புட்டபர்த்தி = 14

அத்தியாயம் – 14

இறகு முளைக்கிறது!

இயற்கையன்னையின் வேதம், அடியிலிருந்து நுனிக்கு ஒரே தாவாகத் தாவுவது அல்ல. ஒரு படியிலிருந்து அடுத்தது, அதற்கடுத்தது என்றே இயற்கை பரிணமிக்கும். இத்தனைக்கும் கருவான பெருநலன் தன் முழுமையைப் பெறுவதற்காகத் தன்னுள்ளேயே தீமைகளையும் உறிஞ்சிக்கொள்ளும்!

ஜே.ஆர். லோவெல்

1940ம் வருடம் மார்ச் 8ம் தேதி. சிவராத்ரிக்கு மறுநாள். அமாவாசை. எதிர்காலத்தில் சிவராத்ரிதோறும் தன்னிலிருந்தே லிங்கோத்பவம் செய்யப்போகும் ஸத்யா, இன்று வேறு ஒரு வித உற்பவம் செய்துவிட்டான்.

ஆம், தன்னிலிருந்தே தானே உற்பவித்து சரீரம் விட்டு வெளியே போய்விட்டான்!

மாலை ஏழு மணி இருக்கும். தன்பாட்டில் ஏதோ செய்து கொண்டிருந்தவன் திடுமெனஹாஎன்று அலறியபடி ஒரு துள்ளுத் துள்ளி வலக்கால் பெருவிரலைப் பிடித்துக்கொண்டான். மறுகணம் உடல் கட்டையெனச் சாய்ந்தது.

அனைவரும் பதைபதைத்து விட்டனர். வாராது போல் வந்த மாமணியைத் தோற்றுவிட்டோமோ எனக் கலங்கினர்.

இல்லை. ஸத்யா அவர்கள் வயிற்றில் பாலை வார்த்தான். சிறிது நேரத்தில் கண்ணைத் திறந்தான். ஏதும் நடக்காதது போல் சகஜமாக இருந்தான். அவன் அலறிச் சாய்ந்ததற்குக் காரணம் கேட்டபோது ஏதும் பதில் கூறவில்லை.

மறுதினம் மாலை. சரியாக அதே ஏழு மணி. மறுபடி ஸத்யா பிரக்ஞையற்று மடேரெனச் சாய்ந்தான். உடல் விறைத்து விட்டது.

வீட்டாரும் ஊராரும் புலம்பலாயினர். முன்தினம் மாலை ஸத்யாவைக் கருந்தேளோ பாம்போ தீண்டியிருக்கவேண்டும் என்றும், அப்போதைக்குத் தெய்விக சக்தியால் அவன் அதைச் சமாளித்தபோதிலும், அவ்வூருக்கு ஏற்பட்ட சாபத்தின்படி இருபத்து நாலு மணி கெடுவில் உரவகொண்டா தேவதை பழி வாங்கிவிட்டது என்றும் முடிவு கட்டி விட்டனர்.

உரவகொண்டா குன்றுச்சியில் நூறடி உயரமுள்ள ஒற்றைக்கல் ஒன்று உண்டு. ஊர் மீது ஒரு போடு போடுவதற்குக் காத்திருக்கும் அரவத்தின் விரித்த படம் போல அக் கல் தோற்றமளிக்கும். அதனால் அவ்வூரில் பாம்பு கடித்தாலோ, தேள் கொட்டினாலோ இருபத்து நான்கு மணிக்குமேல் எவரும் உயிர் வாழ முடியாது என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

டாக்டர் வந்தார். ஊசி போட்டார்.

இரவு நெடு நேரமாகியும் பிரக்ஞை திரும்பவில்லை. உற்றார் பயந்தனர். குன்றருகே கோவில் கொண்டுள்ள முத்தியலம்மாவுக்கு உடனே பூசை போட வேண்டுமென்று எவரோ சொன்னார். “இந்நேரம் கோவில் மூடியிருப்பாங்களே?” என்றார் ஒருவர். வேறு சில சூரர்கள், “நம்ம கண்ணாமணி ஸத்யாவைக் காப்பாத்த என்னாதான் செய்யக்கூடாது? நாங்க மதில் ஏறிக் குதிச்சு அம்மாவுக்கு நேர்த்தி செஞ்சு வாரோம்என்று கூறி, ஏணியும் கையுமாகச் சென்றனர்.

சிறிது நேரத்தில் சிறுநகை துவண்டது, உயிரோட்டப் பசையற்ற ஸத்யாவின் உதட்டிலே! அருகே இருந்தவர்கள் நாயனா, நாயனா!” என்று ஆர்வத்தோடு அவனை நெருங்கினர்.

முத்தியாலம்மாவுக்கு தேங்கா மூணா உடைஞ்சிடுச்சுஎன்று முத்து முறுவலோடு முத்துச் சொற்களை உதிர்த்துவிட்டு மீண்டும் ஸ்மரணை இழந்தான் ஸத்யா. கோயிலுக்குச் சென்றவர்கள் சிறிது நேரத்தில் திரும்பினர். வாஸ்தவமாகவே அவர்கள் உடைத்த தேங்காய் இரு பாதிகளாக இன்றி மூன்றாக உடைந்ததாகச் சொன்னார்கள்.

இதென்ன, மறுபடி உணர்வற்றிருக்கிறானேஎன யாவரும் கலங்கினர். ‘நினைவு தப்பிய நிலையில் சம்பவத்தை எப்படிச் சொன்னான்?’ என்று ஆச்சரியமுற்றனர். ‘விந்தைப் பிள்ளை நமக்குத் தக்கி நிற்க வேண்டுமே!’ என்று பிரார்த்தித்தனர்.

மறுநாள் காலை ஸத்யா நல்ல பிரக்ஞையோடு எழுந்திருந்தான். ஆனால், அன்றிலிருந்து அவனிடம் ஒரு பெருத்த மாறுபாடு காணப்பட்டது.

விஷ முறிவுக்கான டாக்டரின் மிக்ஸ்சரைக் கொடுத்தபோது, “விஷமும், விஷயமும் என்னைத் தொடுமா?” என்று அவன் கேட்ட கம்பீரம்! அதிலும்விஷயம்தன்னைத் தொடுமா என்றதில் உள்நின்ற வேதாந்த போதம்!

இதுவரை தெய்வசக்தியை அவ்வப்போது காட்டிய மானுட பாலனாக அவனைப் பார்த்தவர்களில் சிலருக்கு இப்போது தெய்வத்தன்மை அவனை முழுக்க முழுக்கிவிட்டிருந்ததாகத் தெற்றெனத் தெரிந்தது. தெலுங்குப் பண்டிதரின் தம்முடு என்று தங்களில் ஒருவனாக அவனைப் பார்க்க முடியாத ஏற்றம் அவனிடம் தோன்றியதை உணர்ந்தனர். அப்பாலன் தங்களுக்கு அப்பாலான ஒன்றானதாகக் கண்டனர்.

விஷம் தன்னைத் தொடவில்லை என்றானே, பின் ஏன் விரலைப் பிடித்துக் கொண்டு அலறிச் சாய்ந்து உணர்விழந்தான், மீளவும் 24 மணிக்குப் பின் நஞ்சு தலைக்கேறினாற்போல் பிரக்ஞை தப்பி விழுந்தான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அவன் புரிய வைக்கவுமில்லை! ‘புரிய வைஎன்று அவனைக் கேட்க அவர்களுக்கு ஏனோ தைரியம் இல்லை!

எங்கோ எவரோ பக்தர் ஆபத்தில் தவித்து நிற்கும் போது, தன் சரீரத்திலிருந்து உயிரை வெளியே பிரித்து அங்கே சென்று அந்த பக்தரைக் காக்கும் பேரநுக்கிரகத்தை இனி இவன் பலமுறை செய்யப் போகிறான் என்பதும், அதற்கு த்வஜாரோஹணம்தான் இப்போது இவன் செய்தது என்பதும் அவர்களுக்கு எப்படித் தெரியக்கூடும்?

இவனை நினைத்து ஆபத்தில் அழைத்த பக்தர் அதற்குள் ஏற்பட்டு விட்டாரா?’ என்ற கேள்வி எழலாம். நியாயமான கேள்வி. ஆனால் பிற்பாடு நம் காவியநாதர் வாழ்வைப் பார்த்தால், ‘ஸத்ய ஸாயி பாபாஎன்ற பெயரிலே, உருவிலே இருக்கிற இவரை நினைக்காமலே இருக்கிறவர்களுக்கும், இவரைப் பற்றிக் கேள்வியே படாதவர்களுக்கும் கூட அவர்கள் நல்லவர்களாக, பக்தர்களாக, யோக சாதகர்களாக இருந்தால் இவர் இவ்விதம் சரீரத்தைவிட்டு நீங்கிச் சென்று பேராபத்தில் இடர் தீர்த்து வந்திருக்கிறார் என்பது தெரியும்.

சில சமயங்களில் மட்டுமே அவர் இவ்விதம் தாம் புரிந்த சரீர அதீத யாத்திரை (extra-corporeal journey) பற்றிச் சொல்வதுண்டு. உரவகொண்டாவில் தாம் முதல் முதலாகச் சென்றது எவர்பொருட்டு என்று இன்றளவும் அவர் கூறவில்லை. ஆனால் பிற்காலத்தில் இதேபோல் நிகழ்ந்த சம்பவங்களோடு இதைப் பொருத்திப் பார்க்கையில், 1940மார்ச் எட்டாந்தேதி எங்கோ ஒருவர் மரணவிளிம்பில் இருக்கும் போது அவரது அந்தராத்மா இறைவனை அழைக்க, அது கேட்டு நம் ஸத்யா தன் வலக்கால் பெருவிரலால் வெளியாகி அவரை அடைந்தான் என்று ஊகிக்கலாம். (சங்கர விஜயம் முதலான நூல்களைப் பார்க்கையில், பரகாயப் பிரவேசம் செய்யும்போது ஒரு யோகி தன் ஜீவனை வலது காலின் பெருவிரல் வழியாகவே வெளிச் செலுத்துவார் எனத் தெரிகிறது.) பக்தரின் துயரை இவன் வாங்கிக் கொண்டுஹா!” என்றலறி, கால் விரலைப் பிடித்து அதன் வழியே ஜீவ சக்தியை வழித்து விட்டதைத்தான், காலில் தேள் கொட்டியதென்றும் அதனால் அலறியிருக்கிறானென்றும் எண்ணிவிட்டார்கள்! இப்படி வெளியேகியவன் பக்தரைத் தாற்காலிகமாக சொஸ்தப்படுத்தி விட்டுத் திரும்பியிருக்கிறான். மறுநாள் மீளவும் அவர் ஆபத்தான நிலையடைந்தபோது இவனும் மறுபடி சென்றிருக்கிறான். ஆயினும் இம்முறை தன் உணர்வுச் சக்தியைப் பூரணமாக இழுத்துக் கொள்ளாமல் ஓரிழை சரீரத்தில் வைத்துவிட்டே சென்றிருக்கிறான். இதனால்தான் முத்தியாலம்மன் விஷயத்தைத் திடுமென எடுத்துச் சொல்லியிருக்கிறான். இம்முறை நீண்ட நேரம் அந்த பக்தரின் பக்கலிலேயே இருந்து பூர்ணமாக குணப்படுத்தி விட்டுத் திரும்பியிருக்கிறான் போலும்!

போலும்தான்! ஏனெனில் இதெல்லாம் நம் அநுமானம்தான். அவர் யார், என்ன செய்தார் என்று ஆழம் கண்டு சொல்ல ஆரால் ஆகும்? யோகி போல் அவர் சரீரத்தைவிட்டுச் செல்ல வேண்டும் என்பதுகூட அவசியமில்லை. இதன்பின் அவரிடமிருந்து ஆபத் சகாயம் பெற்ற ஆயிரமாயிரவர் தமது அனுபவத்தை எழுதியுள்ளனர். எழுதாதவரோ லட்சோப லட்சமாக இருப்பார்கள். இந்த லக்ஷக் கணக்கான ரக்ஷகப் பணிகளின் போதும் அவர் சரீரத்தைக் கட்டையாகப் போட்டு விட்டு வெளியே போவது என்றிருந்தால், நம்மிடையே ஸத்ய ஸாயி பாபா என்பதாக ஒருவர் சஞ்சரிப்பதற்கே அடியோடு இடமிராது! லெனின் உடல் போல, அவரது சரீரமும் ஏதாவது ஒரு இடத்தில் இத்தனை ஆண்டுக் காலமாக கட்டை போல் கிடக்கத்தான் வேண்டியிருக்கும்! ஓரிடத்தில் அமர்ந்து உல்லாஸமாகத் தமாஷ் பண்ணிக் கொண்டிருக்கும்போதே அவர் தொலை தூரத்துக்கப்பாலும் அநாயாஸமாகச் சென்று ஆற்றப் போகிற அற்புதங்களைப் பார்க்கப் போகிறோம். சென்றுஎன்பதே தப்பு; தாம் எங்குமே எப்போதுமே உள்ளவர்தாம் என்றும் அவரே சொல்லியிருக்கிறார். ஆகவே நம்மைப்போன்ற அதிசாமான்ய மானுடனாக வேஷம்போட்டு விளையாடுவது போலவே, அவ்வப்போது அவர் யோகஸித்தர் போலவும் விளையாடுகிறார். இதுவும் அவரது மகத்தான தெய்விகப் பிரபாவத்தைக் குறுக்கிக் கொள்ளும் லீலைதான் என்றே நாம் தெளிய வேண்டும். வெறும் சங்கல்பத்தினாலேயே எதையும் சாதிக்கவல்லவர், யோகஸித்தி போன்றவற்றால் சிலவற்றைச் செய்வது போல் காட்டுவதும் அவரது அலகிலா விளையாட்டில் ஓர் அம்சம் என்றுதான் கொள்ள வேண்டும்!

அவர் பிறந்ததிலிருந்து படிப்படியாக தெய்விக சக்தியில் முன்னேறி, முதலில் ஸத்யம்மா என்ற கிராமதேவதையின் அருளையும், பிறகு மறைந்த பொருட்களைத் தானாகக் கண்டுபிடிக்கும் ஸித்து வித்தையையும், அதன்பின் கூடுவிட்டுச் செல்லும் போக சக்தியையும், இதற்கும் பிற்பாடு ஷீர்டி ஸாயி பாபாவின் ஆவேசத்தையும், அதன் கையோடு கையாக ஈசுவராவதாரப் பேராற்றலையும் பெற்றதாக எவரேனும் எண்ணினால் அது முழுத்தவறு என்று அவரே கூறுகிறார். ஒரு படிகூட வளர முடியாத சர்வ பரிபூரண அகண்ட தத்துவமாகவே தாம் அவதரித்த நாளிலிருந்து இருப்பதாகக் கூறுகிறார். ஆனாலும் இதை எடுத்த எடுப்பில் உணருவது தம்மைச் சமீபித்திருந்த நபர்களுக்கும் ஊர் உலகத்துக்கும் தாங்கவொண்ணாததாதலால், அவர்களையொட்டிச் சிறிய நிலையிலிருந்து பெரிய நிலைக்கு வருவதாகக் காட்டி, அவர்களையே படிப்படியாகத் தம்மைப் புரிந்து கொள்வதில் உயர்த்தியதாகக் கூறுகிறார்.

(தம்மைப் பரிபூரணம் என்றவரே, ‘ஒரு மானுட யாக்கையில் இருப்பதால் எனக்கும் சில கட்டுப்பாடு உண்டுஎன்றும் கூறியிருக்கிறார். அவ்வாறெனில் பூரண பராசக்தியாக இன்றி மானுட யாக்கைக்கு ஒவ்வ, தனியாகரத்னாகரம் ஸத்ய நாராயணராஜுஎன்ற ஒரு ஜீவனும் தனியாக உள்ளதா? கேள்வி சுவையானது. அதை இங்கே போட்டாயிற்று. சிற்றறிவு காணக்கூடிய அளவில் இதற்கான விடை இந்நூலில் பிற்பாடு வரும்.)

இதுகாறும் கூட்டுப் புழுவாகவே தன்னைக் காட்டிக் கொண்டவன், கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டைப் பிய்த்து, ‘பார்த்தீர்களா, எனக்கு இறகு முளைக்கிறது. விரைவிலேயே வண்ணத்துப் பூச்சியாகப் பறக்கப் போகிறேனாக்கும்!’ என்று சமிக்ஞை தரத் தொடங்கிவிட்டான். ஏதோ ஓர் ஊருக்கு அருளாளனாக இருந்த ஸத்யா உலகுக்கோர் அநுக்கிரக மூர்த்தியாகத் தன்னை விரித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டான். உடலை விட்டு, ஊரை விட்டு, எங்கோ இருந்த எவரோ ஒருவரின் ஆபத்தைத் தீர்த்து வந்திருக்கிறான்!

ஷீர்டி பாபாவும் தம் உள்ளார்ந்த மகிமையை 1886ல் ஒளிவீசி வெளியிடத் தொடங்கியபோது, முதல் கிரணமாக இவ்விதமேதான் சரீர அதீத யாத்திரை செய்தார். தாம் உயிரை அல்லாவிடம் எடுத்துச் செல்வதாகவும், மூன்று நாட்கள் பொறுத்துப் பார்த்து, திரும்பாவிடில் தம்முடலை அடக்கம் செய்து விடலாம் என்றும் அத்தாணிச் சேவகரான ம்ஹால்ஸாபதியிடம் கூறிச் சென்றார். அவர் அல்லாவிடம் சென்றது போலவே ஸத்யாவும் இப்போது எவரொருவரின் ஆபத்தையும் தீர்க்கச் செல்லாமல், பூரணப் பிரம்ம சக்தியில் தோய்ந்து, தன்னில் கொஞ்சம் ஒட்டியிருந்த தனிமனித ஸத்ய நாராயண ராஜுத்துவத்தை அதில் மேலும் கரைத்து வந்திருப்பானோ? ஷீர்டி பாபா காற்பெருவிரலால் வெளியேறினாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது ஜீவன் கூட்டுக்குள் திரும்பியபோது முதலில் அவரது வலக்கை விரல் ஆடியதாகத் தெரிகிறது. ஸத்யா விஷயத்தில் உயிரின் புனர்ப் பிரவேசம் பற்றித் தெரியவில்லை. பரவாயில்லை, ஷீர்டி பாபாவின் அபய ஹஸ்தத்தையும், பர்த்தி பாபாவின் சீரடிகளையும் சிந்தித்தாலே போதுமே!

தமது பிராணசக்தியை உடலுக்கு வெளியே பிரயாணப்படுத்திப் பிராணாபத்திலிருந்தவரைக் காக்கும் ஸ்வாமி ஒரே முறையில் பூர்ணமாக சொஸ்தப்படுத்தாமல் அடுத்தடுத்த இரு நாட்கள் ஏன் செல்ல வேண்டும்? இது தப்பான அநுமானமாயிருக்கலாம் என்று தோன்றக்கூடும்.

நம் அநுமானமாக மட்டுமின்றி ஸத்யப் பிரமாணமாகவே ஸ்வாமி உள்பட நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட அனைவரும் உலகறிய வெளியிட்டுள்ள இன்னொரு அருள் லீலை உண்டு. பின்னத்தியாயம் ஒன்றில் காணப்போகும் வால்டர் கவன் குறித்த லீலைதான். மரித்ததாகக் கருதப்பட்ட கவனுக்குப் புத்துயிர் அளித்த பெருமான் ஒரே வீச்சில் அதனை முடிக்காமல் அடுத்தடுத்து மும்முறை ரக்ஷிக்க வேண்டியிருந்ததை அங்கு காண்போம்.

என்ன காரணம்? அவருக்கு ஸர்வ சக்தியும், ஸர்வ காருண்யமும் இருந்தாலும் கர்ம தர்மத்தை அடியோடு புறக்கணிக்காமலே இவற்றைப் பிரயோகிக்கிறார். பூர்வ கர்மம் பலமாக இருந்து அதன் விளைவாக ஒருவருக்குப் பேராபத்தோ, பெரிய நோயோ உண்டாகும் போது ஒரே போடு போட்டு அதனை அகற்றுவது உகாது. ஏனெனில் ஒரேயடியாகக் கர்ம நியதியைத் தாம் புறக்கணித்தால் மக்களுக்குப் பாபகர்மத்தில் பயம்விட்டே போய்விடும் என்றே ஸ்வாமி விட்டுவிட்டு, கர்ம தர்மத்திற்கும் சற்று விட்டுக் கொடுத்து, ஒரே டோஸில் இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட டோஸ்களில் கஷ்ட நிவாரணம் அளிக்கிறார்.

டடா! விளையாட்டு விநோத ஸத்யா மாறிவிட்டான்! (அல்லது அவர் சொற்படி, உள்ளூர மாறுதலற்றவன் வெளியே மாறியதாகக் காட்டத் தொடங்கி விட்டான்!) யாருடனும் பேசுவதில்லை. உண்பதில்லை. திடீர் திடீரெனப் பாடுகிறான். யாரும் கேட்டிராப் பாடல்கள் தெலுங்கில் மட்டுமல்ல; கம்பீரமான ஸம்ஸ்கிருதத்தில் பரம ஸ்பஷ்டமாக நீண்ட நீண்ட சலோகங்களை, சூர்ணிகைகளை, வசனங்களை, மந்திரங்களைக் கொட்டுகிறான். உரவகொண்டா மக்களுக்கு இம்மியும் புரியாத உபநிஷத மகாதத்துவங்களைக் கடலென அடுக்கடுக்காக அலை வீசுகிறான்.1

இப்போதெல்லாம் சிற்சில சமயங்களில் அவனது உடல் இலவம் பஞ்சென இலேசாகிப் பறந்தே விடுவானோ என்றெண்ணச் செய்கிறது. வேறு சில சமயங்களிலோ கருங்கல்லையும் விடக் கனமாகிப் பலர் தள்ளினாலும் அசையாமலே கிடக்கிறது! குபீர் குபீரென அழுகிறான் சில சமயம். கலீர் கலீரென நகைக்கிறான் சில சமயம்.

2 ‘மா ஆனந்தமயீ, நிர்மல சுந்தரி என்ற இல்லத்தரசியாக இருந்த நிலைமாறி பக்த ரக்ஷகியாவதற்கு முன் இதேபோல் பரவச நிலையில் வடமொழி வாசகங்களைப் பொழிந்தது குறிப்பிடத்தக்கது.

சேஷம ராஜு பயந்து, புட்டபர்த்தியிலிருந்த பெற்றோருக்கு உடனே வருமாறு தகவல் அனுப்பினார். அவர்கள் இன்னும் வரவில்லையே என்று தவித்து வேறொருவரைப் பர்த்திக்கு அனுப்பி வைக்க முற்பட்டபோது, ஸத்யா, “யாரையும் அனுப்ப வேண்டாம். அவங்களே இன்னம் அரை மணியிலே வந்து விடுவாங்கஎன்றான். சரியாக முப்பதாவது நிமிஷம் பெத்த வெங்கமராஜுவும் ஈச்வரம்மாவும் உள்ளே நுழைந்தனர்.

நாயனா, ஸத்யாப்பா! உனக்கு என்னம்மா தங்கம்?” என்று உருகிக் கேட்டார்கள்.

அவன் பதில் சொல்லாமல், வேதாந்த தத்வ தாரையை வருஷிக்கலானான். மழையை வருஷிக்கும் மேகம் தானே அற்றுப் போய் விடுவது போல், வேதாந்த மழைக்குப் பின் நாணல் தண்டெனப் பூமியில் சாய்ந்தான்.

அச்சமும் ஆராத்துயரமுமாக அவர்கள் அவனிடம் ஓடியபோது, அவனோ விருட்டென எழுந்து அமர்ந்தான். “நாராயண சாஸ்திரியைக் கூப்பிடுங்கள். பாகவதத்துக்கு வாயில் வந்தபடி தப்பர்த்தம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருக்குத் திருத்திக் கொடுக்க வேண்டும்என்றான்.

அருகிலிருந்த அவர் வீட்டுக்கு எவரோ சென்றார். அவர் மெய்யாலுமே அப்போது பாகவதம் தான் சொல்லிக் கொண்டிருந்தார். வந்தவர் விஷயத்தைச் சொன்னதும் சாஸ்திரியார் எள்ளுருண்டையாக எகிறினார். “அஸத்து! (‘ஸத்தான ஸத்யாவைத்தான்அர்ச்சனைசெய்கிறார்!) அபசரித்து! (‘ரம்ய சரித்ரன்என்றும், ‘அத்புத சரித்ரன்என்றும், ‘நிருபம சரித்ரன்என்றும் துதிப் பெறப் போகிறவனைத்தான்அபசரித்துஎன்கிறார்!) பழம் தின்று கொட்டை போட்ட எனக்கா அர்த்தம் சொல்கிறானாம்! மகாபண்டிதர்களின் மண்டையை உடைக்கும் ஹம்ஸ கீதை பற்றி இந்தச் சுண்டைக்காய்க்கு என்ன தெரியும்?” என்று இறைந்தார்.

அவரை இட்டுச் செல்ல வந்தவர் ஸத்யாவிடம் வெறுங்கையராகத் திரும்பினார். அவனோ விடமாட்டேன் என்கிறான். “பாபம், பாபம், இப்படியா இஷ்டப்படி அர்த்தம் சொல்வது? கர்ண கடூரம்என்று காதைப் பொத்திக் கொள்கிறான்.

நாஸ்திகர்களைவிட நம் மதத்துக்குத் தீங்கு செய்வது, தத்வார்த்தங்களைத் தெரிந்து, கொள்ளாமல் இம்மாதிரி இஷ்டப்படி அர்த்தம் சொல்கிற பிரவசனக்காரர்கள் தான். சாஸ்திரியாரை அழைத்துவந்தால்தான் ஆயிற்றுஎன்றான்.

பெத்த வெங்கப்பரே நாராயண சாஸ்திரியிடம் சென்றார். “தயவு செஞ்சு நீங்க வாங்க. எதுக்குச் சொல்றேன்னா, நீங்க பெரியவங்க வந்து ஒரு அதட்டல் போடுங்க. அந்தப் பய மகன் ரொம்பத்தான் துள்ளுது. நீங்கதான் அடக்கிப் பாருங்கஎன்றார். பழங்காலக் கிராமவாசிகளுக்கே உரிய முறையில் ஸத்யாவை எடைபோட்டு விட்டார், அவனது ஸாக்ஷாத் பிதாவாக உலகால் நினைக்கப்படுபவர்!

சாஸ்திரியாருக்கு உற்சாகம் பிறந்தது. ‘அபசரித்தைச் சினம் தீரக் காய்ச்சி விட்டு வரலாம் என்று புறப்பட்டு வந்தார்.

அவரைக் கண்டதும் ஸத்யா, ஹம்ஸகீதை என்ற பாறாங்கல்லைக் கோதெடுத்த நறுங்கனிச் சுளையாக்கிப் புட்டுப் புட்டுப் பொருள் விளக்கலானான்.

என்ன இருந்தாலும் சாஸ்திரியார் பண்டிதரல்லவா? அதிலே பல இடங்கள் தமக்கு அடியோடு அர்த்தமாகவில்லை என்பது அவரது உள்மனத்துக்குத் தெரியும்தானே? எனவே இப்போது இந்தப் பதின்மூன்று வயதுப் பிள்ளை திராக்ஷாபாகமாக அர்த்தத்தை விளக்கியவுடன் விம்மிதமுற்றார்.

நெடுஞ்சாண் கிடையாகச் சிறுவனின் பாதத்தில் விழுந்து வணங்கினார். “அப்பனே! நீ ஏதோ மஹா பெரிய வஸ்து. முதலிலேயே உன் ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டு நான் வராததற்கு என்னை மன்னித்துவிடு, ஐயா!” என்றார்.

நம் சரித நாயகன் மஹாபுருஷன் என்ற முறையில் முதல் நமஸ்காரம் பெற்று விட்டான்! வேதம் காக்க வந்தவனுக்கு வேதவித்து முதல் வணக்கம் செலுத்திவிட்டார். இது ஆலவிருட்சமாகி வித்வன் மஹாஸபைகள் பல இவனை வணங்கப்போகும் காலமும் வரப்போகிறது!

***

வீட்டார் தான் அவனைப் புரிந்து கொள்ளும் வழியாக இல்லை. விடாமல்வைத்தியம்பார்த்தனர். அனந்தப்பூரிலிருந்து வந்துகாம்ப்செய்திருந்த மாவட்ட வைத்திய அதிகாரியை உரவகொண்டா வைத்தியர் அழைத்து வந்தார். அவர் நோயாளியைப் பரீட்சித்தார். உள்ளூர் வைத்தியரிடம், ‘நீங்கள் விஷ ஜந்துக் கடி என்று நினைத்து மருந்து தருவது சரியில்லை. இது ஹிஸ்டீரியா இசிவு என்று சொல்லிசரியான மருந்துகளைக் கொடுத்துச் சென்றார்.

அவற்றை மூன்று நாட்கள் உட்கொண்டும் ஸத்யாவோ அதேபோல் பாடுவதும், போதிப்பதும், மௌனமாவதும், கட்டையெனச் சாய்வதுமாக இருந்தான்!

வைத்தியம் பலிக்காததால் சோதிடத்தில் சோதித்துப் பார்க்க எண்ணினர். இந்த ஜோதி ஜோதிஷத்துக்குட்படுமா? ஜோஸ்யர் ஏதோ ஹேஷ்யம் செய்தார்.” கிரக பீடை ருத்ராபிஷேகம் பண்ணுங்கள்என்றார். “இல்லாவிட்டால் அம்பாள் உபாஸகர் யாரையாவது அழைத்துக் காட்டுங்கள்என்றார். அப்படி ஓர் உபாஸகர் அண்மையில் இருந்தார். வீட்டுள் அவர் அடி எடுத்து வைக்கும்போதே ஸத்யா ஓங்கி உயர்ந்த குரலில், “உன் இஷ்ட தேவதையையேசொஸ்தம்செய்ய வந்திருக்கிறாயா? வா, வந்து பூஜை செய்துவிட்டு ஓடு!” என்றான்.

உபாஸகர் ஒரு கணம் அவனைப் பார்த்தார். வண்டிச் சத்தம் கூடக் கேட்டு வாங்கிக் கொள்ளாமல் ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து சென்ற சேஷம ராஜுவிடம், “தம்பிக்குக் கிரஹ பீடையுமில்லை; காற்று கறுப்பு சஞ்சாரமும் இல்லை. அது தெய்வத்தில் இழைந்துகொண்டு நிற்கிறதுஎன்றார்.

இருந்தாலும் கிராமத்தாருக்கே உரியபடி இவர்கள் காற்று கறுப்பு தான் காரணமாயிருக்கும் என்றே நம்பலாயினர். மந்திரவாதியை வரவழைத்தனர்.

ஆமாம், ஆமாம், பிள்ளையைப் பேய்தான் பிடிச்சிருக்குதுஎன்றான் அவன். சேஷம ராஜுவைப் பார்த்து. “என்னா தம்பி! இந்த ஊர் முச்சூடும் உனக்கு இந்தப் பாழாப்போறவூடுதானா கெடச்சுது? இதைக் கட்டின பாவிப் பயலோட ஆவி இதை விட்டுப் போகாமச் சுத்திச் சுத்தி வருதே! அதுதான் பிள்ளையைப் புடிச்சுக்கிட்டுப் பாடு படுத்துதுஎன்றான்.

ஆனாலும் ஸத்யாவைத் தொட்டு மந்திரம் பண்ணப் பயந்து நழுவிவிட்டான்!

புட்டபர்த்திக்கே அழைத்துச் சென்று மாந்திரிகம் செய்வதென்று பெற்றோர் தீர்மானித்தனர்.

பர்த்தி வந்த ஸத்யா அக்காள்மாரிடம், “ஆரத்தி எடுங்கள், வான மண்டல மீதாக தேவர்கள் செல்கிறார்கள்!” என்பான். உரவ கொண்டாப் பரவசமும், பாடலும், மௌனமும், மயக்கமும் இங்கும் ஓயவில்லை. மந்திரவாதி ஒருத்தன் வந்தான். ஸத்யாவைப் பார்த்தான். ரொம்பவும் புரிந்து கொண்டதுபோல் தலையை ஆட்டி, “ஓகோ, சரித்தான், சரித்தான்என்று சொல்லிக் கொண்டான். “பையனை என்ன பிசாசு பிடிச்சிருக்குதுன்னு நல்லாத் தெரிஞ்சுடுத்து. இனி கவலையை வுடுங்க. அந்தப் பிசாசை ஒரு ஆடு, இல்லாட்டி கோழி மேலே மாத்திப் போட்டு புள்ளையைச் சரி பண்றது என் பொறுப்புஎன்று பெற்றோருக்கு அபய ஹஸ்தம் அருளினான். இந்தப் பிசாசுடரான்ஸ்ஃபருக்கு வேண்டிய திரவியங்களாக ஒரு பெரிய ஜாப்தா கொடுக்கலானான். ஸர்வக்ஞனுக்கு துர்த்தேவதா சாஸ்திரமும் தெரியாததல்ல என்பதுபோல ஸத்யா, இன்னம் இந்த வஸ்து வேண்டுமே, அந்த வஸ்து வேண்டுமே என்று குறிப்பிடலானான். உரவகொண்டா மாந்திரிகர் போலவே பர்த்தி மாந்திரிகரும் கம்பி நீட்டினார்.

மந்திரவாதிக்கே இப்படிப் பிள்ளையாண்டான் மந்திரம் போட்டு விரட்டிவிடுகிறானே என்று வெங்கமர் எரிச்சல் அடைந்தார். இச்சமயத்தில் யாரோ, “கதிரிக்குப் பக்கத்தில் பிராம்மணபல்லியில் ஒரு மந்திரவாதி ராஜா இருக்காரு. அவருகிட்ட எந்தப் பெரிய கருப்பணாசாமியின் பாச்சாவும் பலிக்காது. ஸத்யாவைச் சமாளிச்சு சரி பண்ணறதுக்கு அவர்தான் வழிஎன்றார்.தங்கள் அருமை ஸத்யா, இனிமையே வடிவான ஸத்யா, ஊர் முழுதும் பகவந் நாமம் பரப்பிய பாவன ஸத்யா ஒரு பேய் பிடித்த பிள்ளை என்று எத்தனை எளிதில் புட்டபர்த்தி நம்பிவிட்டது! அவனது பெற்றோரே நம்பிவிட்டனர்! இதன் விளைவாக அவன் பிராம்மணபல்லி சென்று அங்கே உற்ற சித்ரவதை நினைத்தாலே நெஞ்சு பொறுக்குதில்லை!