சச்சிதானந்தம் = 1

நாம் பிரம்மத்தை அடையலாம், விவரிக்க முடியாது எனக் கேள்விப்பட்டுள்ளோம். அதுவே உண்மை எனவும் அறிவோம். அது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். பகவான் அரவிந்தர் பிரம்மத்தை அடையலாம், விளக்கலாம், விவரிக்கலாம் எனக் கூறுகிறார். விவரித்து Life Divine என்ற நூலை எழுதியுள்ளார். வாழ்க்கை என்பது நல்லது கெட்டது கலந்தது, பிரச்சினைகள் நிறைந்தது என்பதை உலகம் அறியும். நாம் அன்னையை வணங்க ஆரம்பித்த பிறகு பிரச்சினைகள் தீரவழியுண்டு. பகவான் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பகவானுடைய யோக சக்தி உலக யுத்தத்தை வென்றது. அவர்கள் செய்த யோகம் உடலின் திருவுருமாற்றம். அவர்களை ஜீவனில் ஏற்பவர்களுக்கு அவர்கள் நிரந்தரமாகப் பெற்ற சித்திகள் ஒருமுறை அனுபவமாக வரும். நாம் பிரச்சினைக்காக அன்னையை அழைத்தால் அன்னை தம்மை முழுவதுமாகத் தருகிறார். நம்மால் அவரை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் முழுமனத்துடன் ஏற்றுக்கொள்ள முயலலாம். அப்படி முயன்றால் அவர் பெற்ற சித்திகளில் ஒன்று நமக்கு அனுபவமாக வரும். நாம் அன்னையையும் ஏற்பது இல்லை. அவர் தரும் அனுபவத்தையும் அறிவதில்லை. பிரச்சினை தீர்ந்ததே நாம் பெறுவது. வாழ்க்கையில் உள்ள நிலைமாறி நல்லதால் மட்டும் வாழ்க்கை நிரம்ப முடியும் என்று அறிகிறோம். அதுபோல் விளக்க முடியாது பிரம்மத்தை விளக்கலாம் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். மேலும் பிரம்மம் சித்திக்காதவர்களும் அறிவால் புரிந்து கொண்டு, பிரம்மத்தைப் பிறருக்கு விளக்கலாம். சம்பளம் வாங்கும் பேங்க் ஏஜண்ட் இலட்சக்கணக்காக, கோடிக்கணக்காக கடன் தர முடிவது போல் சித்தித்தவரே விளக்க முடியாத பிரம்மத்தை, சித்திக்காதவரும் புரிந்து கொண்டு விவரிக்கலாம் என்பது ஸ்ரீ அரவிந்தம் பக்தர்கட்குத் தரும் வரம்.56 அத்தியாயங்களைக் கொண்ட Life Divine என்ற நூல் சத் புருஷன் என்பது ஒன்பதாவது அத்தியாயம். மனிதன் பிரம்மத்தைப் பார்க்க முயல்கிறான். ஆனால் பிரம்மம் அவனுக்கு நேரிடையாகத் தெரிவதில்லை. பிரம்மம் மனிதனுக்குச் சச்சிதானந்தமாகத் தெரியும். அந்த சச்சிதானந்தத்தையே நாம் சத் புருஷன் என்கிறோம். சச்சிதானந்தத்தின் அம்சங்கள் மூன்று. அதன் முதல் அம்சம் சத். அதைப்பற்றியது இந்த ஒன்பதாவது அத்தியாயம். அங்கு விவரிக்கப்படுவது சத்பிரம்மம். அதற்கு முன் அத்தியாயத்தில் வேதாந்த ஞானம் கூறப்படுகிறது. உலகம் உள்ளது என்பதை நாம் ஏற்க வேண்டுமே தவிர எப்படி உலகம் சிருஷ்டிக்கப்பட்டது. பரமாத்மாவிலிருந்து ஜீவாத்மா எப்படி உற்பத்தியாயிற்று என்று கேட்க மனிதனுக்கு உரிமையில்லை என்பது மரபு. ஸ்ரீ அரவிந்தர் இந்த விளக்கத்திலுள்ள உண்மையை ஏற்கிறார். அத்துடன் நிற்கவில்லை. பூரண யோகம் மரபிலிருந்து மாறுபட்டது. சில இடங்களில் வேறுபட்டது. பல இடங்களில் அடுத்த கட்டத்திற்குப் போவது. அடிப்படையில் ஸ்ரீ அரவிந்தம் மரபில் இல்லை என்று சொன்னவற்றை உண்டு என்று சொல்லும். முடியாது என்று சொன்னவற்றை முடியும் என்று கூறும். அதே போல் நமக்கு உரிமையில்லை என்றவற்றை உரிமையுண்டு என்று சொல்லும் இடம் இது ஒன்று. கர்மத்தை அனுபவித்துத் தீர வேண்டும் என்ற மரபுக் கொள்கையை ஸ்ரீ அரவிந்தம் மாற்றிக் கரைக்கலாம் என்பதை நாம் அறிவோம். மனிதன் வழிபட்டாலும், தவத்தாலும் இறைவனை அடையலாம் என்ற மரபை ஸ்ரீ அரவிந்தம் மாற்றி யோகத்தால் வாழ்வில் மனிதன் இறைவனாகலாம் என்று கூறுகிறது. பரம்பொருள் இறைவன் ஆண்டவன் பிரம்மம் சச்சிதானந்தம் தானே உலகமாக மாறியது என்பது ஸ்ரீ அரவிந்தர் கூறும் தத்துவம். உலகில் உள்ளது ஒன்று, ஒன்று மட்டுமே. அது பரம்பொருள், அனந்தமான பரம்பொருள், அக்ஷயப் பாத்திரமான பரம்பொருள். ஆரம்பத்தில் ஸ்ரீ அரவிந்தர் கூறும் கருத்துக்கள் இரண்டு.

  1. பரம்பொருள் தானே உலகமாக மாறியது.
  2. உலகம் சிருஷ்டிக்கப்பட்டபின், அக்ஷயப் பாத்திரமான பரம்பொருள் குறையவில்லை. அது எடுக்க எடுக்கக் குறையா ஆனந்தம் ஆதியில்லாத, அந்தம் இல்லாத ஆனந்தம் (Infinity)

கடவுள் உலகத்தை சிருஷ்டித்தார் என்று கூறும்போது கடவுள் வேறு, உலகம் வேறு என்றாகிறது. இதை ஸ்ரீ அரவிந்தர் (Supra cosmic view) பிரபஞ்சத்தைக் கடந்த கடவுள் என்று கூறுகிறார். இதே போல் வேறு இரு கருத்துக்கள் உள்ளன. இந்த மூன்று கருத்துக்களிலும் உண்மைகள் உண்டு. எல்லா உண்மைகளும் சேர்ந்தது ஸ்ரீ அரவிந்தரின் கருத்து. Synthetic view (சிந்தடிக் வியூ) என்று கூறுகிறார். அதன்படி ஆண்டவனே உலகமாக மாறினார் என்கிறார். குடும்பம் என்பது கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம், சிறு குடும்பம் என்ற நிலைகளில் உள்ளன. இவற்றின் மாறுபாடுகளை நாம் அறிவோம். குடும்பமே மகனாயிற்று என்று கொண்டால், மகனோ, மகளோ அப்படி உணர்ந்தால் சிறு குடும்பம், தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம் ஆகியவை எப்படி மாறும் என நாம் அறியலாம். அக்கண்ணோட்டப்படி குடும்பத்தில் ஒவ்வொருவரும் தாமே குடும்பம், குடும்பமே தாம் என்று உணர்வார்கள். அந்தக் குடும்பத்தில் சந்தோஷம், சௌகரியம், சுபிட்சம் எப்படி இருக்கும் என நாம் கற்பனை செய்யலாம். ஆண்டவனே உலகம், நாமே ஆண்டவன், உலகமே ஆண்டவன் என்று உணர்ந்தால் நிலைமை எப்படி மாறும். இன்றுள்ள போர், பூசல், பிணக்குகள், போட்டி, பொறாமை எப்படி அழியும் என நாம் அறிவோம். அந்த அடிப்படையில் ஸ்ரீ அரவிந்தர் தம் தத்துவத்தை விளக்குகிறார்.

உலகம் முன்னேறுகிறது. உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் தன்னையறியாமல் முன்னேறுகிறார்கள். அது ஒருவரில் வெளிப்படுவது. ஒருவரில் வெளிப்பட்டாலும் முயற்சியும், முன்னேற்றமும், பலனும் உலகத்திற்கு உள்ளது. ஒருவர் பெற்ற ஞானம் உலகத்திலுள்ள ஞானம். அது உலகத்திற்குரியது. ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்தது உலகம் கண்டுபிடித்தது என்பதால் அந்தச் செல்வம் உலகத்திற்கு உரியது. ஒருவர் பெற்ற செல்வமோ, ஞானமோ அனைவருக்கும் உண்டு என்பதன் பொருள் என்ன? அதிலுள்ள நியாயம் என்ன? தத்துவம் ஏதாவது அதிலுண்டா? என்றால் (உதாரணமாக) மரத்தில் பழம் பழுக்கிறது எனில் பழத்தைக் காம்பில் காண்கிறோம். பழம் கிளையிலுள்ள காம்பில் பழுப்பதற்கு அது மலராகப் பூத்து, துளிராகத் துளிர்த்து, கிளையாக வளர்ந்து பலன் பெறுகிறது. மரம் முழுவதும் வேரிலிருந்து அடிமரம் வரை அனைத்தும் சேர்ந்து ஒரு காம்பில் பழம் உற்பத்தியாகிறது. மரம் இல்லாமலோ, கிளை இல்லாமலோ, துளிர்க்காமலோ, மலராமலோ பழம் இல்லை. அதுபோல் சமூகம் என்பது ஜனசமுத்திரம். பழம் காம்பில் உற்பத்தியாகும் பொழுது அடிமரமோ, பட்டையோ நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் பழத்திற்கு வேண்டிய நீரையும், சத்தையும் மண்ணில் மறைந்துள்ள வேரும், அடிமரமும், கிளையும் கொண்டு வந்து கொடுப்பதை நாம் அறிவோம். ஒரு விஞ்ஞானி laboratory ஆல் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு தபஸ்வி குகையில் தியானம் செய்தாலும், ஒரு தொழிலதிபர் factory நடத்தினாலும் அது சமூகத்திலுள்ள ஒவ்வொருவருடைய முயற்சி, அறிவு, பக்தி, உழைப்பைப் பெறுகிறது என்பதை நாம் அறிவதில்லை. இந்தியாவில் இமயமலையில் தவசிகள், துறவிகள் உண்டு. கனடாவில் மலைக்குகையில் முனிவர் இருப்பதில்லை. ஏனெனில் கனடா மக்கள் மனதில் தியானம் இல்லை. இந்திய மக்களில் ஒவ்வொருவரும் தினமும் தாங்கள் அறிந்து வாயாலும், தாங்கள் அறியாமல் ஆத்மாவாலும் துதி பாடுவதாலும், பெண்கள் பக்தி செலுத்துவதாலும் ஒரு ரமண மகரிஷி தோன்றுகிறார். அமெரிக்காவில் எந்த மாணவன் மனதிலும் எதைக் கண்டுபிடிக்கலாம் என்ற விஞ்ஞான உணர்வு உண்டு. எந்தத் தொழிலாளி எந்த மெஷினில் வேலை செய்தாலும் அதை எப்படிச் சிறப்பாக மாற்றலாம் என்ற நோக்கமுண்டு. நாடே விஞ்ஞானமயமான நாடு. இலட்சக்கணக்கான பேராசிரியர்கள் தங்கள் துறையில் விஞ்ஞானச் சிந்தனையை மேற்கொண்டுள்ளார்கள். அதன் விளைவே அவர்கள் ராக்கெட்டில் சந்திரனுக்குப் போகிறார்கள். அந்த நாட்டின் சூழல் விஞ்ஞானமயமான சூழல். அது ஓர் ஐன்ஸ்டீனை உற்பத்தி செய்தது. நம் நாட்டில் ஆன்மீகச் சூழல் உண்டு. அது ரிஷிகளை உற்பத்தி செய்கிறது என்பதால் ஒருவர் பெற்ற எந்தப் பலனும் அனைவருடைய முயற்சியால் அடைந்த பலனாகும். அதனால் அனைவருக்கும் அப்பலன்கிட்ட வேண்டும். அதே போல் உலகத்தின் ஆன்மீக முன்னேற்றம் ஒருவருக்குச் சித்தியாக வெளிப்படுவதால் அது உலகத்திற்குரிய ஞானசித்தியாகும். நாம் அறியாத இந்த உண்மையை பகவான் ஸ்ரீ அரவிந்தர் நமக்கு அளிக்கிறார். எனவே நாம் பிரம்மத்தை அறிய முற்பட்டால் பிரம்மத்தை அடையலாம். பிரம்மத்தை விளக்கிச் சொல்லலாம். பிரம்மத்துடன் ஐக்கியமாகலாம். பிரம்மமாகலாம் என்று அவர் எழுதிய நூல் Life Divine ஒரு தகப்பனார் படித்தவராக இருந்தால் பிள்ளைக்குப் பாடம் நன்றாக வரும். பாடம் சொல்லிக் கொடுக்கலாம். படிக்காத தகப்பனார் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியாது. பாடம் சொல்லிக் கொடுக்க முடியாதே தவிர படிக்க வைக்க முடியும். குழந்தை மீது அக்கரை இருந்தால் படிக்காத தகப்பனாரும் படிக்க வைக்க முடியும். அதுபோல் பிரம்மம் சித்திக்காத அன்பரும் பக்தியும், நம்பிக்கையும் இருந்தால் பிரம்மத்தை அறியலாம். அத்துடன் பிறருக்கும் விளங்குமாறு சொல்ல முடியும். இது ஸ்ரீ அரவிந்தத்திற்கேயுரிய தனிச்சிறப்பு. இந்த அம்சம் அன்னையின் சக்தியில் பல இடங்களில் வெளிப்படும்.

Life Divine கடினமான நூல் என்ற பெயர் பெற்றதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று எவரும் கூறாத விளக்கங்கள் ஸ்ரீ அரவிந்தர் கூற முனைந்தது. உதாரணமாக (Spirit) ஆன்மா எப்படி உற்பத்தியாயிற்று என்று 237வது பக்கத்தில் கூறுகிறார். இதை ஒரு வரியில் கூறுகிறார். அந்த ஒரு வரியைக் கூறுவதற்கு முன் இரண்டு பக்க விளக்கம் கொடுக்கிறார். ஆங்கிலமே தாய்மொழியாகப் பெற்றவர்கள் இந்த நூலே இலட்சியம் என்றவர்கள் இப்பக்கங்களைப் படித்து புரிந்து கொள்ள சில ஆண்டுகளாயின. அன்பர்களுக்கு இது புரியலாம். புரிந்தால் அது அவர்களுடைய பக்தி, நம்பிக்கைக்குள்ள பெருமை.