8. “சிவ ஸாயி சங்கர போல்!”
ஷீர்டிநாதனை சிவாவதாரமாகவே ஸ்வாமி கூறியிருப்பது முன் அத்யாயத்திலிருந்து தெரிகிறது. “கண்ணனுக்குப் பின் ஷீர்டியவதாரம்” என்றும் அவர் கூறியிருப்பதால் இது நாராயண அவதாரமுமாகிறது. இதில் முரண் ஏதும் இல்லை. ஏக பரப்பிரம்மனையேதான் ஞான சிவமாகவும் ப்ரேம பராசக்தியாகவும் சொல்வது. ஞான சிவத்தை ஹரன் என்னும்போது பிரேம சக்தியை ஹரி என்பர். சக்திசிவமும் ஹரிஹரரும் ஒன்றேதான். ஞானம் தூக்கலாக வருகிற அவதாரங்களை சிவமயமானதாகவும், பிரேமை பூரித்து நிற்கும் அவதாரங்களை அம்பாள் அல்லது திருமால் மயமானதாகவும் கொள்கிறோம். ஞானாவதாரனான ஷீர்டி ஸாயியை சிவ ஸ்வரூபமாகச் சொல்வது இப்படித்தான். ஆனாலும் ஞானமாகவே இருந்து கொண்டிருப்பவன் ஞானத்தை நல்க வேண்டும் என்று எண்ணி ஞாலத்துக்கு வந்து அவதரிப்பதே கருணையின், பிரேமையின் தூண்டுதலால்தானே? இந்த அன்பைத்தான் நாராயணாவதாரமாகக் கொள்வது.
ஷீர்டி ஸாயி சிவாவதாரமென்றும், தற்போது ஸத்யஸாயியாக உள்ள தாம் சிவ சக்தியரின் கூட்டு அவதாரமென்றும், இதையடுத்துத் தாம் பிரேம ஸாயியாகப் பிறக்கும்போது சக்தி யவதாரமாக விளங்கப்போவதாகவும் ஸ்வாமி சொல்லியிருக்கிறார்.
அறிவுருவான அவதாரம், அறிவும் அன்பும் ஒருசேர்ந்த அவதாரம், அன்பே வடிவான அவதாரம் என்று மூன்றைச் சொல்லும்போதும், அவதரிக்க வேண்டும் என்ற இச்சையே அன்பில் உதித்ததால் அனைத்தும் சக்தி அல்லது நாராயண அவதாரம் கலந்ததுதான். இப்படி நாராயணாவதாரமாக ஸாயிக்களைக் கருதுகையில் ஓர் அரிய விஷயத்தை ஒரு முறை ஸ்வாமி வெளியிட்டார்: கல்பங்களும், மன்வந்தரங்களும், சதுர் யுகங்களும் திரும்பத் திரும்ப வருபவையாகும். இப்படி அநேக வத்யத்ரேதாத்வாபரகலி யுகங்கள் வந்திருக்கின்றன. இனியும் இப்படிப் பல வரும். சதுர்யுகம் ஒவ்வொன்றிலும் தசாவதாரங்கள் நிகழும். நடப்புச் சதுர் யுகத்தில், தசாவதாரங்களில் கடைசியான கல்கி அவதாரமே நன்றாகப் பிரிந்து, ஷீர்டி ஸாயி, ஸத்ய ஸாயி, பிரேம ஸாயி என்பனவாக அமைந்திருக்கிறது. இப்படிக் கல்கியவதாரம் மூன்று ஸாயிக்களாகப் பிரிந்து அமைவது நிகழ்கின்ற கலியுகம் ஒன்றுக்கே உரியதாகும். இதற்கு முந்தைய கலியுகங்களிலோ, இனி வரவிருக்கும் கலியுகங்களிலோ ஸாயி அவதாரங்கள் கிடையாது.”
நமக்கென்றே ஸ்பெஷல் போனஸ் ஸாயி!
அவ்விஷயம் இருக்கட்டும். ஷீர்டீசர் சிவா அவதாரம் எனில் சிவசக்தியான நம் பர்த்தீசரிலும் பாதி சிவமல்லவா? எனவே இவர் தந்த சிவாநுபவங்களில் ஒன்றிரண்டை “ஸ்வாமி” நூலில் வராதவற்றை இங்கு பார்க்கலாம்.
***
வீர சைவர் ஒருவர் புட்டபர்த்திக்குப் போயிருந்தார்.
அந்த நாளில் பிரசாந்தி நிலய மையக்கூடமான மந்திரின் பூஜா மேடையில் மையமாக ஒரு வேணுகோபால வடிவம் புருஷாக்ருதியில் திகழ்ந்து வந்தது.
இதைக் கண்டதும் சலிப்படைந்தார் சைவர். அந்த மன்றத்தில் பஜனையோ, தியானமோ, எது செய்யவுமே அவருக்குப் பிடிக்கவில்லை.
புறப்பட்டார் ஆற்றங்கரைக்கு அமைதியாக சிவத் தியானமும் பூஜையும் செய்வதற்காக.
சித்ராவதியில் முழுகினார்.
விபூதியைக் குழைத்துப் போட்டுக் கொண்டார்.
வீர சைவ விதிப்படித் தமது இடது கையில் லிங்கத்தை வைத்துக் கொண்டு பூஜை தொடங்கினார்.
வழுவழுப்பான அந்த லிங்கத்தினுள்… ஆம், பாபாவின் வடிவம்தான் பிரதிபலிக்கிறது!
கண்ணாடியில் பிரதி பிம்பம் தெரிவதுபோல் இருக்கிறது.
அந்த லிங்கம் இயல்பாகப் பளபளப்பு உள்ளதாகையால், தமக்குப் பின்னே வந்து நிற்கும் பாபாவின் உருவம்தான் அதில் பிரதிபலிக்கிறது என்று எண்ணினார் வீரசைவர்.
திரும்பிப் பார்த்தார்.
பாபா இல்லை.
மறுபடி பூஜை ஆரம்பித்தார்.
மீண்டும் லிங்கத்தினுள் பாபாவின் ரூபம் தெரிந்தது.
பின்புறத்திலோ பாபா நிச்சயமாக இல்லை.
இப்படிப் பலமுறை நடந்தது.
ஆச்சரியமுற்ற சைவர் பாபாவை தரிசிக்க ஆர்வமுற்று பிரசாந்தி நிலயத்துக்கு விரைந்தார்.
பஜனைக் கூடத்துக்குள் நுழைய இருந்த பாபாவின் பார்வை குறும்புப் பார்வை அவர் மீது விழுந்தது.
நகை நெளியும் பாபாவின் அதரங்கள் தம்மிடம் ஏதோ கூறத் தயாராகின்றன என்றுணர்ந்த வீர சைவர் காதைக் கூர்மையாக்கிக் கொள்கிறார்.
இதுவரை பாபா அவரிடம் உரையாடியதில்லை; அவரைக் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவும் இல்லை.
அவர் தாமாகக் கூறும் முதல் வார்த்தைகளைக் கேட்க அடியார் ஆர்வமுற்றது இயற்கைதானே?
பாபா கேட்கிறார்: “ஏன் வந்துட்டே? இந்த ஹால் வேண்டாம்னுதானே ஈச்வர பூஜைக்காக ஆத்தங்கரைக்குப் போனே?”
***
“Big ஜான்” என்று அன்பாக அழைக்கப்படும் ஜான் வோர்ட்லி ஒரு மஹா சிவராத்ரி காலையிலிருந்து ஸ்வாமியை ‘ஷூட்‘ செய்வதற்காகச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார் தமது காமிராவினால்தான்!
கூட்டத்தில் இங்குமங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஸ்வாமி அன்று சரியான சண்டித்தனம் செய்தார் ஜான் காமிராவைச் சரி செய்துகொண்டு “கிளிக்”கப் போகும் அயனான தருணங்களிலெல்லாம் அவரைப் பார்த்து சைகையால் வேண்டாம் என்று தெரிவித்தார்; அல்லது வாய் திறந்தே, “Not now” என்று சொன்னார்.
மாலை லிங்கோத்பவத்துக்காகச் சொல்லி முடியாத கூட்டம். கூட்டத்திடை இடம் பண்ணிக்கொண்டு பாபாவைத் தொடர்ந்து படம் எடுப்பது சாத்தியம் என்று கருதிய ஜான், அந்நாளில் உத்பவ உத்ஸவம் நடந்த ‘சாந்தி வேதிகா‘ மேடையிலேயே எப்படியோ இடம் பிடித்து அமர்ந்து கொண்டார்.
அசதியில் அவருக்குக் கண்ணை அழுத்தியது. சட்டென்று விழித்தபோது செம்பட்டங்கி மந்திரத்திலிருந்து மினுக்கிக் கொண்டு வருவது தெரிந்தது.
அடியார் புடைசூழ வந்த உடையார் ஜானுக்குச் சில அடிகள் தள்ளி வருகையில் சரக்கென்று நின்றார். நேரே ஜானைப் பார்த்தார். கட்டளைக் குரலில், “Now” என்றார்.
சாய்ந்து, சரிந்து அமர்ந்திருந்த ஜான் தம்மை நிமிர்த்திக்கொண்டு, காமிராவை எடுத்து, ‘கிளிக்‘கினார். அப்போது ஸ்வாமியிடமிருந்து அதி விசையுடன் ஒரு சக்தி தம் மீது பாய்வதுபோன்ற பார உணர்ச்சி அடைந்தார். அதைத் தாங்கமாட்டாமல் தடாலென்று தரையில் சாய்ந்தார். அந்த க்ஷணத்தில் அவருக்குப் பிரக்ஞையே தவறிவிட்ட போதிலும், காமிராவைக் கீழே போடாமல் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது ஆச்சரியம்! இனி வரப் போகும் ஆச்சரியத்தை முன்னிட்டு ஸ்வாமியே புரிந்த அருள்தான்!
ஜானுக்குச் சில கணங்களிலேயே உணர்வு திரும்ப, அவர் எழுந்திருந்த போது பகவான் நகர்ந்து விட்டிருந்தார்.
பிற்பாடு ஜான் அமெரிக்காவுக்குத் திரும்பியவுடன் புகைப்படத்தை ‘டெவலப்‘ செய்து கலர் ப்ரிண்ட் எடுத்தார்.
தோள் வரையிலான ஸ்வாமியின் அத்தோற்றத்தில் முகம் அரை முறுவலில் இனித்தது. இந்த இனிமை ஒரு புறமிருக்கக் கண்களில் மஹிமை உன்னதமாகத் தெரிந்தது.
இவற்றைவிடக் குறிப்பிட வேண்டிய அம்சம்: ஸ்வாமியின் இடது புருவத்திலிருந்து ஒரு வளைந்த நீலக்கோடு தொடங்கி, இரு புருவங்களுக்கும் மத்தியிலுள்ள காலியிடம் வரை வந்தது! அந்த இடத்தில் இரு புருவ மத்தியில் அவுட்லைனாக, ஆனாலும் வெகு ஸ்பஷ்டமாக, மூன்றாவது நேத்திரம் காணப்பட்டது!
சிவராத்ரிக்கு சிவஸாயியின் பரிசு!
அதன் புனிதத்வத்தைத் கருதி ஜான் இப்படத்தைப் பொதுப் பிரசுரத்துக்கு அனுமதிப்பதில்லை.
***
‘பாபா பெரும்பாலும் விபூதிதானே படைத்துத் தருகிறார்? அதனால் அவர் சிவமயமானவரே!’ என்பவருண்டு.
அவரது விரி சிகையே சிவபெருமானின் ஜடாமுடியாகத் தெரிவதாகச் சொல்வாருண்டு.
அந்த சிகை மாத்திரமோ, அல்லது அதனுள் உள்ள திருமுகமோ, அல்லது இரண்டும் சேர்ந்தோ லிங்காகாரமாகத் தெரிவதாகச் சொல்பவர் இருக்கிறார்கள்.
***
சென்னைப் பல்கலைக்கழக மாணவரான ஜான் க்ரைம்ஸ் ஒரு நாள் தமது வகுப்புத் தோழருடன் மயிலை கபாலீச்வரத்துக்குச் சென்றார்.
அங்கே, “ஹிந்துக்களல்லாதார் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்ற அறிவிப்பைப் பார்த்ததும் க்ரைம்ஸின் இதயம் சாம்பியது.
என்ன செய்யலாம்? நண்பரை உள்ளே சென்று தாசித்து வரும்படி அனுப்பிவிட்டுத் தாம் வேதனையோடு வெளியே காத்திருந்தார். அவரது மனம் பாபாவிடம் மன்றாடியது. “இந்த வழக்கமே என்றும் தொடருமா? நீதானே சிவன்? உன்னைத் தரிசிக்கவே நான் வந்திருக்க, அதற்கும் ஒரு தடையா?”
இப்படி இந்த வெள்ளை நந்தனார் மறுகும்போது ஒரு கிழவர் நேரே அவரிடம் வந்தார். “வாருங்கள் உள்ளே” என்றார்.
க்ரைம்ஸின் சுய கௌரவம் விடுமா? அவர் நகராமலே நின்றார். ‘கோயிலினுள் வரமாட்டேன்‘ என்று நந்தனார் ஒரு அர்த்தத்தில் சொன்னதை இவர் வேறு அர்த்தத்தில் சொல்லி அங்கேயே நின்றார்.
கிழவர் மீளவும் இரு முறை அழைத்தபின் அவரால் மறுக்க முடியவில்லை. கிழவரைத் தொடர்ந்து உள்ளே சென்றார் அந்நிய நாட்டு பக்தர் ‘அப்பாலும் அடி சார்ந்த அடியார்‘!
சிவபெருமானின் கருவறையை இருவரும் வலம் வரத்தொடங்கினர்.
உடன் வந்தவர் கையை வீசினார். கை நிறைய விபூதி!
அதை க்ரைம்ஸின் நெற்றி முழுதும் அப்பினார்.
திருச் சுற்றில், அண்மையிலிருந்த துர்க்கா பரமேச்வரியின் பாதத்திலிருந்து சிறிது குங்குமத்தை எடுத்து வந்த கிழவர், அதையும் க்ரைம்ஸுக்கு இட்டு விட்டார்.
வலம் முடித்து கபாலீச்வர ஸந்நிதிக்கு நேரே வருகையில் ‘பார்‘! என்றார்.
லிங்கத் திருமேனியை க்ரைம்ஸ் கண்குளிர, மனம்குளிர, ஆசை தீரும் வரையில் தரிசனம் செய்து கொண்டார்,
பிறகு கிழவர் அவரைக் கற்பகாம்பிகையின் கருணைக் கருவறைக்கும் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்து, “இனி போகலாம்” என்று அனுப்பி விட்டார்.
மறுதினம் க்ரைம்ஸ் புட்டபர்த்திக்குச் சென்றார்.
என்ன, ‘தர்சன்‘ நன்றாக ‘எஞ்ஜாய்‘ பண்ணினாயா?” என்று வினவினார் பர்த்திப் பரமேசர்!இவர் சிவசக்தி இரு தத்வமும் முறுகியவர் என்பதற்கேற்ப இந்த நிகழ்ச்சியிலேயே கபாலி விபூதியோடு துர்காம்பிகை குங்குமமும், கற்பகாம்பிகைத் திருக்காட்சியும் பெற்றுவிட்டோம். வெள்ளையரும் கூட ‘தெய்வ மாதா’ (Divine Mother) என்று உருகிச் சொல்லும் அன்னை ஸாயியை தேவியாகவே கொஞ்சம் தரிசிக்கலாம், வாருங்கள்!