புட்டபர்த்தி – 27

அத்தியாயம் – 27

ஷீர்டிபர்த்தி ஸங்கமம்

இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்(து) என்று முளன்

பொய்கையாழ்வார்

ம் ஸத்யஸாயி லீலா சமுத்திரத்தில் சேரும் ஒரு மகாநதி ஷீர்டித் தொடர்பான திருவிளையாடல்கள்.

இந்த மகாநதியின் ஒரு முக்கியமான கிளை சிஞ்சோலி ராணி குறித்த அருட்செயல்களாகும்.

ரெய்ச்சூருக்கு அருகே இருந்த சிஞ்சோலி ஸம்ஸ்தான மன்னரும் ராணியும் ஷீர்டி பாபாவின் அத்யந்த பக்தர்கள். உலகறிய ஷீர்டி பாபா. வெளியூர் சென்றதேயில்லை. ஆயினும், ஷீர்டியில் உள்ளபோதே இன்னொரு சரீரம் எடுத்துக்கொண்டு சிஞ்சோலிக்கும் சென்று தங்கி, டோங்காவில் ஊர்வலங்கூட வந்திருக்கிறார்! சிஞ்சோலிக் கிழவர்களில் சிலர் இதற்குச் சான்று பகர்ந்ததாக ஸ்ரீ கஸ்தூரியவர்கள் தெரிவிக்கிறார்.

ஷீர்டி பாபா மஹாநிர்வாணம் எய்தியது சிஞ்சோலி அரசதம்பதியருக்குப் பேரிடியாயிருந்தது. சிறிது காலத்தில் மன்னரும் விண்ணுலகு எய்தினார். இதற்குப் பல்லாண்டுகளுக்குப் பின்பே புட்டபர்த்தி ஸத்யா தன்னை ஷீர்டியவதாரமாகப் பிரகடனம் செய்துகொண்டது.

இதனைக் கேள்வியுற்றதும் சிஞ்சோலி ராணி ஆவல் மீதூர, ஆர்வம் முந்துறப் பர்த்திக்கு ஓடி வந்தார். கர்ணம் வீட்டிலே நம் கண்ணனைக் கண்டார்.

ஷீர்டி பாபா அவரை எப்படி அழைப்பாரோ அப்படியே நம் பால ஸாயி அழைக்க, அம்மையார் மாண்டவர் மீண்டு கண்ட பேரானந்தத்தில் மூழ்கினார்.

ஸ்வாமீ! என்னோடு தாங்கள் சிஞ்சோலிக்கு எழுந்தருள வேண்டும்என வேண்டினார்.

ஆஹாஎன்றார் பால பாபா.

ராணியுடன் சிஞ்சோலிக்குச் சென்றார்.

ஷீர்டி பாபாவாகத் தாம் அங்கு விஜயம் செய்தபோது கண்ட வீதிகள், கடைகள், மரங்கள் முதலியவற்றைப் பற்றி இணுக்கு இணுக்காக நம் குமாரதேவன் கேட்கக் கேட்க சிஞ்சோலி ராணிக்கு நம்பிக்கை பாறையாக நிலைப்பட்டது.

ராஜாவுக்கு நான் கொடுத்த மாருதி விக்ரஹம் எங்கே?” என வினவினார் ஸ்வாமி.

அந்த விஷயம் எனக்குத் தெரியாதேஎன்றார் ராணி.

பரவாயில்லைஎன்ற ஸ்வாமி தாமே அதை அரண்மனையில் குறிப்பாக ஓரிடத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார்!

ஆஹா! அவரே இவர்என நூறு சதவிகிதமும் தெளிந்த ராணி, ஷீர்டிபதி சிஞ்சோலியில் சவாரி செய்த டோங்காவைப் புட்டபர்த்திக்கே அனுப்பி வைத்துவிட்டார்.

பல்லாண்டுகளுக்குப் பின், ராணி தட்டுமுட்டுச் சாமான்களை ஒழித்து விற்பனை செய்வதில் முனைந்திருந்தார். அப்போது ஒரு பழைய பித்தளைக் கமண்டலு அகப்பட்டது.

விசித்திர வேலைப்பாடமைந்த அக் கமண்டலுவை விற்க ராணிக்கு மனம் வரவில்லை. தனது ஹைதராபாத் இல்லத்தின் வரவேற்பறையில் வைக்க நினைத்தார். அதை ஹைதராபாத்துக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்யும்போது,

எங்கிருந்தோ ஒரு நாகப் பாம்பு முளைத்தது! கமண்டலுவை மண்டலித்துச் சுற்றிக்கொண்டது அந்த நாகம்!

ஷீர்டி பாபா நாக ரூபத்தில் தரிசனம் தரும் வழக்க முண்டாதலால், இது அவரது லீலையே எனப் புரிந்துகொண்டனர். நாகத்துக்குப் பூஜை செய்தனர். அதுவும் சாவகாசமாகப் பூஜையை வாங்கிக் கொண்டது. பிறகு மறைந்துவிட்டது.

புனித கமண்டலுவைக் காட்சிப் பொருளாக வைப்பது பாபாவுக்குச் சம்மதமில்லை எனப் புரிந்து கொண்ட ராணி அதைப் பர்த்தி அவதாரத்துக்கே சமர்ப்பித்துவிடத் தீர்மானித்தார்.

கமண்டலுவும் கையுமாக ராணி பிரசாந்தி நிலயத்துள் நுழையும்போதே, உள்ளே மாடியில் இருந்த ஸ்வாமி, “சிஞ்சோலி ராணி என் கமண்டலுவோடு வருகிறாள். நீ போய்ப் பார்என்று ஆள் அனுப்பினார்.

பாத்தியதை கொண்டாடிய பாத்திரம் கைக்கு வந்ததும் ஸ்வாமி அதைச் சுற்றியிருந்தோருக்குக் காட்டி, “இதில் என்ன எழுதியிருக்கிறது, பாருங்கள்!” என்றார். தேவநாகரி லிபியில்ஸா பாஎன்று அதில் பொறித்திருந்தது!

உடமையற்ற துறவியரசான ஸாயிபாபாவின் பெயர் பொறித்த இந்த ஒரு சொத்தை அவரது புனரவதாரம் உரிமை கோரிப் பெற்றுக்கொண்டதும் ஒரு விந்தையே!

விந்தையின் பொருள் தசராவின்போது அவிழ்ந்தது. தசராவில் அதிவைபவமான மகாயக்ஞம் நடந்தபோது, சாஸ்திரப் பிரகாரம் அமைக்கப்பட்டகரகிஎன்ற தீர்த்த பாத்திரத்துக்காக வேதியர்கள் அலைந்தனர். “இதோ, உங்களுக்கு வேண்டிய கும்பம்என்று கூறி இந்தக் கமண்டலுவைத்தான் கொடுத்தார் நம் ஸ்வாமி. சாஸ்திர லக்ஷணப்படியே இருவாய்களுள்ள தீர்த்தபாத்திரமாக அது இருப்பதைக் கண்டு பண்டிதர்கள் வியப்புற்றனர்.

***

ஷீர்டிபர்த்தித் தொடரிழையை இந்நூலில் ஆங்காங்கு கண்டு வந்திருக்கிறோம். தலைசிறந்த மிருதங்க வித்வான் பக்கவாத்தியமாக அமைந்தால் அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விஸ்தாரமான தனி ஆவர்த்தனங்களும், ஆங்காங்கே குட்டி ஆவர்த்தனங்களும் தருவதுண்டல்லவா? இங்கே அப்படியொரு பெரிய தனி ஆவர்த்தனம் கொடுப்போம்!

***

சிஞ்சோலி ராணியைப் போலவே ஷீர்டிபாபாவை நேரில் கண்டு அவரில் ஊறிய அடியார் திலகங்களில் இன்னொருவர் ஸ்ரீ எம்.எஸ். தீக்ஷித்.

இவரது பெரியப்பாவான ஸ்ரீ ஹெச்.எஸ். தீக்ஷித் பெயரைச் சொன்னாலே ஷீர்டி பக்தர் தலை வணங்குவர். பிரபல வழக்கறிஞரும், அந்நாள் சட்டசபையாளருமான ஸ்ரீ ஹெச்.எஸ். தீக்ஷித்தை ஏனைய ஷீர்டியடியார்காகா ஸாஹேப்என்றே மரியாதையுடன் குறிப்பிடுவர். (‘காகாஎன்பது நாம் பொதுவில் எவரையும் மாமா என்பது போலாகும்.) பாபாவே அவரை அலாதி அன்பு சொட்டக்காகாஎன்று அழைப்பார். பெரியப்பாவை தெய்வ ஸ்தானத்தில் வைத்திருந்த எம்.எஸ். தீக்ஷித் அவருக்கும் தெய்வமான ஷீர்டி பாபாவிடம் ஆராத பக்தி கொண்டு ஆராதனை புரிந்து வந்ததில் ஆச்சரியமில்லை அல்லவா? 1909லிருந்து இவர் ஷீர்டி பாபாவை நேரில் கண்டு, அவரருளில் முக்குளித்தவர். இவரது தீராத் தலைவலியை பாபா ஓர் அறை அறைந்தே ஓட்டம் பிடிக்கச் செய்திருக்கிறார்.

இவருடைய ஷீர்டி முதல் தரிசனத்துக்குப் பொன்விழா எடுப்பதுபோல் 1959ல், ஷீர்டிபாபா மறைந்து நாற்பத்தோராண்டுகளுக்குப்பின், அவரது மறுபிறவியான ஸ்வாமி இவரை மறவாமல் ஆட்கொண்டதை என் சொல்ல?

மங்களூரில் வசித்துவந்த தீக்ஷித் அப்போது ஷீர்டி ஸாயி ஸத் சரித்திரத்தை ஸப்தாஹமாகப் பாராயணம் செய்து வந்தார். ஆறு நாள் பாராயணம் ஆகிவிட்டது. மறுநாள் அது பூர்த்தியாக வேண்டும். பூர்த்தியாகும் வரை காக்கப் பொறுத்திராமல், ஆறாம் நாளிரவே ஆராவமுதன் கனவில் வந்துவிட்டார்.

ஆனால் குறும்பைப் பாருங்கள், பக்தரை முன்னின்று அழைத்துச் செல்லும் நம் தலைவர், தீக்ஷித்தின் கனவிலே அவரைப் பின்தொடர்ந்து சென்றார்!

மரங்களுக்கிடையே ஓர் அகன்ற நடைபாதையில் சென்று கொண்டிருக்கும் தீக்ஷித்துக்கு யாரோ தம்மைப் பின்தொடர்வதாக உள்ளுணர்ச்சி! திரும்பிப் பார்க்கிறார். செழித்த கேச பாரமும், செக்கர் ஆடையுமாக ஒரு சுந்தர புருஷன் நிற்கிறார்.

மஹாமாயாவின் விலையாட்டை என்னென்பது? அவரை தீக்ஷித்துக்கு அடையாளம் தெரியவில்லை! “நீ யார்? ஏன் என்னைப் பின்தொடருகிறாய்?” என்று வினவுகிறார்.

பின்வந்த முன்னவன் மறுமொழி தரவில்லை.

தீக்ஷித் தொடர்ந்து நடக்கிறார். பின்னே அந்த வியக்தி தொடர்ந்து வருவதையும் வேகமாகத் தம்மை நெருங்குவதையும் உணருகிறார். தம் தலையில் அவர் எதையோ கொட்டுவதை அநுபவிக்கிறார். விபூதியைத்தான் வர்ஷித்திருக்கிறார்!

தமது பூர்வ சரீரத்துக்கு விபூதி அபிஷேகம் செய்பவர் இன்று பூர்வ சரீரத்தின் அபூர்வ பக்தரையும் திருநீற்றால் முழுக்காட்டியிருக்கிறார்!

ஸத்யஸாயியின் புகழ் வெகுவாகப் பரவிவிட்ட அந்த 1959லும் எம்.எஸ். தீக்ஷித் அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை அதனால், கனவு கனமாக அவருள் பதிந்திருந்தும் அதன் பொருளை அவர் விளங்கிக் கொள்ளாமலே இருந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகுதான் அவர் ஷீர்டீசரின் புனர்ஜன்மாவைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஏனோ அவருக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. ஆனால் இவருக்காகப் பிரேமை வலையை வீசிவிட்டவர் நம்பவைக்காமல் விடுவாரா?

இவர் வேறெங்கோ சென்ற இடத்திலும் பர்த்தி யவதாரரைப் பற்றியே பேச்சு படர்ந்தது.

(ஸாயி பக்தர் பலரது அநுபவம்: ஆரம்பத்தில் அவர்கள் எங்கு சென்றாலும் ஸ்வாமியின் மகிமை பற்றிய செய்திகளாகவே வரும். பிறகு அவர்கள் பக்தியில் ஆழங்காற்படுவதற்குச் சோதனை வைப்பதுபோல் ஸ்வாமியைப் பற்றி நானா மூலைகளிலிருந்தும் ஐயமூட்டும் சமாசாரங்களாக வந்து குவிந்தபடி இருக்கும்! ராமகிருஷ்ணர் சொன்னாற்போல், பந்தற்காலை நன்றாக ஆட்டி ஆட்டியே நடுவதைப் போன்றது இந்தக் கலக்கம் எனலாம். அல்லது, ஏகமாகக் கர்ம மூட்டையைச் சுமந்து கொண்டுள்ளவருக்கும் தெய்வம் கருணையால் தன்னை அறிவித்துக் கொண்டபின், தர்ம நீதியைக் கைக்கொண்டு, உடனே அவர்கள் தன்னிடம் முற்ற ஆழ்ந்துவிடாதபடி இப்படி அலைக்கழித்து. அதன் மூலமே கர்மத்தைத் தீர்த்து, பிறகு லவலேசமும் ஐயமின்றித் தன்னை அண்டுமாறு செய்கிறது என்றும் கொள்ளலாம்.)

பர்த்தியவதாரத்தைப் பற்றி மீண்டும் கேள்விப்பட்டது மட்டுமின்றி அவரது சித்திரத்தையும் ஸ்ரீ தீக்ஷித் கண்டவுடன் உள்ளே ஒரு பூட்டு திறந்துகொண்டாற் போலிருந்தது. ஆம், சித்திரத்தில் கண்டவரே இவரது சொப்பனத்தில் பின்னே வந்து விபூதி வர்ஷித்தவர்!

ஷீர்டி பாபா, “எட்டு ஆண்டுகளான பாலனாக மறுபடி வருவேன்என்று காகாவிடம் கூறியதும் இவரது நினைவில் வெடித்தது. பர்த்திக்கு சென்று பார்த்து வருவதென முடிவு செய்தார்.

இவர் பிரசாந்தி நிலயத்துக்குச் சென்றது சிவராத்ரி சமயத்தில். எக்கச்சக்கமான கூட்டம். இப்போது இவரைச் சுற்றி ஜனங்கள் நெரித்தாலும், அன்று கனவில் ஒரே ஒருவர் பின்தொடரத் தாம் நடந்த நடைபாதை இதோ நிலயத்தில் விரியும் இந்தச் சாலையேதான் எனக் கண்டு வியந்தார்.

ஸ்வாமி தரிசனம் கிடைத்தது. சந்தேகமேயில்லை, கனவில் வந்தவர்தான்! ஆனாலும் சந்தேகமாகத்தான் இருந்தது. இவர்நம் ஷீர்டித் தெய்வந்தானாஎன்று! ‘ஆஹா, அவர் முரட்டுத் துணிகட்டி எளிய பக்கிரி போலிருந்ததென்ன? தலைக்குட்டைக்குப் பதில் புதர்முடியும், முரட்டுத்துணிக்குப் பதில் ஸில்க் அங்கியும், எளிய பக்கிரித் தோற்றத்துக்குப் பதில் ஸினிமா ஸ்டார் ஷோக்கும் இவர் எப்படி அவராக இருக்கமுடியும்?’

ஷீர்டி ஸாயி விக்ரஹத்துக்கு ஸத்ய ஸாயி ஒரு காலி மரக்குடத்திலிருந்து பற்பல குடங்கள் விபூதிவரவழைத்துஅபிஷேகம் செய்வதைப் பார்த்தார் தீக்ஷித். ஸத்யஸாயியின் உபந்நியாசத்தையும் கேட்டார்.

உபந்நியாஸத்திடையே அவர் கூறியது தீக்ஷித்தைத் துணுக்குறச் செய்தது. என்ன கூறினார்? நாமும் கேட்போம்: “இங்கு வந்திருக்கும் சிலருக்கு ஸினிமா ஸ்டார் போல் தோன்றும் இந்தப் பட்டங்கி விநோத முடியர் எங்காவது ஷீர்டி பாபாவாக இருக்க முடியுமா என்று தோன்றுகிறது. வெளித் தோற்றத்தைப் பார்த்து எப்படி உள் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்? இரண்டு பட்சணங்கள் இருக்கின்றன. இரண்டும் ஒரே மாவு, ஒரே சர்க்கரை, ஒரே நெய் சேர்த்துச் செய்ததுதான். ஆனால் ஒன்றுக்குக் கலர் போடாமல் அப்படியே வட்டமாகத் தட்டி வைத்திருக்கிறது. இன்னொன்றுக்கோ கலர் போட்டு கனசதுரமாகத் துண்டு போட்டு வைத்திருக்கிறது. வட்டப் பணியாரத்தைத் தின்ற ஒருவர் மற்ற பக்ஷணத்தை உண்டுபாராமல், ‘கலரும் வேறே; உருவமும் வேறே. இதெப்படி நாம் சாப்பிட்ட சரக்காக இருக்கமுடியும்?’ என்று சங்கித்தால் என்ன சொல்வது? ‘நீங்களே இதை ருசித்துப் பாருங்கள்என்றுதானே சொல்ல வேண்டும்? என்னை நெருங்கி வந்து பாருங்கள். அப்போதே ஷீர்டியும் இதுவும் ஒன்றா, வேறா என்று அநுபவத்தில் தெரியும். அநுபவத்தால் ருசிபாராமல், அறிவால் வெளி ஆராய்ச்சி மட்டும் செய்தால் உண்மை தெரியாது!” என்றார் ஸ்வாமி! தீக்ஷித் துணுக்கமுறாமல் இருக்க முடியுமா? ஆயினும் இம்முறை அவருக்கு ஸ்வாமி தனிப்பேட்டி தராததால் அவர்ருசிகண்டு ருஜு காண முடியவில்லை.

மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் தீக்ஷித்தைப் புட்டபர்த்தி இழுத்தது.

இம்முறை பேட்டியும் கிடைத்தது.

ஸ்வாமி, தீக்ஷித் வைத்திருந்த அவரது பெரியப்பாவின் புகைப்படத்தை உருவி எடுத்து, “மேரா காகா, அச்சாஎன்று தம்முடைய காகாவாகவே நேசம் மிகச் சொன்னது அசல் ஷீர்டி வாசகமாகவே தொனித்து, தீக்ஷித்தைப் பரவசப்படுத்தியது!

உன் பெரியப்பா அவர். அவர், நான்எட்டாண்டுகளான பாலனாக வருவேன்என்று சொன்னதாகக் கூறியது சரியல்ல. ‘எட்டாண்டுகளுக்குப் பின் பாலனாக வருவேன்என்றுதான் வாஸ்தவத்தில் அவரிடம் சொன்னேன். ஷீர்டியில் 1918ல் மஹாஸமாதி கொண்ட எட்டு ஆண்டுகளுக்குப்பின் 1926ல் இங்கே பிறந்தேன். அவர் அதைத் தப்பாகப் புரிந்து கொண்டு மறு அவதாரத்தில் தோன்றும்போதே எட்டு வயசுப் பிள்ளையாக இருப்பேன் என்று நினைத்துவிட்டார்…”

ஸ்வாமி இப்படிச் சொல்லிக்கொண்டே போக, தீக்ஷித்தின் ஐயப் பனி மூட்டம் முழுவதும் சூரிய வெளிச்சத்தில் ஆவியாகிவிட்டது.

இன்னம் ஸந்தேஹமா?” கனியக் கேட்கிறார் ஸ்வாமி!

நடுவே கொஞ்சம் திறந்து கொண்டு மீளவும் பூட்டிக்கொள்ள இருந்த தீக்ஷித்தின் உட்பூட்டு கழன்றே விழுந்துவிட்டது. இதயக்கதவு விசாலமாகத் திறந்து கொண்டது!

அதற்குப் பரிசாகக் கதவு திறக்கும் கைங்கரியத்தையே இவருக்கு அளித்தார் ஸ்வாமி.

ஷீர்டிபாபாவிடம் தீக்ஷித், “உங்களுடைய வாயிற்காப்போனாகப் பணிபுரியும் பேற்றை எனக்கு அருளுங்கள்என வேண்டினாராம். ஷீர்டியில் தராத அந்த வரத்தைப் பர்த்தீசர் ஒயிட்ஃபீல்ட் பிருந்தாவனத்தில் தீக்ஷித்துக்கு வழங்கிவிட்டார். அங்கு ஸ்வாமியின் இருக்கைக்கு மேற்பார்வையாளராக தீக்ஷித் நியமிக்கப்பட்டார். ஸ்வாமியின் கார் வந்து போகும் போதெல்லாம் தாமே வெளிவாயில் கேட்டைத் திறந்தும் மூடியும் மகிழ்ந்தார்.

ஷீர்டீசருக்கும் பர்த்தீசருக்கும் கடுகத்தனை பேதமும் கிடையாது என்ற திடம் பெற்றவர் ஸ்ரீ எம்.எஸ். தீக்ஷித். இரண்டையும் கூட இருந்து அணு அணுவாக ருசி பார்த்த அவரது அநுபவக் கருத்து நமக்குப் பெரிய பிரமாணம்.

நம் ஸ்வாமி அடிக்கடி அந்தரத்தில்காற்றை எடை போடுவது போல்கையைச் சுழற்றுகிறார் அல்லவா? ஷீர்டி பாபாவின் வழக்கமேதான் இது என வியக்கிறார் ஸ்ரீ தீக்ஷித். (ஹேமாத் பந்தின்ஸாயி ஸத்சரித்ரத்திலும் ஷீர்டிபாபாவின் இச் சைகை கூறப்படுகிறது.) நம் ஸ்வாமியின் மற்றொரு வழக்கம் அந்தரத்திலேயே விரலால் ஏதோ எழுதிப் பார்ப்பது. இதுவும் ஷீர்டீசருடையமானரிஸம்’(!) தான் என்று தீக்ஷித் கூறத் தெரிகிறது.

ஷீர்டீசர் எளியர், பர்த்திஸாயியோ டாம்பீகமானவர் என எண்ணினால் அது அஸம்பாவிதம்தான். ஸ்வாமி பட்டணிவதிலும், காரில் செல்வதிலும், கோயிலெழுப்பிக்கொண்டு வசிப்பதிலும் டாம்பீகம் எதுவும் இல்லை என்பதை இந்நூல் தொடக்கத்திலேயே (அத்தியாயம் – 8) விளக்கியிருக்கிறோம்.

டாம்பீகம் என்று தோன்றக்கூடிய ராஜ மரியாதை செலுத்தப்படாத மகான் எவருமே இல்லை. ஷோடச (பதினாறு) உபசாரம், சதுஷ்ஷஷ்டி (அறுபத்துநாலு) உபசாரம் என்றெல்லாம் இறைவனுக்குப் பூஜை புரியும் நம் ரத்தத்திலேயே மஹான்களுக்கும் கோலாகல வழிபாடு நடத்தும் ஆர்வம் ஊறியிருக்கிறது. இதன்படி ஷீர்டிபாபா பெற்ற அபரிமித அலங்காரத்தையும், ஊர்வலத்தையும்விட நம் ஸ்வாமி பெற்றுவிடவில்லை. ஷீர்டிபாபாவின் வீதி உலாவில் எத்தனை வாத்தியங்கள், எத்தனை சாமரங்கள், எத்தனை ஆலவட்டங்கள், எத்தனை தண்டங்கள்! எப்பேர்ப்பட்ட புஷ்பமாரி! “பராக் பராக்!” சொல்லி அவருக்குக் கிரீடமே வைத்து மேனி மூடப் பொன்னாரங்களையும், மணிமாலைகளையும் அணிவித்திருக்கிறார்களே!

இதேபோலத்தான், தம்மைப் பக்கிரியாகவும், அல்லாவின் அடிமையாகவும் அவர் சொல்லிக்கொண்டதை மட்டும் கருத்தில் கொண்டு, “அவர் எத்தனை எளியராகப் பேசினார்? இவரோ தம்மையே அவதாரம் என்றல்லவா முழக்கிக்கொள்கிறார்?” என்று கேட்கும் அன்பர்களுக்கு, ஸத்யஸாயிக்குச் சற்றும் சளைக்காத ஷீர்டிபதியின் மகோன்னத வாக்கியங்கள் சிலவற்றைஸாயி ஸத்சரித்ரம்என்ற ஆதாரபூர்வமான உத்தம நூலிலிருந்து இங்கு எடுத்துக்காட்டுவோம்:

நான் இருக்க பயமேன்?” என்ற ஒன்றே போதாதா? தன்னை இறையவதாரமாகக் கருதுபவரன்றி யார் இப்படி அதிகார பூர்வமாக அபயம் வழங்க முடியும்? மேலும் சில:

கடலானது தன்னில் விழ வரும் நதிகளை ஏற்க மறுத்தாலும் மறுக்கலாம்; நான் என் பக்தர்களை ஏற்று உய்விப்பதில் என்றும் பின்வாங்க மாட்டேன்.”

(விஜயாநந்தரிடம்) “பூர்வ ஜன்மங்களில் நீ செய்த புண்ணியத்தால் தான் இந்த இடத்தை (ஷீர்டியை) உன்னால் மிதிக்க முடிந்திருக்கிறது.”

பொம்மலாட்ட சூத்திரத்தை ஆட்டுபவன் நானே.”

நான் அனைத்தறிவானவன். தீயில், காற்றில், நீரில், மண்ணில், விண்ணில் எங்கும் நான் குடி கொண்டிருக்கிறேன். என்னைக் கட்டுப்படுத்த முடியாது.”

என் கஜானா பரிபூர்ணமானது. எவர் எதைக் கேட்டாலும் என்னால் கொடுக்க முடியும். ஒருத்தனுக்குத் தகுதியில்லை என்பதால் நான் ஒன்றைத் தருவதில்லையே தவிர, என்னால் ஏதொன்றையும் தரமுடியாது என்றில்லை.”

அனைத்துக்கும் ஆதாரமான தாயே நான். முக்குணங்களின் இசைவு நானே. எல்லாக் காட்சிகளையும் இயக்குபவன் நான் தான். சிருஷ்டி கர்த்தாவும், பரிபாலகரும், ஸம்ஹாரமூர்த்தியும் நானே.”

போதுமா?

இதோடுகூட ஷீர்டி ஸாயி பாபா பல தெய்வ வடிவங்களில் காட்சி தந்ததையும் நினைவுகொண்டால்அவர் எளியர்; இவர் போல் தெய்வத்வம் கொண்டாடாதவர்என்ற வாதம் சரியேயல்ல என்று புலனாகும்.

இந்த நாணயத்தின் மறுபுறத்தில் சக்திப் பிரவாகமான நம் மகா ஸ்வாமியிடம் எத்தனை எளிமை உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஸ்வாமி தம்மைப் பராசக்தியாக, பகவானாகச் சொல்லிக் கொள்வதை எழுத்தில் படிக்கும்போது அவரை எளியராக எண்ண முடியாமலிருக்கலாம்; மேடைப் பிரஸங்கத்தில் அவர் இதை அழுத்திச் சொல்லும்போதும் இவருக்கு எளிமை கை வராது என்று தோன்றலாம். ஆனால் அவர் தனிப்படப் பேசும்போது, குறிப்பாக, அந்தரங்கப் பேட்டியின்போது, தம்மைக் குறித்தே, “ஸ்வாமி உங்களோடேயே இருக்கிறேன்; உங்களுக்குள்ளேயே இருக்கிறேன்என்று சொல்லி நமது சகலப் பிரச்சனைகளையும் கூறி, விபூதி முதலியன ஸ்ருஷ்டித்துத் தரும்போது நாம் உன்னதமான ஒன்றைக் காணும் விலவிலப்பை அடைவதேயில்லை. மாறாக அவர் இனிமையிலும் இனியராகத்தான் தோன்றுகிறார். அவரிடம் ஒட்டி உருகத்தான் அப்போது நெஞ்சு விம்மி எழுகிறது. அவரிடம் எளிமை இருந்தாலன்றி அற்ப சக்தர்களான நாம் அந்த மகாசக்தியிடம் ஒட்டி நிற்கவிழைவோமா?

நம் ஸ்வாமிக்கு மிகவும், அணுக்கத்திலிருந்து அவரை எளியராகக் கண்டுள்ள ஸ்ரீ கோகக்குக்கு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கையில், ‘பத்தாயிரம் மைல்களுக்கப்பால் இத்தனை இல்லங்களில் இவ்வளவு அற்புதங்களைச் செய்பவர், அந்நிய தேசத்தினராலும் இப்படி ஆண்டவனாகவே வழிபடப் பெறுபவர், வாஸ்தவமாக இவரேயா நம்மோடு அவ்வளவு ஸஹஜமாகப் பழகும் அந்த பாபா?’ என்று தோன்றியதாம்!

மகோன்னத வாக்கியங்களைச் சொல்லும் அதே பாபா “I am the servant of all” (“நான் அனைவருக்கும் ஊழியன்”) என்பது போன்ற அதி விநய மொழிகளையும்தான் கூறுகிறார்.

பிரசாந்தி நிலய வைத்யசாலையில் ஸ்வாமி அருளால் நடந்த அற்புத சிகித்ஸைகள் பற்றி டாக்டர் ஸீதாராமய்யா சொல்ல, “நான் என்ன செய்கிறேன்? உங்கள் எல்லோருடைய மனப்பூர்வமான சேவையும், இங்கே வருகிறவர்களின் ஸாதனை, பஜனை இவையும்தான் நோயாளிகளைக் குணப்படுத்துகின்றனஎன்றாரே, இதைவிட ஒரு விநயம் உண்டா? இதுதான் உண்மையெனில், பிரசாந்தி நிலய மருத்துவமனையில் மட்டுமின்றி, உலகாயதச் சூழலே கொண்ட வெளி ஆஸ்பத்திரிகளில், சேவா உணர்ச்சியற்ற வெறும் இயந்திர கதி டாக்டர்களிடம் சிகித்ஸை பெறும் ஸாயி பக்தரான அநேக நோயாளிகளும் அந்த டாக்டர்களே வியக்கும் வண்ணம் அற்புத நிவாரணம் பெறுகிறார்களே, அதெப்படி? எனவே இங்கே அடக்கத்தின் வடிவாகத்தான் பாபா பேசியிருக்கிறார்.

இப்படியே, நிச்சயமாக பாபாவின் அதீத சக்தியால் தான் தங்களுக்கு ஒரு பெரு நலன் விளைந்தது என்று உணர்ந்து அதற்காக நன்றி கூறும் பக்தர்களிடம் விநய வடிவாக, “உங்களுடைய நம்பிக்கையின் சக்திதான் காரணம்என்பார். அவ்வாறாயின் நம்பிக்கையே அற்ற பலர் பாபாவினால் அதிசய முறையில் காக்கப்பெற்ற பின்பே நம்பிக்கைகொள்ள ஆரம்பித்திருக்கிறார்களே, இதை எப்படி விளக்குவது? இங்கும் ஸ்வாமி தம்மை அடக்கிக்கொண்டு பேசியிருக்கிறார் என்பது தெளிவு.

ஒடுக்கமும், ஒதுக்கமும் எளிமையின் உடன்பிறப்புக்கள். பாபாவின் மேனிப் பாங்கில் அநேக சந்தர்ப்பங்களில் நாம் எப்பேர்ப்பட்ட ஒடுக்கத்தைக் காண்கிறோம்? குறிப்பாகச் சுவரிலோ, கதவிலோ ஒட்டினாற்போல அவர் நிற்பதில் எத்தனை ஒடுக்கம்?

அநேகப் புகைப்படங்களைப் பாருங்கள். சக்கரவர்த்தி மிடுக்கு மாறி வெள்ளை உள்ள எளிமையே தெரியும். அடக்கத்தின் அங்கமான வெட்கமும் நாணமும் கொண்ட பெண்மையும் தெரியும்.

மேடையில் நாற்காலி போட்டிருந்தாலும், அதில் அமராமல் கீழே, அதுவுங்கூட நட்ட நடுவில் அன்றிச் சற்று ஓரப் புறமாக ஒதுங்கி உட்காருவது பாபாவின் வழக்கம். அதிலும் பெண்ணைப் போல மட்டி போட்டு அமருவார். பிரசாந்தி நிலயத்தில் பேட்டி அறையிலிருந்து வெளிப்பட்டு பஜனைக் கூடத்துக்குள் அவர் வரும் போது பாருங்கள் வாயில் நிலைகளின் ஓரமாக ஒதுங்கித்தான் வருவாரே அன்றி, நட்ட நடுவாக வரமாட்டார். இம்மாதிரி பல சின்னச் செயல்களில் அவரது எளிமையை உணர்கிறோம்.

அன்று பக்கிரி வேஷம் போட்டேன்; இன்று நவாபாக வந்திருக்கிறேன்என்று ஸ்வாமியே சொல்வதுண்டுதான். ஆனால் இது பூர்வாவதாரத்தில் பிச்சை எடுத்து உண்டதையும், முரட்டுத் துணி உடுத்தியதையும் மட்டும் குறிப்பதுதான். ஷீர்டிவாஸர் பக்தரைக் கூப்பாடு போட்டுவைததையும் அடித்ததையும் நினைத்தால், இன்றைய பாபாதான் அவரைவிட அடங்கியவர் என்று சொல்ல வேண்டும்.

ஒரு ரம்யமான நிகழ்ச்சித் துணுக்கு: ஷீர்டி பாபாவின் படமொன்றைப் பார்க்கிறார் பர்த்தி பாபா. முகத்தில் ஒரு விநோத உணர்வு படர, தாமாக அவரது திரு அதரங்களிலிருந்து. “ஆஹா. ஏனு ஜம்ப!” (“என்ன ஜம்பம்!”) என்ற வார்த்தைகள் உதிருகின்றன.

ஆம், ‘ஷீர்டி பாபா எளியர், பர்த்திக்காரர் ஜம்பக்காரர்என்று சிலர் சொல்கிறார்களெனில், பர்த்திக்காரரோ ஷீர்டி பாபாவை ஜம்பக்காரர் என்கிறார்!

அந்த வார்த்தைகளை அவர் அநுபவித்துச் சொன்ன நயத்திலேயே ஷீர்டியின் எளிய கிழவருடையஜம்பம்என்ன என்று புரிந்ததாம். அதாவது, நம் ஸ்வாமி அவரிடம், “கிழவனாரே! உலகத்தை நல் வழியில் திருப்ப வேண்டும் என்பதற்காக நான் ஓயாமல் ஒழியாமல் ஊரைச் சுற்றி, தொண்டைத் தண்ணீர்வற்ற என் மகிமையைச் சொல்லிக்கொண்டும், நவகண்டத்திலும் என் சக்திகளை அற்புதமாகக் காட்டிக்கொண்டும். பல நிறுவனங்களைக் கட்டிக்கொண்டும் அவதிப்பட்டு, அவப்பேரும் வாங்கிக் கொண்டிருக்கிறேன். நானேயான நீரோ உம்முடைய அத்தனை தெய்விகத்தையும் மனஸிருந்தால்தான் காட்டுவது என்ற ஜம்பத்துடன், ஷீர்டியை விட்டு அசையாமல், வேண்டுமென்றே பக்கிரி வேஷம் போட்டு ஹாயாக இருந்து விட்டீரே! முரட்டு ஆண்டி போலிருந்தாலும் அதைத் துளைத்துக் கொண்டு உம் மன்னாதி மன்ன மகத்துவத்தைப் புரிந்துகொள்பவர் புரிந்துகொண்டால் போதும்; மற்றவருக்கு அதை நீராகத் தெரிவித்து ஒன்றும் ஆக வேண்டியதில்லை என்கிற ஜம்பம்தானே உமக்கு?” என்று சொல்லாமல் சொல்லி விட்டாற்போலிருந்ததாம், “ஏனு ஜம்ப!” என்ற இரண்டே வார்த்தைகளின் அற்புதப் பிரயோகம்!

***

மிருதங்கத் தனி ஆவர்த்தனத்திலிருந்து கடம், கஞ்சிரா, மோர்சிங் என்று வெகுதூரம் போய் விட்டோமோ? மிருதங்கத்துக்குத் திரும்புவோம்.

எம்.எஸ். தீக்ஷித்தை விடவும் ஷீர்டி பாபாவுக்கு நெருக்கத்திலிருந்த அப்துல்லா பாபா குறித்து பர்த்தி பாபா புரிந்த லீலையைக்கடைத்தேறும் கடைப்பொழுதுஎன்ற அத்தியாயத்தில் பார்ப்போம். உள்ளாழம் வாய்ந்த மற்றொரு பெரியாரின் சான்றை இங்கு பார்க்கலாம்:

ஸ்ரீ காயத்ரி ஸ்வாமிகள் என்ற அந்தப் பெரியார் சிருங்ககிரி பீடத்தில் பூர்வாசாரியராக இருந்த ஸ்ரீ நரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகளின் சீடர். 1906ல் ஷீர்டி இவரை ஆகர்ஷித்தது. ஓராண்டு முழுதும் ஷீர்டி ஸாயியுடனேயே தங்கியிருந்து அவரது தெய்விக மஹிமையில் நீராடினார். அவரையே மஹாகுருவாகக் கொண்டார். இதன் பின் பன்முறை ஷீர்டிக்குச் சென்று அந்த குருவை மேலும் மேலும் அண்மையில் அனுபவித்தார்.

புட்டபர்த்தியில் புனரவதாரம் நிகழ்ந்திருப்பதாகக் கேள்வியுற்று 1960வாக்கில், தள்ளாப் பருவத்தில் இங்கு வந்தார். நம்ஜம்பக்காரர்அவருக்கு இன்டர்வ்யூ தரவேயில்லை.

அன்று அவர் பர்த்தியிலிருந்து கிளம்பவேண்டிய தினம். தமக்கே உரிய குழந்தைத்தன குதூஹலம் கொந்தளிக்க ஸ்ரீ கஸ்தூரியிடம் வந்தார். “நேற்று இரவு குரு (ஷீர்டி பாபா) எனக்குத் தரிசனம் தந்தார். (‘விஷன்எனும் அதீத உணர்வுக் காட்சியில்.) ‘எட்டு வருஷத்துக்கப்புறம் கிளம்பினேன்; அப்புறம் பதினைந்து வருஷத்தில் பழைய சொத்து முழுதையும் சேர்த்துக் கொண்டு விட்டேன்’, என்று கூறி மறைந்துவிட்டார். இதற்கு என்ன அர்த்தமாக இருக்கும்?” என்று வினவினார்.

இரண்டும் இரண்டும் நாலுஎன்பது போல் கஸ்தூரிக்கு அர்த்தம் புரிந்துவிட்டது. சொன்னார்: “ஷீர்டியில் மஹாஸமாதி அடைந்த பின் எட்டு வருஷங்களுக்குப் பிறகுதான் பர்த்தியில் அவதாரம் நிகழ்ந்ததுஸத்யா பழைய பாபாவாகத் தன்னை ப்ரகடனம் செய்து கொண்டு அவரது எல்லா லீலைகளையும் ஆரம்பித்தது பதினைந்தாம் வயதில் தான். அந்த லீலா மஹிமைதான் பழைய சொத்து.”

ரொம்ப ரொம்ப சந்தோஷம். எனக்குஇன்டர்வ்யூகிடைக்காவிட்டால் என்ன? இந்தஸெண்டர்வ்யூ’ (உண்மையின் மையக்காட்சி) கிடைத்துவிட்டதே!” என்று மகிழ்ந்து கொண்டு நிறைவுடன் புறப்பட்டார் காயத்ரி ஸ்வாமிகள்.

குறிப்பிடத்தக்க இன்னொரு புள்ளி மஹாராஷ்டிர அரசியல் தலைவரான ஸ்ரீ பி.கே. ஸாவந்த் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், அமைச்சர், கீழ் மேல் சட்ட சபாநாயகர் ஆகிய பதவிகளை வகித்தவர். நம் நூலைப் பொறுத்தமட்டில் இவற்றை விட முக்கியமாக ஷீர்டி ஸம்ஸ்தான டிரஸ்ட்டில் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அதன் முன்னாள் தலைவராகவே இருந்தவர்.

1960 மே மாதம் இவர் பம்பாயில் நடைபெற்ற ஸத்ய ஸாயி பஜன் ஒன்றில் கலந்துகொண்டார். பஜன் முடிவில் எல்லோருக்கும் வழங்கப்பட்ட பிரசாந்தி நிலய விபூதியை இவருக்கும் வழங்கினார் டாக்டர் டி.ஜே. கதியா.

அவ்வளவுதான், ஸாவந்த் குழம்பலானார். ‘ஏதோ பஜன் பாடியதைக் காதால் கேட்டோம், அதில் நடு நடுவே ஸத்ய ஸாயியின் பெயர் வந்ததால் தோஷமில்லை. ஆனால் இந்த விபூதியை எப்படி நேராக உடம்பிலேயே அணிவது? அதுவும் போதாதென்று, இதோ மற்றவர்கள் செய்வதுபோல் இதை எப்படி உட்கொள்வது? பர்த்தி பாபாதான் ஷீர்டி பாபா என்பதற்கு என்ன ருஜு? இது போலியாக இருந்து விட்டால்? இவ்விபூதியை அணிவதே ஷீர்டி பாபாவுக்கு அபசாரமாகிவிட்டால்? ஆனால், நம்பிக்கையுள்ள பக்தரிடையே நாம் திருநீறு வாங்கிக் கொள்ளாவிடினும் பண்பாக இராதே!’ குழம்பினார்.

சிலரைப் போல ஸ்ரீ ஸாவந்த் தீர்மானமாக மனக்கோணல் (prejudice) கொண்டு, ஷீர்டி பாபா பர்த்தியில் வந்தே இருக்க முடியாது என்று வீம்பாக எண்ணவில்லை. வாஸ்தவமாகவே நாட்டில் போலி பாபாக்கள் ஏராளமாகப் பரவிவிட்டதால்தான் கலங்கினார். தெளிய வழி கிடைக்குமாயின் அதைக் காண மனத்தைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தார். திறந்த மனத்தோடு ஐயுறுபவரைத் தாம் தெளிவிப்பதாக நம் ஸ்வாமி சொல்வதற்கேற்ப, ஸ்ரீ ஸாவந்துக்காக ஓர் அற்புதம் புரிந்தார். சில விநாடிகளுக்கு மேல் ஸாவந்தைக் குழம்பவிடாமல் அவரது நாடிக்குள்ளேயே உண்மையைஇன்ஜெக்ட்செய்துவிட்டார்.

எப்படிச் செய்தார்? விபூதி விநியோகித்த கதியாவின் தலைக்கு மேலிருத்த ஸத்ய ஸாயி பாபா படத்தின் அபய ஹஸ்தத்திலிருந்து கண்களைக் கூசச் செய்யும் ஓர் ஒளி புறப்பட்டது. அதன் பிரகாசத்தில் சந்தேக இருட்டு இருந்த இடம் தெரியாமல் ஓட்டம் பிடித்துவிட்டது! ஸ்ரீ ஸாவந்த் விபூதியை இதயமார வாங்கிப் பூசிக் கொண்டு உட்கொள்ளவும் செய்தார். அதிலிருந்து ஸத்ய ஸாயியின் பக்த சிரோமணிகளில் ஒருவரானார்.

ஷீர்டி ஸம்ஸ்தான முக்யஸ்தர்களில் வேறு சிலரும் இரு ஸாயிக்களின் ஒற்றுமையை உணர்ந்து ஸத்ய ஸாயியை வணங்கி வருகிறார்கள். ஜீவ ஸமாதி கொண்டிருப்பதாகத் தாங்கள் கருதும் ஷீர்டி பாபா, அந்த ஸமாதிக் கோயிலையே நிர்வகித்து வருபவர்களில் சிலரும் ஸத்ய ஸாயியிடம் ஈடுபட்டிருப்பதைத் தடுக்கவில்லை என்பதிலிருந்தேனும் ஷீர்டி பாபாவின்எக்ஸ்க்ளூஸிவ்பக்தர்கள் தெளிவு பெறலாம். இவ்வாண்டு (1976) மே மாதம் ஸ்வாமி பம்பாய் சென்றபோது கூட ஷீர்டி ஸம்ஸ்தானத்தினர் அவரை அந்தப் பூர்வ சரீர க்ஷேத்திரத்துக்கு வருமாறு அழைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்குரிய காலம் இன்னம் வரவில்லை என்று ஸ்வாமி கருதுகிறார் போலும்!

ஆயினும் ஸூக்ஷ்மத்தில் நம் பர்த்தி பாபா ஒவ்வொரு விஜயதசமியன்றும் ஷீர்டி சென்று அங்குமொதடி சரீரத்தின் மஹாஸமாதி பூஜை நடப்பதைப் பார்த்து, அதன் விவரங்களை இங்கே அணுக்கத் தொண்டர்களுக்குக் கூறியது உண்டு. அவரது வழிமுறைகளை எவர்தான் பூரணமாகப் புரிந்துகொள்ள இயலும்?