சத்ய சாய் – 11

31. யமாலயமாகாத ஹிமாலயம்!

லையேறும் நிபுணர் பில் ஐட்கின் இமயமலையில் மிகவும் சிரமப்பட்டே அடையக்கூடிய நந்தாதேவி சரணாலயத்துக்குப் புனிதப் பாத யாத்திரை செல்ல ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அச்சமயம், அதாவது 1980 ஜூன் மத்தியில், பாபா டில்லிக்கு விஜயம் செய்திருந்தார். ஐட்கின் அவரை வணங்கி யாத்திரை வெற்றிக்கு ஆசி வேண்டினார். பாபா ஆசீர்வதித்தார்.

ஐட்கினின் நண்பரான ஓர் அம்மையார், “பாபா கையால் உங்கள் ஐஸ்ஆக்ஸைத் தொட்டு வாங்கிக் கொள்ளுங்கள்என்றார்.

பாபா குமிண் நகையுடன் ஐஸ்ஆக்ஸை எடுத்துப் பார்த்து அதைக் குறித்துத் தோண்டித் துருவும் கேள்விகள் கேட்டார்.

பனி போர்த்த மலைப் பகுதிகளில் கால் ஊன்றுவதற்காகப் படிபோல தோண்டித் துருவி வெட்டிக் கொண்டு போக உதவும் கருவியே பனிக்கோடாரியான ஐஸ்ஆக்ஸ். சில இடங்களில் அதன் குத்தும் பகுதியை மலையுள் ஆழமாகச் செலுத்தி, அதையே கெட்டியாகப் பற்றி மேலேறும்படியும் ஏற்படுவதுண்டு.

சட்டென்று பாபா வழக்கமான கையசைப்பு இல்லாமலேயே விபூதி ஸ்ருஷ்டித்து, வெகு கவனமாக அதைப் பனிக்கோடரியின் குத்தும் பகுதியில் மட்டும் தேய்த்தார். என்ன பாக்யம் செய்திருந்ததோ அந்த அசேதனப் பொருள், சைதன்யரூபனின் திருநீற்றுப் பூச்சை அவன் கையாலேயே பெற?

உனக்கு வெற்றிஎன்று ஐட்கினிடம் கூறிக் கோடரியை அவரிடம் கொடுத்தார் பாபா.

***

ஜூலை இருபத்தியாறாம் தேதி, ஐட்கின் நந்தா தேவி ஏறிக்கொண்டிருக்கிறார். ரிஷி கங்கா மலைப் பள்ளத்தாக்கின் சறுக்குப்பாறைகளைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறார். காட்டுக் கட்டைகளான இரண்டு கார்வாலி போர்டர்கள் வழிகாட்டிப் போகிறார்கள். இவர்போலக் காலணி போடாமல், வெற்றுக் காலோடேயே அநாயாஸமாகப் போகிறார்கள். இவர் கயிற்றின் துணை கொண்டு ஏறுவதும் தாண்டுவதும் போலின்றித் தாங்களே கிறுகிறு என ஏறித் தாண்டி இவருக்கு முன்னதாகச் செல்கிறார்கள். அவர்கள் முன்னே போய் இவருக்காகக் கயிறு கட்டுவார்கள். இவர் கயிற்றின் துணையில் அவர்களைத் தொடருவார்.

குறுகலான ஓர் இடுக்கு. கீழே ஆயிரம் அடி ஆழ கிடுகிடு பள்ளத்தாக்கு! அதிலே காட்டாறு பிரவாஹமாக ஓடுகிறது! கயிற்றின் உதவியின்றி ஐஸ்ஆக்ஸால் குத்திக் கொண்டு, அதைப் பிடித்தவாறே ஏற வேண்டியதாக அவ்விடத்தில் ஒரு பகுதியிருந்தது.

கார்வாலிகள் அப்பகுதி உச்சிக்குப் போய் இவர் வரக் காத்திருந்தனர்.

மலையின் ஒரு பாறையில் இவர் கோடரியால் ஒரு போடு போட்டார். அது ஆழமாய் உள்ளே போயிருக்கும் என்றெண்ணி அதன் காம்பைப் பிடித்துக் கொண்டார். மேலே ஏற முயன்றார்.

என்ன விபரீதம்! அப்பகுதியில் மலையின் திட்பத்தைச் சரியாய் அறியாமலும், கோடரியை உரிய விசையுடன் வீசாமலும் பயங்கர முட்டாள்தனம் செய்து விட்டோமெனக் கண்டார் ஐட்கின். பனிப் பாறையாகவோ, கெட்டிப்பட்ட ஈர மண்ணாகவோ இருந்திருந்தால்தான் இவர் பிரயோகித்த விசைக்கு ஆக்ஸின் குத்துப் பகுதி முழுசாக ஆறு அங்குலமும் உள்ளே போயிருக்கும். அதுவோ மேலே பிசுபிசு மண்ணும், உள்ளே அழுத்தமான கற்பாறையுமான இடம். எனவே பிசுபிசுவில் மட்டும் மூன்று அங்குலம் பதிந்து அதற்கு மேல் உள்ளே போக முடியாமல் ஆக்ஸ் நின்றது! பிசுபிசு மண் எந்த நிமிஷமும் ஒரேயடியாய் உதிர ஆரம்பித்தால் இந்த அரைப் புதைப்பும் போயே போய், ஆக்ஸும், அதைப் பிடித்துக் கொண்டுள்ள ஐட்கினும் ஆயிரம் அடி கீழுள்ள காட்டாற்றில் ஸமாதியாக வேண்டியதுதான்.

இதற்கு முன் அவர் காலூன்றிய இடத்திலேயே மறுபடியும் காலை ஊன்றலாமே என்றால், அதுவும் பிசுபிசு மண்தான். ஒரு தேய்ப்புத் தேய்த்துக்கொண்டு இவர் அதிலிருந்து எழும்பிக் கோடரிக் காம்பைப் பிடித்தபோது, அந்த மண்ணும் அதோடு கல்லும் கட்டியும் பொலபொல என்று சரிய ஆரம்பித்ததில் இப்போது அந்த இடமானது இவரது காலுக்கு எட்டாதவாறு அரிபட்டே போய் விட்டது!

வேறு வழியில்லை. விழுந்து சாகத்தான் போகிறோம். சாகத் துணிந்துதான் இந்த ஸாஹஸத்தில் இறங்கினோம். ஆனால் ஸாஹஸமாகச் சாகாமல் மற்ற மலையேறிகள் பரிஹாஸம் செய்யுமாறு முட்டாள்தனம் செய்து சாகிறோமே!’

இல்லை! அவரைச் சாக விடவில்லை சாயி! நல்ல தேக பலமுள்ள அவர் பிடித்துக் கொண்டு தொங்கியும் மூன்றே அங்குலம் உள்ளே போயிருந்த கோடரி பிடுங்கிக் கொண்டு விழவில்லை! குலத்தைக் கெடுப்பது என்று சொல்லும் கோடரிக் காம்பை இவர் பற்றியிருந்தாலும், எத்தனையோ குலங்களை வளர்க்கும் குழகனின் அழகுக் கையால் விபூதி பூசிக்கொண்ட மஹிமையில் கோடரியின் குத்துப் பகுதி வெளியே வராமல் இவரைக் காத்தது!

கார்வாலிகள் இவர் இருந்த இடத்துக்கு வந்து இவரை மீட்கும் வரையில், பிசுபிசு மண்ணில் பாதியே போயிருந்த குத்து முனையானது ஓர் ஆள்பலம் அதைப் பிடித்துக்கொண்டு தொங்கியும் பிடுங்கிக்கொள்ளாதது ஐயம் திரிபற அவனது அருளாற்றலால்தான்!

அப்புறம் அவன் சொன்னாற் போலவே ஐட்கினின் யாத்திரை வெற்றியாயிற்று. சரியாக குரு பூர்ணிமா அன்று நந்தா தேவி சரணாலயமடைந்தார். இமாலயத்தில் யமாலயம் காண இருந்தவர்.

அந்த ஸாயியாம் ஆனந்தா தேவியின் சரணமே நமக்கு என்றும் ஆலயமாயிருக்கட்டும்!

32. உதகை வெள்ளத்தில் உதவிய கை!

1978நவம்பர் 4-ந் தேதி உதகை கண்ட திடீர் வெள்ளம் – ‘ஃப்ளாஷ் ஃப்ளட்என்று பத்திரிகைகளில் வெகுவாய் வர்ணிக்கப்பட்ட ஊழித் தாண்டவம் அதிலே அன்பர் நஞ்சன் தப்பிப் பிழைத்தாரெனில் அது நஞ்சமுதாக்கும் நம் ஸாயி துர்கையின் அருட் திறத்தால்தான்!

இரவு ஜீப்பிலே போய்க்கொண்டிருந்த நஞ்சன் வெள்ளம் ஓடிய பாலத்தின் அருகே வந்தபோது மழை பேய்க் கோலம் பூண்டது. வானத்தை அப்படியே திறந்து விட்டு, உள்ளேயுள்ள ஒரு வெள்ளத்தைதப தபஎன இறக்கி விட்டது போல் கொட்டிற்று! பாலத்தின் கீழோடிய வெள்ளமும் அதற்குப் போட்டியாக குமுகுமுவென்று விநாடிக்கு விநாடி உயர்ந்து வந்தது.

பாலத்தை எப்படியேனும் கடந்துவிடலாமென எண்ணி ஜீப்பை அதில் ஓட்டியது விபரீதத்தில் கொண்டுவிட்டது. பாலத்தின் மேலும் வெள்ளம் குபுகுபு என ஏறிவிட்டது. பிரவாஹத்தில் ஜீப் ஸ்தம்பித்து நின்றுவிட்டது. அதனுள்ளும் உதக தேவதை சீறிக்கொண்டு உட்புகுந்து விட்டாள்!

செய்வதறியாது ஜீப்பிலிருந்து குதித்து விட்டார் நஞ்சன், கண் மண் தெரியாத கன மழையும், காலின் கீழ் புரண்டோடும் நீர்த் திரளும் அவரை எப்படியெப்படியோ பிடித்துத் தள்ளின. சமாளிக்க அவரது ஐம்புலனுடலுக்கு சக்தியில்லை. ஸாயி நாம சக்தியையே ஆவி இறுகப் பற்றிக்கொள்ள, பாலத்தின் செங்குத்துக் கம்புகளிலொன்றைக் கைகளால் அழுந்தப் பற்றிக் கொண்டார்.

அப்புறம்? என்ன பயங்கரத் திரிசங்குத் தொங்கல் அப்பா? மேலே மேலே சாலையிலும் பாலத்திலும் ஜலம் எழும்பி அலை மோதியதால் அவர் நிலத்தில் கால் ஊன்றி நிற்கவே முடியவில்லை. கம்பின் மீதே ஏறி, காலுக்கு எந்தப் பாவுதலுமில்லாமல், கம்பிலுள்ள தம் கைப்பிடிப்பையே ஆதாரமாகக் கொண்டு ஊசலாடலானார்! –

மேலே இருந்து கொட்டும் தாரையில், உதகையின் உறைபனிக் குளிரில், ஊதல் காற்றின் உத்பாத வீச்சில் மரத்துக் கொண்டே வந்த கைகள் இன்னும் எத்தனை நேரம் பிடிப்பை விடாதிருக்க முடியும்? இவரது பாதம்முழங்கால்இடுப்புமார்பளவும் நீர்மட்டம் ஏறிவிட்டதே! இப்படியும் ஓர் ஆபத்தா?

ஆயினும் நிஜ ஆதாரமான, உண்மைப் பிடிப்பான ஸாயியின் ஸ்மரணையை, அவனது நாமம் கூறி அலறுவதை நஞ்சன் விடவேயில்லை. அதனால் பிடியும் விடவில்லை.

இப்படி அந்தக் காள ராத்ரியில், பிரளயப் பிரவாஹத்தில் தன்னந்தனியராக இரண்டு முழு மணிகள் அவர் ஒரு கம்பைப் பிடித்துக் கொண்டு தொங்கியதை இப்போது அவர் சொல்லும்போதும் கேட்கிற நமக்கே குலை நடுங்குகிறது!

இரண்டு மணிகளுக்குப் பின் வெள்ளம் மெள்ள மெள்ள வடிந்தது. கன வர்ஷம் மெல்ல மெல்ல லேசுத் தூறலாகி அப்புறம் வானம் அடியோடு வெளி வாங்கியது

கைப்பிடியைக் கம்பிலிருந்து விட்டு, நிலத்திலே நிலையாகக் கால் பாவி நடந்தார் நஞ்சன்! ஆம், நிஜமாக அப்படி நடந்தது!

இச் சம்பவத்தில் ஸாயியின் காப்பு அதிசயம் வெளிப்படத் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லைதான். ஆனாலும் ஊரே சொல்லிற்று, அந்த வெள்ளத்தில், அடை மழையில், சுழற் காற்றில், எல்லாவற்றுக்கும் மேலாக பய ப்ராந்தியில் எவராலும் இரண்டு நிமிஷங்கூடக் கம்பைப் பற்றி நின்றிருக்க முடியாதென்றும், இவர் அதைப்போல அறுபது மடங்கு நேரம் அப்படி செய்தது ஏதோ தெய்விக சக்தியால்தானென்றும்! ஏதோ தெய்விக சக்தியல்ல; ஸாயி துர்கையின் சக்தி தானென்று அவருக்கே தொழும்பு பூண்ட நஞ்சனுக்குத் திண்ணமாகத் தெரிந்தது.

இதற்குச் சான்று தேவையெனில் அப்படியொன்றும் இருந்தது! 1975 ஜனவரி முதல் தேதி ஜனனி ஸாயி உதகையில் முகாமிட்டிருந்தார். அன்று அவருக்கு முதல் மாலை போடும் பேறு பெற்றவர் நஞ்சன். நஞ்சனுக்கு நம்பன் ஒரு ரிஸ்ட் வாட்ச் பரிசளித்தார். காலத்தை அளந்து போடும் ஆண்டொன்றின் தொடக்கத்துக்குப் பொருத்தமான பரிசுதான்! இன்று காலன் வாய்ப் படாமல் வள்ளிசாக இரண்டு மணிக் காலம் நஞ்சன் கம்பைக் கட்டிக்கொண்டு தொங்கியபோது, அந்தக் கைக்குச் சக்தியூட்டிய ரக்ஷையாக அக்கடிகாரமே இருந்தது! இத்தனை மழை வெள்ளத்திலும் அதன் தோல்ஸ்ட்ராப் பாதி அறுந்து தொங்கியும் கூட, அது இவர் கையை விட்டு நகராமல் அப்படியே இருந்தது – “நான்தான் உனக்கு இந்தத் தொங்கும் சக்தி தந்தேன்எனச் சொல்வது போல!

ஜலே ஸங்கடேப்ரவாதே
விபத் ஸாகரே மஜ்ஜதாம் தேஹ பாஜாம்
த்வம் ஏகா கதி: தேவி நிஸ்தார நௌகா
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்கே

நீரின் நெரிப்பினில், நீள் புயற் காற்றினில்,
ஆபத்து ஆழியில் ஆருயிர் ஆழ்கையில்
தனிநீ ஒருத்தியே, தேவி! எம் நாவாய்!
தாரணி கடைத்தேற்று தாரிணி துர்க்கையே!
தாளடி பணிந்தோம், தாய், சரண் நீயே!

33. துர்க்கத்தில் தூக்கிய துர்க்கையின் கை!

ம்யூனிஸ்ட் தலைவராக இருந்து,

அப்படியிருந்தாலும், “கம் யூ நெக்ஸ்ட்” – “அடுத்தாற்போல நீயும் என்னிடம் வருவாயடா, அப்பா!” என்று ஸ்வாமியாலேயே சிலேடையாகக் கூறப்பட்டபடி,

ஸ்வாமி பக்தராகி,

தமது பிள்ளையின் திருமணத்தை அந்த அம்மையப்பனே நடத்தி வைக்கும் பாக்கியம் பெற்ற ஒரிகண்டி கோபாலத்தை நாம்அன்பு அறுபது” (அத். 11)ல் சந்தித்திருக்கிறோம்.

அந்தக் கல்யாணத்தின் போது, “ஸ்வாமி ஸந்நிதியில் மாப்பிள்ளையாகிறசான்ஸ்எனக்குப் போயிடுத்தே!” என்று கோபாலம் வருந்த, உடனே ஸ்வாமி, “பரவாயில்லேம்மா! ஸ்வாமி ஸந்நிதியில் நீ ஷஷ்ட்யப்த பூர்த்தி மாப்பிள்ளையாகலாம்என்று கூறி வருத்தம் துடைத்ததும் பார்த்தோமல்லவா?

1980 அக்டோபரில் அந்த அறுபதாண்டு நிறைவு வந்தது. அதற்குச் சில நாட்கள் முன்னதாகவே கோபாலம் தமது குடும்பத்தோடு ஜாம்ஷெட்பூரிலிருந்து புறப்பட்டார்.

ஷீர்டி ஸாயியை தரிசித்துவிட்டுப் பர்த்தி ஸாயியிடம் வர உத்தேசித்தார்.

அது ஒரிஸ்ஸாவில் மார்வாரி எதிர்ப்புக் கலவரம் நடந்த காலம். அநேக நாள்கள் அநேக ரயில்கள் குறிப்பாக இவர்கள் செல்ல வேண்டிய பொகாரோ எக்ஸ்ப்ரெஸ்விடப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த காலம். சரியாக இவர்கள் புறப்பட்ட அன்றே அவ்வண்டி விடப்பட்டதே ஸாயி அருளுக்குக் கட்டியம் கூறுவதாக இவர்கள் பூரித்தனர். கூட்டமான கூட்டம் நெரிந்த அவ்வண்டியில், நிற்க இடம் கிடைத்தாலே அதிருஷ்டம் என்ற நிலையில், அடுத்த ஜங்ஷனான சக்ரதர்பூரிலேயே கண்டக்டர் வந்து கன காரியமாக இந்த நால்வருக்கும்பெர்த்கொடுத்துச் சென்றபோது கட்டியம் கெட்டியாயிற்று!

ஆயினும் மறுதினம் நண்பகல் பர்கட் ஸ்டேஷனில் நடந்ததோ…?

அயர்ந்து தூங்கி அப்போதுதான் விழித்தார் கோபாலம். நல்ல பசி. எனவே வண்டி பத்தே நிமிஷந்தான் நிற்குமென்ற போதிலும் போஜனசாலைக்கு ஓடினார். வேகு வேகு என்று உணவு வாங்கியும் வந்து விட்டார். ஆனால் தண்ணீர் அவசியம் வேண்டியிருப்பதை மனைவி நினைவூட்ட மறுபடி அதற்காகப் போனார்.

வண்டி புறப்பட்டு விட்டது.

அப்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்திருந்த, பசி கொண்ட, கோபாலம் அசக்தராயிருந்தாலும் ஓடோடி வந்தார். இவரது குடும்பம் ஏறியிருந்த பெட்டி இவரைக் கடந்து விட்டது. அதன் பின்னிருந்த பல பெட்டிகளும் நகர்ந்து, ரயில் ஸ்பீட் எடுத்துவிட்டது.

கடைசிப் பெட்டிக்கு முந்தையதான ஒரு முதல் வகுப்புக் கோச்சுக்கு விரைவே தாவினார் கோபாலம். கதவு சாத்தியிருந்தது. கதவை அடுத்திருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு, ஃபுட்போர்டில் காலூன்ற முயன்றார். நஞ்சனைப் போலவே கம்பியைப் பிடித்தாரேயன்றிக் கால் பாவ முடியவில்லை. தொங்கிய காலிலிருந்து காபூலிப் பாதரக்ஷை நழுவி விழுந்துவிட்டதையும் உணர்ந்தார்.

அப்புறம் தலையைச் சுற்றிக்கொண்டு வந்த அரை மயக்கத்தில் தாமும் பிடி நழுவவிட்டார்!

ரயில் சக்கரத்துக்கும் ப்ளாட்ஃபாரத்துக்கும் நடுவேயுள்ள இடுக்கில் தாம் விழுவதை உணர்ந்தார் கோபாலம். ஆவி கூவியது: “ஸாயிராம், ஸாயிராம்!”

நஞ்சனைப் போலின்றி இவர் பிடி நழுவ விட்டார். எனினும், காக்கும் கரம் விடுமா? உணர்வு ஒடுங்கும் முக்காலரைக்கால் இருட்டிலும், இரு இரும்புக் கரங்கள் தம்மைத் தாங்குவதாக கோபாலம் தெரிந்து கொண்டார்! தமது இரண்டு விலாப்புறங்களையும் அக்கைகள் பற்றித் தூக்குவதைப் புரிந்துகொண்டார்!

கடைசிப் பெட்டியான இரண்டாம் வகுப்புக்கோச்சிலிருந்த வங்காளிச் சுற்றுலா கோஷ்டியினர் இவர் உற்ற விபத்தைப் பார்த்து, “மானோ மோரே கேசே” “மனுஷர் செத்துட்டார்!” என்று கூவியதும் வெகு லேசாய் அவர் செவியில் விழ,

அப்புறம் முக்காலரைக்கால் இருட்டு முழு இருளே ஆயிற்று!

கோபாலம் மீண்டும் கண் திறந்தபோதுஆம், கோபாலமும் மீண்டும் கண்ணைத் திறக்கத்தான் செய்தார். ஸாயி பாலனத்தில்! – தாம் ஒரு கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தார்.

ரயிலின் அந்தக் கடைசிப் பெட்டியில்தான், ஸீட்களுக்கு இடையே பெங்காலி டூரிஸ்ட்கள் கித்தான் கட்டில் போட்டிருந்தனர். அதில்தான் இவரைக் கிடத்தியிருக்கிறது. அப் பயணிகள் இவர் மீதே கண் புதைத்திருக்க, அவர்களில் ஓரிருவர் இவருக்கு விசிறிக் கொண்டிருந்தனர்.

அதிசயத்திலும் அதிசயம்! அவர்களில் எவருக்குமே, ரயிலிலிருந்து நிச்சயமாக வெளியே விழுந்தவரை யார் கொண்டு வந்து அங்கு கிடத்தியது என்று தெரியவில்லை!

கோபாலத்துக்கு உடம்பிலே ஒரு காயமில்லை. சிறிதளவும் வலி இல்லை. அம்ருத கர ஸ்பர்சம் பெற்ற பின் எப்படி வலியிருக்கும்?

மேலும் ஓர் அதிசயம் கேளுங்கள்! தமது காலிலிருந்து நிச்சயமாக விழுந்துவிட்டதாக கோபாலம் அறிந்திருந்த இரு பாதரக்ஷைகளையுங்கூட ஜீவரக்ஷையான துர்கா ஸாயி அவரோடுகூடக் காப்பாற்றி அந்தக்கோச்சில் சேர்த்து விட்டிருந்தாள். பாதுகைக்கும் பாதுகாவல்!

அடுத்த ஜங்ஷனில் தமது பெட்டிக்குத் திரும்பிய கோபாலம் மனைவியிடம், “நான் ஜலம் கொண்டு வர வில்லை. என் ஜீவனைக் கொண்டு வந்திருக்கிறேன்என்றார்.

பர்கட்என்றால் பெரிய கோட்டை . ‘துர்கம்என்றாலும் கோட்டைதான். துர்கையே ஆபத்தில் அரணாகும் அன்புக் கோட்டைதான். அதையே ஸாயி துர்கை பர்கடில் கோபாலத்துக்குக் காட்டினாள்.

ஸாயிதானா காட்டினார் எனும்படியாக அப்புறம் மாயம் செய்தார்! “மஹா மாயை, மஹா மாயைஎன்றும் திரும்பத் திரும்ப அதே துர்கையைத்தானேஸப்தசதீயில் சொல்லியிருக்கிறது?

ஷீர்டி சென்று பின்னர் பர்த்தி சேர்ந்த கோபாலத்தைத் தாம் பரிந்து காத்த அருமை தெரிய, “வா குழந்தே!” என்று ஸ்வாமி அழைக்கவில்லை. அகாமடேஷன் ஆஃபீஸில் இவர் நுழைந்தவுடன் அங்கிருந்த பட உருவத்தின் மூலம் ஸ்வாமி இவரை நோக்கிக் கேலிச் சிரிப்பையே உதிர்த்தார்! ‘தர்சன்லைனில் பிறகு கோபாலத்தைக் கண்டபோதும் அச்சாக அதே பரிஹாஸ நகையே புரிந்தார். புகைப்பட ஸ்டாலுக்குச் சென்றபோதும் அங்குள்ள சித்ர ரூபத்தில் மீளவும் நையாண்டி காட்டினார்.

ஏதோ பெரும் தவறு செய்து விட்டோமென்ற உறுத்தலில் இரவெல்லாம் கோபாலம் உறக்கமிழக்குமாறு செய்தார், அன்னை மடி சார்ந்த ஆனந்தத்தை அவருக்கு அளித்திருக்க வேண்டியவர். அதுதான் மாயாவித்தனம்!

மறுநாள் காலை தரிசனத்தின் போது ஒரு சிறு கடைக்கண் காட்டினாற்போல் காட்டி நகர்ந்தார். உடனே தொடங்கவிருந்த பஜனைக்காக மந்திருக்குக்யூவில் போன கோபாலம், உள்ளே நுழைய இருந்த அயனான நொடியில் தற்செயலாக (தற்செயலென்று தோன்றுவதெல்லாம் அவன் செயல்தானே?) ஸ்வாமியின் பேட்டியறை வாசலில் தம் மனைவி நிற்பதையும், தம்மை வரச்சொல்லி தவிப்போடு கையசைப்பதையும் கண்டார். இவருக்குத் கடைக்கண்ணே காட்டி நடையைக் கட்டிய கபட நாடகர் இவரது மனைவியை பேட்டிக்குத் தேர்வு செய்திருக்கிறார்!

நேற்று கேலிச் சிரிப்பு; இன்று ஸரியாய்க் கண்டு கொள்ளவில்லை; இன்டர்வ்யூவில் என்ன செய்வாரோ. சொல்வாரோ?’ என்று இதயம் உதைத்துக் கொள்ள கோபாலம் மற்ற பேட்டியாளர்களுடன் கலந்துகொண்டார். ‘அநேகமாக ஸ்வாமி தமக்கு ஷஷ்டி பூர்த்தி செய்து வைக்க மாட்டார்!’ என்றே உட்குரல் கிசுகிசுத்தது.

பேட்டி அறையில் இவரைப் பார்த்து ஸ்வாமி ஒரு சிரிப்புச் சிரித்தார். ஸ்வாமியொருவரைத் தவிர யாராலும் அந்தச் சிரிப்புச் சிரிக்க முடியாது. நேற்று ஒன்றும் புரியாமல் குழம்ப வைத்த மேக மூட்டச் சிரிப்பைக் காட்டியவர் இன்று அதைப் புரிய வைத்த ஸூரிய வெளிச்சச் சிரிப்பை மலர்த்தினார். ‘அசடே! உன் அறுபதாம் கல்யாணம் இனிமேல் தானா ஸ்வாமி செய்து வைக்க வேண்டும்? பர்கடில் செய்தது வேறென்ன? உன் அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா எல்லோரும் ஸரியாக ஷஷ்டியப்தப் பூர்த்திக்குச் சிறிது முன்னரே காலமானவர்கள் அல்லவா? அந்த லிஸ்டில் சேர இருந்த நீ உன் மனைவிக்காக ஜலம் கொண்டு கொடுக்காமல் உன்னையே ஜீவனோடு கொண்டு கொடுக்க வைத்தேனே! அப்போதே நீ அவளுக்கு அறுபதாம் கல்யாண மாங்கல்யம் அணிவித்து விடவில்லை? அதற்கப்புறமும் ஸ்வாமி ஷஷ்டி பூர்த்திக்கல்யாணம் செய்ய வேண்டுமென்று வந்தவனைப் பார்த்து எப்படிக் கேலியாகச் சிரிக்காதிருப்பதாம்?’ – இத்தனையையும் அச் சிரிப்பு ஐயம் திரிபற கோபாலத்தின் இதயத்துக்குத் தெரிவித்து விட்டது.

அப் பேட்டியில் வார்த்தையுருவில் ஸ்வாமி அறுபதாம் கல்யாணத்தைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை. கோபாலமும் இவ்விஷயமாய் வாய் திறக்கவில்லை. ப்ரசாந்தி

நிலயத்திலேயே பணி கொடுத்துக் குடியமர்த்திக் கொள்ளவே வேண்டினார். “!” என்று ஸ்வாமி தட்டிக் கொடுத்தார். பிறகு அந்தவை நிறைவேற்றியும் விட்டார்.