அன்று நடுநிசியில் சென்னைக்குத் திரும்பிய பால் பிரண்டன் தமது விடுதிக்குள் நுழைந்தார். என்ன ஆச்சரியம்! சற்றும் எதிர்பாராத வகையில், ஏற்கனவே அவருக்கு அறிமுகமாகியிருந்த சுப்பிரமணியம் என்ற சாது அங்கு அவருக்காகக் காத்திருந்தார். பால் பிரண்டனைத் திருவண்ணாமலை ரமணாசிரத்துக்கு அழைத்துச் செல்லவெ அன்று அவர் காத்திருந்தார். ஒரு மாபெரும் சக்தியின் திட்டத்திற்குட்பட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பற்றி மனத்திற்குள் வியந்து கொண்டே படுக்கச் சென்றார் பால் பிரண்டன்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவர் திடீரென்று விழித்துக் கொண்டார். அறையெங்கும் இருள் கப்பியிருந்தது. அவரது நரம்புகளெல்லாம் புடைத்துக் கொண்டன. மின்சாரச் சூழலில் சிக்கியது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. உடனே தலையணைக்கடியிலிருந்த கடிகாரத்தை எடுத்து மணியைப் பார்த்தார். இரண்டே முக்கால் ஆகியிருந்தது. அப்போதுதான் தன்னுடைய கால்மாட்டில் ஒரு பேரொளி பளிச்சிட்டத்தைக் கண்டார் அவர். உடனே எழுந்து உட்கார்ந்து அதையே உற்று நோக்கினார்.
அந்த ஒளிப் பிழம்பில் முன்னதாக அன்று தரிசித்த ஆசாரிய சுவாமிகளின் அதே முகமும் உருவ தோற்றமும் தெரிந்தன. ஆவியுருவாகத் தோன்றவில்லை. நேரில் பார்ப்பது போலவே, மனித உருவத்திலேயே காட்சி தந்தார் சுவாமிகள்.
அவரது திருமேனியைச் சுற்றிலும் கண் கூசும் ஒளி படர்ந்திருந்தது. அந்த ஒளி அறையில் கவிந்திருந்த இருளிலிருந்து சுவாமிகளின் உருவத்தை தனியே பிரித்துக் காட்டியது.
வியப்பு மேலிட்ட பால் பிரண்டனுக்கு வியர்த்துக் கொட்டியது.
நம்ப முடியாத காட்சியாக் இருக்கிறதே. சுவாமிகள் எப்படி இங்கெ வர முடியும்? அவர் செங்கற்பட்டிலல்லவா இருக்கிறார்? உண்மை நிலையைப் பரிசோதிப்பதற்காக கண்களை இறுக மூடிக் கொண்டார் அவர். அப்போதும் சுவாமிகளின் தோற்றம் அவர் கண்களிலிருந்து மறைய வில்லை.
கண்களைத் திறந்து பார்த்த போது, சுவாமிகளின் புன்னகை தவழும் உதடுகள் மெள்ள அசைவது தெரிந்தது.
“அடக்கத்துடனும் எளிமையுடனும் இரு. நீ தேடுவது உனக்குக் கிட்டும். “
சுவாமிகளே நேரில் வந்து பேசினார். பால் பிரண்டனுக்கு அப்படித்தான் தோன்றியது.
அடுத்த கணம் ஒளி உருவம் மறைந்து விட்டது. அந்த அசாதாரணக் காட்சியக் கண்டு மருளவில்லை பால் பிரண்டன். மாறாக மகிழ்ச்சியில் திளைத்தார்.
அதற்குப் பிறகு அவர் தூங்கவேயில்லை.
சாது சுப்பிரமணியத்தையும், பால் பிரண்டனையும் ஏற்றி வந்த வண்டி ரமணாசிரமத்திற்குள் நுழைந்தது. மலையைப் பின்னணித் திரையாகக் கொண்டு, மரங்களின் நிழலில் அமைதியான சூழலில் அமைந்திருந்த அந்த ஆடம்பரமற்ற ஆசிரமம், பால் பிரண்டனை நேசத்தோடு வரவேற்றது. சாது சுப்பிரமணியம் அழைத்துச் செல்ல, மகரிஷி அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்தார் அவர். அங்கு அமர்ந்திருந்த இருபது நபர்கள், உள்ளே வருவது என்றரியும் ஆவலில், வாயிற்புரம் திரும்பிப் பார்த்தனர்.
ஒரு மூலையில், பெஞ்சின் மீது அசையாமல் அமர்ந்திருந்தார் மகரிஷி. சாம்பிராணிப் புகை, அறையில் சூழ்ந்திருக்கிறது. ஊதுபத்தியின் நறுமணம் கம்மென்று வீசுகிறது. அறையில் இருந்த ஒருவரையும் அவர் கவனிப்பதாகத் தோன்றவில்லை. ஜன்னலுக்கு வெளியே தம் பார்வையைச் செலுத்தி, எங்கோ, எதையோ பார்த்துக் கொண்டிருந்தார் அவர். தம் பக்கம் அவரது கவனத்தைத் திருப்பும் நோக்கத்துடன் தாம் கொண்டு வந்திருந்த பழங்களை மகரிஷியின் அருகே வைத்து விட்டு, பின்னாலேயே நடந்து வந்து மகரிஷியின் எதிரில் அமர்ந்தார் பால் பிரண்டன். மகரிஷி தமது பக்கம் திரும்பி விசாரிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால், புதிதாக அந்த அறையினுள் ஒருவர் நுழைந்ததை மகரிஷி கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் லேசாகக் கூட தலையைத் திருப்ப வில்லை. கண்ணின் மணிகள் கூட அசையவில்லை. அவர் கற்சிலையாக அமர்ந்திருந்தார். அந்த உருவத்தை, அந்த அகன்ற நெற்றியை, ஒளி நிறைந்த கண்களை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் பால் பிரண்டன். மகரிஷியின் நீண்ட கைகளையும், , கால்களையும் பார்த்து, இவர் எழுந்து நின்றால் மிக உயரமாக இருப்பார், என்று தமக்குள் எண்ணிக் கொண்டார்.
அந்த அறையில் பேரமைதி குடி கொண்டிருந்தது. ஒரு குண்டூசி விழுந்தால் கூட சப்தம் கேட்கும். சீடர் ஒருவர் பங்கா இழுக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது. பால் பிரண்டன் மகரிஷியின் கண்களஒய்யே பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் திரும்பி ஒரு முறை தம்மைப் பார்க்க மாட்டாரா என்ற கொள்ளை ஏக்கம் அவருக்கு.
அறையில் இருந்த கடிகாரம் ஓடிக் கொண்டிருந்தது. அரை மணியாயிற்று, ஒரு மணியாயிற்று. அங்கு இருந்தவர்கள் அத்தனை பேரும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். மகரிஷியும் பேசாமல் அசையாமல் இருந்தார். அவர் எதிரில் வைக்கப்பட்டிருந்த பழங்கள் அப்படியே இருந்தன. பால் பிரண்டன் மகரிஷியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆழ்ந்த மௌனத்தில் நிலைத்திருந்த மகரிஷி ஒருவர்தான் தற்போது பால் பிரண்டனின் கண்களுக்குத் தெரிந்தார்.
தமக்கு இப்படியோர் அலட்சிய வரவேற்பு கிடைக்கும் என்று பால் பிரண்டன் அங்கு வரும் போது சற்றும் எதிர்பார்க்கவில்லை. எதையோ எதிர்பார்த்து வந்தவருக்கு இந்தச் சூழ்நிலை பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்த மனிதர் தமது பக்தர்களுக்காக இப்படியொரு வேஷம் போடுகிறாரோ, என்று கூட அவர் முதலில் எண்ணினார்.
ஆனால், நேரம் ஆக ஆக மகரிஷி, காந்தமாகத் தம்மை வசீகரித்ததை உணர்ந்தார் பால் பிரண்டன். அவரிடமிருந்து தமது பார்வையை வேறு திசையில் திருப்பவெ முடியவில்லை என்பதை உணர்ந்தார். தம்மை இவர் ஏன் இத்தனை அலட்சியப்படுத்துகிறார் என்று முதலில் புரியாமல் தவித்தவர் அந்த எண்ணத்திலிருந்து மெள்ள மெள்ள விடுபட்டார். தம்மையுமறியாமல் மனத்திற்குள் ஏற்பட்டு வரும் மாற்றத்தை அவரால் உணர முடிந்தது. ரயிலில் வரும் போது, மகரிஷியிடம் கேட்க வேண்டுமென்று அவர் தீர்மானித்து வைத்திருந்த கேள்விகள் அவர் மனத்திலிஉர்ந்து ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின.
தம் மனத்தை வாட்டி வரும் பிரச்னைகளைத் தீர்க்க வெண்டும் என்ற எண்ணம் கூட இப்போது இல்லை. தம் அருகில் அமைதியான ஆறு ஒன்று ஓடுவது போலத் தோன்றியது அவருக்கு. ஆழ்ந்த அமைதி தம்முள் புகுந்து உடலெங்கும் பரவுவது போன்ற சிலிர்ப்பு ஏற்பட்டது. எண்ண அலைகளால் தாக்குண்ட தம் மூளையின் கொதிப்பு சற்ரு அடங்கி, அமைதி பெறுவது போல் உணர்ந்தார்.
இதுவரை தம் மனத்தில் எழுந்த கேள்விகளெல்லாம் அர்த்தமற்றவை போல் தோன்றியது அவருக்கு. நம் புத்தி தேவையற்ர பிரச்சினைகளைக் கிளப்பி, அதைத் தீர்ப்பதாக நினைத்துக் கொண்டு மனத்தை மேலும் குழப்பி, தாம் திண்டாடுவதாக அப்போது அவருக்கு ஒரு புதிய எண்ணம் பளிச்சிட்டது. பகுத்தறிவையே நம்பி வாழும் ஒருவரின் மனத்தின் திடீரென்று இப்படியோர் எண்ணம் தோன்றியது விந்தையிலும் விந்தையே!
இரண்டு மணி நேரம் இப்படியோர் அபூர்வமாக மனநிலையில் அமர்ந்திருந்தார் பால் பிரண்டன். மனத்தில் உருவாகியிருந்த பழைய சந்தேகங்களெல்லாம் தவிடு பொடியாகி விட்டிருந்தன. புதிய சந்தேகம் ஒன்ரு மெள்ள தை தூக்கியது.
“மலர் செடியிலிருந்தவாறே எங்கும் நறுமணத்தைப் பரப்புவது போல் அமர்ந்த இடத்திலிருந்தே மகரிஷி ஆத்ம சக்தியை உலகெங்கும் பரப்புகிறாரோ?”
பால் பிரண்டனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. நான் வந்திருப்பதைப் பற்றி அக்கறை செலுத்தவேயில்லை. என் பக்கம் கூடதிரும்பிப் பார்க்க வில்லை. அப்படி இருக்கும் போது அவர் எப்படி எல்லலுற்ற என் மனத்திற்கு அமைதியைத் தேடித் தந்தார்? சந்தெகமில்லை. மகரிஷியின் ஆத்மாவிலிருந்து புறப்பட்ட கதிரியக்க அணுக்கள் என்னுள் புகுந்து இந்த மாபெரும் மாற்றத்தைத் தோற்றுவித்திருக்கின்றன என்று அவர் தமக்குள் எண்ணிக் கொண்டார்.
சலனமற்ற சாந்தியெனும் தெளிந்த நீரோடையை அருகிலிருந்த யாரோ ஒருவர் கலக்கினார்.
“மகரிஷியிடம் நீங்கல் கேள்வியொன்றும் கேட்கவில்லையா?”
அன்பரின் கேள்வி பால் பிரண்டனை நினைவுலகிற்கு மீட்டு வந்தது.
“கேள்வியா? உண்மைதான். நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால் தற்போது சந்தேகங்களற்ற பெரமைதியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். என் ஆத்மா என்ற கப்பல், அமைதியான கடலில் தன் பேரின்பப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறது. அதை உலக விவகாரம் என்ற துறைமுகத்திற்கு மீண்டும் ஏன் அழைத்து வருகிறீர்கள்? அவர் உள்ளத்தில் இப்படியொரு கேள்வியெழுந்தது. ஆனால், அதை அவர் அந்த நபரிடம் கேட்கவில்லை.
அன்பரின் பேச்சு அறையில் நிலவிய அமைதியைக் கலைக்கவே, தியானம் முடிந்து ஒவ்வொருவராக எழுந்து செல்லத் தொடங்கினர். எங்கும் பேச்சரவம் கேட்டது. என்ன ஆச்சரியம்! மகரிஷியின் இமைகள் கூட அசைந்தன. அவர் தலையும் லேசாக அசைந்தது. அவர் தமது முகத்தை மெள்ளத் திருப்பினார். மகரிஷியின் பார்வை தம் மீது படியாதா என்ற ஆர்வத்தில் பால் பிரண்டன் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். மகரிஷியின் தலை சற்று திரும்பியது. அவர் பார்வை படர்ந்த எல்லைக்குள் பால் பிரண்டனின் முகம் தெரியவே, மகரிஷியின் அருள் நோக்கு அவர் மீது படிந்தது. ஆயிரம் நிலவுகளின் தண்ணொளியில் மூழ்கியெழுந்த உணர்வு பெற்றார் பால் பிரண்டன். அவர் உள்ளமும், உடலும் குளிர்ந்தன.
அன்பர் பால் பிரண்டனிடம், ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்று மீண்டும் கூறினார்.
பால் பிரண்டன் மகரிஷியை மீண்டும் பார்த்தார். எல்லையற்ற மனச்சாந்தியை அனுபவித்த உனக்கு இன்னுமா சந்தேகங்கள் இருக்கிறது என்று மகரிஷி கேட்பது போல் தோன்றுகிறது அவருக்கு. அன்பரைப் பார்த்து, “இப்போது எதுவுமே கேட்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. பிறகு பார்க்கலாம்” என்று கூறி விட்டு அங்கிருந்து எழுந்து விட்டார் பால் பிரண்டன்.