இந்தச் சட்டம் சாதிக்காதது உலகில் இல்லை.
ஜோஸ்யர்கட்குச் சட்டம் தெரியாவிட்டாலும் சில சமயங்களில் என்ன செய்ய வேண்டும்எனத் தெரியும்; சொல்லமாட்டார்கள்.
தெரியாவிட்டாலும் மனம் குறையாக இருப்பதை ஏற்று, குறை நீங்கப் பிரார்த்தனை செய்தால் பிரார்த்தனை பூரணமாகப் பலிக்கும்.
வீட்டுப் பிரச்சினையிலிருந்து சர்வதேசப் பிரச்சினைகள்வரை இந்த சட்டம் தவறாது பலிக்கும். இதைக் கூறும் கதைகள் பல.
மனம் Sincerity உண்மையை நாடவேண்டும்.
30. மனம் களைத்துப்போகும்வரை The Life Divine ஐப் படிப்பது.
The Life Divine ஆன்மீக அனுபவங்கள் சொல் வடிவில் எழுதப்பட்டது.
எளிய நூல்கள் செய்தி (information) தரும்.
பெருநூல்கள் புதிய கருத்துகளை எழுதும்.
கவி தன்திருஷ்டிக்குக் காவிய வடிவம் தருகிறார்.
The Life Divine பகவான் எழுதத் திட்டமிட்ட நூலில்லை.
1914இல் அன்னை பகவானைச் சந்தித்தபொழுது இந்த ஞானம் உலகம் பெறவேண்டியது; அதனால் இது எழுதப்படவேண்டும்எனக் கேட்டார்.
அன்னை சொல்லியவற்றை பகவான் ஆணையாக ஏற்றுச் செயல்பட்டிருக்கிறார்.
உடற்பயிற்சி செய்யச் சொல்லியதை மட்டும் மறுத்துவிட்டார்.
நூலைப் படிப்பவர் உடலுள் மின்சாரம் போன்ற சக்திப் பாய்வதைக் காணலாம்.
ஆன்மீகச்சக்தியைப் – அருளைப் – பெற நமக்கு அளவுண்டு.
The Life Divine படிப்பதால் அருள் நம் ஜீவனை நிரப்பும். அதைத் தொடர்ந்து பெற இயலாது.
அருள் வழிந்தோடும்.
அந்நிலையில் கொட்டாவி வரும்; அறிவு களைத்துவிடும்.
பிரிட்டிஷ் விஞ்ஞானி 2 பக்கத்திற்குமேல் படிக்கவில்லை என்றார்.
100க்கு மேற்பட்ட உலக விருதுகளைப் பெற்றவர் “அந்தப் புத்தகம் நம்மால் படிக்க முடியாது” என்றார்.
ஓரளவு ஆன்மீகஆர்வம் உள்ளே சேராமல் புத்தகத்தைத் தொட முடியாது. படித்தால் 2 பக்கம் அல்லது 10 பக்கம் படிக்கலாம்.
புரிந்து படிப்பது அவசியம்.
புரிவது போதாது.
புரிந்தது மனத்திரையைக் கிழித்து ஆத்மானுபவமாக வேண்டும்.
எவ்வளவு படிக்கிறோம் என்பதைவிட எப்படிப் படிக்கிறோம் என்பது முக்கியம்.
- தொடர்ந்து படிப்பது, களைக்கும்வரை படிப்பது, படிப்பதில் இடைவெளி கூடாதுஎன்பது discipline கட்டுப்பாடு. அதுவே மனதில் தடம் பெறவேண்டும். அது மட்டுமே இலட்சியமாக இருக்க வேண்டும். முடிந்தவரை தவறாது படிக்கவேண்டும். நேற்றைவிட இன்று சற்றுக் கூடப் படிக்கவேண்டும். The Life Divine படிப்பது பகவானையடைய முயலும் நிஷ்டை. படிப்பது ஜீவனில் கலந்தால் கிடைப்பது விழிப்பில் சமாதிஎன்ற உணர்வுடன் படிக்க வேண்டும்.
நான் ஆரம்பத்தில் கூறிய ஆன்மீகப் பலனை வாழ்வில் பெற்றுத்தரும் திறனுடையது இம்முறை.
இப்படிப்பு அறிவில் ஆரம்பித்து திருஷ்டியில் முடியும்.
மனம் விழிப்படைந்த பின்னரே படிக்க முடியும்.
ஆத்ம விழிப்படைந்த பின்னரே படித்தப் பலன் பெற முடியும்.
The Life Divine படிப்பது யோகம்.
ஜீவனோடு படிப்பதே படிப்பது.
படிப்புக்கு ஜீவன் தருவது அறிவில்லை; ஞானம்.
இப்படிப்பு ஞான சித்தியாகும்.
31. மரணபயத்தை விலக்குவது.
வயதான பின்னரே மரணம் நினைவு வரும்.
சௌகரியமாக வாழ்பவர்க்கு அது குறைவாக வரும்.
பிரபலமாக, அன்பான குடும்பத்தில் வெற்றிகரமான வாழ்வை நடத்துபவர்க்கு மரணம் நினைவு வாராது.
30 வயதிலும் மரணம் பயம் காட்டும் நபர்கள் உண்டு.
கடமைகள் பாக்கியாக இருந்தால், நிலையில்லாத வாழ்வை நடத்தினால்,
பல தில்லுமுல்லுகளால் காரியங்கள் நடந்திருந்தால், மற்றவர் இறந்து போகும் எண்ணம் மேலிட்டால் மரணம் பயம் தரும்.
பயமே சுபாவம் என்பவருக்கு எந்த வயதிலும் மரணம் பயம் காட்டும்.
இந்த பயம் உள்ளவர் இதை விலக்க முடியுமா?
அவர் அன்னையை அறியாதவரானால், அறிந்தவுடன் பயம் பெரும்பாலும் மறைந்துவிடும்.
அன்னையை அறிந்தபின் உள்ள பயம் சொல்லும் செய்தி வேறு :
இவரே இந்த பயத்தை பிடித்துக்கொண்டு விடமறுக்கிறார்என அன்னை கூறுகிறார்.
நம்செயலை அன்னை செயலாக மாற்றினால் மரணபயம் குறைந்து மறையும்.
இதற்காக நாம் படித்த முறைகளை நினைவுகூர்ந்தால் 50க்கு மேல் நினைவில் வரும்.
எந்த முறையும் முழுப்பலன் தரும்.
காணாமற்போன பொருளை நாம் தேடுவதற்குப்பதிலாக பிரார்த்தனையால் பெறுவது அன்னை செயலாக நம் செயலை மாற்றுவது.
வயிற்றுவலிக்கு 20 மாத்திரை கொடுத்தால் வலி 15 மாத்திரையில் நிற்பது, அந்த அளவு செயல் நம்மிடமிருந்து அன்னைக்கு மாறுவது.
வழக்கமாக வரும் படபடப்பு பாதி குறைவது அது போன்றது.
செயல் நம்மிடமிருந்து அன்னைக்கு மாறும்பொழுது மரணபயம் குறையும்.
தொடர்ந்து ஆர்வமாக, நம்பிக்கையுடன் நன்றியெழத் தொடர்ந்தால் பயம் போய்விடும்.
போன பயம் பின்னணியிலிருக்கும். பயம் போனால் காரியம் கூடிவரும்.
பின்னணியிலுள்ள பயமும் போனால் பயமிருந்ததே நினைவுக்கு வாராது.
காரியம் வாய்ப்பாக மாறும்.
வாய்ப்பு இனிய, பெரிய, பிரபலமான வாய்ப்பாகும்.
பயம் மறந்து, பலனும் மறந்து, எதுவும் நினைவில்லையெனில் அன்பராக மனம் மாறியதாகப் பொருள்.
32. சமர்ப்பணத்தை ஜீவனின் சிகரத்தில் ஏற்பது.
சமர்ப்பணமான வாழ்வைவிட ருசியானது இல்லை என்கிறார் அன்னை.
சமர்ப்பணம் உயர்ந்தது. நமக்கு சமர்ப்பணம் எது?
குழந்தைக்கு அ, ஆ, இ, ஈ என்பது படிப்பு. நமக்கு புத்தகம் படிப்பது படிப்பு.
சமர்ப்பணத்தின் எளிய உருவம் பிரச்சினை தீர்ப்பது. அதற்கு அன்னையிடம் சொல்வது சமர்ப்பணம்.
மனிதரிடம் சொல்லாதே, மதரிடம் சொல்லுஎன்பது சமர்ப்பணத்தின் ஆரம்பக் கட்டம்.
வாழ்வில் சிரமம், வாய்ப்பு, கடமை, அறிவு, உணர்வு, செயல், சிறிய சாதனை, பெரிய காரியம், யோக சாதனைஎனப் பல கட்டங்களுண்டு. சிரமம் விலகச் செய்யும் சமர்ப்பணம் எளியது.
படிப்படியாக உயர்ந்து முடிவான கட்டத்தில் யோகசாதனைக்கு வருகிறோம்.
அங்கும் பல கட்டங்களுண்டு.
எண்ணம் ஓடுவது நிற்பது, சிந்தனைக் கரைவது, மனம் அழிவது, உணர்ச்சி அமைதியாவது, நினைவு குறுக்கிடாதது, செயல் முடிவது, சுபாவம் கட்டுப்படுவது, கட்டுப்பட்ட சுபாவம் கரைவது, பிறர் நினைவு தெரிவது, பிரபஞ்சம் தெரிவதுஎன சத்புருஷன் தெரிந்து, பிரம்மம் தெரியும்வரை சமர்ப்பணம் பல கட்டங்களிலுள்ளது.
நம்சமர்ப்பணம் எந்த உச்சிக்குப் போயுள்ளதுஎன நமக்குத் தெரியும். மழை கேட்டால் வருகிறது, பணம் கேட்டால் பலிக்கமாட்டேன் என்கிறது என்றால் சமர்ப்பணத்தின் சிகரம் நமக்குப் பணம்என்று புரிகிறது.
எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்தால் நிற்கிறது, எதிர்பார்ப்பு கட்டுப்பட– வில்லையெனில், அதுவே சிகரம்.
மௌனம் பலிக்கிறது, திருஷ்டி கிடைக்கவில்லை;
ஞானம் பலிக்கிறது, பிரபஞ்சம் தெரியவில்லை;
பழைய பாக்கி சமர்ப்பணத்தால் வருகிறது, மார்க்கட் விரிவது முடியவில்லை;
மார்க்கட் அளவுகடந்து பெருகுகிறது, இலாபம் வரவில்லை;
பணம் பிரவாகமாக வருகிறது, பிரபலம் கிட்டவில்லை;
Charles Dickens பிரபல ஆங்கில ஆசிரியர். அவர் புகழ் உச்சாணிக்– கொம்புக்குப் போனபின் David Copperfield என்ற நாவலை எழுதினார்.
புகழ் மேலும் உயர்ந்தது. ஆனால் புத்தகம் அந்த அளவு விற்கவில்லை.
காந்திஜீயால் குண்டர்கள் மனத்தை மாற்ற முடிந்தது, ஜின்னா மனம் மாறவில்லை;
என்மனைவி நான் கூறுவதை அப்படியே ஏற்பாள், பிள்ளைகள் சட்டை– செய்வதில்லை;
உலகமே என்பேச்சை தலைமேல் தாங்கும், கணவன் மறுப்பார்;
தியானம் சிறப்பாக இருக்கும், ஆனால் தானே வாராது;
தியானமும் என்னைத் தேடிவரும், ஆனால் புல்லாங்குழல் கேட்பதில்லை;
வேணுகானமும் கேட்கிறது, அசரீரி (inner voice) பலிப்பதில்லை;
அனைவரும் கட்டுப்படுவர்; ரிக்ஷாக்காரன் அடாவடி, கட்டுப்படுவதில்லை என்பன நாம் அறிந்த நிலைகள்.
கட்டுப்படாதவைக் கட்டுப்பாட்டால் கட்டுப்படும்.
அவற்றைப் பிரச்சினை, வாழ்வு, வாய்ப்புகளிலிருந்து விலக்கி உள்ளே மௌனம், திருஷ்டி, ஞானம்என மாற்றலாம்.
மாறும் நிலைக்கு முடிவுண்டு.
மௌனம் அதுபோல் திருஷ்டியானால், ஒரு வினாடி நிலைக்கும். அதேக் கட்டத்தில் சமர்ப்பணத்தை நிறுத்த வேண்டும்.
மீண்டும் சமர்ப்பணத்தைக் கீழே மௌனத்திற்கோ, சிந்தனைக்கோ
கொண்டுவரக்கூடாது.
இது நம்சமர்ப்பணத்தின் சிகரம்.
அதையும் எண்ணத்தால் சாதிப்பதைவிட நிஷ்டையில் சாதிக்கலாம்;
ஜீவனால் அடையலாம். எண்ணம் நின்று, நிஷ்டை சமர்ப்பணத்தை ஏற்பதைக் காணலாம். நிஷ்டை அடங்கி ஜீவன் எழுந்து சமர்ப்பணத்தைத் தாங்குவதைக் காணலாம்.
மனிதனுக்கு எண்ணம் உயர்ந்தது. தியானமெனும் நிஷ்டை எண்ணத்தைக் கடந்தது. ஜீவன் தியானத்தின் பின்னாலிருப்பது தெரியும். தியானம் மனத்தின் முயற்சி. ஜீவன் மனத்தைவிடப் பெரிய ழுமையுடையது.
அந்த உச்சியிலேயே அதிகபட்சநேரம் இருக்க முயல்வது இம்முறை.
33. எதையும் செய்ய முயல்வதைத் தவிர்ப்பது.
சர்வ ஆரம்பப்பரித்தியாகி என்பது பகவான் கூறிய சொல்.
(Non-reaction) எரிச்சல்படாமலிருப்பது பெரியக் கட்டுப்பாடு.
எந்த ரிஷியாவது இதில் தேறுவாராஎன்பது சந்தேகம்.
அதில் தேறுபவரும் எதையும் செய்ய முயலக்கூடாதுஎன்பதில் தேறமாட்டார்.
உடலுக்குப் பழக்கம், உணர்ச்சிக்கு ஆர்வம், அறிவுக்கு அபிப்பிராயம் உண்டு.
தாகத்திற்குத் தண்ணீர் குடிப்பது பழக்கம்; TV படம் பார்க்க ஆர்வம்;
பலர் பேசும்பொழுது நம்அபிப்பிராயத்தைக் கூறுவது மனிதச் சுபாவம்.
நம் செயல்கள் அனைத்தும் பழக்கத்தாலும், ஆர்வத்தாலும்,
அபிப்பிராயத்தாலும் நடக்கின்றன. இவை நம் கட்டுப்பாட்டிலில்லை.
நம்மை நாம் கவனித்தால், காலையில் ஆபீஸ் போகவேண்டும். இது கடமை.
இது நாமே முயன்று செய்வது.
காலை 9 மணிக்குக் கிளம்பவேண்டும்.
இதைச் செய்வதைத் தவிர்ப்பது கட்டுப்பாடானால் எப்படிச் செயல்படுவது?
நாம் ஆபீஸ் போகும் பழக்கத்தைத் தவிர்த்தால் மனம் அமைதியாகும்.
உள்ளிருந்து ஆபீசுக்குப் போ‘ என அன்னை உத்தரவளிப்பார்.
அதைக் கேட்டு ஆபீஸுக்குப் போவது அன்னை அனுமதியால் போவது.
போகாமலிருக்க முடிவு செய்தால் படபடப்பு வரும், பயம் வரும், வேலை போய்விடும்என்று தோன்றும். அதையும்மீறி பேசாமலிருந்தால் உள்ளிருந்து அன்னைகுரல் வாராது. என்ன செய்ய?
படபடப்பு அடங்கி, பயம் போகும்வரை பயிற்சி. பிறகு அமைதிவரும்.
அமைதி கனத்து, ஆழ்ந்து, செறிந்து, குரல் எழும்.
அதுவரை பேசாமலிருக்க வேண்டும்.
அது பலித்து, குரல் கேட்டு, ஆபீஸ் போனால், ஆபீசில் பெரிய செய்தி காத்திருக்கும்.
நாமே பழக்கத்தால் ஆபீஸ் போனால், அதற்குரிய பலன் அட்டண்டன்ஸ்.
கடமையால் ஆபீஸ் போனால் திறமை வந்து, பிரமோஷன் வரும்.
ஆர்வமாக ஆபீஸ் போனால், அடுத்த டிபார்ட்மெண்டிற்கு பிரமோஷனில் மாற்றல் வரும்.
அபிப்பிராயப்படி ஆபீஸ் போனால் அதற்கேற்ற பலன் வரும்.
அமைதியாகச் செய்தால் இப்பலன்கள் அதிகமாக வரும்.
அன்னை நினைவோடு செய்தால் நெஞ்சு அன்னையால் நிறையும்.
கடமை சேவையாக மாறி சமர்ப்பணமாகும்.
குரல் அன்னை எழுப்பினால், அன்னையின்அருள் நம்வாழ்வில் பூர்த்தியாகும்.
குரல் ஆழத்திலிருந்து வந்தால் உலகில் அன்னையின்எண்ணம் நம் செயலால் பூர்த்தியாகும்.
பழக்கம், ஆர்வம், ஆசை, அபிப்பிராயம், வேகம் விலகுவது மனிதன் மனத்திலிருந்து விலகுவது.
மனிதன் விலகினால் மனம் உயரும்.
மனம் உயர்ந்தால் மௌனம், திருஷ்டி, ஞானம், மூலம், முனிவர், ரிஷி, யோகி, தெய்வநிலை சித்திக்கும்.
இவற்றைக் கடந்தால் சத்தியஜீவியம் பலிக்கும்.
வாழ்க்கையில் இலட்சியமில்லாவிட்டால் யோக அம்சம் பலிக்கும்.
நான்‘ விலகினால் அன்னையின் கருவியாகி, அன்னையின் இலட்சியம் உலகில் நம் செயலால் பலிக்கும்.
இதுவே முடிவான discipline கட்டுப்பாடாகும்.
34. எரிச்சலைத் தவிர்ப்பது.
எரிச்சலைத் தவிர்க்க நினைத்தால் எரிச்சல் வரும்.
எரிச்சல் என்பது இயலாமை.
அறியாமை அறிவின் இயலாமை.
அவசரம் உணர்வின் இயலாமை.
சோம்பல் உடலின் இயலாமை.
அவற்றைத் தொட்டால் அவை பேசும் பாஷை எரிச்சல்.
ஞானம் உணர்வை அறிவோடு உணரவைக்கும்.
எரிச்சல் இயலாமையென மனம் அறிந்தால் எரிச்சல் குறையும்.
திறமையற்ற இடத்தில் திறமையைத் தேடினால் எரிச்சல் மறைந்து
இதமான எண்ணம் தோன்றும்.
உடல்நலம் குன்றியவர்க்கு உடல் தேறினால் எரிச்சல் குறையும்.
எளிய விஷயங்களில் எரிச்சல் ஏராளமாக வரும்.
புறப்படும்பொழுது மோட்டார்பைக்கில் பெட்ரோலில்லைஎன்றால் தாள முடியாத எரிச்சல் வரும்.
முன்யோசனை அவ்வெரிச்சலை அடியோடு அழிக்கும்.
எரிச்சல் வழக்கமாகப் பிறர் மீது வரும்.
குறை நம்மீது இருந்தால் நிறையுடையவர் மீது எரியும்.
இயலாமையும், முன்யோசனையும் பேர் அளவுக்கு எரிச்சலை விலக்கும்.
நாம் படும் எரிச்சல் வழக்கமாகச் சில இடங்களாக இருக்கும்.
அவற்றை இயலாமை, முன்யோசனை, நியாயம், பொறுமை, நாகரீகம்‘ ஆகிய கண்ணோடுக் கண்டால், ஆராய்ந்தால், அறிவு வளரும். நம் அறியாமையைக் கண்டு நாமே வியக்கும்படியாகும்.
மனம் புரிந்ததை உணர்வு ஏற்றால் 100% எரிச்சல் விலக வாய்ப்புண்டு.
தொடர்ந்த பயிற்சியால் 90 பங்கு விலகும்.
பயில மறுத்தால் கொஞ்ச நாள் கழித்து மீண்டும் எரிச்சல் வரும்.
எரிச்சல் குறைந்த நாட்களில் வாழ்வு சிறந்ததை அறிய முடியும்.
வாழ்வு சிறக்க எரிச்சலை விலக்குவது அவசியம்.
மனம் வளம்பெற அதைச் செய்வது மேல்.
ஆத்ம நலனுக்காகச் செய்வது அதிஉத்தமம்.
எரிச்சல் – பிரச்சினை.
பொறுமை – சிக்கலற்ற வாழ்வு.
சமர்ப்பணம் எரிச்சலை அழிக்கும் ஆன்மீக முறை.
பிறர் இனிக்கப் பழகும் நாகரீகம் எரிச்சலைத் தலைகீழே மாற்றும்.
எரிச்சல் அறிவை மழுங்கச் செய்யும்.
நிதானம் தீட்சண்யம் தரும்.
“Book of quotations”பொன்மொழிகள் நிறைந்த பல புத்தகங்கள் உள.
அவற்றுள் எரிச்சலைப் பற்றிப் பெரியவர்கள் சொல்வதைப் படிப்பது உதவும்.
சமமான திறமையுடையவருள் எரிச்சல் பேர்வழி, நிதானமானவர் எனத்
தேர்ந்து, அவர்கள் வாழ்வை ஆராய்ந்தால் பலன் உண்டு.
எரிச்சலால் கெட்டுப்போன காரியங்களை நினைவுகூறலாம்.
பொறுமையால் சாதித்தவற்றை நினைவுபடுத்திப் பார்க்கலாம்.
நாகரீகம் வேண்டும்; நலத்தை நாட வேண்டும்; நல்லவர் நட்பு தேவை எனில்
எரிச்சல் கூடாது.
எரிச்சலுக்கு எதிரானது ஏற்றம் தரும்.
எரிச்சல் அன்னைக்குப் பிடிக்காது.
பகவானும், அன்னையும் எரிச்சல் பட்டதில்லை.
வயிறு குளிர வேண்டும்; எரியக்கூடாது.
35. ஆழத்தில் ஜீவன் விழைவது கிடைக்கும்.
ஆழத்தில் அனைத்தும் உள்ளன.
அங்குக் கேட்டுப் பெற ஒன்றில்லை.
கேட்டால், கேட்டது கேட்டபடி கிடைக்கும்.
நாம் ஆழத்திலில்லை.
எப்படி ஆழத்தை அடைவது.
ஒரு பெரிய நாய் துரத்தும்பொழுது ஓடுபவன் எதை நினைக்கிறான் – ஓடித் தப்பிக்கமட்டுமே அவனுக்கு நினைவுண்டு.
முதன்மந்திரி வலம் வரும்பொழுது உன்னைக் கண்டு, நின்று, அழைத்துப் போய் மந்திரி சபையில் சேர்க்க முடிவு செய்தால், வேறு எது நினைவு வரும்?
ஆபத்தும், ஆனந்தமும் ஆழத்திற்குப் போய் அனைத்தையும் மறந்து விடும்.
அன்னை ஆபத்தையும், ஆனந்தத்தையும் கடந்தவர். அப்படி அன்னையை நினைத்தால் உலகம் மறந்து, பரவசம் எய்தும் நேரம், ஆழத்தின் வாயில் திறக்கும்.
திறந்த வாயினுள் நுழைந்த மனிதன் திரும்பிப் பார்க்காமல் சென்றால் ஆழத்தின் வாயில் திறக்கும்; வாயிலைத் திறக்கலாம்.
நுழையவும் முடியும். திறந்த வாயிலே குரல் கொடுத்து அழைக்கும். மனிதன் திரும்பாமல் செல்வது மனத்தின் முடிவு.
வாயில் திறப்பது அருள்.
உள்ளே நுழைவது அருள்.
திரும்பிப் பார்க்காமல் நெறியாகச் செல்வது நம்பிக்கை, பக்தி, உறுதி.
உறுதியுடையவர்க்கு உயர்வு உறுதியாகக் கிடைக்கும்.
பெரிய விஷயத்தில் முயல்வது பெருநெறி.
எங்கு முயன்றாலும் பலன் ஒன்றே.
முடிந்த இடத்தில் முயன்றுபெறுவது வெற்றி.
பெற்ற வெற்றி பெரியதற்கு வழிசெய்யும்.
வாயிலைக் கடந்தபின் வாழ்வின் ருசி இழுக்கும்.
அருள் மேலே அழைக்கும்.
கீழே போக விரும்புபவனை அருள் தடுக்காது.
அருள் அதையும் செய்ய பூர்வஜென்மப் புண்ணியம் தேவை.
எப்பொழுதாவது நம்செயலை இறைவன் ஏற்றிருந்தால் அருள் அதையும் செய்யும்.
அந்த அருளும் அதை அனுதினம் செய்யாது.
மனிதன் இறைவன்.
இறைவன் பெற்ற சுதந்திரம் இவனுக்கும் உண்டு.
சுதந்திரத்தை இழக்கும் சுதந்திரத்தை மனிதன் நாடுவது அவன் பிரம்ம உரிமை.
அது குதர்க்கம்.
குதர்க்கம் தன்னையழித்துக்கொள்ளும் உரிமையை நாடினால், அதன் உரிமையைத் தடுக்க ஒரு சக்தியில்லை.
விகல்பமும், குதர்க்கமும் தவிர மற்ற அனைத்திற்கும் அருள் உண்டு.
அருள் ஆழத்திற்கு அழைத்துப் போகும்.
ஆழம் அனைத்துமுடையது; அருளும் உடையது.
அருள் கேட்காமல் செயல்படுவது.
36. நினைவைக் கடந்து செல்வது.
நினைவே மனிதன்.
நினைவு என்பது மனம்.
நினைவு நெஞ்சமாகவுமிருக்கும்.
நினைவு கண்டது, கேட்டது, அனுபவித்ததைப் பதித்திருக்கும்.
நாம் இதுவரை அனுபவித்தது இனி வரப்போவதில்லை.
இனி வரப்போவது இதுவரை நம் வாழ்விலில்லாதது.
அன்னை தரப்போவது இதுவரை அவனியிலில்லாதது.
நமக்கு வேண்டிய எதுவும் நினைவுக்குள்ளில்லை.
அதனால் நினைவைக் கடந்து செல்லவேண்டும்.
காற்றைக் கையில் பிடிப்பது, மௌண்ட் ரோடில் போகும் போக்குவரத்தை நிறுத்துவது, பெய்யும் மழையைத் தடம் மாறி பெய்யச் சொல்வது, பிறர் நம்மைப் பற்றி நினைப்பதை நாம் நிர்ணயிப்பது, மழைக்குமுன் எழும் ஈசல் கூட்டத்தை கையால் தட்டி விலக்குவது போன்றவை நினைவைக் கடப்பது.
இது முடியாத ஒரு முறையானால், ஏன் அதைக் கூற வேண்டும்?
முடியாதுஎன்பது உண்மை. அது முடியக்கூடிய முறையுண்டு என்பதும் உண்மை.
தானே எழும் நினைவு கட்டுப்படாது.
நாமே விரும்பி, கடந்ததை நினைவுகூர்ந்து, அதை நினைத்துப் பேசி, முறையிட்டு இரசிப்பதை நிறுத்த முடியும்; அது கட்டுப்படும். தியானத்தில் நினைவு நிற்கும்.
தியானத்தை மேற்கொண்டால், நினைவைக் கடந்து செல்ல முடியும்.
அன்னை நினைவு, நம் நினைவைக் கடந்தது.
ஏதோ ஒரு முறையால் நினைவைக் கடந்துவிட்டால் அன்று நடப்பவை புதியதாக இருக்கும்.
1) அன்று பிரச்சினைகளிருக்கா.
2) புதிய வாய்ப்புகள் வந்தபடியிருக்கும்.
இந்த அனுபவத்தைக் கண்டவர் நினைவைக் கடக்கும் பல கட்டங்களை அறியலாம். அவை,
- ஓடும் எண்ணங்கள்,
- நாமே எழுப்பும் எண்ணங்கள்,
- உறுத்தலான கருத்துகள்,
- குற்ற உணர்வின் குறைகள்,
- ஆழ்ந்த அபிப்பிராயங்கள்,
- வெறுப்பான விருப்புகள்,
- சுபாவத்திற்குரியவை,
- ஆழ்மனம் ஏற்ற அகன்ற கருத்துகள்.
இவற்றைக் கடந்து செல்லும் முறையொன்றே.
நிலைக்கேற்பத் தீவிரம், ஆழம் தேவை.
நம் எண்ணம் நிறைவேற, பூரணமாகிப் பொலிவு பெற, இம்முறை ஒரு பொன்னான வழி.
- இதை ஆரம்பிக்க முடியாது.
தீவிரமானவர்க்கே இது பலிக்கும்.
முதற்கட்டம் பலித்தால், முடிவுவரை பலிக்கும்.
முயற்சி இன்றியமையாதது.
ஒவ்வொரு கட்டத்திற்கும் உரிய முயற்சியைத் தவறாது மேற்கொள்ள வேண்டும்.
எளிமையாகத் தோன்றும், சிறப்பான முறையிது.
ஏன் இதற்குச் சிறப்புண்டு?
மனிதன் மனத்தாலானவன்; மனம் நினைவாலானது.
எனவே நினைவே மனித ஜீவனின் ஆன்மீக மையம்.
37. ஆழ்ந்த உறுத்தலை ஆராய்ச்சியால் கரைப்பது அல்லது எரிச்சல்படாமல் இருந்து அழிப்பது.
உறுத்தல் என்பது உள்ளபடி உறுத்தலில்லை. நாம் ஆழ்ந்து, விரும்பி எடுத்துக்கொள்ள வேண்டிய கருத்தாகும். அதை நாம் எதிர்ப்பதால் உறுத்தல் எழுகிறது.
உள்ளபடி உறுத்தலுக்கு உலகில் ஒரு விஷயமில்லை.
நம் குறையை ஒருவரிடம் கூறியபொழுது அந்த விஷயம் மனதில் உறுத்தலாக மாறுகிறது.
உறுத்தல் நம் இயலாமை.
உலகில் நம் நிலைமை குறைவாக இருப்பதை நாமே உணரும் நிலை உறுத்தல்.
நமக்கு அவை பிடிக்கவில்லை, ஏற்கமுடியவில்லைஎன்பதால் அது உறுத்துகிறது.
நான் விரும்பிய பெண் வேறொருவனை விரும்புகிறாள்என்பது உறுத்தல்.
நம்குடும்ப இரகஸ்யம் எவருக்குத் தெரியுமோ, அவர் நினைவு உறுத்துகிறது.
நாலுபேர் எதிரில் மானம் போன நிகழ்ச்சி மனத்திற்கு உறுத்துகிறது.
குறை உறுத்துகிறது. குறையை விலக்கினால் உறுத்தலிருக்காது.
ஆராய்ச்சி பலன் தரும்.
அது குறையை விலக்கும்.
அது ஒரு குறையென்று, ஆயிரம் இடங்களில் தடை செய்கிறது.
குறையை அகற்றினால், ஆயிரம் விஷயம் தலைகீழே மாறும். அவசரப்பட்டுத் திருமணம் செய்து, நிதானமாக அனுபவிக்கிறான் என்பது சொல்.
இப்படி அவசரப்படுபவர், பணத்தை அவசரமாக நாணயமற்றவரிடம் கொடுப்பார்; வேலை செய்யாத டெக்னாலஜியை அவசரப்பட்டு வாங்குவார்; அவசரப்பட்டுத் தேவையில்லாத ஆப்பரேஷன் செய்வார்; அவசரமாகக் குறைந்த விலைக்கு மனையை விற்பார்.
ஆராய்ச்சி அவசரத்தை உணர்த்தும்.
அவசரமான சுபாவம் மாறாது.
அன்னையை ஏற்றால் அதுவும் மாறும்.
ஏற்கனவே அவசரப்பட்டுச் செய்த திருமணத்தில் புதிய நிலையெழுந்து சௌகரியம் எழும்;
நாணயமற்றவரிடம் கொடுத்த பணம் வரும்; டெக்னாலஜி வேறொரு காரணத்தால் வேலை செய்ய ஆரம்பிக்கும்; செய்த ஆப்பரேஷன் நல்ல பலன் தரும்; குறைந்த விலைக்குப் போன மனைமூலம் வேறு ஒரு ஆதாயம் வரும்.
அவசரம் போய் பொறுமை வரும்.
இது உலகில் நடக்காதது.
அன்னையிடம் மட்டும் நடக்கும்.
அன்னையிடம் நடக்காதது இல்லை.
அவசரமும் நிதானமாகும்.
அவசரம் நிதானமானபின் வாழ்வு உயரும்.
நாமிருந்த நிலையைவிட்டு நாம் நுழைய முடியாத உயர்வுக்கு வருவோம்.
அவசரத்தை ஆராய்ந்ததுபோல் ஆராய ஆயிரம் உள்ளது.
சிலவற்றை ஆராய்ந்தாலும் பெரும்பலன் கிடைக்கும்.
ஆராய்ச்சி தெளிவு தரும்.
தெளிவு தெம்பு தரும்.
நம்இலட்சியம்: வந்த வாய்ப்புகளெல்லாம் பலித்து, உள்ள பிரச்சினை
எல்லாம் வாய்ப்பாக மாறி, நம் வாழ்வு அன்னை வாழ்வாக வேண்டும்.
அதன் அறிகுறியாக ஒரு பெரிய நல்லது நடக்கும்.
அப்படி நடந்தால் நாம் அதுவே முடிவுஎனத் திளைப்போம்.
அதுவே ஆரம்பம்என்பது உண்மை.
ஆதாயத்தையும் அன்னைக்காகத் தேடுவது நல்லது.
அன்னையை அன்னைக்காகத் தேடும் மனநிலை, மனத்தைக் கடந்த உயர்ந்த நிலை.
உலகம் உயர்ந்ததாகக் கருதும் நிலையைக் கடந்த நிலை அன்னை நமக்களிப்பது.
அது பணத்தால், பதவியால், பிரபலத்தால் பெற முடியாதது. பெறமுடியாததைப் பெறமுடியும் நிலை பெரிதன்றோ!
பெரியது உயர்ந்தது, உன்னதமானது.
38. உயர்ந்த வலிமையை உயர்த்துவது.
பேச்சுத்திறன், நிர்வாகம், பொறுமை போன்றவை சிலருக்கு உயர்வாக அமையும்.
பொறுமை ஒருவருக்கு வலிமையாகவுள்ளதுஎனில் அதை உயர்த்துவது இம்முறை.
வலிமையாகவுள்ளதுஎனில் மற்றவர்களைவிட வலிமையாகவுள்ளதுஎனப் பொருள்.
எவருக்கும் பொறுமை 10%க்குக் குறைவாக உள்ள இடத்தில் ஒருவர் பொறுமை 20% இருந்தால் அவரைப் பொறுமையின் பொக்கிஷம் என்பர். ஆனால் பொறுமையின் தரத்தைக் கருதும்பொழுது இவர் பொறுமை 80% குறைவாகவுள்ளது. இந்த 80%ஐ 1% உயர்த்துவது நடவாதக் காரியம். ஏனெனில் இந்தப் பொறுமையே நம் முழுமுயற்சியாலானது. 90 மார்க் வாங்கும் பையன் 93 வாங்க முயன்றால் அது 89 ஆவது அனுபவம். கலெக்டருடன் நெருங்கிய நண்பர் மேலும் நெருக்கத்தை
உயர்த்த முயன்றால், ஒரு டெபுடி கலெக்டரிடம் அதிகத் தொடர்புகொள்ள முயன்றால், அங்கு ஆபீஸுக்குள் உள்ள கட்சி வெளிவரும். கலெக்டர் வேண்டியவர் என்பதால் டெபுடி கலெக்டர் முகம் கொடுத்துப் பேசமாட்டார். பொறுமையை உயர்த்த முயன்றால், நேற்றுப் பொறுத்துக் கொண்டவைகளை இன்று பொறுக்க முடியாதுஎனக் காண்போம். இதற்கு வழியுண்டா?
90 மார்க் மனப்பாடம் செய்து வாங்கியிருந்தால், பாடத்தைப் புரிந்து கொள்ள முயன்றால், அடுத்தது 97 மார்க் வரும். கலெக்டரிடம் பழகுபவர் மேலும் சற்று அடக்கமாக இருக்க நினைத்தால், கலெக்டர் வேண்டியவர் என்ற பெருமையோடு பேசுவதைக் குறைத்தால், டெபுடி கலெக்டர் தாமே வந்து பழகுவார். பொறுமையைக் கட்டுப்பாட்டால் அதிகப்படுத்த முயலாமல், அறிவால் உயர்த்த முயன்றால் அது 80லிருந்து 90க்குப் போகும்.
- பழைய முறை பகுதி.
- புதிய முறை முழுமை.
- எதை உயர்த்த வேண்டுமோ அதற்குள்ள அடிப்படையை வலுவாக்குதல் முறை.
படிப்புக்கு அடிப்படை புத்திசாலித்தனம்; பழக்கத்திற்கு அடிப்படை அடக்கம்; பொறுமைக்கு அடிப்படை நிலைமையைப் புரிந்துகொள்வது.
புத்திசாலித்தனத்திற்கும், அடக்கத்திற்கும், புரிவதற்கும் அடிப்படை மௌனம்.
மௌனம் உயர்ந்தால் அனைத்தும் உயரும்.
அதற்கு அடுத்தது ஜோதி.
அதையும் கடந்தது ஞானம்.
அதற்கடுத்தது தெய்வீகம்.
முடிவானது சத்தியஜீவியம்.
இவற்றை உயர்த்திப் பலன் பெறுவது யோகிக்குரியது.
நமக்குரியது வாழ்வு.
வாழ்வு சிறப்புப் பெற ஓர் அடி எடுத்துவைத்தால் போதும்.
அதுவே உள்ள வலிமையை ஒரு படி உயர்த்துவது.
ஒரு படியும் உயர்த்தலாம்; பல படிகளும் உயர்த்தலாம்.
நம்மால் முடிந்த அளவுக்கு உயர்வதே நம் கடமை.
அத்தனையும் மௌனத்திற்கு முந்தைய நிலைகள்.
மனம் உயர்வை நாடுவது உண்மையாக இருப்பதே அவசியம்.
மனம் அன்னையை நாடினால் உயர்வை நாடும்.
ஆன்மீகத்தில் சிறிய முயற்சி வாழ்வில் பெரிய பலன் தரும்.
யோகசக்தியை நல்வாழ்வுக்குப் பயன்படுத்துவதே கொள்கை.
நேரடியாக மௌனத்தை நாடினால், நம் முயற்சியின்றி வலிமை உயரும்.
அன்னையை அதிகமாக நாடினால் மௌனமும், அதன் பகுதியான
வலிமையும் தானே நம்மை நாடும்.
அன்னை நம்மை நாடும் மனநிலையை ஏற்பது நல்லது; அதைவிட உயர்ந்தது.
மனத்தைக் கடப்பதும் உயர்ந்த முறை.
முறைகள் பல; மூலம் ஒன்று.
மூலத்தை நாடுவது சிறப்பு.
அந்த மூலம் நாமேஎன அறிவது முறைகளைக் கடந்த சிறப்பு.
39. நடக்கும் என்பதால் நடத்திக் கொள்ளாதே.
பொதுவாக இதைச் சரியென நினைக்கத் தோன்றும்.
மாமியார் கேட்கவில்லை என்பதால் மருமகள் எந்தப் பொறுப்பையும் ஏற்காதது, அதிகாரி கண்டிக்கவில்லை என்பதால் ஆபீஸ் முடிய 1 மணி முன்னதாக வீட்டிற்குப் போவது, கடன் கொடுத்தவர் கேட்கவே இல்லை என்பதால் திருப்பிக் கொடுக்க வேண்டாம்என்பது நம் வாழ்வை அடுத்த தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரும்.
தலைவனாக இருக்க வேண்டியவன் தொண்டனாக இருப்பான்.
நம்மைப் போன்ற அனைவரும் அதிகாரம் செய்யும்பொழுது நாம் அடங்க வேண்டியிருக்கும்.
நட்பில், உறவில் எவற்றையெல்லாம் செய்யக்கூடாதோ அவற்றை தவறாது முனைந்து ஆர்வமாகச் செய்து ஆர்ப்பாட்டம் செய்தவருக்கு அந்த period திசை‘ முடிந்த மறுநிமிடம் எந்தப் பாதகத்தை எவருக்கும் செய்யக் கூடாதோ அவற்றை அனைவரும் ஒரே சமயத்தில் இவருக்குச் செய்தனர். ஸ்தாபனத் தலைவரிடத்திலிருந்து தொண்டருக்கும் கீழே போனார். 1/2 ரூபாயை மிச்சம் பிடிப்பதால் அனாவசியமாக ஒருவர் 11/2 மைல் நடக்க வேண்டியிருந்தது. அதையும் ஒருவர் 6 மாதம் செய்தார். நெடுநாள் கழித்து நேரடியாக சம்பந்தமில்லாதவர்க்கு கார், டிரைவர், செலவு தேவையில்லாமல் வருஷக்கணக்காகக் கொடுக்க நேர்ந்தது.
இன்று நடத்திக்கொண்டால், எதிரான காரியம் நாளை தானே தன்னை
நடத்திக் கொள்ளும். இது தவறாது.
- உயர்மட்டத்தில் பழகினால் நம்மை அடுத்த, அடுத்த கட்டத்திற்கு அனுப்பிக் கடைசியில் வாழ்வு வைத்துவிடும். அன்னையிடம் பலன் விரைவாக வரும். இதுவும் உடனே நடக்கும்.
- இது சரியான மனப்பான்மையில்லை. அதனால் மாறிக்கொள்வது சரி.
- எனக்கு நடக்குதே‘ என்பது அறிவுடைமையாகாது; அறியாமை ஆகும்.
- மாமனார் வீட்டு சௌகரியம், ஆபீஸ் விஷயம், கிளப் வாழ்வு, நண்பர் உதவி, உறவினர் பழக்கத்திற்கு இது நேரடியாக பாதகம் விளைவிக்கும்.
எவருக்கும் தெரியாமலில்லை. சௌகரியத்தை விடமுடிவதில்லை.
பிறர் பொருளைப் பெறுவது, சௌகரியத்தை அனுபவிப்பதைவிட பிறரை மட்டமாகப் பேசுவது மனிதன் இரசிப்பது.
திருப்பி பதில் சொல்லத் திராணியில்லாதவரைப் பேச வாய் துடிக்கும்.
அவர்கட்கு அது திரும்பி வாராமலிருக்காது.
நெல்லால் அடித்தால், கல்லால் அடி விழும்.
எல்லோரையும் துச்சமாகப் பேசுபவர் ஒருவரை, அவர் கடைக்கு வருபவர் அனைவரும் – சிறியவர் உள்பட – முருகேசா‘ எனப் பெயரிட்டு அழைக்கும் நிலை 1930இல் ஏற்பட்டது; தடுக்க முடியவில்லை.
நடக்கும் என்பதால் நடத்திக்கொள்பவரை உலகம், வாழ்வு
முடியும் என்பதால் அவமானப்படுத்துவர்.
ஆபீஸுக்கு வருபவர்களை நிற்கவைத்துப் பேசுவது அநாகரீகம்.
அவரை அவர் தகுதிக்கு மேற்பட்ட இடத்தில் உட்கார வைத்தனர்.
சந்தர்ப்பம் அந்த இடத்தையே எடுத்துவிட்டது.
எது சரியோ அதைச் செய்ய வேண்டும்; எது முடியுமோ அதை
முடியும் என்பதால் செய்யக்கூடாது.
40. மனத்தை அடிமையிலிருந்து விடுதலை செய். (உ.ம்.) பணத்திற்கு அடிமையாகாதே.
மனிதன் அடிமையாவதில் சிறப்புப் பெற்றவன்.
மண், பெண், பொன் அவனை அடிமையாக்கும்.
தாசி மடியில் படுத்திருப்பவனுக்கு தாயார் நினைவு வாராது.
மண்ணிற்கு மகத்துவம் வந்துவிட்டால் மனம் கல்லாகும்.
பொன் பொலிவு பெற்றது. அது எதிரிலிருந்தும் எவரும் கண்ணில் படுவதில்லை.
அடிமைத்தனத்தை ஆவலாக ஏற்கும் மனநிலை அடிமைத்தனத்திற்கு வலிமை தருகிறது.
பணத்தை உற்பத்தி செய்தது மனம்.
மனம் உணர்ச்சியைவிட உயர்ந்த கருவி.
உழைத்துச் சம்பாதித்தது உடல்.
உணர்ச்சி தோற்றத்தில் மகிழ்ந்து உடலையும், மனத்தையும் மறந்து தன் நிலையிழந்து பணவசப்படும் பரவசம் அடிமை.
அடிமைக்கு அவன் நிலை பூரணம் தரும்.
அவனை அவனிடமிருந்து எளிதில் காப்பாற்ற முடியாது.
உணர்ச்சி மட்டும் ஒருவனை வழிநடத்துமானால், அவன் அடிமையாகக்– கூடியவன்.
அவனுக்கு அறிவிருந்து தெளிவில்லாவிட்டால், அந்த அறிவு அடிமை நிலையில் உள்ள சௌகரியங்களை அவனுக்கு எடுத்து அறிவுறுத்தும்.
இவ்வழி உணர்ச்சி பணத்திற்கு அடிமையாகிறது;
மனம் உணர்ச்சிக்கு அடிமையாகி,
அடிமை நிலையை அசைக்க முடியாததாக்கும்.
இது பலர் நிலை.
இந்நிலையிலுள்ளவருக்கு கதிமோட்சம், விடுதலையில்லை.
அவர்கள் அறிவின் துணைகொண்டு உணர்ச்சியின் பிடியிலிருந்து மீள வேண்டும்.
தத்துவமாகப் புரிந்து, நடைமுறையாகச் செயல் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
புரிவது எளிது; புரியப் பிரியப்படுவது அரிது.
புரிந்தவுடன் நாம் பணத்திற்காக அலைவது குறையும்.
புரிந்ததை மனம் ஏற்றால் 40 முறை நாம் நாடிப்போன பணம் 4 முறையாவது நம்மை நாடிவரும்.
கடன் கொடுத்து மார்க்கட்டைப் பிடித்தது மாறி, டெபாசிட் கொடுத்து சரக்கு வாங்கும் நிலை எழும்.
இது திருவுருமாற்றம்.
பெண்ணென அலைந்தது போக, பல வரன் நம்மைத் தேடி வரும்.
சற்று மாறியவுடன் மனம் மீண்டும் பழைய நிலையை நாடும்.
போக்கைக் கண்டபின் மனம் மாறாமலிருப்பது உறுதி.
நிலை மாறினால் உலகம் உன்னை நோக்கி மாறும்.
அன்பருக்குள்ள அனைத்து அருளும் செயல்படத் தேவையான பல மனநிலைகளுள் இது முக்கியமான ஒன்று.
41. பிடி கொடுக்காமல் பேசுவதைத் தவிர்.
பிடி நம் கையில் இல்லாவிட்டால் வாழ்வு தெளிவுபடாது.
எந்த பேரத்திலும் இரு சாராரும் தங்கள் பிடியை விடாமல் பேசுவர்.
கர்மம் செயல்படும் வாழ்வுக்கு அது சட்டம்.
அருள் செயல்படும் உயர்ந்த வாழ்வுக்கு பிடியை நாமே விட்டுக்கொடுப்பது சட்டம்.
பிடி என்றால் என்ன? வரையறைக்குட்பட்ட வாழ்வுக்குரியது பிடி.
பேச்சு எழுத்திலில்லாவிட்டால் பொய் சொல்ல வாய்ப்புண்டு.
அதனால் எழுத்து அவசியம்; அது பிடி.
அப்படிப்பட்ட பிடியை இரு முறை இரண்டு பேரிடம் விட்டுக்கொடுத்ததால் 1/2 பங்கு இலாபம் என்ற பேச்சு முழுச் சொத்தாகவும், 1/3 பங்கு லாபம் முழுச் சொத்தாகவும் மாறியது.
பிடியை விடாவிட்டால் உள்ளது கிடைக்கும்.
பிடியை வலிமையிருந்து பண்பாக விட்டுக்கொடுத்தால் உபரியாக வரும்.
கணவன் மனைவியிடையே இருவரும் பிடியைப் பாராட்டாவிட்டால் வாழ்வு மனம் நிறைந்த வளமாக இருக்கும்.
NPT (Nuclear Proliferation Treaty) அணுகுண்டு பரவுவதைத் தடுக்கும் ஒப்பந்தம்: அமெரிக்கா எவரும் அணுகுண்டு தயாரிக்கக்கூடாதுஎனக் கேட்கிறது. ஆனால் தான் மட்டும் அந்தச் சட்டத்திற்கு உட்படாதுஎன்று கூறுகிறது. இது பிடியை விடாமல் செய்யும் பேரம்.
“அனைவரும் எல்லா அணுகுண்டுகளையும் அழித்துவிட்டு இனி அவற்றைத் தயாரிக்கமாட்டோம்” என்று முடிவு செய்யக் கேட்பது அறிவுடைமை; பிடியை விடுவதன்று. பிடியை விடுவது என்றால், குருஷேவ் “ரஷ்யா அணுசோதனை செய்யாது” என தானே செய்த முடிவு பிடியை விடுவது.
வட்டிக்கடைக்காரன் சொத்து வாங்கும்பொழுது விற்பவனை “எனக்கு இந்த விலைக்கு விற்கச் சம்மதிப்பதாக” எழுதிக் கேட்பான். ஒப்பந்தம் இருவரும் பொறுப்பேற்கவில்லையெனில் செல்லாது. பணம் பேசுகிறது.
அது உன் பிடியை என்னிடம் கொடு‘ எனக் கேட்டது.
இன்று போய் நாளை வா என்பது பிடியை விடுவது.
பிள்ளைவீட்டார் எதுவும் கேட்காதது பிடியை விடுவது.
இதன் பலனை அனுபவிப்பவர் நன்றியை உணராமல் இப்பொழுதெல்லாம் எவரும் எதுவும் கேட்பதில்லை‘ என்பது பிரச்சினையை உற்பத்தி செய்வது.
பிடியை விடுவது சரி.
அதைப் பாராட்டுவது அவசியம்.
எவரிடமும் பிடியை விட்டுக்கொடுப்பவரிடம் எல்லோர் பிடியும் தானே வந்து சேரும்.
சமர்ப்பணம் என்பது நம் பிடியை விடுவதாகும்.
42. வெட்கப்படக்கூடிய காரியங்கள் மீது ஆசைப்படாதே.
ஆசை எழுவது வெட்கப்படக்கூடியதின் மீதே எழும்.
அதனால் ஆசை வெட்கமறியாது‘ என்றனர்.
தன்னைப் போன்ற மாமன் மகளை உன் வீட்டை எனக்குக் கொடு‘ எனப் பல்கலைக்கழக ஆசிரியர் கேட்டார்.
தொழில் ஆரம்பித்து மானேஜரை நியமித்தவுடன் இத்தொழிலை எனக்கே கொடுங்கள்‘ என்றார் ஒரு புண்ணிய ஆத்மா.
2 வீடு பெற்றுள்ள பேராசிரியர் வீடில்லாத பள்ளி ஆசிரியரை நீங்கள் வாங்கிய வீட்டை என் நண்பருக்குப் பரிசாகக் கொடுங்கள்‘ என்றார்.
என்னைப் பிரதமராக்குங்கள்‘ என்றார் ஒருவர்.
சினிமா நடிகையை மணக்கக் கனவு காணும் கிராமத்து இளைஞர்கள் உண்டு.
இவற்றைச் சொல்ல வெட்கப்படுபவர் உண்டு, வெட்கப்படாதவருண்டு.
பரம்பரையாக ஏழ்மையாக இருந்தவருக்கு இந்த எண்ணம் தோன்றும். ஏழ்மையுடன் தன் ஜாதியால் தன்னை உயர்வாக நினைப்பவர் வெட்கமில்லாமல் கேட்பார். கேட்பதுடன், எனக்கு நீ இந்தச் சேவை செய்வது உனக்கு நான் செய்யும் ஆசீர்வாதம்‘ எனவும் வாய்விட்டுக் கூறுவார்.
மனிதன் என்ற நிலைக்கு வரமுடியாதவர் மனநிலையிது.
நம்முள் ஓரளவு இருக்கலாம். இருந்தால் அதைக் களைவது உத்தமம். திருவுருமாற்றுவது யோகம்.
10 ரூபாய் கடன் பெற நகையை அடைமானம் வைக்க 10 நடை நடந்தவருக்கு 1000 ரூபாய் லோன் அவர்கள் ஊரில் கொண்டுவந்து கொடுத்த பாங்கை ஏன் எங்கள் வீட்டில் கொண்டுவந்து கொடுக்கக் கூடாது?’ என்று கேட்டார்.
இலஞ்சம் வாங்குபவன் நான் செய்யும் சலுகைக்குப்பதிலாக பெறுவது இலஞ்சம் என்பார்.
கொஞ்ச நாள் கழித்து அவன் தன் மனத்தைச் சோதித்தால் யாரிடம் பணமிருந்தாலும் அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும்என நினைப்பது தெரியும்.
வழக்கமாகக் கடன் பெறுபவரும் அப்படிப்பட்ட மனநிலையுள்ளவரே. தன்மானம், கௌரவம் மனதில் ஏற்பட்டால் இவை அழியும். நான் ஒரு மனிதன், எனக்கு ஒரு கௌரவம் உண்டு என்பது தன்மானம்.
எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்பவர் இப்படித்தான் வாழவேண்டும் என்று முடிவு செய்தால் தன்மானம் எழும்.
அதற்குப் பிறர் வெட்கப்படக்கூடியதைச் செய்யும்பொழுது நம் மனம் அதைக் கண்டிக்க வேண்டும்; அதற்கு வெட்கப்பட வேண்டும்.
இவற்றை நாம் நம்வீட்டில் ஆரம்பிக்க வேண்டும்.
நாம் செய்வது கால் பங்கு என்றால் வீட்டார் செய்வது முக்கால் பங்காக இருக்கும்.
நாம் செய்வதை அறவே அழித்துவிட்டு நம்வீட்டார் செய்வதை நாம் செய்வதுஎன ஏற்றுக்கொண்டால் வழி பிறக்கும்.
நெறி உயர்ந்தது, கடுமையானது.
மனம் உயர்ந்தவர்க்கு இயல்பானது; மனம் தாழ்ந்தவர்க்குக் கடுமையானது.
வாய் ஓயாமல் பேசுபவரைப் பேசாமலிருக்கச் சொன்னால் தலை வெடித்துவிடும்.
முறை பெரியது; செய்தால் பலிக்கும்.
பலிப்பது பெரிய விஷயம். பலிப்பது விஷயமன்று; அன்னை.
மனம் நெறியை ஏற்றுப் போற்ற வேண்டும்.
இவையெல்லாம் எனக்கில்லை என்பவருக்கு இவை பலிக்கவே பலிக்கா.
43. ஆபத்தை அறைகூவி அழைக்காதே.
குரங்கு ஆப்பைக் கழற்றி அவதிப்பட்டது கதை.
அதைச் செய்யாமலிருக்க, குரங்கால் முடியாது.
இதையே நாம் தவறாமல் செய்வதை நாமறிவதில்லை.
ஊரை ஏமாற்றிச் சொத்துச் சேர்த்தவனை நாடி பெருந்தொகையை வியாபாரத்தின் பேரில் கொடுத்தவர், தான் செய்ததை அறியார்.
உதவியைக் கெஞ்சி கேட்பவரும் உதவி பெற்றபின் நமக்கு ஊறு செய்ய முடியும் என்று தோன்றுவதில்லை. எது எப்படியானாலும் நிலைமை மாறி நாம் ஒருவருக்கு அடங்க நேரிட்டால், அவரால் நமக்குத் தீங்கு செய்ய முடியும் என்றால் அவருக்கு உதவக்கூடாது என்பது விவேகம். இந்த விவேகமற்றவர் உதவியால் உபத்திரவம் பெறுவர்.
இது ஆபத்தில் மாட்டிக்கொள்வதுஎனத் தெரிவதில்லை.
இது கருதி பிறன் கையிற் கொடுத்த பேதை‘ என்றனர் இப்படிப்– பட்டவரை.
மனிதனை நம்பாமல் நிலைமையை நம்புவது உலக ஞானம், விவேகம்.விவேகமில்லாதவர் பெரிய உதவிசெய்ய முன்வரக்கூடாது