புட்டபர்த்தி – 41

அத்தியாயம் – 41

களவிலும் கொலையிலும் அளவில் அருட்செயல்

கள்ளர் பயமிருந்தால்எங்கள்
வீட்டுக் குலதெய்வம்தம்பி,
வீரம்மை காக்குமடா!

பாரதியார்: வண்டிக்காரன் பாட்டு

1970ம் ஆண்டில் ஒரு முறை நாங்கள் புட்டபர்த்தி போய்த் திரும்பியபோது எங்கள் வீடு இருந்த அலங்கோலம்!

பூட்டுக்களை உடைத்துத் திருடர்கள் உட்புகுந்திருக்கிறார்கள்! அத்தனை பீரோக்களிலும் பரண்களிலும் உள்ள சகல சாமான்களையும், பாத்திரங்கள், புத்தகங்கள் முதலிய எல்லாவற்றையும் வீடு முழுக்க வாரி இறைத்திருக்கிறது!

பல திருடர்கள் வந்து, நீண்டநேரம் சாவகாசமாகக் காரியத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.

ஆனாலும் அதுதான் வேடிக்கை, காரியத்தை நடத்திக் கொள்ளவில்லை!

ஆம், திருடர்கள் இங்கே இத்தனை அமளி துமளி செய்திருந்தும் ஒரு சின்னஞ் சிறிய வஸ்துகூடக் காணாமற் போகவில்லை!

பெட்டிகளை உடைத்திருக்கிறார்கள்! ஆனால் அவற்றிலிருந்து ஒரு பொருளும் களவு போகவில்லை!

அக்கம்பக்கத்தினரோ போலீஸாரோ வந்துதான் அவர்கள் அவஸரமாக ஓடிவிட்டார்களா என்றால் அப்படியும் இல்லை. திருடர் வந்து போனது மறுநாட் காலைவரை எவருக்கும் தெரியாது! தாங்களாகவேதான் ஓடியிருக்கிறார்கள்!

வேறு எவரேனும் வந்து இவர்கள் ஓட்டம் பிடித்திருந்தால்கூட, இத்தனை சாமான்களை வேர்க்க விருவிருக்க ஏற்றியிறக்கி வைத்தவர்கள் கையடக்கமாக ஒரு பேனா, சின்ன மிக்ஸி, அல்லது கடிகாரம் போன்றவற்றையாவது சுருட்டிக்கொள்ளாமல் போகத் தோன்றுமா? ஆனால் வேற்று மனிதர் யாரும் இவர்களை நிச்சயமாக விரட்டவில்லை!

இதிலிருந்து என்ன தெரிகிறது? சந்தேகத்துக்கு இடமின்றி பாபாதான் எந்த ரூபத்தையோ காட்டிக் கள்வரை கதிகலங்க அடித்து ஓட்டியிருக்கிறார்!

எங்கள் பூஜை அறையைத் திருடர்கள் அண்டாமலே செய்து அண்டை காத்திருக்கிறார் ஆண்டை பாபா!

போலீஸாரே மூக்கில் விரலை வைத்தனர்!

புட்டபர்த்தி போய் வந்தவுடன், ஏதோ எங்கள் பழைய கர்மாவுக்காக அத்தனை சாமான்களையும் முதுகு வலிக்க அடுக்கச் செய்திருக்கிறார். அதோடு போயிற்று படு கொள்ளையாக முடிந்திருக்க வேண்டிய திருடர் படையெடுப்பு!

எங்கள் குலதெய்வமான பராசக்தியின் குறிப்பிட்ட ரூப பேதமே குறிப்பாக ஆவிகள், துஷ்டர்கள் போன்றோரை அணுக வொண்ணாமல் வெருட்டுவதற்குத்தான் விசேஷ வல்லமை வாய்ந்ததாக அதர்வ வேதத்தில் கூறப்படுகிறது. எனவே, இந்நூலாசிரியர் மேற்படி நிகழ்ச்சி பாபாவின் அருளாலன்றி, குலதேவியின் சக்தியாலேயே நடந்திருக்கலாமோ என்றும் எண்ணியதுண்டு. பாபாவே அனைத்துத் தெய்வமுமான ஒரே தெய்வம் என்றாலும் கூட, இங்கே அவரது சரிதையை எழுதும்போது குருவாயூரப்பனோ, ஏழுமலையப்பனோ, செந்திலாண்டவனோ புரிந்த அருட்செயல்களை பாபா செய்ததாக எழுதினால் சரியல்லதானே? இப்படி எண்ணி மேற்படி நிகழ்ச்சியை இங்கு குறிப்பதா வேண்டாமா என்று நூலாசிரியர் மயங்கியதுண்டு. ஆனாலும் இங்கே ஏதோ ஒன்று உந்தித் தள்ளி இச் சம்பவம் எழுதப் படுவதால்1 குல தேவியோடு நூற்றுக்கு நூறு சதவீதமும் இழைந்துவிட்ட ஸாயி நாதன் லீலையாகவே இதை வர்ணிப்பது யுக்தமாகவே தெரிகிறது.

2 இந்தப் புட்டபர்த்தி யாத்திரையின்போதே ஸாயிமாதா இந்நூலாசிரியரின் தந்தைக்குப் பேட்டியறையில் ஸாக்ஷாத் மேற்சொன்ன குலதேவியாகத் தரிசனம் தந்தது குறிப்பிடத்தக்கது.

***

கொலைவாள் விசையோடு வந்து குலைநடுங்கும் வேளையில் பாபாவின் அருட்காப்பு அதனினும் விசையாக வரும் அற்புதம்!

1971ம் வருஷம் மார்ச் முதல் தேதி பாலக்காடு ஸ்ரீ டி. ஸேதுமாதவன் நாயருக்கு ஒரு பயங்கரக் கடிதம் வந்தது. கபால முத்திரை பதித்த காகிதத்தில் ரத்தத்தாலேயே எழுதப்பட்ட நக்ஸலைட்களின் கடிதம்! டி.எஸ். நாயரின்சாந்தி நிவாஸுக்குச் சற்றும் பொருந்தாத கடிதம்!

சென்னையில் கிண்டி பாபா கோவில் போல், ஸாயி ஸாந்நித்தியம் விம்மி நிற்பது பாலக்காட்டு சாந்தி நிவாஸ். இத்தனைக்கும் அங்கு ஸ்தூல ஸாயி ஒருமுறைகூட வந்ததில்லை.

ஆனால் 1970 ஜனவரி 19ந் தேதி அங்கே பாம்பு வடிவில் நாக ஸாயியாக வந்திருக்கிறார். மணிகள் வைத்திழைத்த அதிசயப் பொன் நாகம்! அதற்கு மூன்று கண்கள் வேறு! இரண்டு கண்களுக்கு மத்தியிலுள்ள மூன்றாம் கண்ணிலிருந்து டார்ச் அடிப்பது போல் ஒளி வீசியதாம்! இதைக் கண்டவர் நூற்றுக்கணக்கானவர். பிறகு புற்றாகவும் சாந்தி நிவாஸில் வளர்ந்தார் புற்றுவர்த்தினியில் பிறந்த பாபா. 1970 ஜூலை ஐந்தாம் தேதி தமிழக பக்தர் பலர் அங்கு குழுமியிருந்தபோது, திவ்ய போதையில் ஆழ்ந்தவராகக் காணப்பட்ட நாயர் புற்றுக்கு கற்பூராரத்தி காட்டி, அதை உடைக்கச் செய்தார். உள்ளிருந்து மயிலேறிய வேலாயுதன் விக்கிரஹம் வெளிப்பட்டது. ‘வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூபன்அல்லவா? பக்கத்திலிருந்த இன்னொரு சிறு புற்றையும் உடைத்தனர். அதிலே விபூதி பூசப்பட்ட ஒரு தேங்காய் இருந்தது. தேங்காயை உடைத்ததும், உள்ளிருந்து விபூதி உருண்டை குதித்து வந்து வெடித்தது. திருநீற்றுப் பொடிகள் உதிர்ந்தபின் உள்ளே இருந்தது முருகனது மூத்தோன் விக்கிரஹம்! தொப்பை வயிற்றுக்கு பந்தனமாகப் பாம்பை அணிபவனல்லவா அவன்?

அதே ஆண்டு ஆகஸ்ட் 23ந் தேதி கிருஷ்ண ஜயந்தியன்று பூப்பந்துகளைக் கட்டித் தொங்கவிட்டு அலங்கரிக்கும்போது, ஒரு பூப்பந்தே வெண்ணெய் உருண்டையாக மாறியிருந்தது. பக்தர்களுக்குச் செலவில்லாமல் கண்ணனே தன் பிரஸாதமாக ஒரு கிலோ கிராம் வெண்ணெய் அனுப்பிவிட்டிருக்கிறான்! வெண்ணெயை அடியாருக்கு விநியோகிக்கையில் அந்தக் கட்டியினின்று பாபாவின் வண்ணப் படம் ஒன்று வெளிப்பட்டது!

வெண்ணெய் தந்த கண்ணன் மற்றொரு நாள் அங்குள்ள குருவாயூரப்பன் படத்தில் ஐயன் கையிலிருக்கும் தாமரையிலிருந்தே தேனைப் பொழியத் தொடங்கினான். அப்பன் பாதத்திலிருந்தும் என்னவோ சொட்டுகிறதே என்று ஏந்தி, மோந்து, உண்டு பார்த்தால் ஐயமேயில்லை. குருவாயூரில் ஸர்வரோக நிவாரணியாக அளிக்கப்படும் ஐயனின் அபிஷேகத் தைலம்தான்! ஆறு வாரங்கள் இந்தப் பொழிவு தொடர்ந்தது!

இப்படிப்பட்ட இடத்தில் பக்தி பரவசம் பொங்கக் கேட்பானேன்? பொங்குவதெல்லாம் அடங்குவது தான் இறுதி நிறைவு. அந்த அடக்கத்தின் உருவானார் ஸ்ரீ நாயர் அவருக்கே அற்புத ஆற்றல் பல கூடியுங்கூட! அந்த இடமும் பரவசத்தை விட அமைதிக்கு ஆலயமான சாந்தி நிவாஸாகவே ஆயிற்று.

இது நக்ஸல்பாரிகளின் கண்ணை உறுத்தியது. அதுவும் பகவான் லீலைதான்!

இக்கடிதம் கண்ட ஏழாம் நாளுக்குள் பஜனைபூஜைகளை நிறுத்தாவிடில் உன் தலை சீவப்படும்என்று நாயருக்கு அச்சுறுத்திக் கடிதம் எழுதினார்கள், கபால முத்திரையிட்ட காகிதத்தில் ரத்த மையினால்.

அவர் சற்றும் நிலைகுலையவில்லை. விடாமலே பஜனையை நடத்தினார்.

கெடுவைத்த காலம் முடிந்து, எட்டாம் நாளும் போயிற்று.

மார்ச் 10ந் தேதி.

காலை எழுந்ததும் நாயர் குளியலறைக்குச் சென்றார்.

சர்ரென்று அவ்வறையின் வெளி ஜன்னல் திரை கிழிபடும் ஓசை கேட்டது! வெட்டுக் கத்தி துணியைக் கிழித்துக் கொண்டு குறி பிசகாமல் விர்ரென்று நேரே நாயரிடம் வருகிறது! கத்தியை எறிந்தவன் வெளியே ஓடுகிறான். இருப்பினும் வைகறை வெளிச்சத்தில் அடையாளம் தெரிகிறது.

அதே க்ஷணத்தில் பாபாவின் பட்டுடை போன்ற ஆரஞ்சு வெள்ளம் நாயரைச் சூழுகிறது.

பாபாவின் பூங்கரம் வஜ்ராயுதத்தின் வலுவோடு, மின்னலின் வேகத்தோடு நாயரைப் பிடித்துத் தள்ளுகிறது!

க்ளாங்என்ற சப்தத்தோடு கத்தி தரையிலே விழுகிறது இவரது கழுத்தைச் சீவியிருக்க வேண்டியது!

சுற்றத்தார் ஓடி வருகிறார்கள்.

விபதி அபிஷேகம் பெற்று விலவிலத்து, விதிர் விதிர்த்து நிற்கும் நாயரைப் பார்க்கிறார்கள். கத்தியைப் பார்க்கிறார்கள். ஆயுதம் மேலே வந்து விழுகின்ற அப்போதே அம்பாள் காக்கிறாள் (‘பதத்ஸு சாபி சஸ்த்ரேஷு…) என்ற சண்டீவாக்கு ஸர்வ ஸத்யமாயிருக்கிறது!

பாபாவின் பரம காருண்யத்தை, பக்த வாத்ஸல்யத்தை எண்ணிக் கண்ணீர் உகுக்கிறார்கள்.

ஆபத்சகாயம் இதோடு முடிகிறது. ஆனாலும் கருணை இதைவிட இனிய முறையில் இன்னமும் தொடர்ந்து, நாயரையே ஆபத்ஸஹாயராக்கியதைப் பார்ப்போம்.

நண்பர்கள் புகார் கொடுத்ததன் மீது போலீஸார் வந்தனர். கத்தியை ஆர்ஜிதம் செய்து கொண்டார்கள். நாயரை வாக்குமூலம் கேட்டார்கள்.

உணர்ச்சிப் பெருக்கு அடங்கி அடக்கமும் அமைதியும் பெற்றுவிட்ட நாயர், “அதெல்லாம் வேண்டாம். மேல் நடவடிக்கை தேவையில்லை. பகவான் எல்லாம் நல்லதற்கே செய்கிறான்என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டார்.

இருந்தாலும் பக்தர்கள் அவரைத் தொணப்பினார்கள். “குற்றவாளியால் இன்னம் எந்தெந்த பக்தருக்குக் கெடுதல் விளையுமோ! அவனைப் பிடிப்பதற்கு நீங்கள் சட்டப்படியான உதவியைச் செய்யத்தான் வேண்டும்என்றனர்.

நாயரோ சாவதானமாக, “பகவான் சித்தம் இருந்தால் குற்றவாளியே இங்கு வருவான். பகவானை நமஸ்கரித்து, மன்னிப்புக் கேட்டுப் போவான்என்றார்.

போலீஸார் தாமாகவே அந்த நபரை சமூக விரோதி என்ற முறையில் க்ரிமினல் சட்டத்தின் கீழ்க் கைது செய்வதற்காகத் தேடி வருகிறார்கள் என்றறிந்து பக்தர்கள் நிம்மதி பெற்றனர்.

அம்மாதம் 27ந் தேதி மாலை 5 மணி. போலீஸார் இருவர் சோர்ந்து அழுதுகொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயதுக்காரனை சாந்தி நிவாஸுக்கு அழைத்து வருகிறார்கள்.

இப்போது அடையாளமேனும் சொல்வீர்களா? குற்றவாளி இவன்தானா?” என ஸ்ரீ நாயரிடம் கேட்கிறார்கள் போலீஸார்.

நாயர் அப்போதுங்கூடச் சொல்லியிருப்பாரோ, மாட்டாரோ? அதற்குக் காத்திராமல் அவனாகவே குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

பகவான் படத்தையும், நாயரையும் நமஸ்கரித்தான். மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். விம்மி அழுதான்.

நாயர் அவனை அரவணைத்து ஆறுதல் தந்தார்.

இது பக்தர் பலர் கண்ணால் கண்ட சம்பவம். ஏனெனில் அப்போது பஜனை நடந்து கொண்டிருந்தது.

விபத்திலிருந்து காத்த கருணை பெரிதா? விபத்து விளைவித்த பகைவனுக்கும் ஆபத்து நேராமல் ஸகாவாக அருளும் பான்மையை நாயருக்குத் தந்தாரே, அந்தக் கருணை பெரிதா? அல்லது நக்ஸலை நெகிழவைத்தாரே, அது பெரிதா?

***

தாம் புரியும் ஆபத்சகாயத்தைப் பெருமையடித்துச் சுமையாக்கிக் கொள்ளாமல் எத்தனை வேடிக்கையாக்கி ம்ருது செய்து விடுகிறார்! நன்றி உணர்ச்சி அலைமோத ஒரு பக்தர் குடும்பம் பிரசாந்தி நிலயத்துள் நுழைகிறது. பாபா மேலே பால்கனியில் தோன்றிக் குடும்பத் தலைவரைப் பார்க்கிறார்.

பகபகவெனச் சிரித்து, “ராதாகிருஷ்ணா! எத்தனை நாழி ஐயா உன்னைத் தூக்கிட்டு நிற்கிறது? தோள் வலிக்காது, நாயனா?” என்கிறார். வேடிக்கையாக்கிவிட்டார் விபரீதம் தீர்த்த வியத்தகு செயலை!

மாண்டபின் பாபாவால் மீட்கப்பட்ட அதே குப்பம் ஸ்ரீ ராதாகிருஷ்ணாதாம். அந்தப் பேரற்புதத்துக்கு ஏழாண்டுகளுக்குப் பின் அவர் பொருட்டே இன்னோர் அற்புதத்தைப் புரிந்த பாபா, “எத்தனை நாழி ஐயா உன்னைத் தூக்கிட்டு நிற்கிறது?” என்று பால்கனியிலிருந்து பாலும் கனியும் கலந்த இன் குரலில் வினவினார்.

பக்தர்களின் பாரத்தைச் சுமக்கும் போர்ட்டராகப் பரமன் நிற்கிறான். இதனால் அவனுக்கு உமாபதி சிவாசாரியர்எடுத்துச் சுமப்பான்என்றே ஒரு பெயர் கொடுத்திருக்கிறார். நம் ஸத்யஸாயி பகவான் சரீரத்தாலேயே பக்தர் உடம்பை எடுத்துச் சுமந்த இக்கதை தீங்கரும்பிலும் இனித்தானது.

ராதாகிருஷ்ணாவுக்கு ஏதோ நோய் கண்டது. மனித சரீர தர்மம், கர்ம நியதி நடந்துதானே ஆகவேண்டும்?

டாக்டர் மார்ஃபியா ஊசி போட்டுச் சென்றார்.

இரவு மூன்று மணிக்கு விழித்துக்கொண்ட ராதாகிருஷ்ணா பாத்ரூம் போக விரும்பினார். மார்ஃபியா மயக்கத்தில் நினைவு சரியாக இல்லை. எங்கோ தடுமாறிச் சென்றவர், சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் விழுந்துவிட்டார்.

நினைவு மரத்து விட்டாற்போலாயிற்று.

மனைவியார் விழித்துக்கொண்டு, பக்கத்தில் அவரைக் காணோமே என்று தேடினார். வீடு திமிலோகப்பட்டது.

கிணற்றுக்குள் அரை ஸ்மரணையில் இருந்த ராதாகிருஷ்ணாவையும் அது அசைத்துவிட்டது. “இங்கே இருக்கிறேன்!” என்று குரல் கொடுத்தார்.

மனைவி, பெண், பிள்ளை யாவரும் அங்கே ஓடினர்.

கிணற்றுக்குள் ராதாகிருஷ்ணா! அது சரி, அவர் எப்படி அதில் முழுகாமல் நிற்கிறார்? ஆழமான அந்தக் கிணற்றில் அவர் முற்றிலும் முழுகினாலும் தலைக்கு மேல் தண்ணீர் ஓடவேண்டுமே! அவ்விதமின்றி இப்போதோ அவரது இடுப்பளவுத்தானே ஜலம் நிற்கிறது? நீருக்கு நடுவில் நன்றாக நிற்கிறாரே! அம்மாதிரி நிற்பதற்கு அங்கு எந்த ஆதாரமும் கிடையாதே!

கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட பின்பு ராதாகிருஷ்ணாவாலும் இவ்வதிசயத்தைப் புட்டு விளக்க முடியவில்லை. ஆனாலும் புட்டபர்த்தீசன் தம்மைக் காத்ததை மட்டும் நன்றாக உணர்ந்திருந்தார்.

ஆபத்து தீர்ந்தது என்றவுடன் பாபா நகருவதாகவும் ஒரு சூக்ஷ்ம உணர்வு ராதாகிருஷ்ணாவுக்கு உண்டாயிற்று. “ஸ்வாமீ, உங்களை மறுபடி எப்போது பார்ப்பேன்?” என்ற வார்த்தைகள் தாமாக அவர் வாயிலிருந்து வெளிப்பட்டன.

பாபாவைப் பார்க்க அப்போதே புட்டபர்த்திக்குப் புறப்பட்டனர். பிரசாந்தியைச் சென்று சேர்ந்தனர்.

ஸ்வாமி, மாடியிலிருந்து, “எத்தனை நாழி ஐயா உன்னைத் தூக்கிட்டு நிற்கிறது?” என்று குறும்பு செய்கிறார்!

வரது பாதம் நம் தலையில் படாதா என்று பரம ஸாதகர்கள் தவமிருக்கிறார்களோ, அவர் ராதாகிருஷ்ணாவின் பாதங்களைத் தம் தோளில் தாங்கி அத்தனை நேரம் கிணற்றுக்குள் இருந்திருக்கிறார்! “பாரப்ருத்” (சுமைதாங்கி) என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்வது ஸ்தூலத்திலேயே நடந்திருக்கிறது! வேதங்களில் ரேபர், வந்தனர், கண்வர், த்ரிதர் ஆகியவர்களை அச்வினி தேவர் கிணற்றிலிருந்து காத்த பெருமை பரக்கப் பேசப்படுவதே நம் ஸாயி வேதத்திலும் ஒலிக்கிறது!

***

துர்க்கா தேவி, மாருதி இவர்களின் அநுக்ரஹங்களைச் சொல்கையில் பிரயாணத்தில் காப்பதைச் சிறப்பித்துச் சொல்வார்கள். கார், பஸ், ரயில், பிளேன் விபத்துக்களில் பாபா செய்துள்ள காப்பு லீலை ஒரு தனிக் காப்பியமாகிவிடும்!

இறைவன் இரக்கத்தால் எத்தனை இளக்கினாலும் இளக்கமுடியாத வலிய கர்மா என்று ஒன்று தனியாக இருப்பதுபோல்தான் தோன்றுகிறது.

1957ம் ஆண்டு பாபாஜயந்திக்குப் பின் ஊர் திரும்பிய பக்தர்கள் பலர் இருந்த பஸ் புக்கபட்டணத்திலிருந்து பெனுகொண்டா போகும் வழியில் அச்சம்மா தோட்டக் கிணற்றில் விழுந்து அவர்கள் மாண்டு போனார்கள். ஸ்வாமியின் சூசக வார்த்தையையும் தட்டி இவர்களில் சிலர் புறப்பட்டதாகவும் தெரிகிறது. சரியாக இதே சமயத்தில் பாபா ப்ரசாந்தி நிலய பால்கனியில் சிந்தனை வயத்தராக வந்து நின்று, “போயினாடு, போயினாடுஎன்று மட்டும் சொன்னாரே தவிர, போனவர்களைக் காக்கத் தாமும் உடன் போகவில்லை. அவர்கள் கர்மம் அப்படியோ? ஸங்கடஹரணனாக விளங்கும் வேங்கடரமணனைக் காணச் செல்லும் யாத்ரிகர்களின் பஸ்களே எத்தனை முறை திருமலையில் விபத்துக்குள்ளாகியிருக்கின்றன?

முன்பே சொன்னதுபோல், இன்னது செய்யவில்லை என்று பழிக்க நமக்கு உரிமையில்லை. இன்னமுதாக அவர் இன்னல் தீர்த்த ஏராள நிகழ்ச்சிகளை எண்ணி நெஞ்சம் நெகிழ்வதே முறை!

உதாரணமாக: 1968 ஜனவரி 18ந் தேதி பர்த்தியிலிருந்து குடும்பத்தோடு மதுரை திரும்பிக்கொண்டிருந்த ஸ்ரீ பாலகிருஷ்ணனின் கார் சேலத்துக்கு முப்பது மைல் முந்தி மக்கர் செய்துவிட்டது. இருட்டு வேளை. மார்க்கபந்துவாம் ஸாயி தவிர கதியில்லை என்று விட்டுவிட்ட சமயம்.

ஒரு வெள்ளை ஃபியட் கார் பக்கத்தே வந்து நிற்கிறது. அதிலே இருவர். உரிமையாளராகத் தோன்றியவரிடம் பாலகிருஷ்ணனோ டிரைவரோ வாய் திறக்கு முன் அவரே பாலகிருஷ்ணனிடம், “அந்தஸேஃப்டி பின்னைத் தாருங்கள்என்று கேட்டு வாங்கிக்கொள்கிறார். பிறகு அதை டிரைவரிடம் கொடுத்து, “வண்டிக்குக் கீழே போய் இந்தப் பின்னை நிப்பிளில் குத்திவிட்டு ஸ்டார்ட் பண்ணுஎன்கிறார்.

டிரைவர் அவ்விதமே செய்ய பாலகிருஷ்ணனின் வண்டி ஜம்மென்று செல்லத் தொடங்கிவிட்டது.

ஃபியட் புயல் வேகத்தில் அக்காரைத் தாண்டிப் பார்வையிலிருந்து மறைந்தது.

எதற்கும் சேலம் ஒர்க்ஷாப்பில் நன்றாக ரிப்பேர் செய்து விடலாம் என்று வண்டியைக் கொண்டுவிட்டார்கள்.

என்ன ஆச்சரியம்! இந்தக் காரில் எப்படி 30 மைல் வந்தீர்கள்?” என்று அங்கே மெகானிக்குகள் வியக்கிறார்கள். ‘கியர் ராட்இரண்டாக உடைந்திருக்கிறது! அதை வெல்ட் செய்யவே மூன்று மணி ஆயிற்று.

அதுமட்டுமில்லை. நிப்பிளையும் காணோம், ஸேஃப்டி பின்னையும் காணவே காணோம்!

ஆனால் ஸேஃப்டிக்கு பாபா இருப்பது நிச்சயம்தான்! அந்த ரக்ஷண சக்தியில் இடம், காலம் (Space, Time) என்று விஞ்ஞானம் தவிர்க்க முடியாததாகச் சொல்லும் இரு தத்வங்களுமே தவிடுபொடிபடும் அதிசயத்தை ஜான் ஹிஸ்லாப் கோஷ்டியார் கண்டது போல் எவரே காணப்போகிறார்கள்?

1973ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஓர் இரவு எட்டு மணிக்கு ஹிஸ்லாப் கோஷ்டியார் ஒயிட்ஃபீல்டில் ஸ்வாமியை தரிசனம் செய்துவிட்டு பெங்களூருக்கு டாக்ஸியில் திரும்புகிறார்கள்

ஆறு கல்கள் வந்தாயிற்று. அந்த இடத்தில் சாலையில் எதிரும் புதிருமாக இரண்டே வண்டிகள்தான் செல்ல முடியும். அதில் குறிப்பாக ஒரு பகுதியில் ரிப்பேர் நடந்துகொண்டிருக்கிறது. டாக்ஸிக்கு இடப்புறத்தில் சாலை ஓரமாகக் கருங்கல் ஜெல்லி முதலியவற்றைக் குன்றுபோல் கொட்டியிருக்கிறது. இவ்விடத்தில் டாக்ஸி டிரைவர் ஒரு பஸ்ஸைஓவர்டேக்செய்ய நினைத்து வலப்பக்கமாக வண்டியை ஒடித்துவிட்டார்.

என்ன விபரீதம்! இதோ, எதிரே, வெகு வெகு அருகில் வாயுவேகமாக மறுபுறத்திலிருந்து ஒரு கார் பறந்து வந்து கொண்டிருக்கிறதே! ஏற்கனவே அது இரட்டை வாகனச் சாலைதான். அப்படியும் ஏதோ கொஞ்சம் இடம் தரலாம் என்று பஸ் டிரைவர் சற்று இடத்தே ஒடிக்க எண்ணினால்கூட, அதற்கு முடியாதபடி கருங்கல் ஜெல்லிக் குன்று. இதோ மிக நெருக்கத்தில் வந்துவிட்ட காரைபிரேக்போட்டாலும் நிச்சயம் நிறுத்தமுடியாது.

தீர்ந்தே விட்டோம்!” என்றுதான் ஹிஸ்லாப் கோஷ்டியினர் முடிவு கட்டிவிட்டனர்.

இதோ எதிர்க் காரின் தலைவிளக்கு இவர்களது வின்ட்ஸ்க்ரீனில் நேராக விழுகிறது. ஒன்று அல்லது இரண்டு விநாடிகளில் கூண்டோடு கைலாஸம்தான்!

ஒரு விநாடி.

அடுத்த விநாடி.

விநாடியா, அதிலும் தசாம்சமா, சதாம்சமா?

அந்த அதிசின்னக் காலத் துணுக்குக்குள் என்ன நடந்து விட்டது? பாபா என்ன செய்துவிட்டார்?

மோதியிருக்க வேண்டிய கார், டாக்ஸியைத் தாண்டி, அதற்குப் பின்னால் எதிர்த் திசையில் அது பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறதே!

எப்படி, எப்படி?

டாக்ஸியில் இருந்தவர்களுக்கு ஸர்வ நிச்சயமாகத் தெரியும், சாலையில் இவர்களுக்கு வலப்பக்கமாக ஒடித்து அந்தக் காரைச் செலுத்தவில்லை என்று. அப்படிச் செய்வதற்கு வலப்பக்கத்தில் இடமே கிடையாது. இடது பக்கமோ அந்த பஸ் இன்னமும் சுவர் வைத்தாற்போல் இவர்களது டாக்ஸியை ஒட்டியே சென்று கொண்டிருக்கிறது!

அப்படியானால் இவர்களது டாக்ஸிக்கு மேலாக அது பறந்து போயிற்றா? அல்லது அடியில் பூமியைத் துளைத்துக்கொண்டு போயிற்றா? இவ்விதமெல்லாம் நடக்கவில்லையே!

நேருக்கு நேர் இரு வண்டிகளும் அங்குல இடைவெளியில் வந்ததுதான் தெரிந்தது. மறுகணம் பார்த்தால், கார் டாக்ஸியைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது! அந்தக் காரில் போய்க் கொண்டிருந்தவர்களுக்கும் பேரற்புதமாகத்தான் இருந்திருக்கும்!

அந்த ஒரு க்ஷணத்தில் பாபா கால தத்வத்தை விழுங்கிவிட்டாரா? அல்லது ஒன்றோடொன்று மோதி நொறுங்கியிருக்கவேண்டிய இரு வண்டிகளின் நீளம் என்ற இட தத்வத்தைப் புசித்து விட்டாரா? என்ன செய்தார்?

மறுநாள் காலை நன்றிக் கங்கையில் நனைந்து ஹிஸ்லாப் கோஷ்டியார் பிருந்தாவனத்துக்குச் சென்றனர். கண்ணன் தண்ணென வந்து நின்றான். அங்கியைவிட வழுவழு ஸில்காக வாக்கு வந்தது: “ரொம்பக்ளோஸாகத்தான் வந்துடுத்து! உங்களுடைய ஷாக்கில் ஒருத்தராவது ஸ்வாமியை நினைக்கவில்லை. ஆனாலும் ஸ்வாமி கடமையைச் செய்துவிட்டார்.1

பிரபு! உன் கடமை உணர்வை, கருணைப் பெருக்கை என்ன சொல்வதப்பா? கூப்பிட்ட குரலுக்கு வருவதாக மற்ற அவதாரங்களில் சொல்வார்கள். அப்படித்தான் கஜேந்திரனும்த்ரௌபதியும் கதறி அழைத்தனர். நீயோ இந்தப் பூர்வ அவதாரங்களையும்இம்ப்ரூவ்செய்துகொண்டு வந்திருக்கிறாய்! கூப்பிடாவிட்டாலும் வந்து காக்கிறாய்!

இதற்கு இன்னுமோர் உதாஹரணம்:

விசாகப்பட்டினம் டாக்டர் . பாபி ராஜு துறைமுகக் கப்பல் ஒன்றிலிருந்த நோயாளிகளைப் பார்க்கக் காரில் சென்றார். அவரது மகன் தான் கார் ஓட்டியவர். வழியே காவலாளி இல்லாத ரயில்வே கேட் ஒன்று திறந்திருந்தது. வலப்புறத்தே நீண்ட சுவர் மறைத்ததால் இவர்கள் பார்வை அப் பக்கம் தடைப்பட்டிருந்தது. எனவே இடப்புறம் மட்டும் கவனித்து, இருப்புப் பாதையைக் கடக்க எண்ணிக் காரைச் செலுத்திவிட்டார் டாக்டரின் மகன்.

பயங்கரம் நடந்தது! வலப்பக்கத்திலிருந்து ஒரு ரயில் வெகு அருகில் வந்துகொண்டிருந்தது. இதோ ரயில் எஞ்ஜின் காரின் வலப் பக்கம் மோதியும் விட்டது!

பயங்கரம் நடக்கவில்லை! இவர்கள் காரிலிருந்து இடப்புறம் சற்றுத் தொலைவில் தூக்கி எறியப்பட்டனர். ஆயினும் எலும்பு முறிவோ காயமோ கூட இல்லாமல் தப்பினர்.

இதனினும் அதிசயம், காரும் அவ்வளவாக அடிபடாமல், தூக்கி எறியப்படாமல், நின்ற இடத்தில் நிலைகுத்திட்டிருந்தது!

இன்னமும்கூட அதிசயம், அந்த ரயில் எஞ்ஜினும் அதே இடத்தில் நின்றுவிட்டதுதான்! “ஆஹா, நான் பிரேக் போடாமலே எஞ்ஜின் எப்படி நின்றது?” என்று வியந்தார் கீழே இறங்கிய எஞ்ஜின் டிரைவர்.

2 ‘ஹிஸ்லாப்பே இந்நிகழ்ச்சி பற்றி எழுதியிருப்பதில், ஆனாலும் ஸ்வாமி கடமையைச் செய்துவிட்டார்என்ற வாசகம் கிடையாது. எனினும் இடைவிடாமலும் தவிர்க்கமுடியாமலும் இந் நூலாசிரியர் பெறும் சூட்சுமத் தூண்டுதலின் மீதே இங்கு இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்வாமி கூறிய இவ்வாசகத்தை ஹிஸ்லாப் கேட்கத் தவறிவிட்டார் போலும்.

தம்மால்தான் நின்றது என்பதை பகவான் இதற்கடுத்த வாரம் புட்டபர்த்தி சென்ற பாபிராஜுவுக்குத் தெளிவாக விளக்கினார்!

இங்கேயும் தம்மை ஆபத்தில் அழைக்க மறந்தோருக்கும் நம்பமுடியாக் காப்பு அளித்திருக்கிறார் நம் கண்கண்ட தெய்வம்!

ஆபத்து அதிவேகத்தோடு நெருங்கியதால் ஹிஸ்லாப் கோஷ்டியினரும், டாக்டர் பாபிராஜுவும் மூளை ஸ்தம்பித்து, ஸ்வாமியைக் கூப்பிடாதிருந்தனர். வேறு பல பக்தர்கள் தமக்கு நேரவிருக்கும் ஆபத்தை அடியோடு அறியாதிருப்பதாலேயே அவரைக் கூப்பிட இடமில்லாதிருந்து, அப்படியும் ஸ்வாமி அவர்களைக் காப்பாற்றி வருவது நிச்சயமாக அவரது ஸர்வ வியாபக, ஸர்வசக்திகளுக்குச் சான்றுதான்!

ஆபத்தே தெரியாதபோதும் காக்கும் இந்த மஹா காருண்யத்துக்கு ஓரிரு எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்:

குடகிலிருந்து ஸ்ரீ ஸி.எம். அப்பையா எழுதுகிறார்: “அன்று மின்ஸாரக் கோளாறினால் ஊரில் வெளிச்சமே இல்லை. குமார் ஏதோ கொஞ்சம் உண்டுவிட்டுப் படுக்கப் போனார். அவர் ஒரு பழைய கட்டிடத்தில் வசித்து வந்தார். மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, பாபா படத்தருகே ஊதுவர்த்தி சொருகிவிட்டு ஒரு சில பஜன்கள் பாடினார். பிறகு உறங்கிவிட்டார். புயற்காற்று ஊளையிடலாயிற்று. மழைதொப தொப்எனக் கொட்டத் தொடங்கியது. திடுமெனக் குமாரின் காதுக்குள் ஒரு ரஹஸ்யக் குரல் கேட்டதுகுமார் ஓடு!’ என்று. கதவைத் திறந்து கொண்டு அவர் இருளில் வெளியே ஓடினார். அவர் தெருவை அடைந்த அதே விநாடி, ஒரு பயங்கர சப்தம் கேட்டது. அவர் வசித்த வீடு இடிந்து விழுந்துவிட்டது! மறுநாட்காலை இடிபாடுகளிடை சேதமுறாததாக அவர் கண்டெடுத்த ஒரே ஒரு பண்டம்: பாபாவின் படம்தான்! அதன் கண்ணாடிகூட விரியவில்லை!”

1812லிருந்து 1828 வரை மதுரை கலெக்டராய் இருந்த ரோஸ் பீடரை அன்னை மீனாக்ஷி இடிந்து விழவிருந்த வீட்டிலிருந்து காத்ததை அச்சடித்தாற்போல் நம் ஸ்வாமி செய்துள்ள லீலை! மீனம்மாவும் ஸாயம்மாவும் வேறா என்னஹே ஸத்ய ஸாயீ! மதுரா மாயீ!” என்று நாம் பாடுவது முற்றும் உண்மை தான்.)

மஹாராஷ்டிரத்திலுள்ள நந்தர்பரைச் சேர்ந்த ஸ்ரீ ஆர்.ஜி. கோலாப்பும் இதே போன்ற (விபத்து) வருமுன் காக்கும் அருளுக்குச் சான்று பகர்கிறார்: “காலை 4-15 மணியிருக்கலாம். என்னை எழுந்திருக்கச் சொல்லி ஒரு குரல் கேட்பது போலிருந்தது. மறுபடி மறுபடி, மும்முறை கேட்டது. எனக்குத் தூக்கக் கலக்கம். இவ்வளவு முன்னதாக எழுந்து என்ன செய்யப் போகிறோம் என்று படுத்தபடியே இருந்தேன். ‘குறைந்தபக்ஷம் உன் கண்ணையாவது திறந்து பாரேன்!’ என்று மீண்டும் குரல் கூறிற்று. வேண்டா வெறுப்பாகக் கண்ணைத் திறந்தேன் நான் கண்டது என்ன? ஒரு திருடன் நுழைந்திருக்கிறான்! அபாயக் குரல் எழுப்பினேன். ஓடியே விட்டான். அப்போதுதான் நம்மை எழுப்பியது யார் என்று ஆச்சரிய உணர்வு ஏற்பட்டது. விடையாக ஒரு விபூதிச் சுவடு என் அறையிலிருந்து வெளி வராந்தாவுக்குப் போயிற்று! பாபாவேதான் என்றறிந்தேன்.”

***

சி நூறு மைல்களில் உள்ள குடகிலும், பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள மஹாராஷ்டிரத்திலும் மட்டுமின்றி, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள இடங்களிலும் அருட்காப்பு பொலிந்திருக்கிறது. அடியார் அறியாதபோதே அவர்களை ஆபத்தில் எச்சரிப்பதற்கும் மேலாக, அவ்வாபத்து நேராமலேயே தடுத்து விடும் பரமாத்புத அநுக்ரஹம்!

லண்டனில் ஸ்ரீமதி ஸீதாராமன் காஸ் அடுப்பை மூடாமலே படுக்கப் போய்விட்டார். வெறுமே அடுப்பு பாட்டுக்கு எரிந்துகொண்டு, காஸ் வீணானது மட்டுமல்ல. அடுப்பின்மீது எண்ணெய் பாத்திரத்தை வேறு வைத்திருந்தார். அது பற்றியிருந்தால் விபரீதமே நேர்ந்திருக்கும். ஆனால்அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அருளொடு நிறைந்தஸாயிராமன் காஸை மூடிவிட்டார். லண்டனிலுள்ள ஸீதாராமன் இல்லத்தில்! பிறகு ஒருகாலத்தில் அத்தம்பதியரையே கேட்டார்: “நான் மட்டும் காஸை மூடியிராவிட்டால் என்னவாகியிருக்கும்?” என்று.

இந்த இனத்தில் கடைசியாக இன்னொரு திருஷ்டாந்தம். இங்கிலாந்து என்ன, அமெரிக்காவும் ஐயனுள் அடக்கம் தான் எனக்காட்டும் உதாரணம். “ஆபத்துக் காலத்தில் உன் மோதிரத்தில் தெரியும் என்னிடம் முறையிடுஎன்று பாபா இந்திரா தேவிக்குச் சொன்னதும் தம்மைத்தாமே குறுக்கிக்கொண்டு அவர் செய்த லீலைதான். அந்த அம்மையார் தமக்கு வரவிருக்கும் விபத்தை அறியாத சமயத்திலுங்கூட இவராக, எந்த முறையீடும் இன்றி, காத்துத்தான் இருக்கிறார்!

ஒருநாள் கொட்டும் மழை. மூதாட்டி காரோட்டிச் செல்கிறார். திடீரென்று நீர்த்துடைப்பானை (wiper) ஒரு சூக்ஷ்மக் கை பிடுங்கி எறிவது போலிருக்கிறது. மழையில்வைபர்இல்லாமல் என்ன செய்வது என்பதால் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் வண்டியை நிறுத்தி, புதுவைபர்வாங்க இறங்குகிறார் இந்திரா. அங்குள்ள சேவகன்அம்மா, டயரைப் பாருங்க!” என்கிறான்.

டயரில் ஒரு பெரிய ஆணி பொத்துக்கொண்டிருக்கிறது!

அதனால் ஏற்படவிருந்த பெரிய விபத்தைத் தடுக்கத்தான் சிறிய விபத்தாக வைபரை ஸ்வாமி அபேஸ் செய்திருக்கிறார்!

தீமை காட்டி விலக்கிடும் தெய்வம் என்றார் பாரதி. ஒரு தீமையைக் காட்டி, அதைவிடப் பெரும் தீங்கை விலக்குகிறார் தெய்வஸாயி ***

ருமுன் காப்பதில்வெளி விபத்துக்களாயின் பாபா ரக்ஷித்த பின், நேரவிருந்த ஆபத்தை உணர முடிகிறது. ஆனால் உள் விபத்தான வியாதியில்வருமுன் காப்புஏற்படும்போது பிற்பாடும் தெரிவதற்கில்லை. ஆம், ஸ்வாமி பலருக்கு நோய் ஏற்படுமுன்பே அதைத் தடுத்திருக்கிறார். இதில் சில சமயம் வரவிருந்த நோயைத்தாமே ஏற்று அவதியும் பட்டிருக்கிறார். எவரது நோயையோ தாம் ஏற்றதாகவும் அது எப்போது பட்டென்று விலகும் என்பதையும் சொல்வாரேயன்றி, அந்த எவரோ ஒருவர் யார் என்று அடையாளம் சொல்லாமலிருப்பது தான் வழக்கம். பிற்பாடு நாம் விரிவாகப் பார்க்க இருக்கும் பாரிசவாயுச் சம்பவத்தின்போது, எவருடைய வியாதியை ஸ்வாமி வாங்கிக் கொண்டிருப்பார் என்று அறிவதற்காக அடியார்கள் நிலயத்துக்கு வருவோரில் அந்நோயுற்றோரைத் தேடினர். ஸ்வாமி சிரித்தார். “நீங்கள் எப்படி அவனைக் கண்டுபிடிக்க முடியும்? நான்தான் அவனுக்கு நோய் வருமுன்பே அதை எதிர்கொண்டு வாங்கிக் கொண்டு விட்டேனே! தனக்கு வரவிருந்த நோயையும், அது தடுக்கப்பட்டதையும் அவனே அறியாதபோது, நீங்கள் எப்படி அறியமுடியும்?” என்றார். காப்புப் பெற்றவருக்கே தாம் காத்ததாகக் காட்டாத தியாக தயாளு!

மணிவாசகர் அடியாரை நோக்கி, ஆண்டவனைச் சுற்றுமின், சூழ்மின், தொடர்மின், விடேன்மின், பற்றுமின்!” என்கிறார். இப்படியெல்லாம் செய்யாதோரும், சற்றும் பாத்திரமல்லாதோருமான நம்மைப் பர்த்தியாண்டவன் தாமே சுற்றி, சூழ்ந்து, தொடர்ந்து, விடமாட்டேன் என்று பற்றிக் காக்கிறார்.

ஸர்வேச்வரனைத் தவிர எந்த மஹாமஹா ஸித்தராலும் இப்படி எங்கெங்கும் இருந்து, எவ்வித இடரும் களைய இயலாது என்றே ஸாயி பக்தர் தீர்மானமாகக் கருதுவர். ஸாயியின் இந்த ஸ்பெஷாலிடியை எவ்வளவு சொன்னாலும் முடியுமா?

***

மேலே குறிப்பிட்ட இந்திராதேவி நிகழ்ச்சியில் சிறிய தீமையைக் காட்டிப் பெரிய தீமையை பாபா விலக்கியதை வெளிப்படப் பார்த்தோம். அடியார் அனைவரின் பொருட்டுமே இவ்வருளை அவர் வெளிப்படத் தெரியாமல் புரிந்துகொண்டேதான் இருக்கிறார். பக்தர்களுக்கும் ஏதாவது சிரமங்கள், தொந்தரவுகள் இருந்தபடிதான் உள்ளன. ‘பாபா ரக்ஷிக்கவில்லையே?’ என்றுகூடத் தோன்றலாம். ஆனால் இந்த இன்னலை அவர் தீர்த்தால் வேறென்ன பெரிய துன்பம் ஏற்படுமோ, யாரே சொல்ல முடியும்?

உதாரணமாக வயிற்றில் அல்ஸர் உள்ள ஒரு பக்தர் சொன்னார்: “அல்ஸர் இருப்பதால் தான் புளி, மிளகாய் நீக்கி ஸத்வ உணவு உண்கிறேன். இதனால் சிறுகச் சிறுகச் சித்த சுத்தி பெறுகிறேன். அல்ஸரைச் சரி செய்துவிட்டாரானால் என்னால் நாவைக் கட்டுப்படுத்த முடியாது. காரத்தையும் புளியையும் ஒரு கை பார்த்து சித்த சுத்தியைக் கெடுத்துக் கொள்வேன்.”

ஸ்வாமியிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்த, காலஞ்சென்ற குணசித்திர நடிகர் சித்தூர் ஸ்ரீ வி. நாகையா இப்படி ஒன்று சொல்வார். ஒரு சமயம் இவர் வீட்டிலிருந்து புறப்படுகையில் தென்னமரம் ஒன்று தடாலென்று விழுந்ததாம். அபசகுனமாயிற்றே என்று வீட்டோடு இருந்தாராம். அன்று மட்டும் அவர் வெளியே போயிருந்தால் ஒரு மிகப் பெரிய சிக்கலும், பெருத்த நஷ்டமும் ஏற்பட்டிருக்கும் என்று பிற்பாடு தெரிந்ததாம். “பச்சை மரம் விழுந்ததே!” என்ற பதைப்பை இவருக்குச் சிறிது நேரம் தந்து, பெரிய தீங்கினை ஸ்வாமி விலக்கிவிட்டார் என்பார்.

பெரிய தீங்காகவே தோன்றுவதுங்கூட உண்மையில் நன்மைக்காக இருக்கலாம். உதாஹரணமாக,

ஒருமுறை நிலயத்துக்கு வந்திருந்த ஒரு குருடரைப் பற்றி ஸ்ரீ கஸ்தூரியிடம் ஸ்வாமி சொன்னார்: “அவன் என்ன பிரார்த்திக்கிறான் தெரியுமா? அவனுக்கு நான் பார்வை தரவேண்டுமாம். அதாவது அவனுடைய குடும்பத்தை நாசம் பண்ணவேண்டுமாம்!”

கஸ்தூரிக்குப் புதிராக இருந்தது. ‘குருடருக்குப் பார்வை தருவது எப்படிக் குடும்ப நாசமாகும்?’

ஸ்வாமி புதிரை அவிழ்க்கவில்லை.

தந்திச் சேவகர் அவிழ்த்தார்.

குருடரைத் தேடிப் பிரசாந்தி நிலயத்துக்கே தந்தி வந்தது. தந்தி தந்த தகவல்: அவருக்கு உத்தியோகம் கிடைத்திருக்கிறதாம் குருடர் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ்!

ஸ்வாமி மட்டும் அவருக்குப் பார்வை தந்திருந்தால் லக்ஷோப லக்ஷம் அவலர்களோடு அவரும் வேலையில்லாக் கொடுமைக்கு ஆளாகித் திண்டாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! இப்போதோ குருடர் என்பதாலேயே அயனான உத்தியோகம் தேடி வந்திருக்கிறது! நன்மைக்கேதான் ஸ்வாமி தீமை தருவதும் என்பதற்குப் போதிய சான்றுதானே?

இதை மட்டும் ஆழ நம்பிவிட்டால் அப்புறம் நிரந்தரத் திருப்தி தவிர வேறென்ன? எத்தனையோ பேரை ஸ்வாமி விபத்திலிருந்து, வியாதியிலிருந்து, வறுமையிலிருந்து காப்பாற்றாததும் அவர்களது கர்மச் சுமையைக் குறைக்கிற அருள்தான் என்ற உறுதி நமக்கு ஏற்பட்டு விட்டால் நாம் ராஜாதான்! ஆனால் அது ஏற்படுவது மிகவும் துர்லபம். ‘கெடுதலும் நேரட்டும்என்று சொல்வதையே நாம் உள்ள நிலையில் ரஸிக்கமுடியாமல்தான் இருக்கும். எனவே இதைச் சொல்லி இவ்வதிகாரத்தை முடிக்க வேண்டாம். நாம் விரும்பும் விதத்திலேயே துள்ளி வரும் ஸ்வாமியின்ஸ்பெஷல்அநுக்கிரஹத்தோடு முடிப்பதுதான் பொருத்தம். இந்திரா தேவி விதவிதமாகப் பெற்றுள்ள அநுக்கிரஹங்களில் இப்படிப்பட்ட ஒன்றினைச் சொல்லி தலைக்கட்டுவோம்.

புயலிரவு. இந்திரா கார் ஓட்டுவதில் பிடிப்பிழந்துவிட்டார். அது தன் இஷ்டப்படி தடதடவென்று ஓடிற்று. எதிரும் புதிருமாக மும்மூன்று பாதைகளுள்ள அந்தச் சாலையின் குறுக்காக வண்டி இரண்டு முறை சுற்றிச் சுழன்றுவிட்டு, இன்னொரு பாதிச் சுற்றும் போட்டு எதிர்ப்புறத்தில் போய் நின்றது! விபத்து எதுவுமே நேரவில்லை!

போலீஸ்காரர் ஆச்சரியமுற்றுக் கேட்டார்: “சாலையில் இரு புறமும் ஆறு பாதைகளிலும் கார்கள் வந்தபடி இருக்குமே அதெப்படி உங்கள் கார் வேறெந்த வண்டியிலும் மோதாமல் சாலையின் குறுக்காக இரண்டரைச் சுற்றுச் சுற்றியது?”

ஆம், இரு புறங்களிலும் கார்கள் பாட்டுக்குப் பறந்து கொண்டுதான் இருந்தன. ஆனாலும் அம்மையாரின் வண்டி அவற்றோடு மோதாமல் இந்த நர்த்தனம் செய்திருக்கிறது!

இதை இந்திராதேவி கூறியதும் போலீஸ்காரர், “உங்களுக்கு ரொம்பவும் ஸ்பெஷலான ஒரு காப்புத் தேவதை இருப்பதாகத் தெரிகிறது!” என்றார்.ஸ்வாமியைப் பற்றியும், அவர் தந்த ரக்ஷையான மோதிரம் பற்றியும் அவரிடம் ஏதும் சொல்லாமல் அம்மையார், “ஆமாம் ஆமாம், ரொம்ப ஸ்பெஷல் தேவதைதான்!” என்று கூறினார்