கர்மயோகி = 11

கர்மம், அருள், பேரருள்

அவனன்றி ஓரணுவும் அசையாது. உலகை நடத்துபவன் அவனே. ஒவ்வொரு அணுவும் அவன் ஆணைக்காகக் காத்திருக்கின்றது என்ற உண்மையை நாம் நெடுநாளாக அறிவோம்.

அருளின் செயலை அன்னை விளக்கி, அது செயல்படும் மூன்று நிலைகளைக் குறிப்பிடுகிறார். உலகில் அருள் செயல்படும்பொழுது தனிமனிதன் தன் கர்மத்தின் மூலம் முன்னுக்கு வரும் வகையில் செயல்படுகிறது. அருள் மனிதர்களைக் கட்டிக் காக்கிறது. ஆனால் அவரவர் தங்கள் செயல்கள் மூலம் முன்னேற அனுமதிக்கிறது. அதாவது தாங்கள் செய்ததை தாங்களே அனுபவித்து பின்னர் முன்னேற்றமடைய வேண்டும்.

அன்னையை ஏற்றுக் கொண்வுடன் அவர் அருள் கர்மத்தை அழிக்கிறது. அருள் வாழ்வைப் பொதுவாக தாங்குவதற்குப் பதிலாக அருள் தனி மனிதனின் வாழ்வில் குறிப்பாகச் செயல்படுகிறது. அப்பொழுது கர்மத்தை அழித்த பின் எந்த நிலையை மனிதன் எய்துவானோ அந்நிலையை அவன் அடைகிறான். அதற்குரிய சந்தர்ப்பங்களை அன்னை அவனுக்கு அளிக்கின்றார். அச் சந்தர்ப்பங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி மனிதன் முன்னுக்கு வர இனி முடியும். பேரருள் என்று ஒன்றுண்டு. அது அடுத்த கட்டத்தில் செயல்படுகிறது. அருளின் செயலால் புதிய சந்தர்ப்பங்கள் மூலம் முன்னேறி ஓர் உயர்ந்த நிலைக்கு வந்து அதனால் அதற்குரிய சந்தர்ப்பங்களை அவன் முன் வைத்து அவனது திறமையின் பலனை முதலிலேயே அவனுக்குக் கொடுக்கிறது. இந்நிலையில் மனிதன் அமைதியாக மண்டியிட்டு வந்ததைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் அன்னை. தன் அபிப்பிராயங்கள், சந்தேகங்கள், பிடிவாதங்கள், தன் பழைய மனநிலையெல்லாம் அறவே ஒதுக்கிவிட்டு கொடுத்ததைப் பெறுவதே அவன் கடமை.

வாழ்வில் அருள் பொதுவாகச் செயல்படுகிறது. பூமாதேவியைத் தாங்குகிறது. தனிமனிதன் தன் செயலால் இயங்குகிறான். அதனால் ஏற்படும் கர்மத்தை அவனே அனுபவித்து மீண்டு வருகிறான்.

  • அருள் குறிப்பாக மனிதவாழ்வில் செயல்படும் பொழுது அவனது கர்மம் என்ற விலங்கை அவிழ்த்து, கர்மம் அழிந்த பின் கிடைக்கும் வாய்ப்புகளைக் கொடுத்து அவன் திறமைக்குச் சந்தர்ப்பம் அளிக்கிறது.
  • அருள் கர்மத்தை அனுபவிக்கும் அவசியத்தை அழித்ததைப் போல், பேரருள் திறமைகளைப் பயன்படுத்தி முன்னேறும் அவசியத்தை அழித்து, திறமைகள் பூர்த்தியானபின் கிடைக்கும் நிலைமையையும் அதற்குரிய சந்தர்ப்பங்களையும் மனிதனுக்குக் கொடுக்கிறது.
  • கர்மத்திலிருந்து விடுபட்டு திறமைகளைப் பூர்த்தி செய்ய அருள் வேண்டின் அவர் வாழ்விலிருந்து விலகி, அன்னையை ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும். வாழ்விலிருந்து விலக வாழ்வின் நியதிகளை நம்பாமல் அன்னையின் நியதிகளை நம்பவேண்டும்.
  • தன் திறமைகளால் முடிவில் பெறும் பலனை, முதலிலேயே பெற உதவும் பேரருள் செயல்பட மனம் அமைதியடைந்து சொந்த சந்தேகங்கள், பிடிவாதங்களை விட்டுவிட்டு அன்னை அளிக்கும் முடிவான சந்தர்ப்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • அன்னையை மட்டும் தெய்வமாக ஏற்றுக் கொண்டால், கர்மம் விலகும்.
  • செயலை அர்ப்பணம் செய்து நம்மை விலக்கினால் பேரருள் செயல்படும்.