“தன்கிட்டே ஒத்தர் துவேஷமாயிருக்காங்க என்கிறதுக்காக ஸ்வாமிக்கு அவங்ககிட்ட விரோதம் உண்டாறதே கிடையாது. தன்னை அடிச்ச பாய்ஸ் மேலேயும் ஸ்வாமிக்கு அன்பும் பரிதாபமுந்தான். ஸ்வாமி அவங்களுக்கெல்லாமும் பென்ஸில், பலப்பம், பேப்பர், பெப்பெர்மின்ட், பழம் எல்லாம் ஸ்ருஷ்டிச்சுத் தருவேன்.”
இவ்விடத்தில் ஒருவர் இடைமறித்து, அந்த நாளிலேயே ஸ்வாமிக்கு இந்த ஸ்ருஷ்டியாற்றல் இருந்ததா என்று வினவ, ஸ்வாமி உடனுக்குடன், “ஸ்வாமி என்னிக்குமே ஸ்வாமிதான். மொதல்ல கொஞ்சூண்டு ஸ்வாமியாயிருந்து அப்பறம் முழு ஸ்வாமியா ஆனாரா என்ன?” என்று மலர மலர நகைப்புக் குரலில் கேட்கிறார்.
கேள்வி கேட்டவர், “ஸ்வாமீ! நீங்கள் பெரியவரான பின் இயற்கைக்கு அதீதமான முறையில் பிறருக்கு எத்தனையோ பண்டங்கள் படைத்துத் தந்தாலும், உங்களுடைய சொந்த உபயோகத்துக்கு இவ்வாற்றலைப் பயன்படுத்திக் கொள்ளாமல் மானுட ரீதியில்தான் வாழ்கிறீர்கள் என்பதை அறிந்தே நாங்கள் வியந்திருக்கிறோம். ஆனால் நீங்கள் குழந்தைப் பருவத்தில், மாற்று உடையும், கேவலம் ஒரு பின்னும் இல்லாமல் பரதைபோல் இருந்தபோதே, உங்களுக்காக தெய்விக சக்தி கொண்டு ஏதும் செய்து கொள்ளாமல், உங்களைத் துன்புறுத்தியவர்களுக்குப் பரிசுகள் படைத்துத் தந்ததைக் கேட்கும்போது பரவசமே ஆகிவிடுகிறோம்” என்று நாத் தழுதழுத்துச் சொல்ல, ஸ்வாமி அதை ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் தொடருவார்:
“அறியாப் பசங்க, பாவம்! நல்ல பழக்கத்திலே train ஆகாதவங்க அப்படித்தான் இருப்பாங்க. அதுக்காக ஸத்யா அவங்களைத் துவேஷிக்கலாமா? அவங்களுக்கு வேண்டியதைக் கொடுத்து, பஜனைபாட்டு எல்லாம் சொல்லிக்கொடுத்து நானேதான் நல்ல வழியிலே ‘ட்ரெயின்‘ பண்ணுவேன். உள்ளூர யாருமே நல்லவங்கதான். அந்தப் பசங்களுக்கும் க்ளாஸ்லே எங்கிட்ட துவேஷமே தவிர ஸ்கூல் (நேரம்) முடிஞ்ச அப்பறம் அந்த விரோதம் நிலைச்சு நிக்காது. ஸ்வாமியை ரெண்டு போடு போட்டவுடனே அவங்க கோபம் போயிடும். ஸ்வாமி (ஸ்ருஷ்டித்துக்) கொடுக்கிறதை வாங்கிக்கொண்டு, ‘ராஜூ, தையா‘ன்னு பிரியமாக் கூப்பிட்டுக்கொண்டு அன்பாப் பழகுவாங்க.”
(ஸ்வாமியின் உதார குணத்தைப் பாருங்கள். பகைவனுக்கருளும் பண்புச் சிகரமாக இவர் தம்மைத் துன்புறுத்தியவர்களுக்கும் பரிசுகள் படைத்துத் தரும்போது அதை வாங்கிக் கொள்பவர்கள் அதற்காகவேதானோ என்னவோ? நேசம் பாராட்டினால் அதைப் பெரிதாகப் புகழ்கிறார்!)
“ஸ்வாமி அவங்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுப்பேன். பஜனைங்க கத்துப்பாங்க. ஸ்வாமி சொல்லிச் சொல்லி நல்ல ‘பிஹேவியர்‘ கொஞ்சம் கொஞ்சமாத் தெரிஞ்சுண்டாங்க. அவங்கள்ல சில பேர் ஸ்வாமியை க்ளாஸ் மானிட்டரா மட்டுமில்லாம, வெளிலேயும் தங்களோட லீடர், குரு–ன்னு வெச்சுக்கொண்டு ஸ்வாமி சொல்றபடியே பண்ணுவாங்க.
“ஸ்வாமி அப்போ ஒரு குறும்பு பண்ணினேன். (கண்களில் கள்ளமற்ற விஷமம் பளிச்சிட இப்படிச் சொல்கிறார் பகவான்.) என்ன தெரியுமா?
“அப்ப புட்டபர்த்தி மணியக்காரரு அவ்வளவு சரியா நடந்துக்கிறவரு இல்லை. அவரைச் சுத்தி எப்பவும் ஒரு gang தாளம் போட்டுக்கொண்டு இருக்கும். அவங்க காரியங்க ஸத்யாவுக்கு ஸம்மதம் இல்லை. ஆனாலும் ஊர் ஜனங்க அவர் கிராமாதிகாரி என்கிறதாலே வாய் திறக்காம அந்தக் கும்பலுக்கு ஸலாம் போட்டுக் கொண்டு இருந்தாங்க. ஸத்யாவுக்கா? பொறுக்கவேயில்லை. அதனாலே, அவங்க பண்ற தப்புங்களையெல்லாம் வெச்சு ஒரு பாட்டுக் கட்டினேன். அவங்களைக் கண்டிச்சும் அதிலே ‘வார்னிங்‘ வெச்சேன். மத்தப் பசங்களுக்கு அந்தப் பாட்டைச் சொல்லிக்கொடுத்தேன். அவங்க விவரம் தெரியாதவங்களானதாலே, பாட்டு மணியம் gangஐப் பத்தினதுன்னு புரிஞ்சுக்கல்லே. ஏதோ பெருக்கல் வாய்ப்பாடு மாதிரி, அர்த்தத்தை மனஸிலே வாங்கிக்காமலே பாட்டை மனப்பாடம் பண்ணினாங்க. (குறும்புச் சிரிப்புடன்) நானும் அவங்களுக்கு ‘எக்ஸ்ப்ளெய்ன்‘ பண்ணலை.
“பிரதி தினமும் மணியமும் கூட்டாளிங்களும் அரட்டைக் கச்சேரி அடிக்கிற இடம் ஒண்ணு உண்டு. என் பாய்ஸை அங்கே போய், அவங்க காதிலே விழற இடத்திலேயிருந்து இந்தப் பாட்டைப் பாடும்படி அனுப்பிச்சேன். விஷயம் தெரியாம அவங்களும் போய்,
(ஸ்வாமியே பச்சைப் பிள்ளையாக உத்ஸாஹத்துடன் தாளமிட்டுத் தமது அந்த ஆதிகால ஸாஹித்யத்தைப் பாடுகிறார்.)
தர்மம் தெரியாத் தம்பிரான்களே!
கர்மம் புரியாக் கருமிமார்களே!
இப்போதுங்களை ஊர் மக்கள்தாம்
தப்பாதே தலை வணங்கினாலும்
நிச்சயம் ஒருநாள் நீதி ஜயிக்கும்,
ஸத்தியம் ஒருநாள் சக்தியைக் காட்டும்;
சிறப்புச் செய்யும் சுற்று ஜனங்கள்
செருப்படி கொடுக்கும் காலம் வருமே!
“இப்படி ஆரம்பிச்சு, அந்த gang செய்யற தப்புக்களின் பட்டியலைப் பாட்டாக ஜமாய்ச்சுது ஸத்யாவின் பட்டாளம். ‘இந்த வாண்டுங்க நம்ம வண்டவாளத்தை விண்டு நடுரோட்டிலே பாடறதா?’ன்னு மணியத்துக்கும், ஸகாக்களுக்கும் ஒரே ஆத்திரம், அவமானம். ஆனாலும் ஸ்வாமிதானே அந்தப் பசங்களை அனுப்பினேன்? அதனாலே அந்த பாய்ஸ் பெரியவங்ககிட்டே மாட்டிக் கொண்டு அடிபட விடுவேனா? மத்தவங்க அடியை ஸவாமி வாங்கிப்பேனே தவிர, மத்தவங்களை அடி வாங்க விடமாட்டேன். அதனாலே மணியம் gang என் ஸ்நேஹிதருங்களை அடிச்சு, கிடிச்சு ஒண்ணும் பண்ணலை. ‘இந்தச் சின்னப் பசங்க தாங்களாப் பாட்டு கட்டிப் பாட மாட்டாங்க. வேறே யாரோ ஏவி விட்டுத்தான் இப்படிப் பண்றாங்க. அது யார்னு தெரிஞ்சு கொண்டு அவங்களைப் பிடிக்கலாம்‘னு நினைச்சாங்க. அந்த பாய்ஸ்கிட்டே, உங்களுக்கு இந்தப் பாட்டுச் சொல்லித் தந்தது யாரு?’ன்னு கேட்டாங்க அவங்க, ‘ராஜு வீட்டு ஸத்யாதான்‘னு பதில் சொன்னாங்க.
“ஸ்வாமியைக் காட்டிக் கொடுத்துட்டாங்களேன்னு அவங்க மேலே தாபப்படக் கூடாது. விஷயம் தெரியாம, ‘இன்னொஸென்ட்’டாகத்தான் அப்படிச் சொன்னாங்க.”
“இது என் காரியம்னு தெரிஞ்சாலும் மணியம் gangகுக்கு நேரே என் மேலே ‘ஆக்ஷன்‘ எடுக்கத் தயக்கமாயிடுத்து. (ஸத்யாவிடம் ஏதோ அதீத சக்தி இருப்பதாக ஊராருக்கு அப்போதே ஓரளவு தெரியுமாதலால் போலும்!) என் அப்பாவை அவங்க கூப்பிட்டு அனுப்பினாங்க. அப்பாவும் போனாரு. பிள்ளைங்க பாடின பாட்டைப் பத்தி அவருகிட்டே சொல்லி, ‘உன் பையன்தான் இதைக் கத்துக் குடுத்தானாம். அவனைக் கேட்டு இது யாருடைய பாட்டுன்னு தெரிஞ்சு கொண்டு வா. அந்த ஆள் மேலே ‘ஆக்ஷன்‘ எடுக்கணும்னு சொன்னாங்களாம்.
“அப்பா பசங்களை அந்தப் பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்டாராம். அதிலே பட்டியலாச் சொல்லியிருந்த தப்பு லிஸ்டில் இரண்டு தப்பு குறிப்பா என் அப்பாகிட்டேயே இருந்துது. (தமது பிதாவின் பிழையைத் தாமாகத் தோழர்களைக் கொண்டு அவர் முன் பாட வைக்காமல் அவராகக் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படிக் குஞ்சு ஸத்யா (அவ) மரியாதை செய்த நயமே நயம்!) அதனால் பாட்டு இன்னாருடையதுன்னு அவருக்கு ஊகமாப் புரிஞ்சுடுத்து.
“வீட்டுக்கு வந்து ஸ்வாமிகிட்ட விஷயத்தைச் சொல்லி, பாட்டு யார் போட்டது?”ன்னு மிரட்டுகிற மாதிரிக் கேட்டார். நான் தைரியமா உண்மையைச் சொன்னேன். ‘ஊர்ப் பெரிய மனுஷங்களைப் பத்தி இந்த மாதிரியெல்லாம் பாடப் படாது‘ன்னு அவர் என் ஸகாக்களைக் கண்டிச்சாரு. “ஏ ஸத்யா! நீ சொன்னாத்தான் இவங்க கேப்பாங்க. அதனாலே நீயே சொல்லு. ஊருக்கு உபதேசம் பண்ற நீ பிதா சொல்படித்தானே கேக்கணும்?”னாரு.
“ஆமாம், ஆமாம், வாஸ்தவந்தான்னு நான் தலையை ஆட்டினேன். பசங்க கிட்டே, இனிமேலே அந்தப் பாட்டைப் பாடவேணாம்”னு சொல்லிட்டேன்.
“ப்ராப்ளம் தீர்ந்துதுன்னு அப்பா நினைச்சாரு. (கண்ணிலும் குரலிலும் குறும்பு மின்வெட்ட) ஸ்வாமி விடுவேனா?
“அதுக்கப்பறம் நானே தெருவோடே அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு மணியம் gang இருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்பா துரத்திக் கொண்டே வந்தாரு. ஊருக்கு so – called ‘பெரிய மநுஷங்களுக்கு‘க்குக் கட்டுப்பட்டு என்னை அவங்களுக்கு எதிரேயே ஏசினாரு. ‘என் வார்த்தையை மீறி நீ எப்படி இந்தப் பாட்டைப் பாடலாம்?’னு திட்டினாரு.
“உங்க வார்த்தையை மீறவே இல்லையே! நல்லா யோசிச்சுப் பாருங்க: மத்த பசங்க கிட்டத்தான், பாடப்படாதுன்னு நீங்க கண்டிச்சீங்க. நானும் அதே மாதிரி அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும்னு வற்புறுத்தினீங்க. உங்க சொல்படியே அவங்களைப் பாடாமப் பண்ணிட்டேன். நான் பாடப் படாதுன்னு இதுவரை சொல்லல்லையே அப்படீன்னேன். (சொல்லியிருந்தால் பித்ரு வாக்ய பரிபாலனம் பண்ணியிருப்பாரோ? குறும்பு, குறும்பு!)
“இப்படி விளையாட்டாச் சொல்லிக் கொண்டிருந்த நான் அப்போ சடக்குன்னு, ‘இவங்கள்ளாம் நல்ல வழிக்கு வரமாட்டாங்களா?’ன்னு மனஸார நினைச்சு, பளிச்சுனு கேட்டேன்.” “ஒத்தர் பண்ணின தப்புங்களைப் பாட்டிலே சொல்லிக் காட்டறதே பிசகுன்னா, அந்தத் தப்புகளை மெய்யாலுமே வாழ்க்கையிலே பண்றது இன்னம் எத்தனை பெரிய பிசகு?”
“இந்த மாதிரி நான் ஹ்ருதய பூர்வமாக் கேட்டதுதான் தாமஸம், அப்பா அப்படியே கண்ணாலே ஜலத்தைக் கொட்டிட்டாரு. ஸத்யா எடுத்துச் சொன்ன அப்பறம் மணியம்–கோஷ்டிக்கும் மனஸ் மாறி, அவங்க போக்கைக் கொஞ்சம் கொஞ்சமா சரிப் பண்ணிக் கொண்டாங்க.”
“அந்தக் காலத்திலேயே ஸ்வாமி கிட்டே அபாரப் பிரேமை வைச்ச வாத்தியார்மாருங்களும் க்ளாஸ் மேட்ஸும் சில பேர் இருந்தாங்க. (உதாரணமாக, “ஸ்வாமி” நூலில் கூறப்படும் ஆசிரியர் மஹ்பூப்கானை ஸ்வாமி வெகுவாகச் சிலாகித்துக் கூறுகிறார். முஸ்லீமான அவர் பரம அஹிம்ஸாவாதியான ஸத்யர்வின் பொருட்டு மடி மடியாக, பூர்ண சைவமாகத் தயாரித்துக் கொண்டு வந்த பகோடா, பாயஸங்களைப் பற்றி ஸ்வாமி சொல்கையில் அவற்றை அர்ப்பித்த உள்ளத்தின் ருசியை அவர் இன்றும் ரஸித்து உண்பது தெரிந்தது. தமது பாலியத்திலேயே மஹ்பூப் கானுக்குத் தம்மிடம் இப்பேர்ப்பட்ட பக்தி இருந்தது அவருடைய ‘பூர்வ ஜன்ம ஸுக்ருதம்‘ என்று கூறினார். அவர் வகுப்புக்கு வந்துவிட்டாலே ஏனைய மாணவர்கள், ‘ராஜூ, ராஜூ, உன் ஸார் வந்துட்டாரு போ, போ‘ என்று பரிஹாஸம் செய்வார்களாம்!)
“புக்கப்பட்டணத்துக்கு அப்பறம் கமலாபுரத்தில் ஸ்வாமி படிச்சபோது, அந்த ஊர் ஸிரஸ்ததாரின் பிள்ளைங்க இரண்டு பேரும் கூடப் படிச்சாங்க.5 அவங்க ஸ்வாமி மேலே உயிரை வெச்சிருந்தாங்க. ரொம்ப நல்ல பசங்க. ஆனா (தலையைத் தொட்டுக் காட்டி) இக்கட ஏமி லேது! பரீக்ஷைக்கு முன்னாடி எங்கிட்ட ஓடி வந்தாங்க. ‘ஸத்யா, நீதான் நாங்க பாஸ் பண்றதுக்கு எப்படியாவது வழி பண்ணணும். ஒன்னை விட்டா எங்களுக்கு கதி இல்லை‘ன்னாங்க. இன்னிக்கு மட்டுமில்லை, அன்னிக்கும் சரி, என்னிக்கும் சரி, ‘சரணாகதி‘ன்னு வந்துட்டவங்களை ஸ்வாமி நான் கைவிடறதேயில்லை. அதனாலே அவங்களுக்கு ஆறுதல் சொன்னேன். அதுக்கப்புறம் அவங்களைப் பாஸ் பண்ண வைக்கிறதுக்கு ஒரு யுக்தி பண்ணினேன்.
6கமலாபுரம் ஸிரஸ்ததார் பிள்ளைகள் அன்புச் சூழ்ச்சி செய்து சாரணச் சீருடையை ஸத்யா ஏற்குமாறு செய்த விவரம் “ஸ்வாமி” நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.
“அந்த மாதிரி யுக்தி பண்றது ஸரியில்லைதான். நீங்க யாரும் ஸ்வாமி பண்ணினாரேன்னு அந்த மாதிரி பண்ணக்கூடாது. சரணாகத ரக்ஷணத்துக்காக எந்த ஸ்திதியிலே ஸ்வாமி அப்படிச் செஞ்சேன் என்கிறது ஸ்வாமிக்குத்தான் தெரியும். இந்த விஷயத்திலே ஸ்வாமியை ஐடியலா நினைச்சு நீங்க ஃபாலோ பண்ணக்கூடாது. என்ன தந்திரம் பண்ணினேன்னா அவங்க ரெண்டு பேரும் பரீக்ஷை நேரம் முடிஞ்சு மணி அடிக்கிறச்சே, பேர்கூடப் போடாம, அப்படியே வெத்துப் பேப்பரை மடிச்சு வாத்தியார் டேபிளிலே வெச்சுட்டு வரணும்னு சொன்னேன். எனக்காகவும், அவங்க ரெண்டு பேருக்காகவும், அதாவது மொத்தம் மூணு ஆன்ஸர் பேப்பரையும் நானே எழுதினேன். பரீக்ஷை நேரம் மூணு மணி. முதல் ஒரு மணியிலேயே எனக்காகக் கிறுகிறுன்னு ஆன்ஸர் எழுதிட்டேன்; அப்பறம் அதே மாதிரி ஒவ்வொரு மணியில அவங்க ஒவ்வொருத்தருக்கும் எழுதினேன். மூணு பேர் பேரையும் போட்டுப் பேப்பர்ஸை மடிச்சு வெச்சிட்டு வந்துட்டேன். அப்பறம் என்ன? அவங்களும் பாஸ் பண்ணிட்டாங்க.”
(இங்கு ஸ்வாமி அவ்விரு பிள்ளைகளுக்கே விடைகள் ஸ்புரிக்குமாறு செய்தோ, அல்லது வேறு ஏதேனும் விதத்திலோ அமானுஷ்ய ஆற்றல் எதையும் காட்டாமல், மானுட ரீதியிலேயே அதி விரைவில் தாமாக மூவருக்கும் எழுதியதைக் கவனிக்க வேண்டும். லோக தர்மத்தைவிட சரணாகத ரக்ஷண தர்மம் மேலானது எனினும்கூட, உலகத்தின் அறக்கோட்பாட்டுக்கு மாறான ஒன்றைச் செய்யும்போது, அதற்கு தெய்விக சக்தியைப் பிரயோகிக்கக்கூடாது என்று பகவான் கருதிச் செயற்பட்டதாகத் தெரிகிறது.)
“அப்பறம் உரவகொண்டாவில் நான் படிச்சப்போ தானே ஸ்கூலை விட்டு, வீட்டை விட்டு வெளிலே வந்து என் அவதாரத்தை ‘அனௌன்ஸ்‘ பண்ணிண்டேன்? அந்த ஸமயத்திலே எங்க க்ளாஸ்லே மும்மூணு பேருக்கு ஒவ்வொரு பெஞ்ச் வீதம் போட்டிருக்கும். நான் நடுவிலேயும் எனக்கு ரெண்டு பக்கம் ரெண்டு பாய்ஸுமாக ஒக்காருவோம். அவங்க ரெண்டு பேரும் என் மேலே பிராணனையே வெச்சிருந்தாங்க. தங்களோடப் படிச்ச ஸத்யாராஜு ஸ்வாமிஜியாயிட்டான், இனிமேலே ஸ்கூலுக்கு வரமாட்டான்னவுடன் அவங்க ரெண்டு பேருக்கும் தாங்கவே முடியலை. ஒத்தன் தற்கொலை பண்ணிக்கொண்டு பிராணனை விட்டுட்டான். மத்தவனுக்குப் பைத்தியம் பிடிச்சுடுத்து. ஸதா ஸர்வதா ‘ராஜு, ராஜு‘ன்னே கத்திக்கொண்டு இருந்தான். அப்பறம் அவனும் செத்துப் போயிட்டான். (இதுவரை நவரஸ பாவங்களோடு பேசி வந்த ஸ்வாமி இவ்விரு சிறுவர் உயர்ந்த அன்பிலே உயிரையே நீத்ததை உணர்ச்சியின்றி, சாமானிய விஷயம் போலக் கூறிய விந்தைக்கு விடை தொடர்ந்து அவர் கூறியதில் வெளியாயிற்று.) அவங்க எனக்குள்ளேயே ஐக்கியமாயிட்டாங்க. (நாம் அறியும் எல்லா உணர்ச்சிகளும் போய் ஓருணர்வாகி விடுவதுதான் அந்த ஐக்கியம். அதனை அன்பில் முற்றியவருக்கு அளிப்பது இவருக்கு சாமானிய விஷயந்தான்!)
“நான் இந்த உரவகொண்டா ஸ்கூல்லே படிக்கிறேன்கிறதாலேயே, ஒரு தெலுங்கு வாத்தியார் எத்தனையோ சிரமப்பட்டு அந்த ஸ்கூல்லே தமக்கு அப்பாயின்ட்மென்ட் தேடிக்கொண்டாரு. ஸ்வாமி ஸ்கூலை விட்டவுடனே அவரும் அங்கே இருக்க முடியாம விட்டுட்டுப் போயிட்டாரு.”
***
கமலாபுரத்தில் ஸத்யா தனது தமையனின் வேட்டகத்தில் பட்ட சிறுமையை “ஸ்வாமி” நூலிலிருந்து அறியலாம். வறுமையின் காரணமாகவே ஸ்வாமியின் தந்தை அவரை ஸம்பந்தி வீட்டிற்கு அனுப்ப நேர்ந்தது. நாதியற்று வந்தவனாக எண்ணி நம் அநாதி நாதனை, அநாதையர் நாதனை சம்பந்தி வீட்டார் இழிவுபடுத்தினார்கள்.
தமது கமலாபுரம் சிறுமையைக் கூறிய ஸ்வாமி, மதனியின் பிறந்தகத்தில் தாம் இருந்ததாகச் சொல்லாமல் ‘இல்லு அல்லுடு‘ வீட்டில் தாம் வசித்தபோது இந்தக் கஷ்டத்தை அனுபவித்ததாகத் தெரிவித்தார். ‘இல்லு அல்லுடு‘ என்றால் ‘வீட்டு மாப்பிள்ளை,’
சரணாகத ரக்ஷணத்துக்காக தர்மக் கட்டளையை மீறியது போலவே, எவ்வுயிர் குறித்தும் தம் அடியாருக்கு மாற்றுணர்ச்சி ஏற்படக்கூடாது என்ற இதய ஸத்தியத்துக்காகவே இங்கே பகவான் வாக்கு ஸத்தியத்தை மீறிப் பேசியிருக்கிறார் என்று தோன்றுகிறது. ஸ்வாமியின் அண்ணி குடும்பத்தினர் இன்றும் நம்மிடை உள்ளனர். ஸ்வாமியின் ‘இல்லு அல்லுடு‘வான அக்காள் கணவன்மார்களோ இன்று ஜீவிய வந்தராக இருக்கவில்லை. எனவேதான் நம்மோடு வாழ்பவர்களைப் பற்றிய தவற்றை நாம் அறிந்து காழ்ப்புக் கொள்ளவேண்டாமென்றே, வேறு பாத்திரங்களாக மாற்றிக் கூறியிருக்கிறார் என்று ஊகிக்கிறேன். ஆனால் “ஸ்வாமி” நூலில் மதனி குடும்பத்தார் என்று உடைத்துச் சொல்லிவிட்டதால் இங்கே அதே உண்மையை பஹிரங்கப்படுத்துவதில் தவறில்லை. இது போன்ற அம்சங்களில் ஸ்வாமி எப்படி மனிதர்களின் மான ரக்ஷகராகவும், மன்னிப்பு மூர்த்தியாகவும் இருக்கிறார் என்பதை அவரது இனிய ‘அஸத்திய’மே எடுத்துக்காட்டுவதால் இதை இங்கு குறிப்பிட்டு வணங்கத் தோன்றியது.
கமலாபுரத்தில் இடிசோறு தின்று கொண்டிருந்த காலத்தில் புஷ்பகிரி சாரணர் முகாமுக்குப் போய்வரப் பணமில்லாமல் ஸத்யா தவித்ததை “ஸ்வாமி”யில் சொல்லியிருக்கிறேன். அப்போது வீட்டின் அவல நிலையை ஸ்கௌட் மாஸ்டரிடம் ஸத்யா விட்டுக் கொடுக்காமல் சமாளித்ததைக் குறிப்பிட்டிருக்கிறேன். இது குறித்து ஸம்மர் கோர்ஸ் மாணவரிடம் ஸ்வாமி விவரிக்கையில், “நீங்க யாருமே ஃபாமிலி கௌரதையைக் குறைச்சு வெளியிலே சொல்லக்கூடாது” என்றார். கையோடு கையாக, இதிலும் தாம் லோகத்துக்கு முன்னுதாரணம் மட்டுமே காட்டியதாகவும், உள்ளூரத் தமக்குத் தனிப்பட்ட குடும்பப் பாசம் என்று ஒன்று கிடையாது என்றும், பக்தர் குடும்பமே தமது உண்மை உறவினர் என்றும் தெளிவுபடுத்தினார். “ஸ்ரீராம, கிருஷ்ணாதிகளுக்குக்கூட ஓரளவு குடும்ப ஸம்பந்தம் இருந்தது. ஸ்வாமிக்கு உள்ளூர சொந்தக்காரர் என்ற ஸம்பந்தம் எப்போதுமே இருந்ததில்லை. ஸாயிபாபாவாக என்னைப் பதினாலு வயஸில் தெரிவிச்சுக் கொண்ட பிற்பாடு அடியோடு ஸம்பந்தமில்லை. நா பக்துலே நா பந்துவுலு” என்றார்.
தமது முந்தைய ஆண்டுப் பாடப் புத்தகங்களை விற்று ஸத்யா புஷ்பகிரி முகாமின் அத்தியாவசியச் செலவுகளுக்கு வழி கண்டதாக ‘ஸ்வாமி‘யில் கூறியிருக்கிறேன். பெருமதிப்புக்குரிய ஸ்ரீ கஸ்தூரி அவர்கள் ‘ஸத்யம்சிவம் சுந்தர‘த்தில் கூறியதை அடியொற்றியே இப்படி எழுதினேன். முகாமுக்காகப் புத்தகம் விற்றது உண்மை, ஆனால் அந்தத் தொகை தாம் உத்தேசித்த காரியத்துக்குப் பயனாகவில்லை என்று பகவான் தெளிவுபடுத்துகிறார். புத்தகங்களை வாங்கிக்கொண்ட பையனிடமிருந்து அவன் தர முன் வந்த பன்னிரண்டு ரூபாயை அதிகமென மறுத்து ஐந்தே ரூபாய்களைக் கை நிறையச் சில்லறையாக வாங்கிக் கொண்டு ஸ்வாமி தெருவோடு வந்து கொண்டிருந்தாராம்.
“அப்போ ரோடுலே எதுவோ இடறித்து; தடுக்கி விழுந்துட்டேன். (இடறும் வஸ்து இடையே உள்ளது என்பது ஸர்வக்ஞரான ஸ்வாமிக்கு எப்படித் தெரியாமற் பேயிற்று? இடறிய பின்னும் சமாளித்துக் கொள்ளும் தெய்விக ஆற்றல் அவருக்கு ஏன் இல்லாமல் போச்சு? என்று நமக்கு இடறி நாம் மண்டையைக் குழப்பிக் கொண்டாலும் பரவாயில்லை என்று ஸ்வாமி ஒளிவு மறைவில்லாமல் தாம் இடறி விழுந்ததைத் தெரிவிக்கிறார்.) நான் விழுந்தப்போ காசெல்லாம் சிதறிப் போச்சு. ரோடிலே பக்கத்திலேயிருந்த வீட்டு எஜமானி அம்மா வெளியிலே வந்தா. நான் காசுங்களைக் கை நிறையப் பொறுக்கி எடுத்துகிறதைப் பார்த்து, ‘திருட்டுப்பய, திருட்டுப்பய‘ன்னு சத்தம் போட்டா. நிஜமாவே நான் திருட்டுத் துட்டு வெச்சுருக்கிறதா நினைச்சிருப்பாள்னு தோணலாம். ஆனா அவ அதோட நிக்கல்லை. ‘என் வீட்டுத் துட்டை அள்ளிக்கிட்டுத் திருட்டுப் பய ஒடறான்னு கூப்பாடு போட்டு, என்னை அடிச்சு, என் கையிலிருந்த காசையெல்லாம் பிடுங்கிக் கொண்டுட்டா”.
நிஜமாகவே திருடிய கண்ணனை கோபிமார் அப்பர். ஆனால் அப்போது பல சமயங்களில் அவர்களுடைய அப்பாவிப் பிள்ளைகளையே அடிவாங்க வைத்து விட்டுக் கண்ணன் எதிரே நின்றுகொண்டு, அப்படித்தான் திருட்டுப் பசங்களை நாலு போடு போடணும்” என்று தூபம் போடுவான்! இந்த அவதாரத்திலோ நம் அப்பாவி அப்பாயி முரட்டு மாணவர்களை அடிக்க வேண்டியபோது அடிக்காமல் பிறகு உபாத்தியாயர்களிடமும், அந்த மாணவர்களிடமுமே அடிபட்டதில் ஆரம்பித்தோம். இப்போது தன் புத்தகத்தை தயாளத்துடன் விற்றதற்குப் பலனாகத் திருட்டுப் பட்டம் வாங்கி கொண்டு, தன் கைப்பொருளைத் திருட்டுக் கொடுத்து விட்டு, திருடியவளிடமே அடி வாங்கிக்கொண்டு அவலமாக நிற்பதையும் காண்கிறோம். ‘நம் அருமை ஸ்வாமி எவருமே அருமைக்கிடப்படும் அரும்புப் பருவத்திலே இப்படியெல்லாம் சிறுமைப் பட்டாரா?” என்று நம் நெஞ்சிலே அடிபட்டாற்போலத் துயருறுகிறோம்.
‘அவதாரபுருஷர் ஸங்கற்பித்தபடிதானே நடக்க வேண்டும்? முகாம் செலவுக்கு என்று இவர் ஸங்கற்பித்த புத்தக விற்பனைத் தொகை எப்படி இவர் கையை விட்டு எவளோ துஷ்டையின் கைக்குப் போகலாம்?’ என்பது போன்ற கேள்விகளில் அர்த்தமில்லை. மனித உணர்ச்சிகளை, உழைப்புக்களைத் தெய்வம் தானும் எப்படியெப்படி அநுபவித்தும், அநுபவிப்பதிலேயே அநுபவிக்காமல் விலகி நின்று பார்த்தும் ரஸிக்க விரும்புகிறதோ? நாம் எப்படி அறிய முடியும்? அவதாரத்வம் என்ன என்று நாம் எப்படி எடை போடுவது? “ஸ்வாமி” நூலை எழுதுகையில் அநேகக் கேள்விகளை எழுப்பி சமாதானங்கள் நிறையக் கொடுத்தேன். இப்போது இந்தக் கேள்விபதில் எல்லைக்கு அப்பாற்பட்டதே அவதாரம் என்று தீர்ந்திருக்கிறேன். உருண்டு புரண்டு வரும் மஹத்தான அநுக்ரஹ சக்தி, நம் உள்ளத்திலே அதன் எதிரொலியாகப் பொங்கிப் பொங்கி எழுகிற பிரேமை இந்த இரண்டைத் தவிர அவதாரத்துக்கு வேறு சான்றுமில்லை, ஸாக்ஷியுமில்லை.
அவதார வாழ்விலும் மானுடருக்குரிய வெளி ஏற்றத் தாழ்வுகள், வெற்றி தோல்விகள், பூஷணை தூஷணைகள் இருப்பதில் ஒரு ஸூக்ஷ்மம் குறிப்பாகத் தெரிகிறது. இவற்றால் உள்ளே நாம் பாதிக்கப்படுவதுபோல் அவதார புருஷர் பாதிக்கப்படவில்லை என்பதே அது. அடி வாங்கிய போதும், இடறி விழுந்தபோதும், திருட்டுப் பட்டம் பெற்ற போதும், கைப்பொருளைப் பறிகொடுத்தபோதும், பிறர் வீட்டில் இடி சோறு உண்டபோதும், பிற்பாடு மாந்திரீகரிடம் படாத பாடுகள் பட்டபோதும் ஸத்யா உள்ளூரக் கலங்காமல் தெளிந்தேயிருந்த பெருமைக்காகவே இவை அத்தனையும் நடந்தன எனலாம். அவதார வாழ்வில் இப்படி நேர்மாறான அஸம்பவங்கள் நடக்கலாமா என்பது ரோஜாவுக்கு இத்தனை துர்நாற்ற எரு வைக்கலாமா என்று கேட்பது போலத்தான். அந்த எரு இருந்தால்தான் ரோஜா ரோஜாவாகும்.
சாலையில் தடுக்கி விழுந்தது இருக்கட்டும்; இம்மாதிரி நிகழ்ச்சிகளில் ஸ்வாமி அவதாரத்திலிருந்தே தடுக்கி விழுந்தது போல் யாருக்காவது தோன்றலாமாயினும் ஸ்வாமிக்கு என்னவோ அந்தத் தோல்வி உணர்வு லவலேசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இல்லாவிடில் இன்று இவ் விஷயங்களைத் தாமாகவே ஸர்வ ஸஹஜமாக விவரித்துச் சொல்வாரா? இவற்றைச் சொல்கையில் எந்தத் தயக்கமுமின்றி, உள்ளுறுதி குலையாமலே அவர் இருப்பதிலிருந்து இச்சம்பவங்கள் வாஸ்தவமாக நடந்த சமயத்திலும் அவர் இதே நிலையில் தான் இருந்திருக்க வேண்டும் என்று தெளிவாகிறது.
அவதார வாழ்விலே தாம் செய்யும் சில ஸங்கல்பங்கள் பொய்க்க வேண்டும் என்றும் அவதாரம் எடுக்குமுன் அவரே ஒரு மஹா ஸங்கல்பம் செய்து கொண்டிருப்பாரோ? அவதாரத்திலே வெளியில் தோல்வியாகத் தோன்றுபவற்றை அவர் ஏற்றுக்கொள்ளும் போதே, இந்தத் தோல்வியும் தமது ஆதி ஸங்கற்பமே, மனித வாழ்வை விளையாடிப் பார்ப்பதில் தாமே ஆதியில் வகுத்துக்கொண்ட விதியே, என்ற திருடமான பிரக்ஞையும் அவருக்கு இருக்குமோ?
சரி, சரி, மீண்டும் இந்தக் கேள்விபதில் எல்லைக்குள் ஏன் அவதாரத்தை அடைக்கப் பார்க்க வேண்டும்?
இன்னோர் அழகிய அம்சத்தைமட்டும் பார்த்து விடலாம். பழைய விருத்தாந்தங்களை பகவான் நினைவு கூர்கையில் இடறி விழுந்த சம்பவங்களை இடறாமல் சொல்லும் சிறப்புக்கு சமமாக இன்னொன்று தெரிகிறது. முரட்டு மாணவரையும், மிரட்டி உருட்டிய மாந்திரீகரையும், திருட்டுப் பட்டம் கட்டிக் குழந்தையின் கைக்காசைப் பிடுங்கிக்கொண்ட துஷ்டையையும், மட்டம் தட்டிய பந்துக்களையும், விஷமே வைத்த நஞ்சு நெஞ்சர்களையும் பற்றி எல்லா விவரமும் கூடுதல் குறைதல் இல்லாமல் ஸ்வாமி சொன்னாலும், இத்தகையவர்களிடம் அணு மாத்திரம்கூட வெறுப்பு இல்லாமலே கூறுவது அதிசயத்திலும் அதிசயம்! முரடர், துஷ்டை, நஞ்சுநெஞ்சர் என்றெல்லாம் நாம் சொன்னாலும் அந்தத் தேன் நாக்கில் இந்தத் தீவாக்குகள் வருவதேயில்லை! தவறு செய்தவர்களைப் பற்றிப் பரிதபித்தும் அநுதபித்தும்கூடப் பேசும் அந்த அமுத நா! ஒருத்தரைக் குறித்து உள்ளபடி ‘மஹா துஷ்டர், நடத்தை போதாதவர்‘ என்றெல்லாம் ஸ்வாமி சொன்னாலும்கூட அந்த வார்த்தைகள் matter of factஆக, காழ்ப்பு இன்றி, படத்தில் தீட்டிய தீயாக இருக்குமேயின்றி, அதில் நிஜமான சூடு இராது. படத் தீயும்கூட. ரொம்பவும் உக்ரச் சிவப்பில் குழைத்திராமல் செம்மஞ்சளாகத்தானிருக்கும்! நாமாக இருந்தால் மணியம்கோஷ்டியை ‘மஹாபாபங்கள் செய்த கயவர்‘ என்போம். ஸ்வாமியோ, அவர்களை ‘அவ்வளவு சரியா நடந்துக்காதவங்க‘ என்று வர்ணிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார். காசைப் பிடுங்கிக் கொண்ட புண்யவதி பற்றி ஒரு ரிமார்க்கும் சொல்லாமலே அவர் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டு போகிறார்! தங்கமான மனம் என்று சொன்னால் போதாது! தங்கத்துக்கு மேலே உயர்வாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் ஸ்வாமியின் உள்ளத்துடன் ஒப்பிடுவதற்கு.
**
“சாரணர் பணிசெய்த புஷ்பகிரிச் சந்தைக்குத் தாம் போகும் வழியில் கேட்பாரற்று ஒரு பீடிக் கட்டும் ஓரணாவும் கிடந்தது; அந்த அணாவை மட்டும் தாம் எடுத்துக்கொண்டது; அதை வைத்து அதிருஷ்டப் போட்டி ஆட்டம் ஆடி புஷ்பகிரியில் தங்குவதற்கான தமது அத்தியாவசியச் செலருக்கு வேண்டிய தொகை சம்பாதித்தது ஆகியவற்றைக் கரவறச் சொன்ன நரவரர், உழைப்போ, புத்திசாலித்தனமோ சேராமல் இந்த மாதிரிப் பணம் வைச்சு லக்கி ப்ரைஸ் ஆடினது ‘காம்பிள்‘தான் (குதாட்டம்தான்.) இது ஸ்வாமிக்குக் கொஞ்சமும் ஸம்மதமில்லாதது. ஏதோ ஒரு ஸந்தர்ப்பத்திலே ஸ்வாமி இப்படிப் பண்ணினேன் என்கிறதாலே நீங்க யாரும் அந்த வழி போயிடக்கூடாது” என்று மனம்விட்டு உபதேசித்தார்.
‘அவதார வாழ்வில் ஏன் அவலங்கள் நடக்க வேண்டும்?’ என்ற கேள்வியை விடுவோம். ‘அவதார வாழ்வின் அவலங்கள் எப்படி அம்பலமாயின?’ என்ற கேள்வியைப் பார்ப்போம். ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி வாலியை மறைந்திருந்து வதம் செய்ததையும், ஸீதை காணாமற் போனபோது அவர் ஸாமானியரிலும் ஸாமானியர்போல விரகத்தில் தவித்ததையும் ஸத்தியம் தப்பாத வால்மீகி அம்பலப்படுத்தினார். ஸாக்ஷாத் ஸ்ரீராமனின் முன்பே அச்வமேத அம்பலத்தில் லவகுசர் இவ் விவரங்களை அரங்கேற்றிப் பாட அவதாரனும் அதைக் கேட்டு மகிழ்ந்தான். கண்ணன் செய்த கள்ளங்களை, கபடுகளை வியாஸாசாரியரும் சுகப் பிரம்மமும் பாரத, பாகவதங்களில் மறைக்காமல் தெரிவித்தனர். இந்த மஹான்கள் இவற்றை எழுதாமலே விட்டிருந்தால் கேட்பார் யாருமில்லை. ஆனாலும் பொய்யாமொழியினரான அவர்கள் எதையும் ஒளிக்கவில்லை. நம் பிரேம பகவான் ஸத்ய ஸாயி அவதாரத்திலோ, ஸாக்ஷாத் அவரேதான் அவதாரத்தின் அடிச்சறுக்கல்கள் என்று தோன்றக்கூடிய நிகழ்ச்சிகளை அவிழ்த்து விடுகிறார்! அடிச்சறுக்கலும் இருந்தால்தான் அவதாரம் அவதாரமாகும் என்னும்போது ஒளிக்க என்ன இருக்கிறது? நாம் அவருக்கு வெளியிலே ஓடி ஒளிகிறபோது தான் நமக்கு இது ஏற்காமல் போவது. அவரோடு இழைந்து விட்டால் கோளாறு எதுவும் தெரிவதில்லை. லீலா நாடகத்தில் எல்லாமே அவசியமான ரஸங்களாகின்றன.
அவதாரத்திலே தெய்வத்தன்மை மானுடத்தை ஜீர்ணித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கான பித்த நீர், கணய நீர் இத்யாதிச் சுரப்புக்களில் எச்சிலும் ஒன்று, குறைகள் போலத் தோன்றுவது எச்சில்தான். எச்சில் வெளியில் பட்டால்தான் துச்சம். உள்ளுக்குள்ளே அது ஊற வேண்டியது அத்தியாவசியம். தெய்விகம் மானுடத் தன்மையை நன்றாகக் கூட்டி மென்று விழுங்க வேண்டுமாயின் குறைகளாகத் தோன்றும் உமிழ்நீர் சுரந்தேயாக வேண்டும் போலும்!
***
அண்ணி அகத்தாரை இன்று நம் அண்ணல் விட்டுக் கொடுக்காமல் ‘இல்லு அல்லுடு‘வின் மாறு வேஷத்தில் சொல்வது பெரிசில்லை. அன்றே பால ஸத்யா அவர்களை விட்டுக் கொடுத்ததில்லை; காட்டிக்கொடுத்ததில்லை. ஆம், தம்முடைய பெற்ற தகப்பனாரிடங்கூட நம் சின்ன ஸ்வாமி மதனி வீட்டாரைப் பற்றிக் குறை சொன்னதில்லை. தந்தை வெங்கப்ப ராஜு ஒருமுறை கமலாபுரத்துக்கு வந்திருந்தார். என்ன இருந்தாலும் அவர் பிள்ளை வீட்டு ஸம்பந்தியல்லவா? அதனால் அண்ணி வீட்டார் அவர் வந்தபோது ஓரளவு உபசாரமாகவே நடத்தினார்கள். அவர் உடனிருந்தபோது ஸத்யாவிடமும் ஸ்வய ரூபத்தைக் காட்டாமலே இருந்தார்கள். ஸத்யாவும் தகப்பனாரிடம் ஒரு வார்த்தை முணமுணத்தானில்லை. அவராகக் கேட்ட போதும் அவர்கள் தன்னை நடத்தும் விதத்தில் அதிருப்தி தெரிவிக்கவில்லை. இடிசோறு தின்று, அடி வாங்குவதேதான் அவதாரத்துக்கு மஹா திருப்தியாக இருக்க அதிருப்தி எப்படித் தெரிவிப்பது?
அடடா, ஸம்பந்தியகத்தாரிடமும் அடி வாங்கினானா?
ஆம், அடியாலேயே (ஸ்கேலாலேயே) அடி வாங்கினான்!
ஒருநாள் ஸத்யா அந்த வீட்டு ஆடும் நாற்காலியில் ஆடிவிட்டதற்காக அண்ணியின் அண்ணாவான சுப்பாராஜு ஏகமாக வைது, ஸத்யாவிடம் கையை ஓங்கிக் கொண்டு போனதாகவும் அப்போது ஸத்யா வாசலுக்குத் துள்ளி ஓடி ஒரு சபதம் செய்ததாகவும் “ஸ்வாமி” நூல் பதினோராம் அத்யாயத்தில் கூறியிருக்கிறேன்.
அந்த மனிதர் (மனிதத்தனம் இல்லாவிட்டாலும் பகவான் பிரீதிக்காக இப்படிச் சொல்வோம்) கையை ஓங்கியபடிச் சென்றார் என்பது சரியில்லை. ஸத்யாவை நன்றாகச் சாத்தியும் இருக்கிறார்! கையிட்டு அடிக்காமல் ஸ்கேலால் செம்மையாகக் கொடுத்திருக்கிறார். குழந்தையின் கமலக் கையை நீட்டச்சொல்லி, குடம் குடமாகத் தண்ணீர் சேந்தி வந்த அந்தச் சேவகனின் தழும்புற்ற தாமரைக் கரத்தில் அளவுகோலால் அடி அடி என்று அடித்திருக்கிறார். அவரது குரூரத்துக்கு அளவை காட்ட முடியாமல் அந்த ஸ்கேலே உடைந்துவிட்டதாம்!
இடுக்கண்ணில் நகைக்க வேண்டிய முறைப்படி இச்சமயத்தில் ஒரு ஜோக்கை நினைப்பூட்டிக்கொண்டு மனத்தை மாற்றிக்கொள்ளத் தோன்றுகிறது. நான் குழந்தையாயிருந்த காலத்தில் ‘விகடனி‘ல் இரு சொல் அலங்கார ஹாஸ்யப் படம் ஒன்று இதழ்தோறும் வெளியாகும். அதில் “அம்பிகைக்குப் பூசை” என்பது இன்றும் மறக்கவில்லை. இப்படித் தலைப்பிட்டு, அதற்குரிய சித்திரமாக, ஒரு சிறுவன் உபாத்தியாயரிடம் கைநீட்டிப் ‘பிரம்பம் பழம்‘ வாங்குவதாகப் போட்டிருந்தது. “அம்பி (சிறுவன்) கைக்குப் பூசை” என்று வாசகர்கள் ஊகித்துப் பொருள் கொள்ளுமாறு விட்டிருந்தார்கள். இன்று, முக்கியமாக தசராவில், அம்பிகையாகப் பூஜிக்கப்படும் நம் அவதாரர் சின்ன அம்பியாக இருந்தபோது தம் கையில் ‘பூசை‘ பெற்றதையோ மெய்யாலுமே பூஜையாக உவந்திருக்கக் கூடியவர்தான்!
இப்படி அடி வாங்கின சமயத்திலேதான் அப்பா வந்திருந்தார். அப்படியும் அவரிடம் ஸத்யா தமக்கு இன்னா செய்தாரைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. ஆனால் வெங்கப்பாவே ஒரு தினுசாகக் கேள்விப்பட்டார். அவர் கேள்விப்பட்டதைக் கொழுக்கட்டையாக வீங்கியிருந்த குழந்தையின் கையும், உடைந்து கிடந்த ஸ்கேல் துண்டுகளும் உறுதிப்படுத்தின.
“அப்பாவுக்கு ரொம்ப வேதனையாயிடுச்சு. என்னைத் திருப்பி அழைச்சுக்கொண்டு போயிடலாமான்னு பார்த்தாரு. நான்தான் அவருக்கு ஆறுதல் சொன்னேன். ‘படிப்பு’ முக்கியம்னுதான் இங்கே வந்திருக்கிறது. காலைச் சுருட்டிக்கொண்டு படுக்க இவங்க இடம் கொடுத்து, வயித்துக்கு நாலு பிடி சோறு போடறாங்களா இல்லியா? அதனாலே திட்டறதுக்கும் அடிக்கிறதுக்கும் இவங்களுக்கு ‘ரைட்‘ இருக்கு. நாம இதைப் பெரிசு பண்ணி விரோதமாக்கிக் கொண்டு நம் காரியத்தைக் கெடுத்துக்கக் கூடாதுன்னு விவரமாச் சொல்லி அவருக்குப் புரிய வைச்சேன்!” என்றார் ஸ்வாமி.
தன் காரியம் ஆகவேண்டுமென்பதற்காக மானத்தை விடத் துணிந்தார் என்று குதர்க்கம் செய்து கொள்ளக்கூடாது. ஏனென்றால் இங்கே படிப்பு என்ற ஸ்வய காரியத்தை முன்னிட்டு அங்கு தங்கவேண்டுமென்று இவர் சொன்னாலும் சிறிது காலத்துக்குப்பின் நடந்தது என்ன? இவர் பள்ளிப் படிப்பைப் பூர்த்தி செய்தாரா? அதற்குள்தான் உள்ளேயிருந்த ஷீர்டிக் கிழவர், ‘இனியும் பிள்ளை வேஷம் போடமாட்டேன், பூர்ண ரூபத்தில்தான் வெளிப்படுவேன்‘ என்று வெடித்து வர, ஸத்யநாராயண ராஜு ஸத்யஸாயி பாபாவாகி விட்டானே! ஆகையால் இப்போது தந்தையின் மன நிலையைக் கருத்தில் கொண்டே அவர் ஏற்குமாறு கல்வி என்ற காரணத்தை ஸத்யா கற்பித்திருக்கிறான் என்பதுதான் உண்மை. குடும்பத்துள் பேத உணர்ச்சி ஏற்படக்கூடாது என்பதுதான் அவன் வாஸ்தவத்தில் விரும்பியது.
பள்ளிப்படிப்பை முடிக்காவிட்டாலும் தாம் பள்ளி மாணவனாக வேஷமிட்டதை ஸ்வாமி ரஸித்தே கூறுவார். “அவதாரங்களானாலும் ஆசிரியர் என்று ஒருவரிடம் கட்டுப்பட்டுக் கல்வி கற்பதுண்டு. தனக்கே எல்லாம் தெரிந்தாலும் மாணாக்கனாக இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதில் உலகுக்கு உதாரணமாக வினயம் முதலான நற்பண்புகளை நடத்திக்காட்ட வாய்ப்புக் கிடைக்கிறது. ஸ்ரீராமர் வஸிஷ்டரின் குருகுலத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் ஸாந்தீபனியின் குருகுலத்திலும் வித்யாப்யாஸம் செய்தார்கள். ஸ்வாமி புட்டபர்த்தி, புக்கப்பட்டணம், கமலாபுரம், உரவகொண்டா ஆகிய நாலு ஊர்ப் பள்ளிகளில் படித்தேன்”.
ஸம்மர் கோர்ஸ் மாணவரிடம் சொல்கிறார். “ஸ்கூலோட, காலேஜோட படிப்பு முடிஞ்சுடுதா என்ன? இல்லை. லோகமே ஒரு குருகுலம்தான். அதிலே அன்னன்னிக்கும் புதுப் புதுப் பாடம் கத்துக் கொண்டேதான் இருக்கணும். யூனிவர்ஸிடி என்கிறதை ‘விச்வ வித்யாலயம்‘ என்கிறோம். வாஸ்தவத்திலே விச்வமே வித்யாலயம்தான்; யூனிவர்ஸ் முழுதுமே காலேஜ்தான்.”
***
உள்ளேயிருந்த ஷீர்டிக் கிழவர் பூர்ண ரூபத்துடன் முண்டிவர, உற்றத்தினரும் சுற்றத்தினரும் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் அவரை உள்ளுக்குள்ளேயே தள்ளி மூடிவிடச் செய்த முயற்சிகளின் விளைவாக அரக்கத் தன்மை வாய்ந்த மாந்திரீகரிடம் பால ஸத்யா அநுபவித்த கொடூரங்களை ஸாயி பக்தர் அறிவர். “ஸ்வாமி”யிலும் பரக்கச் சொல்லியிருக்கிறேன். நீர் தெளித்து சொகஸாக வைக்க வேண்டிய புஷ்பக் குழந்தையை அம்மிக் குழவியால் துவையல் அரைத்த கோரப் படலம் அது! அதில் விட்டுப்போன சில கொடுமைகளைக் கொசிறு போடுகிறார், அநுபவித்த நம் காவியநாதனே! (உள்ளூர அவர் அநுபவிக்காததால்தான்!)
“நான் ஸாயிபாபாவாக என்னைத் தெரிவிச்சுக் கொண்ட அப்புறம் என்னை வெளிலே காட்டவே வீட்டுக்காரங்க பயப்பட்டாங்க. ‘இந்தப் பிள்ளை என்னவோ அதீத சக்தியெல்லாம் காட்டறதே! பேயோ, பிசாசோ, பூதமோ, வேதாளமோ?’ என்கிற பயம் ஒரு பக்கம். (தேவ தேவ தேவாதி தேவப் பெருமா‘ளான நம் கோமள, மோஹன, ஸுந்தர, ஸுகுமார, ஸௌம்ய மூர்த்தி தம்மைப் பேயாக, பிசாசாக, பூதமாக, வேதாளமாகப் பெற்றோரே நினைத்ததை மனம் சுளிக்காமல் சொன்ன ஸமநிலை அற்புதம்தான்!) அதோடு, அந்த ஸமயத்தில் பிரிட்டிஷ் ஸர்க்கார் காங்கிரஸ் மூவ்மென்டைக் கடுப்படுத்தற தீவிரத்திலே ஊர் ஊராப் போலீஸை அனுப்பிச்சு ஏராளமானவங்களை அரெஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தது. ‘இந்தப் பிள்ளை ஊர் ஒப்ப இல்லாம ஏறுமாறா என்னவோ செய்யறதே; இதைப் போலீஸிலே தள்ளிக்கொண்டு போயிடப் போறாங்களே!’ன்னு வேறே என் வீட்டுக்காரங்களுக்குக் கிலி. பல மாஸம் என்னை அக்ஞாத வாஸம் மாதிரியே வெச்சிருந்தாங்க.
“அப்பதான் நடுநடுவே என்னை மந்திரவாதிங்ககிட்ட அழைச்சுக்கொண்டு போனது. (இனி, நாம் ஏற்கெனவே கேள்விப்பட்ட கொடூரங்களுக்குக் கொசிறு!) ஒரு மந்திரவாதி ஸ்வாமி கபாலத்திலே அங்கங்கே துளைச்சு ஓட்டைங்க போட்டாரு. அதுக்குள்ளாலே பழுக்கக் காய்ச்சின இரும்புக் கம்பிங்களைச் சொருகினாரு. பல இடத்திலே என் தோலைக் கீறி, அந்த வெட்டுங்களுக்குள்ளே கொதிக்கிற காரச் சாறுங்களை ஊத்தினாரு. எல்லாத்துக்கும் நான் பாட்டுக்கு இருக்கிறபடியே இருந்தேன்”.
இப்படி ‘இருக்கிறபடி இருப்பதைத்தான் ‘ஸத்‘ என்றும், ‘Being’ என்றும் வானளாவச் சொல்வது! அது பால ஸத்யாவுக்கு அநாயாஸமாகக் கைவந்த இயற்கை நிலையாயிருந்தது. இதுவே ஸ்வாமிக்கு ஸ்வபாவமாக இருப்பதால் இதைச் சொல்லும்போது சற்றேனும் பெருமிதவுணர்ச்சி தொனிக்கவில்லை. மனஸில் பட்டுக் கொள்ளாமலே, ஏதோ மெல்லிசாக வெள்ளை மேகத் துணுக்குகள் ஓடிக் கொண்டிருக்கிற ஆகாசம் மாதிரியிருந்து கொண்டு, கதை சொன்னார். கேட்கிறவர்களுக்கோ பால ஸ்வாமிக்கு இப்படிக் கஷ்டத்துக்கு மேல் கஷ்டமா என்று மனம் பொறுக்கவேயில்லை. அதிலும் மாணவர்களிடம் அவர் இக்கதைகளைச் சொன்னபோது அனந்தப்பூர்ப் பெண்கள் மூசு மூசு என்று அழவே ஆரம்பித்து விட்டதுகள்! ஸ்வாமி கவனிக்காததுபோலவே சொல்லி முடித்துவிட்டு, ஹாரத்தி கொடுத்தபின் எழுந்திருந்து செல்கையில், “உங்களையெல்லாம் ரொம்ப அழவெச்சுட்டேன், இல்லை?” என்று பாதிப் பெருமையும், பாதி மன்னிப்பும் தொனிக்கக் கேட்டுக்கொண்டே போனார். விட்ட இடத்தில் தொடரலாம்:
“பிசாசு எதுக்கும் மசியல்லியேன்னு பார்த்த மாந்திரீகர் ஒரு குழி வெட்டினாரு. ஸ்வாமியை அதிலே தள்ளி நிறுத்தி வெச்சு, கழுத்து வரைக்கும் மண்ணாலே மூடிப் புதைச்சுட்டாரு. சுத்தி இரும்பு barகளைப் போட்டு நான் அப்படி இப்படி நகர முடியாமப் பண்ணப் பார்த்தாரு. ஆனா, (குதூஹலச் சிரிப்புடன்) ஸ்வாமி நான் சும்மா என் உடம்பை ஒரு அசக்கு அசக்கிக் கொண்டேனோ இல்லையோ, குழி, இரும்பு bar எல்லாத்தையும் விட்டு ‘ஃப்ரீயா வெளிலே வந்துட்டேன். இப்படி வந்துட்டேனே என்கிறதுக்காக என்னை மாந்திரீகர் பிடிச்சு மறுபடி இதே ரீதியிலே ‘ட்ரீட்மென்ட்‘ பண்ணினாரு! (என்னைப் பிடிச்சு‘ என்கிறாயே ஸ்வாமீ! கழுத்தளவு மண் மூட்டத்தையும் இரும்புத் தடுப்புக்களையும் ஸங்கற்ப மாத்திரத்தில் உதறி வெளி வந்த உன்னை யார் பிடிப்பது நீயே பிடிபட்டாலொழிய? மந்திரவாதி கைக்கு நீ பிடிபடுவாயானால் எங்கள் மனம் உன்னை என்றைக்கோ பிடித்து வைத்துக் கொண்டிருக்குமே!) மந்திர வாதிங்க இந்த மாதிரி எல்லாம் என்ன சித்திரஹிம்ஸை செஞ்சாலும் ஸ்வாமிக்கு ஒரு சிரமமும் தெரியலை. ஸ்வாமி பாட்டுக்கு மந்தஹாஸம் பண்ணிக்கொண்டேயிருந்தேன்! ‘தான்‘ சரீரம் என்கிற ஐடென்டிஃபிகேஷன் ஸ்வாமிக்கு எப்பவுமே அணுமாத்திரம் கூட கிடையாதில்லையா? அதனாலேதான் எந்த வலியும் இல்லாம, நோவு தெரியாம ஸுகமாயிருந்தேன்”.
ஸ்வாமியின் சிறு வயதில் அவர் ஆளான சிறுமை, கொடுமைகளை நினைத்துத் துயருறும் பக்தர்களுக்கு அமிருத அஞ்ஜனமான வார்த்தைகள்! வலியில்லாத, நோவு தெரியாத, ஸுக ஸ்வரூபனான பால ஸாயி ஒரு கஷ்டமும் படவில்லை. நித்யாநந்தனுக்குக் கஷ்டமாவது? அந்த நித்யாநந்த வைபவத்தால்தான், வயதிலே அவரது பாலகாண்டம் என்றோ முடிந்துவிட்டாலும், இன்றைக்கு, ஐம்பத்து மூன்றாவது பிராயம் முடிகிற சமயத்திலும் அவர் பாலனாகவே விளங்குகிறார்!