புட்டபர்த்தி – 23

அத்தியாயம் – 23

கற்பகம் கற்பனையல்ல!

பகைவராலோ, கள்வராலோ, அரசராலோ, ஆயுதத்தாலோ, அக்னியாலோ, வெள்ளத்தாலோ என் பக்தனுக்கு ஒருபோதும் பயம் ஏற்படாது.”

தேவீ மாஹாத்மியபலஸ்துதியில் தேவி வாக்கு

பா ஸாயியின் பால்மொழி திகம்பரஸ்வாமியை உலுக்கிவிட்டது. ஆம், கண்டித்தாலும் கஷாயமாக இன்றிப் பாலாகவே இருந்த வாக்கு!

ஸ்வாமி நீட்டிய துண்டை வாங்கி அணிந்துகொண்டு திகம்பரக் கோலம் விட்டார் ஸ்வாமியார்.

மௌனத்தை விட்டு, “ஐயனே! என் தவற்றை மன்னியுங்கள். தாங்கள் சொல்லியுங்கூட, அச்சம் விட்டு வனாந்தரம் புக எனக்குப் பக்குவம் வரவில்லை. ஆயினும் இனி மக்களைப் பாதபூஜை, பணக்காணிக்கை, பல்லக்குச் சுமத்தல் இவற்றால் சிரமப்படுத்த மாட்டேன். இருந்த இடத்தில் இரண்டு வேளைக் கஞ்சி கிடைக்க அருள்வாய்என்று கேட்டுக்கொண்டார்.

அப்படியேஎன்று அன்பு வழிய அருளினார் பால ஸாயி.

இப்படித் தலைகுப்புற விழுந்து, தங்கள் காலை வாரிவிட்ட சாமியாரைப் புட்டபர்த்திப் புண்யாத்மாக்கள் அப்போதே கைவிட்டுப் போயினர். அவருக்கென்றே ஏற்பட்ட பக்தர்கள் சிவிகையைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டனர். அதுதான் அவரது கடைசியான சிவிகை உலாவாக இருக்கவேண்டும்!

ஸாதுக்கள் பணக் காணிக்கைகளாகப் பறிமுதல் செய்வதை மட்டுமின்றி, அவர்கள் தர்மப் பிரசாரத்தை உத்தேசித்தேகூட தத்தம் ஸ்தாபனங்களில் அதீதஈடுபாடு கொண்டு, ஓயாமல் காரியத்தில் ஈடுபட்டிருப்பதை பாபா வன்மையாகக் கண்டிப்பார். ஸ்தாபனம் இருக்கலாம், காரியமும் செய்யலாம். ஆனாலும் இவற்றைவிட ஸாதுவுக்கு மிக மிக முக்கியம் ஆத்ம ஸாதனைதான் என்று வலியுறுத்துவார். ஸ்தாபனத்தில் ஏற்படும் அதீதப் பற்றும் ஆத்ம வளர்ச்சிக்கு ஹானியே என்பார்.

திகம்பர ஸ்வாமி சம்பவம் நடந்து பதினேழாண்டுகளுக்குப் பின் பிரசாந்தி நிலையத்துக்கு வந்தார் ஸ்வாமி ஸச்சிதானந்தா. உலகில் நன்மதிப்பும் மரியாதையும் பெற்றவர். நிச்சயமாகப் போலி அல்ல. ராஜயோகத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர்.

எழுபது வயதான ஸச்சிதானந்தாவை முப்பத்திரண்டு பிராயத்து பாபா முதுகில் தட்டிக் கொடுத்து, “உங்களுக்கு ஏன் இத்தனை ஸ்தாபனப் பற்று? ஏன் இத்தனை காரிய அரிப்பு? ஹிமாசலத்தில் ஏகாந்த தியானத்தில் நீங்கள் முழுகக் கூடாதா? உலக நலன் என்ன ஆவது என்கிறீர்களா? நீங்கள் மட்டும் யோகஸித்தி அடைந்துவிட்டால் போதும், அதன் சக்தி குகையையும், வனத்தையும், இமயத் தொடரையும் துளைத்துக் கொண்டு வெளியே பரவி, உலகுக்கு இப்போது நீங்கள் செய்வதைவிட உயர்ந்த நன்மையை நிச்சயமாகத் தரும்

உங்கள் சரீர ரக்ஷணத்தை நினைத்துத் தயங்கவேண்டாம். பனியில் உங்களுக்கு நான் போர்வையாக இருப்பேன்; பசிவேளையில் போஜனமாக வருவேன். யோக க்ஷேமம் வஹாம்யஹம்என்றார்.

வயது முதிர்ந்த யோக சாதகரான பிரபல தமிழ்க்கவி ஒருவர் பாபாவிடம், “ஸ்வாமீ! எத்தனையோ அற்புதம் செய்கிறீர்களே, எனக்கு இரு இறகுகள் சிருஷ்டித்துத் தாருங்களேன்! எனக்கு உலகத்தின் முக்கியமான மொழிகள் யாவும் தெரியும்; கவித்வமும் உள்ளது. சிறகடித்து உலகெங்கும் பறந்து நானா மொழிகளிலும் உங்கள் புகழைப் பாடி நானில் முழுதும் பரப்புகிறேன்என்றார்.

உடனே ஸ்வாமி, “என் காரியத்தை நான் கவனித்துக் கொள்கிறேன் ஐயா! உம்மைப் பொறுத்தமட்டில், இப்போதே உம் பறப்பு அதிகம், உம் இறக்கைகளைக் கட்டிப் போடலாமா என்றுதான் ஆசைப்படுகிறேன். நீர் ஏன் ஓரிடத்தில் அடங்கியிருந்து, கற்ற யோகத்தை முற்றும் அநுபவமாக்கிக் கொள்ளக் கூடாது?” என்றார் நறுக்கென.

எத்தனை அபயதானம் தந்தாலும், ஏகாந்தத்துக்குப் போகும் துணிவு எவருக்கு வரும்? அப்படியானால் நிர்மாநுஷ்ய அடவியில் ஸ்வாமி யோகக்ஷேமம் வகிப்பதற்கு உதாரணமே இல்லையா? இருக்கிறது. இதுவே, அவரை இந்த ஸத்பஸாயி உருவில் அறியாதாருக்கும் அவர் காப்புத் தருகிறார் என்பதற்கும் உதாரணமாக இருக்கிறது.

1957 ஜூலை பிற்பகுதி. அடியார்களோடு ஐயன் (ஹ்)ருஷீ கேச யாத்திரை செய்த சமயம்.

ஹிமாலயத்தில் வஸிஷ்ட குகைக்குச் சென்றுவிட்டு ஸ்ரீ சிவாநந்தாசிரமத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வழியிலே பாபா திடுமென சரீரத்தை விட்டு வெளியேற, அவரது உடல் கீழே சாய்கிறது.

இம்மாதிரி ஸந்தர்ப்பங்களில் வெளியே வேறெங்கோ அவரது ஸூக்ஷ்ம சரீரம் புரியும் செயல்களின் பிரதிபலிப்பு இங்கே கட்டையாகக் கிடக்கும் ஸ்தூல சரீரத்தில் தெரிவதுண்டு.

அப்படி இப்போது பாபாவின் கைகள் ஒன்றையொன்று பொத்தி எதையோ அடக்கமாகக் காப்பது தெரிகிறது.

சிறிது போதுக்குப்பின் எழுந்து அமருகிறார். “எங்கு போயிருந்தீர்கள் ஸ்வாமி?” என்று பக்தர் வினவுகின்றனர்.

சில சமயங்களில்தான் அவர் இதைப் பகருவார்.

இன்று கருணைகூர்ந்து, “சொல்கிறேன்எனக் கூறி,” ஸுப்ரம்மண்யத்தைக் கூப்பிடுங்கள்என்கிறார்.

பாபா கோஷ்டியைச் சேர்ந்த சுப்ரம்மண்யம் வந்தவுடன், “வஸிஷ்ட குகையில் என்ன பார்த்தாய்?” என்று கேட்கிறார்.

அவர் பதைப்புற்று, “ஸ்வாமீ, தங்களிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துச் சொல்லாதிருந்துவிட்டேன்! ஆனாலும் தாங்கள் அறிந்துவிட்டீர்கள்!” என்றார்.

இவர்களுக்குச் சொன்னாலொழியத் தெரியாதே! நீயே சொல்என்றார் பாபா.

சுப்ரம்மண்யம் கூறினார்: “வஸிஷ்ட குகைப் பக்கத்தில் கங்கையில் ஒரு உடல் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்தேன். பத்மாஸனத்தில் இருந்த யாரோ ஒரு யோகியை உட்கார்ந்த நிலையிலேயே வெள்ளம் அடித்துச் சென்றது. பிணம் என்றே தோன்றியது. எனவே இதைச் சொல்லி எல்லோருக்கும் அமங்கல உணர்வை உண்டாக்குவானேன் என்று பேசாதிருந்து விட்டேன்.”

பிணமில்லைஎன்றார் பிரான். அந்த யோகி கரையில் ஒரு மண் மேட்டுப் பாறைமேல் அமர்ந்து தியானத்தில் அமிழ்ந்து விட்டார். கங்கை பெருகிவந்து மேட்டை அரித்து, அதை அப்படியே அடித்துச் செல்ல ஆரம்பித்துவிட்டது. அதுகூட யோகிக்குத் தெரியாது. மண் முழுதும் வெள்ளத்தில் சிதறியதும், மேற்பாறை சரிந்தது. யோகி வெள்ளத்தில் விழுந்துவிட்டார். அவரறியாமலே பிராணாயாம சக்தி அவரை மிதக்க வைத்தது. அப்புறம் வெளிப் பிரக்ஞை வந்தது. என்னதான் யோகியாயினும், உயிர் போய் விடுமோ என்றவுடன் பயம் பிடித்துக் கொண்டது! ‘பகவான்!’ என்று அடிமனத்திலிருந்து கூவினார். உடனேதான் நான் சரீரத்திலிருந்து கிளம்பினேன்.

அங்கு ஓடினேன். கங்காப் பிரவாஹம் அவரது இதயத்தைப் பிளக்காமல், இதயத்தின் முன்னும் பின்னும் என் ஸூக்ஷ்மக் கைகளைப் பொத்திக் காத்தேன். அவர் உணவு உட்கொண்டு வெகுகாலமாகிவிட்டதால், சாப்பாடு கிடைக்கும் இடமாகப் பார்த்துக் கரையேற்றலாம் என எண்ணி, அப்படியே வெள்ளத்தின் மீதே முப்பது மைல் தள்ளிக் கொண்டுபோய் விளையாட்டுப் பார்த்தேன். சிவாநந்த நகருக்குப் பக்கத்தில் ஒரு குடியானவன் வீட்டில் அவரைக் கரை சேர்த்தேன். சில்லித்துப் போன அவருக்கு அங்கே கணப்பு கிடைத்தது; வாடிய வயிற்றுக்கு ரொட்டி கிடைத்ததுஎன்று முடித்தார்.

ஸத்யஸாயி என்ற பெயரையே கேட்டிராத ஒருவர் பகவானுக்கு விடுத்த கூப்பாடு அந்த ஸத்யஸாயியின் காப்பை இழுத்து வந்து விட்டது என்றால் என்ன அர்த்தம்? குழந்தை கூடச் சொல்லிவிடுமே! பெயரேதும் சொல்லாமல் ஆதிமூலப் பரம்பொருளை கஜேந்திரன் கூவி அழைத்தான்; நாராயணன் எனப் பெயர் கொண்ட தேவதேவன் அங்கே விரைந்தான் என்ற புராணமே நவீனமாயிருக்கிறது!

சாதாரணமாகப் பரம பூஜ்யர்களான மஹான்களும் தமது வடிவத்தை வழிபடுவோரும், தமது நாமத்தை ஓதுவோரும், தம்மிடம் தீக்ஷை பெற்றோரும், தம்மிடம் பரமபக்தி பூண்டோரும் ஆபத்திலிருப்பதை மட்டுமே உணர்ந்து சூக்ஷ்ம சரீரத்தால் காப்பு அளிப்பதைத்தான் வரலாறுகளிலிருந்து அறிகிறோம். இந்த அம்சத்தில் பாபா தனித்துத்தான் பிரகாசிக்கிறார். அதோடு, அவரிடம் துளிக்கூடசுயவிளம்பர எண்ணமில்லாததால், மேற்படி வஸிஷ்டகுகை யோகி போன்ற பலருக்குத் தாம் அருள்புரிந்த பின்னருங்கூட தமது ஸாயி ஸ்வரூபத்தையோ ஸாயி நாமத்தையோ வெளிப்படுத்துவதில்லை.

பாபா சிலருக்குத் தரும் தாயத்து, மோதிரங்கள் போன்றவை மட்டுமே அவற்றை அணிவோரின் இடர்களை அவருக்குத் தெரிவித்து ரட்சணை பெற்றுத் தருமாக்கும் என எண்ணுவோர் இதிலிருந்து தெளிவு பெற வேண்டும். இதுபோன்ற ஸ்தூலப் பரிசுகள் மூலம் பக்தரை அவர் எப்போதும் ஸ்பரிசிப்பதும் ஒரு லீலா விநோதமேயன்றி, முழு சத்தியமல்ல. பக்தியே உண்மைத் தாயத்தாக ஸாயித் தாயைக் கட்டிப்பிடித்துத் தருகிறது. இவரால் இடுக்கண்களில் ரக்ஷிக்கப்பட்ட எல்லோரும் ஸ்தூலப் பரிசுகள் பெற்றவர்களா என்ன? அல்லவே அல்ல.

அவரே சொல்வார்: “ஸாயி என்ற ஆகாரத்தில் (உருவத்தில்) தான் பக்தி செய்ய வேண்டும் என்பதில்லை. இந்த நராகாரம் உண்மையில் நிராகாரப் பிரம்மந்தான். எந்த ரூபத்திடம் மெய்யன்பு செய்வோரும் ஆபத்தில் எழுப்பும் எஸ் எஸ். இந்த எஸ், எஸ், எஸ், ஸை (ஸ்ரீ ஸத்ய ஸாயியை) அடைந்து விடும். ஒருவர் எம் முறையில் ஆத்ம முன்னேற்றத்துக்கு முயன்றாலும். அந்த மார்க்கத்தையே நான் ஒரு முறைக்கு மும்முறை yes, yes, yes என்று அங்கீகரிக்கிறேன். இன்னும் சொல்லப் போனால், ‘பகவான்பக்திஎன்றெல்லாம்கூட இல்லாமல் ஒருவன் சத்தியத்தையும், தர்மத்தையும் விடாமல், எல்லோரிடமும் அன்பு பூண்டு யோக்கியனாக இருந்தாலே போதும், அவன் எந்த நாமாவையுமே சொல்லி அழையாவிடினும், நானே அவனது ஆபத்தில் பக்கத்தே சென்று இடர் கடிந்து வருவேன்.”

ஒருவர் தனக்கு நேரவிருக்கும் ஆபத்தையே உணராதிருக்கிறபோதும், அதாவது தீனக்குரல் எழுப்ப அவசியம் இருப்பதையே அறியாதபோதும் இவராக ஆபத்தைக் களைந்தெறிந்த சந்தர்ப்பம் பல. பிறகே அவர்கள் தங்களுக்கு எப்பேர்ப்பட்ட விபத்து ஏற்படவிருந்தது என்று தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

நானிருக்க பயமேன்?’ அருளில் பாபா பாபாதான்!

***

யம் போக்குபவரே அவ்வப்போது கொஞ்சம் பயமுறுத்தியும் விளையாடுவதுண்டு. லீலையில் இது ஒரு ரகம்!

தமக்கை வெங்கம்மாவுக்கு இப்படித்தான் ஒரு நள்ளிரவு பயம் உண்டாகிவிட்டது.

வாசலில் யாரோ கூப்பிட்டாற்போலிருந்தது. அப்புறம் அவள் படுத்திருந்த அறைக்குள்ளேயே சோள மூட்டைகளுக்குப் பின் எதுவோ, அல்லது எவரோ சஞ்சரிக்கும் அரவம் கேட்டது. பயமாக இராதா?

தம்பியை நினைத்து, தைரியப்படுத்திக்கொண்டு விளக்கை ஏற்றினாள்.

தம்பிரான் ஏமாற்றிவிட்டாரே என்ற நினைப்பு வந்தது. இவள் அவரிடம் ஷீர்டி பாபா படம் கேட்டிருந்தாள். “, தருகிறேன்! குருவார பூஜை அதற்குத்தான் செய்யப் போகிறாய்என்றார் தம்பி ஸ்வாமி. ஆனால் படம் தராமலே இன்று, புதன்கிழமை, உரவகொண்டா போய்விட்டார்.

வெங்கம்மா விளக்கு வெளிச்சத்தில் சோள மூட்டைகள் பக்கம் பார்த்தாள். ஒரு மூட்டைக்கு மேல் வெளேரென்று எதுவோ நீட்டிக் கொண்டிருந்து. அருகே சென்று பார்த்தால், காகிதச் சுருள். பிரித்துப் பார்த்தால்வேறென்னவாகயிருக்கும்? ஷீர்டிபுரீசர் திருஉருவந்தான்!

நம் கதாநாதன் சித்திரதானம் செய்வதை முதலில் ஸ்ரீமதி காசிபட்ல விஷயத்தில் கண்டோம். இன்று வெங்கம்மாவுக்கு. இனி, பல்லாண்டுகள் பலருக்கு (வி)சித்திர தானம் தொடரப்போகிறது. ஒருஸாம்பிள்இங்கேயே பார்த்துவிடலாம்.

தஞ்சை மாவட்ட விஜயபுரம் துர்க்கா ஆசிரமத் தலைவரான குஞ்சப்ப ஸாது ஒரு நீரிழிவு நோயாளி. அங்க ஊனமுற்றவரும்கூட உள்ளூருக்குள் சஞ்சரிப்பாரேயன்றி வெளியூர்ப் பயணம் செய்ய இயலாதவர். ஆயினும், இவருக்குப் பர்த்தி சென்று பாபாவைத் தரிசிக்க முடியவில்லையே என நீண்டகாலமாக ஏக்கம்.

1965 ஜூன் 17ந்தேதி அதிகாலை வழக்கம்போல் மாட்டுக் கொட்டிலில் தீனி வைத்துவிட்டு வந்து படுக்கையில் சாய்ந்தார். வாயிற்கதவு தட்டப்பட்டது. ஸாது சென்று திறந்தார்.

முன்பின் தெரியாத ஒருவர் அவரிடம் ஒரு படத்தை நீட்டினார். ஸாது அதை வாங்கிக் கொண்ட உடனேயே வந்தவரைக் காணவில்லை. ஸாது தெருவுக்குச் சென்று பார்க்க, ஒரு சுவடும் இல்லாமல் அந்த நபர் மறைந்து விட்டிருந்தார். படத்தைப் பிரித்தார். சொல்லவும் வேண்டுமா? நம் ஸ்வாமியின் சித்திரந்தான்

என்னால் பர்த்தி வர இயலாது என்பதால் நீயே இங்கு வந்து உன்னையே கொடுத்துச் சென்றாயா?’ என்று நெகிழ்ந்தார் குஞ்சப்ப ஸாது.

இந்த அதிசயத்தை நண்பரிடம் சொல்லி வியந்தார். நண்பர், “உங்களுக்கு பாபாவிடமுள்ள பக்தியைப் பற்றித் தெரிந்த ஆசாமி எவராவதுதான் படத்தைக் கொடுத்துவிட்டு வேகமாக நழுவியிருப்பாரோ என்னவோ? பாபாதான் வந்தார் எனில் புட்டபர்த்தியிலிருந்து இவ்வூருக்கு வந்தவர், உங்கள் அறைக்குள்ளேயே தோன்றியிருக்கலாமே! ஏன் வாசலில் வந்து கதவைத் தட்ட வேண்டும்?” என்று ஐயத்தைக் கிளறினார்.

நாள் முழுதும் பாழாய்ப் போன சந்தேகம் குஞ்சப்ப ஸாதுவைக் குழப்பிற்று. மறுநாள் புலருமுன் மாட்டுத் தீவனம் வைக்க எழுந்தபோது படுக்கையிலே எதுவோ தட்டுப்பட்டது.

இன்னொரு படம், படம்தான் வேறே தவிர, படத்திலிருந்தவர் அவரேதான்!

உன்னிடம் சந்தேகப்பட்டதற்காக எனக்கு ஒட்டிக்கு இரட்டையாக அருட்பரிசா?’ என்று உருகினார் ஸாது.

***

ஷீர்டி ஷீர்டி என்று மருமான் பெருமான்பாடுகிறானே, அந்த ஊர் எப்படியிருக்கும்? அந்த ஷீர்டி பாபா பட உருவில் அன்றி உயிர்வடிவில் எப்படியிருப்பார்?” என்றறியும் ஆசை அத்தை கோனம்மாவுக்கு உண்டாயிற்று. ஒரு நாட்காலை பாலஸாயியிடமே தன் விருப்பத்தை வெளியிட்டாள்.

அத்தை, ஸாயங்காலம் உன் ஆசையைப் பூர்த்தி பண்றேன்என்றார் அருளாளர்.

அந்தி மயங்கும் ஸந்தியில் அத்தையை அழைத்தார் அத்தன். திருக்கையால் அவள் கண்ணைப் பொத்தி வீட்டின் கோடியறைக்கு இட்டுச் சென்றார். கரத்தை எடுத்துவிட்டு, “அதோ பார்என்று எதிரே காட்டினார். அத்தைக்கு ரத்தம் குளிர்ந்தது; சித்தம் மிளிர்ந்தது.

சதையும் தசையுமாக ஸாக்ஷாத் ஷீர்டி ஸாயி பாபா அங்கே அமர்ந்திருக்கிறார்! படங்களில் கண்ட உருவம் ஜீவனுடன் பொலிகிறது! இரண்டு வித்தியாஸங்கள். ஒன்று: கண்களைத் தியான நிலையில் மூடியிருக்கிறார். இரண்டு: நெற்றியிலே விபூதிப் பட்டை பளிச்சிடுகிறது.1

ஷீர்டிச் சூழலே அங்கு வந்துவிட்டது! பாபாவைச் சுற்றி சாம்பிராணி, ஊதுவர்த்திகளின் தூபம் மனோஹரமாக மணக்கிறது. பர்த்திநாதன் குரல் ஊதுவர்த்திச் சுருளாகவே சுருண்டு மணந்தது: “பார்த்தாச்சா, அத்தை?”

2 பாபுராவ் சாந்தோர்கர் என்ற பக்தர் ஷீர்டி பாபாவுக்குத் திருநீற்றை முப்பட்டையாக இடுவதுண்டு என அறிகிறோம். அத்தையம்மை கண்டது அப்படிப்பட்ட கோலந்தான். வெளிப்பார்வையில்உதிஎனும் விபூதிப் பிரஸாதம் தானே இரு பாபாக்களையும் முக்யமாக ஒன்றுபடுத்துகிறது? அதனால் விபூதிதாரணக் கோலம் போலும்!

மீளவும் அவள் கண்களைப் பொத்தி வெளியே அழைத்து வந்தார்.

அத்தை பெற்ற இன்னோர் அநுபவம்: புட்டபர்த்தி கண்டிராத ஒரு கனியை அவளுக்குக் கொடுத்தார் பாலஸாயி. “இது ஷீர்டிப் பழம்என்றார். “நாயனா, இவ்வளவு நல்லா இருக்கே! இங்கே வர்றவங்களுக்குத் தலைக்கு ஒண்ணு படைச்சுக் கொடேன்என்றாள் அந்த நல்ல மநுஷி. “கொண்டு வா ஒரு கூடைஎன்றார் வரதராஜர். கூடை வந்தவுடன்முன்னைப் பழம் பொருள்அதை ஒரு தட்டுத் தட்ட, கொல்லென்று அது முழுதும் ஷீர்டிப் பழங்கள் நிறைந்துவிட்டன. அன்று பஜனைக்கு ஏறக்குறைய நூறு பக்தர் வந்துவிட்டனர். கூடையிலோ நாற்பது பழத்துக்கு மேல் பிடிக்காது. “பரவாயில்லை, தலைக்கு ஒண்ணு கொடுத்துண்டே போஎன்றார் பாபா. அத்தையும் அபூர்வக்கனியைக் கொடுக்கக் கொடுக்க வளர்ந்து அத்தனை பேருக்கும் முழுசாக ஒவ்வொன்று கிடைத்தது. வெறும் கூடையில் நாற்பது பழம் முளைக்கும்போது, நாற்பது நூறாக வளர முடியாதா என்ன?

***

முன்பு நமக்கு அறிமுகமான பெனுகொண்டா வக்கீல் ஸ்ரீ கிருஷ்ணமாசாரியார் சிலரோடு வந்து பெத்த வெங்கப்ப ராஜுவிடம் ரகளை கட்டினார். “பிள்ளையைக் கிளப்பிவிட்டு, ஊர் கூட்டி, கலாட்டா செய்கிறாயாமே! ஷீர்டியாம், பாபாவாம்! இதெல்லாம் என்ன புரளி? மகனை அடக்கி வைஎன்றார்.

அப்போது உள்ளே பிள்ளையாண்டார் சாவதானமாக சுப்பம்மாவுக்கு ஷீர்டிக் காட்சியை அருளிக் கொண்டிருந்தார். ஏனோ இவளுக்கு ஷீர்டி பாபாவைக் காட்டாமல், அவரது சமாதியையே காட்டினார். அதன் அருகேயுள்ள மாருதி ஆலயத்தோடு, வேப்ப மரத்தோடு சேர்த்துக் காட்டினார். ஸ்தல தரிசனமே மூர்த்தி தரிசனத்தளவு பாவனமாக இருந்தது.

அவளிடமே, “வாசலில் இருக்கும் வக்கீல் வகையறாக்களை அழைத்து வாஎன்று கூறி அனுப்பினார் ஸ்வாமி. அப்படியே அழைத்து வந்தாள்.

புரளிஎன்று எகத்தாளம் செய்தவர்கள் ஷீர்டியைக் கண்குளிர, கருத்துக் குளிர தரிசனம் செய்துகொண்டனர். அவர்கள் நாஸ்திகரோ, தீயவரோ அல்லராதலால் இக்காட்சியில் உண்மையான தெய்விகத்திற்கு சாட்சி பெற்றனர்.

நிந்திக்க வந்தவர் வந்தித்துச் சென்றனர்.

***

1950ல் பாபா பிரசாந்தி நிலையப் புது மாளிகைக்குப் பெயர்வதற்கு முற்பட்ட காலமே அலாதிதான் என்று பழவடியர் சொல்வதுண்டு. இன்று அவரைச் சுற்றி ஏகக் கூட்டமாகிவிட்டதால் பக்தர்களை உடன்வைத்துக் கொண்டு, தனித் தனியாகக் கவனம் செலுத்தி, லீலை செய்து கும்மாளி போடுவதற்கு ஸ்வாமியால் முடியவில்லை. கால தேசங்களுக்குக் கட்டுப்படாத சூக்ஷ்ம தேகத்தால் இப்போதும் ஏராளமான பக்தருக்குத் தாராளமாக அருள்புரிந்துதான் வருகிறார். ஆனால் ஸ்தூல சரீரத்தைக் கால தேசங்களுக்கு அவரே கட்டுப்படுத்தித்தான் இருக்கிறார். அதனால் இன்று அடியாரிடம் தனிக் கவனம் காட்டுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. இன்று அவர் சித்ராவதிக் கரைக்குச் செல்கிறாரெனில் கூடவே ஆயிரமாயிரவர் தொடரத்தானே செய்வர்? அவ்வளவுபேரும் படுகையில் அமரக் கூட இயலாதே! அன்று அப்படியில்லை. தரிசனம், கோரிக்கை1 இவற்றுக்குப் பின் நூறு பேருக்குள்தான் இருப்பர். எனவே அனைவரையும் அழைத்துக்கொண்டு பிரதி மாலையும் ஆற்றங்கரைக்குச் செல்வார். அங்கே அன்றாடம் செய்த அற்புதங்களோ எண்ணில! ஆற்று மண்ணிலே கையை அளைந்து அளைந்து எத்தனை விதமான பிரதிமைகள், பக்ஷணங்கள், பழங்கள், படங்கள் வழங்கியிருக்கிறார்!

2 பாபா அடியாருக்கு அந்தரங்கமாக அளிக்கும் பேட்டிகோரிகஎன்று தெலுங்கு மொழியில் வழங்குகிறது. அதையே தமிழில்கோரிக்கைஎன்கின்றனர். பொதுவாகஇண்டர்வ்யூஎன்கிறோம். இது சாதாரண பேட்டிகளையும் குறிக்கும் பதமாயிருப்பதால் தெய்வத்துடன் பேட்டியைஆடியன்ஸ்எனலாம்.

***

கொடி கட்டிப் பறக்கும்மரம் ஒன்று சித்ராவதியை அடுத்த குன்றின் உச்சியில் உண்டு. அதில் ஒரு கொடியைக் கட்டிவிட்டிருப்பதற்குக் காரணம், அது ஒரு காலத்தில் கற்பக விருக்ஷமாக இருந்ததை நினைப்பூட்டத்தான்.

பாபாவின் பம்பை முடி போலவே தோன்றும் அம்மரம் இன்று வெறும் புளிய மரமாகத்தான் இருக்கிறது. ஆதியிலும் அப்படித்தான் இருந்தது.

ஒருநாள் பாலஸாயி, பக்தர்களை அம் மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

யார் யாருக்கு என்னென்ன பழம் வேண்டுமோ அதை இந்த மரத்திலிருந்து பறித்துக் கொள்ளுங்கள்என்று சந்தன வெள்ளமாகச் சிரித்துக் கூறினார்.

ஒருத்தர் வாழைப் பழத்தை நினைத்துக்கொண்டு புளிய மிலாற்றை உருவினார்; கையில் செவ்வாழைக் கனி வழுக்கிக் கொண்டுவந்தது!

வேறொருவர் ஆரஞ்சை, இன்னொருவர் ஆப்பிளை, பிறிதொருவர் அத்தியை, மற்றொருவர் அன்னாசியை என்று இப்படி ஒவ்வொருவர் ஒரு கனி வகையை நினைத்துப் புளிய மரத்தில் பறித்தனர். அவரவர் விரும்பிய பழமே கையில் கனத்தது. நாசியில் மணத்தது, நாவில் ருசித்தது, கூடுதலாக அப்பழங்களில் ஸாயிப் பிரேமையின் கனமும் மணமும் ருசியும் வேறு!

இன்று பாபாவுக்கான ஆரதிப் பாடலில்ஆச்ரித கல்ப லதிகாஆபத்பாந்தவா என்ற பதங்கள் வருகின்றன.

கஷ்டங்கள் தீர்க்கும் கலியுகவரதா
கற்பகமாகும் உன் திருக்கரமே

என்று இன்னொரு பாடல். அவரே கற்பகம். குழைவுமிக்க ஸாயீச்வரியாதலால், அவரைக் கற்பகமரம்என்பது பொருத்தமில்லை; கல்பகக் கொடிகல்ப லதிகா என்கிறோம். “பக்திமத் கல்பலதிகாஎன்பதுதானே லலிதையின் ஆயிர நாமாவில் காண்பது? இந்தக் கல்பகக் கொடி தன் சங்கல்பத்தில்தான் புளியமரத்தை அன்று கல்பக விருக்ஷமாக்கி, விரும்பியதை நல்கச் செய்தது.

மாமதுரையில் ஸோமசுந்தரர் ஸித்தராக வந்து செய்த பல லீலைகளில் எட்டி மரத்தில் சுவைக் கனிகளைப் பழுக்க வைத்ததும் ஒன்று. புட்டபர்த்தியாம் ஆலவாயில் ஸோமவாரத்தில் பிறந்த நம் பிரானின் எண்ண விசேஷத்தால் இப்புளியமரம் புராண எட்டி மரத்தின் மகிமையை எட்டிவிட்டது!

புளிமரத்தை இன்கனித் தருவாக்கியவர், நாம் மட்டும் நம் புளித்த மனத்தை அவர் வசம் ஒப்புவித்தால் அதை மதுரமயமாக்காது இருப்பாரா?

புளிய மரத்தில் கனிகள் மட்டுமா பழுக்கவைத்தார்? தெய்வ விக்ரஹங்களையும் பழுக்கவைத்தார்!

அப்போதைக்கு நாவுக்கு ருசித்து. வயிற்றை நிரப்பும் கனி தந்ததோடு திருப்தியடையாத பாபா, “அவரவருக்கு விருப்பமான விக்ரஹத்தைப் பறித்துக் கொள்ளுங்கள்என்றார்.

பக்தர்கள் விநாயகர், முருகன், கண்ணன், ராமன், திருமால், லக்ஷ்மி, ஸரஸ்வதி, பார்வதி, சிவன், பாபா எனத் தாங்கள் விரும்பிய பிரதிமைகளைப் பறித்துக் கொண்டனர். சின்ன புளியங்குச்சியில் நுனியிலே நான்கு புளிய இலைகள் அப்படியே மாறாதிருக்க, பிரதிமைகளும் இயல்பாக ஒட்டிக்கொண்டு வந்தன!

உனக்குப் பிரதிமா (ஈடு) இல்லையப்பா!” என இந்திரனை நோக்கி வேதம் கூறுவது நம் இந்திர ஜாலக்காரருக்கும் பொருந்தும்.

கற்பக நல் நீழலைப்
பாரினிடை வரவழைப்பீர்

என்று தாயுமானவர் கூறியதை சத்தியமாக்கிவிட்டார்!

புட்டபர்த்திப் புளியமரத்தை மட்டுமின்றி, வேறுசில மரங்களையும் பாபா தமது சஞ்சாரங்களின்போது கல்பகமாக்கியிருக்கிறார்.

கற்பகம் வேறு. பாரிஜாதம் வேறு என்று பண்டிதர்கள் கூறுவராயினும், மெத்த அறிந்தவர்களில் சிலர் இவற்றை ஒன்றாகச் சொல்வதையும் காண்கிறோம். பாமைக்காகக் கண்ணன் விண்ணகம் சென்று இந்திரனை வென்று பாரிஜாதம் கொணர்ந்து துவாரகையில் நட்டதை ஆழ்வார்கள், ஏவிளங் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
காவளம் கடிதிறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்

என்றும்,

மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய்
வண்துவரை நட்டானை

என்றும் கற்பகமாகவே கூறுகிறார்கள்.

பாமைதான் பர்த்தியில் ஸத்யம்மாவாகக் கோயில் கொண்டாள். கற்பகம் கொணர விண் சென்ற ஐயனுக்காகக் காத்திருந்தபோதே காற்று மழையில் சிக்கிக் கொண்டம ராஜுவிடம் உதவி கோரினாள். ஆண்டுகள் கழிந்த பின் ஐயனும் அவதரித்தான். அதாவது, கலிமலிந்த இன்று தர்மம் என்ற கற்பகத்தருவைக் கண்ணன் கொணர்ந்து நடமாட்டானா என்றே பூமாதேவி இங்கு தவமிருந்திருக்கிறாள். தவம் பலித்தது. இன்று நானா நாடுகளிலும் விரியும் கற்பக விருட்சமாக ஸ்வாமி தர்ம ஸ்தாபனம் செய்கிறார்.

இன்று ஆலாகத் தழைத்துள்ள இப்பணியின் கன்று பச்சிட்ட அன்றே கொண்டம ராஜுவுக்குத் தாம் கனவிற் கண்டது நனவாகி, கண்ணன் வந்து விட்டான் என்ற உறுதி ஏற்பட்டுவிட்டது. தாம் நூறாண்டு வாழ்ந்தது வீணுக்கில்லை என விம்மிதமுற்றார்.

ஆயினும் அந்தப் பெருமிதம் செருக்காக ஆகவேயில்லை. ஸ்வாமியின் பாட்டனார் என்பதற்காக எந்தப் பெருமையும் பாராட்டாமல், தமது தொண்டு கிழப் பருவத்திலும், ஸாயி பக்தர் தம்மை வணங்க வந்தால், நடுங்கும் கால்களைச் சமாளித்துக் கொண்டு எழுந்திருந்து நிற்பார்!

குடும்ப ஃபோட்டோவே எடுத்துக் கொள்ளாத பாபா, தாத்தாவின் நூறாவது பிறந்த நாளன்று அவரது தோளில் தம் கையை வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவரது எளிமைக்கு பகவான் தந்த பரிசு!

பின்னும் பத்தாண்டுகள் சென்றன. கொண்டமரின் அந்திம காலம் வந்தது. பிரபு அவர் பக்கலில் வந்தமர்ந்தார். கிழவர் வலுவிழந்த கரங்களில் அன்புச் சக்தியால் தெம்பூட்டிக் கொண்டு தூக்கினார். பௌத்திர பவித்திரரின் கற்றைக் குழல்களைக் கோதினார். கண்ணனின் கண்ணாடிக் கன்னங்களை வருடினார். ஸாயீச்வரியின் அபயவரதக் கரங்களைத் தம் கைகளால் தட்டித் தடவிக்கொடுத்து, தம் விரல்களை வினை தீர்க்கும் விரல் கொண்ட ஸ்வாமியின் விரல்களோடு கோத்துக் கொண்டார். லேபாக்ஷி ராமாயணத்தில் வாலி ஸ்ரீராமனை நாராயணனாகவே உணர்ந்துஎன் பாக்யமே பாக்யம்! சாக்ஷாத் பரம்பொருளின் திரு முன் உயிர் நீத்துப் பிறவா நெறி சேர்கிறேன் என்று கூறும் கட்டத்தை ஒவ்வொரு மயிர்க்காலிலும் உயிர்ப்புடன் மொழிந்தபடியே மோன முடிவில் முழுகினார். பர்த்தி நாரணன் அவரைத் தம்முள்ளேயே கொண்டிருப்பார் என்பதில் ஸந்தேஹம் என்ன?