சத்ய சாய் – 7

19. வெள்ளை ஆடை பாபா

பிறந்த நாள் ஊஞ்சலுத்ஸவத்தில் ஸ்வாமி வெள்ளையங்கி பூண்டுக் கொள்ளையழகாய் அமர்ந்திருப்பதை இங்கு சொல்ல வரவில்லை. பின் எதைச் சொல்லியிருக்கிறது? மேலே படித்தால் தெரியும்.

1977-ல் கனடாவில் ஒன்டாரியோவில் உயர்பதவி டைரக்டராயிருந்தார் கே.ஸி. கோசலா. அவர் ஸாயி பக்தரல்ல. அவருடைய மனைவியும் மக்களுமே ஸாயி பக்தர்கள். கோசலாவுக்கு ஜீர்ணக் கோளாறு ஏற்பட்டு ஸீரியஸாக முற்றிற்று, எதுவும் உண்ண முடியவில்லை. வயிற்றில் நீர்கூடத் தங்காமல் வாந்தி செய்தது.

அவ்வாண்டு அக்டோபர் மாதம். பிழைப்போம் என்ற நம்பிக்கை அடியோடிழந்து டொரன்டோ ஆஸ்பத்திரியின் இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் கிடந்தார் கோசலா, ஹாங்காங் ஆஸ்பத்திரியின்இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் இதே 1977-ல் மே மாதக் கடைசியில் பகவான் தாஸுக்கு ஸ்வாமி அருளிய அத்புதம் முன்பு கண்டோமே, அது போலவே இங்கும் செய்து காட்டினார் ஸர்வ வியாபகர். ஆனாலும் ஒரே அச்சாக இன்றிவெரெய்டிகாட்டும் லீலாலோலராச்சே! எனவே, இப்போது இரவு பன்னிரண்டரைக்கு டொரன்டோ வைத்யசாலையில் பிரவேசித்த போது சுவர்வழி வரவில்லை.

கதவு மளாரெனத் திறந்தது. இந்த வேளையில் யார் இப்படி வருவது என்று கோசலா பார்த்தால்பாபா!

இப்போதுதான் வெரெய்டியில் இன்னோர் அம்சமாக வெள்ளை ஆடை தரித்திருந்தார். அவ்வெள்ளை உடை அவரது வழக்கமான அங்கி அல்ல. வெகு பொருத்தமாக, டாக்டர்கள் அணியும் ஒய்ட் கவுனாக்கும்!

அனைவரையும் கூப்பிட வேண்டுமென்று கோசலாவுக்கு எண்ணம் எழும்பியபோதிலும் வாய் எழும்பவில்லை. பாபா திரும்பிச்சென்ற பின்தான் அவருக்குப் பேச்சு வந்தது.

உள்ளே வந்த பாபா, குப்புறப் படுக்கப் போட்டிருந்த கோசலாவை அநாயாஸமாக திருப்பிப் போட்டார். (ஹாங்காங்கில் நோயாளியை இன்னொரு கட்டிலுக்கே தூக்கிப் போட்டவரல்லவா?) இங்கே விபூதி எதுவும் தூவாமல் தமது கரத்தாலேயே பிணியாளரின் உடல் முழுதையும் தேய்த்துவிட்டு, ஆசி வழங்கினார். வந்தது போலவே கதவு வழியாய் வெளியேறினார்.

அவர் போனவுடன் இவருக்குக் குரல் வர, நர்ஸ்களையெல்லாம் அழைத்தார். பகவான்தாஸைப் போலன்றி, நடந்த அதிசயத்தை அவர்களுக்குச் சொன்னார். “இனி நான் ஸர்வ நிச்சயமாகப் பிழைத்து விடுவேன்என்றார் தீர்மானமாக.

அப்படியே ஸாயிஸ்பீடில் வெகு விரைவே பூர்ண குணம் அடைந்தார்.

அடுத்த ஆண்டு ஆகஸ்டில்கோசலா குடும்பத்தோடு பாபா தர்சனத்துக்காக வந்தார். தேக்கடியில் தேவ தேவனைக் கண்டு அடிபணிந்தார். தேவர் தமது டொரன்டோ விஜயத்தை ஊர்ஜிதம் செய்தார்.

20. பிழைத்த குழந்தையைக் குழைத்த அருமை!

1976ல் கோலாலம்பூரிலிருந்த டாக்டர் கே.வி. சேகராவின் ஆறரை வயதுப் பிள்ளை தேவேந்திரனுக்குத் தொண்டையில் உபாதை ஏற்பட்டது. டான்ஸிலிடிஸ் எனக் கருதி டாக்டர் தந்தை ட்ரீட் செய்தார். உபாதை அதிகமாயிற்று. .என்.டி. ஸ்பெஷலிஸ்டிடம் காட்டினார். தொண்டையிலிருந்து ரத்தமாகப் பெருக்கிய குழந்தையை அவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து கொண்டார்.

வியாதி புரிபடவில்லை. அந்த ஸ்பெஷலிஸ்ட் இன்னும் பல ஸ்பெஷலிஸ்ட்களிடம் கலந்தாலோசித்தும் முடிவு செய்ய முடியாமல் கலக்கமாகவே இருந்தது.

குருதி கொட்டுவதோ நிற்கவில்லை. பிராணாபத்தான நிலை ஏற்பட்டது. மறுதினம் ரத்தம் கொடுத்தார்கள். அது புது விபரீதத்தை உண்டாக்கிற்று. குழந்தையின் உடலெல்லாம் சொறிபோல் வாரிக் கொட்டி விட்டது.

வைத்தியத்தால் மகனைக் காப்பதற்கில்லை என்று வைத்தியத் தந்தைக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. இம்மாதிரிச் சமயங்களில் செய்யக்கூடிய ஒன்றே ஒன்றை அவர் செய்யலானார்பெர்ட்ரன்ட் ரஸ்ஸலைச் சேர்ந்த நிரீச்வரவாதியாயிருந்த அவர் இப்போது ஈச்வரனுக்குப் பிரார்த்திக்கலானார்.

ஈசன் அவரது ஸஹோதரரின் மனைவியார் மூலம் அதற்கு விடை கொடுத்தான்! வழக்குரைஞரான அச்சோதரர் சிவசேகராவையோ அவரது குடும்பத்தினரையோ குறிப்பாக ஸாயி பக்தர்கள் என்பதற்கில்லை. ஆயினும் அவர் வீட்டு வாயிற் கதவுக்கு மேல் பாபா படமொன்று மாட்டி வைத்திருந்தார். அவருடைய மனைவியார் உறவினர் ஒருவரிடமிருந்து பாபாவின் விபூதிப் பொட்டலம் பெற்றிருந்தார். தேவேந்திரனைப் பார்த்துவரப் புறப்பட்ட கணவர் கையில் அம்மாள் அதைப் போட்டார்.

வாலியம் ஊசி போட்டதில் உறங்கிக் கிடந்த குழந்தையைமீளா உறக்கத்துக்கு நழுவிக் கொண்டிருப்பவனாகவே டாக்டர்கள் கருதிவிட்ட குழந்தையை சிவசேகரா பார்த்தார். பாபாவை மனமாரப் பிரார்த்தித்தார். விபூதியைக் குழந்தைமேல் பூசினார். மௌனமாகத் திரும்பிவிட்டார். அப்போது அங்கு வேறெவருமில்லை.

பிள்ளை கண் திறப்பானா என்ற கேள்வியுடன் மறுநாள் காலை தகப்பனார் கட்டிலருகே அமர, பிள்ளை பலபலவென்று கண்ணைத் திறந்தான். அவனிடம் ஓர் அதிசயப் புதுத் தளிர்ப்பு காணப்பட்டது.

அதிசயக் கதை சொன்னான். “அங்கிள் வீட்டு வாசலுக்கு மேலே ஒரு ஆள் படம் மாட்டியிருக்குமே! சேப்பா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு, ‘பும்னு முடி வெச்சுக்கிட்டு இருப்பாரே, அந்த ஆள் நேத்தி நைட் எங்கிட்டே வந்தாரப்பா! கனா இல்லை, நெஜம்மா வந்தார். அப்பறம் அந்த ஆள் என் தலையிலே கையை வெச்சார். ‘செத்தவன் பொழச்சுட்டேன்னார். அப்பறம் எங்கேயோ எப்படியோ போய்ட்டார்என்றான்.

கதையை வளர்த்துவானேன்? குருதி கொட்டுவது நின்று அன்றே குழந்தை நார்மலானான். வாலியம் மருந்து ஸ்ட்ராங்க் டோஸ் ஏற்றியிருந்தும் அன்றைக்கே ஏக சுருசுருப்பாகச் செயற்படவும் செய்தான். வைத்தியர்கள் மூக்கில் விரலை வைத்தனர். தன் தலையில் கை வைத்தபும் தலை ஆளைப்பற்றி அவர்களிடமும் தேவேந்திரா சொன்னான்.

ஆளின் கை விசேஷம் நோவைத் தீர்த்ததோடு நின்றதா? குழந்தையுள்ளத்தில் பரம பக்குவ பக்தியைவயது முதிர்ந்தோருக்கும் அபூர்வமாகவே வாய்க்கும் உண்மையான இறையன்பைஊட்டிவிட்டது. அம்மாவிடம் ஆறரை வயசுப் பிள்ளை சொன்னான்: “அந்த ஆளை நான் போய்ப் பார்த்துத்தாங்க்பண்ணணும்.”

அது சரி, அவர் உன்னைப் பார்த்து தாங்க்ஸ் வாங்கிக் கொள்வாரென்று உனக்கு அவ்வளவு நிச்சயமாகத் தோன்றுகிறதா?” என்று தாய் கேட்க.

உண்மை பக்தி உரையாயிற்று சின்ன உதடுகளில்! “என்னைப் பார்ப்பார்னுதான் தோணறது. அவர் பாக்காட்டாலும் பரவாயில்லை. எனக்கு அவரைத்தாங்க்பண்ணியாகணும்என்றான் குழந்தை!

21. இப்படியும் உண்டோ ஒரு ப்ளாஸ்டிக் ஸர்ஜரி?

ஸாயி சந்திரசேகர தாஸ்வானி ஸாயிக் கல்லூரியில் சேர்ந்தபோது மிகவும் குள்ளம். நம்குள்ளச் சாமியாரே கேலி செய்யுமளவுக்குபக்ஷணம்போலச் சந்துருப் பயல் இருந்தான். அவனைப்போல இன்னும் நாலு பேரும் உண்டு. இவர்களிடம் தமாஷ் செய்வதுடன் கோபிக்கவும் செய்வார் கோமான்! “இப்படி ஸ்கூல் பாய்ஸ் மாதிரி இருக்கப்படாது. யு மஸ்ட் பிகம் டால்என்பார்! அவர்கள் என்ன செய்வார்கள், பாவம்!

உயர ரீதியில்தானே அணி வகுத்துபரேட்’, ‘மார்ச் பாஸ்ட்ஆகியன நடக்கும்? பொடியன் சந்துருவே காலேஜ் மாணவரில் முதல்வனாக இவற்றில் வருவான். “இதிலேதான் நீ ஃபர்ஸ்ட்! யூஸ்லெஸ் பாய்என்று சினப்பார். சீராட்டும் சீராளரே!

அப்புறம், ஹாஸ்டல்களில் ஒன்றைக் கட்டிய ஆர்.என். ஸிங்கைச் சீண்டினார். “பெரிசா அந்த தேசம், இந்த தேசம் போய்க்கொண்டே இருக்கீங்களே! இந்த பாய்ஸ் டால் ஆகிறதுக்கு எங்கேயாவது மருந்து வாங்கிக் கொண்டு வரப்படாதுஎன்றார்.

அடுத்தமுறை லண்டன் போய் வரும்போது ஸிங் அற்புத மருந்து பிடித்துக்கொண்டு வந்தார். ஆறு மாதத்தில் அது பொடியர்களை சராசரி உயரத்துக்கு உயர்த்தி விடுமாம்! அதோடு அது ஹல்வா போல வாய்க்கும் ருசியாயிருந்தது. அரை வருஷம் அந்த இனிய ட்ரீட்மென்டில் சந்துரு கோஷ்டியினர் இருந்தனர். பாட்டில்கள்தான் காலி ஆயினவே அன்றிப் பசங்கள் மில்லியும் உயரவில்லை .

இத்தனைக் காலம் இவ்வளவு கூத்தடித்த ஸ்வாமி பிறகு ஒருநாள் அந்த ஐவரையும் முழங்காலில் நீவி விட்டார். லேசாகத்தான் நீவினார்.

ஆயினும் உலகை உயர்த்த வந்தவனின் உயர் ஸங்கல்பத்தினால் அவர்கள் அடுத்த சில வாரங்களிலேயே எட்டு, பத்து அங்குலம் உயர்ந்துவிட்டனர்! அதனால்தான் இன்று ஸாயி சந்திரசேகர்ஓரளவு குட்டைலிஸ்டில் இருக்கிறாரேயன்றிபக்கா குள்ளர்லிஸ்டில் இல்லை.

வட மதுரையில் குப்ஜையின் கூனைக் கண்ணன் நிமிர்த்தினான். அவனது அண்ணன் பலதேவன் பனைமரம் போல் உயரமாயிருந்த ரேவதியைக் குட்டையாக்கினான். குட்டையரை நெட்டையாக்கிய அற்புதம் எந்தப் புராணத்திலும் படித்ததாக இப்போது நினைவு வரவில்லை.உருவத் தோற்றத்தை அழகாக்குவதற்கு ப்ளாஸ்டிக் ஸர்ஜரி என்று ஒன்று செய்கிறார்கள். இழுக்க இழுக்க நெகிழ்ந்து கொடுப்பதே ‘ப்ளாஸ்டிக்’, ஏதோ சிறிது முழங்கால் நீவுதலில் கிட்டத்தட்டப் பாதி முழம் நீளுமாறு இழுப்பு நெகிழ்ச்சி கொள்ளும்படி ஐந்து உடல்களுக்கு ஐயன் செய்த ப்ளாஸ்டிக் ஸர்ஜரி எப்படி?