சத்ய சாய் பாபா – 19

19. “காமம் அகற்றிய தூயன் அவன்

சித்தத்துக்கு மருத்துவம் செய்வதில் ஸ்வாமிக்குள்ள நுண்ணிய பொறுப்பில் எத்தனை சிரமம் இருக்கிறது? பலாத்காரமாக ஒருவரது சித்தத்தை மாற்றுவது தவறு என்கிறார். ஆனால் மக்களை அவர்கள் வழியிலேயே ஸ்வயேச்சையாக விட்டாலோ அனர்த்தமேயாகிறது. ஸ்வயேச்சையாகவே ஸ்வாமியிடம் சித்தக் கோளாறுகளைத் தீர்த்துக் கொள்ள ஒப்பும்படிச் செய்வதற்கு அவர் எவ்வளவு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது? எவ்வளவு விட்டுப்பிடிக்க வேண்டியிருக்கிறது? “பெரிதாக ஸ்வாமி, ஸ்வாமி என்கிறீர்களே! உடம்பு சரி செய்வது, ஆபத்திலிருந்து காப்பது ஆகியவெல்லாம் எத்தனையோ ஸித்தர்களும்தான் செய்கிறார்கள். உள்ளத்தை மாற்றி அப்படியே உயர்த்தினால்தான் ஸித்திகளுக்கு மேம்பட்ட ஸ்வாமித்வம் இருப்பதாக ஆகும். உடற்பிணிகளைத் தீர்க்கும் அளவுக்கு மனோவேகங்களை உங்கள் ஸ்வாமி நீக்குவதாகத் தெரியவில்லையே!” என்கிறவர்கள், இந்த அம்சத்தில் உள்ள ஸ்வேச்சா ஸ்வதந்திரத்தைக் கவனிக்காமல் தவறு செய்கிறார்கள்.

ஒரேயடியாக மனோவேகங்களை மாற்றாவிடினும் ஓரளவுக்காவது நிச்சயம் அத்தனை ஸ்வாமி பக்தர்களையும் அதாவது பகட்டு பக்தி இல்லாமல், எளிமையோடு நிஜபக்தி செய்யும் எல்லோரையும் முன்னிருந்த மனோநிலையிலிருந்து அவர் உயர்த்தி வருகிறாரென்பதில் ஐயமில்லை.

***

னோவேகங்களில் மகா வலிமை பொருந்தியது காமம். ஸ்ருஷ்டி லீலைக்காகவே ஈச்வர நிர்மிதமாக அமைந்த அது, தனது அளவை மீறி மானுட ஜீவனை இழுக்கிறது. அதை வேத தர்ம சாஸ்திராதிகள் அடியோடு அழிக்கச் சொல்லாமல்கிருஹஸ்த தர்மம்என்ற அளவைக்குள் ஒழுங்கு செய்து தந்திருக்கின்றன. உரிய காலத்தில் கிருஹஸ்த தர்மமாக அதை அமைக்காவிட்டால் அது அதர்மமாகவே படரும் என்றும் கருதுகின்றன. பெரும்பாலோருக்கு இப்படிச் செய்தே, இதிலிருந்து மேநிலைக்குப் பழுக்கும்படித்தான் சாஸ்திரம் வழிகாட்டுகிறது. இதை அநுஸரித்துத்தான் நித்ய கல்யாணரான ஸ்வாமியும் நித்யம் ஒரு கல்யாணம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார், தமது ஆஸ்தானத்திலேயே. அடியார் குடும்பப் பிள்ளை, பெண்களுக்கு அவர்களது பெற்றோரை விடக் கவலையோடு, ஊக்கத்தோடு வதூ வரர்கள் தேடிக் கொடுத்துத் திருமணம் செய்விக்கிறார். அதை அடுத்துக் குழந்தை, குட்டி பிறப்பதிலும் பழங்காலப் பாட்டன்மார், பாட்டிமார் காட்டிய அக்கறையைத் தெரிவிக்கிறார்.

இதே போழ்தில் இன்னொன்றும் கவனிக்க வேண்டும். கேளிக்கைகளிலேயே பொழுதைப் போக்கக் கூடிய ஏராளமான இளம் தம்பதிகளை பிராம்ம முஹூர்த்தத்திலேயே எழுந்திருந்து ஓம்கார, ஸுப்ரபாத, நகர ஸங்கீர்த்தனங்களைச் செய்ய வைக்கிறார். உல்லாஸமாகத் திரியத் தோன்றுகிற மாலைகளில் பஜனைச் சோலையில் உலவ வைக்கிறார். இங்குதான் மனோ வேகத்தை அறவே அழிக்காவிடினும் எப்படி அறத்தே அளவைப்படுத்துகிறாரென்பதைக் காண்கிறோம்.

ஸ்வாமியுடைய பிரம்மசர்யத்தின் பாவன சக்திக்கு ஓர் அழுத்தமான எடுத்துக்காட்டு: அவர் நடத்தும் ஸம்மர் கோர்ஸ்களில் ஆண், பெண் இருபால் மாணாக்கரும் நூற்றுக்கணக்கில் பயிற்சி பெறுகின்றனர். இருசாராரும் நெருங்காமல் ஸ்வாமி போட்டுள்ள நெருப்பு வேலியை அவர்கள் பூர்ணமாக மதித்து நடப்பது இந்த நீண்ட முகாம்களில் அஸம்பாவிதமே நேராதிருப்பது அவரது உள்தூய்மையின் ஆற்றலால்தான். இந்நாள் இளவட்டம் உள்ள பயங்கரப்பெர்மிஸிவ்போக்கில், பொதுவாகவே ஸாயிக் கல்லூரிகளின் மாணவ, மாணவியரிடம் மாத்திரம் காண்கிற அதிசயக் கட்டுப்பாடு அவரது ஜிதேந்திரிய சக்தியின் பிரதிபலிப்பன்றி வேறில்லை. ஸாயி ஸ்தாபனங்களில் மஹிலா விபாக் என்ற மாதர் பகுதி நாள்தோறும் விருத்தியாகி வருகிறது; பால விகாஸ் குருக்களும் பெண்டிர்தான். ஆயினும் இழையளவேனும் வதந்தி ஏதும் கேள்விப்படுகிறோமா? எல்லாம் இவற்றின் மூல புருஷரின் பாவன மஹிமை!

***

ங்கே ஒரு முக்யமான விஷயம் சொல்ல வேணும். ஸ்வாமியின் நடத்தை பற்றியே ஏக துஷ்பிரசாரமாகியிருப்பதை நாம் மறைப்பதற்கில்லை. ‘ஆதார பூர்வமான சொந்த அனுபவம்என்று சொல்லிக்கொண்டு தாங்களே அவரால் இவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சிலர் பேசியும் எழுதியும் இருப்பதை விற்பனையே குறியாயுள்ள பத்திரிகைகள் டமாரம் போட்டிருப்பதால் பலருக்கு குறிப்பாக மாதர் குலத்தவருக்கு ஏன், உள்ளூர ஸாயி பக்தரில் சிலருக்கே பயங்கர ஸந்தேஹமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளபோது, இவ்விஷயத்தைக் கட்டுப் புண்ணாக மறைத்து வைத்து ஸெப்டிக் ஆக விடுவானேன்? ஸ்வாமி குறித்த இக்குற்றச்சாட்டைக் கேட்டும், படித்தும் பைத்தியம் பிடிக்கிற அளவுக்குப் பதறிப் பரிதபித்த அடியார்களிடம் நூலாசிரியருக்குப் பரிசயமுண்டு. எனவே தாமறிந்த அளவில் இது பற்றித் தெளிவு தரவேண்டியது ஆசிரியர் கடமையாகிறது.

மேலேதுஷ்பிரசாரம்என்றே பதப்பிரயோகம் செய்து விட்டதால், ஸ்வாமியை நடத்தைத் தவறுள்ளவராகச் சொல்வது பொய்யும் புனைந்துரையுமே என்பதுதான் முடிவு என உணரலாம். லோகம் காணா மஹா காருண்யமூர்த்தியின் சரித்ரம் வேறெப்படி இருக்க முடியும்? எங்கேனும் ஓர் அழுக்குக் குணத்தவர் மூலம் இப்பேர்ப்பட்ட அருள் வெள்ளம், தியாக ஸிந்து பாய இயலுமா? பல ஸாதகர்களுக்கு (இவர்களில் ஒரு பங்கினர் பிரம்மசர்ய ஸித்திக்காகவே ஸ்வாமியை அடுத்தவர்கள்) ஸ்வாமியின் தர்சனத்திலேயே ஒரு திவ்யத் தாயின், தெய்வக் குழந்தையின் நிர்மலம் தம்முட் புகுந்து சித்த சுத்தி தருவது தெரிகிறது. இவ்வனுபவமே அவரது புனிதத்துக்கு அசைக்கவொண்ணா அத்தாட்சி. பொதுவாகவே ஸாயி பக்தர்களான மணமாகாத யுவயுவதியர் ஏனைய விடலையரைப் போல் சித்த விகாரங்களுக்கு அதிகம் ஆளாகாததையும்; கிருஹஸ்த பக்தர்களும் மற்றோரைவிட கௌரவக் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வதையும்; மேலே கண்டாற்போல, பல்கிப் பரவிய ஸாயி நிறுவனங்களில் ஒப்பிலாததோர் ஒழுக்கநெறி ஒளிர்வதையும் கவனிக்கும்போது, இதற்கெல்லாம் மூல புருஷனைப் பற்றி நடத்தைப் பிசகு கூறுவது, ஒன்று பைத்தியக்காரத்தனம், அல்லது படுபாதகத்தனம் என்று தெளியலாம்.

எனவே, ஸ்வாமியிடம் வந்துவிட்டு, அவரால் (ஓரளவேனும்) சுத்திகரிக்கப்பட்ட 99.999… சதவிகிதத்தனருக்கு மாறாக, அவரால் தகாத முறையில் நடத்தப்பட்டதாகசொந்த அனுபவம்சொல்கிற 0.001 விழுக்காட்டினர் உண்மைக்கு விரோதமாக துஷ்பிரசாரமே செய்கிறார்கள் என்பதில் பக்தர்கள் சற்றும் ஐயுற வேண்டா.

இந்த துஷ்பிரசாரகர்களில் நாலு வகையினரைக் காண்கிறேன். ஒன்று தாங்கள் நீச எண்ணத்துடன் ஸ்வாமியிடம் சென்று, அவர் அதனை நிறைவேற்றாமல் தங்களைச் சாட, இதில் ஏற்பட்ட ஆத்திரத்தாலேயே அவரைக் குற்றவாளியாக்குகிறவர்கள். இரண்டு வேறுவிதங்களில் ஸ்வாமியிடம் த்வேஷம் கொண்டவர்கள். ஒருவருக்கு இழைக்கக்கூடிய மிகப் பெரிய ஊறு அவரது நடத்தை பற்றி அபாண்டம் கற்பிப்பதே என்பதால் இவர்கள் இத்திசையில் திரும்பியிருக்கிறார்கள். மூன்று ஸ்வாமியின் விரோதிகள் காட்டும் கொழுத்த திரவிய லாபத்துக்காக அவரை விட்டுச் சென்று அவர் மீது தோஷாரோபணம் செய்யும் ஜூடாஸ்கள். (இயேசுவுக்கு ஒரு ஜூடாஸ்; தமக்கோ பல ஜூடாஸ்கள் என்று ஸ்வாமியே சொன்னதுண்டு. இயேசுவின் உடலுக்கு மட்டுமே ஊறு தோன்றக் காரணமாயிருந்த ஆதி ஜூடாஸை நல்லவனாக்கி விட்டனர் நம் நவகால ஜூடாஸ்கள், ஸ்வாமியின் நடத்தைக்கே கள்ளம் கற்பிப்பதால்! ஸ்வய லாப நோக்குக் கொண்ட பதிப்பகங்களும், பத்திரிகைகளும் இவர்களது துவேஷப் பிரசாரத்துக்கும் திரவிய லாபத்துக்கும் உதவி புரிந்து, பிராபல்ய லாபமும் வாங்கித் ருகின்றன!) ஸ்வாமி மட்டுமின்றி, பிற நாடுகளிலெல்லாம் இன்று ஹிந்து தத்வங்கள் பரவுவதற்குக் காரணமாயுள்ள எல்லா இந்திய ஸாதுக்களிடமுமே தீராக் காழ்ப்புக் கொண்ட பிற மதஸ்தர்கள் தங்களது செல்வ பலத்தால் இந்த ஜூடாஸ் இன ஸ்ருஷ்டியை விருத்தி செய்து வருகிறார்கள் என்று ஓர் அழுத்தமான அநுமானம் உள்ளது. நான்கு பூர்வ கர்மாவினாலோ, குண்டலிநீ முதலான ஸாதனைகளில் ஏற்பட்ட கோளாற்றினாலோ, நாயகநாயிகா திவ்ய பாவம் குறித்த சிந்தனையின் விபரீத பரிணாமத்தாலோ, உள்ளூறிய அதீத பாலுணர்வாலோ தமது உள்மனத்தின் எண்ணங்களையே யதார்த்தத்தில் வெளிப்பட நடந்ததாக மயக்கமுற்று, ஸ்வாமி தங்களிடம் சிருங்காரமாக நடந்து கொண்டதாக வாஸ்தவமாகவே பிரமை கொண்டுள்ள பலஹீனர்கள். எதிர்ப்புச் சக்திகள் குறிப்பாக இவர்களையும் பணத்தின் மூலம் வசியப்படுத்திக் கொண்டு துஷ்பிரசாரகர்களாக்குகின்றன.

இந்தப் பிரசாரத்தில் நாம் கலங்கக்கூடாது. அதே போதில் எதிர்ப்பாளரிடம் விரோதம் பாராட்டி நம்மை வீணடித்துக் கொள்ளவும் கூடாது. பொல்லாத காமத்தை மனிதனுள் வைத்ததற்குக் கழுவாயாகவே பராசக்தி இப்படி அபவாதத்துக்கு ஆளாகுமோ என்னவோ? புனித புனிதமான ஜானகி அபாண்டத்துக்கு ஆட்படவில்லையா? தூயதில் தூயனான கண்ணன் காமுகனாகக் கண்டனமுறவில்லையா? இதுவும் லீலா நாடக ஆசிரியரே எழுதி வைத்து, இயக்குவதுதானே?

ஸ்வாமியை அடுத்ததிலிருந்து தன் முயற்சி இன்றியும், தாங்கள் தீவிரமாக விரும்பாமலேயும் இயல்பாக தாம்பத்திய ருசி குறைந்து வருவதாகப் பல ஸஹோதரஸஹோதரிகள் என்னிடம் சொல்லியதுண்டு. ஸாதாரணமாக இவ்விஷயமாக எவரும் பேச மாட்டார்கள். ஆயினும் ஸ்வாமியின் அதீத பிரம்மசர்ய சக்தியைப் பற்றி நான் உங்களுக்கெல்லாம் சொல்ல வேண்டுமென்பதற்காகவே போலும், சிலர் இவ்விஷயத்தில் தாங்கள் பெற்றுவரும் சுத்திகரிப்பைக் குறிப்பிட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.

அதிசயமாக இன்னோர் உண்மையையும் இனியர் எனக்கு ஐயம் திரிபற உணர்வித்திருக்கிறார். ‘உடல் நசையே கலவாத தெய்வக் காதல் என்ற ஒன்று உண்டு. அதை விளக்கிக் கொள்வது மொழியுருவில் பௌதிகக் காதலாக இருந்தாலும் உண்மையில் அது சொக்கப் பொன்னையும் விடச் சுத்தமான ஆத்மானுபவமேயாகும். இதைத்தான் மதுர பாவம் என்றும், நாயிகா பாவம் என்றும் மஹோன்னதமாக உயர்த்திச் சொல்லியிருப்பதுஎன்று பன்முறை படித்திருக்கிறோம். படித்ததை அநுபவமாக்கித் தருகிறார், பிரசாந்தனே பிரேம காந்தனுமாகி. கோபியர்க்கும், கோதைக்கும், மீராவுக்கும், நம்மாழ்வாருக்கும். மாணிக்க வாசகருக்கும், தெரஸாவுக்கும், ஜலாலுத்தீன் ரூமிக்கும்தான் இந்தத் தூயதிலும் தூயதான திவ்யக் காதல் ஏற்படுமென்பதில்லை; ஸாமானியரான நமக்கும் ஏற்படும் என்று காட்டுகிறார். ‘அவனே ஏக புருஷன்; மற்ற அனைவரும், ஆடவர் உட்பட எல்லோரும் அவனை அன்புக்கிட வேண்டிய பெண்கள்தான்என்று மீரா சொன்னதை அநேகர் விஷயத்தில் மெய்யாக்கிக் காட்டுகிறார். ஒரு தரம் வெகு அழகாகச் சொன்னார். “இந்த லோகம் ஒரு டிராமா என்று சொன்னால் மட்டும் போதாது. அது மகளிர் கல்லூரி நாடகம் பெண்கள் மாத்திரமே நடிக்கும் டிராமா என்றும் சொல்ல வேண்டும். பெண்களே ஆண் வேஷமும் போட்டுக் கொள்கிறார்களே, அப்படிப்பட்ட டிராமாஎன்றார். (முடிவிலோ அத்தனை பெண்களும் ஏக புருஷனின் வேஷந்தான்!)

***

த்தனை பெரிய மஹானாயினும் அவர் தம்மை அடுத்தவர்களில் எத்தனை பேரின் காம வேகத்தை அடியோடு துடைத்திருக்கிறார் என்று பார்த்தால்.

யோசித்து யோசித்து எண்ணும்படிதான் இருக்கும். ஓரளவு சுத்தர்களை மேலும் சுத்தப்படுத்தியிருக்கலாம். ஆனால் ஆழ்ந்த வேகம் கொண்டோரை அடியோடு தூய்மைப்படுத்துவதென்பது அரிதிலும் அரிதாகவே இருக்கும். காம விகாரத்தை ஓரளவு மட்டுமின்றி அடியோடேயே காய்ந்த விரிசடைக் கடவுளாகவும் நம் ஸ்வாமி சிலர் விஷயத்தில் இருந்திருக்கிறார். வெகு சிலர்தான். என்றாலும் இதுவே போதும் அவரது ஸ்வாமித்வத்தை நிலைநாட்ட. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறையே பூப்பதால் குறிஞ்சியைப் பயனில்லாதது என்பார்களா?

ஸ்வாமி புஷ்பித்த குறிஞ்சிகளில் நம் கண்ணுக்குப்படும் ஒன்றிரண்டு:

சில ஆண்டுகளுக்கு முன் பிரசாந்தி நிலையத்துக்குச் சென்றவர்கள் கூர்த்த முக்கோண தாடியுடன் குண்டுக் கட்டையாக இருந்த ஒரு குட்டையான அமெரிக்க இளைஞரைக் கவனித்திருக்கலாம். இவர் குறிப்பாகத் தம்மைப் பிடித்தாட்டிய காமப் பிசாசை ஸாயி மாந்திரீகத்தில் பஜனை வேப்பிலை கொண்டு விரட்டிக் கொள்ளத்தான் வந்திருந்தார்.

இவர் மண்டைக்குள்ளிருந்து ஒன்றல்ல, பல பிசாசுகள் கிளம்பி, “பெண்களைப் பிடி, துன்புறுத்து, இன்புறுஎன்று ஓயாமல் கத்துவதுபோல் இருக்குமாம்!

பல நாட்கள் பாபாவின் ஸந்நிதானத்தில் இருந்ததில், தன்னால் நிதானத்துக்கு வந்தார். அதீதப் பாலுணர்வு அன்னையின் கடாக்ஷப் பால் உணவில் சமனமாகி, சமனமாகி, இறுதியில் பொதுவாக அனைவருக்குமுள்ள வேகம்கூட இல்லாமல் பிசு பிசுத்துப் போயிற்று. “உள்ளுக்குள்ளே நான் கழுவித் தேய்க்கப்பட்டு க்ளீனாகி விட்டேன். பைசாசத்திலிருந்து க்யூராகி விட்டேன்என்று அழுத்திச் சொல்லுமளவுக்குப் பிரபு பிரவஹித்து விட்டார் பிரம்மசரிய சக்தியை, சுத்தியை!

***

ஸுப்பராயன் மாடியில் சயனித்திருந்த ஸ்வாமியின் திவ்ய சரணங்களை அமுக்கிக் கொண்டிருந்தார். (இத்தனை அணுக்கமுள்ளவராக ஸுப்பராயன் என்று எவரும் இருப்பதாகத் தெரியவில்லையே என்று யோசிக்க வேண்டாம். ஸ்வாமி சயனகோலத்தில் இருந்ததால் ஆதிசேஷன் நினைவு வந்தது. முன்னமே சேஷாத்ரி, வாஸுகிநாதன் என்றெல்லாம் பெயர்களைப் புனைந்து விட்டதால் இப்போது இந்த அடியாருக்கு ஸுப்பராயன் என்று பெயர் கொடுக்கத் தோன்றியது!)

அடிகளைப் பிடித்துக் கொண்டிருந்த அடியாருக்குஇதென்ன விபரீதம், அஸங்கியம், அவமானம்! தாங்க முடியாமல் ஏன் இந்த உணர்ச்சி குபீரெனப் பொங்கி வந்தது? வெளியடி, உள்ளடி எல்லாவற்றுக்கும் காப்பாக எந்தத் திருவடிகளை வந்து பிடித்தாரோ அவற்றைப் பிடிக்கும்போதே இப்படி உள்ளத்தில் ஒரு விகாரம் பூதாகாரமாக எழும்புவதா?

கண்ணை மூடிக்கொண்டிருந்த ஸ்வாமி விழிக்க, அவரது பார்வை அடியார் மீது விழுந்தது. அமிருத கடாக்ஷமா? இல்லை. அக்னி வர்ஷமாகச் சுட்டது!

ஸுப்பராயனின் பிடியிலிருந்து காலை வெடுக்கென்று இழுத்துக்கொண்ட ஸ்வாமி, “சை!” என்றார்.

அந்த ஒரு சிறிய சப்தத்தில் சினம் ஸப்த ஸமுத்ரமாகக் கொந்தளித்தது.

சொல்லிமுடியா துக்கத்தோடு, வெட்கத்தோடு மாடியிலிருந்து இறங்கி ஓடினார் ஸுப்பராயன். கீழ் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே அவர் வரவிருந்த சமயத்தில் தோளில் திண்ணென, தண்ணெனப் படிந்தது ஒரு கரம். சொல்லவும் வேண்டுமா? வெஸுவியஸாக எரிபுகை கக்கிய அதே ஸ்வாமிதான் டார்ஜீலிங்காக ஜிலீரென்று நின்றார். குளிர்ந்த இரு கர கமலங்களையும் ஸுப்பராயன் சிரத்தில் அழுந்த வைத்து, கனிவிலும் கனிவாக, “க்ஷேமமா இரு அம்மாஎன்றார்.

நீராளமாக உருகி வெளிவந்தார் அடியார்.

நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் போங்கள், அந்த நொடியிலிருந்து ரதிஸுக நெடி என்னைவிட்டு அடியோடு போய்விட்டதுஎன்று கண் பனிக்கச் சொல்கிறார் ஸுப்பராயன்.

இவருக்கு ஸெக்ஸ் வீக்னெஸ் கூடுதலாகவே இருந்ததாம். இது பற்றி முன் ஒருகால் பகவானிடம் விஞ்ஞாபித்துக் கொண்டாராம். “அந்தஃபீலிங்வரச்சே என்னை நினைச்சுக்கோப்பா!” என்றாராம் ஸ்வாமி. வெறுமே நினைத்துக்கொள்ளச் சொன்னார் அபராதி என்ற உணர்வில் மன்னிப்புக் கோரும் முறையில் அல்ல. இது ஈச்வர நிர்மிதமான இயற்கை வேகம் என்பதை எத்தனை அழகாக ஒப்பியிருக்கிறார், பாருங்கள்! ஸுப்பராயனும் அதுபோல நினைக்கலானார். ஒவ்வொரு சமயமும் வெறியால் எழும் அலை அமுங்கி விழுந்ததாம். ஆனால் ஒரேயடியாக அமுங்காமல் மறுபடி தலைதூக்குவதும், விழுவதுமாகவே இருந்ததாம். இன்று ஸ்வாமியே கட்டியை ஒரேயடியாகப் பழுக்க வைத்து, அதற்குச் சூடு போட்டு, அப்புறம் அஞ்ஜனம் பூசி முற்றிலும் குணப்படுத்திவிட்டார். அவரது அக்னிப் பார்வையில் இவருக்கு உள்ளேயிருந்த காமனைத்தான் பஸ்மமாக்கியிருக்கிறார்!

***

த்ய ஸாயியை அடுத்த அந்த டச்சுப் பெண்மணியின் அசட்டுத்தனமோ, போதாத காலமோ, அல்லது ஸ்வாமியின் பெருமை பிற்பாடு தெரியவேண்டுமென்றோதானோ, அவள் வேறொரு யோகியிடம் போய்ப் பார்க்கலாமே என்று எண்ணினாள். இப்படிப்பட்டவர்களையோகிஎன்றெழுதவே கை கூசத்தான் செய்கிறது. என் செய்யலாம்? ராவண, சூரபத்மாதியரும் தபோ பலம் பெற்றிருந்தது போல இவர்களும் ஏதோ ஸாதனை செய்து சில ஸித்திகளைப் பெற்றிருக்கிறார்களே! இப்படிப்பட்ட ஒருவரிடம் போய்ச் சேர்ந்தாள் டச்சு மாது. புத்தர் பெருமானை நினைவூட்டும் அவரது வெளித்தோற்றத்தைப் பார்த்தே அவரிடம் பக்தி கொண்டாளாம்.

தம்முடைய யோகத்தில் அவளைப் பயிற்றுவிப்பதற்குப் பூர்வாங்கமாக அவளது சரீரத்தைச் சோதிக்க வேண்டும் என்று சொன்ன யோகி அவளை ஒரு குறிப்பிட்ட அறைக்குள் சென்று இயற்கை படைத்தபடி அமர்ந்திருக்குமாறு சொன்னார்.

மூலாதாராதி சக்ரங்களில் குண்டலினி சக்தியின் வியாப்தியைக் கணிப்பதற்கு அவயவ சோதனை செய்து அவற்றின் நாடிகளையும், சுரப்பிகளையும் சரி செய்வதுண்டுதான். இப்படித்தான் யோகி சொல்கிறார் என்றும், யோகத்தில் தேறிய அவரது சிஷ்யை ஒருத்தியின் மூலம் தனக்கு இச்சோதனை நடத்தப்படும் என்றும் நிஷ்களங்கமாக நினைத்த டச்சுப்பெண் அவர் சொன்னவிதமே செய்தாள்.

பெண்ணாகப் பிறந்த எவருமின்றி யோகியே அறைக்குள் பிரவேசித்துக் கதவைச் சாத்தியதும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. வெட்கம் பிடுங்கித் தின்றது.

சவாஸனத்தில் படுஎன்று கட்டளையிட்டார் யோகி.

அவருடைய மாந்திரீக சக்தி டச்சு மாதைப் பதராக்கி விட்டது. அதனால் அப்படியே செய்தாள்.

யோகி அங்க சோதனை என்ற பெயரில் அநியாய அக்கிரமத்தை ஆரம்பிக்க முயன்றபோது, இவள் அதை எதிர்க்கச் சக்தியில்லாமல் பதராகக் கிடந்தாளெனினும், இவள் விட்டுவந்த பர்த்திநாதன் பதறி வந்தார் குழந்தையைக் காக்க! த்ரௌபதியை முடிய முடியக் கதறவிட்டே மான ஸம்ரக்ஷணம் தந்தவர், ஏதும் முடியா நமது அசட்டு அபலையைத் தாமே காக்க ஓடோடி வந்து, அவளை சூக்ஷ்மத்தில் சூழ்ந்தார்.

யோகி அப்போது செய்யும் செய்கைகளால் எந்தப் பெண்ணுக்கும் அவர்மேல் மோஹ வெறி மூண்டுவிடுமாம், அதிலிருந்தே அவர் அவர்களது சக்தியைத் தாம் கிரஹித்துக் கொள்வாராம். இந்தச் சக்திகள் தாம் அவரது ஸித்திக்கு ஒரு முக்யமான ஆதார ஊற்றாம்.

ஆயின், இப்போது என்ன நடந்தது? இவளுக்கு ஒருவிதமான வெறியும் மூளவில்லை. சவாஸனத்தில் படுத்தவள் சவம் போலவேதான் இருந்தாள் உணர்விலும்! அவள் இருந்த அந்த நிலையில் ஓர் ஆடவன் தீண்டியும் தூண்டியும் ஆடா மனத்தோடு இருக்குமாறு செய்பவரின் பாவனம் எத்தனை உயர்ந்ததாயிருக்க வேண்டும்?

அந்தப் பாவனனை அவள் அப்போது நிதரிசனமாக உணரவில்லை. ஆனால் மாந்த்ரிக சக்தி பெற்ற யோகி உணர்ந்தார்! ‘அவருக்குத் தான் சளைப்பதா?’ என்ற ஆத்திரத்தில் அவளிடம் வெளிப்படையாகவே சிருங்கார சேஷ்டைகளைச் செய்து கிளர்த்தப் பார்த்தார். படு தோல்வியுற்றார்.

எல்லையில்லாத எரிச்சலுடன், “உன் சரீரம் சரீரமாகவா இருக்கிறது? பிணமாக அல்லவா இருக்கிறது? ஸாயி பாபா இதைக் கொன்று விட்டிருக்கிறான். உடையை அணிந்து கொண்டு, தொலை!” என்று கத்தியவாறு அறையைவிட்டு அகன்றார்.

யோகி என்கப்படாநின்ற அந்த போகியின் வாயால்தான் அறிந்தாள் அருட்கலசமான ஐயன் தனக்குப் பூணுவித்திருந்த கவசத்தை! உடலைக் கொன்று உயிரை வளர்க்கும் அவ்வருளை வியந்தாள். அவரைவிட்டு இங்கு வந்தோமே என்று பச்சாத்தாபத்தில் கரைந்தாள்.

இந்தச் சரக்கை இவ்வளவு லேசில்விடுவதற்கு யோகியின் சபலம் இடம் தரவில்லை. ஒரு கைகார சிஷ்யையை அவளிடம் அனுப்பி வைத்தார். அவள் டச்சுக்காரியிடம் வந்து, மருத்துவப் பரிசோதனையில் எப்படி தோஷமில்லையோ அப்படியேதான் தங்கள் குருநாதர் யோக ரீதியில் செய்வதும் என்று கூறி, அதற்கு உடன்பட்டு மனப்பூர்வமாக ஏற்பதால் பௌதிகச் சுரப்புக்களே தெய்விக சக்தி ரஸமாகிப் பாயுமென்று சொன்னாள். குருவின் தூண்டுதலுக்கு இவள் ஜடமாக இல்லாமல், அதை உயிர்ப்புடன் ஏற்க வேண்டுமென்று சொல்லி, அதற்கு வழியாகச் சில அப்பியாஸங்களைச் சொல்லிக் கொடுத்தாள். புத்தி பேதலித்தாற்போன்ற டச்சு மாது இதை நம்பி அன்றிரவும் அங்கேயே இருந்தாள்.

இரவிலே அவளுக்குத் தெரிந்தது, யோகி தன்னுடைய அறிவுக்குள் பிரவேசித்து அதை வயப்படுத்திக் கொள்ள முயல்கிறாரென்று! ‘கூடாது, கூடாது, இதற்கு இடம் கொடுக்கக்கூடாதுஎன்று எண்ணினாள். அபலையான தான் நன்றாக அகப்பட்டுக் கொண்ட பின் கூடாதுஎன்று சொல்லி என்ன பிரயோஜனம்? என்ன பேதைமை! அபலையா? பலத்திலெல்லாம் மகா பலத்தைத் தரும் நாமம் இருக்க ஏன் தாழ்ந்து கொடுக்க வேண்டும்? பகலில் தானாகக் காத்தவர், இப்போது நாம் நாமம் சொல்லியழைக்க வரமாட்டாரா?”

தானாகவே அருள் செய்து விட்டால் பக்தருக்குப் பெருமை சேராதே என்றுதான் அப்பன் இப்போது இப்படி லீலா நாடகம் செய்தான் போலும்!

ஹரி, ஹரி ஹரி கண்ணா!
அபயம் அபயம் உனக்கபயம்என்றாள்….
நம்பி நின்னடி தொழுதேன் என்னை
நாணழியாதிங்கு காத்தருள்வாய்
ஐய! நின் பதமலரே சரண்!
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரிஎன்றாள்.

துரியோதன ஸபையில் துர்க்கதியுற்ற துரோபதி துவாரகாபதியைத் துடித்துத் துடித்து அழைத்தாற்போல், “ஸாயி, ஸாயி, ஸாயி, ஸாயிஎன்று அலறினாள் டச்சுப் பெண். ஒவ்வொரு நாமமும் ஒரு கதாயுதத் தாக்குதலாக யோகியின் துர்மாந்திரீக சக்தியின் மீது விழுவது அவளுக்குத் தெரிந்தது. தன்னைப் பற்ற வந்த கொடூரப் பிடிப்பு நலிந்து கொண்டே வந்தது அவளுக்கு நன்கு புரிந்தது. கடைசியில் ஸாயியின் பிரேம தேவதை யோகியின் காமப் பிசாசை வீழ்த்தி வெற்றி கண்டது.

பொழுது விடிந்ததோ இல்லையோ, டச்சுப் பெண்மணி அந்த ஆசிரமத்திலிருந்து ஆசிரமமா அது? தப்பினோம் பிழைத்தோம் என்று வெளியேறி, வெளியூருக்குப் போகிற முதல் பஸ்ஸில் ஏறி ஒளிந்து கொண்டு, ‘யோகியிடமிருந்து நிரந்தரமாக விடுபட்டாள்.

***

யோகிக்கு இதனால் ஏற்பட்ட க்ஷாத்திரமும் அதனால் அவர் ஸ்வாமிக்கு இழைக்கப் பார்த்த கொடூரமும் கொஞ்ச நஞ்சமல்ல. சீடரின் மனத்தை அடியோடு ஆக்ரமித்துக் கொண்டு அவர்களைத் தன் கைப்பாவையாக ஆட்டுவிக்கும் சக்தி கொண்ட அவர், நம்முடைய ஸ்வாமியை எறும்புக்கும் தீங்கெண்ணாத பிரேமப் பிண்டத்தை கொல்வதற்கே ஒரு சிஷ்யரைப் பயிற்றுவித்து அனுப்பினார். சீடரும் பல காலம் ஏதேதோ அசுர யத்தனங்கள் செய்து பார்த்தார். இது பிரசாந்தி நிலயத்தில் சிலருக்குத் தெரிந்த விஷயம். ஆனாலும் அவர்கள் தெரிந்துகொண்டது ஸ்வாமி தெரிவித்தல்ல. அவர் இதைப் பொருட்படுத்தினால்தானே? அவரை எந்தத் தாக்குதல்தான் பாதிக்க முடியும்? தாக்கித் தாக்கித் தன்னால் ஓய்ந்து விட்டார் யோகியின் சிஷ்யர்! சிஷ்யரின் மனத்தைத் தன் ஆதிக்கத்தில் வைத்திருந்த யோகி ஓய்ந்து விட்டார் என்பதுதான் அதன் அர்த்தம்.

1974ம் ஆண்டு மார்ச் மாத மத்தியில் ஸ்வாமி பாரிச வாயு போன்ற ஒரு கொடிய நோய்க்கு ஆளானது இந்த யோகியின்கைங்கர்யம்தான் என்று நினைப்பவர்கள் உண்டு. இது தப்பு. சங்கற்பத்தால் மட்டும் தாம் தீர்க்கக் கூடாத அளவுக்குப் பூர்வ கர்மம் நிறைய உள்ள பக்தர்களின் நோயைத் தீர்ப்பதற்காகத் தாமே அதை வாங்கிக் கொண்டு மனப்பூர்வமாக அனுபவிப்பது தவிர, வெளியிலிருந்து வியாதிக் கிருமிகளோ, விரோதிகள் செய்யும் மாந்திரீகங்களோ தம்மைத் தாக்கவே முடியாது என்று ஸ்வாமி தீர்மானமாகச் சொல்வதை பக்தர்கள் மறக்கக்கூடாது.இவ்விதம் பிறர் வினையைத் தீர்க்க நம் வைத்தியநாத ஸ்வாமி தாமே வியாதியும் உறும் தியாகம் பற்றி “ஸ்வாமி”யில் “தியாக ஸாயி” என்றே ஒரு முழு அத்தியாயம் எழுதியிருக்கிறேன். அதன் பின் அறிய வந்த சில அரிய விஷயம் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். வாசகர் பலருக்குத் தெரியாமலிருக்கக்கூடிய 1974ம் வருஷத்திய பாரிச வாயு பற்றியும் இதில் சொல்வேன்.