புட்டபர்த்தி = 8

அத்தியாயம் – 8

கூறை சோறிவை தந்தெனக் கருளி

ஏழையரும் ஏதலரும் இழிந்தோர் தாமும்
இருக்குமிடம் ஐயா, உன் பாதபீடம்!

தாகூர்: .சீ.ரா. தமிழாக்கம்

பா ஸத்யாவின் பள்ளி நாளில், அதாவது 1930களில், பள்ளிக் கெடுபிடிகள் நாகரிகப் பட்டணங்களில் கூடக் கடுமையாக இருந்தன. எனவே கிராமமான பர்த்தியின் லோயர் எலிமென்டரிப் பள்ளி நிர்வாகிகள் மாணவரை நடத்திய விதத்தில் கொடூரம் காணப்பட்டதில் வியப்பில்லைதானே?

பள்ளிப் பிள்ளைகள் லேட்டாக வந்தால் இத்தகையதொரு கொடுந்தண்டனைக்கு ஆளாவர். நிர்வாகிகளின் அகராதிப்படி மணியடித்த பிறகு வருபவர்தான் லேட் என்று அர்த்தமில்லை. வகுப்புக்கு முதலாவதாகவும் இரண்டாவதாகவும் ஆஜராகிற இரு மாணவர்களைத் தவிர மீதமுள்ள அனைவருமே லேட் என்று கருதினார்கள். இப்பிள்ளைகள் மணியடிக்கு முன்பே வந்திருந்தாலுங்கூட! லேட்டாக வந்தவர்களில் முதல்வனுக்கு ஒரு பிரம்படி, அடுத்தவனுக்கு இரண்டு அடி என்கிற ரீதியில் ஈவு இரக்கமில்லாமல் தண்டனையை உயர்த்திக்கொண்டே போவார் ஆசிரியர்.

அந்நாளில் சிறுவர்கள் பள்ளிக்கு வருவதில் சிறிதும் உற்சாகமில்லாதிருந்தனர் என்றும், பெற்றோரும் தங்கள் தொழில்களில் பிள்ளைகளைப் பயன்படுத்திக் கொண்டதால் குறித்த நேரத்தில் அனுப்பி வைப்பதில்லை என்றும், எனவேதான் இப்படித் தண்டனை விதிக்கப்பட்டது என்றும்நியாயம்சொல்கிறார்கள். எத்தனை சொன்னாலும் இது அதி தான். இதைச் சமாளிப்பதற்காக, பாவம், குழந்தைகள் அதிகாலையிலேயே பள்ளிக்கு வந்து விடுவார்கள். யார் முந்தி வந்தார்கள் என்று குறித்துக்கொள்ள ஆசிரியரோ, வேறு பணியாளர் எவருமோ வருமுன்பே அத்தனை பிள்ளைகளும் வந்துவிடுவார்கள். காப்பித் தண்ணியோ, நாஸ்தாவோ இல்லாமல் சூரியோதயத்துக்கு முன்பே வந்து வயிறு வாடக் கிடப்பார்கள்.

ஸத்யம் இவ்விதம் பொழுது புலருமுன் பள்ளிக்குப் போனதில்லை. சமையல் முழுதும் முடித்து, தான் உண்டு, கைக்குக் கட்டி எடுத்துக்கொண்டு, பகலில் தாத்தா சாப்பிடுவதற்காகவும் ஒழுங்குப்படுத்தி மூடி வைத்துவிட்டு, அடுக்களையைப் பளிச்சென்று சுத்தம் செய்தபின்தான் பள்ளி செல்வான். பிள்ளை குருவாக, பிறவி ராஜகுமாரனாக இருந்த ஸத்யாவுக்குப் பிரப்பம்பழப் பிரஸாதம் தர ஆசிரியர்களுக்கே துணிச்சல் இல்லை. ஆயினும், இவன் சக மாணவர் படுகிற கஷ்டத்தைத் தனதாகவே கொண்டு தவித்தான்.

ஒரு நாள் விடியற்காலை, மழை கொட்டிக் கொண்டிருந்தது. சீதம் உட்புகுந்து எலும்பைக் குடைந்தது. சகாக்கள் என்ன செய்கிறார்களோ என்று பார்க்கப் பள்ளிக்கு ஓடினான் ஸத்யா.

என்ன பரிதாபம்! இந்த மழையிலும் குளிரிலும்கூட அவர்கள் விடியற்காலமே பள்ளிக்கு வந்துவிட்டனர். வாத்தியார் வருமுன் வகுப்பறைக்குள் விடமாட்டார்கள். அதனால் அறைக்கு வெளியே நாற்புறமும் சிறிது நீட்டிக்கொண்டிருக்கும் கூரையின் கீழ் சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு, சாரலில் வெடவெடத்துக் கொண்டிருந்தார்கள். பாதிப் பேருக்குப் போதிய உடுப்புக்கூடக் கிடையாது.

ஸத்யாவின் அஸ்கா நெஞ்சு ஐஸாக உருகியது.

மழையைப் பாராமல் வீட்டுக்கு ஓடினான். தன் உடுப்புக்கள், சிற்றப்பா பிள்ளைகளின் உடுப்புக்கள், வீட்டிலிருந்த துண்டுகள், துப்பட்டிகள் எல்லாவற்றையும் திரட்டிக் கட்டினான். வண்ணான் பட்டையளவுக்கு அது வீங்கிற்று. வீட்டிலிருந்தவர்கள் தடுத்தும் கேளாமல், மூட்டையைத் தோள் மேல் போட்டுக்கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான். அவனது அன்பின் ஆவேச அரசத்தன்மைக்கு முன் வீட்டுப் பெரியோரும் அடங்கி நிற்க வேண்டியதாயிற்று.

எத்தனை பாரமானாலும் இந்த ஸாயித் தாயின் தோளில் போட்டுவிட்டு நிர்விசாரமாக இருங்கள்என்று பிற்காலத்தே கூறப் போகிறவரின் முற்றா இளம்தோள் அன்று ஸ்தூலமாகவே மூட்டை தூக்கிற்று!

இவன் பள்ளியடைந்தபோது மழையும் விட்டிருந்தது. சொட்டச் சொட்ட நனைந்து நின்ற மாணவர்கள் குதூஹலிக்கக் காய்ந்த ஆடைகளை வழங்கினான் நனைந்த நெஞ்சினனான ஸத்யா.

அப்யூர்ணோதி யந்நக்னம் – திகம்பரமாக நிற்கும் திக்கற்றோருக்கு ஆடை தந்து காக்கிறான் என்று வேதம் இறைவனைப் போற்றியது. “அன்ன வஸ்த்ர தாதாஎன்று நம் ஸ்வாமி அர்ச்சனையில் ஒரு நாமம் உள்ளது. இவ்வருட்செயல் அரும்புப் பருவத்திலேயே நறுமலராக மலர்ந்திருக்கிறது. பிச்சைக்காரருக்குச் சோறு; ஏழை மாணவருக்குக் கூறை. ஈவதே ஸத்யாவின் பிறவி விரதம். தனக்கென எதுவும் வேண்டான்.

பாகப்பிரிவினையாகாத பெரிய குடும்பமல்லவா வெங்கம ராஜுவுடையது? அதைச் சேர்ந்த பல பிள்ளைகளுக்காகப் பெரியவர்கள் சட்டைத் துணி, நிஜார்த் துணி எடுத்து வருவார்கள். ஸத்யாவே வீட்டுக்குச் செல்லமாதலால் முதலில் அவனுக்குப் பிடித்தமானதை எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். ஆனால், அவன் அப்படிச் செய்யமாட்டான். “மத்தவங்க தங்களுக்குப் புடிச்சமாதிரி எடுத்துக்கட்டும். ஏதானும் மீந்திச்சுன்னா நான் எடுத்துக்கறேன்என்றுதான் சொல்வான். அளவெடுக்கத் தையற்காரரை அழைத்து வருவார்கள். இப்போதாவது ஸத்யாவுக்குச் சபலம் வராதா என்று வீட்டுப் பெரியவர்களுக்குச் சபலம்! இவனா மசிந்து கொடுப்பான்? ஜிதேந்திரியனாயிற்றே!

எல்லாரும் கழித்துக் கட்டியதையே, அதாவது கட்டமாட்டோம் என்று கழித்ததையே உவந்தேற்பான்.

ஆஹா! பிற்காலத்திலோ இதுவேதான் வேறொரு விதத்தில் தேவதாரு விருக்ஷமாக வளர்ந்துவிட்டது.

சமூகத்தால் கழித்துக்கட்டப்படுபவர்களுக்கும் அநுமதி தருவதன்றோ நம் ஸ்வாமியின் ஆச்ரமம்? இப்படி இவர்களை நீசமெனக் கழித்துக்கட்டுபவர்களில் பெரும்பாலோருங்கூட உள்ளூரத் தங்கள் மனத்தில் வைத்துள்ள கழிவடைகள் ஏராளம் என்பதை இவர் அறிவாரே! எனவேதான் வெளிப்படத் தவறியவர், உள்ளூரத் தவறியவர் என்ற பேதமின்றி எல்லோரையும் ப்ரசாந்தி நிலயத்தில் அனுமதிக்கிறார்.

சில துர்ப்பாக்கியசாலிகள் வெளிவாழ்விலும் தாழ்ந்து விடுகிறார்கள். தங்களை மற்ற ஆச்ரமங்களிலோ மடாலயங்களிலோ கௌரவமாக நடத்துவார்களா என்று அவர்களுக்கே தயக்கமாகிறது. எனவேதான் நம் ஸ்வாமி ஸநாதன தர்மங்களின் நிலைக்களனாக உள்ளூர இருப்பினும், வெளியிலே புதுமாதிரிச் சாமியாராகத் தோன்றுவதால் இவரிடம் தயக்கமின்றி வருகிறார்கள். ஆறுதல் தருவதே ஜன்ம விரதமாகக் கொண்ட நம் பகவானும் இப்படிப்பட்ட அவலைகளை ஈர்த்தருளவேதான் புது மாதிரி வேஷம் போடுகிறாரோ என்னவோ? இவரால் ஈர்க்கப்பட்ட தரக்குறைவானவர்கள் பிற்பாடு நல்லொழுக்கத்தில் இவர் மகா கண்டிப்பானவர் எனக் காண்கிறார்கள். அதே சமயத்தில் இவரது காப்பையும், கருணையையும் அவர்கள் உணர்ந்து விடுவதால் கண்டிப்புக்கும் உட்படத் தயாராகிறார்கள். சிறிது சிறிதாகவேனும் திருந்த முயல்கிறார்கள்.

தரம் பார்க்காமல் எல்லோரையும் அநுமதிப்பதால் ஸ்வாமிக்கு எத்தனை அபவாதம், அவதூறு கற்பிக்கப்பட்டிருக்கிறது? தியாகி அதைச் சற்றேனும் பொருட்படுத்தியதுண்டா? “எல்லோரைப்போல நானும் சிலரை ஒழுங்கு தப்பியவர்கள் என்று முகத்திலடித்தால் அவர்கள் எங்கேதான் புகழ் என்று போவார்கள்? ஆனந்த ஸ்வர்க்க லோகத்தைவிட ஆராத்துயர நரக லோகத்திலேயே நான் அதிகம் தேவைப்படுகிறேன். நான் பவித்திரர்களைவிடப் பாவியருக்கே உரியவன். புண்யசாலிகள் தாமாகவே நற்கதி பெற்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு நான் எதற்கு? ஆனால் பதிதருக்கோ என்னை விட்டால் கதி ஏது? நான் இருக்குமிடம் எல்லா விதமான மக்களுக்கும் பிறந்தகம்தாய் வீடு. நல்லவர்களைப் போலவே அல்லவர்களும் ஸாயம்மாவின் சேய்கள் தாம். இந்த அம்மாவால் எந்தக் குழந்தை முகத்திலும் கதவைச் சாத்த முடியாதுஎன்பார்.

புத்தர் ஆம்ரபாலிக்கு ஆசிரயம் அளித்தார். மேரி மாக்தலீனை மகளாக ஏற்றார் இயேசுநாதர். இறைவனுக்கு. இறைவனிலேயே திளைக்கும் மகான்களின் தேசுக்கு முன் மாசு ஏது, தூசு ஏது?

***

குழந்தை நாளில் பிறர் கழித்துக்கட்டியதை உவந்தவர் இன்று ஏன் ஸில்க்கில் மினுக்குகிறார்? கோபுரம் கட்டிக்கொண்டு பிரசாந்தி நிலயத்தில் வாழ்கிறார்? ரகத்துக்கு ஒரு கார் வைத்துக்கொண்டிருக்கிறார்?” என்று கேட்கலாம்.

ஸில்க் தானாக வாய்த்ததுதான். ஆதியில் யாரோ பக்தர்ஸாகம்மா போலிருக்கிறது. ஷீர்டி பாபாகஃப்னிஎன்ற முழு நீள அங்கியே அணிவார் என்பதால் இவருக்கும் அதேபோல், ஆனால் பட்டினாலான, கஃப்னியும் பட்டு வேஷ்டியும் ஸமர்ப்பித்தார். அன்பின் பொருட்டே இளம் ஸாயி அதனை ஏற்றார். மற்ற பக்தர்கள் சும்மாயிருப்பார்களா? பட்டாடை ஸமர்ப்பணத்தைத் தொடர்ந்தனர். பிற மகான்களிடம் போகவே தயங்குவோரை நாம்தான் புது வேஷத்தால் ஈர்த்து நல்வழிப்படுத்தலாமே என்று இவர் எண்ணினாரோ என்னவோ? அங்கிகளையே தம் உடுப்பாக அங்கீகரித்தார்.

அருணாருண கௌஸும்பஆடை லலிதைக்குப் பிரீதியானது என்பதால் எவரோ ஸாயம்மாவுக்குச் செவ்வாடை அளிக்க, மற்றோரும் இதையே தொடர்ந்தனர். வேறு சிலர் ஸாதுக்களுக்குரிய காவி, ஆரஞ்சு, மஞ்சட் பழுப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் அர்ப்பித்த அங்கிகளையும் ஏற்றார். “நல்லது. இந்த வண்ணப் பட்டாடையிலும் ஒரு சௌகரியம் உள்ளது. எனக்கில்லை, பக்தர்களுக்குத்தான். எத்தனை பெருங்கூட்டமானாலும் நான் எங்கிருக்கிறேன் என்பதைப் பளபளா அங்கி எல்லோருக்கும் எளிதே காட்டிக் கொடுத்துவிடுகிறதுஎன்றார் சிரித்து.

இன்றுபோல் அன்று ஆடவர்கள் வண்ண வண்ண ஸில்குகள் உடுத்தியதில்லையல்லவா? இன்றைய முடியலங்கார அலங்கோலங்களும் அன்று இல்லாததால் இவரது உடையும் முடியுமே சிறிய உருவினரான இவரைப் பிரம்மாண்டக் கூட்டங்களிலும் எடுப்பாகக் காட்டின.

கையுறையாக நூற்றுக்கணக்கில் அங்கிகள் சேரத் தொடங்கின. அவற்றைத் தையல் பிரித்து, புயல் மழையால் பாதிக்கப்பட்ட ஏழைப் பெண்டு பிள்ளைகளுக்கு அனுப்புவார். அநாதருக்குப் பட்டுத் துணி கொடு என்றால் யார் செவி சாய்ப்பார்கள்? எனவே அநாத நாதனான தாம் அவற்றை உவப்பதாகக் காட்டி, இதனால் கேலியையும் வாங்கிக் கொண்டு, அநாதருக்கே அவற்றில் பலவற்றை அனுப்பி வைத்தார். ஒரு சமயம் வெள்ளக்கொடுமைக்கு ஆளான ஏழையருக்கென்று சுமார் ஐநூறு அங்கிகளைக் கொணர்ந்து போட்டாராம். அப்படி ஒரு கொடுமை ஏற்படப்போகிறதென்றே இத்தனை அங்கிகள் சேர்த்து வைத்திருந்தார் போலும்!

கண்ணன்உடுத்துக் களைந்த பீதக ஆடையை ஆழ்வார் வேண்டியதேபோல, பாபா பல பக்தருக்குத் தாம் உடுத்துக் களைந்த கஃப்னியை அருளுவதுண்டு. ஓர் ஓணத் திருவிழாவின் போது ப்ரசாந்தி நிலயத்தில் குழுமிய நூற்றுக்கணக்கான மலையாளிகளில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தமது அங்கியொன்றை அளித்து ஆனந்தத்தில் ஆழ்த்தினார். ஸ்வாமியின் ஆடைக்கு ஓர் ஆத்மிக ஆற்றல் உண்டு. மருத்துவ சக்தியும் உண்டு. நோயாளிகள் அதைத் தலைமாட்டில் வைத்துக்கொண்டோ, அதிலிருந்தே வேட்டிச் சட்டை தைத்துப் போட்டுக்கொண்டோ பயனடைவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, ஆலந்தூர் ஸ்ரீமதி கே.வி. ராமச்சந்திரனின் ஹார்ட் அட்டாக் ஸ்வாமியின் கஃப்னி மகிமையாலேயே தீர்ந்திருக்கிறது. இவ்வித மருத்துவ, ஆத்மிக சக்திகளைப் பருத்தியைவிடப் பட்டே (க்ஷெளம் வஸ்திரம்) நன்கு காத்துத் தரும் என்பது சாஸ்திரம். இதனால் தான் ஸ்வாமி ஸில்க் உடுத்துகிறாரோ என்றெண்ணவும் இடமுண்டு.

ஏன் பட்டு அணிகிறார் என்று எதிர்ப்பாளர்கள் முகம் கடுக்கிறார்கள் எனில், பக்தர்களோ முதுவேனிற் காலத்தில் கூட இவர் ஏன் பட்டில் புழுங்க வேண்டும் என்று கரிசனப்படத்தான் செய்கிறார்கள். உறங்கும்போதுகூட ஹாய்யாக ஒரு பருத்தி வேஷ்டி அணிந்தார் என்று கிடையாதாம்! பிற்பாடுகூட டெரி ஆடைதான் சேர்ந்தது. பருத்தியல்ல. பர்த்தியாரது பழக்கவழக்கங்களை ஆழம் காண நாம் யார்?

ஒரு கட்டம் வந்ததும், பக்தியின் பெயரில் வகை தொகையில்லாமல் ஆடை வந்து சேருவதை நிறுத்திவிடத் தீர்மானித்தார். ஏழையரை உத்தேசித்தே இவர் வஸ்திர காணிக்கை ஏற்கப்போக, ஏழையரே பிறரைப் பார்த்து இப்படிக் காணிக்கை செலுத்தத் தொடங்கியதைக் கண்டதும் இனி அங்கீகாரம் மறுத்துவிட வேண்டியதுதான் என முடிவு செய்துவிட்டார்.

ஆடை மட்டுமல்ல, அன்புக்கு அடையாளமாகப் பொருட் காணிக்கை ஏதுமே செலுத்தக்கூடாது என்றார். வெறுமே சொல்லவில்லை. மீறவொண்ணாக் கட்டளையாகவே விதித்து விட்டார். ஆலயத்துக்கோ, ஒரு மகானிடமோ செல்லும்போது ஏதேனும் கையுறை எடுத்துத்தான் செல்ல வேண்டும் என்ற சம்பிரதாயத்தையே நிர்தாக்ஷிண்யமாகநிராகரித்தார். தம்மைக் காண வருபவர்கள் ஒரு வில்லை கர்ப்பூரம் கூடக் கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிட்டார். சம்பிரதாயத்தை மீற முடியாமல் புஷ்பம், பழம் இப்படி ஏதாவது வாங்கி வருபவரிடம், அவர் அதனை எவ்வளவு முறைதான் வற்புறுத்தி நீட்டினாலும், “பரவாயில்லைஎன்று மட்டும் சொல்வாரே தவிர அங்கீகரிக்கவே மாட்டார். துளி விதிவிலக்குக் காட்டினாலும் ஏழைகள் தமக்காகப் பொருட்செலவு செய்துவிடுவார்கள் என்ற தீன காருண்யம்! காடின்யமாகத் தோன்றுமளவுக்கு முற்றிய காருண்யம்!

பத்திரம் (துளஸீ தளம், வில்வம் போன்றவை), புஷ்பம், பலம் (பழம்), தோயம் (புண்ய தீர்த்தம்) முதலியவற்றை அர்ப்பணம் செய்வதை கீதையே அநுமதிக்கிறதேஎன்றால் அதற்கு இச்சொல்லின் செல்வர், சிந்தனைச் செல்வர் விடை சொல்வார்: “உங்கள் சரீரத்தைச் சருகாக, பத்திரமாக எண்ணுங்கள். அந்த எண்ணமே எனக்கு நிவேதனம். இதயத்தை அன்பால் மலர்த்திக் கொள்ளுங்கள். இதுவே நான் உவக்கும் புஷ்பம். உங்கள் செயல்களின் விளைவுகளை, பலன்களை நான் விட்டபடி என்று அர்ப்பணம் செய்யுங்கள். எனக்கு ப்ரீதியான பலம் இதுதான். பக்தியில் நீங்கள் வடிக்கும் ஆனந்த பாஷ்பமே நான் விரும்பும் தோயம்.”

ஏழைகளுக்கு இம்மிச் செலவும் வைக்க இசையேன். இந்த சரீரம் கொடுக்கவே ஏற்பட்டது; வாங்கிக் கொள்வதற்கல்லஎன்கிறார்.

ஏழைகள் மட்டுமில்லை, ஸத்ய ஸாயி ட்ரஸ்ட் நிறுவப்பட்டதற்கு முன்பு வரை, மிகவும் தனவந்தர்களான ஸாயி பக்தர்கள் அநேகரிடமிருந்து கூட இவர் கால்காசு வாங்கிக் கொண்டதில்லை. இப்போதும் இவர் தனி மனிதராக வாங்கிக் கொள்வதில்லை. பொது நலப் பணிகள் பல புரிந்து வரும் ட்ரஸ்டே நன்கொடையை ஏற்கிறது.

கை நீட்டி வாங்கி விட்டால், கொடுத்தவர்கள் இதற்காகஎக்ஸ்ட்ராஅநுக்கிரகத்துக்கு உள்ளூரவாவது பாத்தியதை கொண்டாடுவது மனித சுபாவமே என்பதால், இந்த எண்ணம் தலை எடுக்க வொட்டாதிருக்கத்தான் எவரிடமுமே ஸ்வாமி திரவிய காணிக்கை ஏற்பதில்லை என்று வைத்துவிட்டார் போலும்!

அப்படியானால் ட்ரஸ்ட் உருவாகுமுன்னரே, ப்ரசாந்தி நிலயமும், வேறு சில ஸ்தாபனங்களும் எப்படி எழும்பின? பிரதிப் பிரயோஜனமே எதிர்பார்க்காதவர்கள், அல்லது ஏற்கனவே ஸ்வாமியிடமிருந்து பெற்ற அநுக்ரஹத்துக்குப் பிரதியாக ஏதேனும் திரவிய ரூபத்தில் செய்தேயாக வேண்டும் என்று துடிதுடித்தவர்கள், பிள்ளை குட்டியில்லாதவர்கள்இப்படிப்பட்ட தனிகர்களில் ஸ்வாமிக்கு ஸ்தூலத்தில் மிக நெருக்கமாக இருந்த சிலர் இதயபூர்வமாக அளித்த காணிக்கைகளிலிருந்தே இவை எழும்பின.

பல கோடீச்வரர்கள் இவர் உதட்டை அசைத்து ஏதேனும் ஒரு புண்ணியப் பணியில் தங்கள் பொருளை ஈடுபடுத்த மாட்டாரா என்று காத்துக் கிடக்கிறார்கள். இவர்களிடம் ஒரு பள்ளியோ, வைத்தியசாலையோ, பஜனை மந்திரமோ எழுப்பச் சொல்வார். தமக்கென்று பைஸா பெற மாட்டார் சக்ரவர்த்தி!

இதனால் அன்றும் சரி, இன்றும் சரி, தனியாக இவர் பெயரில் காலணாச் சொத்தோ ஒரு மில்லி மீட்டர் நிலமோ இருந்ததில்லை, இருக்கவுமில்லை. இதனால் சக்ரவர்த்தியே தம்மை ஆண்டிபோல வர்ணித்துக் கொள்வதுமுண்டு. “நான் சாண்கூடச் சொந்த நிலமில்லாதவன். (மூவுலகும் எனதே என்பவர்தான் இப்படிக் கூறுகிறார்!) நிலமற்ற ஏழைகள் ஏரி வற்றுகிறபோது, ஈரமுள்ள அதன் ஓரப் பகுதிகளை அவசரமாக உழுது, குறுகிய காலப் பயிர்களை விளைவித்துக் கொள்கிறார்களல்லவா? நானும் இதுபோலவே உங்கள் மனத்தடாகத்தில் சிந்தனை அலைகள் சிறிது சுருங்கும்போது அவசரமாக அந்த இடத்தை எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு அன்பை விதைத்து ஆனந்தத்தை அறுவடை செய்துகொள்கிறேன்என்பார்.

ஸ்ரீருத்ரம் இறைவனைதரித்ரன், நீல லோஹித என்கிறது. திருவாசகமும்ஒருவரை, ஒன்றுமில்லாதவரைஎன்னும்.

முதலில் ஸத்ய ஸாயி பக்த ஸஹாய ஸங்கம் என்ற பெயரில் பக்தர்களே ஒன்று சேர்ந்து நிதி திரட்டிப் பிரசாந்தி நிலயத்தில் அடியாருக்குத் தேவையான கான்டீன் முதலிய சில வசதிகளைச் செய்தனர். 1966ல் ஸத்ய ஸாயி ட்ரஸ்ட் அமைக்கப்பட்டது. ப்ரசாந்தி நிலயம், மற்றும் பல நகரங்களில் உள்ள ஸாயி நிறுவனங்கள், ஸத்ய ஸாயிக் கல்லூரிகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், புத்தகப் பிரசுராலயம் முதலானவை இந்த ட்ரஸ்டாலும், இதன் அங்கங்களாலும் நிர்வகிக்கப்படுகின்றன.

ஏழையடியார் சிலருக்கு இவரே நேரில் சிறு தொகைகள் பண உதவி செய்வதும் உண்டு. இதுதவிர தமது ஸூக்ஷ்ம சக்தியால் தீனர்களின் இல்லங்களிலுள்ள தமது படத்திலிருந்தோ வேறு விதமாகவோ அவர்களின் அத்யாவசியத் தேவை பூர்த்தி பெறுவதற்கான தொகையை ரூபாய் நோட்டாகப் பொழிவதும் உண்டு. எப்படிப் புட்டபர்த்தி சென்று வருவது என ஏங்கித் தவித்த ஏழையர் சிலருக்கு இவ்வாறு அவர் பயணச் செலவைஅனுப்பிவைத்திருப்பதற்குச் சிந்தாதிரிப்பேட்டை ஆயா போன்ற பல எடுத்துக்காட்டுக்கள் உண்டு. ட்ரஸ்ட் ஏற்படுமுன்னரே இவ்விதம் செய்திருக்கிறார். ட்ரஸ்ட் ஏற்பட்டபின்னும் அதனிடமிருந்து கேட்டுப் பெறாமல் இவ்வருள் செய்கிறார். அப்படியாயின், அவருக்கென்று சொந்தப் பணம் இருக்கவேண்டும் என்றே ஆகும். அவரோ கிடையாது என்கிறாரே! இதனால்தான் சிலர், மற்றப் பொருட்களை சிருஷ்டிப்பதேபோல் ஸ்வாமி ரூபாயும் சிருஷ்டிக்கிறார் என்று நினைக்கிறார்கள். இது பரம அபத்தம். நாணயம் அச்சிடுவது அரசாங்கத்துக்கே உரிய காரியம். மற்றவர் ஸ்ருஷ்டிப்பது கள்ள நோட்டுத்தான். சில வருஷங்களுக்கு முன் அப்போதைய மஹாராஷ்டிர சட்ட சபை நாயகர் ஸ்ரீ பார்டேக்கும், “நவகால்ஆசிரியருக்கும் பாபா அளித்த பேட்டியில் இவ் விஷயத்தைத் தாமே தெளிவுபடுத்தியிருக்கிறார். தமது பரிசளிப்புக்களில் துளிக்கூட மோசடி அம்சமே கிடையாது என அடித்துக் கூறியிருக்கிறார். இவ்வாறெனில், அதாவது, இவர் ரூபாய் சிருஷ்டிக்கவுமில்லை, சொந்தச் சொத்து வைத்திருக்கவுமில்லை எனில், வேறொருவரின் திரவியத்தைதான்அப்போர்ட்எனப்படும் சூக்ஷ்மமான கடத்துச் சக்தியின் மூலம் இடம் பெயர்த்துப் பரம ஏழையருக்கு அளிக்கிறார் என்றாகும். இப்படி எவர் பணத்தையோ கடத்துவது மட்டும் மோசடியாகாதா என்றால்

அப்படி இல்லை. ஸ்வாமியிடம் பரம பக்தி பூண்டவர்களில் ஏராளச் செல்வம் படைத்த பலர் உள்ளனர். இவர் சொற்படி ஏழையருக்காகப் பெரு நிதியம் செலவிடச் சித்தமாயிருப்பவர்கள் இவர்களில் உண்டு. ஆனாலும் இவர்களிடமும் ஸ்வாமி பொதுவாகப் பல ஏழையர்க்குரிய பணிகளைத்தான் சொல்வாரே தவிர, தனிப்பட ஓர் ஏழைக்கு நன்கொடையாகத் தரச் சொல்வது அபூர்வமேயாகும். காரணம், இப்படிச் செய்வதால், அந்த ஏழையின்மீது இந்த தனிகருக்குத் தம்மையும் அறியாது ஓர் அதிகாரத்வம் வந்துவிடலாம்; உதவி பெற்றவரும் இவருக்கு பவ்வியப்பட்டு விட்டதாகத் தம்மை நினைக்கக் கூடும். ஸ்வாமியோ அகம்பாவ அதிகாரம், மனிதனிடம் மனிதன் தாழ்ந்து கிடப்பது இரண்டையுமே வெறுப்பவர். இதனால்தான் இவ்வித தோஷங்களால் தீண்டப்படாத, அபூர்வமான, பக்குவர் குறித்தே ஒருவர் இன்னொருவருக்கு நன்கொடை தருவதை அனுமதிப்பார். மற்றச் சமயங்களில் இப்படிப்பட்ட செல்வந்தர்களின் பணத்தையே இடம் பெயர்த்து தீனருக்கு வழங்குகிறார் என்பதே இந்நூலாசிரியரின் துணிபு. இத்தொகைகள் அந்த தனிகர்களுக்குப் பொருட்டாகவே இராது. அது கைவிட்டுப் போனதேகூட அவர்களுக்குக் கணக்குத் தெரியாததாக இருக்கும். தமது பக்தர்கள் பெரும் சொத்தையும் அர்ப்பிக்கத் தயாராயிருக்கையில், இப்படி ஸ்வாதீனத்துடன் நம் ஸ்வாமி அதில் கொசு மாத்திரத்தை தீனரட்சணத்துக்காக இடம் மாற்றுவதாயிருந்தால் அதை எப்படி மோசடி என்பது?

ஸ்வாமியின் அதி உன்னதமான ஒழுக்கத்தை அறிந்தவர்கள் அவர் தமது அப்போர்ட் சக்தியால் கடுகத்தனையும் நீதிமுறை மீற மாட்டார் என்று உறுதியாக உணருவர்.

உதாரணமாக, ஒருமுறை அவர் அத்யந்த பக்தர் சிலரிடம் உரையாடுகையில் முகலாய மன்னர் ஒருவர் உள்ளூரக் கண்ணனன்பு நிறைந்து அவனிடமிருந்தே பெற்ற பரிசில் ஒன்றை விளக்கமாக வர்ணித்தவுடன், அப்பொருளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு மூண்டுவிட்டது. தாபத்தை மூட்டிவிட்ட ஸ்வாமியும் அதைத் தணிப்பது தம் கடனெனக் கருதிக் கையசைத்தார். அக்கணமே திருக்கரத்தில் மிளிர்ந்தது திவ்யப் பரிசில். உடனிருந்த அனைவரும் அதனைப் பார்த்து மகிழ்ந்த பின் ஸ்வாமி மறுபடி கையசைக்க அது மறைந்துவிட்டது. ‘அடடா, அதனை ஏன் ஸ்வாமி தாமே வைத்துக் கொள்ளவில்லை? அல்லது பக்தர் ஒருவருக்காவது ஈந்திருக்கலாகாதா?’ என்ற எண்ணம் எல்லோருக்கும் பிறந்தது. ஸ்வாமி சொன்னார் : “நான் சொன்னது நிஜம் என்று நீங்கள் நம்புவதற்காகவும், உங்களுக்கு நானே ஆர்வத்தை உண்டாக்கிய காரணத்தால் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதாலுமே அந்த விலை மதிப்பற்ற பரிசிலை வரவழைத்தேன். அது பிரிட்டிஷ் ஆட்சியில் லண்டனுக்குப் போய்த் தற்போது அங்கு உரிமையாக உள்ளது. அங்கிருந்து அதைப் பறிப்பது திருட்டு. அதனால்தான் திருப்பி அனுப்பிவிட்டேன்என்றார். தற்போதைய இங்கிலாந்து உரிமையாளர் அப்பண்டம் ஆறாயிரம் மைல் கடந்து போயிருப்பதை ஊகித்துப் புலனாராய இடமேயில்லைதான். ஆயினும் ஸ்வாமியின் தர்ம உணர்வு, பொருட் பற்றின்மை இவ்விதம் செயற்பட்டது.

இப்படிப்பட்டவரே மாக்ஸ்முல்லர் குடும்பத்தின் வழித்தோன்றல் ஒருவரைச் சேர்ந்த ஒரு பொருளை அப்போர்ட் செய்து, அதை டாக்டர் வி.கே. கோகக்குக்கு வழங்கியிருக்கிறார் என்றால் விசித்ரமாயிருக்கலாம். ஆனால் இதிலேயும் நீதியுணர்வின் நுண்ணழகு வெளியாகிறது. இங்கே குறிப்பிடும் பண்டம்கீதா மாஹாத்மியம்எனும் நூல். “கிழக்கிந்தியக் கம்பெனியின் தொடக்க காலத்தில் மிக மிகப் பொடியான எழுத்தில்கீதா மாஹாத்ம்யம்துக்குணியூண்டு நூலாக வெளிவந்ததுஎன்று ஸ்வாமி கூறிய போது, உடனிருந்த கோகக் முதலியோருக்கு அதனைக் காணும் ஆர்வம் ஏற்பட்டதாலேயே அதைஅப்போர்ட்செய்தார். அதை ஸ்ரீ கோகக் வாங்கிப் புரட்டுகையில் மிக மிகப் பழைய அப்பிரதியின் அட்டை உதிர்ந்து, புத்தகத்திலிருந்து பிய்ந்து வந்துவிட்டது. கோகக்குக்கு உதறல் எடுத்தது. ஸ்வாமியோ கனிவுற நகைத்து, “பரவாயில்லையப்பா! இதை நீயே வெச்சுக்கோ. இது முதலில் ஸர் வில்லியம் ஜோன்ஸிடம் இருந்தது. பிறகு அவரது நினைவுப் பரிசாக மாக்ஸ் முல்லரிடம் போயிற்று. அவருடைய குடும்பத் தினரிடம் வம்சாவளியாகப் போயிருக்கிறது. இப்போதைய உடைமையாளருக்கு இது இருப்பதும் தெரியாது. தெரிந்தாலும் இதன் பெருமையை அவர்கள் உணரக் கூடியவர் அல்ல. அதை விட, உன்னிடம் இருப்பதே சிலாக்கியம்என்றார்!

அப்புத்தகத்தின் தற்போதைய உடைமையாளருக்கு அதன் அருமை தெரியாவிடினும் அதை இன்னொருவர் விரும்பிக் கேட்கிறார் என்றால் பேரம் செய்யத் தோன்றலாம்! இம்மாதிரிச் சில விதிவிலக்கான சமயங்களில் அப்போர்ட் செய்வதில் தவறு ஏதும் தெரியவில்லை.

சொந்தச் சொத்தில்லாத ஸ்வாமி ஏழையருக்கு திரவிய சகாயம் செய்வதற்கு நம் சிற்றறிவு அறிந்த அளவில் இந்த தர்ம நியாய அப்போர்ட் சக்திதான் காரணமாகத் தோன்றுகிறது.

சரி, சொத்தாசை, பொருளாசை இல்லாதவர் என்றால் இவருக்கு ஒரு சிறிய இருக்கை போதாதோ? இவ்வளவு பெரிய ப்ரசாந்தி நிலயம் எதற்கு?” என்று கேட்கலாம். ப்ரசாந்தி நிலயத்துக்குப் போகாதவர்கள்தான் படத்தில் மட்டும் அதைப் பார்த்து இப்படிக் கேட்பார்கள். அங்கே போனால் அதில் முக்காலே மூன்று வீச இடத்தை பஜனைக் கூடமே பிடித்துக் கொண்டிருக்கிறது என்றும், மாடியிலே உள்ள சின்னஞ்சிறு அறையில்தான் ஐயன் வசிக்கிறார் என்றும் தெரிந்து கொள்வார்கள். அங்கே மேஜை நாற்காலிகள்கூடக் கிடையாது. ஸ்வாமி எழுவதெல்லாம் தம் மடியிலேயே காகிதங்களை வைத்துக் கொண்டுதான். அவ்வறையில் உள்ள ஃபர்னிச்சர் ஒரே ஒரு ஸோஃபாகம்பெட்தான். பகலில் அதிலமர்ந்துதான் ஆட்சி நடத்துவதும், கட்டுரைகள் கடிதங்கள் எழுதுவதும். இரவு அதுவே சயனம்இருந்தால் சிம்மாசனமாம், புல்கும் அணையாம்என்பதாக நாரணனுக்கு ஆசனம், சயனம் இரண்டுமாக சேஷன் இருந்தாற்போல.

விமானங்களுடனும் கோபுரங்களுடனும் இன்று ஏன் பிரசாந்தி நிலயத்தைப் புதுக்கியிருக்கிறார் எனில், எண்ணற்ற அடியாருக்கு இந்த அசற் கோயில் தோற்றம் உண்டாக்கும் ஆனந்தத்துக்காகத்தான். நமது பண்டைய ஆலய அமைப்புக்கே பக்தி உணர்வை உண்டாக்கும் தனிச்சக்தி இருக்கத்தானே செய்கிறது? அச்சூழலிலேயே தன்னால் ஆத்மா லயிப்பதால்தானே ஆலயம் என்ற பேரே உண்டாயிற்று? இவ்வாறு கோபுரம், விமானங்களின் வெறும் தரிசனமே எவரையும் சற்றுப் பாவனமாக்குகிறதெனில் உள்ளன்பர் விஷயத்திலோ கேட்கவே வேண்டாம். எதிர்ப்பாளருக்கு எது கரிக்கிறதோ அதுவே பக்தருள்ளத்துக்கு இனிக்கிறது. கடவுளாகவே அவரை வழிபடுபவருக்கு அந்த நம்பிக்கையை அழுத்தமாக ஊட்டுவது தம் கடமை என அவர் கருதுவதாலேயே, கடவுள் போல அசற் கோபுரக் கோயிலில் குடிகொண்டிருக்கிறார். கண்ணன் கூடத்தான் துவாரகாபுரி என்ற புது நகரை எழுப்பியபோது அதில் தனக்கென ஆலயம் போன்ற இருக்கையை அமைத்துக்கொண்டான். ‘தமக்கென ஆலயம்என்பதுங்கூட பாபா விஷயத்தில் அவ்வளவாகச் சரியில்லை. மையமான பெரும் பஜனைக் கூடத்தில் ஷீர்டி நாதரும் இதர தெய்வ உருவங்களும் இடங்கொண்டு விதிவத்தாக நித்ய பூஜையும் நடக்கிறதாகையால் இதை முன்னிட்டே பிரசாந்தி நிலயம் கோபுர விமானங்களுடன் கோயிலுருப் பெற சர்வ நியாயமும் உண்டு.

பிரசாந்தி நிலயம் கோயில் உருக்கொண்டதால் அங்கே நம் ஆகம சாஸ்திர விசேஷங்களும், புராணப் பெருமைகளும், சிற்பச் சிறப்புகளும் குடிகொண்டுள்ளன. ஸ்வாமியின் ஏராளமான அந்நிய நாட்டு அடியார்களுக்கும், பாரதத்தில் பிறந்தே அந்நியர்களாக உள்ள அநேக பக்தருக்கும் இவற்றின் பெருமையும் பயனும் தெரிகின்றன. இந்த நிர்மாணத்தின் போது நம் தமிழகத்தைச் சேர்ந்த பல சிற்பிகளும், ஆலயக் கலை ஊழியர்களும் நலமுற்றனர்.

வெளிப் பார்வைக்கு பிரம்மாண்ட மாளிகையில் இருப்பினும் உள்ளே ஒரு சாமானிய மானுடனின் சௌகரியங்களோடுதான், ஏன், அசௌகரியங்களோடும்தான், ஸ்வாமி வஸிக்கிறார்.

பால், வெண்ணெய், தயிர், இனிப்பு ஏதுமற்ற ஆகாரம்தான் உண்பார் என்று முன்னரே பார்த்தோம். பல ஆண்டுகள் டிபன் காரியரில் போட்டு அக்காள் கொண்டு வந்ததை, எத்தனையோ மணிகளுக்குப் பின் அது ஆறிக் குளிர்ந்த பிறகுதான் உண்டிருக்கிறார். ஆகாரத்தைச் சூடாக வைத்திருக்கப் பெரிய ஃப்ளாஸ்க் கூட உபயோகித்ததில்லை. சாதாரண மனிதரைப் போல ஸோப்பு, சீப்பு, பற்பசை, தைலம், ஷேவிங் உபகரணம் முதலியவற்றை உபயோகிப்பவர்தாம் ஸ்வாமி எனினும், இவற்றில் தமக்கு இன்னப்ரான்ட்தான் வேண்டும் என்றில்லாமல் எதுவானாலும் சரி என்று இருப்பவர். இவர் பவுடர் அல்லது ஸென்ட் போடுவதாகச் சிலர் நினைப்பதும் சரியில்லை. இவர் அருகே செல்லும்போது காற்றில் கமழும் கமகமப்பைக் கொண்டு இப்படி எண்ணுகிறார்கள். ஆனால் இது இவரிடம் ஓரொரு சமயத்தில் எழும் இயல்பான மணமேயாகும். மன மலரின் அன்பு மணம்! “ஸுகந்திஎன்று வேதமும், “கந்தம் கமழ் காயாவண்ணன்என்று தமிழ் வேதமும் சொன்னாற்போல் ஸ்வபாவமாகவே வீசும் பரிமளம். இவர் ஸ்தூலமாக இல்லாத இடங்களிலும் சூக்ஷ்ம ரூபத்தில் தாழம்பூச் சாறாக மணம் வீசுவதை பக்தர்கள் எவ்வளவோ அநுபவித்திருக்கிறோமே!

ஸ்வாமியிடம் டாம்பீக மோஸ்தர் உள்படப் பல கார்கள் இருப்பது பற்றி நிறையக் குறை கூறப்படுகிறது. இவை பெரும்பாலும் அயல்நாட்டுப் பணக்கார பக்தர்களின் பிடிவாதக் காணிக்கைகளே. புது மாதிரி கார் வெளிவரும்போது முதல் தயாரிப்பைப் புட்டபர்த்திக்குபுக்பண்ணிவிடும் அமெரிக்க பக்தர்கூட உண்டு. கார்கள் வருகிற வேகத்திலேயே ஸ்வாமி அவற்றை அன்பளிப்பாக வழங்கியும் விடுவார். இது உலகுக்குத் தெரியவில்லை. ஒன்று போய் இன்னொன்று என்பதாக இவரிடம் கார்கள் மாறிக் கொண்டேயிருப்பதை அறியாமல், ஒவ்வொருமுறை ஒவ்வொரு காரில் இவர் வருவதை மட்டும் கவனித்து ஒரே சமயத்தில் ஏராளமான கார்கள் வைத்திருப்பதாக எண்ணுகிறார்கள். உண்மையைத் தெரிந்துகொள்ள முயலாமலே சிலர் வசையும் பாடத் தொடங்கி விடுகின்றனர். ஏதாவது அபவாதத்தை வாங்கிக் கட்டிக் கொள்வதிலேயே இவருக்கும் ஒரு குஷி போல் காண்கிறது. தாம் எதற்கும் சலனமுறாத நித்யஸுகி என்று பக்தருக்கு வேறெப்படி உணர்த்துவது?கார்களால் புகார்களுக்கு ஆளாகியுள்ள நம் காவிய நாயகர் கால் தோய நடந்து புக்கப்பட்டணம் ஹையர் எலிமென்டரிப் பள்ளிக்குப் போன காலத்துக்குத் திரும்புவோம். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் இவர் இதற்குச் சற்றே மாறாக, குழந்தைக் குறும்பாக ஆசிரியரிடம் செய்த ஓர் ஆச்சரிய விஷமத்தைப் பார்ப்போம்!