ப்பவர்கள் இக்கேள்வியைக் கேட்பார்கள். அன்னை பக்தர்கள் உழைப்பாளிகளானால், இக்கேள்வி எழாது. எழும் சந்தர்ப்பமிருந்தால், உழைப்பு, திறமை, மனம் ஆகியவற்றைச் சோதனை செய்து பார்த்தால், அங்குக் குறை கண்டால், வேலை உள்ளேயிருக்கிறது எனப் பொருள்.
- MLAவைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
MLA கையெழுத்துத் தேவையான சர்ட்டிபிகேட்டுகள் பல. இவற்றைப் பெரும்பாலும் சிபார்சால் பெறுவது வழக்கம். அன்பர்களும் அதையே நாடினால், அது சரியில்லை. தேவையான டாக்குமெண்ட்களுடன், அன்னையை முன்னிருத்தி, MLA விடம் சென்றால், அவர் கையெழுத்துப் போடுவார். நாம் அன்னையைத் தவிர மற்றவர்களை நம்புவது சரியில்லை. ஒரு சிலர் அன்னை தானே சிபார்சு மூலம் காரியத்தை முடிக்கிறார்கள் என்பார்கள். அது அவர்கட்கு சரி, பக்திக்கும், நம்பிக்கைக்கும் சரியில்லை.
மனம் சிபார்சிலிருந்து அன்னைக்கு மாறுவது, உள்ளே செய்ய வேண்டிய வேலை.
- எங்கள் ஆபீஸ் லஞ்ச ஊழலால் மலிந்துவிட்டது.
இது பலருடைய நிலை. இதை உலகம் ஏற்று அதற்கேற்ப செயல்படுகிறது. 1950இல் ஜில்லாவில் ஒரே கான்வென்ட் இருந்தபொழுது எல்லோர் வீட்டுக் குழந்தைகளும் உள்ளூர் எலிமெண்டரி பள்ளியில் படித்தனர். அப்பொழுதும் சுமார் 500 குழந்தைகள் அந்த ஒரு கான்வென்டை நாடினர். அவர்களில் வசதியற்ற குடும்பங்களிலிருந்து 50 குழந்தைகள் வந்தன. காலராவும், பெரியம்மையும் பரவலாக இருந்த நாட்களிலும் அசுத்தமான தெருக்களில் அதிகமாகவும், சுத்தமான இடங்களில் குறைவாகவும் அவை தென்பட்டன. அன்று அந்நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். 1960 முதல் 1970 வரை பாக்டரிகளில் வேலை நிறுத்தமும், கல்லூரிகளில் வேலை நிறுத்தமும் பரவலாக இருந்தன. அன்றும் அவற்றால் பாதிக்கப்படாத ஸ்தாபனங்கள் உண்டு. உலகம் லஞ்சத்தை ஏற்றாலும், அன்னை அதிலிருந்து நமக்கு விலக்களிக்கிறார்.
விலக்கைப் பெற மனத்துள் வேலையை ஏற்க வேண்டும்.
- குதர்க்கமாகப் பேசுபவர் போனபின், ‘இவரை மறுத்து நான் இப்படிக் கேட்டால் என்ன செய்வார்?’ என்று பேசுவதுண்டு.
குதர்க்கவாதிகளை மட்டம் தட்டிவிடுவார்கள். அதைப் பலர் விலக்குவார்கள். விலக்கும் அளவுக்குப் பண்புள்ளவர்கள், மனத்தால் அப்பதிலிலிருந்து விலகுவது சிரமம். முதல் நிலையில் ஜெயித்தவர்கள், அடுத்த நிலையில் ஜெயிக்க, வேலையை மேற்கொள்வது என்பது inner work உள் வேலை.
- வேண்டாம் என்பதை செய்துவிட்டு, காரியம் கூடி வரவில்லை, ஏன் என்பவருண்டு?
கிடைக்காத லைசென்ஸ், அட்மிஷன், பர்மிட்டுக்குக் கடைசித் தேதி போன பிறகு விண்ணப்பிப்பவருண்டு. அவர்கள் இதுபோல் பேசுவார்கள். நேரத்தில் காரியத்தை இவர்கள் இதுவரை செய்து பழக்கமில்லாதவர். மனம் அதை ஏற்காது. நேரம் போனால் என்ன பார்ப்போம் என்பார்கள். இது ஒரு மனப் போக்கு. மனம் தன் போக்கை மாற்றிக் கொள்வது உள்ளே சென்று நாம் செய்ய வேண்டிய வேலை.
- இது பெரிய idea, ஜாக்கிரதையாக சொல்லவேண்டும்.
இது நல்ல பழக்கம். நல்ல கருத்தை எடுத்துப் பக்குவமாகப் பேசி பல மணி நேரத்தில் காரியத்தை முடிப்பவர் கெட்டிக்காரர். இவர் அன்னையை ஏற்றவரானால், ஜாக்கிரதையாகச் சொல்ல வேண்டும் என்பதை மாற்றி அன்னையை நம்பிப் பேச வேண்டும் என்றால், நாம் யாரிடம் பேச வேண்டுமோ அவரே முன்வந்து நாம் சொல்ல வேண்டியதைக் கூறுவர். ஜாக்கிரதையாகப் பேசுவது திறமை. நல்ல குணம். அவர்கள் பெரியவர்கள். அவர்கள் அன்னையை ஏற்றவரானால் அவருக்கும் உள்ளே வேலையிருக்கிறது. அதன் பலன் பெரியது, ஆச்சரியமானது.
- சிற்றப்பா வெறுங்கையுடன் வரமாட்டார்.
ஹாஸ்டலில் உள்ள பையனை சிற்றப்பா பார்க்க வரும் பொழுதெல்லாம் பெருந்தொகை கொடுத்துப் போகும் வழக்கம். அடுத்த முறை வரும்பொழுது இயல்பாகப் பையன் மனம் அதை நினைத்தது. இப்பொழுது அன்னையை ஏற்றுக் கொண்டதால் ஏன் நான் எதிர்பார்ப்பதை மாற்றி அன்னையை நினைக்கக்கூடாது என்றான். முயன்றான், பெரு வெற்றி கிட்டியது. முழு வெற்றியன்று. இதுவரை துணிமணி, பீஸ், புத்தகம் போன்றவற்றிற்குப் பெருந்தொகை கொடுத்த சிற்றப்பா, இம்முறை வழக்கத்தைப் போல 2 1/2 மடங்கு கொடுத்தார். பணம் என்ற பலனை மனம் ஏற்கலாம். நடந்ததை அறிந்து அன்னை மீதான நம்பிக்கையின் சிறப்பையும் ஏற்கலாம். எந்த நிலையிலும் அடுத்த நிலைக்குப் போக உள்மனம் வேலையை ஏற்கும்.
- என் பிள்ளைகள் என்னைக் காப்பாற்றமாட்டார்கள்.
இந்த எண்ணத்திற்கும், பிள்ளைகளுடைய குணத்திற்கும் உள்ள சம்பந்தத்தை விட நினைப்பவருடைய தன் நம்பிக்கையின்மையை இது காட்டுகிறது. தன் நம்பிக்கையே இல்லாதவருக்குத் தெய்வநம்பிக்கை எப்படி வரும்? இவர் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, “எனக்கு தன் நம்பிக்கையில்லை” என்பதே. இதைச் செய்தபின் அன்னை பக்தரான இவருக்கு இப்பிரச்னையிருக்காது. மனம் தன்னை நம்பவேண்டும். அதுவே இவருக்குத் தேவையானது.
- இந்த ஆளை நம்ப முடியாது.
தன்னம்பிக்கையில்லாதவருக்கு எழும் எண்ணம் இது. அன்னை பக்தர்கள் அவ்விடத்தில் மனம் மாறினால், தன்னம்பிக்கை பெற்றுவிட்டால், எவருமே நம்ப முடியாத ஆளும் இவர் விஷயத்தில் நம்பிக்கையாக இப்பொழுது நடப்பான். நடந்த நிகழ்ச்சியுண்டு.
- இந்தப் பெரிய மனுஷன் ஏன் இப்பொழுது நம்மைத் தேடுகிறான்?
பெரிய மனிதன் நம்மைத் தேடுவது உண்மையாக இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். அதைவிடப் பெரிய உண்மை ஒன்றுண்டு. இந்தக் கேள்வி அனைவருக்கும் எழாது. நம்மிடம் ஏதோ இவர் எதிர்பார்க்கிறார் என்ற எண்ணம் சிலருக்கு எல்லா சமயங்களிலும் உண்டு. எல்லோரிடமும் உண்டு. அதை அவர் புரிந்து கொண்டால், நாம் நினைப்பது நமக்குத்தான் பொருந்துமே தவிர அப்பெரிய மனிதனின் மனநிலையைக் குறிக்காது என்பது விளங்கும். மேலும் யோசனை செய்தால், இந்த எண்ணம் இவருக்கு பெரிய மனிதனிடம் மட்டும் எழாது, எல்லோர் விஷயங்களிலும் எழும்.
- ஒரு முறையோடு போக வேண்டுமல்லவா?
இதைச் சொல்பவர்கள், அந்த முறை பலிக்காதபொழுது சிந்தித்தால், ஒரு முறை என்று அவர்கள் நினைப்பது தங்கள் முறையேயாகும். என்னைப் பின்பற்று என்பதற்குப் பதிலாக இப்படிப் பேசுகிறார்கள்.
- எல்லோரும் தம்தம் காரியத்தைத்தான் பார்ப்பார்கள்.
சுயநலம் சொல்லும் சொல் இது.
- அரை டஜன் விஷயங்களை செய்வதாகச் சொன்னவர் ஊருக்குப் போய் அனைத்தையும் மறந்தபொழுது, மறந்துவிட்டார்கள் என வருத்தப்படுகிறோம்.
அப்படி நாம் நினைக்கவும் மறுத்தால், அவரால் மறக்க முடியாது.
- பத்து வருஷத்திற்கு முன் போட்ட சண்டையில் இப்படிப் பேசியிருக்கலாம் என இப்பொழுது தோன்றும்.
எதை மறந்தாலும், மனம் நாவினால் சுட்டதை மறக்காது. அதனால் இன்றும் பழைய சண்டை மனதில் உயிரோடு இன்று நடந்தது போலிருக்கும். இதை மறக்க வேண்டும் என்பது சட்டம். அது இயற்கைக்கு முரணானது. இதைவிட உயர்ந்த நல்லது நடந்தால், இது மறந்து போகும். அல்லது அன்று போட்ட சண்டை அறியாமையால் போட்டது என மனம் விளங்கிக் கொண்டால், ஓரளவு மறக்கும். இரண்டையும் விட உயர்ந்த எளிமையான முறை அன்னையை, அன்னை நினைவை நம்மை விட முக்கியமாகக் கருதினால், பழைய நினைவுகள் மறந்தே போகும்.
- வேலை செய்ய மறுக்கும் பையன் செலவுக்குப் பணம் கொடுத்தால், அவன் முழுவதும் கெட்டுவிடுவான்.
இது உண்மை. மேலும் நாம் கொடுக்கும் பணத்தால் அவனுக்குத் தீங்கு செய்வதுபோல், நமக்கும் தீங்கிழைக்க முயல்வான். அதிலிருந்து தப்புவது கடினம். நாமே பிரச்சினையை வளர்ப்பதாகும். இதைக் கடந்த நிலையுண்டு. ‘என் பையனுடைய குணம் என்னுடைய குணம்‘ என்று ஏற்று அப்பணத்தைக் கொடுத்தால், அப்பணம் அவனைத் திருத்தும். அதற்குத் தெளிவும், மனவலிமையுடன் அடக்கமும் வேண்டும்.
- மாமியாரை விடக்கூடாது.
தன் பிடியில் அகப்பட்ட மாமியாரை எளிதில் மருமகள் விடமாட்டாள். தன்னை மட்டும் எதிர்பார்க்கிறாள் என்று தெரிந்தவுடன் சுபாவம் விஸ்வரூபம் எடுக்கும். மாமியார் தன் பிடியிலிருந்தாலும், அதைப் பயன்படுத்தக் கூடாது என மனம் விழையுமானால், மனம் கனிந்து, அன்னைக்குரியதாகும். அங்கு அன்னை ஜனிப்பார்.
28. அடம் பிடிக்கும் குழந்தையைக் கண்டிக்க வேண்டும்.
கண்டிக்காவிட்டால் குழந்தை கெட்டுவிடும். அதே அடம் நம்மிடம் இருப்பதைக் கண்டு கொள்ள அடக்கமும், நல்லெண்ணமும், பரந்த மனப்பான்மையும் வேண்டும். அதை விட முடிவு செய்தால், குழந்தையின் அடம் போன இடம் தெரியாது.
- கேட்பதற்கே நல்லாயில்லையே.
அடுத்த வீட்டு விவகாரத்தை கேட்டு, இதுபோல் சொல்பவர், அடுத்த வீட்டை நினைத்துப் பேசுவதில்லை. தம் வீட்டை நினைத்துப் பேசுகிறார், தம் வீட்டிற்கு இது வந்து விடுமா என்று பயந்து பேசும் பேச்சு இது. நல்லதாக இல்லாத செய்தியைக் கேட்டு இயல்பாக இப்படித்தான் பேசுகிறோம். நமக்கு உள்ளே என்ன வேலையிருக்கிறது?
இதுபோன்ற விஷயம் நம் வீட்டிலில்லாவிட்டால், இது வராது என்பது சட்டம். அதை மனம் ஏற்பது உண்மை sincerity.
- நல்ல சான்ஸை விட்டுவிட்டேன் என்பவர் தமக்கு ஆதாய மனப்பான்மை என்றறிய வேண்டும்.
- நம் சார்பில் கான்ட்ராக்ட் எழுதுபவர், அதில் முக்கியமான புது ஷரத்துப் புகுத்தினால், இது சரியில்லை வேண்டாம் என்பார்.
வேண்டாம் என்றவர் அடுத்த முறை தமக்குக் கான்ட்ராக்ட் எழுதும்பொழுது அதே ஷரத்தைப் பயன்படுத்துவார். முதலில் வேண்டாம் என்று சொன்னது, தமக்குப் புரியவில்லை என்றதாலாகும்.
- என் மகன் தவறி குட்டையில் விழுந்தபொழுது, யாரோ காப்பாற்றினார்கள். அப்பொழுதும் அன்னைக்கு நன்றி கூறவில்லை. இன்றும் அதை நினைத்தால் மனம் நன்றியைக் கருதவில்லை.
நமக்கு நன்றியுணர்வில்லை என்று புரியவேண்டும்.
- சிப்பந்தியை அநியாயமாக வேலை நீக்கம் செய்த அதிகாரியை அதேபோல் வேலை நீக்கம் செய்யும் பொழுது ‘மனிதன் செய்ததை அனுபவிக்கிறான்‘ என்று நினைக்கிறோம்.
- என் மனம் தீமையானது என்று புரிந்த பிறகு, அதை அழிக்க மனம் முன் வருவதில்லை.
தீமை மனத்திற்கு திருப்தியாக இருக்கிறது எனப் பொருள்.
- பிடித்தமான வேலையைச் செய்வதை விட்டு பிடித்தமில்லாத வேலையைச் செய்தால், மனம் உடலில் வளரும், அது நமக்குப் பிடிக்கவில்லை.
அது பிடிக்கவில்லையென்றால் பிறருக்கு அதைச் செய்வோம். நாம் செய்தால் சொல்லமாட்டோம்.
- கணவனை நினைத்தால் சந்தேகம் மட்டும் வருகிறது. மனம் அசிங்கப்படுகிறது.
சந்தேகமும், அசிங்கமும் நினைப்பவர் மனத்திற்குரியது.
- நான் சரியாகத்தானே இருக்கிறேன்.
சரி எது? தப்பு எது? என்ற பாகுபாடில்லை.
- அன்னையை நான் பெற்ற பிறகு விலகிய நண்பர் மீது மனம் நெகிழ்வாகச் செல்கிறது.
அன்னையை விட நட்பு முக்கியம்.
- உதவி பெற்றவர் நன்றி கூறவில்லை என மனம் வருத்தப்படுகிறது.
நமக்கு நன்றியில்லை.
- ‘இவர் பொறுப்பற்றவர், அவர் காரியவாதி‘.
அவை நம் குணங்கள்.
- நான் பிறருக்குப் புத்திமதி சொல்லக் கூடாது.
அப்படி நினைத்து திருப்திபட்டால், மேலும் புத்திமதி சொல்வார்.
- நான் யார்? சொத்து வேண்டாம் என்றேன், எனக்கு நல்லதும் தெரியவில்லை, கெட்டதும் தெரியவில்லை.
வாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதால் ஆத்ம விசாரமில்லை.
எப்படிப் பயன் பெறுவது?
மேற் சொன்னவற்றின் உதவியால், நம் மனத்தை அறிந்து பயன்பட வேண்டுமானால், முதலில் மனதைக் கலந்து, அதற்கு சம்மதப்படுகிறதா என அறியவேண்டும். க்ஷணம் தாமதிக்காமல் மனம் வேண்டாம் என்று கூறும். மனம் வேண்டும் என்று கூறும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது மனத்தை தயார் செய்ய வேண்டும். அது 50 வருஷமாகலாம். ஆர்வமிருந்தால் 5 மாதத்தில் நடக்கலாம். அதன்பின் ஒரு நாள் குறிப்பிட்டு மனத்தில் எழும் அத்தனை எண்ணங்களையும் மேற் சொன்ன கோணத்தில் சோதனை செய்து நம்மை எடை போடவேண்டும்.
எந்த எண்ணம் மாறுகிறதோ அதற்கு Life Response மூலம் பலன் வரும். அது பெரும் பலனாகும். தொடர்ந்த முயற்சி சில நாட்களில் நம் வாழ்வின் சூழலை மாற்றிவிடும்.
நாம் எந்த வாழ்வுக்குக் கட்டுப்பட்டோமோ
அந்த வாழ்வு நமக்குக் கட்டுப்படும்.
வாழ்வு கட்டுப்படுகிறது எனில் அதிர்ஷ்டம் உற்பத்தியாகும்.
இது சம்பந்தமான கருத்துகள் :
- உள்ளே வேலையிருக்கிறது.
- மனம் மாற வேண்டும்.
- அறிவுக்குப் புரிந்தால் அதிர்ஷ்டம் வரும்.
- நான் சரியானால், காரியம் சரியாகும்.
- மரியாதை பக்தனுக்கில்லை.
- எனக்குத் தாங்காது என்று எப்பொழுதும் சொல்லக் கூடாது.
- அஸ்திவாரம் எது என்று பார்?
- என்னால் விட முடியாதது போகவில்லை என்றால் சரியாகுமா?
- குழந்தையைக் குறை கூற முடியாது.
- அன்று தேடிய ஆதாயம், இன்று நஷ்டமாகிறது.
- அவனை மட்டும் எப்படிச் சொல்வது, நானும் அப்படித்தான்.
- எதுவும் மாறலாம், மனிதன் மாறக் கூடாது.
- சிணுங்குவது அழகல்ல.
- கோபம் சரி என்று பேச முடியாது.
- பணமில்லை என்றால் சமாளிக்கலாம், நம்பிக்கையில்லை எனில் முடியாது.
- சட்டத்திற்கு முடிவுண்டு, அருளுக்கில்லை.
- பயப்படுபவனுக்கு பக்தியில்லை.
- அவசரப்படுபவனுக்கு அருளில்லை.
- ரிகார்ட் இல்லை எனில் இலாபம் உயராது.
- பேச்சு உள்ளிருந்து வரவேண்டும்.
- நான் பொய்யே சொல்வதில்லை என்பது பொய்.
- நாம் ரொம்ப சரி என்பது ரொம்ப வேஷம்.
- அடுத்தவர் சரியில்லை என்பவர் அடியோடு சரியில்லை.
- முக்கிய விஷயத்தில் நம்பிக்கையில்லை எனில், நம்பிக்கை அவ்வளவுதான்.
- பல முறை பலித்தது, பலிக்கவில்லை எனில், முறையை நம்புகிறோம்.
- நேற்று பேசியது மறந்துவிட்டால் உணர்ச்சிமயமானவன் எனப் பொருள்.
- பெரிய நல்ல காரியம் கெட்டால், அடிப்படையே கெட்டுப் போகும்.
- வருஷம் 50 ஆனாலும் மனம் போராடும்.
- ஆசையைப் பூர்த்தி செய்யும் வழியை மட்டும் மனம் நாடும்.
- எதைப் படித்தாலும், அதனால் எனக்கென்ன இலாபம் என மனம் கேட்கும்.
- 10 வருஷமாக அன்னை ஒரு முறையும் பலிக்கவில்லை எனில் அவநம்பிக்கை ஆழமாக இருக்கிறது.
- கைத் தவறுதலாக நல்லது நடந்தாலும் பலன் நல்லதே வரும்.
- அன்னையிடம் சொல் என்பது தவறாமல் பலித்தால் நம்பிக்கை ஆழமாக இருக்கிறது.
- சிறு விஷயத்தில் மட்டும் விலக்கு வேண்டும் என்பவர் முழுவதும் விலக்கு.
- உள்ளே போனால் போய்க் கொண்டேயிருக்கலாம்.
இதை எப்படி விட்டுக் கொடுப்பது என்பவர், எதையுமே விட்டுக் கொடுக்கமாட்டார்.