புட்டபர்த்தி – 7

அத்தியாயம் – 7

மாணாக்க மாணிக்கம்

ஸகல வித்தைகளைப் பிறப்பித்தவர்களும், எல்லாம் அறிந்தவர்களும், உலகையாள்பவர்களுமான பலராமனும் கண்ணனும் பிறரிடமிருந்தன்றி இயற்கையாகவே பெற்றிருந்த பெரு ஞானத்தை மறைத்துக் கொண்டு, குருவிடம் ஒழுகவேண்டிய நெறியை மற்றோருக்குக் காட்டும் பொருட்டு சாமானிய மனிதர்போல் குருகுலம் சேர்ந்தனர்.

– ஸ்ரீமத் பாகவதம் 10-45

பிட்ல குருவுஎன்று பேரன் பேர் பெற்றதில் கொண்டம ராஜுவுக்குக் கொள்ளை சந்தோஷம். குருவுக்கு குருவாகும் பாக்கியம் அவருக்கே கிடைத்தது. ஸத்யாவுக்கு அக்ஷராப்யாஸம் செய்கிற பருவம் வந்தது. அக்ஷரப் பிரம்ம யோகத்தைச் சொன்ன அக்ஷர புருஷனுக்கு அக்ஷராப்யாசம் செய்யும் பேறு கொண்டம ராஜுவுக்குக் கிட்டியது.

தொண்ணூறு தாண்டிய தொண்டு கிழவர் தம் சருகுக் கையால் ஐந்து வயசுப் பேரனின் துளிர்க்கரத்தைப் பிடித்துப் புனித பஞ்சாக்ஷரத்தை எழுதுவித்தார்.

எதிர்காலத்தில் இத்துளிர்கரம் எத்தனையெத்தனை குழந்தைகளுக்கு அக்ஷராப்யாஸம் செய்விக்கப் போகிறது? இன்றும் எத்தனை கூட்டமாகட்டும், ஸ்லேட்டும் கையுமாகத் தாயார் அல்லது தந்தை மடியில் உட்கார்ந்திருக்கும் குழந்தையைப் பார்த்துவிட்டால் நம் காவியநாயகர் தவறாமல் அங்கு வந்துஓம்எழுதித் தருகிறார்.

***

புட்டபர்த்தியின் ஆரம்பப் பாடசாலைக்கு அதிருஷ்டம் அடித்தது. “ரத்னாகரம் வி. ஸத்ய நாராயண ராஜுஎன்ற பெயரை ஆஜர்ப் பட்டியலில் பெறுகின்ற மாண்பு அதற்குக் கிடைத்தது.

ஸத்யா படிப்பில் படுசுட்டியாக இருந்தானென்று சொல்லவும் வேண்டுமா? ஓதாமலே உணர்ந்தவன் ஒருமுறை கேட்டதைக் கரதல பாடமாக்கிக் கொள்வதற்குக் கேட்பானேன்? “ப்ராம்மண பாலுடுகல்வியில் சிறக்கக் கேட்பானேன்?

படிப்பு ஒருபுறமிருக்க தன் நன்னடத்தையால் பள்ளிக்கே ரத்ன தீபமாக இருந்தான்.

மற்றப் பிள்ளைகளை வீண் பேச்சு, சண்டை, சோம்பல் முதலியவற்றிலிருந்து நல்வழிக்குத் திருப்புவதில் ஸத்யாவுக்கு அபார சக்தி இருந்தது. ஸத்யாவின் ரத்தத்தோடு கரைந்திருந்த நல்லொழுக்கமே அவர்களையும் அவ்வழிக்கு ஈர்த்திருக்கும்தான். அதோடு இன்னம் இரு காரணங்கள் சேர்ந்தன. ஒன்று சங்கீதம்; மற்றதுசமத்காரம்’.

ஸத்யாவுக்கு அற்புதமான சாரீர சம்பத்து வாய்த்திருந்தது. இசைநாடகக் குடும்பத்தில் பிறந்ததால் அவனுக்குப் பாட்டுத் திறனும், நடிப்பாற்றலும் பரம்பரைப் பண்புகளாக வந்ததாகவே நினைத்திருப்பார்கள். ஆனால், அவரைப் பரம்பரன் எனப் பார்த்தாலோ பாரம்பரியம் என்பதே ஒரு வேடிக்கை!

இன்றும் அவரது மணிக்குரல் எப்படிச் சொக்கச் செய்கிறது? பேச்சே பாட்டாக இனிக்கிறது. பாடியே விட்டாலோ?

பதினாலு வயசில் அவர் ஸாயி பாபாவாகத் தம்மை அறிவித்துக் கொண்டதிலிருந்து சுமார் அடுத்த பத்தாண்டுகள் அவரே பஜனைப் பாடல்களை ஏராளமாக முன்பாடி (lead செய்து) இருக்கிறார். இன்றும் தமது உரைகளைத் தொடங்குமுன் ஒரு சுலோகமும், முடித்த பின் ஓரிரு பஜன்களும் பாடுகிறார். வெள்ளி மணியைச் சுண்டியது போன்ற ஆழ்ந்த ரீங்காரமும், ஆந்திரர்களுக்கே உரிய பொடி ரவைஜாதிகளும், நுட்பமான வளைவு சுளிவுகளும் பொருந்திய சாரீரம் அவருடையது. ஸரளமாக உள்ளபோதே உள்ளுக்குள் அதில் ஒருபிடிப்புஇருந்து, அதிலிருந்து மீண்டு வருகிற பிரயாசையின் சாயலும் தெரியும். இதுவேதான் ஸ்ரீ கே.எஸ். வேங்கடரமணி வேறொரு மஹாபுருஷரின் குரலில் கண்டுபிடித்தகருணையின் திவ்ய நோவு” (the divine ache of compassion). ஒரு பக்கம் நோவு; மறுபக்கம் கேட்போருக்கு அதிலேயே ஒரு புனித ஆனந்தம். பேட்டி அறையில் ரகசியக் குரலில் ஸ்வாமி பேசுகையில் இக்கருணை நோவு அடர்ந்து தெரியும்.

இப்படி ஓர் ஆனந்த சோகம் அவரது உட்குரலில் இருப்பினும், ஆனந்த ஸ்வருபியேயான ஸ்வாமி, பக்தர்கள் சோக முறையீடுகளான பஜன்களைப் பாடுவதை அவ்வளவாக ரஸிப்பதில்லை.

பகவான் அனைவருக்குமே தகுதிக்கு அதிகமாகத்தான் அருள் புரிந்து வருகிறான். அப்படியிருக்க, ‘பாஹி பாஹி’, ‘தேஹி தேஹிஎன்றெல்லாம் ரொம்பப் புலம்ப வேண்டியதில்லை. இப்படிப் பிரலாபிப்பதால் நான் ஏதோ என் அநுக்ரஹக் கடமையைச் செய்யாததாகக் குத்திக் காட்டுவதுபோல் இருக்கிறது. குஷியாகப் பாடுங்கள், குதூஹலமாகப் பாடுங்கள். ஆனந்தமே ஆத்ம ஸ்வரூபம், பகவத் ஸ்வரூபம் என்றுணர்ந்து இன்புற்றுப் பாடுங்கள். இதுவே உயிருக்கு டானிக்.”

அதிலும் பலர் சேர்ந்து பஜனை செய்கிற கூட்டுப் பாட்டுக்குத் தொய்ந்த, தளர்ந்த மனோபாவம் கூடாது என்பது மட்டுமின்றி ராகம், தாளம் இவற்றிலும் கூட தொய்வும் தளர்ச்சியும் இருக்கக்கூடாது. பலரை ஈடுபடுத்திக் கட்டுப்படுத்துவதற்கு விருவிருப்பு அவசியம். சோக ராகங்களும், விளம்ப தாள கதிகளும் இப்படி உத்ஸாஹமூட்டா. சுருசுருவெனப் பாடுங்கள்.”

ஸங்கீத சாஸ்திரப் புலமையைவிட பக்தி ரஸத்தைத்தான் பகவான் உவக்கிறான் என்பது உண்மையே. ஆனாலும், சங்கமாகக் கூடிப் பலர் பஜனை செய்யும்போது ஒருத்தர் அபஸ்வரமாக, அவலயமாகப் பாடினால் மற்றவர் மனத்தில் இது இடறலை உண்டாக்கி, இசை வழியாக இறைவனிடம் ஈடுபடுவதற்கு இடையூறு செய்யும். எனவே, ஸுஸ்வரமாகவும், தாளக்கட்டுடனும் பாட இயலாதவர்கள் கூடிய மட்டும் ஸங்கீர்த்தனக் கூட்டங்களில் முன்பாடாதிருப்பதே சிலாக்யம். இதற்கு எதிர்த் திசையில், ஸங்கீத நிபுணர்கள் மற்றோர் பின்தொடர முடியாத விந்நியாசங்களில் புகாமல், பாவத்துக்கு அடங்கியும் அநுசரணையாகவுமே இசையைக் கொண்டுபோக வேண்டும்.” இவை ஸ்வாமி நாம பஜனை குறித்து வழங்கும் அரிய அறிவுரைகளில் சில.

இன்றைவிடவும் சிலபல ஆண்டுகளுக்கு முன்வரையில் ஸ்வாமியின் குரல் மூன்று ஸ்தாயிகளிலும்ஜிவ்வென்று, ஜில்லென்று சுருதிலீனமாக சஞ்சரித்தது ரஸிக பக்தர்களின் மறக்க வொண்ணா அநுபவமாகும். பாக்கியவசமாக, அந்த இசை காற்றோடு கரைந்து மறைந்து விடாமல், ‘டேப்பிலே பதிவு செய்யப்பட்டு இசைத் தட்டுக்களாக வெளிவந்திருக்கிறது.

சாரீர வளத்தைப் பொறுத்தமட்டில் ஸ்வாமிக்கும் சாமானிய மானுடர் போலவே சுமார் நாற்பத்தைந்து வயதுக்குப் பின் லாகவம் குறைந்திருப்பதைப் பார்க்கும் போது. குரல்உடைவதற்குமுன், பால ஸத்யாவின் சாரீரம் எத்தனை மாதுரியமாக இருந்திருக்கும் என்று ஊகித்துப் பார்க்கலாம். “தேவகானம், தேவகானம்என்று சொல்கிறோமே அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். தேவனே தேவனைப் பாடிய தேவகானம்!

ஆம், குழந்தை ஸத்யம் இறைவன் நாமங்களைத்தான் பாடினான். பள்ளியில் பொடிப் பயலாக இருந்தபோதே இந்த அவதாரத்தின் நாம ஸங்கீர்த்தனப் பணிக்குக் கொடியேற்றி விட்டான்!

கலியுகத்தின் பிரத்யேகமான ஆத்ம சாதனை நாம பஜனைதான் என்பது சாஸ்திரம். நம் சரிதநாதனும் இதை அடிக்கடி வலியுறுத்துகிறார்.

பரமஹம்ஸ ராமகிருஷ்ணர், ஷீர்டி பாபா, ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாள், மா ஆனந்தமயீ போலவே நம் ஸ்வாமியும் குறிப்பிட்ட ஒரு சாதனையை மட்டும் மோக்ஷ மார்க்கமாக விதிக்காமல், அவரவர் பக்குவமறிந்து. அதற்கேற்றதொரு வழியைக் கூறுபவர் தான். ஆத்ம மார்க்கங்களில் உள்ளவர்களை அவரவரது சாதனையிலேயே ஊக்குகிறார். இதற்கு மாறாக அநேக மகான்கள் இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்டதொரு மந்திர ஜபம், அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு, அல்லது யோகம், தியானம் என்று ஏதாவதொன்றைத்தான் விதிப்பார்கள். இவர்களில் சிலர் பிற மார்க்கங்களை வன்மையாகக் கண்டிப்பதும் உண்டு. இப்படியாக ஒரு தனி மார்க்கம் என்று உருவாகிறபோது அதைச் சேர்ந்தவருக்கென்று பிரத்யேகமான சின்னங்கள், உடுப்புக்கள் போன்றவையும் நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால் ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் இன்ன மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. நம் ஸ்வாமி எந்த தனியொரு மார்க்கத்தையும் கூறவில்லை. தம் பக்தர்களுக்கெனத் தனி அடையாளம் எதுவும் விதிக்கவும் இல்லை. ஸாயி ஸமிதியினர் கண்களை உறுத்தும் வர்ணங்களில் சித்திர விசித்திர உடைகள் அணியாமல், அமைதியை உண்டாக்கும் தூய வெள்ளாடையையே உடுத்தவேண்டும் என்பதற்கு அதிகமாக எவ்விதக் கட்டுப்பாடும் செய்யவில்லை. சிலருக்கு ஞான விசாரம், சிலருக்கு யோகம், சிலருக்கு பக்தி, பெரும்பாலோருக்குக் கர்மம் (சேவை) என்றும், சிலருக்கு இவற்றைக் கலந்தும் அவரவர் மனோபாவப்படி வழிகாட்டுகிறார். இவ்வாறு சகல சமய மார்க்கங்களையும் அங்கீகரித்தபோதிலும், இக்கலியுகத்தில் சகல புருஷார்த்தங்களுக்கும் தனிப் பெரும் சாதனம் நாம ஸங்கீர்த்தனமே என்று சாஸ்திரங்கள் கூறுவதற்கிசைய, நம் ஸ்வாமி பரம சுலபமான, மதுரமான பஜனை மார்க்கத்தை ஒரு படி கூடுதலாக வற்புறுத்தத்தான் செய்கிறார்.

எவரும், எச்சமயத்திலும், எவ்விடத்திலும், எவ்வித வெளிப்பொருளும் உபகரணமும் தேவைப்படாமல், எளிதே பயிலக்கூடியது நாம ஸ்மரணம்தான். இதையே இசையும் லயமும் கூட்டி பஜனையாகப் பாடிவிட்டால், நம் உயிரைப் பரிசுத்தம் செய்துகொள்ளும் அதே சமயத்தில், இந்த பஜனையைக் கேட்டு உடன் கலந்து கொள்வோரையும் அகத் தூய்மை பெறச் செய்கிறோம். நம்மைத் துலக்கிக் கொள்ளும்போதே உலகையும் துலக்க பகவந்நாம பஜனையே ஒப்பற்ற ஸாதனம். இப்படியாக இந்த ஸாதனையில் தலைசிறந்த பரோபகாரமும் சேர்ந்திருக்கிறதுஎன்பார்.

பிரசாந்தி நிலையத்திலும் சரி, ஸ்வாமி முகாமிடுகிற வேறெந்த இடமாயினும் சரி, அங்கு அனைவருக்காகவும் தவறாமல் நடத்தப்பெறும் ஆத்ம சாதனை நாம ஸங்கீர்த்தனம்தான்.

இதற்குத்தான் இவர் ஆரம்பப்பள்ளி நாளிலேயே அதற்கும் முன்பிட்ல குருவானபோதே கொடியேற்றம் செய்துவிட்டார். தங்கக் கை ஏற்றிவைத்த கொடியாதலால், இன்று கயானா, ஹவாய் உள்ளிட்ட சின்னஞ்சிறு நாடுகளிலும் பாட்டொலியாலே பட்டொளி வீசிப் பறக்கிறது பரமனின் நாமப் பதாகை! ஸத்ய ஸாயி ஸமிதியும் இப்போது ஒரு யுனைடெட் நேஷன்ஸாக விச்வ வியாபகம் பெற்றுவிட்டதால், இன்று நாம பஜனையில்லாத நாடு ஏதேனும் உலகில் இருக்குமா என்று வியப்புறத் தோன்றுகிறது!

***

ங்கீர்த்தனம் என்பது சாதகர்களான நாம் செய்ய வேண்டியது. ஏராளமானவரைத் தம்பாற்படுத்தி ஸங்கீர்த்தனத்தில் ஈடுபடுத்துவதற்காக அவர் செய்வது அதுதான் சரியாகவோ, தப்பாகவோசமத்காரம்எனப்படும் அற்புதங்கள் (miracles). இன்றுஸத்ய ஸாயிஎன்ற மாத்திரத்தில் அநேகர் இவர் செய்யும் மிரகிளைத் தானே நினைக்கிறார்கள்? ‘அவர் கையை அசைத்தால் எது வேண்டுமானாலும் சிருஷ்டியாகி விடுமாமே!’ என்றுதானே ஆச்சரியப்படுகிறார்கள்? ‘சமத்கார்என்று வடநாட்டிலே கூறப்படும் இந்த அற்புதத்தை சமர்த்து ஸத்யா பள்ளி நாளிலேயே! தொடங்கி விட்டான்

இவன் பிறக்குமுன்பே தம்புராவும் மிருதங்கமும் இசைத்ததுகூட இவனதுசமத்காரசிருஷ்டிதான். சுருதிலய ஸங்கீதமே ரஸராஜனான நம் ஸ்வாமியின் முதல் ஸ்ருஷ்டி சத்தியம் என்ற சுருதிக்கேற்ப ருதம் என்ற ஒழுங்கு லயம் தோன்றியதில்தானே பிரபஞ்ச ஸ்ருஷ்டியே உண்டாயிற்று?

இவனது பச்சிளம் பருவத்தில் வீட்டார் பிச்சையிட்ட பிறகு அன்னம் வளர்ந்ததே, அதுவும் இவன் ஸ்ருஷ்டித்ததுதான்.

ஆனால், இவையெல்லாம் நேராக இவன் செய்யாமல் சூக்ஷ்மமாக நடந்தன. இப்போது பள்ளியில் நேராகவே ஸ்தூலப் படைப்பைத் தொடங்கிவிட்டான்.

புத்தகப் பைக்குள் கை விடுவான். வெளியே எடுக்கையில் பெப்பர்மின்ட், பலப்பம், பென்ஸில் என்று ஏதாவது வரும்! சக மாணவர்களுக்கு விநியோகிப்பதற்குத்தான்.

அன்றும் சரி, இன்றும் சரி. இவர் தமக்கென அற்புத சக்தியால் ஒரு துரும்புகூடப் படைத்துக்கொண்டதில்லை.

சாதாரண ராஜுகுடும்பப் பையனாக முரட்டுத் துணியில் ஓர் அரை நிஜாரும், அரைக்கை சட்டையும் போட்டுக் கொண்டுதான், மற்ற மாணவருக்கு வற்றா நிதியாக இப்பொருள்களைப் பையிலிருந்துஎடுத்துக் கொடுத்தான்.

அன்றும் சரி, இன்றும் சரி, இவர் ஒரு பொருளை வழங்கினால் அது வெறும் ஜடப் பரிசாக மட்டும் நின்றுவிடவில்லை. இதனால் வெளியாகும் இவரது அதீத சக்தியைக் காண்கையில் இவரது வார்த்தைக்குக் கட்டுப்படுகிற அடக்கம் மக்களுக்கு உண்டாகிறது. எனவே, இவர் வார்த்தைப்படி கொஞ்சத்தில் கொஞ்சமாவது நாம பஜனை, பரோபகார சேவை, ஆத்ம சிந்தனை முதலியவற்றில் ஈடுபடுகிறார்கள்; ஓரளவுக்காவது பாபத்துக்கு பயந்து தர்மத்தில் கட்டுப்பட முயல்கிறார்கள். இவரது அற்புதங்களின் உத்தேசமே இதுதான்.

ஏதோ ஓர் அற்புத ஆற்றலால் ஸத்யா தங்களுக்கு மிட்டாயும், ஸ்லேட்டும் தருகிறான் என்றவுடன் அவனிடம் மற்றச் சிறாருக்குத் தன்னால் ஒரு மரியாதை உண்டாயிற்று. அதனால் அவன் சொல்கிறபடி பசுவந்நாமாவைப் பாடினார்கள்; தப்பானவை என்று அவன் சொன்ன பொய், பொறாமை, புறங்கூறல் போன்றவற்றுக்கு அஞ்சினார்கள்.

நம் ஸ்வாமி தமக்கு அற்புத ஆற்றல் இருக்கிறது என்ற பெருமைக்காக சிருஷ்டி செய்பவரே அல்லர். நாம் நல்வழிப்பட வேண்டும் என்பதில் அவருக்குள்ள நிறைந்த அன்பு காரணமாகவே பரிசுகளை ஸ்ருஷ்டி செய்து தருகிறார்.

சில சமயங்களில் நல்வழிப்படுத்த வேண்டும் என்ற காரணம் கூட இல்லாமல் வெறும் அன்பு தூண்டுவதாலேயே அவ்வன்பை நாம் புரிந்துகொள்வதற்கு வெளியடையாளமாக ஏதேனும் பரிசைப் படைத்தளிக்கிறார்.

எல்லையில் அந்நலமாகிய தம்மைத் தாமே இவர் நல்வழிப்படுத்திக்கொள்ளவோ, தம்மிடமே அன்பு பாராட்டிக் கொள்ளவோ அவசியமேயில்லாததால் தான் தமக்கென எதுவும் அற்புத ஆற்றலால் படைத்துக் கொள்வதில்லை.

அற்புத ஆற்றலை அவர் எப்போது பார்த்தாலும் வெளியிட்டுக் கொண்டிருப்பதில்லை. இன்று பாபா என்றாலே மிரகிள் என்று நினைக்கப்பட்ட போதிலும், மற்ற மகான்களைவிட மிக அதிகமாக இவர் வ்யக்தமானசமத்காரங்களைச் செய்கிறாரெனினும், இதிலுங்கூட ஒரு பெரிய கட்டுப்பாடு இருக்கத்தான் செய்கிறது. ஒரு புறம் யாருமே அறியாதபடி பலருக்கு சூக்ஷ்மத்தில் அற்புதம் செய்கிறாரெனினும், ஸ்தூல அற்புதம் எனும்போது எல்லா அடியாருக்கும் எப்போது பார்த்தாலும் அதைச் செய்து கொண்டிருப்பதில்லை. படத்தில் விபூதி வராதா, தேன் வராதா. வேறு ஏதேனும் மிரகிள் செய்யமாட்டாரா என்று எத்தனையோ பக்தரை ஏங்கிக் காக்க வைத்துத்தான் வருகிறார். எந்த அடிப்படையில் இந்தக் கட்டுப்பாட்டை அவர் செய்துகொண்டிருக்கிறார் என்பது அவரொருத்தருக்கே தெரியும். உதாரணமாக, சாதாரணச் சிறுவர்கள் தங்களுக்குச் சிறிது மேதா விலாஸம் இருப்பினும் அதைப் பெரியோர்களிடம் காட்டிப் பாராட்டுப் பெறவே விழைவர்.

ஸத்யாவோ மஹா அற்புத ஆற்றல் இருந்தும் ஸ்தூலத்தில் அதைப் பெரியோரிடம் காட்டாமல் கட்டுப்படுத்தித் தன்னொத்த பாலருக்கே வெளிப்படுத்தினான். அப்போதும்கூட அவர்களைவிட உச்சாணிக் கொம்பில் தன்னைக் காட்டிக் கொள்ளாமல், அவர்களில் ஒருவனாகவே விளையாடிக் கொண்டு இதனைச் செய்தான்.

ஆம். “பிரம்மஞானிபடிப்பிலும் ஒழுக்கத்திலும் எப்படியோ அப்படியே விளையாட்டிலும் சூரனாக இருந்தான். கோலியிலும் சடுகுடுவிலும்படுவாக இருந்தான்.

மற்ற சிறுவர்களுக்காக அந்த மந்திரப் பையிலிருந்து கோலிக்குண்டுகள் அள்ளிக் கொடுத்துக் களிப்பூட்டியிருக்கிறான்.

எப்டீடா ஸத்யா, காலிப் பையிலே இதெல்லாம் வர்றது?” என்று பசங்கள் வியப்புக் கொள்வார்கள்.

ஸத்யாம்மாதான் தர்றா. வீட்டிலே இதைப் பத்திச் சொல்லாதீங்க; சொன்னா தர்றதை நிறுத்திடுவாஎன்று இவன் ஒரு போடு போடுவான், கோலிக் கண்களைச் சுழற்றி!

குழந்தை லோகத்தோடு மட்டும் தன் கும்மாளத்தைக் கொஞ்ச காலத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவதாரன் திருஉளம் கொண்டிருக்கிறான். அவர்களுங்கூட இந்தக் கும்மாளத்தில் தன்னைக் கண்டு அஞ்சி விலகும்படியாகிவிடக் கூடாதென்றே, தான் சிருஷ்டித்ததைஸத்யாம்மாவின் அருளால் கிடைத்ததாகச் சொல்லித் தன்னைக் குறுக்கிக் காட்டிக் கொண்டான். அவர்களுக்கு எவ்வளவு ஜெரிக்குமோஅதற்கேற்பவே அளந்தான் இல்லை, அளக்கவில்லை, அளவையைக் குறைத்தே சொன்னான். தனக்கே உள்ள படைப்பாற்றலைக் குறைத்து, ஸத்யம்மா படைத்ததைத் தான் வழங்குவதாக மட்டும் சொல்லிக் கொண்டான்.

ஸத்யாம்மா விடம் பக்தி கொண்ட புட்டபர்த்தியைச் சேர்ந்த கிராமப் பசங்கள் அந்தத் தேவிதான் இப்பிள்ளை மூலம் விளையாடுகிறாள் என்பதை எளிதிலே நம்பி ஏற்றுக் கொண்டனர். இவனுக்குள்ளேயே உள்ள பரம ஸத்ய அம்மாவை ஸத்யரூபா, ஸத்ய வ்ரதா, ஸத்யஸந்தா, ஸத்யானந்த ஸ்வரூபிணி, ஸத்ய ஞானானந்த ரூபா என்றெல்லாம் லலிதா ஸஹஸ்ரநாமம் கூறும் மஹா அம்மாவை அவர்கள் கண்டார்களா?

பழம் தரட்டுமா, பழம்?” கண்களை உருட்டுவான் ஸத்யம்.

சின்னச் சின்னக் கைகள் அவனைச் சுற்றி நீளும்.

ஸத்யா மாயப் பையைத் துழாவி வெளியே எடுப்பான்.

கொய்யாப் பழம்! கொய்யாத பழம்தான். அது ஏதேனும் மரத்தில் பழுத்திருந்தால்தானே கொய்யவேண்டி இருந்திருக்கும்?

செல்வா ஸத்யா! நீ இப்போது ஒரு சில சிறுவர்களிடம் செய்கிற இந்த விளையாட்டைத்தான் ஒரு நாள் நவ கண்டத்திலுள்ளவரிடமும் பரப்பி, நவ நவமாக விளையாடப் போகிறாய்! அதனாலேயே உன்னைப் பலர் ஸர்வேச்வரனாகக் கொண்டு வழிபடப் போகிறார்கள். இது காரணமாகவே வேறு பலரோ உன்னை வெற்றுச் சித்தன், உண்மையான ஆத்மிகத்துக்கு உலை வைக்கிற தந்திரக்காரன் என்று தாக்கவும் போகிறார்கள். போற்றுதல், தூற்றுதல் இரண்டாலும் பாதிக்கப்படாமல், விலகி நின்று அவற்றை ஒரேபோல ரஸித்துக் கொண்டு நீயும் இந்த விளையாட்டை விமரிசையுற விஸ்தரித்துக் கொண்டேதான் இருக்கப்போகிறாய். வேறெந்த விதத்திலும் ஈச்வர சக்தியை உணர முடியாத ஏராளமான மக்களை இறை நினைவில் திருப்ப அற்புதங்களாலேயே முடிகிறது என்பதால் அவர்களை நன்னெறிப்படுத்துவதில் உனக்குள்ள கருணைப் பிடிவாதத்தால் அபவாதங்களையும் உவந்து பூணப்போகிறாய்!

உலகம் காணப் பெரிய அளவில் பாபாசமத்காரம்செய்யத் தொடங்கிய பிறகுதான், அதுவரை கப்சிப் என்றிருந்த இவரது அடிநிலைப் பள்ளித் தோழர்களில் பலர் அந்தக் காலத்திலேயே நாங்கள் பெற்ற அற்புதப் பரிசுகளைப் பற்றி அவிழ்த்து விட்டார்கள். ஸ்வாமியின் பாலகாண்ட காலத்திலேயே, பிள்ளைகள் புதுப் பலப்பம் பென்ஸில்கள் முதலியன கொண்டு வருவது பார்த்துச் சில பெற்றோர்கள் அவர்களைக் குடைந்து உண்மையை ஓரளவு கக்கச் செய்திருந்தது வாஸ்தவந்தான். ஆனாலும் ஸத்யா இதை ரகசியமாகவே காக்க வேண்டுமென்று அந்தப் பிள்ளைகளுக்கு எச்சரித்திருந்ததை அறிந்த கிராம வாசியரான பெற்றோரும் விஷயத்தை பகிரங்கப்படுத்தாமலே இருந்தனர். ஆயினும் பர்த்திக் கிராமம் முழுவதும் அப்போதே இலைமறைவு காய்மறைவாக ஸத்யாவுக்கு அதீத சக்தி இருக்கலாமென்ற அபிப்பிராயம் இருந்தது.

***

டிப்பு. படைப்பு, விளையாட்டு, வழிபாடு இத்தனைக்கும் நடுவில் இவன் செய்த வீட்டுக் காரியம்! அடேயப்பா! ஆமாம், ஒரு குடும்பத்தின் சமையல் வேலை முழுவதையும் சவரணையாக, விதரணையாகச் செய்தான்.

அது ஒரு குட்டிக் குடும்பம். தாத்தாவையும் பேரனையும் மட்டும் கொண்ட அன்புக் குடும்பம்.

பாட்டி காலமான பின் சிறிது காலம், அதாவது ஏழு வயசு வரையில் அசைவ வீட்டில் தயாராகும் சைவ உணவை சகித்து ஏற்றுக் கொண்டான். அப்புறம், ‘இந்தப் பாத்திரம் பண்டம் சம்பந்தமே வேண்டாம். அசைவ உணவைச் சமைத்து உண்போரின் ஸ்பரிசமும் தன் ஆகாரத்துக்கு இருக்க வேண்டாம். நாமே தாத்தாவுக்காகவும் நமக்காகவும் சமைத்துக்கொண்டு விடலாமேஎன்று தீர்மானித்தான்.

ஆத்மிக வாழ்வின் நுழைவாயிலாக ஆகார சுத்தியைத்தான் ஸநத்குமாரர் நாரதருக்கு உபநிஷத்தில் உபதேசிக்கிறார். இவ்விஷயத்தை பாபா மிகமிக வலியுறுத்துவார். (துரதிருஷ்டவசமாக, கேட்போர்தான் அபூர்வத்திலும் அபூர்வமாக இருக்கிறார்கள்!) உணவைச் சமைப்பவர், பரிமாறுபவர் ஆகியோரின் மனோபாவமும் உண்பவரின் உட்புகும் என்பதையும் கதைகள் மூலம் விளக்குவார்.

இவ்விடத்தில் உணவு விஷயமாக அவரது கருத்துக்களில் இரண்டைக் கூறலாம். உணவு ஆராய்ச்சியாளர்கள் (dieticians) பாலின் சிறப்பைப் பரக்கக் கூறினாலும், ஸ்வாமியோ பாலைவிட மோர்தான் சிறந்தது என்கிறார். நிலத்துக்கு அடியில் உண்டாகும் வெங்காயம், கிழங்குகள் முதலியவற்றைவிட, மேல் மட்டத்தில் விளையும் காய்கறிகள்தாம் ஸத்வகுண அபிவிருத்திக்கு அநுகூலமானவை என்கிறார்.

ஏழு பிராயச் சிறுவன் அஞ்சாமல் அடியிலிருந்து நுனிவரைச் சமையல் வேலையை ஏற்றான். பிரம்ம வித்தையா என்ன? பிரம்ம வித்தையேதான் இவனுக்கு அரிச்சுவடி ஆயிற்றே!

கொண்டம ராஜுவின் தனிவீட்டில் சமையல் பணியைத் தொடங்கினான். ஒரு பக்கம் குழந்தைகளிடம் பஜனை மூலம் சமயப்பணி; மறுபக்கம் கிழவனாருக்குச் சமையல் பணி. இதையும் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு ஒரு சமயச் சடங்காகவே செய்தான். எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் அப்பழுக்கில்லாமல் செய்கிற கர்ம யோகியல்லவா?

தண்ணீர் சேந்துவது, காய்கறி நறுக்குவது, உலை வைப்பது, அரைப்பது, கரைப்பது (ஆந்திரச் சமையலில் சட்னி, பச்சடி என்று சொல்லிக் கொண்டு துவையல்கள் அரைப்பது மிக அதிகம்) இத்தனையும் செய்தது குழந்தை. எப்படித்தான் குழவிக்கை அம்மியில் குழவியை ஓட்டியதோ? கார மசாலாக்களை மொட்டான பட்டு விரல்பட அரைத்ததோ? பீமனைப்போலவும் நளனைப் போலவும் மந்திரம் போட்டே (சங்கற்பத்தாலேயே) இவன் சமைத்திருக்கலாம்தான். ஆனால், அப்படிச் செய்யாமல் மனிதருக்கு முன்னுதாரணமாக, அலுப்பின்றி, உற்சாகத்துடன் காரியம் செய்யும் லீலையை மேற்கொண்டு விட்டான்!

ஈச்வராம்பாவுக்கு ஆச்சரியம், பெருமை, பொறாமைகூட! இரண்டு பெண்கள், நாத்தி, ஓரகத்தி இவ்வளவு பேரையும் சகாயத்துக்கு வைத்துக்கொண்டும் தான் சமையலுக்குச் சதிராடும் போது, இவன் ஏழு, எட்டு மணிக்குள் கன கச்சிதமாக உக்கிராண காரியம் முடித்து விட்டுப் பள்ளிக்குக் கிளம்பிவிடுகிறானே என்று வியந்தாள்.

இரண்டு பேர் உள்ள குடும்பமானால் என்ன, இருபது பேர் உள்ள குடும்பமானால் என்ன? அளவில் தான் வித்தியாசமே தவிர அயிட்டங்களில் வித்தியாசமில்லை. தாத்தாவுக்குத் தொண்ணூற்றுக்கு மேல் வயதானாலும் நவ்வும் ஜவ்வுமாக ஒரு வியஞ்சனம் குறைவில்லாமல் செய்து போடுவான். சுத்த வாழ்க்கை வாழ்ந்த தாத்தாவும் தெம்பாகவே இருந்து ஜெரித்துக் கொண்டார். தானும் ரஸித்து உண்டான். பிரம்மஞானி என்பதால் குற்றமற்ற இன்பங்களை அளவறிந்து அநுபவிப்பதில் தவறில்லை. “வேலை அமுதம் விந்தைபெற அறுசுவையில் வந்ததென அமுதுண்ணும் வேளையிலும் நின் அருளை மறவா வரம் தந்துஎன்று தாயுமானவரே பாடவில்லையா? ‘உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாவற்றிலும் நம்மாழ்வார் கண்ணனின்பத்தையே அனுபவித்து கானம் செய்யவில்லையா?’ ஸத்யா சோறு என்று பறக்க மாட்டான். நாவுச் சபலம் கிடையாதுதான். ஆனால், சமையல் என்று செய்தபோதுபணிக்குகுன்றாமல் பணி செய்து, ருசித்து உண்டான்.பிற்காலத்தில் எத்தனையோ முறை பத்துப் பேருக்குச் சமைத்தது நூறு பேருக்கும், நூறு பேருக்குச் சமைத்தது ஆயிரவர்க்கும் காண்கிற மாதிரி அன்ன விருத்தி செய்த அற்புதன் இவன்! தவிர தனிப்பட்ட பக்தர்களுக்குச் சுடச்சுட ஹல்வா, போண்டா, பூரி மசாலா சிருஷ்டித்துக் கொடுத்து மகிழ்வூட்டி, மாற்றாரிடம் நையாண்டி மொழிகளை வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறான். எத்தனையோ ஆயிரம் பேருக்குப் படியளக்கும் ‘ஸாயி ஸ்டோர்ஸ்’ வைத்திருப்பதாகச் சொல்லிக்கொள்ளப்போகிறான்! இவனே சின்னஞ்சிறு பிராயத்தில் நேராகத் தனக்கு உணவில் பங்கு உண்டு என்னும்போது அற்புத சக்தியைப் பிரயோகித்துப் பயனடையாமல், வேர்க்க விருவிருக்க உழைத்துக் கொட்டி, உழைப்பின் பலனை உண்டு களித்தான். ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்’ தன்மை இதுதான்