உள்ளிருந்து எழுவதைக் காணலாம். “நடுக்காட்டில் என்னை இரு ரௌடிகள் கொல்ல வந்தனர். என்ன செய்வது என அறியாமல் அவர்களை உற்று நோக்கினேன். பார்வையை அவர்கள் தாழ்த்தி, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு மனம் மாறி மௌனமாகத் திரும்பினர் என எழுதியவர் அன்னை இவ்வாறு செயல்படுவதைப் புரிந்து கொள்ளும் நேரம் இச்சக்தி அவருள் பிரவாகமாக எழுந்தது. “நான் அனாதை. எனக்கு எவரும் இல்லை. என் உதவிக்கு நான் யாரையும் கூப்பிட முடியாது. அவசர நேரம். அதையும் கேட்டுக் கொள்ளும் காதுள்ளவரில்லை என்று நினைத்த பொழுது, அன்பு, ஆதரவு, பரிவு, பாசம் வெள்ளமாக வந்து பணம், சாப்பாடு, உபசாரம், உதவி, பிரியமாகப் பொழிவதைக் கண்டு, எனக்கும் அன்னை இருக்கிறார் என்றறியும்பொழுது பீறிட்டெழும் அன்னை சக்தி கேட்காத காதைக் கேட்க வைக்கும். பார்வையில்லாத கண்ணுக்குப் பார்வையை அளிக்கும். நம்பிக்கையில்லாத மனத்தில் நம்பிக்கை ஒளியை ஊட்டும். ஒரு முறை இதைக் காணுவது மாற்றத்தைத் தேடுபவர்க்கு இன்றியமையாதது, எந்தக் காரியத்தைத் சாதிக்கவும் தெம்பு, சக்தி வேண்டும் என்பது அனைவரும் அறிந்தது, இந்த மாற்றம் ஏற்பட்டால் குறைந்த பட்சம் 10 மடங்கு வருமானம் உயரும், அதிகபட்சம் நாம் குறிப்பிட்ட எல்லையை முயன்று பெறலாம் என்று சொன்னேன்.
குறைந்தபட்சம் 10 மடங்கு வருமானம் பெருக 10 மடங்கு அதிகத் தெம்பு வேண்டும். அது இருந்தால், இது பலிக்கும். இன்று அது போன்ற 10 மடங்கு அதிகத் தெம்பை உற்பத்தி செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும். இந்தச் சக்தி பெருகிவரும் வழிகள் பலவற்றை ஏற்கனவே எழுதியுள்ளேன், 10 மடங்கு உயர வேண்டுமானால், 10 மடங்கு உயர்ந்த குறிக்கோள் தேவை. எவ்வகை
இலட்சியமானாலும் அந்த இலட்சியம் இத்தெம்பை உற்பத்தி செய்யும், மனிதன் ( survival) வாழமுடியவில்லை, எப்படியாவது உயிர் வாழவேண்டும் என்ற நேரம் முயன்று வேலை செய்வான். அல்லது (social upward movement ) உடனுள்ளவர் சமூக நிலை உயர்ந்து விட்டது, இனி நாம் இப்படியேயிருக்க முடியாது என்றால் தன்னாலான எதையும் செய்வான். யோகவாழ்வைப் பற்றி நான் பேசுவது பொது மக்களுக்காக. அதனால் இலட்சியவாதிகளை, இங்குக் கருத வேண்டாம். இலட்சியவாதிகள் இம்முயற்சியை மேற்கொண்டால் எளிதில் பலன் பெறுவர். அவர்கள் பொதுவாக அன்னையிடம் வந்த பின் புதிய முயற்சியின்றி இம்மாற்றத்தைப் பெறுவர்.
சாதாரண மனிதர்களில் பலர் இலட்சியமில்லாதவர்கள். இவர்கள் இலட்சியம் இருப்பதாக நடிப்பவர்கள். நடிப்பவர்களுக்கு எதுவும் நடக்காது. முடிவில் நடிப்பும் போகும் நிலைதான் வரும்.
நாள் முழுவதும் வேலை செய்த பின் இழந்த தெம்பை மீண்டும் தூக்கத்தில் பெறுகிறோம். தூக்கத்தில் ஜீவன் சச்சிதானந்தத்தை எட்டித் தொட்டு மீண்டும் தெம்பைப் பெறுகிறது. சக்தி, தெம்பு, என்பதற்கு உறைவிடம் சச்சிதானந்தம். அதை எட்ட முடியாவிட்டால், நமக்கும் சச்சிதானந்திற்கும் இடையிலுள்ள – சத்தியஜீவியம், ஆன்மீக மனம், சமூகத்தில் உயர்ந்த மனநிலைக்குரிய இலட்சியம் – ஒன்றையாவது அடைய முயலவேண்டும். அது போன்ற நிலை, நமக்கு தியானத்தில் ஏற்படுகிறது. சச்சிதானந்தம் தூக்கத்தில் மனிதனுடைய சக்தியை நிரப்புவதுபோல் தியானம் பக்தனுடைய சக்தியை அதிகப்படுத்துகிறது. அனைவருக்கும் பொருந்தும் நிலைகள் சில.
- தியானம் நம் சக்தி நிலையை உயர்த்தும்.
- ஒரு பெரிய நம்பிக்கை, பெரிய இலட்சியம், பெரிய கருத்து அது போன்ற பலனைத் தரும்.
- நம்மால் அதிகபட்சம் சாதிக்கக் கூடியதைச் சாதிக்க எடுக்கும் முயற்சி சக்தியைத் தரும்.
- இதுவரை தீராத பிரச்சினையை, பிரார்த்தனையால் தீர்க்க முனைதலும் அது போன்றதே.
இன்று தங்கள் சமூக அந்தஸ்தைப் படிப்பு மூலமாவது, உயர்ந்த வீட்டு அமைப்பு (modern house) மூலமாவது, நகரத்தில் குடியேறுவது மூலமாவது பெற மக்கள் பேரார்வம் கொண்டுள்ளனர். அன்னையை ஏற்றுக் கொண்ட பின், நம் முயற்சிக்கும், தகுதிக்கும் ஏற்ப பலன் நிச்சயம் வந்தபடி இருக்கும். நமக்குத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், அப்பலன் தவறாது வரும். பணவரவில் ஏற்படும் மாற்றம் விவரமாகத் தெரியும். அதற்குச் சமமான பல்வேறு மாற்றங்கள் குடும்பத்திலுண்டு. நாமறிந்த சிலவற்றைப் பார்ப்போம்.
- 9 பேர் உள்ள வீட்டில் எப்பொழுதும் இருவர் படுக்கையாகவும், 4 பேர் உடல்நலம் குன்றியுமிருந்தது மாறி, அனைவரும் ஆரோக்கியமாக உள்ள நிலை.
- 5 பேர் குடும்பத்தில் எப்பொழுதும் எரிச்சலாக, 2 பேர் மற்றவருடன் பேசாத நிலை மாறி குடும்பம் சந்தோஷமயமாவது.
- ஊரில் நம்மை ஒதுக்கிய நிலை மாறி மற்றவர்களைப் போன்ற மரியாதை ஏற்படுவது.
- கடந்த 10, 15 ஆண்டுகளாக உறவினர் எவரும் நம்மைத் தேடி வாராத நிலை மாறி அநேகமாக அனைவரும் நம்மை விரும்பி வந்து பார்த்து, வீட்டுக்கு அழைப்பது.
- நமக்குரிய பிரமோஷன், மரியாதை, உரிமை, வர வேண்டிய பணம், சீர், இவற்றைக் கேட்டுப் பெற்ற நிலை, போராடிப் பெற்றது, கேட்டும் கிடைக்காதது மாறி, தாமே இயல்பாக அவை நம்மிடம் வந்தடைவது.
- வருஷா வருஷம் பாஸ் செய்வது பெரிய பிரயத்தனமாக இருந்த பிள்ளைகள், எளிதாகப் பாஸாவதும், ஓரிருவர் பரிசு பெறுவதும், பாராட்டு பெறுவதுமாக மாறுவது.
- 7 வருஷமாகப் பேசாத இருவர் வீட்டில் புதிய நிலை இருப்பதால் மாறுவது.
- 400 ஏக்கர் நிலத்தில் 1 இலட்ச ரூபாய் வருமானம் எடுக்க சிரமப்பட்ட நிலை போய், 400 ஏக்கருக்குரிய 40 இலட்சம் இல்லாவிட்டாலும் 10 இலட்சம் வருமானம் ஏற்படுவது.
- 32 வருஷமாய் தலைமையான தொண்டனாகவே வேலை செய்தவர்க்குத் தலைமைப் பதவி வருவது.
- விவாகரத்து(divorce) என்பது முடிவான நிலையில் மாறுவது.
- ஆபத்தான வியாதியை ஊர்ஜிதம் செய்தபின், நிலைமை மாறி, ஆபத்தில்லை என்றாவது, அல்லது வியாதியேயில்லை என்று தெரிவது.
மேற்சொன்ன மாறுதல்கள் ஒரு வகையில் 10 மடங்கு வருமானத்திற்குச் சமம் என்றாலும், பத்துமடங்கு வருமானம் கண்ணுக்குத் தெரிவதைப்போல் இம்மாறுதல்கள் மனதைத் தொடுவதில்லை என்பதால் நான் வருமானத்தை அளவுகோலாக எழுதுவது வழக்கம். இம்மாறுதல்கள் நமக்குள்ள பக்தியால் தாமே ஏற்படுபவை. வருமானத்தில் மாற்றம் தெரிய வேண்டுமானால் முயற்சியின் போக்கு
வருமானத்திற்குரியதாக இருக்க வேண்டும். வியாபாரி, வியாபாரத்தைக் கவனித்தால் பணவரவு அதிகமாகும். எந்த முனையில் தீவிரம் தெரிகிறதோ அம்முனை சிறக்கும்.
இம்மாற்றத்திற்குரிய அஸ்திவாரம் அயராத உழைப்பு, அதுவும் (organised) முறைப்படுத்தப்பட்ட உழைப்பு. உழைப்பே மனிதனுக்குத் தெய்வம். அங்கு மனதில் உண்மையிருப்பது அவசியம். உழைப்பில் மனம் உண்மையாக இருந்தால் சக்தி எழும். இல்லாவிட்டால் சக்தியிருக்காது. எனக்குப் பணம் முக்கியமில்லை என நடிப்பவர்கள் வாழ்வில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பார்த்தால் அது அதிக வரவால் ஏற்பட்ட உற்சாகம் கொடுத்ததாகவேயிருக்கும். இருவகையான நிலைகள் ஏற்படுவது வழக்கம்.
1 | 2 |
நாம் எதுவும் முயன்று செய்வதில்லை. அருள் செயல்பட்டு ஓரிரு பெரிய நல்லது நடந்து நின்று விடும். | இதுவரை முன்னேற முடியும் என்ற நம்பிக்கையில்லாததால் னைந்து உழைக்கவில்லை. இன்று புதிய நம்பிக்கை ஏற்பட்டு உள்ளதால் முனைந்து உழைக்கிறோம். பெரும் பலன் வருகிறது. |
இந்த இரண்டாம் நிலையை ஏற்றுக்கொள்ள முன் வருபவர்களுக்குத் தேவைப்பட்ட விளக்கங்களை இக்கட்டுரை தர முயல்கிறது. புதிய நம்பிக்கை, புதிய உழைப்பை மேற்கொண்டால், புதிய சூழ்நிலை ஏற்பட்டு, புதிய மனநிலை எழுந்து வருமானம் உயரும், நிலை உயர்ந்து மாறும், நமக்கும், உடன் இருப்பவர்க்கும் ‘ நம்பமுடியாத மாற்றங்களை நடைமுறையில் அருள் அளிப்பதைக் காணலாம். இது தடையற்ற தெய்வத்தின் வார்த்தை என அமரகவியின் சொற்களில் சொன்னால் பொருந்தும்.
மனிதகுணங்கள் பெருமையுடையவை அல்ல. பொறாமை, பயம், சந்தேகம், பயந்து ஒளிதல், ஒளிந்து மறைதல் போன்ற அநேக சிறுமைகள் நம்மிடையேயுள்ளன. பொறாமையுள்ளவன், எனக்குப் பொறாமையேயில்லை எனப் பேசலாம். அவனுக்கு இம்மாற்றமில்லை. தன் பொறாமையை அவன் ஏற்க வேண்டும். அதை அழித்து உதவி மனப்பான்மையாக, பெருந்தன்மையான, தாராள மனப்பான்மையாக மாற்ற வேண்டும். மனிதன் சிறியவன். அன்னை அகண்ட பிரம்மம். சிறியவன் சிறுமையை ஏற்கும் உண்மை வேண்டும். ஏற்று மாறும் முயற்சி வேண்டும். முயன்றால் பலன் உண்டு. பலன் மூலம் அன்னை சக்தியை வெளிப்படுத்த வேண்டும். சிறிய மனிதன் பெரிய ஆத்மாவாகும்வரை இதைத் தொடர்ந்து செய்தபடியிருக்க வேண்டும். நமக்கு 1 கிளாஸ் வரவில்லை என ஏமாந்த நேரம், நண்பன் முதல் மார்க் வாங்கியிருக்கிறான் என்பது பொறாமையைக் கிளப்பும். பொறாமை கிளம்பும்பொழுது அவனைத் திட்டத் தோன்றும், குறை சொல்லத் தோன்றும். உடனே இவை பொறாமையின் சின்னங்கள் என மனம் அறிந்து அவற்றிலிருந்து விலகி, அவன் பெற்றதை உண்மையாகப் போற்றிப் பேச மனதைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அதைச் சோதனை செய்து பரீட்சையில் 1 கிளாஸ் வாங்காவிட்டாலும், இச்சோதனையில் முதல் மார்க் வாங்க முடிவு செய்து, பொறாமை உணர்ச்சியை, நல்லெண்ணமாக, பாராட்டுதலாக மனதில் மாற்ற முயன்றால், அம்முயற்சிக்கு அன்னையின் துணையை நாடினால், மனம் கடுமையிழந்து, மாறுவது தெரியும். மாற்றம் முழுமை பெற்ற நேரம், அன்னை சக்தி வெளிப்படும். மனமாற்றம், அன்னை வாழ்வுக்கு நம்மை மாற்றும்.
இந்த மாற்றத்தைப் பெற அகந்தையை அழிக்க வேண்டும். நாம் வேறு, அகந்தை வேறு என்றிருந்தால் நமக்கு நம்
அகந்தை புரியும். நாம் கோபப்பட்டோம் என்று புரியும் நிலை கோபம் அடங்கிய பின் தெரிகிறது. கோபம் உள்ளபொழுது,
நாமே கோபமாக இருப்பதால்
நாம் கோபப்படுகிறோம் என்று தெரிவதில்லை. சில சமயங்களில் அது தெரியும். தெரியும் நேரம் நாம் வேறு, நம் கோபம் வேறு என்று பிரிந்துள்ள நேரம். ஒரே ஒரு க்ஷணம் கூட அதுபோல் நாம் அகந்தையிலிருந்து பிரிந்திருப்பதில்லை. நாம் நம் அகந்தையிலிருந்து சற்றுப் பிரிந்து, ‘அகந்தை‘ செயல்படுகிறது என்று அறிவது அவசியம். இது பலருக்கு ஏற்பட்டதேயில்லை. அகந்தையிலிருந்து நாம் பிரிந்த பின்னரே, நம்மால் அகந்தையை அழிக்க முடியும். அகந்தையினின்று பிரியுமுன் அதன் கருவிகளிலிருந்து – அபிப்பிராயம், பொறாமை, சந்தேகம் போன்ற 30 குணங்களிலிருந்து – நாம் பிரியவேண்டும். அதைச் செய்யும் முறையை பகவத்கீதை ‘பலன் கருதாமல் செயல்படு‘ என்று சொல்கிறது. அந்நிலைகளைச் சுருக்கமாகச் சொல்லலாம்.
பலன் கருதாமல் செயல்படுதல் | நிஷ்காம்யகர்மம் |
மனத்தால் பலனை விட்டு விட வேண்டும் | Inner renunciation |
உயர்ந்த நம்பிக்கைகளையும் விடவேண்டும் | (சர்வதர்மான் பரித்யஜ்ய) |
- பலன் கருதாமல் செயல்பட குணக்கேடுகளை விட வேண்டும்.
- மனத்தால் பலனைத் தியாகம் செய்ய, குணங்களிலிருந்து விடுபட வேண்டும்
- உயர்ந்த நம்பிக்கையை (தர்மம்) விட மனத்தைக் கடக்க வேண்டும், மனத்தால் செயல்படாமல் ஆன்மாவால் (சைத்தியப்புருஷன்) செயல்பட வேண்டும்.
இதை அன்றாட வாழ்வில் செய்வதெப்படி என்பதை விளக்க, தோல்வியை வெற்றியாக மாற்றும் வகையை விளக்கியதை மீண்டும் சொல்ல வேண்டும். இதன் ஆன்மிகத் தத்துவம் தன்னையறிதல், தன்னை அகந்தை என்றறியும் நாம் நம்மை ஆன்மா என்றறிதல் வேண்டும், இதைக் கணந்தோறும் செய்வதில் இருநிலைகள் உள்ளன. முதல்நிலை மனிதனுக்குரிய உயர்ந்த நிலை. இரண்டாம் நிலை மனித இயல்பை அழித்து தெய்வ இயல்பை ஏற்றுக் கொள்ளும் சத்தியஜீவியநிலை. இக்கட்டுரை இதுவரை நான் பல இடங்களில் சொன்னது போல் முதல் நிலையைப் பற்றியது.
- சிறுமையிலிருந்து விடுபட்டு, உயர்ந்த மனிதனாகி அன்னையின் அருளைப் பெறுவது யோகவாழ்க்கை.
- மனித இயல்பிலிருந்து விடுபட்டு, தெய்வ இயல்பை மேற்கொண்டு உலகில் மனித சுபாவத்தை மாற்றுவது பூரணயோகம்.
. யோகத்தை ஏற்க அழைப்பு அளிக்க முடியாது. இறைவனின் அழைப்புள்ளவர் யோகத்தை நாடுவார்கள். யோகவாழ்க்கையை மேற்கொள்ள அழைப்பது இக்கட்டுரை.
கீதையின் பாதை நமக்குரியதன்று. மோட்சப் பாதை சத்திய ஜீவனை அடைவதிலிருந்து நம்மை நிரந்தரமாக விலக்கும். யோகத்தை இன்று மேற்கொள்ள முடியாதவர்கள் யோக வாழ்வை நாடினால், பூரணயோகத்தின் பாதையை விட்டு நாம் அகலமாட்டோம், அதற்குரிய பக்குவமும், நேரமும் வந்தால் யோக வாழ்விலிருந்து யோகத்திற்கு மாற முடியும். இதுபோன்ற கேள்வியைக் கேட்ட குழந்தையை அன்னை பொறு என்றார். எவ்வளவு நேரம்? என்று குழந்தை
மீண்டும் கேட்டது. அன்னை, சுமார் ஆயிரம் வருஷம் என்று பதிலிறுத்தார். ஆயிரம் ஆண்டு பொறுக்க வேண்டியவருக்கு அன்னையின்றி வாழ்வில்லை என்ற நிலை வந்தால் அந்த ஆயிரம் ஆண்டும் ஒரு கணமாக மாறும். அது பக்திக்குரிய தன்மை.
மகாவிஷ்ணுவைப் பார்க்கப் போகும் நாரதர் ஓரு ஞானியையும், பக்தனையும் சந்தித்து, என்ன வேண்டும் என்று கேட்டு, விஷ்ணுவைப் பார்த்துத் திரும்பி வரும்பொழுது எப்பொழுது எனக்கு மோட்சம் கிடைக்கும் என்ற அவர்கள் கேள்விக்குப் பதில் கொண்டு வந்தார், ‘இலட்சம் பிறவியில் மோட்சம் கிட்டும்‘ என்ற பதிலைக் கேட்ட ஞானி சோர்ந்து அயர்ந்து விட்டபொழுது, பக்தன் ஆனந்தக் கூத்தாடுகிறான். அதே க்ஷணம் அவனுக்கு மோட்சம் கிடைக்கிறது என்பது புராணம். ஞானி அறிவால் சிந்தித்து இலட்சம் பிறவி வெகு தூரத்திலுள்ளது என்று அறிகிறான். ‘மோட்சம் கிடைக்கும், விஷ்ணுவை அடைவேன்‘ என்பது பக்தியை பூரணம் செய்ததால், பூரணமான பக்தி ஆயிரம் ஆண்டுகளை அதே நிமிஷத்தில் கடக்கச் செய்கிறது. மனமாற்றம் நாம் நாடும் மாற்றத்தை உடனே அளிக்கவல்லது. ஞானம் பக்தியை விட உயர்ந்த நிலையில் உள்ளது. ஏனெனில் உடல், உணர்வு, அறிவு என்ற அளவுகோல் பக்தி இரண்டாம் நிலைக்கும், ஞானம் அதைவிட உயர்ந்த மூன்றாம் நிலைக்குமுரியது. ஞானம் உயர்ந்து நின்றாலும், மனித வாழ்வு, செயலிலிருந்து விடுபட்டு விடுவதால் (detaches itself ) ஞானத்தால் தனியே நின்று சாதிக்க முடியாது. ஞானத்தை உடலும் உணர்வும் ஏற்றால் ஞானத்தால் சாதிக்க முடியும். சாதிப்பது உடல், அதற்குத் தெம்பு அளிப்பது உணர்வு. அவை மூலமே ஞானம் சாதிக்க முடியும். பக்தி உணர்வுக்குரியது. ஞானத்தைவிட தாழ்ந்ததெனினும், அது வாழ்வின் செயல் மையத்திலிருப்பதால் பக்திக்குத் திறன்
அதிகம். ஞானத்தால் அறிவதைவிட, பக்தியால் உணர்வது உடனே பலிப்பதற்குக் காரணம் இதுவேயாகும்.
உண்மையான பக்தர்கள் பல்வேறு வகையினராக இருக்கிறார்கள்:
- இதுவரை தெய்வ நம்பிக்கையில்லாதவரும், நம்பிக்கை ஏற்பட்டு அன்னையைப் பற்றுக்கோடாகப் பற்றிக் கொள்பவர்கள்,
- தெய்வநம்பிக்கையை மூடநம்பிக்கை என்றறிந்து ஒதுங்கியிருந்தவர்கள், அதை விட்டு மாறி தெய்வ நம்பிக்கையின் உயர்வை அறிபவர்கள்.
- பலனைக்கொண்டு தெய்வ நம்பிக்கையை அளவிடுபவர்கள்.
- மனம் பக்குவம் போதாத நிலையில் உயர்ந்த கோட்பாடுகளைப் பின்பற்றும் பிடிவாதமுள்ளவர்கள்.
- தங்கள் குறைகளை மீறிப் பலன் வரும்பொழுது குறைகளை நிறைவுகளாகப் புரிந்து கொள்பவர்கள்.
- உயர்ந்த அம்சமிருந்து, நெருங்கிய தொடர்பிருந்தும் அம்சத்திற்குரிய முயற்சி எடுக்காதவர்கள்.
- உயர்ந்த பக்தியிருந்தும், பிறர் ஆதரவு இல்லாவிட்டால், செயல்பட்டு பழக்கமில்லாததால், பக்திக்குரிய ஆன்மீகப் பலனை நாடாதவர்கள்.
- ஆழ்ந்த பக்தியும் அதற்கெதிரான இருண்ட தெய்வ வழிபாடும் (vital beings) இருந்து காரியம் கெடும் நேரத்தில் நம்பிக்கையை இழப்பவர்கள்.
- எல்லாம் அன்னையே என்ற மிக உயர்ந்த கொள்கையை அதற்குரிய பக்குவமில்லாமல் வாயால் பேசி அருளை நாடும்தோறும் வீட்டில் தொந்தரவைக் காண்பவர்கள்.
- சேவையால் உயர்ந்து, உயர்வை கர்வத்தின் கருவியாக்கி (உயிருக்கும்) ஆபத்து விளைவிப்பவர்கள்.
இவர்களில் பலருக்கு, குறையைவிட அதிகமான நிறைவுண்டு — பக்தி, நம்பிக்கை. இவர்கள் தங்கள் நிறைவை முக்கியமாகக் கருதி, அதன் மூலம் குறையை அழிக்க முற்பட்டால், அவர்கள் யோக வாழ்வுக்கு உரியவர்கள் ஆவார்கள். எந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதைவிட இன்று எந்த மனநிலையைப் பாராட்டுகிறோம் என்பதே நம் தகுதியை நிர்ணயிக்கும்.
சின்னபுத்தி பொறாமை, பயம், கர்வம், தவறான நினைவு.
இவை வாழ்வில் சாதனையைக் – காரியத்தைக் – கெடுக்கும். அதுபோல் தங்கள் காரியத்தைக் கெடுப்பவர்கள், தங்களுக்குக் கிடைத்த அன்னை வாய்ப்பைக் கெடுப்பவர்களாவர். வாழ்வு இவற்றால் நிறைந்தது. அதனால் எந்த விளக்கமும் தேவையில்லை. ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.
- ‘வந்த புதிதில் என்னோடு அதிகமாகப் பழகியவர், சற்று நிலையுயர்ந்தவுடன், என்னோடு பேசுவதையே நிறுத்திவிட்டார்‘ என்று வேலைக்காரன், புதிய குமாஸ்தாவைப் பற்றிச் சொல்கிறான். குமாஸ்தா பெற்றது புதிய அந்தஸ்தில்லை. முதல் அடக்கமாக இருந்ததால், சற்று உயர முடிந்தது. உயர்வால் கர்வம் வந்ததால், வந்த வாய்ப்பு அத்துடன் நின்று விட்டது.
- அளவு கடந்த சொத்துள்ள குடும்பத்தில், அக்குடும்பத்தால் அநேகக் குடும்பம் வாழும் நிலையில், தன் சொந்த மனப்பான்மையால், பயத்தால் பீடிக்கப்பட்டு, ‘என்னை யார் காப்பாற்றுவார்கள், எனக்கு யார் ஆதரவு தருவார்கள்‘ என்று புலம்பும் மனிதன் யதார்த்தத்தையும் அறியவில்லை, அன்னையையும் ஏற்றுக் கொள்ளவில்லை, தன்னுடன் பிறந்த பயத்தை மட்டும் நம்புகிறான் என்பது தெளிவு. அவர்களை அன்னை, ‘பயத்தால் வாழ்வை ருசிப்படுத்துபவர்கள்‘ என்கிறார். அவர்களே பயத்தை விட்டு நகர்ந்தாலன்றி அவர்கட்கு வழியில்லை.
- கம்பெனி முதலாளி புதியதாக வந்த குமாஸ்தாவை அவருடைய ஒரு நல்ல குணத்திற்காகத் தன்னுடன் சேர்த்தவுடன், இது நாள்வரை முதலாளியுடனிருந்த டைரக்டர், ஜெனரல் மானேஜர், இவர்போல முதலாளி சேர்த்துக் கொண்ட மற்ற பல குமாஸ்தாக்களையும், அவரை விட்டு நீக்க வேண்டுமென்று விரும்பினால், முடிவில் தான் மட்டுமே விலக வேண்டும் என்று அறியாத மட சாம்பிராணி தம் தீட்சண்யத்தைப் பற்றி 19 பக்கம் கட்டுரை எழுதினாலும், அவர் விவரிப்பது அவரது மடமையே, அறிவுடமை ஆகாது.
- யாரும் வாராத வீட்டுக்கு, புதிய சூழ்நிலையில் 10 நாளில் 15 பேர் வந்தவுடன், அந்த வீட்டு மனிதர்கள் அனைவரும் குழந்தைகள் உட்பட பெரிய மனிதர்களாகி எங்களை, சராசரி என்று நினைக்கலாமா? என பறையறைவித்தல், சராசரியும் போய் விடுவதை அறிவிக்கிறது.
- மனத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் பணிவு, காணிக்கை, தியானம் போன்ற முறைகள் மனத்தில் நம்பிக்கையில்லாதபொழுதும் தீவிரமாகப் பின்பற்றினால் பலன் தரும் என்று நினைப்பது, ஒரு வகையில் தன்னையே ஏமாற்றிக் கொள்வதாகும். அது உண்மையில்லை என்பதால் நாள் கடந்த பொழுது ஏமாற்றத்தை விளைவிக்கும்.
- பொறாமையை அடக்குதல் நல்லது, ஆனால் அதனால் மட்டும் பலன் வாராது.
- பொறாமையை அழிப்பது சிறந்தது. ஆனால் அது அன்னையிடம் நாம் எதிர்பார்க்கும் உயர்ந்த பலனைத் தாராது.
- பொறாமையை அதற்கு எதிரான தாராள மனப்பான்மையாக, பாராட்டாக மாற்றினால் பலன் வரும். அது போன்ற மாற்றம் திருவுருமாற்றம் எனப்படும்.
- ஒரு கட்சி, குடும்பம், ஸ்தாபனம் போன்ற இடங்களில் தலைவருக்கு நெருக்கமாக இருப்பவர் ஒரிருவர் அல்லது 4,5 பேர் இருப்பார்கள். சில சமயங்களில் இவர்களுள் ஒருவர் முதன்மையாகவும் இருப்பதுண்டு. பிறப்பாலும், வளர்ப்பாலும் இது போன்றவர்களில் சிலருக்கு, ‘எந்த நிமிஷமும் என்னை விலக்கிவிடுவார்கள்‘ என்ற பயம் பிடித்து உலுக்கும். அர்த்தமற்ற பயம் என்றாலும், மற்ற எந்தத் தகுதியிருந்தாலும், இந்தப் பயம் மட்டுமே அவர்கள் (shift) மாற்றம் பெறுவதைத் தடுக்கவல்லது.
மாற்றத்தை நாடுபவர்களுக்குச் சிறியது என்பது எந்த உருவத்திருந்தாலும் அது விலக்காகும்.
வாழ்வு சமுத்திரம். நாம் கப்பல் வாழ்வதுபோல் ஒரு பாதுகாப்புக்குள் வாழ்கிறோம். மனித சமுதாயத்தின் சிகரமாக வாழ்பவர்கள் பலர். ஞானி, யோகி, அவதாரம், தலைவன், வீரன், மேதை போன்றவர்கள் சிகரத்திற்குரியவர்கள். பெரும்பாலும் அவர்கள் வாழ்வு புயலும், போராட்டமுமாக உள்ளதாகும். உயிருக்கும், உடலுக்கும் ஆபத்து நிறைந்தது அவர்கள் வாழ்வு. அவர்களே மனிதகுலத்தின் மணிமுடி.
பொதுவான மக்களுக்குரியது அவ்வாழ்விலில்லை. வாழ்க்கையை ஆற்றொழுக்காக அமைக்க விரும்புவது சாமானிய மனம். மேல்மனம், உள்மனம் என அன்னை பிரித்துக் கூறுவதில் சாமானியன் வாழ்வு மேல்மனத்திற்குரியது. இது அன்றாட வாழ்வு. உப்பு, புளி, மிளகாய், படிப்பு, வேலை, திருமணம், வசதி, சந்தோஷத்தைத் தேடும் வாழ்வு இது. இதில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். சாமானியனுக்கு வேலை கிடைக்காதது, திருமணமாகாதது, வசதியில்லாதது பெரிய தாங்க முடியாத பிரச்சனைகள். சாமானியனுடைய உள்மனத்திற்கு இவை பிரச்சினைகள் அல்ல, அனுபவம், வெறும் அனுபவம் மட்டுமன்று ஆனந்தத்தைத் தரும் அனுபவம். மேல்மனம், வலி, வெறுப்பு, சலிப்பு என்றறியும் நிகழ்ச்சிகளில் உள்மனம் ஆனந்தம் பெறுகிறது. உள்மனம் யோகத்திற்குரியது. மேல்மனம் வாழ்வுக்குரியது. வேலை கிடைக்காதவன், வேலை கிடைத்தால் திருப்தி அடைகிறான். அதை உலகில் இருவகைகளில் பெறுகிறார்கள். இருவகைகளிலும் பெற முடியாதவர்கள் அநேகர். நல்ல முறையில் பெறுபவர் குறைவு. கெட்ட முறையில் பெறுபவர் அநேகர்.
தவறாது நல்ல முறையில் நம் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கமுடியும் என்று இன்று எவரும் சொல்லமுடியாது. அது அன்னை சக்தியால் முடியும். அதைப் பெறுவதையே யோகவாழ்வு என நான் கூறுகிறேன்.
மனிதவாழ்வு என்பதை மேல்மனத்தின் வாழ்வென்றேன். மேல்மனவாழ்வில் வெற்றி, தோல்வியுண்டு. தோல்வியை மனிதன் விரும்புவதில்லை. வெற்றியை நாடுவான். வெற்றியானாலும், தோல்வியானாலும் அது வாழ்வுக்கும், அன்னைக்கும் ஏற்புடையது. இன்றைய தோல்வி எதிர்கால வெற்றிக்கு வித்து என்பதால், தோல்வி ஒதுக்கக்கூடியதன்று. இன்றைய வெற்றி நேற்றைய தோல்வியால் ஏற்பட்டது. இன்று தோல்வியாகி, எதிர்காலத்தில் வெற்றியாக வரக்கூடியதை
இன்றே வெற்றியாக மாற்ற அன்னை சக்தியால் முடியும். இதை முடிவான சட்டமாகக் கூறமுடியாது. பெரும்பாலும் (90%க்கு மேல்) இது உண்மை. அதை மனிதன் நாடுவான், பெரிதும் விரும்புவான். அந்த மாற்றத்தை மனிதவாழ்வு யோகவாழ்வாக மாறும் மாற்றம் எனக் கூறுகிறேன்.
- வாழ்வு மேல்மனம், உள்மனம் என்று பிரிந்துள்ளது.
- மேல்மனத்திற்கு வெற்றியும், தோல்வியும் உண்டு.
- உள்மனத்திற்கு மேல்மனத்தின் தோல்வியும் வெற்றியே.
- மனிதன் எக்காரணத்திற்காகவும் தோல்வியை விரும்புவதில்லை.
- மேல்மனத்தின் தோல்வி எதிர்கால வெற்றிக்கு வித்து. இது யோகத்திற்குரியது.
- மேல்மனத் தோல்வியை, வெற்றியாக மாற்ற அன்னை சக்தியால் முடியும்.
- அம்மாற்றம் (shift) யோகவாழ்க்கைக்குரியது.
- அம்மாற்றத்தை நாடும் பக்தன் அன்னையை நெருங்கி வருகிறான்.
- இதுவரை பூவுலகிலில்லாத வாழ்வு யோக வாழ்வு.
- இதையே நாம் விரும்பினால், யோகத்திற்கும் அடிப்படையாக அமையும்.
மனம் என்பது உலகில் உற்பத்தியாகுமுன், பாவம் ஏற்படவில்லை என்று அன்னை கூறுகிறார். பாவம் என்பது செயல் இல்லை. நம் மனத்தின் நோக்கத்தில்தான் இருக்கிறது என்று அன்னை விளக்கம் அக்கிறார். அடிமையை அடித்தால் பாவம் என்பது நம் எண்ணம். அடிமையின் ஆன்மா, அடி வாங்குவதால் முன்னேறுகிறது என்பது ஆன்மீக உண்மை. அடிபட்டு அவன் வதைவதைக் காண்பவருக்கு அது
பாவமான செயலாகும். அவன் ஆன்மா அவன் படும் உதையால் பக்குவப்படுவதைக் காணும் சூட்சுமப் பார்வையுடையவர்க்கு அடிப்பது புண்ணியமாகத் தெரியும். பார்ப்பவர் மனநிலை பாவ, புண்ணியத்தை நிர்ணயிக்கிறது என்பதை இது விளக்கும்.
மனம் வக்கிரமுடையது. நேரான செயலை வக்கிரமாகச் செய்ய மனத்திற்குத் தோன்றும். இதனால் ஏற்படுவதே பாவம். புலி, சிங்கம் போன்ற விலங்குகள் பசி எழுந்தால் பிற மிருகங்களைக் கொன்று தின்னும். பசியில்லாதபொழுது பிறரைக் கொல்ல விலங்குகட்குத் தோன்றாது. மனிதனுக்குத் தோன்றும். அவனுக்குத் தேவையில்லை என்றாலும் பிறரைத் துன்புறுத்த மனிதனுக்குத் தோன்றும். அது பாவம். மனம் உள்ளதால் எழும் செயல் இது. அதனால் பாவ, புண்ணியத்திற்கு மனமே அஸ்திவாரம் என்கிறார் அன்னை.
நான் சொல்லும் மாற்றத்தைப் பல வகைகளாக விளக்கலாம். அவற்றுள் ஒன்று மனத்தைக் கடந்து செயல்படுதல் மாற்றம் எனப்படும். விருப்பு, வெறுப்பு என்பது (emotional likes and dislikes) பாவ, புண்ணியத்திற்கு உற்பத்தி ஸ்தானம். விருப்பு, வெறுப்பில்லாமல் கடமையைச் செய்யும் பொழுது, பாவம் எழ வழியில்லை. மனமே விருப்பு, வெறுப்பை உற்பத்தி செய்வது. மனத்தைக் கடந்த நிலையில் செயல்பட்டால் நாம் பாவத்தை உற்பத்தி செய்யமாட்டோம், அத்துடன் மனிதவாழ்விலிருந்து. யோகவாழ்வுக்கு மாறுவோம். மனித வாழ்வு சுயநலமானது. யோகவாழ்வு தன்னலமற்றது. மனம் சுயநலத்தை மட்டுமே கருதும். மனத்தைக் கடந்து வந்தால் பரநலத்தை மட்டுமே கருதுவோம். எனவே பரநலத்தை மட்டுமே கருதினால், நாம் மனத்தைக் கடந்த நிலையிலிருந்து செயல்படுவோம். பாவம், புண்ணியம் எனக் கருதுவது மனம். செயலை பாவமான செயல், புண்ணியமான செயல் என மனம் பிரித்துப் பார்க்கும்.
மனத்தைக் கடந்த நிலையில் பாவமில்லை. எனவே செயலை, பாவமா, புண்ணியமா எனக் கருதாமல் செயலாக மட்டுமே செய்ய முனைந்தால், நாம் மனதைக் கடந்து வந்து விடுகிறோம். வலியைப் பற்றி அன்னை சொல்லும்பொழுது பயமிருந்தால் வலி அதிகமாகத் தெரியும்; மனம் வலியைப் பொறுத்துக் கொள்ள முடிவு செய்தால் எவ்வளவு வலியையும் பொறுத்துக்கொள்ளலாம்; மனத்தைக் கடந்து வந்தால் வலி ஆனந்தமாகிறது என்கிறார். வலியை ஆனந்தமாகக் கருதும் மனப்பான்மை மனதைக் கடந்த நிலைக்குரிய மனப்பான்மை ஆகும். சோர்வு எழும்பொழுது ‘ என் செய்வது‘ என பிரமித்துப் போனால் சோர்வு நம்மை மீறும் . சோர்வுக்கு, பலம் இல்லை, நாம் ஏற்றுக்கொண்டால்தான் பலம், எனவே நான் அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று முடிவு செய்தால் சோர்வு பலமிழந்து விடுகிறது . தொடர்ந்து மனத்தால் அதைக் கருதுவது இல்லை என்றால் அதாவது மனத்தைக் கடந்த நிலையை அடைந்தால் – சோர்வு மாறி தெம்பாகிறது. சோர்வை, தெம்பாக அன்னையை அழைத்து மாற்றினால், நாம் மனத்தைக் கடக்க முடியும். எல்லாச் செயல்களிலும் மனத்தைக் கடக்க முயன்றால், இம்மாற்றம் எழுந்து, நிலை பெறும்.
தனிமனிதன் தன் சௌகரியத்திற்காகச் செய்து கொள்வது அவன் திறமை. ஒரு சமூகத்தை ஏற்படுத்தி, அதைத் தனக்குச் சேவை செய்யச் சொல்வது நாகரீகம், வளர்ந்த அளவில் ஏற்பட்டது. நம் குழந்தைகட்கு நாமே பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டுமானால், அது ஓரளவுதான் முடியும். அதைச் செய்ய நாம் வேறு வேலை செய்யமுடியாது. அப்படியானால் நம் பிள்ளைகளின் படிப்புக்காக நாம் நம் முழு வருமானத்தை விட்டுக் கொடுப்பதாகும். நமக்கு வேண்டிய மிளகாயை நாமே பயிரிட வேண்டும், தேவைப்பட்ட பேப்பர், பேனா, மற்ற பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டுமானால், நாம் சுமார் 2000 வருஷத்திற்கு
முன்னிருந்த மனிதனைப் போல் இருப்போம். சமூகம் ஒரு ஸ்தாபனம். பள்ளி ஓர் அமைப்பு. வியாபாரம் ஓர் அமைப்பின் ஸ்தாபனம் (organised institution ). 2,3 ஆயிர வருஷ வாழ்வில் மனிதன் ஆயிரமாயிரம் ஸ்தாபனங்களை ஏற்படுத்தியதால், இன்று சௌகரியமான, நாகரீக வாழ்வை வாழ முடிகிறது. இன்றைய வாழ்வு ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஏற்பட்ட முன்னேற்றம் கற்பனைக்கும் எட்டாதது.
இறைவன் நம்மை உற்பத்தி செய்தபொழுது, நம்மைப் போல் அவன் செயல்படவில்லை. நாம் நம்மைச் சுற்றி பல ஸ்தாபனங்களை இயற்றினோம். பல்வேறு ஸ்தாபனங்கன் இடையே இறைவன் மனிதனை உற்பத்தி செய்தான். காற்று, ஒளி, வெளி, நிலம், நீர் போன்ற இயற்கை ஸ்தாபனங்கள் நமக்கு வேலை செய்யும்படி இறைவன் பணித்தான். இதுபோன்று இறைவன் இயற்றிய ஒரு பெரிய ஸ்தாபனத்தை நாம் அறிவதில்லை. அறிந்தால் புரிந்துகொள்வதில்லை. புரிந்தால் அதை நினைவில் கொள்வதில்லை. அது வாழ்வு எனும் ஸ்தாபனமாகும். இது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் வாழ்வின் ஆயிரம் கண்களுக்கு நாம் இடையறாது புலப்படுகிறோம். நம் செயல்களுக்கு நாம் (ரிகார்ட்) பதிவு ஏற்படுத்துவதில்லை. வாழ்வு நம் அனைத்துச் செயல்களையும் பதிவு செய்கிறது. நம் எண்ணங்களையும் எழுதி வைத்துள்ளது. உணர்வுகளையும் தவறாமல் குறித்துக் கொள்கிறது. முன்ஜன்மங்களை நாம் நினைவு வைத்திருக்கவில்லை. வாழ்வு நமக்காக நினைவு வைத்திருக்கிறது. நாம் செய்த நல்ல காரியங்களை நாம் அறிவதில்லை. எந்த ஜென்மத்தில் செய்திருந்தாலும் வாழ்வு அதைப் பதிவு செய்து இன்று தேவைப்படும்பொழுது வசதியாக வழங்குகிறது. நமக்குப் புரிவதில்லை. ஆபத்தில் வந்து அதை விலக்குகிறது. ஏதோ ஒரு சமயம் அதிர்ஷ்டமாகவும் நம் கூறையைப் பிரித்துக் கொண்டு கொட்டுகிறது. நம் செயல்கள், எண்ணங்கள்,
உணர்வுகள், அசைவுகள், வாழ்ந்த வாழ்வின் அம்சங்கள் பதிவு செய்யப்பட்டு இழை தவறாமல் நமக்குப் பலன் அளிப்பதை நாம் அறிவோம். பூர்வஜென்மப் புண்ணியம் என்கிறோம். அத்துடன் யாரோ ஒரு நல்லவர் இருப்பதால் வாழ்வு நமக்கு இறைவன் அருளை மழையாகப் பொழிகிறது. வேதகாலத்து ரிஷிகள் ஒளிமயமான உடலைத் தாங்கி உலவியதால், இன்று வாழ்வு நம் உடல் ஒளியை நிலை நிறுத்துகிறது. இதை யார் செய்த புண்ணியமோ என்கிறோம். எவர் செய்த புண்ணியத்தையும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் ஸ்தாபனம் வாழ்வென்பது.
எந்த விஞ்ஞானி எதைக் கண்டுபிடித்தாலும், உலகம் அதன் பயனை அனைவருக்கும் அளிப்பதுபோல் இமயத்தில் தவமிருக்கும் நிர்வாணச் சாமியின் ஆன்மீகப் பலனை உலகில் அனைவருக்கும் அளிக்கவல்லது வாழ்வு. இதை நாம் அறிவோம். ஆனால் ஆழ்ந்து கூர்ந்து கருதுவதில்லை. நான் மேற்சொல்லியதின் மறுபுறம் கர்மம். புண்ணியத்தின் பலனை விநியோகம் செய்வதுபோல் பாவத்தின் பலனையும் வாழ்வு அனைவருக்கும் அளிக்கிறது. அதை நாம் தலைவிதி, நாம் செய்த பாவம் அனுபவிக்கிறோம் என்கிறோம். பாவமானாலும், ஆகர்ஷ்ண சக்தியானாலும் வாழ்வு எனும் ஸ்தாபனம் தவறாது, தங்குதடையின்றி நம்மில் செயல்படுகிறது. வாழ்வு (life) எனும் இந்த ஸ்தாபனம் ஆண்டவனுடையது. நாம் அந்த வாழ்வு நிலையில் ஏற்பட்ட புள்ளிகள் போன்ற ஜீவன்கள். நாம் வாழ்வின் குழந்தைகள். அதனால் ஆளப்பட்டவர்கள். வாழ்வு நம்மை ஆள்கிறது. நாம் அதற்கு உட்பட்டவர்கள். இந்த வாழ்வின் அடிப்படை நியாயமில்லை, பலம். பலசாலி ஜெயிப்பான், நியாயம் பலமில்லாவிட்டால் ஜெயிக்காது. இதன் அடிப்படை சத்தியம் இல்லை; பொய். பொய்க்கு பலம் உண்டு. அதனால் பொய் ஜெயிக்கும். சத்தியம் சிறிதளவு இருப்பதால் அதற்கு வலுவில்லை. ஜெயிக்கமுடியாது. சமூகமும், சர்க்காரும்
வாழ்வின் இரும்புப் பிடியை மீறி நியாயத்திற்கும், சத்தியத்திற்கும் உதவ முன் வந்துள்ளார்கள். சமூகம் தர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்க்கார் சட்டத்தை நிலை நிறுத்தியுள்ளது. தர்மம் செயல்பட்டால் சத்தியம் ஜெயிக்கும். சட்டம் செயல்பட்டால் நியாயம் கிடைக்கும். பெரும்பாலும் தர்மமும், சட்டமும் மனிதனுக்கு உதவுகின்றன. இவற்றை இறுதியாகக் கூற முடியாது. சட்டமும், தர்மமும், சந்தர்ப்பத்திற்கேற்பச் செயல்படும். மனிதன் அதை, தன் கர்மம் எனப் புரிந்துகொள்வான். நியாயம் தன் பக்கம் இருந்தாலும், சட்டம் நியாயமாகப் பேசும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. தர்மமே தலைகாக்கும் என்பது பழமொழி; ஆனால் தர்மத்தை மட்டும் நம்பினால் தலையும் போகும் என்பது சரித்திரம்.
அன்னை உலகுக்குப் புதிய சக்தியைக் கொண்டு வந்துள்ளார். அது சட்டம் தவறினாலும், தர்மம் தவறினாலும், தான் தவறாது செயல்படும். கோர்ட் மூலமே சட்டம் அமுல் படுத்தப்படும். சட்டத்தை அமுலாக்க ஏற்பட்ட ஸ்தாபனம் கோர்ட். தர்மத்தை நிலை நிறுத்த சமூகம் அரசனை ஏற்படுத்தியது. மனுநீதிச்சோழன் போன்றவர்கள் தர்மத்தைக் காத்தவர்கள். அவர்கட்கு எதிரான கொடுங்கோல் அரசர்கள் பலர். அரசன் தவறலாம்: அன்னை தவறமாட்டார். அரசன் என்ற ஸ்தாபனம் தர்மத்தைக் காக்க ஏற்பட்டது. இது தவறும் நேரம் உண்டு. பொய்யின் அடிப்படையில் ஏற்பட்ட வாழ்வின் குழந்தைகளான நமக்கு தர்மமும், சட்டமும் பல சமயங்களில் உதவியதுண்டு. வாழ்வின் பொய்யான அடிப்படையை நாம் விட்டுவிட்டால், மெய்யான அடிப்படையுள்ள வாழ்வை அன்னை நமக்களிக்கிறார். நாம் பொய்யான மனிதவாழ்வை விட்டு மெய்யான அன்னை வாழ்வை நாடினால், சட்டம் தவறாது நியாயம் பேசும். தலைவர் பதவியிலுள்ளவர்கள் தர்மத்தின் சிற்பியாகச் செயல்படுவார்கள். அவர்களும் தவறும் நேரம் உண்டு. அன்னையால் தவற முடியாது. கோர்ட் சட்டத்தை நிலை நிறுத்தாவிட்டால், சமூகத்தின் மூலம்
அன்னை நீதி வழங்குவார். கோர்ட் தவறி இடத்தைப் பூர்த்தி செய்ய ஒரு மனிதன் எழுவான். ஒரு சந்தர்ப்பம் வரும். நீதியை வழங்கும். இறைவன் வாழ்வு எனும் ஸ்தாபனத்தை ஏற்படுத்தியதுபோல் அன்னை ஒரு சூழலை — தன் சூழலை — ஒரு ஸ்தாபனமாக்கி சட்டம், தர்மத்தைப் பூர்த்தி செய்கிறார். அத்துடன் நமக்கு உதவும் நபர்களாகவும், ஆதரவளிக்கும் சந்தர்ப்பமாகவும், நம்மைப் புரிந்துகொள்ளும் சூழ்நிலையாகவும், இச்சூழல் செயல்படுகிறது. இச்சூழலின் மையம் அன்னை. அன்னையே இச்சூழல். அவருடைய சக்தியே இப்புதிய வாழ்வு. நாம் மாற வேண்டியது இப்புதிய வாழ்வுக்கே. சத்தியஜீவிய சக்தி புவியில் வந்ததிலிருந்து இச்சூழல் வலுப் பெற்று, உருவம் பெற்று, வளர்ந்து வருகிறது. அத்துடன் நம்மைத் தேடி வருகிறது. இச்சூழலே முடிவான பலனை முதல் தரக்கூடியது. அன்னையை இந்த ஸ்தாபனம் உள்ள சூழலாக அறிந்து, அதை நாடி, அதன் ஸ்பர்சத்தை விட்டு அகலாமலிருந்தால் உலகின் புது வாழ்வின் உயர்வுக்கு நாம் உரியவராவோம். மாற்றம் எனக் கூறுவதைப் பலமுறை பலவகைகளில் சொன்னேன் மீண்டுமொருமுறை சொன்னால், .
இச்சூழலை அறிந்து, நாடி, அதன் தீண்டுதல் வாழ்வதே நான் கூறும் (shift) மற்றமாகும்.
ஆரோவில் நகரம் 1978இல் நிறுவப்பட்டபொழுது அதன் குறிக்கோள்களை அன்னை விவரித்தார். அவற்றுள் முக்கியமானது, ‘ஆன்மிக அடிப்படையில் உலக வாழ்வு‘ என்றார். நகரம் நிர்மாணம் செய்யப்பட்டதை விமர்சித்து இந்துப் பத்திரிகை தலையங்கம் எழுதியது. லௌகீகமான உலக வாழ்வும், ஆன்மீகமும் எக்காலத்திலும் ஒத்து வந்ததில்லை. ஆனால் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் இதை மேற்கொண்டிருப்பதால், நடக்காது என்று முடிவு செய்வதற்குப் பதிலாக என்ன நடக்கிறது என்று ஆவலுடன் எதிர்பார்ப்போம்‘ என்ற பொருள்பட தலையங்கம் பேசிற்று.
காட்டுக்குரிய யோகத்தை நாட்டில் வளமைக்குரிய வாழ்வாக மாற்றியவர் அன்னை. (Practical idealism) இலட்சிய நடைமுறை என்பது முரண்பாடான கருத்து. இலட்சியம் நடைமுறைக்கு எதிரானது. இலட்சிய வாழ்வை மேற்கொண்டவர் நடைமுறையிலிருந்து, நடைமுறையில் முழுத் தோல்வியுற்றதை உலகம் அறியும். சாக்ரடீஸிலிருந்து திரு.வி.க. வரை இலட்சிய வறுமையைக் கொடுத்தது, சாவைக் கொடுத்தது. வளமையைக் கொடுத்ததில்லை, புகழைப் பெற்றுத் தந்ததில்லை. புகழ் பெற்ற இலட்சியவாதிகள், தங்கள் வாழ்வுக்குப் பின் புகழடைந்தனர். பகவானும் அன்னையும் உலகவாழ்வுக்கு இலட்சியம் அளிக்க முன் வந்தனர். இலட்சியத்தின் உயர்ந்த நிலைக்கு உலக வாழ்வை உயர்த்த முனைந்தனர். துறவறத்திற்கு எதிரான பணத்தை யோகத்திற்குரிய சக்தியாக வர்ணித்தனர். யோகம் பலிக்கும்பொழுது பணம் விலகாது, வளரும் என்று கூறினர். அவர்கள் பக்தர்கள் வாழ்வில் அதை நிரூபித்தனர். லைப் டிவைன் என்ற நூல் தம் யோகத்தின் சாரத்தைச் சுருக்கமாக பக்கம் 24இல் கூறுகிறார். அவர் தம் கருத்தை நான்கு வகைகளாக எழுதுகிறார்.
- ஜீவாத்மாவே பரமாத்மா என்ற வேதாந்த ரிஷிகள் பரமாத்மா எவ்விதம் ஜீவாத்மா ஆயிற்று என்பதை விவரிக்கவில்லை.
- இறைவன் சிருஷ்டியை உற்பத்தி செய்து அங்குத் தன்னை வெளிப்படுத்தினான். இறைவனின் சிருஷ்டியான மனிதன் இறைவனை நாடிச் செல்கிறான். இவை எங்குச் சந்திக்கின்றன என நாம் அறிய வேண்டும்.
- பரம்பொருளை சன்னியாசி உணர்ந்த அளவுக்கு ஜடத்தை மனிதன் கண்டு கொள்ளவில்லை.
- வேதரிஷிகள் இயற்கையில் இறைவனைக் கண்டதன் இரகஸ்யத்தை உலகம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
பரமாத்மா, இறைவன், பரம்பொருள் ஆகியவை இலட்சியம். ஜீவாத்மா, மனிதன், ஜடம், உலகம் நடைமுறை. இவற்றைச் சேர்ப்பது பூரணயோகம். தாழ்ந்த ஜடத்தில், உயர்ந்த சச்சிதானந்தத்தைக் காண்பதும், ஜீவாத்மாவில் பரமாத்மாவைக் காண்பதும், இறைவனை உலகில் அறிவதும் இலட்சியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது. நடைமுறையை இலட்சியத்திற்கு உயர்த்துவது. கடந்து நூறு ஆண்டுகளாக இந்தியாவில் தவறின்றி (printer’s mistakes) புத்தகம் வெயிட்டதாகத் தெரியவில்லை. மேலை நாடுகளில் நூறாண்டுகட்கு முன் வெளியிட்ட புத்தகங்களிலும் ஒரு பிழையில்லை. அன்னை இரு அச்சகங்களை ஆரம்பித்தார். இந்தியாவில் அவை முதன்மையான அச்சகங்கள், அகில இந்தியப் பரிசுகளைப் பெற்றவை. அச்சுப் பிழையின்றி, இந்தியாவில் புத்தகங்கள் வெளியிட முடியும் என்பதை அன்னை சாதித்தவர். தரம் அன்னைக்கு முக்கியம். ஆசிரமத்தில் உற்பத்தியாகும் பொருள்களில், நாட்டு வழக்கத்திற்கு மாறாக, உயர்ந்த தரத்தை நிலைநாட்டியவர் அன்னை.
- நடைமுறையில் இவையெல்லாம் நடக்காது என்பது அனுபவம்.
- நடைமுறையில் இலட்சியம் பலிக்கும் என்பது அன்னையின் அருள்.
யோகத்தில் வாழ்வை ஏற்க வேண்டும், உடலே ஜீவனில் உயர்ந்த பகுதி, அது இருளால் நிறைந்தது உண்மை எனினும், உயர்ந்த ஜோதியை வெளியிடும் திறன் உடலுக்கேயுண்டு,
உடலைப் பெற்றிருப்பதால் மனிதன் தெய்வங்களை விட உயர்ந்தவன், உடல் இருப்பதால்தான் இடைவிடாமல் இறைவனை நினைக்க முடிகிறது. சச்சிதானந்தத்தை உலகில் நிலை நாட்ட மனத்தாலும், உணர்வாலும் முடியாது, உடலால் மட்டுமே முடியும் என்ற புரட்சிகரமான கொள்கைகளை யோகத்திற்கு அளித்தவர் பகவான். அதை நடைமுறைப்படுத்தி ஆசிரமம் என்ற ஸ்தாபனத்தில் உலகுக்குக் காட்டியவர் அன்னை. இந்த உயர்ந்த சத்தியத்தின் ஒரு பகுதியாக யோக வாழ்வு அமைகிறது. அதனால் இது பலிக்கும். நம்ப முடியாத இதன் இலட்சியங்களும் நடைமுறையில் செயல்படும் என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திச் சொல்லி அவற்றை எழுதுகிறேன்.
- உலகவாழ்வில் நியாயம் கிடைக்கும்.
- அதர்மமான நிலையிலும் தர்மம் ஜெயிக்கும்.
- உண்மைக்குப் பரிசுண்டு.
- நேர்மைக்குப் பலன் உண்டு.
- இல்லறத்திற்கு, துறவறத்தின் தூய்மையுண்டு.
- மனித உறவுக்கு ஆன்மநேய இனிமையுண்டு.
- வாழ்வு மனிதனுக்குக் கட்டுப்படும்.
- மரணம் மரணமடைய முடியும்.
- பிரச்சினையற்ற வாழ்வு உலகில் உண்டு.
- நெருக்கம் நட்பை உயர்த்தும்.
- இறைவன் மனிதனை நாடி வருவான்.
- முடிவான பலன் முதலேயே உண்டு.
- பணமும், பதவியும் மனத்தின் நேர்மையை ஏற்றுப் போற்றும்.
- அதர்மமான தெய்வச் செயலும் நேர்மையான மனித உள்ளத்திற்குப் பணியும் (அனுசுயா).
- மனிதன் தெய்வத்தைவிட உயர்ந்தவன்.
மேலே சொல்லியவை தத்துவம். உலகுக்கு, பகவான் அளித்த உயர்ந்த புதிய யோகத்தத்துவம். நாம் இத் தத்துவங்களை நம் வாழ்வில் புரிந்து கொள்ள முடியுமா? தெய்வமும், வாழ்வும் சந்திக்கும் இடமே ஆன்மீக அனுபவங்கள் எழும் இடம் என பகவான் Synthesis of Yoga தம் யோக நூலில் எழுதியுள்ளார். வாழ்வில் அடம் பிடிக்கும் குழந்தை, சண்டையிடும் மாமியார், மருமகள், நஷ்டம் வரும் தொழிலை நாம் அறிவோம். இலாபம், நஷ்டம் இரண்டும் சேர்ந்ததே தொழில். இலாபம் மட்டும் கொடுக்கும் தொழிலை நான் செய்வேன் என்று சொல்ல முடியாது. அது போன்ற தொழில் இல்லை. சம்பளம் வாங்குபவர் தொழில் அதிகம் சம்பாதிப்பதைப் பார்த்து தானும் தொழில் ஆரம்பித்து நஷ்டம் வருவதைக் கண்டு, சம்பளமே உயர்ந்தது என்று பேசினால் அது சரியில்லை. தொழில் இலாபம் தரும். சில சமயங்களில் நஷ்டமும் தரும். நஷ்டம் ஏற்படாமல், இலாபம் வரும்படி, தொழிலை நடத்துவதே நிர்வாகத் திறமை. அல்லது ஒரு சமயம் நஷ்டம் ஏற்பட்டால், அதைச் சரிக்கட்டும் அளவுக்கு மற்றோர் இடத்தில் இலாபம் சம்பாதிப்பதே திறமை. திறமையில்லாதவர்க்குத் தொழில் இல்லை. திறமை உள்ளவர்க்குத் தொழில் நஷ்டம் அடிக்கடி வாராது. வந்தாலும், அந்த நஷ்டத்தைவிட அதிகமான இலாபம் வந்துவிடும். தொழில் அவருக்குப் பலிக்கும்.
நஷ்டத்தைப் பொருட்படுத்தாத மன உறுதி நஷ்டத்தைவிட அதிக இலாபத்தைச் சம்பாதிக்கும்.
குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறது. பள்க்கூடம் போகமாட்டேன் என அடம் பிடிக்கிறது என்றால் கண்டித்து சாப்பிடச் சொல்கிறோம்.